தமிழ் உலா
பேராசிரியர் இரா.மோகன்
“எம்மொழிக்கும் மூத்தவளே!
எம் மொழியாய் வாய்த்தவளே!
செம்மொழியாய் மொழிகளுக்குள்
செம்மாந் திருப்பவளே!...
எம்மொழி செம்மொழி
எனக்கேட்டால், தலை நிமிர்ந்து
எம் மொழி செம்மொழி
எனச் சொல்லும் புகழ் கொடுத்தாய்!
அகம்நீ! புறம்நீ! எம்
ஆருயிரும் நீ! எங்கள்
முகம்நீ! முகவரிநீ!
முடியாத புகழும் நீ!” (எம்மொழி செம்மொழி, பக்.9,12)
எனத் தமிழ் மொழிக்குப் புகழாரம் சூட்டுவார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
உலகில் ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகள் வழங்குகின்றன; அவற்றுள் ஆறு
மொழிகளே செம்மொழிகளாக (Classical Languages) அடையாளம் காணப்-பெற்றுள்ளன.
செம்மொழிகள் ஆறனுள் தமிழ், வடமொழி என்னும் இரு மொழிகளுக்குச்
சொந்தக்காரர்கள் நாம். இரு மொழிகளிலும் உலக வழக்கு அழிந்தொழியாத
சீரிளமைத் திறம் வாய்ந்தது நம் அன்னைத் தமிழ் மொழி. “திருந்திய பண்பும்
சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் ‘செம்மொழி’யாம் என்பது
இலக்கணம். இம்மொழி நூலிலக்கணம் தமிழ் மொழியின்கண்ணும் அமைந்திருத்தல்
தேற்றம்” (தமிழ் மொழியின் வரலாறு, ப.71) என மொழிகுவர் பரிதிமாற் கலைஞர்.
வாழ்க்கைக்கு இலக்கணம் கண்ட தொல்காப்பியம்
தமிழ் மொழியில் இன்று கிடைக்கும் நூல்களுள் காலத்தால் பழமையானது,
முழுமையானது தொல்காப்பியம். ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்’
என்னும் சிறப்புப் பெயரே அதன் ஆசிரியரின் பெருமையைப் பறைசாற்றும்.
எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கண்ட மொழிகள் உலகில் பல உண்டு;
ஆயின், பொருளுக்கு இலக்கணம் கண்டிருப்பது தொல்-காப்பியத்தின்
தனிப்பெருஞ் சிறப்பாகும். அகத்திணை இயல், புறத்திணை இயல், களவியல்,
கற்பியல், பொருளியல் என்னும் பொருளதிகாரத்தின் முன் ஐந்து இயல்களும்,
மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் பின் நான்கு
இயல்களும் மனித வாழ்க்கைக்கும் மாண்புறு கவிதைக்கும் ஒரு சேர இலக்கணம்
கண்ட நூல் தொல்காப்பியம் என்பதை உணர்த்துவனவாகும். மேலும்,
தொல்காப்பியத்தில் ‘என்ப’, ‘என மொழிப’, ‘என்மனார் புலவர்’ என்றாற் போல்
இருநூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றிருக்கும் சொல் மற்றும்
தொடர் ஆட்சிகளால், தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழில் இலக்கண, இலக்கிய
நூல்கள் இருந்தமையை அறிய முடிகின்றது.
செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்த சங்க
இலக்கியம்
தமிழுக்குச் செம்மொழியைப் பெற்றுத் தந்ததில் மோனையைப் போல் முன்னே
நிற்பது சங்க இலக்கியம். சங்க இலக்கியமாவது எட்டுத் தொகையும்
பத்துப்பாட்டும் ஆகும். ‘தமிழ் விடு தூது’ ஆசிரியர், ‘மூத்தோர்கள்
பாடியருள் பாட்டும் தொகையும்’ என இவற்றைக் குறிப்பிடுவர். இங்கே
‘மூத்தோர்கள்’ எனப்படுவோர் சங்கச் சான்றோர்கள் ஆவர். ‘பாட்டு’ என்பது
அகவற்பாவால் அமைந்த நீண்ட பத்துப்பாட்டு நூல்களைக் குறிக்கும்; ‘தொகை’
என்பது நற்றிணை, நல்ல குறுந்தொகை முதலான எட்டுத் தொகை நூல்களைச்
சுட்டும்.
சங்கப் பாடல்களின் தொகை 2381. அதனுள் அகத்திணை பற்றியவை 1862. சங்கப்
புலவர்களின் எண்ணிக்கை 473. அதனுள் அகம் பாடியவர்கள் 373 சான்றோர் ஆவர்.
