தமிழ் ஓலைச் சுவடிகள்
திருமதி செல்லையா யோகரத்தினம்
M.A
தமிழ்
ஓலைச்சுவடிகள் பற்றி அறிய நாம் சிறிது பின்நோக்கிப் பயணிக்க வேண்டும்.
பழங்காலத்தில் கல், களிமண், உலோகத்தகடு, துணி, இலை, பனை ஓலை, பூர்ஜ
மரப்பட்டை, மரப்பலகை, தோல், மூங்கில்பத்தை, எழுதப்படு பொருட்களாகப்
பயன்பட்டன. எகிப்தியர், கிரேக்கர், யூதர் முதலிய இனத்தவர்
பண்டைக்காலத்தில் பபரைஸ்தாளையும் விலங்குகளின் தோல்களையும் எழுதப்படு
பொருளாகப் பயன்படுத்திய காலத்தில் தமிழர்கள் பனை ஓலையினால்ச்
செய்யப்பட்ட ஒலைச் சுவடிகளில் நூல்களை எழுதி வந்தனர். பனை ஓலையில்
எப்பொழுது முதல் எழுதப்பட்டது என்று கூற முடியாது. பனை ஓலையில் எழுதுவது
எளிமையாக இருப்பதாலும், அவற்றைச் சரியான முறையில்ப் பேணிப்
பாராமரித்துப் பாதுகாத்து வந்தால் நீண்ட நாட்கள் அழியாமல் இருக்கும்
தன்மை கொண்டதாலும் பனையோலை எழுதுவதற்குப் பயன் படுத்தப்பட்டு வந்தது.
பரவலாகத் தென்கிழக்காசிய நாடுகள் பல பனை ஓலையைப் பயன்படுத்தி
யிருப்பினும் அவற்றைப் பயன்படுத்தும் முறையைத் தென்னிந்தியாவிலிருந்தே
பயின்றிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
பண்டைக்காலத்தில் தமிழர் தம் இலக்கியப் படைப்புக்களைச் செவிவழிச்
செய்தியாக மனப்பாடம் செய்தே பேணிக் காத்தனர் என்பது உறுதியாகத்
தெரிகிறது. பழங்காலத்தில் ஓர் ஆசிரியர் தான் இயற்றிய நூலையோ,
ஆசிரியரிடம் தான் கற்ற நூலையோ வாய்மொழியாகப் பாடஞ் சொல்லுவார். பாடம்
கேட்கும் மாணவர் அவற்றைத் தன் மனத்தில் நிறுத்தி மனப்பாடம் செய்து தன்
மாணவருக்கு வாய்மொழியாகப் பாடம் சொல்லிக் கொடுப்பார். இவ்வாறு பாடம்
சொல்லிக் கொடுத்தமையை இறையனார் களவியல் உரையின்படி கிடைக்கும் தகவல்
மூலம் அறியலாம். இறையனார் களவியல் (அகப்பொருள்) உரையை பாடியவர் நக்கீரர்.
இவரது காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டாகும். இவர் தாம் செய்த களவியல் உரையை
தம் மகன் கீரங்கொற்றனாருக்கு உரைத்தார். கீரங் கொற்றனார் தேனூர்
கிழாருக்கு உரைத்தார். இவ்வாறாக இந்த உரை அடுத்தடுத்து மனப்பாடமாக
எட்டுத் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப் பட்டுள்ளது.
இறுதியில் கி.பி பத்தாம் நூற்றாண்டில் முசிரி நீலகண்டன், இந்த உரையை
ஓலைச் சுவடியில் கையால்; பொறித்துப் பின் பாதுகாக்கப் பட்டது என்பது
தெளிவு. தொடக்க காலத்தில் இலக்கியங்கள் வாய்மொழியாக இருந்ததால் அவற்றை
மனப்பாடம் செய்வதற்காகவும், பிறருக்குக் கற்றுக் கொடுப்பதற்கு எளிமையாக
இருக்க வேண்டும் என்பதற்காகவும் எதுகை, மோனைகளுடன் அந்தாதி அமைப்பிலும்
அமைத்திருந்தனர் என்பது உற்று நோக்க வேண்டியது.
நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் எனக்கருதப்பட்ட செய்திகள் கற்களில்
பொறிக்கப்பட்டன. பெரும்பாலும் மன்னர்களின் ஆணைகள், அவர்கள் பணிகள்
போன்றன கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டன. தென்னிந்திய அரச மரபினரால்
வளங்கப்பட்ட பல கொடைகள் குறித்த பதிவுகள் செப்பேடுகளில் எழுதப்பட்டன.
