எம்
ஜி ஆர் ஒரு ஜீவ நதி - 14
முனைவர் செ.இராஜேஸ்வரி
தாயின் பிரிவால் சேய் பட்ட வேதனை :
எம்ஜிஆர்
இலங்கை நாட்டில் கண்டி நகரில் வைகாசி விசாகத்தன்று முழுநிலவு நாளில்
பிறந்தவர் என்பதால் அவருக்கு அவர் பெற்றோர் சந்திரன் என்ற பெயர்
வரும்படி இராமச்சந்திரன் எனப் பெயர் வைத்தனர். குழந்தை இராமச்சந்திரநின்
அழகைக் கண்டு உள்ளத்தைப் பறி கொடுத்த தெரு மக்கள் ராமுச்சி கிருஷ்ணன்
என்று அழைப்பார்கள். பிறகு ஒரு நாள் கதிர்காமர் கோவிலுக்கு போய்
குழந்தைக்கு தலைமுடி எடுத்து விட்டு வந்த பிறகு அருகிலிருந்த
வீட்டுக்காரர்கள் ‘முருகா முருகா’ என்று அழைத்தார்கள். எம்.ஜி.ஆர் தன
குழந்தைப் பருவத்தில் இவ்வாறு தெருவினரின் செல்லக் குழந்தையாக மூன்று
வயது வரை இருந்து வநதார்.
கண்டியில் ஒரு முறை சகாய மாதா கோயிலில் நடக்கும் இயேசு பெருமான்
நாடகத்துக்கு குழந்தை இயேசுவாக நடிக்க எம் ஜி ஆரை அவர் தாயாரிடம் வந்து
கேட்டனர். ஆனால் சத்யாம்மையார் குழந்தைக்கு கண்பட்டு விடும் என்று தர
மறுத்துவிட்டார். ஆனால் காலத்தின் கோலம் சில வருடங்கள் கழித்து அவரி
நாடகத்தில் நடிக்க தன பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்.
தந்தையின் மரணத்தால் தாயகம் திரும்பினர்
ஒருநாள் திடீரென எம் ஜி ஆரின் தந்தையார் கோபி சார் மாரடைப்பால்
காலமானார். மூன்று நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விட்டனர். அவர் நினைவாக
அந்த தெருவுக்கு அவர் பெயரை சூட்டினர். தெருக்காரர்கள் சத்யபாமா
அம்மையாரிடம் இங்கேயே இருங்கள் என்று சொல்லியும் அவர் கேட்காமல் அவர்
அதை மறுத்துவிட்டு தன் தாய் சுற்றத்தினர் தன் தாய் நாடான இந்தியாவுக்கு
திரும்ப விரும்பினார் அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் தங்களால் ஆன
தொகையை சேகரித்து அவருக்கு பயணச் செலவுக்கு கணிசமான தொகையை கொடுத்த போது
அதனை வாங்கவும் மறுத்துவிட்டார். தனது எட்டு பவுன் நகையை விற்று
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பலில் புறப்பட்டார்.
சொந்த மண்ணில் ஆதரிப்பார் யாருமில்லை
சத்யபாமா அம்மையார் தன் குழந்தைகளுடன் இந்தியா வந்து சேர்ந்தார்
கேரளாவுக்குப் போய் வடவனூரில் உள்ள சகோதரர்களையும் உறவினர்களையும்
சந்தித்து தன் நிலையை எடுத்துக் கூறியபோது அவர்கள் யாரும் உதவுகின்ற
மனநிலையில் இல்லை. பிறகு மருதூருக்குச் சென்றார். அங்கும்
சத்யபாமாவுக்கு உதவ மறுத்துவிட்டனர். ஏனென்றால் இங்கு மேஜிஸ்ட்ரேட் ஆக
இருந்த காலத்தில் எம்ஜிஆரின் தந்தை கோபாலமேனன் ஒரு ஏழை பிராமண விதவைக்கு
சமூகத்தின் எதிர்ப்பை மீறி சட்டப்படி நீதி வழங்கினார். அதனால்
பாதிக்கப்பட்டோர் கூட்டம் நீதியைத் திரித்து பேசி அவரை அந்த ஊரை விட்டு
வெளியேறும்படி செய்து விட்டது. இப்போது அவர் இறந்துவிட்டாலும் அவர்
குடும்பத்திற்கு உதவி செய்வது ஊரை பகைத்துக் கொள்வதாகும் என்று கருதி
யாரும் உதவ மறுத்துவிட்டனர்.