“அகம் புறம் என்னும் இரு திணை வடிவமைந்த பொருளிலக்கியம் இன்றும்
அறிவுலகிற்குப் புதுவது. தமிழ் மொழி ஒன்றின் கண்ணே தான் காணப்படுவது
என்று பன்மொழியறிஞர்கள் செவ்வனம் மொழிகுவர்” (தமிழர் காதல், ப.13)
என்னும் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் கருத்து ஈண்டு மனங்கொளத்தக்கது.
பதற்சோறாக, சங்க இலக்கியத்தில் இருந்து நெஞ்சை அள்ளும் அகப்பாடல்
ஒன்றையும், அறிவுக்கு விருந்தாகும் புறப்பாடல் ஒன்றையும் இங்கே காணலாம்.
“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே” (40)
என்பது உலகக் காதலரின் உள்ளத்து உணர்வினைப் படம்பிடித்துக் காட்டும்
உயரிய குறுந்தொகைப் பாடல். இதனைப் பாடிய புலவரின் பெயர் தெரியாது.
‘செம்மண் நிலத்தில் பெய்த வானத்து மழைநீர் ஒன்றானது போல் அன்புள்ள நம்
நெஞ்சங்களும் ஒன்றாயினவே!’ என இப் பாடலில் இடம்பெற்ற அழகிய உவமை
காரணமாகப் புலவருக்குச் ‘செம்புலப் பெயல்நீரார்’ என்ற சிறப்புப் பெயர்
அமைந்தது. இக் குறுந்தொகைப் பாடலின் தாக்கத்தினை இன்றைய திரை இசைப்
பாடலிலும் காணலாம்.
“நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?
இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?
காணும் வரை நீ அங்கே நான் இங்கே,
கண்ட பின்பு நீ இங்கே நான் அங்கே!”
என்ற கவியரசர் கண்ணதாசனின் புகழ் பெற்ற திரையிசைப் பாடல் இவ் வகையில்
குறிப்பிடத்தக்கது.
இப் பாடலைப் பற்றிய ஒரு சிறப்புத் தகவல்: லண்டன் மாநகரில் சுரங்க வழிப்
பாதையில் ஓடும் ரயிலில் இக் குறுந்தொகைப் பாடல் அறிஞர்
ஏ.கே.இராமானுசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் எழுதப் பெற்று, ஒரு நாள்
முழுவதும் பயணிகளின் காட்சிக்கு வைக்கப் பெற்றிருந்ததாம்!
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த சங்கக் கவிதை வரி ஒன்று
உண்டு என்றால், அது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தான். ஒரே
வரியால் உலகப் புகழ் பெற்ற கவிஞர் ஒருவர் உண்டு என்றால், அவர் இந்த
வரியைப் பாடிய கணியன் பூங்குன்றனார் தாம். கவிக்கோ அப்துல் ரகுமான்
குறிப்பிடுவது போல், “தமிழர்கள் எந்த அளவுக்குப் பண்பாட்டின் உச்சியில்
இருந்தார்கள் என்பதைப் பறைசாற்றும் வரி இது. தமிழ் நூல்கள், பண்பாட்டுச்
சின்னங்கள் எல்லாம் அழிந்து போய் இந்த ஒரு வரி மட்டும் எஞ்சினால் கூட
இது ஒன்றே உலகத்திற்குத் தமிழரின் பண்பாட்டை உணர்த்துவதற்குப்
போதுமான-தாகும்” (எம்மொழி செம்மொழி, ப.52).
“பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”
என்னும் இப் புறநானூற்றுப் பாடலின் இறுதி இரண்டு அடிகள் வெறும்
வார்த்தைகளாக அல்லாமல், மனித குலத்தின் வாழ்க்கையாக அமைந்தால் போதும்,
இந்த உலகம் இன்பம் விளையும் தோட்டமாக மறுகணமே ஆகி விடும்!
வெண்டல் வில்கி என்ற இந்நூற்றாண்டின் அமெரிக்க நாட்டு அரசியல் அறிஞர்
‘ஒரே உலகம்’ (One World) என்னும் தம் நூலில், ‘வருங்காலத்தில் நம்
சிந்தனை உலகளாவிய நிலையில் பரந்திருத்தல் வேண்டும்’ (In future, our
thinking must be world-wide) எனக் குறிப்பிட்டிருந்த கருத்து,
அனைவராலும் வரவேற்கப்பட்டது; பெரிதும் பாராட்டவும் பெற்றது. ‘ஒன்றே
உலகம்’ என்ற இந்த உயரிய மனப்பான்மையை நம் சங்கச் சான்றோர்கள் இருபது
நூற்றாண்டு-களுக்கு முன்னமே நன்கு உணர்ந்திருந்தனர்; உணர்ந்ததனைத் தம்
பாடல்களில் வெளியிட்டும் இருந்தனர்:
“பெரிதே உலகம் பேணுநர் பலரே” (புறநானூறு,
207)
“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” (புறநானூறு, 206)
“யாதும் ஊரே; யாவரும் கேளிர்!” (புறநானூறு, 162)
மனித முயற்சிக்கு மகுடம் சூட்டும்
திருவள்ளுவர்
சங்க காலத்தைச் சார்ந்த எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ‘பதினெண்
மேற்கணக்கு’ என அழைக்கப்பெறும்; அடுத்த சங்க மருவிய காலத்தில் தோன்றிய
திருக்குறள், நாலடியார் முதலான பதினெட்டு நூல்கள்
‘பதினெண்கீழ்க்கணக்கு’ எனக் குறிக்கப்படும். தமிழ் விடு தூது ஆசிரியர்,
‘கேடுஇல் பதினெண்கீழ்க்-கணக்கு’ என இவற்றைக் கூறுவர்.
