‘உகரம்’ புலவர் உசேன்: அங்கதக் கவிதையின் ‘சிகரம்!’

பேராசிரியர் இரா.மோகன்

‘ஆலய நகரம்’, ‘உறங்கா நகரம்’, ‘சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நகரம்’ என்றெல்லாம் சிறப்பிக்கப் பெறும் மதுரைக்குப் பீடும் பெருமையும் நல்கி வரும் தியாகராசர் கல்லூரியைப் போல, தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்குச் சீரும் சிறப்பும் சேர்த்து வருவது புதுக்கல்லூரி. அக் கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றித் தடம் பதித்த பேராசிரியர் பாலூர் கண்ணப்பர், பேராசிரியர் பாண்டுரங்கன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் இன்குலாப் ஆகியோரின் வரிசையில் தொடர்ந்து வருபவர் புலவர் உசேன் ஆவார். ‘உகரம்’ என்னும் இலக்கிய மாத இதழின் ஆசிரியர் என்பது அவருக்கு வாய்த்த கூடுதல் சிறப்பு. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துனைவேந்தர் தாமரைத் திரு முனைவர் ஔவை நடராசன் குறிப்பிடுவது போல, “காலத்திற்கேற்ற புதுக்கருத்துக்களைப் படிப்போர் நெஞ்சத்தில், சர வெடிகளாக ஏற்றி வைத்திருக்கிறார் புலவர் உசேன்” (அணிந்துரை, புலவர் உசேன் புதுக்கவிதைகள், ப.9). டிசம்பர் 2017-இல் ‘புலவர் உசேன் புதுக்கவிதைகள்’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள தொகுப்பில் அவரது 134 புதுக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ‘உறைப்பும் விறைப்பும் மிக்க உரைநடைத் தெறிப்புகள், உரைவீச்சுகள்’ (ப.15) என இக் கவிதைகளை முனைவர் மறைமலை இலக்குவனார் சுட்டியிருப்பது மனங்கொளத்தக்கது.

கவிஞரின் ஒப்புதல் வாக்குமூலம்


“சமூகத்தில் காணப்படும் வன்கொடுமைகள், அவலங்கள், அழுக்குகள், அநியாயங்கள், முரண்பாடுகள் ஆகியவற்றைக் கண்டு கண் கலங்குகிறேன்… அந்தந்த நேரங்களில் நடக்கும் நிகழ்வுகளை மனப்பதிவு செய்கின்றேன்… என் கவிதைகளில் – புதுக்கவிதைகளில் – தேவையான அளவு கலை உணர்வையும், கவிதை உணர்வையும் சேர்த்திருக்கின்றேன்… நான் என் கவிதை மகளுக்கு ‘அங்கத’ ஆபரணம் சூட்டி, அழகூட்டி இருக்கிறேன்” (‘என்னுரை’, புலவர் உசேன் புதுக்கவிதைகள், பக்.3-4) எனக் கவிஞரே தந்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம், அவரது கவிதைகளின் நோக்கையும் போக்கையும் கோடிட்டுக் காட்ட-வல்லதாகும். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகிற்குத் திறமான அங்கத இலக்கியங்களைத் தந்தவர்களாக அடையாளம் காணப் பெற்றிருப்-பவர்கள் இருவர். ஒருவர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை; அவரது ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்’ நல்லதோர் அங்கத இலக்கியப் படைப்பு ஆகும். இன்னொருவர், கவிஞர் மீரா; அவரது ‘ஊசிகள்’, 1974-ஆம் ஆண்டில் ‘தமிழில் வெளிவரும் அங்கதக் கவிதைகளின் தொகுப்பு’ (A Collection of Satirical Verses in Tamil) என்னும் சிறப்புக் குறிப்புடன் வெளிவந்ததாகும்.