ராமச்சந்திரனை விற்று விடு
சத்யா அம்மையாரின் மீது இரக்கப்பட்ட சிலர் இந்த கைக்குழந்தையை
யாரிடமாவது விற்று விடு பெரிய குழந்தைகளை வைத்துக் கொண்டு ஏதேனும் வேலை
செய்து பிழைத்து கொள் என்று யோசனைகளைக் கூறினர். ஆனால் சத்தியபாமா
கைக்குழந்தையாக இருந்த எம்ஜிஆரை விற்க மறுத்து விட்டார் ‘’ஆறாவது ஆண்
பிறந்தால் ஆனைகட்டி அரசாளும்’’ என்று பலமொழியைச். சொல்லி ‘என் பிள்ளை
அரசாளப் பிறந்தவன்’ அவனை தானே வளர்ப்பேன் என்றார். இதற்கிடையே இன்னொரு
பெண் குழந்தையும் இறந்து விட்டது. மிஞ்சி இருந்த இரண்டு ஆண் குழந்தைகளை
வைத்துக்கொண்டு பரிதவித்த சத்யபாமா பிழைப்புக்காக தமிழகத்தில் இருந்த
கும்பகோணம் என்ற ஊருக்கு தன் உறவினறி பார்த்து உதவி கேட்க நினைத்தார்.
‘என் இரண்டு பிள்ளைகளும் ராமர் லட்சுமணர் போல இருந்து என்னை
காப்பாற்றுவார்கள் எங்கள் குலத்தின் பெயர் விளங்க செய்வார்கள்’ என்று
தன்னை வெறுத்த உறவினர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.
சத்தியவதி நிலையம்
திரைப்படங்களில் ஓரளவு வருமானம் கிடைக்க ஆரம்பித்ததும் சக்கரபாணியும்
எம்ஜிஆரும் ஓரளவுக்கு வசதியாக வாழா ஆரம்பித்தனர். அப்போது எம் ஜி ஆர்
செய்த சபதத்தை நினைத்து தன் தாயாரை வெறுத்து ஒதுக்கிய உறவினர்கள்
வாழ்ந்த ஊரில் தன் தாயார் பெயரால் அவர் வாழ்ந்த வீட்டைச் செப்பனிட்டு
அதற்கு தன் தாயார் பெயரால் ‘சத்தியவதி நிலையம்’ என்று பெயர் சூட்டினார்.
அங்கு இருந்த கிணற்றில் பதிக்கப்பட்டிருந்த கற்களில் இப்போதும் இந்த
பெயர் வெட்டப்பட்டு இருப்பதைக் காணலாம்.
சத்தியவதி நிலையத்தில் தனது தாயாரை சீரும் சிறப்புமாக இருக்க வைத்தார்.
தாயாரின் உதவிக்காக ஒரு பெண்னைத் துணைக்கு தங்க வைத்தார். சிறிது காலம்
தான் பிறந்த ஊரில் கம்பீரமாக உலா வந்த சத்யபாமா அம்மையார். பின்னர் தன்
மகன்களையும் பேரக் குழந்தைகளையும் பிரிந்திருக்க இயலாமல் சென்னைக்குத்
திரும்பி வந்து விட்டார் இன்று அந்த வீட்டில் அவர்களின் தூரத்து
உறவினரான செந்தாமரை தம்புராட்டி வாழ்ந்து வருகிறார் அவர்கள் அந்த வீட்டை
விட்டு துரத்த சத்யபாமாவின் உறவினர்கள் முயன்றனர். அந்த வீட்டை அவர்கள்
அபகரித்துக் கொள்ளலாம் என்று கருதினர். அப்போது செந்தாமரை
தம்புராட்டியின் தந்தை எம்ஜிஆரை வந்து சந்தித்து தங்களுக்கு
ஏற்பட்டிருக்கும் சிக்கலான நிலைமையை எடுத்துரைத்தார் உடனே எம் ஜி ஆர்
அந்த வீட்டை அவர்கள் பெயரில் கிரையம் செய்து கொடுத்தார் கிரயப்பத்திரம்
இருந்ததால் சத்யபாமாவின் உறவினர்களால் இவர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை
இப்பொழுது செந்தாமரை தமிழ்நாட்டிற்கு 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது
அவருடைய பேரக்குழந்தைகள் சத்யவதி நிலையத்தில் வசிக்கின்றனர்.