பதினெண்கீழ்க்கணக்கில் 11 நூல்கள் நீதி நூல்கள்; அவற்றுள் சிறப்பாகக்
குறிப்பிடத்தக்கவை நாலடியாரும் திருக்குறளும். ‘நாலும் இரண்டு’ என
இவ்விரு நூல்களையும் அடி வரையறையைக் கருத்தில் கொண்டு சுட்டுவர்.
‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’
என்பது தொன்று தொட்டு தமிழக மக்கள் நாவில் வழங்கி வரும் பழமொழி ஆகும்.
திருக்குறளின் தனிப்பெருஞ் சிறப்புகளாகக் குறிக்கத் தக்கவை மூன்று.
அவையாவன:
1. தமிழில் பாடப் பெற்றிருந்தாலும், தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற
சொற்கள் இடம்பெறா வண்ணம் பொதுமை நோக்குடன் திகழ்வது திருக்குறளின் முதல்
தனித்தன்மை ஆகும்.
2. ‘தேசிய இலக்கிய’மாக (National Literature) அழைக்கப் பெறுவதற்கான
அத்துணைக் கூறுகளையும் கொள்கைகளையும் தன்னகத்தே கொண்டிருப்பது
திருக்குறளின் இரண்டாவது சிறப்புப் பண்பு ஆகும்.
3. எந்த வகையான சார்பும் சாய்வும் இன்றி ‘உலகப் பொதுமறை’யாக விளங்குவது
திருக்குறளின் முத்தாய்ப்பான முத்திரைப் பண்பு ஆகும். இதனைக் கருதியே
கவியரசர் பாரதியார், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான்புகழ்
கொண்ட தமிழ்நாடு’ எனப் பறைசாற்றுவார்.
ஜெர்மன் நாட்டுப் பேரறிஞர் – இசை, தத்துவம், மருத்துவம் என்னும் மூன்று
துறைகளில் பழுத்த புலமை கைவரப் பெற்ற கொள்கைச் சான்றோர் – ஆல்பர்ட்
சுவைட்சர். அவர் திருக்குறளைப் பிறமொழி சார்ந்த அற நூல்களுடன் ஒப்பிட்டு
ஆராய்ந்து, ‘ஒப்புயர்வற்ற நூல்’ என உளமாரப் போற்றியுள்ளார்; ‘உலக
இலக்கியத்தில் இவ்வளவு உயர்ந்த மெய்யுணர்வு ததும்பும் அறவுரைக் சொத்து
வேறொன்று இருக்கக் காணோம்’ (There hardly exists in the literature of
the world a collection of maxims, in which we find so much lofty
wisdom – Albert Schweitzer, Indian Thought and its Development,
p.203) எனப் புகழாரம் சூட்டியுள்ளார். இன்னும் ஒரு படி மேலாக, தம்
உள்ளம் கவர்ந்த 33 குறட்பாக்களை அவர் மேற்கோள்களாக எடுத்தாண்டிருப்பதும்
குறிப்பிடத்-தக்கது.
திருக்குறளில் காணப்பெறுவது ‘உலகம் மாயை’ என்ற எதிர்மறைக் கொள்கை அன்று;
உலகம் மற்றும் வாழ்வு பற்றிய மறுதலைக் கொள்கையும் (World, Life
Negation Theory) அன்று. திருக்குறள் பெரிதும் வலியுறுத்துவது எல்லாம்
உலகமும் வாழ்வும் மெய் என்ற உடன்பாட்டுக் கொள்கையையே (World, Life
Affirmation Theory). சுருங்கக் கூறின், ‘உலகம் கவர்ச்சியானது –
வாழ்க்கை இன்பம் பயப்பது – இல்லறம் மேன்மையுடையது’ என்பனவே திருவள்ளுவர்
வலியுறுத்தும் முப்பெரும் கொள்கைகள் ஆகும்.
‘இல்வாழ்க்கை’, ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் இரு அதிகாரங்களும்
வாழ்க்கை பற்றிய திருவள்ளுவரின் உடன்பாட்டுச் சிந்தனையைப் பறை-சாற்றுவன
ஆகும். சான்றாக,
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” (50)
என்ற குறட்பாவின் முதற்சொல்லே வள்ளுவரின் உடன்பாட்டு அணுகு-முறையைப்
புலப்படுத்தி நிற்பது குறிப்பிடத்தக்கது.
