இளங்கோவடிகளின்
அரசியல் சிந்தனைகள்
முனைவர் நிர்மலா மோகன்
தமிழின் முதல் காப்பியம்
தமிழ்
இலக்கிய வரலாற்றில் காப்பியம் (Epic) என்ற இலக்கிய வகை (Literary
Genre) முதலில் இயற்றப் பெறவில்லை. தமிழின் பழைய இலக்கியமான சங்க
இலக்கியம் தனித்தனிப் பாடல்களாகவே உள்ளது. இன்னமும் கூர்மைப்-படுத்திக்
கூறுவது என்றால், மூன்று அடிகளால் ஆன ஐங்குறுநூறு முதலாக 782 அடிகளைக்
கொண்ட மதுரைக் காஞ்சி வரையிலான தனிப்பாடல்களே சங்க இலக்கியத்தில்
இடம்பெற்றுள்ளன. இந் நிலையைக் கடந்து காப்பியம் என்ற இலக்கிய வகையினை
முதன்முதலில் படைக்க முன்வந்தவர் இளங்கோவடிகளே ஆவார். அவர் சேர நாட்டு
அரச குடும்பத்தைச் சார்ந்தவர்; அண்ணன் செங்குட்டுவன் அரசுரிமையைப் பெற
வேண்டும் என்ற நோக்கில் – குடும்பத்தில் இருந்தால் அதற்கு இடையூறு
நேரலாம் என்று கருதி அவர் துறவறம் மேற்கொண்டவர். பிறப்பால் சேர நாட்டு
அரச குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும், அவர் சோழ மன்னரையும்
பாண்டிய மன்னரையும் தக்க மதிப்புடன் தாம் இயற்றிய காப்பியத்தில்
குறிப்பிட்டுள்ளார்; சேர நாட்டு ஊர்களையும் ஆறுகளையும் போற்றிப்
பாடியுள்ளது போலவே சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் உள்ள ஊர்களையும்
ஆறுகளையும் ஒத்த உணர்வோடு போற்றிப் பாடியுள்ளார். இது இளங்கோவடிகளின்
படைப்பாளுமையில் காணப்பெற்ற ஒரு தனிப்பெரும் சிறப்பு பண்பாகும்.
ஒற்றுமைக் காப்பியம்
தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் பாயிரத்தில் ‘தமிழ் கூறு
நல்லுலகம்’ என்ற அரிய தொடர் இடம்பெற்றுள்ளது. 2381 பாடல்களைக் கொண்ட
சங்க இலக்கியத்தில் இத்தகைய ஒரு சிறந்த குறிப்பு காணப்பெறாதது
நோக்கத்தக்கது. மேலும், சங்க காலத்தில் சேர சோழ பாண்டியர் என்ற முடியுடை
மூவேந்தரும் ஒற்றுமையுடன் ஒருவரோடு ஒருவர் ஒன்றிப் பழகிய காட்சியும்
மூன்றாம் பிறை போல் அரிய ஒன்றாகவே விளங்கியது. புறநானூற்றின் 367-ஆம்
பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில் முனைவர் இர.பிரபாகரன்,
“புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களில், இந்த ஒரு பாடல் மட்டுமே
மூவேந்தர்களும் ஒருங்கிருந்த பொழுது பாடப்பட்ட பாடல்” (புறநானூறு:
மூலமும் எளிய உரையும், பகுதி-2, ப.322) என மொழிவது நோக்கத்தக்கது.
பேராசிரியர் மு.வரதராசனார் குறிப்பிடுவது போல, “சிலப்பதிகார ஆசிரியரே
முதல்முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று,
தமிழ்நாட்டின் பல பகுதிகளையும் ஒரு நூலில் பாராட்டியுள்ளார். அவர்
இயற்றிய காப்பியமும் அதற்கு ஏற்றதாக அமைந்தது. காப்பியத் தலைவி
கண்ணகியின் பிறப்பிடம் சோழ நாடு; அவள் புகுந்து துன்புற்றது பாண்டிய
நாடு; அவள் முடிவில் சேர்ந்ததும் அவள் புகழ் பரவக் காரணமாக இருந்ததும்
சேர நாடு. ஆகவே காப்பியப் புலவர் மூன்று நாடுகளையும் பாராட்டவும் மூன்று
அரசர்களைப் புகழவும் இடந்தந்தது காப்பியத்தின் கதை நிகழ்ச்சி” (தமிழ்
இலக்கிய வரலாறு, ப.80).