தாயின் சபதத்தை நிறைவேற்றிய தனயன் எம் ஜி ஆர்
தன் தாயை ஊரை விட்டு விரட்டிய அவர்களின் சொந்த ஊரில் அவர்கள் பெயரால்
மீண்டும் வீடு கட்டி அவர்களின் பெயரை நிலைக்க வைத்தவர் எம்ஜிஆர்.
அன்னையின் சபதத்தை நிறைவேற்றினார். தன் தாயை அவமானப்படுத்திய உறவினர்கள்
முன்பு அவரைச் சொந்த வீட்டுக்காரராக கம்பீரமாக நடமாட வைத்தார். தாயின்
ஆசியைப் பெற்றார். இச் சம்பவம் ஒரு சினிமா கதை போலத் தோன்றினாலும்
எம்ஜிஆரின் நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மைஸ் சம்பவம் ஆகும்.
ஆங்கிலப் பயிற்சி பெற்ற எம் ஜி ஆர்
எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணி அவர் தந்தை கோபி சார் தலைமை ஆசிரியராக
இருந்த பள்ளியில் ஆரம்பக் கலவி பயின்றதனால் அவருக்கு அடிப்படை ஆங்கில
அறிவு சிறப்பாக இருந்தது. பின்பு கும்பகோணம் வந்த எம்ஜிஆரின் தாயார் தன்
பிள்ளைகளை அங்கிருந்த ஆனையடி பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார். அங்கு
சக்கரபாணி 5 , 6 ,7 ஆம் வகுப்புகளை படித்தார். எம்ஜிஆர் ஒன்று முதல்
மூன்றாம் வகுப்பு வரை படித்தார். அங்கு வாழ்ந்த காலத்தில் சக்கரபாணி
ஆங்கிலத்தில் நன்றாக எழுதவும் பேசவும் ஆங்கில சினிமா பாடல்களை
அபிநயத்தோடு பாடவும் கற்றுக் கொண்டார்.. ஆனால் எம்ஜிஆருக்கு தமிழ்
மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும்.
எம் ஜி ஆர் பிற்காலத்தில் சினிமாவில் வாய்ப்பு இல்லை என அவர் மனம்
வெறுத்து போய் பட்டாளத்தில் சேர்ந்துவிடும் முயற்சியில் இறங்கினார்.
அங்கு போனால் ஆங்கிலம் கற்றுக் தெரிந்திருக்க வேண்டுமே என்ற
காரணத்திற்காக ஒரு ஆசிரியரை வைத்து மூன்று மாதம் ஆங்கிலத்தில் சிறப்பாக
பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற பயிற்சி பெற்றார். அதனால் அவரும்
ஆங்கில அறிவு பெற்றவர் ஆனார். ஒருமுறை கமலஹாசன் தனது பேட்டியில்
‘எம்ஜிஆர் சிறப்பாக ஆங்கிலம் பேசுவார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் டில்லிக்கு பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் களைச் சந்திக்க கெ.
ஏ. கிருஷ்ணசாமி, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்களை அழைத்துக்கொண்டு
போகும்போது தான் சொல்ல நினைத்ததை அவர்கள் சரியாகச் சொல்கிறார்களா என்பதை
கவனித்து அது சரியாக சொல்லப்படவில்லை என்றால் அதை திருத்தி மாற்றி
சொல்லும்படி அவர்களிடம் எடுத்துரைப்பார்.
ஆங்கிலத்தை திருத்திய எம் ஜி ஆர்
எம் ஜி ஆர் தனது குழுவினருடன் ஒரு முறை மாஸ்கோ, பிரான்ஸ், இங்கிலாந்து
போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது கூட அழைத்துச் சென்ற
லதாவிடம் தனது மொழிபெயர்ப்பாளராக இருக்கும் படி வேண்டிக் கொண்டார்.