மூத்த திறனாய்வாளர் வல்லிக்கண்ணனின் மதிப்பீடு


“புலவர் உசேன் அவர்களிடம் சொல்வதற்குக் கருத்துக்கள் இருக்கின்றன. வாழ்க்கை பற்றி, மனிதர்கள் பற்றி, அவர்களது இயல்புகள், செயல்கள் பற்றி, அவர் தமக்கெனத் தனிநோக்கு உடையவராக இருக்கிறார். அவற்றை எழுத்தில் பதிவு செய்யும் போது அது அங்கதச் சுவையுடன் கலந்து பதிவாகிறது. ஆகவே அவருடைய எழுத்தில் ஒரு தனித்தன்மை காணப்படுகிறது’ (ப.8) என்பது புலவர் உசேனின் எழுத்துலகு பற்றிய மூத்த திறநாய்வாளர் வல்லிக்கண்ணனின் மதிப்பீடு. இக் கருத்தினை நிலைநிறுத்தும் வகையில் அமைந்த புலவர் உசேனின் முத்திரைக் கவிதைகள் சிலவற்றை இங்கே காணலாம்.

‘நவீன கோவலர்கள்!’ என்னும் தலைப்பில் புலவர் உசேன் படைத்துள்ள புதுக்கவிதை, அவரது படைப்புத் திறத்திற்குக் கட்டியம் கூறி நிற்கின்றது. அக் கவிதை வருமாறு:

“தேர்தல் களத்தில் / போஸ்டர் யுத்தம்!
வாக்காளப் பெருமக்களின்
வாக்குக் கற்பைச் / சூறையாடி விட்டு…
கண்ணகி ஆட்சி அமைத்தனர் / நவீன கோவலர்கள்!”
(ப.123)

வகைவகையான சுவரொட்டிகளால் போர் நடத்துவது என்பது இன்றைய தேர்தல் களத்தின் தனிப்பண்பாம். இதில் சூறையாடப் படுவது வாக்காளப் பெருமக்களின் ‘வாக்குக் கற்பாம்’, அமைக்கப் பெறுவதோ ‘கண்ணகி ஆட்சி’யாம்! ஆட்சி அமைப்பவர்கள் ‘நவீன கோவலர்களாம்!’

‘உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்’ என்று வள்ளலார் பெருமான் என்ன தான் விரும்பி, வேண்டி, வலியுறுத்திப் பாடினாலும், இன்று நடைமுறை உகில் – அதுவும் அரசியல் துறையில் – ‘உள் ஒன்று வைத்து புறம் வேறு’ பேசுவோரே மிகுந்த செல்வாக்கோடு வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ‘லெனினுக்குக் காது குத்துகிறார்கள்’ என்ற தலைப்பில் தொகுப்பில் இரண்டாவதாக இடம்பெற்றிருக்கும் கவிதை இவ் வகையில் குறிப்பிடத்தக்கது. கவிஞரின் சொற்களில் அங்கதச் சுவை ததும்பி நிற்கும் அக் கவிதையை இங்கே காணலாம்:

“‘பெரியார் வாழ்க! / நாத்திகம் வாழ்க!
மார்க்ஸ் வாழ்க! / மார்க்ஸியம் வளர்க!
என்று பேசி முடித்த / நாத்திகவாதி
மேடையிலிருந்து இறங்கினார்
கையைத் தட்டினார் / ஆட்டோ வந்தது.
‘எங்கே சார் போகணும்?’
‘நேராக வடபழனி / முருகன் கோயிலுக்கு.’
‘என்ன ஐயா விசேஷம்?’
‘என் மகன் லெனினுக்குக் / காது குத்துகிறோம்!’”
(ப.28)