ஓர் அரசியல் கோட்பாடு (Political Ideology) என்ற நோக்கில்
இளங்கோவடிகளிடம் மேலோங்கி நின்ற ‘ஒன்றுபட்ட தமிழகம்’ என்ற இக்
கருத்தியல் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இதனைக் கருத்தில் கொண்டே
அறிஞர்கள் ‘ஒற்றுமைக் காப்பியம்’ என்ற சிறப்புப் பெயரால்
சிலப்பதிக்-காரத்தினைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!
சிலப்பதிகாரத்தின் பாவிகமாகக் கருதத்தக்க அடிப்படையான வாழ்வியல்
உண்மைகள் – முதன்மையான விழுமியங்கள் – மூன்று. அவையாவன:
1. அ(i)ரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்.
2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
‘இவை மூன்றும் சூழ்வினைச் சிலம்பு காரணமாக நிகழ்வதால், சிலப்பதிகாரம்
என்னும் பெயரால் ஒரு காப்பியத்தை நாம் இயற்றுவோம்’ என்கிறார் இளங்கோ
அடிகள். அப்போது, ‘இவ் வரலாறு முடியுடை வேந்தர்கள் மூவரையும்
உட்படுத்தியது. ஆதலால் நீங்களே அதனை இயற்றுவீர்களாக’ என அடிகளிடம்
வேண்டிக் கொள்கிறார் சாத்தனார்.
சிலப்பதிகாரத்தின் பாவிகம் மூன்றனுள் முதலாவதாக வரும் ‘அ(i)ரசியல்
பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ (ஆட்சி முறையில் அரசன் சிறிது தவறினும்
அறக் கடவுள் அவனுக்கு எமனாகும்) என்னும் கருத்தியல் முதன்மையானது;
அன்றைய முடியாட்சிக் காலத்திற்கு மட்டுமன்றி, இன்றைய மக்களாட்சிக்
காலத்திற்கும் பொருந்தி வருவது. இங்கே ‘அரசன்’ என்ற சொல்லினை
வெளிப்படையாகக் கையாளாமல் ‘அரசியல் பிழைத்தோர்க்கு’ எனப் பொதுப்படக்
கூறியிருப்பது, இளங்கோவடிகளின் தெளிந்த, எக்காலத்திற்கும் ஏற்ற அரசியல்
சிந்தனைக்குக் கட்டியம் கூறுவதாகும்.
‘அரச குடிப் பிறத்தல் தொழத்தக்கது அன்று!’
வஞ்சிக் காண்டத்தின் இரண்டாவது காதை காட்சிக் காதை. செங்குட்டுவன் அரசி
வேண்மாளுடனும் இளவல் இளங்கோவடிகளுடனும் மலைவளம் காணச் செல்கிறான்;
பேரியாற்றங்கரையில் தன் பரிவாரங்களுடன் ஒன்று கூடித் தங்கி இருக்கிறான்.
அப்போது குறவர்கள் காணிக்கைப் பொருள்களுடன் வந்து செங்குட்டுவனைக்
காண்கின்றனர்; அரசனை வாழ்த்தி, கண்ணகி தன் கணவனோடு சேர்ந்து வானுலகம்
சென்ற வியத்தகு காட்சியினை விவரிக்கின்றனர். அவ்விடத்தில் இருந்த
சாத்தனார் கணவன் கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்டு கணவன் கோவலன் இறந்தது,
பாண்டியன் முன்னர்க் கண்ணகி ஒற்றைச் சிலம்புடன் சென்று வழக்காடியது, தன்
சிலம்பினை உடைத்து பாண்டியனுக்கு உண்மையை உணர்த்தியது. பாண்டிமாதேவியின்
முன்னர் வஞ்சினம் உரைத்தது, மதுரை மாநகரைச் சுட்டெரித்தது, தவறான
தீர்ப்பு அளித்த பாண்டிய மன்னன் ‘யானோ அரசன், யானே கள்வன்’ எனச் சொல்லி
மயங்கி அரியணையில் இருந்து கீழே வீழ்ந்து உயிர் நீத்தது, அவனது உயிரைத்
தேடிச் செல்பவள் போல பாண்டிமாதேவியும் மன்னனுடன் ஒருசேர உயிர் துறந்தது
முதலான கண்ணகிக்கு நேர்ந்த அடுக்கடுக்கான துயர நிகழ்வுகளை எல்லாம்
முழுமையாகச் செங்குட்டுவனிடம் கூறுகிறார்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு நேர்ந்த தீங்கினைக் கேட்ட சேர மன்னன்
ஆகிய செங்குட்டுவன், ‘பாண்டியன் நீதிமுறை தவறினான் என்ற பழிச்சொல் எம்
போன்ற அரசருடைய செவியில் சென்று விழுவதற்கு முன்பே தான் உயிர் துறந்த
செய்தி சென்று சேரட்டும் என்பது போலப் பாண்டியன் தன் உயிரைத்
துறந்திருக்கிறான். ஊழ்வினையால் வளைந்த பாண்டியனுடைய கோலை அவன்
உடலினின்றும் பிரிந்த உயிர் நிமிர்த்திச் செங்கோல் ஆக்கிவிட்டது’ என
வருந்திக் கூறுகிறான். மேலும், “நாட்டில் மழை பெய்யாது வளங்குன்றினால்
நாட்டை ஆளும் அரனுக்கு மிகுந்த அச்சம். ஏதேனும் ஒன்றினால் மக்கள்
துயருற்று வருந்தினாலோ அதனால் அரசனுக்கு அதனினும் பெரும் அச்சம்.
