எம்.ஜி.ஆர்
படங்களில் தாயை காத்த தனயன் , தாய் சொல்லை தட்டாதே, தாயின் மடியில்
என்ற பெயர்களை கொண்ட படப் பெயர்கள் அவர் ஒரு மகனாக தாய்க்கு தரும்
முக்கியத்துவத்தை உணர்ந்த்துகின்றன. தாய்க்குலம் என்று பெண்களை அவர்
அழைத்ததும் பொதுக் கூட்டங்களில் என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய
தாய்மார்களே என விளித்ததும் அவர் ஒரு மகனாக தன் கடமையை செவ்வனே தமிழக
மக்களுக்கு ஆற்றியதையும் தாய்மாரை மதித்ததையும் தெற்றென உணர்த்துகிறது.
நிஜ வாழ்வில் எம் ஜி ஆர் தன் தாயைத் தெய்வமாகக் கருதினார். சத்ய பாமா
என்ற இயற்பெயருடைய அந்த சத்தியத்தாய்க்கு தனது வீட்டில் ஒரு கோயில்
கட்டி இருந்தார். வீட்டை விட்டு கிளம்பும் போது தன அன்னையார் கோயில்
முன் சற்று நேரம் கார் நிற்கும். அங்கு இருந்தபடியே தன் தாயை
வணங்கிவிட்டு செல்வார். வாழ்வில் ஒவ்வொரு முடிவையும் தன் தாயை வணங்கிய
பின் எடுத்தார். எதற்கெடுத்தாலும் தாயை வணங்கும் பழக்கத்தை இவர்
கொண்டிருந்தார். இதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
இந்தியா வெற்றி பெற அம்மாவை கும்பிட்ட எம் ஜி
ஆர்
ஒரு முறை இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்து
கொண்டிருந்தது. சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடித்துக்கொண்டிருந்த
எம் ஜி ஆர் அவ்வப்போது வந்து ஸ்கோர் கேட்டபடி இருந்தார். இயக்குனரும்
[ப நீலகனடன் என்று நினைக்கிறேன்] லதாவும் செட்டில் இருந்தனர். அப்போது
ஆஸ்திரேலியா வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்தது. அனைவரும் இந்தியா
தோற்று விடும் என்றும் இந்திய வீரர்கள் சரியாக விளையாட வில்லை என்றும்
கேலி பேசி கொண்டிருந்தனர். எம் ஜி ஆர் அவர்களை பார்த்து இல்லையில்லை
இந்தியா தான் ஜெயிக்கும் நம் வீரர்கள் நன்றாக விளையாடுகின்றனர். என்று
எதிர் வாதம் செய்தார். அவருக்கு இந்தியா தோற்கும் என்று மற்றவர்கள்
கூறியது கோபத்தை வரவழைத்தது.
ஆஸ்திரேலியா தான் ஜெயிக்கும் என்று மற்றவர்கள் ஆயிரம் ருபாய் பந்தயம்
கட்டினர். எம் ஜி ஆர் இந்தியா ஜெயிக்கும் என்று ஆயிரம் ருபாய் பந்தயம்
கட்டினார். திரும்பவும் நடிக்க செட்டுக்கு போய்விட்டார். வந்து
பார்த்தால் இந்தியாவின் நிலைமை முன்பை விட மோசமாக இருந்தது.
ஆஸ்திரேலியாவுக்காக பந்தயம் கட்டியவர்கள் எம் ஜி ஆர் தோற்று விடக்
கூடாது என்பதற்காக பந்தயத்தை விட்டு விடலாம் என்றனர். ஆனால் அவர்
விடவில்லை . ‘இந்தியா தான் ஜெயிக்கும் பாருங்கள்’ என்று சொல்லிவிட்டு
தனது தனி அறைக்குள் போய்விட்டார்.
