அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும்
(ALIENS & UFO)
கனி விமலநாதன்
அறிவியற் தொடர் -
15
இன்று
அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் பகுதியிற் சுவையான கதை
ஒன்றினைத் தருகிறேன். கொஞ்சம் அரசியல், கொஞ்சம் பரபரப்பு, கொஞ்சம்
சாகசம் என்பன கலந்த ஏலியன் கதை. எங்களுடன் தொடர்பான கதை என்பதால் இதனைத்
தரவேண்டியுள்ளது. 5000 ஆண்டு முன்னராகச் சுமேரியர்கள் 'உண்மைக் கதை'
எனக் கூறித் தங்களின் களிமண் தகடுகளில், ஆப்பு வடிவிலமைந்த சித்திர
எழுத்துக்களிற் தந்த கதையிது.
CHRIS
H.HARDY, (Ph.D)
என்பவர்
DNA of the GODS
என்ற நூலினை 2014ல்
வெளியிட்டிருக்கிறார். அதன் உபதலைப்பு
The Anunnaki Creation of Eve and the Alien Battle for Humanity
என்பதாகும். இதில் நிபுறுவினரைப்
பற்றியும், புவியில் அவர்கள் செய்த வேலைகளைப் பற்றியும் சுமேரியர்களின்
களிமண் தகடுகளில் உள்ள குறிப்புகளின்படி எழுதியுள்ளார். சுமேரியர்களின்
களிமண் தகட்டுச் சித்திர எழுத்துகளில் எழுதப்பட்டவைகளில் இருந்து,
நிபுறு பற்றிக் கூறும் நூல்கள் பல வெளிவந்துள்ள போதிலும் இந்நூல்
வாசகர்களினால் அதிகம் வாசிக்கப்பட்ட நூல் என்கிறார்கள். 'அந்நாள்
அந்நியர்கள்' பற்றிய ஆய்வு செய்பவர்கள் இந்நூலில் உள்ள விபரங்களையும்
சுட்டிக்காட்டி, 'வேற்றுக்கிரகவாசிகள் உண்மையிலேயே இருக்கிறார்கள்,
அவர்கள் எங்களின் காலத்திற்கு முன்னராகவும் புவியிற்கு வந்துள்ளார்கள்,
அந்த ஏலியன்களின் செல்வாக்கு, புவியிற் பெருமளவில் இருந்திருக்கின்றது,'
என்பது போன்ற தங்களின் வாதங்களை நியாயப்படுத்துகிறார்கள். 246 பக்கங்கள்
கொண்ட இந்நூலில் சுமேரியர்களின் கவித்தன்மையான வாசகங்கள் எல்லாம்
மொழிபெயர்ப்பில் எழுதப்பட்டுள்ளன. நான் குறிப்பிடும் நிபுறுவினர்
பற்றிய பலவிடயங்கள் இந்நூலிலும் உள்ளன. சரி, இனி நிபுறுவினர் பற்றி
நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றைப் பார்ப்போம்.
கோள் நிபுறு பற்றி முன்னர் கூறியவற்றை நினைவிற் கொண்டு வாருங்கள்.
எங்களுக்கும் அக்கோளுக்குமான தொடர்புகளுடன் கதையைத் தொடர்கிறேன். நிபுறு
கோளில் உயிரினங்கள் புவியில் உயிரினங்கள் தோன்றுவதற்குப் பல்லாயிரம்
வருடங்களின் முன்னரே தோன்றிவிட்டன. அங்கும் உயிரினப் பரிமாண வழியிலேயே
புத்திசீவிகளான நிபுறுவினர் தோன்றி, மெதுமெதுவாகத் தங்கள் அறிவியல்
நிலையை உயர்த்திக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களது அறிவின்
மட்டத்தை, எங்களின் அறிவோடு ஒப்பிட்டுக் கூறுவதென்றால், எடுத்துக்
காட்டாக, நாங்கள் (புவியினர்) 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே
அணுசக்தியை அறிந்து, (அணுக்குண்டு உட்பட) அதனைப் பாவிக்கவும்
தொடங்கினோம். ஆனால் நிபுறுவினரோ, எங்களது ஆண்டுக் கணிப்பின்படி,
500,000 (அரை மெய்யிரம்) வருடங்களின் முன்னரே அணுசக்தியைப் பற்றிய
அறிவினைப் பெற்று விட்டார்கள். அப்படியாயின் 445,000 ஆண்டு முன்னராக
அவர்கள் புவியிற்கு வருகையிலேயே அதியுயர் அறிவியல் நிலையில்
இருந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை.