குடிமக்களைக் காக்கும் தொழிலை மேற்கொண்டு, கொடுங்கோன்மைக்கு அஞ்சி,
மக்களைக் காத்து வரும் நல்ல அரச குடியில் பிறத்தல் என்பது துன்பத்தைத்
தருவதே அல்லாமல் போற்றத்தக்கது அன்று” என்று சாத்தானாரிடம் கூறுகிறான்.
“மழை வளம் கரப்பின் வான்பேர் அச்சம்;
பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்;
குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல்” (25: 100-104)
என்னும் செங்குட்டுவனின் கூற்று அவனது ஆழ்ந்த பட்டறிவில் பிறந்த அனுபவ
உண்மை ஆகும்.
அரசியல் துறைக்கு அரசியரின் பங்களிப்பு
சிலப்பதிகாரத்தில் வருகை தரும் அரசியர் இருவர். ஒருவர், பாண்டியன் மனைவி
கோப்பெருந்தேவி; மற்றவர், சேரன் செங்குட்டுவனின் மனைவி வேண்மாள்.
வஞ்சிக் காண்டத்தின் காட்சிக் காதையில் வரும் ஓர் அரிய குறிப்பு,
அரசியல் அடிப்படையில் மட்டுமன்றி, பெண்ணிய நோக்கிலும் மிகவும்
இன்றியமையாததாகும். கண்ணகியின் முழு வரலாற்றையும், பாண்டியன்
முதலானோர்க்கு உற்ற துன்பத்தையும் சாத்தனார் வாயிலாகத் தெளிவாக்
கேட்டறிந்த செங்குட்டுவன், அருகில் இருந்த தன் தேவியைப் பார்த்து,
“அழகிய நெற்றியை உடையவளே! கணவன் இறந்ததும் உடனே உயிர்விட்ட ஒப்பற்ற
பாண்டிமாதேவி, கணவனை இழந்து சீற்றத்தோடு இங்கு வந்த கண்ணகி ஆகிய
இவ்விருவருள்ளும் வியக்கத்தக்க சிறப்பினை உடையோர் யார்?” என்று
கேட்கிறான்.
“பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி தன் கணவன் அடைந்த துன்பத்தைக்
காணப்பொறாது அவனுடன் உயிர் துறந்தாள். வானகம் புகுந்த அப்பெண்ணரசி
அங்குப் பெருஞ்சிறப்பினைப் பெறுவாளாக! அவள் நிலை அவ்வாறாகுக! நாம் நமது
அகன்ற நாட்டினை வந்தடைந்த இப் பத்தினிக் கடவுளைப் போற்றி வழிபடுதல்
வேண்டும்” என்று செங்குட்டுவனின் வினாவிற்கு நனி சிறந்த விடையினை
அளிக்கிறாள் சேரமாதேவி வேண்மாள்,
“காதரன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு உறுக வானகத்து
அத்திறம் நிற்க; நம் அகல்நாடு அடைந்தஇப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்” (25: 111-114)
சேரமாதேவி வேண்மாளின் கூற்று, ‘பெண்ணறிவு என்பது பெரும் மேதைமைத்தே’
என்பதைப் பறைசாற்றுவதாகும்; இன்னும் ஒரு படி மேலாக, ஒரு பெண்ணின் – தன்
துணைவியின் – கருத்துக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொண்ட மன்னவன்
செங்குட்டுவனின் பெருந்தன்மையையும் புலப்படுத்துவதாகும்.