‘பேசுவது மானம் இடைபேணுவது காமம்’ என்ற படி, வாழ்த்திப் பேசுவதெல்லாம் ‘பகுத்தறிவுப் பகலவன்’ பெரியாரைப் பற்றியும் ‘பொதுவுடைமைத் தோழர்’ மார்க்ஸ் பற்றியும்; பெயர் எடுத்திருப்பதோ ‘நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்’ என! ஆனால், பேசி முடித்து மேடையில் இருந்து இறங்கிய மறுகணமே ஆட்டோவில் நேராகப் புறப்பட்டுப் போவது வடபழனி முருகன் கோவிலுக்காம்! அதுவும் என்ன காரியமாகத் தெரியுமா? தோழர் லெனின் பெயரைத் தாங்கிய தன் மகனுக்குக் காது குத்துவதற்காம்! இங்கே சிறுவன் லெனினுக்கு மட்டுமா காது குத்தப்படுகின்றது? ‘பெரியாரின் தொண்டர்’, ‘மாக்ஸியவாதி’, ‘நாத்திகவாதி’ என்ற பெயர்களில் சமுதாயத்தில் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருப்போரை அப்படியே நம்பி ஏமாறும் அப்பாவி மக்களின் காதுகளும் அல்லவா குத்தப்படுகின்றன!.

இக் கவிதையைப் படித்து முடித்ததும், ‘புலவர் உசேன் புதுக்கவிதைகளில் நான் ஒரு புதுமைப்பித்தனைப் பார்க்கிறேன்!’ (ப.25) என்னும் கவிஞர் எஸ்.குருவின் கூற்று உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை என்ற முடிவுக்கே நாமும் வருகின்றோம்.

அணிவகுத்து வரும் அரசியல் அங்கதக் கவிதைகள்


புலவர் உசேனின் எள்ளலுக்கும் ஏளனத்துக்கும் கிண்டலுக்கும் குத்தலுக்கும் கேலிக்கும் கேள்விக்கும் நக்கலுக்கும் நையாண்டிக்கும் பகடிக்கும் பெரிதும் ஆளாகி இருப்பவர்கள் அரசியல்வாதிகளே. இன்றைய அரசியல் உலகில் மலிந்து காணப்படும் சீர்கேடுகளையும், அரசியல்வாதிகளின் மனங்களில் மண்டிக் கிடக்கும் கயமைகளையும் அம்பலப்படுத்துவதற்காகவே, தோலுரித்துக் காட்டுவதற்காகவே ஒரு கவிஞராக வடிவெடுத்தது போல, புலவர் உசேன் தம் கையில் எழுதுகோலை ஏந்தியுள்ளார்; நெஞ்சில் உரத்தோடும் நேர்மைத் திறத்தோடும் இன்றைய அரசியல் உலகின் நடப்பையும், அரசியல்-வாதிகளின் இரட்டை வேட நடிப்பையும் நயவஞ்சகத்தையும் நம்பிக்கைத் துரோகத்தையும் கடுமையாகச் சாடியுள்ளார். “அங்கதம் என்பது கத்தியைப் போல வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என இருக்க வேண்டும். மாறாக, ரம்பத்தைப் போல நீள இழுத்துக் கொண்டே இருக்கக் கூடாது” (Satire should be like a sword, but not a saw; it should cut and not mangle) என்று ஆங்கில அகராதி குறிப்பிடுவது போல, புலவர் உசேனின் அரசியல் அங்கதக் கவிதைகள் விளங்குகின்றன. இவ் வகையில் அங்கதச் சுவை மிளிரும் புலவர் உசேனின் புதுக்கவிதைகள் சிலவற்றை இங்கே காணலாம்.

“‘சுரங்கப் பாதையிலே உட்கார்ந்து
பிச்சை எடுத்திட்டு இருப்பே…
இப்போ… / அங்கே உன்னைக்
காணோமே?’”


என்று பிச்சைக்காரரைக் கேட்கிறார் ஒருவர். “இப்போ பிச்சை எடுப்பது இல்லே சார்!” என அவருக்கு மறுமொழி தருகிறார் பிச்சைக்காரர். “ஏன்?” என்று மீண்டும் அவர் கேட்ட போது, “பிச்சை எடுத்ததில் பாதியைக் கேட்கிறார்கள்” என்கிறார் பிச்சைக்காரர். “யார்?” என்று விடாமல் கேட்ட போது, பிச்சைக்காரர் சொல்லும் விடைதான் அங்கதச் சுவையின் உச்சம்! பிச்சை எடுத்ததில் பாதியைக் கேட்பவர்கள் யார் தெரியுமா?