அப்போது அவர் என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று சொன்னதும்
லதா beloved brothers என்றார். ஆனால் எம்ஜிஆர் அவரிடம் சரியாக சொல்
என்றது பிறகு தான் விட்டுவிட்ட வார்த்தைகளை கருத்தில் கொண்டு my blood
related brothers என்றார். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் எம்ஜிஆர்
ஆங்கிலம் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பின்னர் தன்
சொந்த முயற்சியால் ஆங்கிலத்தில் பேசவும் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்டு
புரிந்து கொள்ளவும் தன்னை தயார்படுத்திக் கொண்டார்,
பாய்ஸ் கம்பெனியில் பசிக்கு சோறு கிடைக்கும்
கும்பகோணத்தில் எம் ஜி ஆரின் குடும்பத்தை பசி வாட்டியது. வீடு வேலை
பார்த்து வந்த தாயாரால் தன பிள்ளைகளுக்கு பசியாற்ற முடியவில்லை. தினமும்
பட்டினி கிடந்து சாவதைவிட தன் பிள்ளைகளுக்கு சாப்பாடு கிடைக்கும்
இடத்துக்கு அனுப்பிவிட வர முடிவு செய்தார். ஐந்து பிள்ளைகள் பெற்று
மூன்று பேரை இழந்துவிட்ட காரணத்தால் இந்த இருவரையும் உயிரோடு வாழ
வைப்பதில் அதிகக் கவனம் செலுத்தினார். அவர்கள் உயிர் வாழ்வதற்காக தன்னை
விட்டு பிரிந்து இருந்திருந்தாலும் நல்லதே என்ற முடிவுக்கு வந்து விட்ட
சத்யபாமா கும்பகோணத்தில் இருந்த உறவினர் வேலு நாயர் வேலை பார்த்து வந்த
நாடகக் கம்பெனியில் இந்த குழந்தைகளையும் சேர்த்துவிடும்படி அவரிடம்
வேண்டினார். ஐந்து வயதில் எம்ஜிஆரும் 12 வயதில் சக்கரபாணியும் மதுரை
பாய்ஸ் நாடக கம்பெனியில் சாப்பாட்டுக்காக வேலைக்கு சேர்ந்தனர். ஐந்து
வயதில் அம்மாவின் அன்பை புரிந்துகொள்ளும் பருவத்தில் தாயை பிரிந்த
ஏக்கம் எம் ஜி ஆரின் பிஞ்சு உள்ளத்தில் ஆழமாக பதிந்துவிட்டது.
பத்தாண்டுகளுக்கு மேல் தாயைப் பிரிந்து இருந்த எம் ஜி ஆரால் இளைஞனாக
திரும்பிய பிறகு தாயை கொஞ்சி மகிழ முடியவில்லை. அவரது தாயார் எம் ஜி
ஆரிடம் எப்போதும் கண்டிப்பாகவே இருந்தார், பதினேழு வயதுக்குப் பிறகும்
எம் ஜி ஆருக்கு தொழில் சரியாக அமையாததால் அந்த கவலை அவர் மனதை
அரித்துக்கொண்டே இருந்தது. தாயன்பை காட்ட முடியவில்லை. தினமும் படக்
கம்பெனி வாசலில் போய் நின்று வாய்ப்பு கேட்பதே அன்றாட வேலையாக இருந்தது.
தாயின் பிரிவால் ஏற்பட்ட துக்கம் அவர் மனதை விட்டு நீங்கவேயில்லை.
.
ஆறு வயதில் மேடை ஏறினார் எம் ஜி ஆர்
நாடகக் கம்பெனியில் எம்ஜிஆருக்கு நடிப்பும் பாட்டும் சொல்லித்
தரப்பட்டது. சிறுசிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கியதும் வாரம் நாலணா
சம்பளம் தரப்பட்டது. ஆறு வயதில் அவர் முதன் முதலில் மேடை ஏறிய பொது
அவருக்கு தரப்பட்ட வேடம் உதார குமாரன் வேடம் ஆகும். அதாவது அபிமன்யு
அம்பு விடும் போது கீழே விழும் அம்புகளை பொறுக்கிக் கொண்டு ஓடிவந்து
அபிமன்யுவுடன் கொடுக்கும் வேடம். வசனம் கிடையாது.
சிறுவயதில் எம் ஜி ஆர் நடித்த முதல் நாடகம்
லவகுசா நாடகத்தில் வசனத்தோடு அவருக்கு லவனாக நடிக்கும் வேடம் தரப்பட்டது.
மேடையில் முனிவரின் முன்னால் உட்காரும்போது நலவனாக இருந்த சிறுவன்
எம்ஜிஆர் தன் மேலாடை அழுக்கப்பட்டு விடக் கூடாது என்பதனால் அதனை அதனை
உயர்த்திவிட்டு உட்கார்ந்தான். இதைப் பார்த்து நாடகம் பார்க்க வந்த
பொதுமக்கள் சிரித்தனர். ஆனால் உடையில் அழுக்குப் பட்டுவிட்டால் நாடகக்
கம்பெனியில் வாத்தியார் அடிப்பார் என்பது எம்ஜிஆருக்கு தான் தெரியும்.
எனவே அச்சிறு குழந்தை அடி வாங்குவதற்கு பயந்து தன் ஆடையை பின்பக்கமாக
தூக்கிவிட்டு உட்கார்ந்துவிட்டது.