இலக்கியம் இலக்கணம் போன்ற நீண்ட பதிவுகள் பனையோலையில் எழுதப்பட்டன. இவை
எழுத்தோலை அல்லது ஓலைச்சுவடி என்று கூறப்பட்டன. இலை, மரப்பட்டை,
களிமண்பலகை போன்றவை விரைவில் அழியக்கூடியவை. மரப் பலகை மூங்கில் பத்தை
போன்றவற்றில் பெரியநூல்களை எழுதிக் கையாள்வது என்பது சிரமமான காரியம்.
தோல், துணி, உலோகத் தகடு போன்றவை மிகுந்த பொருட்செலவை உண்டாக்கும்.
மேலும் பிற உயிர்களைக் கொன்று அவற்றின் தோலில் சிறந்த கருத்துக்கள்
உள்ள நூல்களைப் பதிவு செய்தல் மனிதத் தன்மைக்கு முரண்பட்ட செயலாகும்.
அதோடு அவற்றில் விரைவாகவும் எழுத முடியாது. கருங்கல் போன்ற பிற
பொருட்களைப் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வது கடினம். ஆனால் ஓலைச்
சவடிகளின் நிலை அப்படியல்ல. அவை இரண்டு மூன்று நூற்றாண்டுவரை
அழியாத்தன்மை வாய்ந்தவை. மேலும் மிகுந்த செலவுமில்லை, எல்லா இடங்களிலும்
இலகுவில் கிடைக்கக்கூடியவை. மிகச் சிறப்பானது என்னவெனில் மிகப் பெரிய
அளவுடைய நூல்களையும் மிகச் சிறிய கட்டில் அடக்கி எங்கு வேண்டுமானாலும்,
பல இடங்களுக்கும் எடுத்துச் செல்வது சுலபம், பாதுகாப்பானதும் கூட.
இத்தகைய சிறப்பு இயல்புகளால் ஓலைச்சுவடிகளை மிகுதியாகப் பயன் படுத்தினர்
என்பது தெளிவாகிறது.
ஓலைகளில் எழுத்துச் சுவடு பதியுமாறு ஆணிகளைக் கொண்டு எழுதப்பெற்ற
ஏடுகளின் தொகுப்புச் சுவடியாகின்றது. தோடு, மடல், ஓலை, இதழ், என்னும்
பெயர்கள் மரபுச் சொற்களாகும். இவற்றில் மடல், ஓலை என்ற பெயர்கள் கடித
வடிவில் எழுதப்பட்டவைகளையும் குறிக்கும். தனித்தனி ஏடாக எழுதப்பட்டவை
ஏடு என்றும், ஏடுகளின் தொகுப்புச் சுவடி என்றும் அழைக்கப்படும்.
எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு 'ஓலைச்சுவடி' என்று அழைக்கப்பட்டு
நாளடைவில் 'ஓலை' என்றும் 'சுவடி' என்றும் இரண்டு பெயர்களையும் பெற்று
விளங்குகிறது. பெயர்கள் வேறு வேறாக இருப்பினும் இப்பெயர்கள்
குறிப்பிடும் பொருள் ஒன்றேயாகும். பழம் காலம் தொட்டுக் கல்வியாளர்கள் 'ஓலை'
என்ற சொல்லையே பயன்படுத்தி வந்துள்ளனர். ஓலைகளில் எழுதப்பட்ட
செய்திகளுக்கு ஒப்பவும், வேறு காரணங்களினாலும் அதன் பெயர்கள் பலவகைகளாக
இருந்தன. பட்டோலை, பொன்னோலை, மந்திரஓலை, வெள்ளோலை, படியோலை என்று
இலக்கியங்களிலும், அறையோலை, கையோலை, சபையோலை, இறையோலை, கீழ்ஓலை, தூது
ஒலை என்று கல்வெட்டுக்களிலும் பலவகையாகச் சொல்லப்பட்டுள்ளன என்பதனை
அறியமுடிகிறது.
சுவடி தயாரிப்பது என்பது ஒன்றும் அவ்வளவு இலகுவான வேலை அல்ல.
