நீலக்குறிஞ்சி பூத்தது

 

முனைவர் செ.இராஜேஸ்வரி

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே


என்ற குறுந்தொகைப் பாடலில் தன காதலனின் காதல் நிலத்தை விடப் பெரியது; வானத்தை விடவும் உயர்ந்தது; கடலைவிட ஆழமானது என்று புகழ்கின்றாள் ஒரு சங்ககாலக் காதலி.அவள் தனது காதலனைப் பற்றி விளக்கும்போது அவன் நாட்டை பெருந்தேன் இழைக்கும் நாடு என்கிறாள். பெருந்தேன் என்றால் மருத்துவ குணமும் இனிமையும் சுவையும் கூடுதலாக இருக்கும் சிறப்பு மிக்க தேன் ஆகும். இந்தத் தேன் எங்கிருந்து கிடைக்கும் என்றால் கருப்பு நிறத்து காம்புகளை கொண்ட குறிஞ்சிப் பூக்களிலிருந்து சேகரிக்கப்படுவதாகும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூக்களில் இருந்து எடுக்கும் இந்தக் குறிஞ்சித் தேனுக்கு தனி மகத்துவம் உண்டு. குறிஞ்சி மலரும் அதன் தேனும் தனிச் சிறப்பு வாய்ந்தவை . அந்த குறிஞ்சி பூக்கள் இப்போது இந்தியாவில் மேற்கு மலை தொடரில் தமிழகத்திலும் கேரளா மாநிலத்திலும் பூக்கத் தொடங்கிவிட்டன.

குறிஞ்சியின் வகைகள்

குறிஞ்சி பூசெடியில் 160 சிற்றினங்கள் இருந்தாலும் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 47 வகை செடிகள் மட்டுமே உள்ளன. நீலக் குறிஞ்சி பூச்செடி தரையிலிருந்து 1300 முதல் 2400 அடி உயரமுள்ள மலைப் பகுதிகளில் மட்டுமே வளரும்.

தமிழகத்திலும் வளரும் குறிஞ்சியிலும் பலவகை உண்டு. எல்லா குறிஞ்சியும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்காது. சில குறிஞ்சி மலர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் சில ஒரு வருடத்திற்கு ஒரு முறையும் சில எட்டு வருடத்துக்கு ஒரு முறையும் மலரும். குறிஞ்சியில் கல் குறிஞ்சி, செறு குறிஞ்சி, நெடுங் குறிஞ்சி, நீலக்குறிஞ்சி எனப் பல வகைகள் உண்டு. இவற்றில் நீலக்குறிஞ்சி மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலைப்பகுதிகளில் பூக்கும் மலர் ஆகும்.

பூ பூக்கும் காலம்

நீலக்குறிஞ்சி ஆகஸ்ட் மத்தியில் அதாவது ஆடி மாதம் தொடங்கி சில ஆண்டுகள் டிசம்பர் வரையிலும் [மார்கழி மாதம் வரை] பூத்துக்கொண்டிருக்கும். பெர்ம்பாலும் ஆடி ஆவணி புரட்டாசி ஆகிய மூன்று மாதங்களில் இதன் பூப்பு காலம் முடிந்துவிடுவதுண்டு. சில மலைகளில் சற்று கால தாமதமாக பூக்கத் தொடங்கினால் அங்கு சில காலம் கூடுதலாக பூக்கும்.

நீலக்குறிஞ்சியின் தனித்தன்மை

நீலக்குறிஞ்சி பூக்கும் போது வேறு எந்த செடியும் அந்த மலைப்பகுதியில் காணப்படாது. அத்தனை புதர் செடியையும் அழித்துவிட்டு தான் ஒரு தாவரம் மட்டுமே ஏராளமாக வளர்ந்து மலர்ந்து தேன்பிலிற்றும். இம்மலர் மலைப்பகுதியில் இரண்டு மூன்று அடி உயரம் வளர்ந்துள்ள புதர் செடிகளில் அடர் நீல வண்ணத்தில், கோயில் மணி உருவத்தில், கொத்து கொத்தாக காணப்படும். இக் குறிஞ்சி பூ அதிகாலை ஐந்து மணியில் இருந்து ஒன்பது மணிக்குள் பூத்துவிடும். இவை பூத்ததும் தேனீக்கள் கூட்டம் கூட்டமாகத் தேனெடுக்க வந்துவிடும்..