‘தேரா மன்னா!’ (ஆராய்ந்து தெளியாத மன்னவனே!) என்று கண்ணகி விளித்ததைப்
பொறுத்துக் கொண்டு, ‘தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி’ (தேன் போன்ற இனிய
மொழியாளே! நீ உரைத்தவை உண்மையைக் கண்டறியத் துணைசெய்யும் நல்ல சொற்கள்!)
என உளமாரைப் பாராட்டியதோடு, உண்மை உணர்ந்ததும், ‘யானோ அரசன்? யானே
கள்வன்! மன்பதை காக்கும் தென்புலம் காவல், என்முதல் பிழைத்தது; கெடுகஎன்
ஆயுள்!’ (பொற்கொல்லனுடைய பொய்உரையைக் கேட்டுத் தவறிய நானும் ஓர் அரசனா?
இல்லை! கோவலன் கள்வன் அல்லன், யானே கள்வன்!’) எனக் கூறி தனக்குத் தானே
தண்டனையும் தந்து, மயங்கி அரியணையில் இருந்து கீழே விழுந்து உயிரை
நீத்த பாண்டிய மன்னனின் சொல்லும் செயலும் உலக அரசியல் வரலாற்றில்
காண்பதற்கு அரியவை ஆகும்.
செங்குட்டுவனின் வஞ்சினம் உணர்த்தும் அரசியல்
சிந்தனை
‘தென்தமிழ்நாட்டை ஆளும் மன்னர் போர் செய்து வடவரை வென்று, இமயத்தில்
வில், புலி, கயல் ஆகிய சின்னங்களைப் பொறித்த காலத்தில் எம்மைப் போன்ற
வலிமை மிக்க முடிமன்னர் வடநாட்டில் இல்லை போலும்!’ என வடநாட்டு
மன்னர்களான கனக விசயர் எள்ளல் குறிப்பு தோன்றக் கூறினர். இதனை இமயத்தில்
இருந்து சேரநாடு வந்த முனிவரின் வாயிலாகக் கேள்விப்பட்ட செங்குட்டுவன்,
பெருமையும் ஆற்றலும் மிக்க தனது படைத் தலைவர்களை எல்லாம் பார்த்துக்
கூறிய வஞ்சினம் வருமாறு:
“ஆரிய அரசர்களின் இப் பழிச் சொற்களை நாம் பொறுத்துக் கொண்டிருப்பின்,
அப்பழிச்சொல், எமக்கேயன்றி, எம்மை ஒத்த சோழ பாண்டியருக்கும்
இகழ்ச்சியைத் தருவதாகும். ஆதலால் வடநாட்டு மன்னர்களான கனக விசயருடைய
முடியணிந்த தலையின் மீது, பத்தினிக் கடவுளின் உருவம் எழுதுவதற்கு ஒரு
கல்லை ஏற்றிக் கொண்டு வராது என கூர்வாள் வறிதே திரும்புமாயின், நான்
வீரக்கழல் அணிந்து கொடிய போர்க் கோலத்துடன் சென்று பகைவர்களை அச்சத்தால்
நடுங்கச் செய்யாமல், பயன் மிகுந்த நம் நாட்டில் உள்ள குடிமக்களையே
நடுங்கச் செய்த கொடுங்கோலன் ஆவேன்!”
“வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக்
கடவுள் எழுதஓர் கல்கொண்டு அல்லது
வறிது மீளும்என் வாய்வாள் ஆகில்,
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயம்கெழு வைப்பில்
குடிநடுக் குறூஉம் கோலேன் ஆக!” (26: 13-18)
‘குடிநடுக்கு உறூஉம் கோலேன்’ (குடிமக்களையே அச்சத்தால் நடுங்கச் செய்த
கொடுங்கோலன்) என்னும் செங்குட்டுவனின் வஞ்சின மொழி, உடன்பாட்டு முறையால்
குடிமக்களின் நலத்தினைப் பேணிக் காக்கும் மன்னனது செங்கோன்மையின்
இன்றியமையாமையை உணர்த்துவதாகும்.
