தமிழ்ப் பெண் கவிகள்
கவிஞர் மா.உலகநாதன்., எம்.ஏ
'பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தானதிரும்
பெண்ணிருவர் பேசில் விழும் வான்மீன்கள் - பெண் மூவர்
பேசில் அலை சுவறும் பேதையே பெண் பலர்தாம்
பேசில் உலகு என்னாமோ பின்.'
இப்படி, பெண்களுக்கு வாய்ப்பூட்;டுப் போட்டு, தமிழ்நாட்டில் பெண் கல்வி
ஏது? என வினவுவோர்க்கு விடையாக, 'ஆடவரோடொப்ப பெண்டிரும், பண்டைக்காலத்தில்
கல்வியிற் சிறப்புற்று விளங்கினர் என்பதை ஒளவையார், ஆண்டாள், சோழமாதேவி,
மாறோக்கத்து நப்பசலையார், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப்பாடினியார்
நச்சௌ;ளையார் இன்ன பிற பெண்கவிகளின் வரலாறுகள் நமக்கு உள்ளங்கை
நெல்லிக்கனியாக உணர்த்துகின்றன.
ஒளவையார் :
ஒளவையார் தமிழ் மூதாட்டி எனப் போற்றப்பட்டவர், இவரை அறியாதார்
தமிழ்நாட்டில் எவரும் இரார், சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களாலும் நன்கு
மதிக்கப்பட்டுத் தம் காலத்தில் ஈடும் எடுப்புமற்ற கவிப்பெருமாட்டியாக
விளங்கினார். அவர் தம் பாடல்களின் எளிமையும் இனிமையும், பொருளாழமுடைமையும்
காண்போர், அவரைக் கலைமகளின் திருவவதாரமாகக் கண்டனர்.
உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் மதுரையில் அரசு
செய்துகொண்டிருக்கும் காலத்தில் அங்கே இருந்த சங்கப் புலவர்கள், தம்மினும்
ஒப்பாருயர்ந்தார் ஒருவரும் இல்லை என்று இறுமாப்புக் கொண்டிருந்தனர்.
ஒளவையார் அச்சங்கப் புலவர்களை நோக்கித் தம்முடைய ஐந்து விரல்களையும்
குவித்தும், மூடியும், கொஞ்சம் திறந்தும், சுட்டு விரலொன்றை மாத்திரம்
நீட்டியும், ஐந்து விரல்களையும் அகலத் திறந்தும் இவ்வாறான சில குறிகளைக
காட்டி 'இவற்றிற்குப் பொருள் என்னை?' என்று வினவினர். அவர்கள் ஒளவையாரின்
கருத்தறியாதவர்களாய்ச் சிற்றின்பச் செய்தியாக,
'இவ்வளவு கண்ணுடையாள் இவ்வளவு சிற்றிடையாள்
இவ்வளவு போன்ற விளமுலையாள் - இவ்வளவா
நைந்த வுடலாணல மேவு மன்மதன்றன்
ஐந்துகணை யால் வாடினாள்.' என ஓர் வெண்பா பாடினார்.
இது கேட்டு, ஒளவையார், 'நீங்கள் சொல்வது சரியன்று' என்று அவர்கள்
மனம்புழுங்கி வெட்கமுறும்படி,
'ஐயம இடுமின் அறநெறியைக் கைப்பிடிமின்
இவ்வளவேனும் அன்னம் இட்டுண்மின் - தெய்வம்
ஒருவனே யென்று முணரவல் லீரேல்
அருவினை களைந்து மறும்.'
என்னும் வெண்பாவால் தாம் காட்டிய குறிகளின் உட்பொருள்களை நுணுக்கமாக
விளக்கினார்.
கண்ணணைக் காதலித்தடைந்த கவியரசி :
திருத்துழாய்ச் செடிகளுக்கிடையே பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவர்.