சிறிது நேரத்தில் இந்தியா ஜெயித்துவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை
எம் ஜி ஆரிடம் தெரிவித்தனர். அவருக்கு ஒரே மகிழ்ச்சி. உடனே அவர் சொன்ன
ஒரு தகவல் சிறப்பானது. ‘’இந்தியா ஜெயிக்கனும் னு நான் உள்ளே போய்
எங்கம்மா கிட்ட வேண்டிக்கிட்டேன்’’ என்றார். எல்லோரும் அசந்து
போய்விட்டார்கள் இந்தியா தோற்றுவிடுமோ என்ற அச்சம் வந்ததும் அவர் தன்
அம்மாவின் படத்தின் முன் போய் வேண்டி கொண்டார். சத்தியாம்மா தன மகன்
கேட்டதை தந்து விட்டார். இது அவரிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம் அவருக்கு
அவர் தாய் தான் கடவுள். சிறு பிள்ளை தன் அம்மாவிடம் கேட்பது போல நல்லதோ
கேட்டதோ எதுவாக இருந்தாலும் அவர் தன் அம்மாவிடம் வேண்டிக் கேட்பார்.
கட்சி இணைப்பு பற்றி அம்மாவிடம் வேண்டிக்
கொண்ட எம் ஜி ஆர்
சிறு வயதில் தாயைப் பிரிந்து வந்தாலும் எம் ஜி ஆருக்கு அவர் அம்மாவே
அனைத்து முடிவுகளும் எடுக்க அவருக்கு உதவியாக இருந்தார். திமுக மற்றும்
அதிமுக கட்சிகளை இணைக்க ஒரிசா முதல்வர் பிஜு பட்நாயக் சென்னை வந்து
கலைஞரை சந்தித்து பேசினார். கலைஞர் ‘கட்சி தலைவராக தானும் முதல்வராக எம்
ஜி ஆரும் இருக்கலாம்’ என்றார். மேலும் கொடி கட்சி பெயர் குறித்து தன
முடிவுகளை சொல்லி இணைப்புக்கு இணங்கி வந்து விட்டார். எம் ஜி ஆர்
சார்பாக அவர்களுடன் சிலர் பேசினர். எம் ஜி ஆர் இரு கட்சிகளின் இணைப்பு
குறித்து டி ஜி பி மோகன் தாசிடம் தன காரில் அவர் கருத்தை கேட்டபடி
சென்றார். அவரும் இணைவது சரிதான் என்றார். எம் ஜி ஆரும் அதை ஆமோதித்தார்.
மாம்பலம் ஆபிசுக்குள் எம் ஜி ஆர் கார் சென்றதும் மோகன் தாஸ் விடை
பெற்றுக் கொண்டார்.
அன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பில் தன அம்மா கட்சிகள் இணைய வேண்டாம்
என்று தன்னிடம் சொன்னதாக எம் ஜி ஆர் தெரிவித்தார்,. அண்ணாதிமுக தனித்து
இயங்கும் என்று சொல்லிவிட்டார். பிஜு பட்நாயக்கின் முயற்சி தோல்வியில்
முடிந்தது. கலைஞரும் ஒரு கனத்த வார்த்தையை சொல்லிவிட்டு சென்றார்.
இதுபோன்ற முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும் எம் ஜி ஆர் தன தாயை
வணங்குவதும் வாக்கு பெறுவதும் அவருக்கு பழக்கமாக இருந்தது.
அன்றைக்கு தாய் சொல்லை தட்டாத தனயனான எம் ஜி ஆர் எடுத்த முடிவு திராவிட
இயக்க வளர்ச்சிக்கு எருவாக அமைந்தது. இன்றைக்கு இரண்டு இயக்கங்கள்
வலுவாக இருப்பதால் வலது சாரிகள் அச்சம் கொள்கின்றனர். ஒன்றரை கோடி
உறுப்பினர்களுடன் அண்ணா திமுகவை ஜெயலலிதா இந்தியாவிலேயே வலுவான மாநிலக்
கட்சியாக வளர்த்துவிட்டார். தமிழகத்தில் இக்கட்சி 25 –32% வாக்கு
வங்கியுடன் இருக்கிறது. தோற்கும் காலத்தில் கூட இதன் வாக்கு வங்கி 25%
ஆக இருந்துள்ளது. மேலும் திமுகவில் இருந்து பிரிந்த வை கோ தலைமையிலான
மறுமலர்ச்சி தி மு க வும் உலகத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறது.