கைப்பக்குவமும் பயிற்சியும் மிக அவசியம். பனை மரத்தில் உள்ள ஓலைகளில்
அதிகம் முற்றாததும், அதிகம் இனமையுமல்லாத நடுநிலையில் உள்ளவற்றைத்
தேர்ந்து எடுக்கவேண்டும். 'ஓலைச்சார்வு' எனப்படும் இவை நீண்ட நாட்கள்
அழியாமல் இருக்கக்கூடியவை. ஓரளவு பருவம் வந்த பனை மரத்திலிருந்தே இந்த
சார்வு ஓலை வெட்டி எடுக்கப்படும். 'வடலி' ஓலை பொருந்தாது. ஓலையை
வெட்டுபவர்களுக்கு இதன் பருவம் நன்கு தெரியும். தனித்தனியாகப் பிரித்து
எடுப்பதற்கு சிறிது வெயிலில் காயவிட்டு, ஈர்க்கையும், அடவியனையும் 'சத்தகத்தால்';
குத்தி எடுத்து தேவையான அளவில் நறுக்கி எடுக்க வேண்டும். இந்தச்
செயற்பாடு 'ஓலை வாருதல்'; எனப்படும். ஒத்த அளவிலான ஓலைகளை ஒன்று
சேர்த்தல் 'சுவடி சேர்த்தல்' எனப்படும். இந்தப் பனை ஓலைகளின் மேற்பரப்பு
சிறிது கடினமானதாக இருப்பதால், இலகுவில் எழுத முடியாது. ஆகவே
பதப்படுத்த வேண்டும். மிருதுவாக்க வேண்டும். அப்போதுதான் எழுதுவதற்கு
எளிதாகவும் சேதமுறாமலும் இருக்கும். பதப்படுத்துவதால் ஓலைகள் விரைவில்
அழியாமலும் பூச்சிகளால் அரிக்கப்படாமலும் பாதுகாக்கப் படுகின்றன.
பதப்படுத்தல் என்பது கத்தரிக்கப்பட்ட, நன்கு காய்ந்த, சுவடி
சேர்க்கப்பட்ட பனை ஓலைகள் தண்ணிரில் இட்டு வேகவைக்கப்படும். இவ்வாறு
கொதிக்க வைக்கப்படுவதால் ஓலையில் துவள்வு ஏற்படும். இதன்பின் ஓலைகள்
மீண்டும் காயவைக்கப்பட்டு, நன்கு காய்ந்த பின், கனமான சங்கு அல்லது
மழுமழுப்பான கல்லைப் பாவித்து ஓலைகள் நன்கு தேய்க்கப்படும். இப்படிச்
செய்வதால் சுவடிகள் ஒருவித பளபளப்பைப் பெறும். அத்துடன் தகடுபோல்
ஆகிவிடும். இந்த நிலை எழுதுவதற்கு ஏற்ற நிலையாகும். இது பாடம் செய்தல்
என்றும் சொல்லப்படும்.
ஓலைச் சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும் நூறு அடி
வரை வளரக்கூடிய அரிய வகைப் பனை மரம் 'கூந்த பனை மரம்' பண்டைய காலத்தில்
பயன்படுத்தப்பட்டன. இவை 'தாழிப்பனை' என்றும் அழைக்கப்படும். இம்மரத்தின்
ஓலைகளைப் பக்குவப்படுத்தி சுவடிகள் தயாரிக்கப்பட்டன. தாழிப்பனை நன்கு
வளர்ந்து 65 முதல் 70 ஆண்டுகளில் பூக்கும். ஒரு முறை பூத்தபின் அந்த
மரம் காய்ந்துவிடும். இந்த மரம் பூக்கும் போது அதன் காம்பை வெட்டி
அதிலிருந்து கள் இறக்குவர், காரணம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே
பூப்பதால் அனைத்துச் சத்துக்களும் அந்தக் கள்ளில் கிடைக்கும் என்பது ஒரு
நம்பிக்கை.
ஓலையைப் பதப்படுத்த பலமுறைகள் பயன்படுத்தப்பட்டன.
ஒன்று : ஓலையைத் தண்ணீரில் அல்லது பாலில் வேக வைத்தல்.
இரண்டு: நீராவியில் வேகவைத்தல்.
மூன்று: ஈரமணலில் புதைத்து வைத்தல்.
நான்கு: நல்லெண்ணெய் பூசி ஊற வைத்தல்.
ஐந்து: ஈரமான வைக்கோற் போரில் வைத்தல்.