காட்டிற்கோ மலைக்கோ செல்லாமல், கடுந்தவம் இயற்றாமல் மனிதனை ‘வையத்துள்’
வாழச் சொல்கிறார் வள்ளுவர்; அடுத்து, ஏனோ தானோ என்று இல்லாமல்,
‘வாழ்வாங்கு’ வாழுமாறு வழிகாட்டுகின்றார்; முத்தாய்ப்பாக, இம்
மண்ணுலகிலேயே நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டினால், ‘வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்’ - வானுலகில் உள்ள தேவருள் ஒருவனாக வைத்து
மதிக்கப்படுவான் - என அறுதியிட்டு உரைக்கிறார்.
‘அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை’ (49) எனத் தேற்ற ஏகாரம் தந்து
இல்வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வள்ளுவர், ‘பெண்ணின் பெருந்தக்கது இல்’
(1137) எனப் பெண்மையைப் போற்றுவதும் நோக்கத்தக்கது. மேலும் அவர்,
‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன், மெய்வருத்தக் கூலி தரும்’
(619) என மனித முயற்சிக்கு மகுடம் சூட்டுவதும் மனங்கொளத்தக்கது.
இரட்டைக் காப்பியங்கள் வழங்கும் செய்தி
தமிழ் இலக்கிய உலகில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். ‘நாடகக்
காப்பியம்’, ‘முத்தமிழ்க் காப்பியம்’, ‘குடிமக்கள் காப்பியம்’,
‘தேசியக் காப்பியம்’, ‘ஒற்றுமைக் காப்பியம்’, ‘புதுமைக் காப்பியம்’,
‘புரட்சிக் காப்பியம்’, ‘அரசியல் காப்பியம்’, ‘அவலக் காப்பியம்’,
‘கொடியவன் இல்லாக் காப்பியம்’, ‘குழந்தை இல்லாக் காப்பியம்’ என்றாற்
போல் அறிஞர் உலகால் பல்வேறு பெயர்களால் சிறப்பித்துச் சொல்லப் பெறுவது
சிலப்பதிகாரம். ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த
தமிழ்நாடு’ என்பது கவியரசர் பாரதியாரின் பாராட்டு.
அமெரிக்க நாட்டைச் சார்ந்த எரிக் மில்லர் (Eric Miller) என்னும்
ஆய்வாளர் சிலப்பதிகாரக் காப்பியத்தின் நாயகியான கண்ணகியைப் போற்றி ‘In
Praise of Citizen Kannagi’ என்னும் தலைப்பில் ‘தி இந்து’ ஆங்கில
நாளிதழில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அதில் அவர், கண்ணகி என்னும்
பெண்மணி இன்றைய உலகிற்கு மிகவும் இயைபுடைய – பொருத்தம் உடைய –
ஒருத்தியாக விளங்கும் பான்மையை நன்கு எடுத்துக்காட்டியுள்ளார். அவரது
பாராட்டு கண்ணகி ஒரு பெண் என்பதற்காக மட்டும் அன்று; தனி ஓர் ஆளாக
நின்று, கையில் ஒற்றைச் சிலம்பையே மூலதனமாகக் கொண்டு, சொந்த நாட்டில்
அல்லாமல் ஒரு வேற்று நாட்டில், அதுவும் ஆட்சிப் பொறுப்பில் வானளாவிய
அதிகாரத்துடன் வீற்றிருக்கும் ஒரு மன்னனுக்கு எதிராக வழக்குரையாடி, அவ்
வழக்கில் வெற்றியும் பெற்றுக் காட்டுவது என்பது எளிய செயல் அன்று; அது
சாதாரணமாக நிகழ்வதும் அன்று. அருமையும் பெருமையும் வாய்ந்த இச்
செயற்-பாட்டிற்காகவே கண்ணகி இன்று உலக அரங்கில் நீதியை
நிலைநாட்டிய-தற்கான ஒரு குறியீடாகவும், தனிச்சிறப்பும் மேன்மையும்
பொருந்திய ஒரு குடிமகளாகவும் (Global Symbol of Justice and of the
Dignity of the Individual) மதிக்கப் பெறுகின்றாள். இந்நிலையில் எரிக்
மில்லர் வெளியிட்டுள்ள கருத்தின் தொடர்ச்சியாக ஆளுமை வளர்ச்சி
(Personality Development) நோக்கில் கண்ணகியின் பண்பு நலன்களை அலசிப்
பார்க்கலாம்.
புகார்க் காண்டத்துக் கண்ணகி பேசா மடந்தை; பேச நேர்ந்தாலும் சில
சொற்களின் அளவிலேயே தன் கருத்தினை எடுத்துரைக்கும் இயல்பு படைத்தவள்.