மற்ற சில கட்சிகள் திமுக மற்றும் அண்ணா திமுகவில் இருந்து தோன்றி
பின்னர் உதிர்ந்துவிட்டன. வலிமையான இந்த இரு கட்சிகளும் தேசிய கட்சிகள்
தமிழகத்தில் எந்த வகையிலும் வேரூன்ற முடியாமல் தடுத்துவிட்டன.
இன்றைக்கு தமிழ்நாட்டில் தெய்வ நம்பிக்கை வளர்ந்தாலும் திராவிட இயக்க
கருத்துக்கள் மூட நம்பிக்கைகளுக்கு இடம் தராமல் இவ்விரு கட்சிகளும்
சமூக நீதியைக் காத்து நிற்கின்றன. இந்த வகையில் எம் ஜி ஆரின் தாயார்
அன்றைக்கு அண்ணா திமுக தனித்து வளரட்டும் என்று .தன் மகனுக்கு இட்ட
அன்பு கட்டளை தமிழகத்துக்கும் உலகத் தமிழர்களுக்கும் நன்மை அளித்துள்ளது.
பாட்டும் பொருளும்
திரையுலகிலும் அரசியலிலும் எம் ஜி ஆர் கண்ட மாபெரும் வெற்றிக்கு
காரணமாக இருந்தது அவரது தாயின் அன்பும் ஆசியும் என்பதை மறுக்க இயலாது.
அது போல தமிழகத்து தாய்மார்களும் வரை தன தலைமகனாக மதித்து போற்றி
வாழ்த்தி தமது ஆசிகளை வழங்கினர்.
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை
வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
என்று எம் ஜி ஆர் தன தாயைப் பார்த்து பாடுவது கற்பனை அல்ல; நிஜம். எம்
ஜி ஆர் திரைப்படங்களில் தாயை நேசிப்பதும் மதிப்பதும் படத்துக்காகவோ
கதைக்காகவோ மட்டும் அல்ல. உண்மையில் அவர் தன தாயை அதிகமாக நேசித்தார்.
அதை படத்திலும் பாட்டிலும் காட்டினார்.
தாயில்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
என்று அவர் பாடிய பாடல் வெறும் சொற் கோர்வை அல்ல அது அவர் வாழ்வின்
நிதர்சனம். இந்தப் பாட்டை எழுதி வாங்கி இசை அமைப்பதற்குள் எம் எஸ்
விஸ்வநாதனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. ஆனால் இன்று வரை அந்த
பாட்டு காவியமாக நிலைத்து நிற்கிறது.
தாய்ப்பாசமும் மகனின் கடமையும்
எம் ஜி ஆரை மகனாக கருதிய தாய்மார் அவர் சிறியளவில் கூட சிரமப்பட கூடாது
என்பதில் கவனமாக இருந்தனர். ஒரு முறை வெள்ளம் வந்து தாழ்வான
பகுதிகளுக்குள் தண்ணீர் போய்விட்டது. எம் ஜி ஆர் உடனே பாதிக்கப்பட்ட
பகுதிகளை பார்க்கவும் நிவாரண உதவிகளை அளிக்கவும் கிளம்பிவிட்டார்.