அக்ரஹாரத்தில் பிறந்து, ஆய்ச்சியர்களை தோழிகளாக்கிக் கொண்டு, சாதிய
சமத்துவத்தை அப்போதே கொணர்ந்தவர். இன்றும் கூட கணவன் பெயரைச் சொல்லத்
தயங்கும் தமிழ்பெண்களிடையே, அன்றைக்கே இவர், தான் மணாளனாக வரித்த கண்ணனை,
கோவிந்தா, கோளரி மாதவா, கோவர்த்தனகிரிவாசா என பெயர் சொல்லி அழைத்த
புதுமைப்பெண்.கண்ணனிடம் காதல்கொண்டு அவனையே கணவனாகக் கருதிய ஆண்டாள் தாம்
உறையும் ஊராகிய திருவில்லிப்புத்தூரைக் கண்ணனின் உறைவிடமாகிய
ஆயர்பாடியாகவும், அங்குள்ள இளநங்கையரையும் தம்மையும் ஆயர்குல பெண்களாகப்
பாவித்து வந்தார்.
திருவரங்களின் நினைவால், உணவுண்ண மறந்தாள்: உறக்கமும் நீத்தாள், காதலெனும்
துன்பக்கடலினின்றும் கரையேற அந்த வைகுந்தனாகிய தோணியைப் பெற வேண்டும்
என்று நோன்பிருந்தவள் ஆண்டாள்.
'என்புருகி இணைவேல் நெடுங்கண்கள்
இமைபொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர்
தோணி பெறா துழல்;கின்றேன்.'
அள்ளுர் நன்முல்லையார் :
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அள்ளுர் என்ற ஊரில் வாழ்ந்த இவரின் இயற்பெயர்
முல்லை என்பதாகும். இவருடைய பாடல்களில் வயல் வளமான மருத நிலத்தின் எழிலை
அழகுபடச் சித்தரித்துள்ளார்.
'குக்கூ என்றது கோழி, அதன் எதி;ர்
துட்கென் றன்று என்தூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றாய் எனவே, குறுந் - மருதம்
157
குறுந்தொகையில் இந்தக் காட்சியை, நன்முல்லையார் விவரிக்கிறார். தலைவனும்
தலைவியும் கூடி இருக்கும் நேரம் கோழி குக்கூ என்று குரல் எடுத்து பொழுது
விடிவதை அறிவிக்கிறது. துணுக்குற்ற தலைவி, என் தோளைத் தழுவும் காதலனைப்
பிரியச் செய்து கூர்வாள் போல வைகறை வந்ததை, கோழி குக்கூ என்று கூவி நினைவு
படுத்துகிறதே என்று என் தூய நெஞ்சம் அஞ்சியது.
இதைத்தான் கவியரசர் கண்ணதாசன், சேவல் குரலே கூவாதே, சேர்ந்தவர் உயிரைப்
பிரிக்காதே என்று தன் திரைப்பாடல் ஒன்றில் எழுதினார் போலும்.
காவற்பெண்டு :
செவிலித்தாயை காவற்பெண்டு என்று அழைப்பது தமிழில் வழக்கு. இவரது பாடல்
ஒன்றிலே, காதலர் பிரிந்த காதலி, காதலின் வீடேறித் துணிவாக அவன் தாயிடம்,
'என்னைப் பிரிந்த உன் மகன் எங்கே' என்று கேட்கிறாள்.
எனது சிறிய வீட்டின் தூணைப் பிடித்தவாறு உன் மகன் எங்குளான்? என்று
கேட்கின்றாய்: அவன் எங்குள்ளானோ எனக்குத் தெரியாது. ஆயினும், புலி இருந்து
பின்னர்ப் போகிய மலைக்குகை போல, அவனைச் சுமந்து பெற்ற வயிறும் இதோ! அவன்
போர்க்களத்தில் தான் இருப்பான் என்று அந்த வீரத்தாய் பதிலிறுக்கிறாள்.
இந்தக் காட்சியை கீழ்க்கண்ட பாடல்வழி கூறிய இவர் ஒரு மறக்குடிப்
பெண்டிராகத்தான் இருக்க வேண்டும்.