குறிஞ்சி பூத்திருக்கும் மலைகள்

ஊதாக் குறிஞ்சி என்றும் அழைக்கப்படும் இந்த நீலக்குறிஞ்சி [strobilanthus kanthinaus] இந்தியாவில் மேற்கு மலைத் தொடர்களில் கொடைக்கானல், மூணாறு, உதகமண்டலம், ஆனைமலை, இடுக்கி போன்ற மலைப்பகுதிகளில் பூக்கும். இப்போது இந்த மலைப் பகுதிகளில் குறிஞ்சிப்பூ தொடங்கிவிட்டது. கொடைக்கானல் மலைக்கு சுற்றுலா செல்வோர் கோக்கர்ஸ் வாக் என்ற நடைபாதையில் நடந்து போகும்போது அந்த பாதையின் கீழ் இருக்கும் பல ஏக்கர் நிலத்தில் குறிஞ்சி பூத்து நீல மயமாக காட்சி தருவதை கண்டு ரசிக்கலாம்.

நீலக்குறிஞ்சி செடியும் மலரும்

நீலக் குறிஞ்சியில் மலர்கள் கொத்துக் கொத்தாகப் பூக்கும். ஒரு செடியில் சுமார் 82 கொத்துகள் இருக்கும். ஒரு கொத்தில் 24 பூக்கள் இருக்கும். ஆக ஒரு செடியில் சுமார் ஆயிரத்து 768 பூக்கள் பூக்க வாய்ப்புண்டு. நீலக்குறிஞ்சி பூத்துவிட்டால் வண்டுகள் அடர் நீல நிறத்தில் கவரப்பட்டு விரைந்து வந்து தேனைச் சேகரிக்கும். இவ்வண்டுகளால் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு பிறகு இந்த நீல மலரின் நிறம் மங்கத் தொடங்கி விடும் இந்த மலரை இறைவன் படைத்ததன் நோக்கம் நிறைவேறிவிட்டதால் இனி அந்த மலர் வெளுத்து காய்ந்து உதிர்ந்துவிடும். ஒவ்வொரு மலரிலும் மூன்று நான்கு விதைகள் தோன்றியிருக்கும், இந்த விதைகள் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து முளைக்கத் தொடங்கும். அவ்வாறு முளைக்கும் போது இந்த விதைகளின் வீரியம் அருகில் உள்ள செடிகள் வளர இடம் தராமல் அந்த இடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்ளும். புதர் செடியாக அடர்ந்து வளர்ந்து பூமியிலிருந்து மேலே எழுந்து வந்து பூக்கத் தொடங்கி விடும். இந்த பூக்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் ஒரு சேர பூத்து இருப்பதால் இதனை mass flowering என்பர் .

குறிஞ்சி தேன்


பெருந்தேன் ஏனஸ் சங்கப்புலவன் பாராட்டிய குறிஞ்சித் தேன் பிலிற்றும் மலர்களில் ஒரு மலரில் 4 மில்லி லிட்டர் அளவுக்கு தேன் இருக்கும். இதனால் ஒரு செடியில் பூக்கும் பூக்களில் இருந்து ஏறத்தாழ 70 மில்லி லிட்டர் தேன் சேகரிக்கப்படும். இவ்வாறு சேகரிக்கப்படும். தேநின் அளவு அதிகமாக இருப்பதால் இப் பூ பூக்கும் காலங்களில் மரங்களிலும் பாறைகளிலும் நிறைய தேனடைகள் காணப்படும். ஒரு மரத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட தேனடைகள் தொங்குவதைப் பார்க்கலாம். அதுபோல பாறைகளிலும் பாறைகளின் இடுக்குகளிலும் இப் பெருந்தேனடைகள் குறிஞ்சி பூக்கும் காலங்களில் அதிகமாகக் காணப்படும். குறிஞ்சி பூ பூக்கும் காலத்தில் வேறு பூக்கள் பூப்பதில்லை என்பதால் இந்த தேன் அடையில் இருக்கும் தேன் ஒரே பூவின் தேனாக இருக்கும். இதனை தனிப் பூந்தேன் என்று Unifloral honey என அழைப்பர்.