நடிகராக இருக்கும்போதே எம் ஜி ஆர் இந்த பணிகளை செய்வதை தன் கடமையாகக்
கொண்டிருந்தார். அவ்வாறு தண்ணீரில் இரங்கி வந்த எம் ஜி ஆரை பார்த்த
பெண்கள் ‘’ ஐயையோ சாமி நீ தண்ணிக்குள்ள வராதையா ஒரே சேறும்
சகதியுமாக இருக்கு’’ என்று தடுத்தனர். தன் பிள்ளை போன்ற எம் ஜி ஆர்
சேற்றில் கால் வைப்பதை அந்த அன்பு தாய்மார் விரும்பவில்லை. உடனே அவரிடம்
‘’நாங்க நல்லா இருக்கோம்யா. எங்களுக்கு எந்த குறையும் இல்ல. நீ
இருக்கும் போது எங்களுக்கு என்னய்யா குறை. அதிகாரிகள் வந்துட்டாங்க.
எங்களை கவனிச்சுக்கிட்டாங்க . நீ தண்ணியில வர வேணாம் ஐயா.. நீ நல்லா
இருந்தால் எங்களுக்கு அதுவே போதும்யா’’ என்று சொல்லி அவரை திருப்பி
அனுப்பி வைத்தனர்.
எம் ஜி ஆர் நன்றாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தமிழக தாய்மார்
நினைத்தனர். அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று அவர்களின் அன்பு மகன்
எம் ஜி ஆர் நினைத்தார். இந்த பரஸ்பர அன்பு இன்றும் அவருக்கு புகழ் மாலை
சூட்டி கொண்டிருக்கிறது.
தாய்மாரின் கட்டளைக்கு அடி பணிந்து காருக்குள் வந்து உட்கார்ந்த எம் ஜி
ஆர் கண்ணீர் வடித்தார். என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் இந்த
தாய்மார்களுக்கு நான் என்ன செய்ய போகிறேன் என்று சொல்லி அழுதார்.
உடன் இருந்தவர்கள் வாயடைத்து போயினர். எம் ஜி ஆர் கண் கலங்குவது
அவர்களுக்கு வியப்பாக இருந்தது வருத்தமாகவும் இருந்தது. மக்களுக்காக்
எம் ஜி ஆர் கண்ணீர் விட்ட நிகழ்ச்சியை பலர் பதிவு செய்துள்ளனர்.அவற்றில்
இது ஒரு சம்பவம் ஆகும். அதன் பின்பு அவர் முதியோர் பென்ஷன் திட்டத்தை
அறிமுகம் செய்தார். அதை பாட்டிமார் எம் ஜி ஆர் காசு என்று தான்
சொல்வார்கள். ஆயிரம் ருபாய் மாமியார் கையில் இருந்தால் எந்த மருமகளும்
மனம் கோணாமல் சாப்பாடு போடுவார் இல்லையா. மேலும் சத்துணவு திட்டத்திலும்
அந்தந்த பகுதியில் இருக்கும் முதியவர்களுக்கு மதிய உணவு இலவசமாக
அளிக்கவும் திட்டம் கொண்டுவந்தார்.
ஒரு மகனாக தனது கடமையைச் செய்த எம் ஜி ஆரை முதியவர்கள் தங்கள் மகனாகப்
போற்றி மகிழ்ந்ததில் வியப்பேதும் இல்லை.
கால் பட்ட இடமெல்லாம் மலராக
தாயன்பில் திளைத்த எம் ஜி ஆருக்கு ஒரு ராசி உண்டு. அவர் எங்காவது
பிரச்சாரத்துக்கு சென்றால் அந்த பகுதியில் மழை பெய்யும் என்றொரு
நம்பிக்கை மக்கள் மனதில் இருந்தது. இது மதுரையில் பல முறை நடந்தும்
இருக்கிறது. ஒரு முறை எம் ஜி ஆர் பிரச்சாரத்துக்கு போய் வரும் போது ஒரு
இடத்தில் கிராம மக்கள் வழி மறித்து நின்றனர். எம் ஜி ஆர் காரில் இருந்து
இறங்கினார். அங்கிருந்தவர்கள் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர். அந்த
பகுதியில் மழையே இல்லை அதனால் விவசாயம் பொய்த்துவிட்டது. அவர்கள்
மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே எம் ஜி ஆர் கொஞ்ச துரம் நடந்து வந்து
அவரது திருப்பாதத்தை தங்கள் வயலில் வைக்க வேண்டும் என்றனர். எம் ஜி
ஆருக்கு சங்கடமாக இருந்தது. இந்த வேண்டுகோளை மறுக்க இயலுமா. எனவே
சம்மதித்தார்..