அடித்தும் குட்டியும் எம் ஜி ஆரை அழ வைத்தவர்கள்
அடுத்ததாக எம் ஜி ஆருக்கு நல்லதங்காள் நாடகத்தில் கடைசி குழந்தையாக
நடிக்கும் வேடம் அளிக்கப்பட்டது. நல்லதங்காள் கிணற்றில் வீசுவதற்கு
குழந்தையை தூக்க வரும் பொழுது கடைசிக்குழந்தை ;;நான் சாகமாட்டேன் என்று
கிணற்றில் போடாதே அம்மா’ என்று அழுதபடி மேடையில் இங்குமங்குமாக
தாயாரிடம் பிடிபடாமல் ஓட வேண்டும். அப்போது மேடையில் ஓடும் எம்ஜிஆரை
திரைக்குப் பின்னிருந்து காளி என் ரத்தினம் என்பவர் இங்கே வா என்று
அழைப்பார். அழைத்ததும் அங்கே ஓடிப்போகும் எம்ஜிஆர் தலையில் அவர் ஓங்கி
ஒரு குட்டு வைப்பார். வலி தாங்காமல் எம்ஜிஆர் அழுதுகொண்டே மேடைக்கு
வருவார். குழந்தையின் யதார்த்த நடிப்பை நினைத்து நினைத்து நாடகம்
பார்க்கும் பெண்கள் கண்ணீர் வடிப்பார்கள். பின்பு திரையில் மறுபக்கம்
இருந்து இன்னொரு நடிகர் கையசைத்து எம்ஜிஆரை அழைப்பார். இந்த குழந்தை
உடனே வேகமாக அவரிடம் ஓடியதும் அவர் முதுகில் ஒரு அடி கொடுத்து
‘அழுதுகொண்டே ஓடு’ என்று விரட்டி விடுவார். நல்லதங்காளின் கடைசி
குழந்தை மரணத்திற்கு அஞ்சி கதறி கதறி அழவேண்டும் என்பதற்காக எம் ஜி ஆரை
அடித்து அடித்து நாடக நடிகர்கள் அழ வைப்பார்கள். எதிரியின் கண்களில்
கூட கண்ணீர் வரக்கூடாது என்று நினைத்த நினைக்கும் எம்ஜிஆரின் இளமைக்கால
சோகம் விரிப்பின் பெருகும் தொகுப்பின் எஞ்சும்.
எதிரிக்கும் இறங்கும் அருள் உள்ளம்
எதிர்க்கட்சியில் இருந்து கருணாநிதி ஒருமுறை எம் ஜி ஆர் ஆட்சியை
எதிர்த்து நீதி கேட்டு நெடும் பயணம் என்ற பெயரில் சென்னையில் இருந்து
திருச்செந்தூருக்கு நடைபயணம் மேற்கொண்டார் அப்போது சென்னையில் இருந்த
எம்ஜிஆர் மதியம் சாப்பிடாமல் தன் அறைக்குள் உட்கார்ந்தபடி சில சமயம்
யாருக்கோ போன் போட்டு பேசிக்கொண்டே இருந்தார். மணி இரண்டாகி விட்டது.
வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்தவர்கள் பத்திரிகையாளர் சோலையிடம்
சொல்லி தலைவரை சாப்பிட வரச் சொல்லுங்கள் என்றனர். உள்ளே போய் அழைத்த
சோலையிடம் எம்ஜிஆர் ‘’ஒரு தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்திருக்கிறேன்
பேசி விட்டு வந்து விடுகிறேன் கொஞ்சம் காத்திரு’’ என்றார். இவ்வாறு
சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு தொலைபேசி இணைப்பு கிடைத்து
விட்டது. ;;உங்கள் கால்களில் கொப்புளம் வந்து விட்டதாக அறிந்தேன்.