இவ்வாறு பதப்படுத்தப்பட்ட சுவடிகளில் ஒன்று அல்லது இரண்டு துளைகள்
இடப்படும். இது 'ஓலைக்கண்' எனப்படும். ஒரு துளையில் கயிற்றை நுழைத்து
கயிறு உருவுப்படாது இருக்க ஈர்க்குடன் உள்ள ஓலையில் இரண்டு முக்கோணங்கள்
உள்ளதாக கிளிமூக்குப் போலக் கத்தரித்துக் கட்டப்படும். இதற்கு 'கிளிமூக்கு'
என்று பெயர். மற்றொரு துளையில் ஒரு குச்சி அல்லது ஒரு அணி செருகப்படும்.
இதற்குச் 'சுள்ளாணி' என்று பெயர். சுவடிகளுக்கு மேலும் கீழும்
மரத்தாலான சட்டங்கள் வைத்து கிளிமூக்குக் கட்டப்பட்ட கயிற்றினால்
இறுக்கிக் கட்டி வைப்பது வளமை. துளையிடப்பட்ட செப்புக்காசு, உலோகத்தகடு
ஆகியவை கிளிமூக்கிற்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டன. எழுதப்பெற்ற
ஓலைகளின் சுவடிப்பே ;ஓலைச்சுவடி' ஆனது. தமிழில் 'தோடு', 'மடல்', 'ஓலை',
'ஏடு', இதழ்', ஆகிய பெயர்கள் எழுதப்பெற்ற சுவடிகளைக் குறிக்கின்றன.
இவற்றுள் கடித வடிவில் எழுதப் பெற்றவை 'தோடு', 'மடல்', 'ஓலை' என்ற
பெயர்களைப் பெறுகின்றன. நூல் 'வடிவில் அமைந்தவை 'ஏடு' என
அழைக்கப்பெறுகின்றன. எழுத்துச்சுவடிகளைத் தாங்கியுள்ள அவ்வேடுகளின்
தொகுதி 'சுவடி' எனப்படும். கையால் எழுதப்பெற்ற படிவம் 'சுவடி' எனப்படும்.
எந்தப் பொருளிலும் எழுதப்பட்டதாகவும் இருக்கலாம், ஆனால் எளிதாகவும்,
விரைவாகவும் எழுதக்கூடிய எழுது கருவிகளால் எழுதப்பெற்றதே சுவடியாகும்.
சுவடிகள் எழுதுவதற்கென்று ஆட்கள் இருந்தார்கள். இப்படி எழுதுபவர்கள் 'எழுத்தாளர்'
என்று அழைக்கப்படுவர். இளமை முதலே ஓலையை இடக்கையில்ப் பிடித்து,
வலக்கையால் எழுத்தாணியைக் கொண்டு எழுதிப் பழகுவர். எழுத்தாணியைப்
பிடித்து எழுதும் போது ஓலையைத்தான் நகர்த்துவர். எழுத்தாணி பிடித்த
இடத்திலிருந்தே வரையும். ஏடு எழுதப் பழகிக் கொண்டோர் தமது இடக்கைப்
பெருவிரல் நகத்தை வளர்த்து, அதில் பிறை வடிவில்த் துளையிட்டு, அப்பள்ளப்
பகுதியில் எழுத்தாணியை வைத்து, ஒலையில் வரிவரியாக ஓர் எழுத்தின் மீது
மற்றோர் எழுத்துப் படாமலும், ஓரு வரியின் மீது மற்றோர் வரி இணையாமலும்
போதிய இடம் விட்டு எழுதுவர். மிகச்சிறிய எழுத்துக்களாக, ஒரு பக்கத்தில்
இருபது, முப்பது வரிகள் வரை எழுதுவர். மிக நுண்ணிய மெல்லிய
எழுத்தாணியைப் பயன்படுத்துவர். இரண்டு பக்கத்திலும் எழுதுவர்.
இக்காலத்தில் தாளில் எழுதுவதைப் போன்று மிக வேகத்துடன் எழுதும் ஆற்றலும்
இருந்திருக்கிறது.
ஓலைகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் சரியாகத் தெரிவதற்காக, ஓலையில் மஞ்சள்
அரைத்துப் பூசுதல், வசம்பு, மணித்தக்காளி இலைச்சாறு, ஊமத்தை இலைச் சாறு,
கோவை இலைச்சாறு, மாவிலைக்கரி, அறுகம்புல் கரி, விளக்குக்கரி
போன்றவற்றைப் பூசி எழுத்துக்களை வாசித்துள்ளனர். இதற்கு மையாடல் என்று
பெயர். மையோலை பிடித்தல், மை தடவப்பெற்ற நெடுங்கணக்கு முதலிய சுவடிகளைக்
கையிலேந்திப் பயிலுதல் இங்ஙனம் முதன் முதலாகச் சுவடி பிடித்தலை மையாடல்
என்று வழங்கினர். இம் மையாடலினால் ஓலையில் உள்ள எழுத்துக்கள்;
கண்ணிற்குத் தெளிவாகத் தெரிவதுடன், ஓலைகளைப் பூச்சிகளிடமிருந்தும்
பாதுகாக்கும். கண்ணிற்குக் குளிர்ச்சியையும் உண்டாக்கும்.