நாடு செழிக்கணும்; நல்ல மழை பெய்யணும்
கிராமத்து மக்கள் எம் ஜி ஆரை வலியுறுத்தி கேட்கவும் எம் ஜி ஆர் சாலையில்
இருந்து சற்று தொலைவில் உள்ள வயலுக்கு நடந்து சென்றார். .வயல் காய்ந்து
போய் கிடந்தது. சிறிது நேரம் அங்கு நின்று அவர்களுடன் பேசினார்.
அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். அண்ணா திமுக ஆட்சி மலர்ந்ததும் அவர்களின்
துன்பமெல்லாம் தீரும் என்று ஆறுதல் அளித்துவிட்டு வந்தார். அவர்
அங்கிருந்து நகரவும் பலரும் அவர் நின்ற இடத்தின் காலடி மண்ணை எடுத்து,
நடந்த காலடி தடத்தின் மண்ணை எடுத்து தங்கள் சேலை முந்தானையின் ஓரத்தில்
முடிந்து கொண்டனர்.
இதய வீணை, சிரித்து வாழ வேண்டும் பல்லாண்டு வாழ்க ஆகிய படங்களை தமது
உதயம் ப்ரொடக்ஷன்ன்ஸ் பட நிறுவனம் மூலமாக எடுத்த மணியன் அந்த காரில் எம்
ஜி ஆர் கூட வந்தார். அவர் அந்த பெண்களை பார்த்து ‘என்ன செய்கிறீர்கள்’
எனக் கேட்டார். [காலடி மண்ணை எடுத்து அந்த நபருக்கு செய்வினை செய்து
அந்த ஆளைக் கொன்று விடலாம் அல்லது கால் கையை முடக்கி விடலாம் என்பது ஒரு
நம்பிக்கை]. அங்கிருந்த பாட்டிமார் ‘எம் ஜி ஆர் காலடி மண்ணை கொண்டு போய்
எங்கள் வயல்களில் போடுவோம் அப்புறம் பாருங்க அது நல்லா விளையும் என்று
மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மணியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி
ஒரு நம்பிக்கையா? என அவர் வியந்தார். பின்பு அவரும் காருக்கு
போய்விட்டார். வண்டி கிளம்பிவிட்டது. .
தாய் – மகனின் அன்பு மழை
எம் ஜி ஆர் திட்டமிட்டபடி அந்த மாவட்டத்தின் பல ஊர்களிலும் பிரச்சாரம்
செய்துவிட்டு திரும்பி வரும் போது அந்த பகுதியில் நல்ல மழை
பெய்திருந்தது. மக்களின் நம்பிக்கை பலித்தது. எம் ஜி ஆர் நிம்மதி
பெருமூச்சு விட்டார்; அகம் மகிழ்ந்தார். நல்ல எண்ணங்களை பரிமாறி
கொள்வதால் நல்ல விளைவுகள் ஏற்படும் என்பது உளவியலார் கருத்து. அது போல
தமிழகத் தாய்மார்களும் எம் ஜி ஆரும் தங்களுக்குள் நல்ல எண்ணங்களைப்
பரிமாறிக் கொண்டனர் அது அவர்களுக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது
எம் ஜி ஆர் ஒரு தாய்க்குரிய கடமை உணர்ச்சியோடும் பொறுப்புணர்ச்சியோடும்
நடந்து கொண்டார் என கண்ணதாசன் பாராட்டுவதற்கு முக்கியக் காரணம் எம்ஜி
ஆர் ஒரு நல்ல தாயிடம் வளர்ந்ததார் என்று உறுதியாகக் கூறலாம்.
