எம் ஜி ஆர் ஒரு ஜீவ நதி - 13

 

முனைவர் செ.இராஜேஸ்வரி

சிறுவர்களுக்கு மதிப்பளித்த எம்ஜி ஆர்

ன்றைய சிறுவர்கள் நாளைய இளைஞர்கள் அவர்களே இந்தியாவின் நாளைய தூண்கள் என்பதை நன்கு உணர்ந்த எம்ஜிஆர் சிறு வயதிலேயே தனது படங்களின் மூலமாக அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் பகுத்தறிவையும் சுயமரியாதையையும் கற்றுத்தர வேண்டும் என்பதில் தீவிர ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்தார். அவர் சிறுவர்களிடம் காட்டிய அன்பு அவர்களுக்கு அளித்த மதிப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும்.

சிறுவன் பேச்சை கேட்டு சின்ன காருக்கு மாறிய எம் ஜி ஆர்

1960களில் ப்ளைமவுத் கார் பணக்காரர்களிடையே மிகவும் பிரபலமாயிற்று. அப்போது கோடம்பாக்கத்தில் மேம்பாலம் கிடையாது. இரயில் வரும்போது கேட் போட்டுவிடுவார்கள் வண்டி வாகனங்கள நின்று இரயில் போன பின்பு போக வேண்டும். ஒரு நாள் எம்ஜிஆர் காரில் வரும்போது கோடம்பாக்கம் இரயில்வே கேட் ரயில் வருவதற்காக அடைக்கப்பட்டிருந்தது. அப்போது அவர் காருக்குள் அமர்ந்து கேட் திறப்பதற்கான காத்துக்கொண்டிருந்தார். அந்த சமயம் அங்கு வந்து வெளியே அந்த காரைச் சுற்றி பார்த்த ஒரு சிறுவன் தன் நண்பனிடம் ‘’பாத்தியாடா ஒரே ஒரு ஆளுக்கு எவ்வளவு பெரிய கார்’’ என்று சொன்னான். இதைக் கேட்டதும் எம்ஜிஆருக்கு ஓர் உண்மை சுள் என்று உறைத்தது.

ஒரு தனிமனிதனுக்கு வசதிகள் தேவைதான். ஆனால் அந்த வசதி ஆடம்பரமாக இருக்கக்கூடாது என்பதை உணர்ந்தார். அன்று முதல் அவர் எப்போதும் சிறிய அம்பாசிடர் காரிலேயே போவதை தன் வழக்கமாகக் கொண்டார். அவர் முதல்வர் ஆனதும் அரசு நிகழ்ச்சிகளுக்கு அரசு கார் கண்டசாவில் சில சமயம் போனதுண்டு. அவருடைய சொந்த பிரயாணங்களுக்கும் கட்சி பயணங்களுக்கும் அவர் தனது எம் எஸ் எக்ஸ் 4777 என்ற எண்ணுள்ள நீலநிற காரையே பயன்படுத்தி வந்தார். அந்தக் கார் இன்று அவருடைய நினைவு இல்லத்தில் அவர் நினைவாக வைக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற்று 1985இல் ஜனவரி மாதம் சென்னைக்குத் திரும்பிய போது அவருக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பாக அழைத்துச் செல்ல அமைச்சர் முத்துச்சாமியும் ஆர் எம் வீரப்பனும் ஒரு காரை நவீன முறையில் பல வசதிகளோடு தயாரித்து கொண்டு வந்து விமான நிலையத்தில் நிறுத்தி இருந்தனர். ஆனால் அவர் மேடையை விட்டு கீழே இறங்கியதும் தான் எப்போதும் பயணம் செய்யும் அம்பாசிடர் கார் தான் வேண்டும் என்று கேட்டார். உடனே அந்த பழைய கார் வரவழைக்கப்பட்டு அவர் அந்த காரில் தன் விட்டுக்குச் சென்றார்.