அவர்களது அறிவியல் பற்றி இன்னமும் கொஞ்சம் அறிந்து கொள்வோம். அவர்களது
தொடர்பாடல் மிகப் பெரியதாக இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட உடனடியாகவே
எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தொடர்பு கொள்ளக் கூடிய தொழில் நுட்பம்
தெரிந்தவர்களாக, சாதாரணமாகவே அவற்றைப் பாவிக்கக் கூடியதான கருவிகளைக்
கொண்டவர்களாக இருந்தார்கள். மேலும், கதிரவக் குடும்பத்தினுள் உள்ள
கோள்களிடையே ஒன்றிரண்டு நாட்களிலேயே பயணம் செய்யக் கூடிய வல்லமையையும்
பெற்றிருந்தார்கள்.
அவர்களது கருவிகள் எல்லாம் உயர்நிலை 'நானோ' தொழில்நுட்பத்தில்
இருந்ததினால் கணினிகள் போன்றவை எல்லாம் கைக்கடக்கமானவையாக இருந்தன.
ஒருவேளை நாங்கள் கண்ட அனுனாக்கியின் மணிக்கட்டில் இருந்தது கூட
மணிக்கூடு என்றில்லாமல் ஏதோவொரு உயர்தொழில் நுட்பக் கருவியாகக் கூட
இருக்கலாம். நானோ தொழில்நுட்பம் என்பது இப்போதுதான் எங்களுக்குள்
புதிதாக வருகின்றது. நானோ என்பது, ஒரு மீற்றரை ஆயிரம் மெய்யிரத்தால் (ஒரு
பில்லியன்) வகுக்க வரும் மிகச் சிறிய பகுதி என்பதை எடுத்துக் காட்டாகக்
கூறலாம். கருவி ஒன்றின் முக்கிய தொழிற்பாட்டுப் பகுதியாக இச்சிறு இடத்தை
அடக்கி வைத்திருக்கும் கருவி ஒன்றின் தொழில் நுட்பத்தையே நானோ
தொழில்நுட்பம் என்கிறோம். நாங்கள் இந்த நானோத் தொழில் நுட்பத்துள்
இப்போதுதான் நுழைந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,
நிபுறுவினர் 445,000 ஆண்டு முன்;னராகப் புவிக்கு வருகையிலேயே நானோ
தொழில்நுட்பத்தின் உயர்படியில் இருந்திருக்கிறார்கள்.
இவ்வளவு உயர் அறிவியல் நிலையில் இருந்த நிபுறுவினர் புவியிற்கு வந்ததான
கதை மிகவும் சுவரசியமானது. நிபுறு கோளின் அரசாட்சிப் போட்டியின்
விளைவும் அவர்கள் கொண்டிருந்த அதியுயர் அறிவியற் செயற்பாடுகளுமே
நிபுறுவினரைப் புவியிற்கு வரப் பண்ணின. அந்தச் சுவையான கதையினைத்
தெரிந்து கொள்வோம்.