மருத்துவப் பண்பு நிறைந்த இந்த தேனை மலைவாழ் மக்கள் சேகரித்து மன்னர்கள் அல்லது பிரமுகர்கள் தங்கள் பகுதிக்கு வரும் பொழுது மலைபடு திரவியம் என்ற பெயரில் இம்மலைத் தேனையும் மற்ற விலைமிகுந்த மலைப் பொருட்களோடு சேர்த்து தன் அன்புக் காணிக்கையாக அளிப்பது வழக்கம்.

பூவும் பூசையும்


நீலக் குறிஞ்சி பூக்கும் காலங்களில் மலைவாழ் மக்கள் தம் காட்டை காவல் செய்து வந்த ‘காட்டைகாவலன்’ தெய்வத்துக்கு விழா எடுத்து சிறப்பு வழிபாடுகள் செய்வது உண்டு. குறிஞ்சி பூக்கும் காலத்தில் மலைவாழ் மக்கள் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்.. அவர்கள் பூ பூக்கும் செடிகளுக்கிடையே போய் வருவதும் கிடையாது. பூக்களைப் பறிப்பதும் கிடையாது. மலைவாழ் மக்கள் கொய்யா குறிஞ்சியின் மாண்பை உணர்ந்து திருமுருகாற்றுப்படை ‘’கொய்யா குறிஞ்சி பல பாடி’’ என்று சிறப்பித்திருக்கிறது

குறிஞ்சி பூக்கும் காலத்தை அடையாளமாகக் கொண்டு உதக மண்டலத்தில் வாழும் தோதர் இனப்பழங்குடியினரும் கொடைக்கானல் மலையில் வாழும் பளியர்களும் தங்களது வயதை கணக்கிட்டு கொள்வர்.

நீல மலை ரகசியம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் உதகமண்டலம் பகுதியில் அதன் தட்பவெட்ப நிலையைக் கண்டு மயங்கிய வெள்ளையர்கள் 1870 இல் குடியேறத் தொடங்கினர் அதனைத் தமது கோடைகால வாசஸ்தலமாக மாற்றினர். 1826 முதல் இந்த மலைகளில் பூத்த குறிஞ்சி மலர்களில் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராபின்சன் என்பவர் இம்மலர் குறித்து ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி வெளியிட்டதால் வெளி நாட்டவர் இம்மலரைக் கண்டு மகிழ ஆர்வம் காட்டினர் அவர் நீலக் குறிஞ்சி மலர்கள் பூக்கும்போது ஒவ்வொரு முறையும் இங்கு வந்திருந்து இந்த மலர்கள் பற்றிய தகவல்களைப் பதிவு செய்தார்.

நீலகிரி


நீலமலர்கள் மலை எங்கும் காணப்படும் போது நீல வண்ணத்தில் இம்மலைப்பகுதி நீல மலையாக தோன்றுவதால் வெள்ளையர் இதனை நீலமலை என்று அழைத்தனர். இங்கு வாழ்ந்த திருடன் ஒருவன் பற்றிய கதையை நீலமலைத் திருடன் என்ற பெயரில் தமிழில் திரைப்படமாகவும் எடுத்தனர். மலை என்பதை சமஸ்கிருதத்தில் கிரி என்று அழைப்பர். சிவன் மலை சிவகிரி என்றும் பழமலை விருத்த கிரி என்றும் மாற்றப்பட்டது போல நீலமலையும் நீலகிரி ஆயிற்று பின்பு அதுவே சொல் திரிபாக ஆங்கிலத்தில் nilgiris என மாறியது. இம்மலை வழியாக கோயம்புத்தூருக்கு செல்லும் இரயில் ஆங்கிலத்தில் blue mountain எக்ஸ்பிரஸ் எனப் பெயர் பெற்றது. நீலகிரி எக்ஸ்பிரஸ் எனத் தமிழில் அழைக்கப்பட்டது. இந்த இரயிலில் நடக்கும் சம்பவங்களை வைத்து ஒரு தமிழ்ப்படம் நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வெளிவந்தது.