“இந்த வட்டார / அரசியல்வாதிகளாம்!” (ப.29)

‘மகாபிச்சை!’ என இக் கவிதைக்குக் கவிஞர் சூட்டி இருக்கும் தலைப்பு அருமை!.

காலைப் பொழுது. அரசியல்வாதியின் இல்லம். அல்லோல கல்லோலப் படுகிறது. “என் இந்த பரபரப்பு?” எனக் கேட்கிறாள் மனைவி. “பேப்பர் போடுற பையனை இன்னும் காணோமே” எனத் தவிப்புடன் கூறுகிறார் அரசியல்வாதி. “அதற்கென்ன இப்ப? மெல்ல வரட்டுமே” என்று அமைதியாகப் பேசிய மனைவியிடம் இப்படிக் கடிந்து கொள்கிறார் அரசியல்வாதி:

“போடி, போக்கத்தவளே!
யாராவது… / புதுக்கட்சி தொடங்கியிருந்தா
உடனே சேரணும் இல்லியா?” (ப.20)

அரசியல்வாதியைப் பொறுத்த வரையில் பரபரப்புக்கான காரணம் நியாயமானது தான்! ‘பந்திக்கு முந்து’ என்றது போல், புதுக்கட்சியில் உடனே சேரவில்லை என்றால், வேறு யாராவது முந்தி விடுவார்கள் அல்லவா?
‘குடித்தால் உண்மை வெளிவரும்’ என்று யாரோ ஒரு குடிகாரன் சொன்னது உண்மை ஆயிற்றாம். எப்படி என்கிறீர்களா? இதோ உங்கள் கேள்விக்கான கவிஞரின் பதில்:

“ஒரு குடிகார / அரசியல் பேச்சாளர்
மேடையில் கூவினார்;

‘லஞ்சத்திற்குக் / கை கொடுப்போம்!’
ஊழலுக்குக் / குரல் கொடுப்போம்!” (ப.35)

‘உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்!’ என்ற கொள்கை முழக்கம் இன்று எப்படி தலைகீழாக மாறிவிட்டது பார்த்தீர்களா?

மக்கள் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து அனுப்புவது தொகுதி நிலவரம் பற்றிப் பேசத் தான். ஆனால், உண்மையில் நிகழ்வதோ வேறு. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாடிக் கொள்வதாகப் புலவர் உசேன் படைத்துள்ள அங்கதக் கவிதை:

“‘தமன்னா…
அந்தப் படத்திலே / என்னமா
நடிச்சிருக்காங்க!’

‘அது / தமன்னாஇல்லேப்பா!’
‘அப்புறம் யாரு?’
ஹன்ஸிகா!’”

அப்போது சபாநாயகர் குறிக்கிட்டு, “என்ன சத்தம்?” என்று கேட்க,

“ MLA இருவரும்
அமைதி காத்தனர்” (ப.134)

என முடிகிறது கவிதை.

‘பசித்திரு, தனித்திரு. விழித்திரு!’ என்றார் வள்ளலார் பெருமான். ஆனால், இன்றோ அரசியல்வாதிகள் பதவிக்காக அலைமோதுகிறார்கள்; ஆலாய்ப் பறக்கிறார்கள்; பதவி கிடைக்கவில்லை என்றால், அறைகூவல் விடுக்கிறார்கள்; கட்சியை விட்டு விலகுவதாக அறிக்கையும் விடுகிறார்கள். இதனைக் ‘கட்சி உடைந்தது!’ என்னும் கவிதையில் தமக்கே உரிய பாணியில் அங்கதச் சுவையும் நகைச்சுவையும் கலந்த நடையில் அழகுற வெளிப்படுத்தியுள்ளார் புலவர் உசேன்.