போராட்ட முறையை மாற்றிக்கொள்ள கூடாதா. நான் மருத்துவர்களை உங்களுடன்
அனுப்பி வைக்கட்டுமா என்று சரமாரியாக கேட்ட பிறகு ஒரு ஐந்து நிமிடம் ஏதோ
பேசி ஆறுதல் சொல்லிவிட்டு வைத்துவிட்டார். அருகில் இருந்த
பத்திரிகையாளர் சோலையிடம் கலைஞர் கருணாநிதி நெடும்பயணம் போய்க்கொண்டு
இருக்கிறார். நடந்து நடந்து அவருக்கு கால்களில் கொப்புளம் ஏற்பட்டு
விட்டதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தனர். எனவே அவரிடம் நான்
விசாரித்தேன். இதை வெளியே யாரிடமும் நீங்கள் சொல்ல வேண்டாம். விஷயம்
தவறாக புரிந்து கொள்ளப்படும். என்று தெரிவித்தார். தன்னுடைய முயற்சியால்
முதலமைச்சராகி பின்பு தன் மகன் மு.க.முத்துவை திரையுலகில் தனக்குப்
போட்டியாகக் கொண்டு வற முயன்ற தன்னை கட்சியை விட்டு வெளியேற்றிய
எதிரியான கருணாநிதிக்கு கூட காலில் கொப்புளம் வந்ததும் உடனே அழைத்து
விசாரித்த அருள் உள்ளம் கொண்டவர் எம்ஜிஆர். குழந்தைப் பருவத்தில் அவரை
சிறுவயதில் மூத்த நாடக நடிகர்கள் இவ்வாறு அடித்தும் கொட்டியும் அழ
வைத்துள்ளனர்.
பந்தியில் இருந்து விரட்டப்பட்ட குழந்தை
ஒரு நாள் நாடக கம்பெனியில் மதியம் எல்லோரும் சாப்பிட வாங்க என்றதும்
சிறுவர்கள் எல்லோரும் ஓடிப்போய் பந்தியில் உட்கார்ந்தனர். நாடகக்
கம்பெனியில் பகல் சாப்பாடு பரிமாறப்படும் அதன்பின்பு நாடகம் நடித்து
முடித்ததும் இரவில் சாப்பாடு வழங்கப்படும். அவ்வாறு ஆசை ஆசையாக
சாப்பாட்டு பந்தியில் ஓடிப்போய் உட்கார்ந்த சிறுவன் எம்ஜிஆரை ஒருவர்
அருகில் வந்து பார்த்துவிட்டு ‘இன்று உனக்கு நாடகம் இல்லை தானே ஏன்
வந்து உட்கார்ந்தாய் ஏன் இப்படி சோற்றுக்கு அலைகிறாய் எழுந்து போய்விடு’’
என்று சொல்லி அவரை தரதரவென்று பிடித்து இழுத்துக் கொண்டு வந்து சாப்பாடு
கூடத்தில் இருந்து வெளியே விட்டு விட்டார். சிறுவனாக இருந்த
எம்ஜிஆருக்கு அவமானமாகப் போய்விட்டது. இவரை இழுத்துக் கொண்டு வரும் போது
மற்ற சிறுவர்கள் எல்லோரும் சத்தம் போட்டு சிரித்தார்கள். நாடகக்
கம்பெனியில் சிறுவர்கள் கேலி பேசுவதும் சத்தம் போட்டு சிரிப்பது ஒரு
பழக்கமாக அந்தக் காலத்தில் இருந்து வந்தது. அப்படி பல நேரங்களில்
அவமானப்பட்ட எம்ஜியார் பின்னர் தனக்கு வசதி வந்ததும் தினமும் 30, 40
பேருடன் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். தன்னைப்
பார்க்க எவர் வந்தாலும் தான் தண்டிக்கப்படும் நபராக இருந்தாலும் கூட
அவர்களை முதலில் சாப்பிடச் சொல்லுவார். சாப்பிட்ட பிறகுதான் மற்றவற்றை
பேசுவார். இது போன்ற நல்ல குணங்களை வளர அவருடைய குழந்தைப் பருவத்தில்
நடந்த கோரமான அனுபவங்களே அடிப்படைக் காரணங்களாக இருந்தன.
பாய்ஸ் கம்பெனியில் எம் ஜி ஆர் நடித்த நாடகங்கள்
வயிற்று பசியை ஆற்றிக்கொள்ளவே தனது இரண்டு குழந்தைகளையும் சத்யா
அம்மையார் நாடக கம்பெனியில் சேர்த்து விட்டார். அங்கும் பிள்ளைகளுக்கு
பசிக்கு சோறு கிடைப்பது சில சமயங்களில் சிரமமாக இருந்தது. இந்தக்
கடினமான சூழ்நிலையிலும் எம் ஜி ஆர் பல நாடகங்களில் நடித்து வந்தார்.