கவியரசு கண்ணதாசனின் புகழ் மாலை
எம் ஜி ஆர் கால் பட்டது செழிக்கும் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல.
கவிஞனின் வாழ்த்தும் ஆகும் என்பதற்கு கண்ணதாசனின் புகழ் மாலையை எடுத்து
காட்டலாம்.
எம் ஜி ஆருக்கு பிறந்த நாள் வாழ்த்து பாமாலை பாடிய கவியரசு கண்ணதாசன்
நீ தொட்டது துலங்கும்;
நின் கை கொடுத்தது விளங்கும்’
நின் கண் பட்டது தழைக்கும்;
நின் கால் படிந்தது செழிக்கும்
நின் வாய் இட்டது சட்டம்
என்றார் ‘
எம் ஜி ஆர் தாய் - கவிஞர் கண்ணதாசன் சேய்
எம் ஜி ஆரை கவிஞர் கண்ணதாசன் அன்பாக சாமி என்று அழைப்பார் எம் ஜி ஆர்
கண்ணதாசனை கவிஞர் என்று அழைப்பார். இருவருக்குள்ளும் அரசியல் கொள்கை
வேற்பாடுகள் ஏற்பட்ட பிறகு எம் ஜி ஆர் அவரை நீக்கிவிட்டு வாலியை தனது
படங்களுக்கு பாடலாசிரியராக நியமித்தார். ஆனாலும் இருவருக்குள்ளு இருந்த
அன்பும் மதிப்பும் குறையவே இல்லை. எம் ஜி ஆர் முதல்வரானதும் கண்னதாசன
அவர்களை அழைத்து அரசவை கவிஞர் ஆக்கினார். அப்போது கண்ணதாசன் எவவளவு நாள்
எனக் கேட்டார் எம் ஜி ஆர் ஆயுள் உள்ளவரை என்றார் அவர் சொல் பலித்தது.
அமைச்சருக்குரிய அந்தஸ்துள்ள பதவி அது. கண்ணதாசனும் ‘’இனி நான் சாகும்
பொது அரசு மரியாதையுடன் என் உடல் அடக்கம் செய்யப்படும் அதற்கு
மகிழ்கிறேன்’’ என்றார். அவரது சொல்லும் பலித்தது.
அரசவை கவிஞரானதும் ஒரு கூட்டத்தில் கண்ணதாசன் ‘’எம் ஜி ஆர் என்ற
தாய்க்கு கவிஞர்களாக பல மகன்கள் உண்டு. அவர்களில் நான் அடங்காத மகன்;
தாய் தன மகன் திருந்தும் வரை அவனது தேவைகளை நிறைவேற்றி திருந்தியதும்
அவனுக்கென பொறுப்பை அளிப்பாள். அது போல எம் ஜி ஆர் அவர்களைக் கடுமையாக
விமர்சித்த நான் இப்போது பக்குவப்பட்டிருக்கிறேன். என்னை அவர் அரசவை
கவிஞர் ஆக்கியிருக்கிறார்’’ என்றார்.
எம் ஜி ஆர் நல்லவர்களை தன அருகில் வைத்திருந்தார் தீய சக்திகளைத்தான்
கிட்டி வரவிடாமல் துரத்தி அடித்த்டார். அதானால் அவரை சுற்றி நல்ல
ஆக்கப்பூர்வமான சக்தி [பாசிட்டிவ் எனெர்ஜி] விளங்கியது அவரை கண்டு
மீண்டவர் எல்லோரும் மகிழ்ச்சியாக வந்தனர். அவர் தாயாரின் ஆசியும்
தமிழகத்து தாய்மாரின் ஆசியும் அவரை இன்னல்களில் இருந்து காத்தது.