புவியினைப் போல் ஐந்து (அல்லது பத்து) மடங்கு பெரியதான அந்தப்
பிரமாண்டமான நிபுறு கோள் முழுவதுமே ஒரே அதிகாரத்தின் கீழேயே ஆளப்பட்டு
வந்தது. ஆனால் இரண்டு (அரச) வம்சங்களிடையே இந்த அதிகாரத்திற்கான போட்டி
இருந்து கொண்டிருந்தது. அதிலொரு வம்சத் தலைவரை அனு
(ANU)
என அழைத்தார்கள். மற்றதின்
தலைவரை அலலு
(ALALU)
என அழைத்தார்கள். இவர்களது
அதிகாரப் போட்டி, அக்கோளிலே அடிக்கடி நடந்த போதிலும் அனுவின் செல்வாக்கே
அதிகமாக இருந்தது. அனுவே நிபுறுவில் பலகாலமாக ஆட்சி செய்து
கொண்டிருந்தார். இந்நிலையில் அலலுவின் கைகளுக்கு ஆட்சி கிட்டுகிறது.
எப்படியெனில், வயது போன அனுவை இளமையாக இருந்த அலலு, மற்போர் போன்றதான
போட்டி ஒன்றில் நேரடியபகப் போரிட்டு வென்று ஆட்சியைக் கைப்பற்றுகிறார்.
(எல்லாளன், கைமுனு ஞாபகம் வருகிறதா!). ஆனாலும் அனுவின் இளைய மகனை அரசச்
செல்வாக்குள்ள ஒருவராகவே அறிவித்திருந்தார்.
அலலு ஆட்சியில் இருக்கையில், நிபுறுவின் சூழல், கதிரவனின் புறவூதாக்
கதிர்வீச்சிற்கு உள்ளாகிறது, நிபுறுவின் வளிமண்டலம், மாசடைந்ததால்.
அதனால் நிபுறு, கதிரவனின் புறவூதாத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமற்
தடுமாறியது. அந்நேரத்தில் அதிபராக இருந்த அலலு என்ன செய்கிறாரெனில்,
நிபுறுவின் எரிமலைகளை அணுக்குண்டுகளைப் பாவித்து உயிர்ப்பித்து,
நிபுறுவின் வளிமண்டலத்துள் எரிமலைச் சாம்பல்கள், தூசுகள் போன்றவற்றைச்
செலுத்திக் கதிரவனின் புறவூதாக்கதிர்த் தாக்குதல்களைச் சமாளிக்க
முயல்கிறார். ஆனால் அது பெரிதாக வேலை செய்யவில்லை. அடுத்த நடவடிக்கையாக,
நிபுறுவின் விஞ்ஞானிகள், பொன்துகள்களை வளிமண்டலத்தின் மேலே பரப்பிக்
கதிரவனின் புறவூதாத் தாக்கத்தைத் தவிர்க்கலாம் எனக் கூறுகிறார்கள்.
அதற்கு நிபுறுவில் உள்ள தங்கம் போதாமல் இருக்க, அலலு தங்கத்தை தேடும்
முயற்சியில் ஈடுபட, அவ்வேளையில் எங்களது புவி அவர்களின் பார்வையிற்
சிக்குகிறது.
இந்நேரத்தில், அலலுவின் பரம்பரைக்கு எதிரான பரம்பரையின் புதிய அனு (தலைவர்),
அலலுவுடன் சமர்செய்து அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார். ஏரிமலைகளை
உயிர்ப்பித்தது, அணுக்குண்டுகளைப் பாவித்தது, போன்ற அதிகாரத்
துர்ப்பிரயோகம் செய்திருந்த அலலு, அரச தண்டனையின் பயத்தினால் நிபுறுவை
விட்டுத் தனது விண்கலத்திற் தப்பி ஓடுகிறார்.
நிபுறுவை மீண்டும் கைப்பற்றிய அனுவிற்கு பெரிய வேலைகள் இருந்தன.