சங்க இலக்கியத்தில் குறிஞ்சி

சங்க இலக்கியத்தில் ஐந்திணை பாகுபாட்டில் மலையும் மலை சார்ந்த இடமுமான இடத்தில் பூக்கும் குறிஞ்சி திணை வரிசையில் முதல் இடத்தைப் பெறுகிறது. பின்பு இதனை தொடர்ந்து முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய துறைகள் இடம்பெற்றுள்ளன. குறிஞ்சித் திணையின் கடவுள் சேயோன் எனப்படும் முருகன் ஆவான். அவன் அழகும் இளமையும் நிறைந்தவன். குறிஞ்சித் திணையின் தெய்வமான வேலவனுக்கு குறிஞ்சிக்குமரன் என்ற பெயரில் கொடைக்காணலில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது பொதுவாக குறிஞ்சி மலர்களை வேறு எந்த தெய்வத்துக்கும் படைப்பது கிடையாது. அவற்றை யாரும் பறிப்பதும் கிடையாது. ஆனால் இங்கு இருக்கும் குறிஞ்சி குமரனுக்கு மட்டும் குறிஞ்சி மலர் படையல் பொருளாகும். அவன் மலையின் காவல் தெய்வம் அல்லவா.

குறிஞ்சி மக்களின் குரவை ஆட்டம்


குன்றக்குரவை குறிஞ்சி நில மக்கள் குன்றுகளில் வாழ்வோர் என்பதால் அவர்களின் ஆட்டம் குன்றக்குரவை எனப்படும். தமது வழிபாட்டு தெய்வத்தை போற்றி பரவி இவர்கள் வரிசையாக நின்று கை கோர்த்து ஆடுவர். இந்த ஆட்டத்தின் போது குறிஞ்சிப்பண் இசைக்கப்படும். என்று சங்க இலக்கியம் செப்புகிறது.
இன்றைய காலகட்டத்தில் சில மலைப்பகுதிகளில் மலிவாழ் மக்கள் குறிஞ்சி பூவை தமது தலையில் இடுப்பிலும் கொத்துக்கொத்தாக கட்டிக் கொண்டு தமது காவல் தெய்வத்துக்கு வழிபாடு நடத்துகின்றனர். குறிஞ்சி பூக்கும் காலங்களில் குன்றக் குறவர்கள் தேன் சேகரித்துத் தரும் தேனீக்களுக்கு என தேனீ விழா கொண்டாடுகின்றனர்.

காலை மலர்ந்து


நீலக் குறிஞ்சி காலை மலர்ந்து பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் காதல் நோய்க்கு அடையாளமாக விளங்குகிறது. திருமணத்துக்கு முந்திய காதல் உறவு களவு என்று சங்க இலக்கியத்தில் அழைக்கப்படுகிறது. இந்த காதல் உணர்வு நீலக் குறிஞ்சி மலர் போல திருக்குறளில் ஒரு பெண்ணுக்கு காலையிலேயே மலர ஆரம்பித்துவிடுகிறது. ஒரு பெண் மலர்ந்ததும் காதலன் அவள் வண்ணமும் வடிவும் கண்டு தேனி போலத் தேடி வந்துவிடுவான்வந்தவன் அவள் மேனியை குறிஞ்சி மலரை போல் மென்மையும் இனிமையும் உடையது எனப் புகழ்ந்துரைப்பான்.
‘’குறிஞ்சி நாள் மலர் புரையும் மேனி’’ [நற்றிணை]]. அவளோடு உறவாடிய பின்னர் அவளை விட்டு பிரிவான். அவனை எண்ணி காதல் நோயால் உண்ணாமல் உறங்காமல் வாடியிருப்பாள். தன மகள் வாடியிருப்பதைக் கண்ட தாய் அவளை ஏதேனும் தீய சக்தி தாக்கியிருக்குமோ என அஞ்சி வேலன் வெறியாட்டு நிகழ்த்துவாள்.

