பாரதியின் பார்வையில்! (நூல் மதிப்புரை)

 

கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : கவிஞர் பேராசிரியர் மு.க.பரமசிவம்

நூலாசிரியர் நல்லாசிரியர் பேராசிரியர் கவிஞர் மு.சு.பரமசிவம் அவர்கள் மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் மாதந்திரக் கவியரங்கில் கலந்து கொண்டு கவிதை பாடி தனி முத்திரை பதித்து வரும் கவிஞர். சிறந்த பண்பாளர், படிப்பாளர், கர்வம் எதுவுமில்லாத எளிமையாளர், இனிமையாளர், ‘பாரதியின் பார்வையில்’ என்ற இந்த நூலில் உள்ள கவிதைகள் அனைத்தும் ‘மகாகவி பாரதியின் பார்வையில் பார்த்து வடித்த கவிதைகள்’ என்றால் மிகையன்று.

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடியவன் பாரதி. பன்மொழி அறிஞன் பாரதி. ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாடியவன் தமிழையும் தமிழ்நாட்டையும் நேசித்தவன் பாரதி. பாரதியின் வாழ்வில் தடம்பதித்து தமிழையும் தமிழகத்தையும் பாரதியையும் நேசித்து வடித்த கவிதைகள் கற்கண்டு!

ஆழ்கடலிலே கரையினிலே
அன்றிருந்த மதுரையிலே
வாழ்ந்திருந்த தமிழ்மொழியை
வளர்க்கவந்த தமிழ்ச்சங்கம்
தாழ்வின்றித் தமிழ் காக்கத்
தமிழ்மக்கள் அமைத்த சங்கம்
ஏழ்மதுரைத் தலைச்சங்கம்
என்றாரே பாரதியே!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை உடைய மதுரை நம்ம மதுரை. வேறு எந்த மொழிகளுக்கும் இல்லாத பெருமை தமிழுக்கு மட்டுமே உண்டு! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து தமிழ்மொழி வளர்த்த பெருமை தமிழுக்கு மட்டுமே உண்டு. தமிழ்மொழியின் அருமை பெருமைகளை மிக அழகாக தெளிந்த நீரோடை போன்ற அழகிய நடையில் கவிதைகள் வடித்துள்ளார், பாராட்டுக்கள்!

தொலைக்காட்சி தொடர்களிலே
திரைப்படத்தின் வசனத்திலே
தொலைந்துபோன ஓசை தான்
தேமதுரத் தமிழோசை
வலைவீசும் பிறமொழியின்
வருகையான சொல்எழுத்தால்
நிலையிழந்து தவிக்கின்ற
நிலை கண்டார் பாரதியே!

தொலைக்காட்சியில் தினமும் தங்குதடையின்றி தமிழ்க்கொலை நடந்து வருகின்றது. தமிங்கிலம் பரப்பி வருகின்றது. இளைய-தலைமுறையினரும் தமிங்கிலமே பேசி வருகின்றனர். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் தமிழன் நிலை என்னாகும் சிந்திப்பீர் என்று விழிப்புணர்வு விதைக்கும் விதமாக வடித்திட்ட கவிதைகள் நன்று.

செம்மொழியாம் தமிழ்மொழிக்கு
செந்தமிழாம் தேன்மொழிக்கு
எம்மொழியும் ஈடில்லை
என்றுரைப்பார் பாரதியே
இம்மொழியின் முகவரியாய்
எவ்வெழுத்து வாராதே
நம்மொழியின் முகவரிநம்
நல்லெழுத்து என்பாரே!

உலகின் முதல்மொழி தமிழ்மொழி உலகின் மூத்தமொழி தாய்மொழிகளுக்கு எல்லம் தாய்மொழி தமிழ்மொழி. தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழியே இல்லை. எல்லாமொழிகளிலும் தமிழ்ச்சொற்கள் உண்டு. பரந்து விரிந்த பண்பாட்டு மொழியின் சிறப்பை நூல் முழுவதும் மரபுக்கவிதையாய் வடித்து தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டி உள்ளார். பாராட்டுக்கள்.

தீதென்றால் ஒருபோழ்தும்
தலைவணங்காக் கவியரசன்
பாதகத்தை மாற்றிவிடப்
படியமைத்த தமிழ்க் கவிஞன்
அதனாலே சுயநலத்தை
அடித்தொழித்த பெருங்கவிஞன்
ஓதிவந்த தமிழ்த்தாயின்
உண்மையான இளைய மகன்!


தமிழின் பெருமை பாடியதோடு நின்று விடாமல் தமிழை உயர்த்திப் பிடித்த பாரதியின் உயர்குணத்தையும் பாராட்டி வடித்த கவிதை நன்றி. பாரதிக்கு பாமாலை சூட்டி பெருமைப்படுத்தியது சிறப்பு.

புகைபிடிக்கும் இளைஞனே நில் !
படித்து வந்த தமிழனே சொல்
புகையும் பிறஎழுத்தும்
பகைதானே நமக்கு
பஞ்சம் பிழைக்க வந்த
பிறமொழி எழுத்துக்கள்
கொஞ்சி இடம்பிடித்து
கூடு கட்டுகிறது.


ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக சொற்களஞ்கியமாக சொற்களின் சுரங்கமாக எண்ணிலடங்காத சொற்களைக் கொண்ட உயர்தனிச் செம்மொழிக்கு எதற்கடா பிற எழுத்துக்கள். எழுத்துக்கள் தானே போகட்டும் என்று அனுமதித்தால் பிறழொழிச் சொற்களும் தமிழில் புகுந்து தமிழை அழித்து வரும் கொடுமைக்கு முடிவு கட்டும் விதமாக கண்டனக் குரலை நன்கு பதிவு செய்துள்ளார்.

தமிழனாய் பிறந்து விட்டு
தமிழ்மொழியை வளர்க்காமல்
அமிலத்தை வீசுகிறாய்
அருந்தமிழை அழிக்கின்றாய்
தமதுநிலை புரியாமல்
தடுமாறித் திரிகின்றாய்
உமதுமொழி வளர்ந்திடவே
உருப்படியாய் என் செய்தாய்!


தமிழனாக பிறந்து விட்டு நான் தமிழன் என்று பார் தட்டுவதில் தமிழுக்கு ஒரு பயனும் இல்லை. தமிழன் அல்லாதோர் கூட தமிழின் சிறப்பை உணர்ந்து தமிழுக்குத் தொண்டு செய்து வருகின்றனர். ஆனால் தமிழா தமிழுக்கு நீ என்ன செய்தாய் என்று கேள்விகள் எழுப்பி தமிழனைச் சிந்திக்க வைத்துள்ளார். பாராட்டுக்கள்.

அகிலம் போற்றும் முதல்மொழியில்
அந்நிய எழுத்துக்கள் கலப்பதால்
அகரம் ஆகிய தமிழ்மொழி
அடிப்படை ஆட்டம் போகுதே
நிகிரிலாத் தனித்தமிழ்மொழி தான்
நாளும் இங்கு வாடுதே!


இயல்பாக இல்லாமல் சிலர் வேண்டுமென்றே வலிய பிறமொழி எழுத்துக்களை தமிழில் கலந்து வருகின்றனர். இக்கொடுமை தடுக்கப்பட வேண்டும். தமிழை தமிழாக எழுதிட வலியுறுத்திட வேண்டும் விதமாக வடித்த கவிதை நன்று.

நெல் விளையும் பூமியிலே
நெருஞ்சி முள்ளை விதைக்காதே
புல விளைய விடலாமா?
பொசுக்க வேண்டும் அவைகளையே!
நல்லபடி தமிழ்நிலமே! நிமிர்ந்திங்கு நிறைந்திடவே!
எல்லோரும் ஒன்றுகூடி / இருப்பதையே காக்க வேண்டும்!


பயிர் விளையும் நிலத்தில் கறையை வளர விடலாமா? பிற எழுத்து எனும் களைகளையே களைந்திட வேண்டும்? தமிழ் நிலத்தில் தமிழே விளைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள விதம் அருமை. நூல் சொல்களஞ்சியமாக உள்ளது. தமிழில் பிறமொழி எழுத்துக்கள் கலக்கும் கொடிய செயலுக்கு கடும் கண்டனத்தை அழகுதமிழில் அழகாகப் பதிவு செய்துள்ளார். பாராட்டுக்கள்.

வீறுகொண்டு குரல் கொடுத்து
விழிப்படைய முரசு கொட்டி
ஏறு போல நட என்றேன்
இனிய தமிழ் வளர் என்றேன்!
கூறு கெட்டுக் கிடக்கிறாயே
குப்பையாக இருக்கிறாயே
வேறுபட்ட உன்னாலே
வருந்துகிறேன் பாரதி!

நூல் ஆசிரியர் கவிபாரதி பேராசிரியர் மு.க.பரமசிவம் அவர்கள் பாரதியாரின் கவிதைகளை நன்கு படித்து உள்வாங்கி தமிழுக்காக பாரதி பாடிய வரிகளை உணர்ந்து ஒரே கல்லில் இரு மாங்காய் என்பது போல ஒரே நூலில் முத்தமிழையும் உயர்த்தி முண்டாசுக்கவிஞர் பாரதியையும் உயர்த்தி மரபுக்கவி விருந்து வைத்துள்ளார். மரபின் பல்வேறு வகைகளிலும் பாடல் வடித்துள்ளார்.

எங்கு பார்த்தாலும் தமிங்கிலம் பரவி வரும் இவ்வேளையில் சமுதாயத்தை சீர்படுத்த தமிழன் தமிழை தமிழாகப் பேசிட விழிப்புணரு விதைக்கும் வண்ணம் வடித்த கவிதைகள் நன்று. பாரதியின் பார்வை அறச்சீற்றம் மிக்க பார்வை. மொழிப்பற்று மிக்க பார்வை. மிக நன்று. பாராட்டுக்கள்.


 

 


கவிஞர் இரா.இரவி

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்