நிபுறுவின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும். அதற்குப்
பெருமளவு தங்கம் தேவைப்பட்டது. அடுத்தது, அவரது எதிரி அலலு. அலலு
மீண்டும் நிபுறுவிற்கு வந்து சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சம்
அவருக்கு ஏற்பட்டது. எனவே, தப்பிச் சென்ற அலலுவைத் தேடிப்பிடித்துச்
சிறைப்படுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அனுவிற்கு ஏற்பட்டது. ஆனால்
அலலு எங்கே தப்பிச் சென்றார் என்பதை அனுவால் அறிய அல்லது அனுமானிக்க
முடியாதிருந்தது.
இனித்தான் எங்களின் புவியின் விடயங்கள் வருகின்றன. நிபுறுவில் இருந்து
தப்பி ஓடிய அலலு, முதலில் நீல நிறமான நெப்ரியூன் கிரகத்திற்கு வருகிறார்.
நெப்ரியூன் ஒரு வாயுக்கிரகம் என்பதால் எங்களின் கதிரவக் குடும்பத்தில்
இன்னமும் உள்நோக்கி வருகிறார். பெருங்கோள் வியாழனைத் தாண்டியதும்,
இன்னமும் உள்ளே வருகிறார். அவருக்கு எங்களின் புவி பற்றித்
தெரிந்திருக்கிறது. அவர் ஆட்சியில் இருந்தபோது, நிபுறுவின் சூழலைப்
பாதுகாப்பதற்கான முயற்சியில், தங்கத்தின் தேடுதலின் போது எங்களின் புவி
அவருக்குத் தட்டுப்பட்டிருந்திருக்கலாம். பற்பல காரணங்களினால், நிபுறுவை
விட்டுத் தப்பி ஓடுகையிலேயே அவருக்கு புவிதான் முக்கிய இலக்காக
இருந்திருக்கின்றது.
அலலுவுக்கு வியாழனைத் தாண்டி புவிக்கு வரும்பாதை இலகுவாக இருக்கவில்லை.
ஏனெனில் வியாழனுக்கும் செவ்வாயிற்கும் இடையில் விண்கற்களின் கூட்டமொன்று
பெரும்பட்டையாகக் கதிரவனைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இக்கற்கள் அவ்விடத்தில் இருப்பதற்குப் பல காரணங்களை வானவியலாளர்கள்
கூறினும் இரண்டு காரணங்களே அதிகமாகக் கூறப்படுகின்றன. ஓன்று,
அவ்விடத்தில் எங்களது புவி, செவ்வாய் போன்ற ஒரு பெரிய பாறைஉலகம் இருந்து
ஏதோ காரணத்தால் உடைந்து சிதறி இப்படியாகி விட்டது என்கிறார்கள். மற்றது,
கதிரவத் தொகுதி தோன்றுகையில் அவ்விடத்திற் திரண்ட பெருங்கற்கள்
ஒன்றிணைந்து ஒரு கோளாகச் சேர முடியாமற் போய், அவ்விடத்திற் தனித்தனிக்
கற்களாகவே கதிரவனைச் சுற்றத் தொடங்கிவிட்டன. இப்படியாகத்தான் பல்வேறு
பருமன்களில், பல்வேறு வடிவங்களில் கதிரவனைச் சுற்றிக் கொண்டிருக்கும்
இக்கற்களுக்கான காரணத்தைக் கூறுகின்றார்கள். அந்த விண்கற் பட்டையைத்
(Asteroid
Belt)
தாண்டித்தான் உள்ளே
வரவேண்டியிருந்தது, அலவுவிற்கு.
அதைத் தாண்டி, கதிரவனின் உட்கிரகத் தொகுதிக்கு வருவது கடினமாக இருக்க,
நிபுறுவினரின் கொள்ளைக்கு எதிராக, மீண்டும் ஒரு தப்பினைச் செய்கிறார்
அலலு, தேவை கருதி.
நிபுறுவினரின் அக்கொள்கை என்ன? அலலு செய்த தப்பு என்ன? என்றெல்லாம்
கேட்கிறீர்களா? அவற்றை அடுத்த தடவையிற் கூறாமல் விடவா போகிறேன், என்ன?
மறுமுறை சந்திக்கிறேன்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|