மேலும் சுவடிகளைப் பாதுகாப்பதற்கு மஞ்சள், வேப்ப எண்ணெய் பாவிக்கப்பட்டு
வந்திருக்கிறது. மஞ்சளை அரைத்து நன்றாகக் குழம்பாக்கிக் கொண்டு
சுவடியின் இரண்டு பக்கங்களிலும் தடவுதல். இவ்வாறு தடவுவதால் சுவடிகளை
அழிக்கக்கூடிய கரையான் (கறையான்), அந்துப்பூச்சி போன்றவை
அழிக்கப்பட்டுச் சுவடிக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும். மஞ்சள்
பூச்சிகளைக் கொல்லும் தன்மை கொண்டது என்பதை பழங்காலம் முதல் தமிழர்கள்
அறிந்திருந்தனர். அதேபோல வேப்ப எண்ணெய் பூச்சு முறையும்
இருந்திருக்கிறது. இம்முறையில் வேப்ப எண்யெயைத் தூரிகையின் உதவியால்
சுவடியின் இருபுறமும் பூசுவதால் சுவடிக்குக் கேடு விளைவிக்கும்
பூச்சிகள் அழிக்கப்பட்டு சுவடியை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக
வைத்திருக்க உதவும்.
முற்காலத்திலிருந்து காகிதம் கண்டுபிடிக்கப்படும் வரை கல்வி சம்பந்தமான
அனைத்துப் பயன்பாட்டுக்கும் பனை ஓலைச் சுவடிகளே பயன்பாட்டில் இருந்து
வந்துள்ளது. இன்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் சங்க இலக்கியங்கள்,
சித்தர் பாடல்கள், கம்பராமாயணம், திருக்குறள் அனைத்தும் இந்தப் பனை
ஓலைச் சுவடிகளைத்தான் தங்கள் இருப்பிடமாகக் கொண்டிருந்தன. பனை
பலவகையிலும் நமதுவாழ்வாதாரத்திற்கு மட்டுமல்ல கல்வி, பண்பாடு, கலை,
இலக்கியம் அனைத்திற்கும் துணையாகத் தூணா இருந்திருக்கிறது. பனையும் நம்
தாய்த் தமிழ் மொழியும் இணைபிரியாத இரட்டையர்களாக இருந்து வந்திருக்கிறது
என்பது தெளிவு. ஆனால் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டபின் பனையின்
பாரம்பரியம் மறக்கப்பட்டுவிட்டது. எனினும் சிறுபிள்ளைகளின்
வித்தியாரம்பம் பேர்து நினைவூட்டப்படுகிறது. 'ஏடு தொடக்குதல், ஏடு
எழுதுதல்' என்று பேச்சுவளக்கிலாவது பேசிக் கொள்கிறோம். அவ்வளவுதான்.
பழங்காலத்தில் பரம்பரை பரம்பரையாக கல்வியில் சிறந்து விளங்கிய புலவர்
பரம்பரையினர் இல்லங்களில் நூற்சுவடிகள் இருந்த வந்தன. ஏனையோரிடமும் ஒரு
சில நூற்சுவடிகள் தங்கின. இசை, நாட்டியம், சிற்பம், சோதிடம், மருத்துவம்,
இன்னும் பல தொழிற் கலைகள் பற்றிய சுவடிகள் அத்தகைய கலைகளைப் போற்றிய
குடும்பங்களிடம் முடங்கிக் கிடந்தன. சமயம் பரப்பும் திருமடங்கள், முன்பு
கல்வி நிலையங்களாக இருந்தமையால் அந்நிறுவனங்களில் பல சுவடிகள் மாட்டிக்
கொண்டன. சுவடிவழிக் கல்வி 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்
வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்தக் காலகட்டத்தில் தமிழ் நூல்களைச்
சுவடியிலிருந்து எடுத்து அச்சிடப் பலர் முனைந்தார்கள். தாங்கள்
பதிப்பிக்க முற்பட்ட நூல்களுக்குரிய சுவடிகளைத் தேடிப் பெற்று அச்சிற்
பதித்தனர். இங்கே தமிழ்த் தாத்தா என்று பாசமாக அழைக்கப்படும்
உ.வே.சாமிநாதர் ஐயர் அவர்கள் ஊர் ஊராக மாட்டுவண்டியில்ச் சென்று
சுவடிகள் சேகரித்தமை குறிப்பிடப்பட வேண்டியதாகும். இத்தகைள அச்சு
முயற்சியால் ஆங்காங்கே சிதறிக்கிடந்த சுவடிகள் பதிப்பாசிரியர்கள்
இல்லங்களில்க் குவிந்தன.