‘சிலம்புள கொண்ம்’, ‘பீடு அன்று’, ‘மதுரை மூதூர் யாவது?’ – இவையே
புகார்க் காண்டத்தில் கண்ணகி பேசுகின்ற மூன்றே மூன்று இடங்கள் – அதுவும்
ஏழே ஏழு சொற்களே. இங்ஙனம் பேசா மடந்தையாக இருந்த கண்ணகியே மதுரைக்
காண்டத்தில் நாடாளும் மன்னனுக்கு எதிராக வழக்குரையாடி வெற்றி பெறுகிறாள்;
‘தேரா மன்னா’ என்று மன்னனையும், ‘குன்றா ஒழுக்கம் புரிந்தீர்’ எனக்
கோவலனையும் நோக்கிக் கூரிய சொல்லம்புகளைத் தொடுக்கும் வல்லமை பெறுகிறாள்;
நான்கு பெரும் படைகளைக் கொண்ட ஒரு நாடாளும் மன்னனையே தன் காலணியாகிய
ஒற்றைச் சிலம்பினைக் கொண்டு வெற்றி பெற்றுச் ‘சிலம்பின் வென்ற
சேயிழை’யாக வாழ்வில் உயருகிறான். வஞ்சிக் காண்டத்திலோ கண்ணகி
‘உயர்ந்தோர் ஏத்தும் உயர்சால் பத்தினிக் கடவு’ளாகவே ஆகிறாள்.
கற்பரசியாம் கண்ணகியின் தனிபெரும் ஆளுமை வளர்ச்சி இது எனலாம்.
இதே போல சித்திராபதி – மாதவி – மணிமேகலை என்னும் மூவரது வாழ்க்கையையும்
ஆளுமை வளர்ச்சி நோக்கில் ஆராய்ந்து பார்த்தால் தெரிய வரும் ஓர் உண்மை
உண்டு; சித்திராபதியால் தன் குல வழக்கத்தில் இருந்து – பரத்தைமை
இழுக்கத்தில் இருந்து – விடுபட்டு வாழ முடியவில்லை; சித்திராபதியின்
மகள் மாதவி கணிகையர் குலத்தில் பிறந்திருந்தாலும், கோவலன் ஒருவனுடன்
மட்டுமே வாழ்ந்து, கண்ணகிக்கு நிகரான இடத்தினைக் காப்பியத்தில்
பெறுகிறாள்; மாதவியின் மகள் மணிமேகலையோ இளமையிலேயே துறவு பூண்டு,
அமுதசுரபி கொண்டு உலகின் பசிப்பிணி தீர்க்கும் அறச் செல்வியாக
உயருகிறாள்.
இங்ஙனம் சிலம்பினால் மன்னனையே வெற்றி கொண்ட ஒரு குடிமகளை நாயகியாகக்
கொண்ட புரட்சிக் காப்பியமாகச் சிலப்பதிகாரம் விளங்க, பரத்தைமை ஒழிப்பு,
மது ஒழிப்பு, சிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என்றாற் போன்ற சமுதாயச்
சீர்திருத்தங்களின் களஞ்சியமாக மணிமேகலை திகழ்கின்றது.
பக்தியின் மொழி தமிழ்
“ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி என்றும்,
கிரேக்கம் இசையின் மொழி என்றும், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றும்,
பிரெஞ்சு தூதின் மொழி என்றும், இத்தாலியம் காதலின் மொழி என்றும் கூறுவது,
ஒருபுடை ஒக்குமெனின், தமிழ் ‘இரக்கத்தின் மொழி’ எனக் கூறுவது இனிது
பொருந்தும்; பத்தியின் மொழி எனலுமாம்” (தமிழ்த் தூது, ப.34) என
மொழிகுவர் பன்மொழி அறிஞர் தனிநாயக அடிகளார்.
‘தமிழ் பக்தியின் மொழி’ என்பதை நிறுவும் வகையில் நாயன்மார்கள் பாடிய
பன்னிரு திருமுறைகளும், ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தமும்
விளங்குகின்றன. ‘காயமே இது பொய்யடா!’ என்ற கருத்தினைத் தகர்த்து,
‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்; உடம்பினை வளர்த்தேன் உயிரினை
வளர்த்தேனே’ என உடம்பின் இன்றியமையாமையைத் தெளிவு-படுத்தினார் திருமூலர்.
‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும், எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர்
குறைவிலை’ என்று பாடி நம்பிக்கை ஊட்டினார் திருஞான சம்பந்தர்.
‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என முழங்கி, ‘இன்பமே எந்நாளும்
துன்பம் இல்லை’ என அறிவுறுத்தினார் அப்பர் பெருமான். ‘அவன் அருளாலே
அவன்தாள் வணங்கி’ என்றும், ‘வினையேன் அழுதால் உனைப் பெறலாமே’ என்றும்
பாடி பக்தி நெறியின் அடிப்படையை உணர்த்தினார் மாணிக்கவாசகர். ‘உண்ணும்
சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனாகிய எம் பெருமானே,
அவன் அருளால் பெறும் இன்பங்களே’ எனக் கண்ணீர் மல்கிப் பாடி கசிந்து
உருகினார் நம்மாழ்வார். பேராசிரியர் மு.வரதராசனார் குறிப்பிடுவது போல்,
“இவ்வாறு பல வகையிலும் நாட்டில் எழுச்சியையும் புதுநம்பிக்கையையும்
விளைத்தவை ஆழ்வார் நாயன்மார்களின் பாடல்கள்” (தமிழ் இலக்கிய வரலாறு,
ப.130) எனலாம்.
இருபதாம் நூற்றாண்டுக் கவிதை உலகின் இருபெருஞ் சுடர்கள்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகின் ஈடும் எடுப்பும் அற்ற இரு
பெருஞ்சுடர்களாகத் தேசியக் கவிஞர் பாரதியாரும் புரட்சிக் கவிஞர்
பாரதிதாசனும் விளங்குகின்றனர். முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்தாலும்,
‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராது
இருத்தல்’ (பாரதியார் கவிதைகள், ப.10) என்னும் தாரக மந்திரத்தோடு தம்
வாழ்வின் இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டி, வாழ்விலும் வாக்கிலும்
முத்திரை பதித்தவர் பாரதியார். ‘ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள்,
உலகு இன்பக் கேணி’ (ப.142) என்பது அவரது கொள்கை முழக்கம். ‘சாதிகள்
இல்லையடி பாப்பா – குலத், தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ (ப.268)
எனச் சாதிக் கொடுமையைக் கடுமையாகச் சாடும் பாரதியார், ‘காக்கை, குருவி
எங்கள் சாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்கும் திசையெலாம்
நாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்’ (ப.103) என்று பாடி
ஆழ்ந்திருக்கும் தம் கவியுளத்தைக் காட்டியிருப்பது நோக்கத்தக்கது.
‘புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட, போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்!’
(பாரதிதாசன் கவிதைகள், ப.124) என முழங்கிய பாவேந்தர் பாரதிதாசன்,
‘நித்திய தரித்திரராய் உழைத்து உழைத்துத், தினைத்துணையும் பயனின்றிப்
பசித்த மக்கள், சிறிது கூழ் தேடுங்கால், பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு
காணும் இன்பம், கவின் நிலவே உனைக் காணும் இன்பம் தானோ!’ (ப.35) என்றும்,
‘மண்மீதில் உழைப்பார் எல்லாம் வறியராம், உரிமை கேட்டால் புண் மீதில்
அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம், இதைத் தன் கண் மீதில் பகலில்
எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப் பின் விண்மீனாய்க் கொப்பளித்த
விரிவானம் பாராய் தம்பி!’ (அழகின் சிரிப்பு, ப.34) என்றும் சமூக உணர்வு
ததும்பி நிற்கும் உவமைகளைக் கையாண்டு தம் புரட்சி மனப்பான்மையை
வெளிப்படுத்தியுள்ளார்; இளையோர் காதலை மட்டுமன்றி, முதியோர் காதலையும்
(குடும்ப விளக்கு: ஐந்தாம் பகுதி) உருக்கமாகப் படைத்துக் காட்டி தமது
தனித்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
புதிய மக்களாட்சி முறை
கவிதை உலகில் நாற்பதுகளின் முற்பகுதியில் தோற்றம் கொண்ட புதுக்கவிதை
கவிஞர் மு.மேத்தா குறிப்பிடுவது போல், ‘கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக்
கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறை’. கவிஞர் ஈரோடு தமிழன்பன்
‘புதுக்கவிதை என்பது திறந்த வெளிக் கவிதை’ என மொழிவார். கவிக்கோ அப்துல்
ரகுமானின் கண்ணோட்டத்தில், ‘எண்ணத்தை அதன் பிறப்பிடத்திலேயே பிடித்து
விடுவது புதுக்கவிதை’ ஆகும். ‘புதுக்கவிதை சொற்கள் கொண்டாடும் சுதந்திர
தின விழா’ என்பது வைரமுத்துவின் கருத்து. மலேசியத் தமிழறிஞர்
பேராசிரியர் இரா.தண்டாயுதம், ‘வசந்தத்தின் வரவு, வரலாற்றின் விளைச்சல்,
காலத்தின் கட்டாயம், இலக்கியத்தின் சுருக்கெழுத்து புதுக்கவிதை’ எனப்
புதுக்கவிதைக்கு வரைவிலக்கணம் வகுப்பார்.
புதுக்கவிதையில் அடிப்படைப் பண்புகள் – சிறப்புக் கூறுகள் – இரண்டு.