ஒரு சிறுவன் ஏதோ விளையாட்டுத்தனமாக சொல்கிறான் இதற்குப் போய் இவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டுமா என்று யோசிக்கலாம். மற்றவர்கள் அப்படித்தான் யோசித்திருப்பார்கள். ஆனால் சமதர்ம கொள்கையில் நம்பிக்கை உள்ள எம்ஜிஆர் தன்னுடைய தேவைக்கும் அதிகமாக வசதிகளை சேர்த்து வைத்துக்கொள்வது மாபெரும் குற்றம் என்றும் அது ஒரு தேசத் துரோகம் என்றும் நம்பி வந்தார். இந்தக் கருத்தை அவர் மற்றவர்களிடமும் பகிர்ந்துகொண்டார்.

நாம் வசதியாக வாழ்வதில் தவறு கிடையாது. நம்முடைய உழைப்பைக் கொண்டு நாம் வருமானம் ஈட்டி அதில் நமக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் வசதி என்ற பெயரில் வீண் ஆடம்பரங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இன்று வரை அவர் வீட்டில் குடி நீர் வசதி கிடையாது. கிணற்று நீரை தான் குடிக்கின்றனர். தரையில் மார்பில் பதிக்கவில்லை. சிமென்ட் தளம் தான். சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து திரும்பும் வரை அவர் அறையில் ஏ சி கிடையாது. லிப்ட் கிடையாது. அவர் மாடியில் உள்ள தன அறைக்கு படிகளில் விரைந்தேறி செல்வார்.

தனிப்பட்ட முறையில் எம்ஜிஆர் ஒரு கார் பிரியர். வாட்ச் பிரியர். மாருதி கார் அறிமுகமான போது முதலில் பதிவு செய்தவர்கள் எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் என் டி ஆரும் என்பர். அவரிடம் பல வகையான கார்கள் இருந்தாலும் அவற்றை அவர் வீட்டினர் ஒவ்வொரு தேவைக்காகவும் பயன்படுத்தி வந்தனர். இப்போது சென்னையில் நடந்த கார் கண்காட்சியில் எம் ஜி ஆரின் காரும் இடம்பெற்றது. எம் ஜி ஆர் தந்து பயணத்துக்கு பொது ஜனங்கள் மத்தியில் வரும் பொழுது ஏழைகளின் மனம் ஏற்கும்படி எப்போதும் தனது அம்பாசிடர் காரில் வந்தார். அவர் காரை அடையாளம் கண்டு கொண்டு மக்கள் அந்தக் காரை சூழ்ந்துகொள்ளும் அளவுக்கு அவர் அந்த ஒரே காரில் பயணித்தார்.

ஒரு சிறுவநின் ஒற்றைச் சொல் அவரிடத்தில் இத்தகைய சிறப்பான மாற்றத்தை உயர்வை ஏற்படுத்தியது. ‘’மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்’’ என்பதுபோல சிறுவனின் சொல் அவ்வைக்கு கிடைத்த முருகனின் வாக்கு போல எம் ஜி ஆருக்கு எளிமையாக வாழக் கற்று தந்தது. அவர் அந்த சொல்லை தன படிப்பினையாக்கி கொண்டார். மற்றவர்கள் சிறுவனின் கருத்தை உதாசீனப்படுத்தி இருப்பர். இது தான் மற்றவர்களுக்கும் எம் ஜி ஆருக்கும் உள்ள வேறுபாடு

எம் ஜி ஆர் நுற்றாண்டு தபால் உறை

எம்ஜிஆர் சிறுவர்களின் மீது கொண்டுள்ள அன்பையும் மதிப்பையும் கருத்தில்கொண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு தபால் உறை தயாரிக்கப்பட்டது. இந்த தபால்து உறைக்கான வடிவமைப்பை ஒரு போட்டி வைத்து அரசு தேர்ந்தெடுத்தது. அப்போது கோவையில் உள்ள சி எஸ் அகாடமியின் ஓவிய ஆசிரியர் முத்தரசு முதல் பரிசு பெற்றார். அவர் வரைந்து கொடுத்த ஓவியம்தான் தபால் உறையில் இடம்பெற்றது.