“கட்சித் தலைவரோடு தகராறு:
அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

‘நான் ஒரு மூத்த தலைவன்,
என்ன செய்கிறேன் பார்!’
- நண்பரிடம்.

‘கட்சியில் நான் ஒரு தூண்!’
- மேடையில்

‘கட்சியில் பிளவு ஏற்படும்!’
- நிருபரிடம்.

‘நான் விலகினால்…
கட்சி / சின்ன பின்னம் ஆகி விடும்’
- பத்திரிகையில்

கடைசியில் விலகியே விட்டார்!”

சரி, அவர் விலகியதால் என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா? இதோ, கவிஞரின் முத்தாய்ப்பான மறுமொழி:

“அவருக்கு ஆதரவாக…
அவருடைய குடும்பம் விலகியது!” (ப.38)

அவ்வளவு தான்! பட்டுக்கோட்டையாரின் மொழியிலே கூறுவது என்றால், ‘(வேறு) ஒன்றுமே நடக்கவில்லை தோழா!’

மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் கூடிய குத்தாற்றல்

மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் கூடிய குத்தாற்றல் (Punch) ஒரு புதுக்கவிஞர் என்ற முறையில் உசேனுக்குக் கைவந்த கலையாக விளங்கு-கின்றது. ‘சாகும் வரை’ என்ற கவிதை இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ஆகும்.

“பேராடுவோம், பேராடுவோம்!
மத்திய அரசின் / சர்வாதிகாரப் போக்கை எதிர்த்துப்
போராடுவோம், போராடுவோம்!
போராடுவோம், போராடுவோம்!
இறுதிவரை பேராடுவோம்!”

என்ற உரிமை முழக்கம் போராட்டக் குழுவினரால் உரத்த குரலில் உணர்ச்சி பொங்க எழுப்பப்படுகின்றது. அப்போது ஒரு வெள்ளந்தியான தொண்டர்,

“தலைவா! / இறுதி வரை போராடுவோம் என்றால்…
சாகும் வரையா?”

என்று வினவ, போராட்டக் குழுவின் தலைவர் மறுகணமே,

“இல்லை, இல்லை!
கையில் / காசு இருக்கும் வரை!” (ப.30)

என யதார்த்தமாகப் பதில் கூறுகிறார்!

முதுமுனைவர் வெ.இறையன்பு சுட்டிக்காட்டுவது போல, “புலவர் உசேன் (இத்தகைய) நகைச்சுவை ததும்பும் காரசாரக் கவிதைகள் பலவற்றை எழுதி-யிருக்கிறார்” (ப.5).

மெல்லிய நகைச்சுவை உணர்வு மூன்றாம் பிறையாய் முகம் காட்டி நிற்கும் பிறிதொரு கவிதை ‘தேச பக்தர்!’

“அவரால்…
இந்தத் தேசத்திற்கு / என்ன செய்ய முடியுமோ
அதைத் தொடர்ந்து செய்து வந்தார்!”

எனத் தொடங்கும் அக் கவிதையின் முடிப்பில் இயல்பான நகைச்சுவை பளிச்சிட்டு நிற்கின்றது.

“ஆமாம்;
தான் பெற்ற பிள்ளைகள் / பதினாறு பேருக்கும்…
16 தேசத் தலைவர்களின் / பெயர்களைச் சூட்டினார்!” (ப.110)

‘ஓஹோ. பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்வது என்பது இதுதானோ?’ அந்த தேச பக்தரின் வழியே ‘தனிவழி’தான்!