ஒன்று, சுருக்கம். இன்னொன்று, செறிவு. வேறு சொற்களில் கூறுவது என்றால்,
புதுக்கவிதையின் உயிர்நாடி எதையும் விளக்கிக் கூறுவது அன்று; குறிப்பாக
உணர்த்துவது. அதுவும் நறுக்குத் தறித்தாற் போன்ற நச்சென்ற நடையில். ஓர்
எடுத்துக்காட்டு: ‘இல்லாமல் இருப்பது’ என்ற தலைப்பில் நகுலன்
எழுதியுள்ள குறுங்கவிதை:
“இருப்பதற்கென்று தான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்.” (கோட்-ஸ்டான்ட் கவிதைகள், ப.7)
எதையும் வித்தியாசமான கோணத்தில் அணுகி, தனது கூரிய விமர்சனத்தை
முன்வைப்பது இன்றைய புதுக்கவிதை. அதன் தனிப்பெரும் பண்பு புதுக்குரல்;
எதிர்க்குரல்; கலகக் குரல்.
‘உழைத்தால் உயரலாம்’ என்பது நாம் இதுவரை காலங்காலமாகக் கேட்டு வந்த
கொள்கை முழக்கம். கவிஞர் நீலமணியோ தம் புதுக்கவிதை ஒன்றில், அதனைக்
கேள்விக்கு உள்ளாக்குகின்றார்:
“உழைத்தால் உயரலாம்
உழைத்தால் உயரலாம்…
அது சரி,
யார் உழைத்தால்
யார் உயரலாம்?” (தீர்க்க ரேகைகள், ப.40)
என வெடிப்புறப் பாடுகின்றார்.
சங்கச் சான்றோர் மோசிகீரனாரை நாம் இதுவரை பார்த்து வந்த பார்வை வேறு;
இலக்கிய வரலாற்றில் நெடுங்காலமாகப் படித்து வந்த, கற்பித்து வந்த
முறையும் வேறு. ஆனால், கவிஞர் ஞானத்கூத்தன் ‘தோழர் மோசிகீரனார்’ என்னும்
கவிதையில்,
“அரசாங்கக் கட்டடத்ததில்
தூக்கம் போட்ட முதல் மனிதன்” (மீண்டும் அவர்கள், ப.7)
என மோசிகீரனாரை வித்தியாசமான கோணத்தில் அடையாளம் காட்டுகின்றார். இதே
போல, கந்தர்வனின் பார்வையில் ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’யான ஆண்டாள்,
இன்றைய அரசியலாருக்கு எல்லாம் முன்னோடியாக, ‘ஆளுயர மாலை போடுவது’
என்னும் வழக்கத்தினைத் தொடங்கி வைத்தவராகக் காட்டப் பெறுகிறார் (கந்தர்வன்
கவிதைகள், ப.63).
குறியீடு, படிமம், தொன்மம் ஆகியன புதுக்கவிதையில் பயின்று வரும்
முப்பெரும் உத்திகள் ஆகும்.
“பூக்களிலே நானும் ஒரு
பூவாய்த் தான் பிறப்பெடுத்தேன்
பூவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே!
பொன் விரல்கள் தீண்டலையே - நான்
பூமாலை ஆகலயே” (கண்ணீர்ப் பூக்கள், ப.42)
என ‘அரளிப்பூ அழுகிறது’ என்னும் தலைப்பில் அமைந்த கவிஞர் மு.மேத்தாவின்
புதுக்கவிதை, குறியிட்டு உத்தியில் ஒரு முதிர்கன்னியின் அவலத்தை
உருக்கமாகச் சித்திரிக்கின்றது.
படிமம் என்பது சொற்சித்திரம்; ‘சொல் கேட்டார்க்குப் பொருள் கண்கூடு ஆவது’.
நெஞ்சை அள்ளும் ஓர் எடுத்துக்காட்டு:
“இருட்டைப் பிழிந்து
எடுத்து வைத்தது போல
படுத்திருந்தது ஆட்டுக்குட்டி
பாதை ஓரம்
காலை நேரம்.” (ஆர்.எஸ்.மூர்த்தி, வலைகள், ப.46)
‘இறப்பு எங்கள் பிறப்புரிமை’ என்னும் தலைப்பில் கவிக்கோ அப்துல் ரகுமான்
படைத்துள்ள கவிதையில் தொன்ம உத்தி சிறப்பாகக் கையாளப் பெற்றுள்ளது. அக்
கவிதை இதோ:
“ஆலகாலத்திற்கே
பாற்கடல் கடைந்தோம்
அமுதம் வந்தது
அவசரமாய்க் குடித்து
விக்கிச் செத்தோம்” (பால் வீதி, ப.57)
ஈற்றடியில் ஓர் எதிர்பாராத அதிர்ச்சியை – மின் தாக்குதலை –
ஏற்படுத்துவது இன்றைய புதுக்கவிதைகளில் சிறப்பாகக் காணப் பெறும் ஒரு
போக்கு.