பரிசு பெற்ற ஓவியத்தில் எம்ஜிஆர் தன்னுடைய ஒரு கையில் ஒரு சிறுமியை தூக்கி வைத்துக் கொண்டு மறு கையால் அருகில் நிற்கும் ஒரு சிறுவனை அணைத்து இருப்பார். மேலும் சிறுமி சிறுவன் ஆகிய இருவர் கைகளிலும் ஒரு சிலேட் இருந்தது. அந்த சிலேட்டில் நூற்றுக்கு நூறு என்று ஒரு மதிப்பெண் எழுதப்பட்டிருந்தது. இருவரும் அரசுப் பள்ளி மாணவர் சீருடையில் இருந்தனர்.. எம் ஜி ஆரின் அன்புக்கும் அக்கறைக்கும் உரிய அரசு பள்ளி மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவர் என்ற சிறப்பான கருத்தை இப் படம் உணர்த்தியதால் இந்தப் படமே பரிசு பெறும் தகுதியைப் பெற்றது. இதனை ஓவியர் முத்தரசு தனது பேட்டியில் தினமலர் நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்

இயேசு கிறிஸ்து சிறுவர்களை என்னிடத்தில் வர விடுங்கள் என்று சொன்னது போல சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டுவர நினைக்கும் பெரியவர்கள் அதற்கான விதைகளை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களில் விதைக்கவே விரும்புகின்றனர்.

இலவச காலணி திட்டம்


இலவச சீருடை. சத்துணவு. பாடப் புத்தகம் போன்ற பல வசதிகளை பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோரின் தயவை எதிர்பார்க்காமல் அதை தன்னுடைய கடமையாக நினைத்து எம் ஜி ஆர் செய்து கொடுத்தார். இன்று பள்ளி மாணவர்களுக்கு பதினெட்டு இலவசப் பொருட்களை அரசு வழங்குகிறது.

எம் ஜி ஆருக்கு பள்ளிச்சிறுவர்களுக்கு காலுக்கு செருப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்குள் அவர் காலமாகிவிட்டார். எனவே அத்திட்டத்தை அவரது மனைவியார் முதலமைச்சரானதும் நிறைவேற்றினார் அவருடைய மனைவி ஜானகி ராமச்சந்திரன் தனது பதவிக் காலமான 28 நாட்களில் நிறைவேற்றிய பயனுள்ள அரசுத் திட்டம் இலவச காலணி திட்டமாகும்.

எம் ஜி ஆர் செருப்பு வாங்கிய கதை


எம்ஜிஆர் ஆறு வயதில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது அவர் காலுக்கு செருப்பு கிடையாது. பொடிக்கற்கள் அவர் பிஞ்சு காலில் குத்திய போது அவருக்கு கடும் வலி எடுத்தது. நொண்டி நொண்டி நடந்தபடி பள்ளிக்குச் சென்றார். அப்போது அவர் தன்னுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண முடிவு செய்தார். காலுக்கு ஒரு செருப்பு வாங்க வேண்டும் என்று திட்டமிட்டார். இந்த ந்கழ்வை அவர் தன வாழ்க்கை வரலாற்றில் விரிவாக விளக்குகிறார்.

தினமும் சிறுகச் சிறுக காசு சேர்த்து ஒரு நாள் தன் நண்பன் கோபால்சாமி என்பவனை அழைத்துக்கொண்டு செருப்பு கடைக்கு போய் செருப்பு வாங்கி வந்தார். கோபால்சாமி செருப்பு தைப்பவரிடம் விலை பேரம் பேசி செருப்பு வாங்கிக் கொடுத்தான். வீட்டுக்கு செருப்புப் போட்டுக் கொண்டு வந்த மகனை பார்த்த சத்யா அம்மையார் ‘செருப்பு வாங்க உனக்கு காசு ஏது?’ என்று அதட்டினார். எம் ஜி ஆர் நடந்ததை சொல்லி தாயின் பாராட்டை பெற்றார்.

அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சர் பதவிக்குரிய அந்தஸ்து நிறைந்த சிறு சேமிப்பு துணை தலைவர் பதவியை எம் ஜி ஆருக்கு வழங்கி கௌரவித்தார். அப்போது எம் ஜி ஆர் சிறுவர்களிடம் சிறு சேமிப்பின் அவசியத்தை உணர்த்தி சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தார். சிறு சேமிப்பு சிக்கனம் என்பதில் நம்பிக்கையும் பயிற்சியும் உள்ளவர் எம் ஜி ஆர். பணத்தின் மதிப்பு தெரிந்தவர்.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது 1983 இல் இந்த நண்பர் கோபாலசாமி போய் நேரில் சந்தித்தார். அவர் அதே ஊரில் கும்பகோணத்தில் கோயில் கணக்கராக பணி செய்து கொண்டிருந்தார் இந்த நண்பர் கோபால் சாமி தான் செருப்பின் விலையை குறைத்து பேசி எம் ஜி ஆருக்கு வாங்கிக் கொடுத்தார்

இன்றும் தொடரும் சிறுகுழந்தை ரசிகர்கள்


1987ம் ஆண்டு, டிசம்பர் 24ம் திகதி எம்ஜிஆர் இறந்த செய்தி அதிகாலை 4 மணிக்கு சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பரவத் தொடங்கியது. அப்போது நிறைய லாரிகள் அண்ணா திமுக தொண்டர்களையும் எம்ஜிஆர் ரசிகர்களையும் ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி மறுநாள் நடக்க இருந்த எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக திறப்புவிழாவுகாக வந்து கொண்டிருந்தன. விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் வந்தபோது எம்ஜிஆரின் மறைவுச் செய்தி கேட்டு பலரும் அதிர்ச்சியுற்று கண்ணீர் சிந்தினர். அந்த அதிகாலை வேளையில் பேப்பர் பொறுக்கி கொண்டு வந்த சிறுமி எம்ஜிஆரின் சாவை கேட்டு அழுதபடியே ஒரு சத்திய வாக்கு உரைத்தாள். ‘இனிமே எம்ஜிஆரே பிறந்து வந்தாலும் அவர் எம்ஜிஆர் ஆக முடியாது’ என்றாள். இதனால் அறியப்படுவது என்னவெனில் எம்ஜிஆர் என்பது ஒரு தனி மனிதர் அல்ல; அது ஒரு பாரம்பரியத்தின் வெளிப்பாடு. ஒரு மரபுச் சின்னம்.

மக்கள் துன்பங்களில் நேரடி பங்கு


எம் ஜி ஆர் திருமணம் பெயர் சூட்டல் வெள்ளம் தீ விபத்து என வரும் மக்களின் இன்ப துன்பங்களில் உடனடியாக நேரடியாக பங்கு பெற்றார். அவர்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு அதற்கான தீர்வுகளை தேடினார். அவர் மக்களோடு இணைந்து சிந்தித்தார் மக்கள் அவர்களோடு இணைந்து செயல்பட்டார். அவர் மக்களின் கண்ணீரை துடைத்தவர் என்பதால் மக்கள் திலகமாக ரசிகர்களால் போற்றப்பட்டார். தொடர்ந்து அவர் செய்து வந்த இப்பணி அவரை மக்கள் தலைவர் ஆக்கிற்று. பெரியவர்கள் எம் ஜி ஆரை பற்றி சொல்ல கேட்டு வளர்ந்த சிறுவர்கள் தலைமுறைகளாக எம் ஜி ஆரின் ரசிகர்களாக இருக்கின்றனர். இது மற்றனடிகர்களுக்கும் தலைவர்களுக்கும் கிடைக்காத பேறாகும். இதனால் சிறுவர் முதல் பெரியவர் வரை எம்ஜிஆரின் ரசிகர்களாகவும் அண்ணா திமுகவின் தொண்டர்களாகவும் தொடர்ந்து இருந்து வருகின்றனர்

தலைமுறையாக தொடர்ந்து வரும் எம் ஜி ஆர் ரசிகர்கள்


மரம்பிடுங்கி கவுண்டன்புதூர் என்ற ஊரில் உள்ள ஒரு பாட்டி எம் ஜி ஆர் ரசிகை ஆவார். அவர் மதுரை வீரன் படம் பார்த்ததில் இருந்து எம் ஜி ஆர் ரசிகை ஆனார். அவர் மகன் பொன்னுசாமி தீவிர எம் ஜி ஆர் பக்தர். அவர் பேரனும் இன்று எம் ஜி ஆர் ரசிகன். இவ்வாறு பல தலைமுறைகள் தமிழ்நாட்டிலும் தெற்காசிய நாடுகளிலும் கர்நாடகாவிலும் எம் ஜி ஆர் ரசிகர்களாக பாட்டி தாய் தந்தை பிள்ளைகள் என இருந்து வருகின்றனர். தாய் வழி சொந்தங்கள் எனப்படும் தொப்புள் கோடி உறவுகள் எம் ஜி ஆர் ரசிகர்களாகத் திகழ்வது இயல்பான நிகழ்வாகும்..