வேலன் வெறியாட்டு


சங்க இலக்கியத்தில் குறிஞ்சித் திணையில் இடம் பெற்றுள்ள இந்நிகழ்ச்சி குறிஞ்சி நிலத்தின் கடவுளான வேலன் பெயரால் நடத்தப்படுகிறது. ஒரு தலைவி குறிஞ்சித் தலைவனைக் கூடிப் பிரிந்து தவிக்கும் போது அவள் வாட்ட நோய்க்குக் காரணம் அறிய முயலும் அவளது தாய் வேலன் வெறியாட்டு நிகழ்ச்சி நடத்துவால். இது தற்காலத்தில் சாமி ஆடி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சியைப் போன்றதாகும் அவ்வாறு சாமி ஆடுவதை சங்க இலக்கியம் வெறியாட்டு என்கிறது. தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இந்நிகழ்ச்சியை ஷாமனிசத்துடன் [shamanism] ஒப்பிடுவதுண்டு. வெறியாடும் வேலன் இந்த இளம் பெண்ணின் காதல் நோய்க்கு காரணமான குமரன் இருக்கும் மலைப் பகுதியின் வளத்தை வருணிப்பான் மலைவளம் பாடும்போது அந்த இளம் பெண்ணின் முகத்தில் தோன்றும் மலர்ச்சி அவள் அந்த மலைநாடனைக் காதலிக்கிறாள் என்பதை உறுதிப்படுத்தும் தன் தலைவன் வாழும் மலை வர்ணனையின் போது ‘’இன்னும் பாடுக பாட்டே அவன் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே’’ என்று தோழி பாடச் சொல்லி உர்சாகப்படுத்துவாள். அம்மலை வர்ணனையை நோயுற்ற அப்பெண் மிகவும் ரசித்துக் கேட்பாள். அவள் முகம் மலரும் கண்கள் நீர் சுரக்கும். தாயார் தன மகளின் நோயை புரிந்துகொள்வாள். இத்தகு கருத்தமைந்த பாடல்கள் சங்க இலக்கியத்தில் குறிஞ்சித் திணையில் ஏராளமாக உண்டு
பிற்காலத்தில் குறவஞ்சி என ஒரு சிற்றிலக்கியம் வர காரணமாக இருந்ததே இந்த வேலன் வெறியாட்டு என்றால் மிகையில்லை. இந்த ஒரு சிறிய சம்பவத்தை நீண்ட வருணனைகளோடு வளர்த்தெடுத்து இடைக்காலத்தில் புலவர்கள் சிற்றிலக்கியமாக வார்த்தெடுத்தனர்,

குறிஞ்சி பண்


சங்க இலக்கியத்தில் குறிஞ்சி மலர் பூக்கும் மலைப்பகுதியில் வாழும் மக்களின் பெயரால் இலக்கணகாரர்கள் அவர்களின் பாட்டுக்கான பண்ணையும் பறையையும் பெயரிட்டு அழைக்கின்றனர். குறிஞ்சிப் பண் என்பது மிகுந்த உற்சாகத்தோடு பாடக்கூடிய பாடல்களுக்குரிய இராகமாகும். கர்நாடக சங்கீதத்தில் மேகராகக்குறிஞ்சி, பொன்வண்ண குறிஞ்சி போன்ற ராகங்கள் குறிஞ்சி மலரின் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணங்களை நினைவுறுத்துகின்றன. மேகராகம் என்பது மேகத்தின் கரு நீல வண்ணத்தை குறிப்பதாகும். இவ்வாறு குறிஞ்சி மலரை அதன் வண்ணத்தால் குறிப்பிடும் பழக்கம் நெடுங்காலமாகவே இருந்து வருவதால் மதுரைக்காஞ்சியும் ‘’கார் மலர் குறிஞ்சி’’ என்றே அதனை கருப்பு வண்ண மலர் என்று அழைக்கின்றது.