'சிற்றில் நல்தூண்பற்றி, நின்மகன்
யாண்டு உளனோ? என வினவுதி, என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்
புலிசேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே:
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே! - புறம் - 86.
வெள்ளி வீதியார் :
வெண் மணல் விரிந்த வீத்தையார் என்னும் தொடரே மருவி, வெள்ளி வீதியார் என
உருமாறி நிலைபெற்றிருக்கலாம். அன்னி, திதியம், வானவரம்பன்; போன்றோரின்
வரலாற்றுக் குறிப்புகள் இவரது பாடல்களால் விளக்கம் அடைந்துள்ளன. இவர்
எழுதிய பாடல்கள் குறுந்தொகையில் எட்டும், நற்றிணையில் நான்கும்,
அகநானூற்றில் இரண்டும் ஆக
14 பாடல்கள் இயற்றியுள்ளார்.
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே!
நல்ல சாதிப் பசுவின் இன்சுவைப் பாலனாது, அதன் கன்றால் உண்ணப்படாமலும்,
கலத்தில் கறக்கப்படாமலும் நிலத்தில் சிந்தியது போல, தேமல் படர்ந்த
அல்குலில் எனது மாமையாகிய பேரழகு எனக்கும் அழகு பயவாமலும், என் காதலனுக்கு
இன்பம் தராமலும் பசலை உண்ணும் நிலையாயிற்று என்ற கருத்தமைந்த பாடலைத்
தருகிறார் வெள்ளி வீதியார்.
வருமுலையாரித்தி :
இத்தி என்பது இற்றி விழுதுவிடும் மரத்தின் நாட்டு வழக்காகும். இற்றி
மரப்பெயரானது இப்பெண் கவிஞரின் பெயராக இருத்தல் வேண்டும். இவர் பெருமுளை
என்ற ஊரினர். பெருமுளை என்பது மருவி நாளடைவில் வருமுலை என்பதாயிற்று.
இவரது குறுந்தொகைக் கவிதை ஒன்றில்,
'ஒரு நாள் வாரலன்: இருநாள் வாரலன்
பல்நாள் வந்தது, பணிமொழி பயிற்றி, என்
நன்னர் நெகிழ்ந்த பின்றை
வரைமுதிர் தேனின் போகியோனே -
ஆக ஆகு எந்தை யாண்ணாடு உளன் கொல்லோ?
வேறு புலன் நல்நாட்டுப் பெய்த
எறுடை மழையின் கவிழும் என் நெஞ்சே.' - குறுந் - குறிஞ்சி
176.
ஒரு நாள் இரு நாள் அல்ல, பல நாட்கள் வந்தவன். பணிவுடன் பேசி, என் நல்ல
நெஞ்சத்தை நெகிழவைத்தவன். பின்னர், மலையில் முதிர்ந்து எவருக்கும்
பயனளிக்காததும், வீழ்ந்தழிவதுமாகிய தேனடையைப் போல போனவன் ஆயினன். உற்ற
துணையாகிய அவன் எங்கே இருக்கின்றானோ? காட்டில் பெய்த இடியோசையுடன் கூடிய
மழை, கலங்கி நம்மிடம் வருவது போல், என் மணமும் அமைதியற்று அவன் நினைவில்
கலங்குகின்றது.
முடிவுரை :
சங்ககாலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கவிஞர்கள் எழுதியிருக்க வாய்ப்புண்டு.
ஆணுக்குப் பெண் சளைத்தவரல்ல என்று தமிழ்ப்பெண்கவிகள் சரமாரியாகக்
கவிபொழிந்திருக்கிறார்கள். அற்றைய நாளில் பெண்கள் சமூகத்தில் எத்தகைய
இடத்தைப் பெற்றிருந்தனர் என்பதை அவர்களுடைய கவிதை வாயிலாக நாம் அறிய
முடிகிறது.
பெண்குலம் வாழ்க! பெண் கவி வாழ்க!! பெண் கல்வி பொலிக!!!
worldnath_131149@yahoo.co.in
|