சிறுவர்களை அதிமுக தொண்டர்களாக மாற்றிய எம் ஜி ஆர்.


யாதோன் கி பாராத் என்ற இந்தி படத்தை தமிழில் எடுக்கலாம் என்று இயக்குனர் சேதுமாதவன் எம்ஜிஆரை அணுகியபோது அவர் ‘இது ஒரு மியூசிக் சப்ஜெக்ட் இதில் எனக்கு என்ன ஸ்கோப் இருக்கிறது’ என்று கேட்டார் அதற்கு இயக்குனர் அவரிடம் இது உங்கள் படமாக வரும் என்று சொல்லி அவரது கால்ஷீட்டை பெற்றுவிட்டார். நாளை நமதே என்ற பெயரில் இந்தப் படம் வெளிவந்து வெற்றி வாகை சூடியது.

நாளை நமதே படத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மகன்கள் படத்தின் ஆரம்பத்திலேயே பிரிந்துவிடுகின்றனர் அவர்கள் தம் பெற்றோரோடு இருக்கும் போது மகிழ்ச்சியாக பாடிய பாடலை ஒருவர் ஆங்காங்கே பாடி மற்ற இருவரை தேடி வருகின்றார். படத்தின் முடிவில் மூவரும் சந்தித்து ஒன்று கூடுகின்றனர். இந்த படத்தில் வரும் பேமிலி சாங் என்று அழைக்கப்படும் குடும்பப் பாட்டு இந்தியில் மிகவும் பிரபலமாயிற்று

நாளை நமதே படத்தில் இந்தக் குடும்பப் பாட்டை எம்ஜிஆர் படத்தின் அரசியல் மையக் கருத்துரையாக தன்னுடைய கட்சிக்கான விளம்பரமாக திரைப்படத்திலும் அரசியலிலும் தனக்கு ஆதாயமாக அமையக்கூடிய அளவில் சிந்தித்து உருவாக்கினார். இந்த பாட்டை குடும்பம் மற்றும் கொள்கை என இரண்டுக்கும் பொருத்தமாக அமையும்படி எழுதி வாங்கினார். .

அண்ணா திமுக கட்சி தொடங்கி அப்போது வந்த இடைத்தேர்தல்களில் பெரு வெற்றி பெற்று மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வந்த அண்ணா திமுக மேலும் நம்பிக்கை கொண்டு வளரவேண்டும் என்பதற்காகவும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரும் என்ற எண்ணத்தை ஆழமாக விதைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பாட்டை செயல் ஊக்கப் பாட்டாக மாற்றி எம்ஜிஆர் தனக்கு 100% சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

இந்தப் பாட்டில் வரும் பெற்றோர் அண்ணா திமுக கட்சி என்றும் பிள்ளைகள் அக்கட்சியின் தொண்டர் என்றும் பொருள் கொள்ளும்படியாகவும் பாடல் ஒலித்தது. இது படத்தின் தொடக்கத்தில் குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்து பாடுகின்ற இனிமையான பாடல் ஆகும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கை குறித்த நம்பிக்கையை ஊட்டுகின்றனர்.

நாளை நமதே இந்த நாளும் நமதே
தாய் வழி வந்த சொந்தங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே இந்த நாளும் நமதே

என்ற பல்லவி சிறுவர்கள் அல்லது குழந்தைகள் எல்லோரும் ஒன்று கூடி ஒற்றுமையாக இருந்து நேர்வழியில் அவர்கள் வாழ்க்கையை நடத்தினால் எதிர்காலம் இனிமை உடையதாக இருக்கும் என்ற கருத்தை பெற்றோர் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.