பழங்காலத்தில் தற்காலத்தில் உள்ளது போன்று கல்விக் கூடங்களில் கல்வி
கற்பிக்கப்படவில்லை. மாணவர்கள் ஆசிரியர்களைத் தேடிச் சென்று கல்வி
கற்கும் முறையே இருந்தது. அக்காலத்தில் காகிதமும் எழதுகோலும் வழக்கிற்கு
வரவில்லை. ஓலைகளில் எழுத்தாணியால் எழுதித் தொகுத்த சுவடிகளே நூலு;களாக
இருந்தன. அப்போதைய மாணவர்களுக்கு மணல் கரும்பலகையாகவும், பனை ஓலைச்சுவடி
புத்தகமாகவும், விரலும் எழுத்தாணியும் எழுதுகோலாகவும் இருந்தன. கல்வி
வாய்மொழியாகவே புகட்டப்பட்டது. பாட நூல்கள் இடம் பெறவில்லை. யோகப்
பயிற்சிகள் உபாத்தியாயராலும் துறவிகளாலும் நேரடியாகவே உடனிருந்து
சொல்லித்தரப்பட்டன. பாடப்பொருட்களைப் புரிந்து மனப்பாடமாகவே
வைத்திருந்தனர். பாடப்பொருட்கள் திட்டவட்டமான அணுகுமுறையில் மாணவர்
மனதில் பதிவிக்கப்பட்டன. சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு
முன்பே சமணத்துறவிகளால் இம்முறை பின்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் முதலில் மாணவரின் வலக்கை ஆள்காட்டி விரலைப் பிடித்து தட்டில்
பரப்பி வைத்துள்ள அரிசி அல்லது ஏதாவது ஒரு தானியத்தில் எழுத்தை எழுதிக்
காட்டுவார். இந்த மரபு தற்காலத்திலும் உள்ளது. விஜய தசமி அன்று அல்லது
பொங்கலன்று இதனை வயது முதிர்ந்த ஆசிரியரைக் கொண்டு மூன்று அல்லது ஐந்து
வயதுப் பிள்ளைக்கு ஏடு தொடக்குதல் நிகழ்த்துவர். பின்பு அவர் சொல்லிக்
கொடுக்கும் தமிழ் எழுத்துக்களை தவறின்றி சரியாக உச்சரிக்க வேண்டும்.
தமிழின் ஒலி வடிவை மாணவர் நன்றாகச் சொல்லத் தெரிந்த பின் வரிவடிவை
ஓலையில் வரைந்து காட்டுவார். வரிவடிவை மாணவர் நன்றாக எழுத அறிந்த பின்
ஓலை வாரவும், சுவடி சேர்க்கவும். நன்றாக எழுதவும் முற்படுவர்.
சுவடியின் இருபக்கத்திலும் முதுகு நரம்பு நீக்கப்படாத சட்டங்களளைச்
சேர்த்து சுவடிக் கட்டினை உருவாக்குவர். மரம் மற்றும் தந்தத்தர்லும்
சட்டங்கள் அமைக்கப் பெறும். சட்டங்களிட்டுக் கட்டிய சுவடியினை ஒரு
துளையில் கயிறு இருப்பது போல் மற்றொரு துளையில் குச்சியோ ஆணியோ வைத்துப்
பலபடுத்தப்படும். கிளிமூக்கு என்னும் ஓலைத் துண்டு கயிற்றின் நுனியிலும்
கட்டப்பெற்று கயிறு கழன்று வராதபடி பாது காக்கும். அழகிய துணியிலச்;
சுற்றி. அழகிய நூல் கயிறோ அல்லது பட்டுக்கயிறோ சுவடியின் ஏடுகளைச்
சிதறாமல்ப் பாதுகாத்து நிற்கும்.