குறிஞ்சி மலர் வகைகளில் மஞ்சள் நிறக் குறிஞ்சியும் உண்டு என்பதால் அந்த பொண் வண்ண நிறத்தின் பெயரால் பொன்வண்ணக் குறிஞ்சி ராகம் அழைக்கப்படுகின்றது.

கோட்டைச் சுவர்களால் சூழப்பட்ட காவல் நகரங்களில் காவல் பணிக்கு கானவர் எனப்படும் மலைவாழ் மக்களை அவர்களின் உடல் வலிமைக்காகவும் விழித்திருக்கும் இயல்புக்காகவும் மன்னர்கள் காவல் பணியில் அமர்த்துவது உண்டு, அக்காவலர்கள் தங்கள் பிறந்த நிலமான குறிஞ்சி நிலத்தின் பண்ணை இசைத்து இரவு நேரங்களில் விழித்திருந்து காவல் காப்பது வழக்கம்.

நற்றிணை 255 வது பாடலில்

உருகெழு மரபின் குறிஞ்சி பாடி
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்


என்ற வரிகள் மலங்காடுகளைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் குறிஞ்சி பண பாடியபடி காவல் பணியில் ஈடுபட்டதனைச் சுட்டிக் காட்டுகின்றது. சங்க காலம் முதல் இன்று வரை இப்பழக்கம் இருந்து வருகிறது

மலைக்கள்ளரும் காவலரும்


மதுரை வரலாறு பற்றிக் கூறும் காவல் கோட்டம் என்ற நூல் மலை கள்ளர்களை திருமலை நாயக்கர் மதுரையின் நகர் காவல் பணிக்கு நியமித்தார் என்ற தகவலைப் பதிவு செய்துள்ளது. மதுரை வீரன் கதையில் அழகர் மலை கள்ளர்களைப் பிடிக்கும் பொறுப்பை திருமலை நாயக்கர் மதுரை வீரனிடம் ஒப்படைத்த தகவலும் பதிவாகி உள்ளது. ஆங்கிலேயர் போலிஸ்காரர்களை அறிமுகம் செய்த போது இந்த ஊர்க்காவலர் முறை அழிந்து போனது.

இன்றைய காலகட்டத்தில் இமய மலையின் ஒரு பகுதியான நேபாளத்தில் வாழும் கூர்க்கா இனத்தைச் சேர்ந்த ஆண்கள் பல்வேறு நகரங்களில் காவல் பணி மேற்கொண்டு உள்ளனர். ஆக அன்று தொட்டு இன்று வரை மலைவாழ் மக்கள் மாநகர் காவலில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்து வருவதை உணரலாம்.

குறிஞ்சிச் சுற்றுலா


தமிழக அரசும் கேரள அரசும் உள்நாட்டவர் மற்றும் வெளிநாட்டவர் வந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய மலரான குறிஞ்சியை பார்த்து ரசிக்க ஏராளமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் இருந்து தமிழக அரசின் ஒரு மாத கால குறிஞ்சி விழா தொடங்குகின்றது. இதற்காக தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கேரளாவில் இதைவிட அதிகமாக சுற்றுலாத்துறை திட்டமிட்திருந்தது. மூனாறு இடுக்கி போன்ற மலைபகுதிகளில் பூத்திருக்கும் நீலக் குறிஞ்சி மலர்கலைச் சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து ரசிப்பதற்கு பல திட்டங்களை தீட்டி இருந்தது. இப்போது வந்த பெரு வெள்ளம் இத்திட்டங்களை தற்காலிகமாக செயல்பட விடாமல் நிறுத்தி வைத்துள்ளது.