அவருக்கு முதலில் நாலனாவாக் இருந்த சம்பளம் பின்பு மாதத்துக்கு ஐந்து
ரூபாயாக உயர்ந்தது. நாடக கம்பெனியில் எம்ஜிஆர் தனது சிறுவயதில்
மகாபாரதம், இராமாயணம், ரத்னாவளி, தசாவதாரம், நல்லதங்காள், ராஜேந்திரன்,
கதர் பக்தி தேசியக்கொடி, போன்ற நாடகங்களில் நடித்தார் , ,இன்னும்
கொஞ்சம் வளர்ந்து பதின்ம வயதை அடைந்ததும் மகரக் கட்டு வந்து மாறியதும்
அவர் கற்பின் வெற்றி, மோகனசுந்தரம், ராஜாம்பாள் மனோகரா, கதர் பக்தி,
தேசபக்தி போன்ற நாடகங்களில் நடித்தார். பின்பு மலேயாவுக்கு போய் ரங்கோன்.
பினாங்கு ஆகிய நகரங்களில் வாழும் தமிழர்களுக்காக நாடகங்களில் நடித்து
ஓரளவுக்கு பணத்தோடு திரும்பி வந்தார்.
வாள் பயிற்சிக்கு முன்னோடி
சிவந்த நிறமும் சுருண்ட நீண்ட இருந்ததால் இவர் ஸ்திரிபார்ட் எனப்படும்
பெண் வேடம் போட்டு நடித்தார் இவர் பெண் வேடம் போடும் போது
வாள்வீச்சிலும் வசனத்திலும் பிரபலம் அடைந்திருந்த நடிகர்
பி.யு.சின்னப்பா ராஜபார்ட்டாக நடிப்பார். அவருக்கு ஜோடியாக எம் ஜி ஆர்
பெண் வேடம் போடுவார். எம்ஜிஆருக்கு பி.யு சின்னப்பாவின் வாள் வீச்சும்
துடிப்பான நடிப்பும் மிகவும் பிடித்திருந்ததால் தானும் அவரைப்போலவே வாள்
சுழற்றும் பயிற்சி பெற்று இரண்டு கைகளாலும் வாள் சுற்றும் திறமை
பெற்றார். மாயா மச்சீந்திரா படத்தில் இரண்டு கைகளிலும் வாளைச் சுழற்றி
சண்டை காட்சியில் நடித்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றார்.
குடிகாலா
சத்யபாமா அம்மையார் குழந்தைகளுடன் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்த
நாட்களில் எம்ஜிஆரை குடிகாலா என்று திட்டுவார்கள். குடிகாலா என்றால்
குடியைக் அழித்தவன் என்பது பொருள். எம்ஜிஆர் பிறந்ததும் அவர் தந்தையார்
இறந்ததும் சத்யபாமா அம்மையாருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதுவரை
நன்றாக வாழ்ந்து வந்த சத்தியபாமா குடும்பம் எம்ஜிஆர் பிறந்த இரண்டு
வருடங்களில் பட்டினி கிடக்க நேர்ந்ததால் உறவினர்களால் விரட்டப்பட்டதால்
அவர் தன்னுடைய மகனை குடி கொடுத்தவனே என்று தனக்கு கோபம் வரும்போது
திட்டியிருக்கிறார். இதை எம்ஜி ஆர் தன வாழ்க்கை வரலாற்று நூலில்
குறிப்பிடுகிறார். ஆனால் எம் ஜி ஆர் தன தாயை தெய்வமாக மதித்தார். தன
வீட்டில் தன தாயாருக்குக் கோயில் கட்டி கும்பிட்டு வந்தார்.
தாய்க்குலத்தின் செல்லப்பிள்ளை எம் ஜி ஆர்
1951இல் எம்ஜிஆர் மர்மயோகி படத்தில் சிறப்பாக நடித்து மக்களின்
ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பிறகு அதைப் பார்த்து மகிழ்ந்து தன் பிள்ளைகளை
நல்ல நிலைக்கு வளர்த்தோம் என்ற ஆத்ம திருப்தியுடன் அவர் காலம் ஆனார்.
அவர் காலமான பிறகு எம்ஜிஆர் அபரிமிதமான வளர்ச்சி பெற்று முதலமைச்சராகி
சிறு குழந்தைகளுக்கு சத்துணவு திட்டம் முதல் கொண்டு பல திட்டங்களை
அறிமுகப்படுத்தி தமிழக தாய்மார்களின் நெஞ்சங்களில் பால் வார்த்து
அவர்களின் ஆசிகளைப் பெற்று மூன்று முறை உயிருக்கு உண்டான
சோதனைகளிலிருந்து வெற்றி பெற்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்.