ஓலைகளில் எழுதுவதற்குப் பயன்பட்ட எழுது பொருள் எழத்தாணி. எழுத்தாணி
கொண்டு எழுதும் முறை மிகப் பழமையானது. இதற்குப் பயன்பட்ட எழுத்தாணிகள்
எலும்பு, தந்தம், பித்தளை, செம்பு, இரும்பு, தங்கம் போன்றவற்றினால்ச்
செய்யப்பட்டவை. சுவடிகள் எழுதப் பயன்பட்ட எழுத்தாணிகள் குண்டெழுத்தாணி,
வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி என மூன்று வகைப்படும். குண்டெழுத்தாணி
என்பது அதிக நீளமில்லாமல் கொண்டை கனமாகவும் குண்டாகவும்
அமைந்திருக்கும். ஆரம்ப நிலையிலுள்ளவர்கள் இதனை உபயோகிப்பர். இதன்
கூர்மை குறைவாக இருக்கும் அதனால் பெரிய எழுத்துக்களே இதைக் கொண்டு எழுத
முடியும். வாரெழுத்தாணி என்பது குண்டெழுத்தாணியை விட நீளமானது.
மேற்புறத்தில்க் கொண்டைக்குப் பதிலாகச் சிறிய கத்தி அமைந்திருக்கும்.
இந்தக்கத்தி தனியாக இணைக்கப்படாமல் ஒரே இரும்பில் நுனிப்பக்கம்
கூர்மையாகவும் அடிப்பக்கம் தட்டையாகவும் கத்தி வடிவில் இருக்கும்.
நுனிப்பக்கம் எழுதவும் அடிப்பக்கம் ஓலைவாரவும் உதவுவதால் வாரெழுத்தாணி
எனப்பட்டது. நன்றாக ஓலையில் எழுதப் பழக்கமுடையவர்கள் தாங்களாகவே
அவ்வப்போது ஓலையை நறுக்கி வார்ந்து ஓழுங்குபடுத்தி எடுகளாக அமைத்துக்
கொள்வர். எனவே இவ்வெழுத்தாணியே பலரும் பயன்படுத்துவர்.
இவ்வெழுத்தாணியைப் பாதுகாப்பாக வைப்பதற்கு பனை ஓலையாலச் செய்த உறையும்
உண்டு. மடக்கெழுத்தாணி என்பது வாரெழத்தாணியைப் போன்று ஒரு
முனையில் எழுத்தாணியும் மறு முனையில் கத்தியும் அமைந்திருக்கும். மேலும்
இரண்டு பகுதிகளையும் மடக்கி இடையிலுள்ள கைப்பிடியில் அடக்கிக்
கொள்ளுமாறு அமைந்திருக்கும். மடக்கிவைக்கும் தன்மையால் மடக்கெழுத்தாணி
என்றாயிற்று. இதன் கைப்பிடி மரம், மாட்டுக்கொம்பு, தந்தம், பித்தளை
போன்றவற்றால் செய்யப்பட்டிருக்கும். மடக்கிவைப்பதால் பாதுகாப்புடையதாக
உள்ளது.
சுவடிகள் எழுதப்பட்டிருக்கும் முறை வித்தியாசமானது. காலங்காலமாக
சுவடிகளைக் கற்றும், எழுதியும் வந்தவர்கள் தாள்கள் வந்த பின்பும்
சுவடியில் எழுதுவது போன்றே எழுதியுள்ளனர். சுவடிகளில் பாடலடிகள்
தனித்தனியே பிரித்து எழுதப்பட மாட்டா. ஒரே தொடராகப் பொறிக்கப்பபட்டு
பாடல் முடிந்தவுடன் அப்பாடலின் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தமிழ்மொழிக்கே சிறப்பான எதுகையும் மேனையும் பாடலைப் பகுத்துணரத்
துணைபுரியும். சுவடியில் மெய்யெழுத்துக்கள் புள்ளியிடப்பட மாட்டா.