அங்கதத்திற்கான வரைவிலக்கணம்


“ஒருவடைய குறையையோ ஒரு சமூகத்தாரின் குறையையோ, அன்னார் நெஞ்சில் உறுத்தும் வண்ணம் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் கூறுதல் அங்கதமாகும். அங்ஙனம் கூறுங்கால், நகைச்சுவை தோன்றக் கூறுதல் இன்புறத் தக்கதொன்றாகும்” (உரைநடைக் கொடை: இரண்டாம் பகுதி, ப.75) என மொழிகுவர் பண்டிதமணி மு. கதிரேசனார். இவ்வரைவிலக்கணத்திற்கு ஏற்ப தனிமனிதரின் குறைபாடுகளையும் சமூகத்தின் அவலங்களையும் தம் கவிதைகளில் நகைச்சுவை தோன்ற அங்கதத்திற்கு உள்ளாக்கியுள்ளார் புலவர் உசேன்.

‘விலை போட்டு வாங்கவா முடியும் கல்வி?’ எனக் கல்வியின் மேன்மையை உயர்த்திப் பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், இன்றைய நடப்போ ‘விலை போட்டு வாங்க வா, முடியும் கல்வி’ என்று விலை தந்து கல்வியை வாங்க வருமாறு அறைகூவி அழைக்கிறது. கல்வி உலகில் நிலவும் இச்சீர்கேட்டினை ‘எது வேண்டும் சொல் மனமே!’ என்ற கவிதையில் அம்பலப்படுத்தியுள்ளார் புலவர் உசேன்.

“அதோ…
அந்த வீட்டின் வாசலில் / ஏன் இவ்வளவு கூட்டம்?
அருகில் சென்று பார்த்த போது…
வாசல் முன் ஓர் அட்டை / அதில் உள்ள வாசகம்:
‘அனைத்துப் பல்கலைக்கழகப் / பட்டச் சான்றிதழ்களும்
இங்கே கிடைக்கும்… / குறைந்த விலையில்!’” (ப.103)

எதையும் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தக் கடுமையாக உழைத்துப் பெற வேண்டும் என்ற மனப்பான்மை இன்று மலையேறி விட்டது; எல்லாவற்றையும் எளிதாக, உடனடியாக, விரைவாக, கொஞ்சமும் மெனக்- கெடாமல் – இருந்த இடத்தில் இருந்தபடியே – குறுக்கு வழியில் சென்றாவது – பெற்று விட வேண்டும் என்ற எண்ணமே இன்று பெரும்பாலான மக்களிடம் மேலோங்கிக் காணப்படுகின்றது. இதனைப் ‘குறைந்த கட்டணத்தில்’ என்ற தலைப்பில் எழுதிய கவிதையில் நகைச்சுவை உணர்வோடு பதிவு செய்துள்ளார் புலவர் உசேன்.

“மாவாட்டும் கல் போய்க் / கிரைண்டர் வந்தது
கிரைண்டர் போய் / மிக்ஸி வந்தது
மிக்ஸி போய்க் / கடை மாவு வந்தது!
கடைமாவுக் கடை ஓரம்… / இப்படி ஒரு விளம்பரம்:

‘இல்லத்து அரசிகளே’ / இனிய குடும்பத்துத் தலைவர்களே!
மூன்று வேளை சாப்பாட்டையும் / நாங்களே தயாரித்து…
உங்கள் வீட்டிற்கே / கொண்டுவந்து தருகிறோம்;
‘ஊட்டிவிட வேண்டும்’ / என்றாலும் அதையும் செய்கிறோம்
குறைந்த கட்டணத்தில்!”

‘கையிலே காசு வாயிலே தோசை’ என்ற கட்டத்தையும் தாண்டி, உரிய கட்டணம் தந்தால் ஊட்டி விடவும் தயாராக உள்ளது இன்றைய அவசர உலகம்! கலிகாலம்!