பிற அரசியல் சிந்தனைகள்
1. புகார்க் காண்டத்தின் தொடக்கத்தில் திங்கள், ஞாயிறு, மாமழை,
பூம்புகார் ஆகியவற்றைச் சோழ மன்னது வெண்கொற்றக் குடை, ஆணைச் சக்கரம்,
அருளிச்செயல், குலமரபு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி வாழ்த்தித்
தொடங்கும் புதிய மரபினை இளங்கோவடிகள் தோற்றுவித்துள்ளார். புகார்க்
காண்டத்தில் மட்டுமன்றி, சிலப்பதிகாரம் முழுவதும் அரச வாழ்த்து
காணப்படுவது குறிப்பிடத்தக்கது. “எத்தொழிலைச் செய்தாலும், எவ்வகை
விழாவிலும், எத்தகைய ஆடல் பாடலிலும், வேந்தனை வாழ்த்தி முடிக்கும் கடமை
அக்காலத்து நாட்டன்பாக இருந்தது காணலாம்” (இளங்கோவடிகள், ப.36) என்பர்
பேராசிரியர் மு.வரதராசனார்.
2. ஐம்பெரும் குழு என்னும் அரசியற் சுற்றம் பற்றிய சிந்தனை முதன்முதலில்
சிலப்பதிகாரத்திலேயே காணப்பெறுகின்றது.
“ஆசான், பெருங்கணி, அருந்திறல் அமைச்சர்,
தானைத் தலைவர் தம்மொடு குழீஇ” (26: 3-4)
என்னும் சிலப்பதிகாரத் தொடர்கள் இவ் வகையில் குறிப்பிடத்தக்கன.
ஐம்பெருங்குழுவினர் இன்னார் என்பதைச் சிலப்பதிகார உரையால் அறிய
முடிகின்றது.
3. ஐம்பெருங்குழு போன்று எண் பேராயம் என்பதும் ஒரு புதிய அரசியல்
சிந்தனையே. இதனையும் ஓர் அரசியல் சுற்றமாகவே கருதுவர் அறிஞர்.
இளங்கோவடிகள் எண் பேராயத்தைக் குறித்து விளக்கம் எதுவும் கூறவில்லை.
எனினும்,
“ அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்”
(3:126)
“ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமும்,
அரச குமரரும், பரத குமரரும்,
கவர்பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர்,
இவர்பரித் தேரினர் இயைந்து ஒருங்குஈண்டி” (5: 157-160)
“ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்”
(26: 38)
எனச் சிலப்பதிகாரத்தில் பயின்று வரும் அடிகள் இங்கே நினைவுகூரத் தக்கன.
4. பண்டைத் தமிழ் வேந்தர்களுக்கு அரியணை இருந்தது என்பதனைச்
சிலப்பதிகாரமே முதன்முதலில் குறிப்பிடுகின்றது. “அரிமான் ஏந்திய,
முறைமுதல் கட்டில் இறைமகன் ஏற” (26:1-2) எனச் செங்குட்டுவன்
தொன்றுதொட்டுத் தன் முன்னோர் வீற்றிருந்து, ஆட்சி புரிந்த
சிறப்பினையுடைய அரியணையில் ஏறி அமர்ந்தான் எனச் சிலப்பதிகார வஞ்சிக்
காண்டத்தில் கூறப்பெறுகின்றது.
முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரிய ஒரு காப்பியத்தைத் தமிழகத்தின்
பொதுக் காப்பியமாகவே படைத்துத் தந்திருப்பது இளங்கோவடிகளின்
தனிச்சிறப்பு ஆகும். இவ் வகையில் தமிழகத்தின் ஒற்றுமைக்குக் கால்கோள்
இட்ட தமிழ்ச் சான்றோராக இளங்கோவடிகள் சிறந்து விளங்குகிறார். ‘அரசியல்
பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பன போன்ற அவரது அரசியல் சிந்தனைகள்
எக்காலத்திற்கும் பொருந்துவனவாகத் திகழ்கின்றன. சுருங்கக் கூறின், அற
நெறி தவறாமல் அதனை உயிரெனப் போற்றி ஆட்சிபுரிவதும், குடிமக்கள் நலம்
பேணிக் காத்தலுமே இளங்கோவடிகள் போற்றும் அரசியலின் இரு தலையாய பண்புகள்
ஆகும்.
முனைவர்
நிர்மலா மோகன்
தகைசால் பேராசிரியர் (பணி நிறைவு)
தமிழியற்புலம்
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
காந்திகிராமம் - 624302
திண்டுக்கல் மாவட்டம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|