ரகரமும் உயிர்மெய் ஆகாரம் ஓகாரம் இவற்றைக் குறிக்க இணைக்கப்படும்
கால்களைப் போலவே இருக்கும்;. எகார ஒகாரங்களுக்குரிய ஒற்றைக்கொம்பே ஏகார
ஓகாரங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும். ஏட்டுச்சுவடிகளை எழுதிப்
பழகியவர்கள் ஏட்டுச் சவடிகளை வாசிப்பதிலும் படி எடுப்பதிலும் இதனால்த்
தொல்லைப் படவில்லை. தமிழகத்தில் கிடைக்கும் ஓலைச்சுவடிகள் இலக்கியம்,
மருத்துவம், மாந்திரியம், சோதிடம், சமயம், வணிகம், அரிச்சுவடி, எண்சுவடி
என்றவகையில் அடங்குவன. எல்லாசுவடிகளும் ஒரேமாதிரியாக இருந்தாலும்
ஒவ்வொருவகையும் தனித்துவம் பெற்றவை. தொடக்ககாலம் முதல் சுவடிகள்
செய்யுள் வடிவிலேயே இருந்தன. செய்யுள் வடிவிலுள்ளவற்றை அனைவராலும்
படிக்க முடியாது. அதனால் பல சுவடிகள் படிப்பாரற்றுக் கிடந்தன. செய்யுள்
அறிவு உள்ளவர்களால் ஓரளவு முடிந்தது. இன்றும் பல தமிழ் ஓலைச் சுவடிகள்
பலரிடமும் முடங்கிக் கிடக்கின்றன. கவிராயர் குடும்பங்கள், ஆண்ணாவிகள்
குடும்பங்கள்;, நாட்டு வைத்தியர்கள் குடும்பங்கள், சோதிடர்கள்
குடும்பங்கள், குறிசோல்லும் குறவர்கள் போன்றோர் ஓலைச் சுவடிகளைப்
பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்து உபயோகித்து வருகிறார்கள். பழைய
பொருட்களை வாங்கி விற்பவர்களிடமும் ஓலைச் சுவடிகள் உள்ளன. அவற்றைக்
கண்டுபிடித்து வெளிக்கொணர வேண்டும். இன்றைக்கும் எத்தனை கிராமங்களில்,
நாட்டுப்புறத்து வீடுகளில், எத்தனை சந்து பொந்துகளில் என்னென்ன ஏடுகள்
கறையானுக்கு இரையாகி வருகின்றனவோ? மிஞ்சிய மீதம் இருக்கின்றனவோ? யார்
கண்டார்கள்? இவைகளை மீட்டெடுத்து தமிழுக்கு வளம் சேர்ப்பது ஒவ்வொரு
தமிழனின் தலையாய கடமையாகும்.
தமிழ் மொழியில் சிந்தனைகளை எழுத உதவியவை பனை ஓலைகள். தமிழர் தம்
சிந்தனைகளை பாரம்பரியத்தை வெளிக்கொணர உதவும் இந்த ஓலைகள் முழுதும்
அச்சுப்பதிப்பாக வரவில்லை என்பது உண்மை. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும்
இருபதாம் நூற்றாண்டிலும் பல ஊர்களுக்குச் சென்று தமிழ் ஏடுகளைத்
திரட்டிப் பதிப்பித்த பதிப்பாசிரியர்களை நாம் கட்டாயம் நினைவு
கூரவேண்டும். இவர்களின் அரும்பணி இல்லையேல் இன்று நமக்குக்
கிடைத்திருக்கும் சொத்து, தமிழின் தொன்மையையும் அதன் பெருமையையும் அதன்
ஆழத்தையும் விளக்கக் கூடிய நூல்கள் கிடைத்திருக்க முடியாது.
தமிழறிஞர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் உயர் மட்டச் சமூகத்தினருக்கும்
மட்டுமே கல்வி என்ற நிலையை மாற்றி எளியோரும், சாதாரண மக்களும் கூட
தமிழ்நூல்களை வாசிக்கவும் அவற்றின் பொருள் புரிந்து கொள்ளவும் முடியும்
என்ற கல்விப் புரட்சி ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்தது
அச்சுப்பதிப்பாக்க முயற்சி என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
மேலும் வெளிநாடுகளிலும் தமிழ் ஓலைச்சுவடிகள் பல இடங்களிலும்
பாதுகாக்கப்பட்டு வருகின்றன. யுனெஸ்கோ நிறுவனம் அழிந்து வரும் பண்டைய
தமிழ் ஓலைச் சுவடிகளைப் புதுப்பித்துப் பாதுகாக்கப் பல நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது என்பது சிறிது ஆறுதலாக உள்ளது. தமிழ் ஓலைச்
சுவடிகளைத் தேடி எடுத்து தமிழின் புதைபொருட்களைத் தோண்டி எடுத்து தமிழை
மேலும் மேன்மைப் படுத்தும் வாய்ப்பு அமையுமானால் பெருமையே! இதுதான்
தமிழ் ஓலைச் சுவடிகளின் இன்றைய நிலை.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|