‘லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!’ என என்னதான் கரடியாய்க் கத்தினாலும், அது யார் காதிலும் விழப் போவதில்லை; யாரையும் அது பாதிக்கப் போவதும் இல்லை. லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் ஒரு காலத்தில் குற்றமாகக் கருதப்பட்டு, பிறகு வழக்கமாக மாறி, அடுத்து வாடிக்கையாக ஆகி, இப்போது இயல்பு வாழ்க்கையாகவே ‘பரிணாம வளர்ச்சி’யைப் பெற்று விட்டது! ‘அவரா? கை நீட்டி வாங்கினார் என்றால், காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொடுத்து விடுவார்!’ என்பதுதான் இன்றைக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு காரியத்தை முடித்துக் கொடுப்பவர்களுக்கு வழங்கப் பெறும் நற்சான்றிதழ்! இன்றைய சமுதாயத்தில் நிலவி வரும் இப் போக்கினையும் புலவர் உசேன் தம் கவிதை ஒன்றில் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

“பணம் கொடுத்துக் கொண்டே… / தந்தை சொன்னார்:
‘என் மகனுக்குச் சீட் வாங்கப் / பணம் எதுவும் கொடுக்கவில்லை!’

பணம் வாங்கிக் கொண்டே… / கல்லூரி நிர்வாகி சொன்னார்:
‘நாங்கள்… / நன்கொடை எதுவும் வாங்குவது இல்லை!’”

இங்கே, தந்தை, கல்லூரி நிர்வாக இருவருள் மணிவாசகர் கேட்டது போல் ‘யார்கொலோ சதுரர்?’ என்று கேட்கிறீர்களா? எதற்கு வம்பு? ‘பாவம்… லஞ்ச ஒழிப்பு போலீசார்!’ (ப.47) எனக் கவிதையை முடித்து வைக்கிறார் புலவர் உசேன்.

யாராவது, யாரையாவது பழிவாங்க வேண்டும் என்று சதிசெய்து கொண்டே இருப்பார்கள்; எதற்காவது, எங்காவது ஒன்றுசேர்ந்து பெண்கள் அழுத வண்ணமே காணப்படுவார்கள்; ‘போட்டுத் தள்ளு!’, ‘தூக்கிடு!’ என்ற வன்சொற்கள் பரட்டைத் தலையுடன் கூடிய வாட்ட சாட்டமான தடியர்களிடம் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கும்; வேலியே பயிரை மேய்வது போல காவல்துறை போன்ற பொறுப்புள்ள பணிகளிலே இருப்பவர்களே குற்றங்கள் நிகழ்வதற்கு உடந்தையாக உதவிக்கொண்டு நிற்பார்கள். இவை தாம் இன்றைய பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்களில் வாடிக்கையாக நடைபெற்று வரும் செயற்பாடுகள். புலவர் உசேன் இன்றைய சின்னத் திரைகளில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர்களை நையாண்டி செய்யும் விதத்தில் ‘ஏன் அழறே?’ என்ற கவிதையைப் படைத்துள்ளார். அதில் வரும் பொன்னம்மாளுக்கு எப்போதும், யாரோடும், எதனோடும் போட்டி போடுவது பழக்கம்! ஒரு நாள்… பொன்னம்மாள் அழுவதைப் பார்த்த ஒருத்தி, “ஏன் பொன்னம்மா அழறே?” என்று கேட்க, அவளுக்குப் பொன்னம்மாள் சொல்லும் பதில் தான் கவிதையின் உயிர்நாடி!

“சின்னத் திரைச் / சீரியல்களில் வரும்
அம்மாக்கள் மட்டுந்தான் / அழுவார்களா?
நானும்தான் அழுவேன்!” (ப.41)

முதாயத்தின் பழுது பார்க்கும் புதுக்கவிதைகள்

ஒட்டுமொத்தமாக, ஒற்றை வரியில் புலவர் உசேனின் எழுத்துலகை மதிப்பிடுவது என்றால், ‘புலவர் உசேன் பொழுதுபோக்குவதற்காக இந்தப் புதுக்கவிதைகளை எழுதவில்லை; சமுதாயத்தின் பழுதுபோக்குவதற்காக எழுதி-யிருக்கிறார்’ (ப.24) என்னும் கவிஞர் முத்துலிங்கத்தின் கருத்தினையே நாமும் வழிமொழியலாம்.
 

'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்