ஆபத்தில் உதவிய லீலாவதியின் ஆரோக்கியம்
தாயைத் தெய்வமாக போற்றி வாழ்ந்த எம் ஜி ஆர் தன வாழ்வின் அனைத்து
நிலைகளிலும் தாயை வணங்கி வந்தார். தமிழகத்தின் தாய்மார் எல்லோரும்
அவருக்காக கடவுளை வணங்கி வந்தனர். அந்த வேண்டுதல் பலித்ததை அவர்
அமெரிக்காவில் இருந்து சிகிச்சை பெற்று வந்ததில் இருந்து அறிவோம்.
அவருக்கு சிறுநீரகம் தானம் அளித்த அவரது அண்ணன் மகள் லீலாவதி அம்மையார்
ஒரே ஒரு சிறு நீரகத்துடன் இன்றும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். ஜுலை
பதினைந்தாம் நாள் வேல்ஸ் அகாடமியில் சைதை துரைசாமி அவர்கள் நடத்திய எம்
ஜி ஆர் உலக பேரவை பிரதிநிதிகள் மாநாட்டில் லீலாவதி அம்மையாரை அழைத்து
வந்து சிறப்பு செய்தனர். அவர் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார்.
சிறு நீரகம் தானம் அளித்து முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் அவர்
நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து வருகிறார். இதுவும் தமிழக மக்களின்
வேண்டுதலுக்கு கிடைத்த பலன் தான். அவருக்கு ஏதாவது ஆபத்து
ஏற்பட்டிருந்தால் எம் ஜி ஆரால் ஏற்பட்டது என்று தானே குற்றம் சுமத்துவர்.
அந்த வசை சொல் எம் ஜி ஆருக்கு வராதபடி கடவுள் லீலாவதியைக் காப்பாற்றி
வருவது எம் ஜி ஆருக்காக மக்கள் நடத்திய பிரார்த்தனையின் பலன்களில்
ஒன்றாகும்.
தாயின் ஆசியும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
ஒரு முறை எம் ஜி ஆர் சென்ற கார் விபத்துக்குள்ளாக இருந்து கண நேரத்தில்
தப்பியது. உடனே வண்டியை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு வண்டி ஒட்டி வந்த
திருப்பதிசாமி அமைதியாக அமர்ந்துவிட்டார். ‘’நல்ல வேளை
தப்பித்துவிட்டோம் என்றார். அதற்கு எம் ஜி ஆர் ‘’நாம் எப்படி
தப்பித்தோம் தெரியுமா?’’ என்றார். அவர என்ன சொல்லப் போகின்றார் என்று
திருப்பதிசாமி அவர் முகத்தையே பார்த்தார். ‘’நம் இருவரின் தாயின் ஆசி
நம்மோடு இருந்ததால் தப்பித்தோம்’’ என்றார். எம் ஜி ஆருக்கு எப்போதும்
அவர் அம்மா அவர் கூடவே இருக்கிறார்.
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள் என்றும்
ஆதி அந்தமும் அவள் தான் எனை
ஆளும் நீதியும் அவள் தான்
என்றெல்லாம் எம்ஜி ஆர் பாடியது அவர் ஒரு நல்ல மகனாக இருந்ததையும் அவரது
தாய் அவருக்கு ஒரு வழிகாட்டும் ஆன்மாவாக [guardian spirit] இருந்ததையும்
உணர்த்துகிறது.
நிறைவு:
எம் ஜி ஆர் தன தாயாரை தமிழகத்தின் அனைத்து தாய்மார்களிலும் கண்டார்.
அவர்களும் தாய்க்கு தலைமகனாகக் கருதி இவரிடம் அன்பு செலுத்தினர். நல்ல
மகனுக்கு இவர் ஒரு முன் மாதிரியாக [ரோல் மாடல்] விளங்கினார். பெண்களைத்
தாயாக மதித்தவரும் பெற்ற தாய்க்கு கோயில் கட்டி வழிபட்டவருமான எம் ஜி
ஆருக்கு மக்கள் இன்று கோயில் கட்டி வழிபடுகின்றனர்.
முனைவர் செ.இராஜேஸ்வரி
எம்.ஜி.ஆர் புகைப்படத்தொகுப்பு:
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்