குழந்தைகளுக்கு சத்யா அம்மையாரின் பெயர்
1972இல் எம்ஜிஆர் அண்ணா திமுக கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து
1987-இல் அவர் மறையும் வரை பிறந்த பெண் குழந்தைகள் பல்லாயிரம் பேருக்கு
எம்ஜிஆரின் தாயார் நினைவாக பல இளம் தாய்மார்கள் சத்தியா சத்யப்ரியா
சத்யஜோதி சத்தியலட்சுமி சத்ய பிரபா என்று பெயர் சூட்டினர். பள்ளிக்கூடப்
பதிவேடுகளில் பல் பெயர்கள் சத்யா என்றிருப்பதை அப்போது காணலாம்.
கட்சிக்காரர்கள் பலர் தன்னுடைய நிறுவனங்களுக்கு கூட சத்யா, சத்யா ஜோதி,
சத்ய ராஜா என்று எம் ஜி ஆருடைய அம்மாவின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர்.
ஆக குடிகாலனாக ஏசப்பட்ட எம்ஜிஆர் பிற்காலத்தில் தன தாயின் பெயரை
விளங்கச் செய்தார். எம்ஜிஆரின் பெயரைச் குறிப்பிடும்போதும் சத்திய
தாயின் புதல்வன் என்று போற்றும்படி தாயின் பெயரை விளங்கச் செய்த மக்கள்
தலைவன் ஆனார். சிறுவயதில் தன் தாயார் தன்னை விரக்தியில் ஏசினாலும்கூட
தன் தாயாரின் பெயரை விளங்கச் செய்து தன் தாயாருக்கு கோயில் கட்டி
கும்பிட்டு வந்த எம்ஜிஆர் தன் வீட்டுக்கும் தாய்வீடு என்றே பெயர்
சூட்டினார். திரைஉலகில் எதிரணியைச் சேர்ந்த சிவாஜிகணேசன் தான் வீடு
கட்டியபோது அதற்கு அன்னை இல்லம் என்று பெயரிட்டார். அங்கு தன் அன்னை
ராஜாமணி அம்மையாருக்கு ஒரு சிலை வைத்து அந்தச் சிலையை திறந்து வைக்க
தாயன்பில் சிறந்தவராக விளங்கும் எம்ஜிஆரை அழைத்தார்.அப்போது சிவாஜி
கணேசன் தன் சொந்த ஊரான தஞ்சாவூரில் சாந்தி கமலா என்று இரண்டு
திரையரங்குகளை ஒரே வளாகத்தில் எழுப்பி அவற்றைத் திறந்து வைக்கவும்
எம்ஜிஆரையே அழைத்தார்.
தாய்க்குலத்துக்கு மரியாதை
எம் ஜி ஆர் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை பொது இடங்களில்
அளிக்கப்பட்டது. அவர்களை எம் ஜி ஆர் அழைப்பது போல மற்றவர்களும்
தாய்க்குலம் என்று குறிப்பிட்டனர். தாய் சொல்லைத் தட்டாதே தாயை காத்த
தனயன் தாய்க்குப்பின் தாரம் என்றெல்லாம் தன் படங்களுக்கு பெயர் சூட்டிய
எம்ஜிஆர் தாயநபில் தளி சிறந்தவராக் விளங்கினார். தாயை வணங்குவதில்
தன்னிகரற்றவராக விளங்கியதோடு மற்றவர்களையும் அந்த நடைபாதையில் தன்னோடு
அழைத்துச் சென்றார். கிணறும் பல் எம் ஜி ஆர் ரசிகர்கள் தங்களை பற்றி
பெருமையாக குறிப்பிடும் பொது நான் எம் ஜி ஆர் ரசிகன். சிகரட், மது
பழக்கம் எனக்கு இல்லை நான் என் தாயை தெய்வமாக மதிக்கிறேன் என்கின்றனர்.
இது ஒரு ‘எம் ஜி ஆர் டிரேட் மார்க்’ போல் மாறிவிட்டது. எம் ஜி ஆர்
என்றாலே தாயன்பில் தனித்து நிற்பவர் என்றாகிவிட்டது. பொதுக்
கூட்டங்களில் பிரச்சாரத்துக்கு எம் ஜி ஆர் போகும் வழியில் மூத்த
தாய்மார் அவரை அணைத்து தமது துன்ப நிலையை எடுத்துரைக்கும் போதும் அவரை
வாழ்த்தும் போதும் அவர் அவர்களிடம் தன் தாயன்பை உணர்வதால் அவர்களின்
வியர்வை நாற்றமோ வேப்பெண்ணெய் நாற்றமோ எம் ஜி ஆருக்கு
அருவருப்பூட்டவில்லை.
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|