சிறுவர்கள் பாடி மகிழும் இந்த பாட்டு அவர்களுக்கு எம் ஜி ஆர் என்ற ஓர் அரசியல் தலைவர் பிம்பத்தையும் மனதில் பதிய வைக்கின்றது. அதற்கு அடுத்தபடியாக அவரது சிந்தனையையும் அவர்கள் அறியாமலேயே அடிமனதில் பதிய வைக்கிறது. இவர்கள் பதின்ம வயதினர் ஆனதும் தாமாகவேஅண்ணா திமுக ஆதரவாளர்கள் ஆகிவிடுவர். இது திரைப்படத்தால் எம் ஜி ஆருக்கு சிறுவர் மூலமாக கிடைக்கும் பலன்;

அடுத்து கொள்கை பாடல் என்று ஆராய்ந்தால் அண்ணா திமுகவின் தொண்டர்கள் தாய்வழிச் சொந்தங்கள் போல சகோதர பாசத்துடன் உடன் பிறப்புகளாக ஒருங்கிணைந்து நேர்வழியில் உழைத்தால் அண்ணா திமுகவின் எதிர்காலமும் பொது மக்களின் வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும். திமுகவின் இன்றைய இன்னல் தரும் ஆட்சி மறைந்து நாளைய ஆட்சி நல்லாட்சியாக மலரும் என்ற நம்பிக்கை ஒளியைத் தோற்றுவிக்கிறது. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை அண்ணா திமுக பிடிப்பது உறுதி; எனவே தொண்டர்கள் உற்சாகமாக கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்; திமுகவினரின் அராஜகத்தை கண்டு வன்முறைப் போக்குக்கு அஞ்சி சோர்ந்துவிடக் கூடாது; ஒற்றுமையும் நேர்வழியும் நமக்கு நல்ல எதிர்காலத்தை தரும் என்று ஒரு தலைவனாக இருந்து தன் தொண்டர்களுக்கு கூறும் கருத்துரை யாகவும் இந்தப் பாடலின் பல்லவி அமைந்தது.

எம் ஜி ஆரின் திறன் மிகு உத்தி


படத்தின் பாடலை காட்சிகளை வசனத்தை படத்துக்கும் தனக்கும் அரசியல் கொள்கைக்கும் பொருந்தி வருமாறு அமைப்பது தான் எம் ஜி ஆரின் திறன் மிகு தொடர்பியல் உத்தி ஆகும். இதைத் ஆங்கிலத்தில் effective communication technique என்போம். தன்னிடம் இருத்த திரைப்படம் என்ற வலிமை மிகுந்த தொடர்பியல் சாதனத்தை 100 சதவிதம் ஆற்றலுடன் பயன்படுத்தி சிறுவர் முதல் பெரியவர் வரை தன பால் ஈர்த்தவர் எம் ஜி ஆர்.

1960 களில் திமுகவின் முக்கிய தலைவர்களான கருணாநிதி, ஈ.வே..கி.சம்பத், நாவலர் நெடுஞ்ச்செழியன் போன்றோர் எம் ஜி ஆருக்கு அண்ணா கொடுக்கும் முக்கியத்துவத்தை பற்றி அவரிடம் கடுமையாக பேசினர். அப்போது அண்ணா ‘’உங்களுக்கு எம் ஜி ஆரின் ஆற்றல் பற்றி தெரியவில்லை. நீங்கள் உங்கள் வாக்கு வன்மையால் ஒரு மாதம் முழுக்க கூட்டங்களில் பேசி ஆயிரக் கணக்கான மக்களை கவரலாம். ஆனால் எம் ஜி ஆர் இரண்டு மணி நேரத்தில் இலட்சக்கணக்கான் மக்களை தன பால் ஈர்த்துவிடுவர். அவரிடம் அந்த கவர்ச்சியும் திறமையும் உண்டு’’ என்றார். அவர் சொன்னதை உண்மை என்பதை கருணாநிதி எம் ஜி ஆர் தன ஆயுள் முழுக்க அசைக்க முடியாதவராக முதல்வர் பதவியில் இருந்து போது தான் கருணாநிதி உணர்ந்தார்.


 


முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 


 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்