அக்கரைக்காட்டின் ஆழகான தோற்றம்


கொடைக்கானலுக்கும் கேரளாவுக்கும் இடையில் எல்லைப் பகுதியில் அமைந்த அக்கறை காடு என்ற மலைப் பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் குறிஞ்சி மலர் பூத்திருப்பது காணக் கண்கொள்ளாக் காட்சியாகும். காவல் வனப்பகுதிக்குள் சென்று இம் மலர்களை கண்டு ரசிக்க விரும்புவோர் சுமார் ஐந்து கிலோமீட்டர் மலையின் மீது ஏறிச் செல்ல வேண்டியிருக்கும்.

தபால் தலை

தமிழக அரசு குறிஞ்சி மலரை சிறப்பிக்கும் வகையில் தபால்தலை வெளியிட்டுள்ளது தரும் இப்போ கல் குறிஞ்சி மலை மலர் தெய்வ அம்சம் பொருந்தியது என்பதால் என்பதாகக் கருதி மலைவாழ் மக்கள்

இன்றைய காலத்தில் குறிஞ்சி காதல் கதைகள்

சங்க இலக்கியத்தில் குறிஞ்சித் திணைப் பாடல்கள் கூடலும் கூடல் சார்ந்த கருத்துக்களையும் உள்ளடக்கமாகக் கொண்திருப்பத்தை போல இக்காலத்திலும் குறிஞ்சியின் பெயரால் பல புகழ் பெற்ற காதல் கதைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்துள்ளன.

 
அரவிந்தனும் துளசியும் ஆத்மார்த்தமாக காதலிக்கும் நா பார்த்தசாரதியின் ‘’குறிஞ்சிமலர்’’ ஒரு காலத்திய இளைஞர்களின் ஆதர்சக் காதல் காவியம் ஆகும். ராஜம் கிருஷ்ணம் அவர்கள் நீலமலையின் படுகர்கள் வாழ்க்கை பற்றி எழுதிய ‘’குறிஞ்சி தேன்’’ நாவல் நீலகிரி மலைவாழ் மக்களின் வாழ்க்கையை விளக்கும் அருமையான நாவல் ஆகும். இது ஆங்கிலத்தில் When the Kurinji blooms என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

குறிஞ்சி ஃப்ளவர்ஸ் [kurinji flowers] என்ற பெயரில் கிளாரா பிளைன் [Clare Flynn] என்ற நாவலாசிரியை 1940 இல் எழுதிய நாவல் சோகக் காதல் சித்திரமாகும். இது இஅவரது இரண்டாவது படைப்பாகும். இது இந்தியாவில் அப்போது வாழ்ந்த வெள்ளைக்காரக் காதலின் சோக முடிவை விவரிக்கிறது.

மலையெங்கும் குறிஞ்சி மலர்கள் பறந்து விரிந்து மலர்ந்திருக்கும் அழகை இப்போதே போய் பார்த்துவிட வேண்டும் இல்லைஎன்றால் இன்னும் ஒரு மாமாங்கம் அதாவது பன்னிரெண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும். இப்போது மண்ணில் விழும் விதைகள் வளர்ந்து செடியாகி வீர்யமாய் வளர இன்னும் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகலாம். அப்போது வேறு எந்த செடிக்கும் இடம் அளிக்காமல் தனது அதிகாரத்தை வலிமையை அம்மலை எங்கும் பரப்பி இருக்கும் .பறவைகளுக்கும் மனிதருக்கும் இடம் அளிக்கும் ஆலமரம் தன் இனம் வளர்வதற்கு மட்டும் இடம் அளிக்காது என்பர். சிறு குறிஞ்சியும் அப்படித்தான். அது வளரத் தொடங்கினால் மலரத் தொடங்கினால் தன இனம் எதற்கும் ஊசி குத்தும் இடம் கூட அளிக்காது. ஆலமரத்துக்கு இருக்கும் அதே ஆற்றலும் வலிமையையும் நீலக்குறிஞ்சிக்கும் உண்டு என்பதை நேரில் போய்ப் பார்த்து வாருங்கள்.
 

 


முனைவர் செ.இராஜேஸ்வரி
 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்