“வைகையாற்றில் கள்ளழகர்
காவிரியாற்றில் ரங்கநாதர்
திருவையாற்றில் பஞ்சநதீஸ்வரர்
நட்டாற்றில் ஜனங்கள்” (மனத்தடி நீர், ப.63)
என்னும் கவிஞர் வெற்றிச்செல்வனின் ‘நாங்கள்…?’ என்ற குறுங்கவிதை
இவ்வகையில் கருத்தில் கொள்ளத்தக்கது.
பேராசிரியர் பாலா குறிப்பிடுவது போல், “தமிழ்க் கவிதை வரலாற்றில் சங்கக்
கவிதைகளுக்குப் பிறகு உணர்வுகளை முன்னிறுத்தி சமூகத்தை வெளிக்காட்டும்
முயற்சி அழுத்தமாக புதுக்கவிதைகளில் தான் இடம் பெறுகிறது எனலாம்” (புதுக்கவிதை
ஒரு புதுப்பார்வை, ப.111).
தமிழ்க் கவிதையின் கம்பீரம்
“ஹைகூ ஒவ்வொன்றும் ஒரு தனிவார்ப்பு, பிசிறில்லாத சிறுசிற்பம், அலாதியான
அழகு, கம்பீரம்” (ஜப்பானியக் கவிதை, ப.112) என்பார் கவிஞர் தமிழ்நாடன்.
தமிழ்க் கவிதை உலகில் புதுக்கவிதை அமைத்துத் தந்த தோரண வாயில் வழியாக
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் – 1984-இல் தொடங்கிய ஹைகூவின்
பயணம், இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்-கின்றது. நெல்லை சு.முத்துவின்
பார்வையில்,
“மூன்றடிச் சொற்செட்டு
நேரடி அனுபவ வெளிப்பாடு
மூன்றாவது அடி மின்தாக்கு” (புத்தாயிரம் தமிழ் ஹைகூ, ப.22)
என்னும் மூன்று பண்புகளும் பொருந்தியதே சிறந்த ஹைகூ கவிதை.
தமிழின் முதல் ஹைகூ தொகுப்பான ‘புள்ளிப் பூக்க’ளில் இடம் பெற்றுள்ள ஓர்
அழகிய ஹைகூ:
“அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?” (புள்ளிப் பூக்கள், ப.27)
விமர்சன நோக்கில் நேருக்கு நேராக நின்று எதையும் அஞ்சாமல் கேட்கும்
நெஞ்சுரம் இன்றைய ஹைகூ கவிஞர்களுக்கு உண்டு.
“கொடி கொடுத்தீர்
குண்டூசி தந்தீர்
சட்டை?” (தீவின் தாகம், ப.70)
என்னும் புதுவை தமிழ் நெஞ்சனின் ஹைகூ இவ் வகையில் குறிப்பிடத்தக்கது.
வெ.இறையன்பு குறிப்பிடுவது போல், “ஹைகூ என்பது புனைவு இலக்கியம் அல்ல –
அது உணர்வு இலக்கியம்” (முகத்தில் தெளித்த சாரல், ப.42). இதனை
மெய்ப்பிக்கும் வகையில் முதிர்கன்னியரின் அவலத்தை உருக்கமான மொழியில்
பதிவு செய்யும் அறிவுமதியின் ஹைகூ:
“மணவறை
மெதுவாகப் பெருக்குகிறாள்
முதிர்கன்னி” (கடைசி மழைத் துளி, ப.78)
நிலையாமைத் தத்துவத்தை நெஞ்சில் தைக்கும் படியாக அழுத்தமாகச் சொல்லும்
செ.செந்தில்குமாரின் ஹைகூ:
“திரும்பும் போதுதான் உணர்கிறேன்
மயானத்தின் பாதை
என் வீட்டில் முடிவதை” (துணையிழந்த பார வண்டி, ப.16)
உடன்பாட்டுச் சிந்தனையை உள்ளத்தை ஈர்க்கும் விதத்தில் வெளிப்-படுத்தும்
மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின் ஹைகூ:
“பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?” (சூரியப் பிறைகள், ப.30)
நியாய விலைக்கடைகளில் நடக்கும அநியாயத்தை நகைச்சுவை உணர்வுடன் நயமாகக்
குத்திக்காட்டும் ந.முத்துவின் ஹைகூ:
“ரேசன் கடைக்காரனுக்கு
குழந்தை பிறந்தது
எடை குறைவாய்” (எடை குறைவாய், ப.6)
ஓ, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது இது தானோ!
நிறைவாக, ஈழத்து அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுவது போல்,
“தமிழ்க் கவிதை என்ற நதி வற்றாது ஓடுகிறது. தமிழை வளப்படுத்துகிறது.
தமிழால் வளம் பெறுகிறது” (தமிழின் கவிதையியல், ப.203).
'தமிழாகரர்'
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|