தன்மானத் தமிழன் பட்டுக்கோட்டையார் பாடல்கள் - ஓர் ஆய்வு

கவிஞர். மா.உலகநாதன், முனைவர் பட்ட ஆய்வாளர்

முன்னுரை :

ட்டுக்கோட்டை என்றவுடன் நினைவுக்கு வரும் முதல் பெயர் மக்கள் கவிஞர் எனப் புகழ்கொண்ட கல்யாணசுந்தரம் அவர்களின் பெயர்தான். அந்தளவுக்குத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இவரின் பாடல்களால், அதுவும் பாட்டாளி வர்க்கப் பாடல்களால் பேசப்பட்டவர். இன்றும் பேசப்படுபவர், கவியரசர் கண்ணதாசனால் தம்பி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.

ஏரும், சோறும் :

சிந்தனையைத் தூண்டும் தத்துவப் பாடல்கள் எழுதி திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர். சமுதாய முற்போக்குச் சிந்தனையுள்ள இவரின் பாடல்களின் கரு. ஏழை மக்களின் துயர், ஏக்கம, நம்பிக்கை, காதல், சோகம் ஆகியவற்றை பிரதிபலிப்பனவாகவே இருந்தன. கிராமத்துச் சாதாரண மொழியில் பாடியவர். பாருங்களேன் ஏர் ஓட்டியவனையும். சோறு போட்டவனையும் இந்தப் பாடலில் சொல்கிறார்.

ஆண் : சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
       சோம்பலில்லாம ஏர் நடத்தி
       கம்மாக் கரையை ஒசத்திக் கட்டி
       கரும்புக் கரையில் வாய்க்கால் வெட்டி
       சம்பாப் பயிர பறிச்சு நட்டு
       தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
       நெல்லு வெளஞ்சிருக்கு - வரப்பும்
       உள்ள மறைஞ்சிருக்கு.

பெண்: காடு வெளஞ்சென்ன மச்சான் - நமக்கு
       கையும் காலுந்தானே மிச்சம்


ஆம் இன்றும் கூட, உரம் விற்பவர்களெல்லாம் பணக்காரர்களானார்கள். விவசாயிகள் மட்டும் இன்னும் ஏழைகளாகத்தானே ; இருக்கிறார்கள். உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற உழுவோர் மொழியும், பட்டுக்கோட்டையின் பாடலும் ஒன்றுக்கொன்று ஒப்புவமையாகத் தான் இருக்கின்றது. அவர் இன்னும் சொல்கிறார்.

பெண் : மாடா ஒழைச்சவன் வாழ்க்கையில்
        பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்

ஆண் : அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்தில்
        சேர்வதினால் வரும் தொல்லையடி

பெண் : வாழை நிலைக்குது, சோலை தழைக்குது
        ஏழைகளுக்கு அதில் என்ன கிடைக்குது?
        கூழைக்குழக்குது, நாளைக்கழிக்குது
        ஓலைக் குடிசையில் ஒட்டிக் கிடக்குது


அன்று, தமிழகத்தில் உழுதவனுக்குக் கூலியும், நில உரிமையாளனுக்குப் பலனும் போய்ச் சேர்ந்த நிலைமையைத் தன் பாடலில் வடித்துள்ளார்.

தானாக வந்ததா? தமையனால் வந்ததா?

தந்தை அருணாசலக் கவிராயர் கவிதை எழுதும் ஆற்றல் உடையவர். அண்ணன் கணபதி சுந்தரமும் கவிதை பாடுவதிலும், ஓவியம் வரைவதிலும் திறமை கொண்டிருந்தார். அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்த கல்யாணசுந்தரமும் தினமும் கவிதை புனைவதிலும், பாடல்களைப் பாடுவதிலும் ஆர்வமாக இருந்தார்.

செல்வம் நிலையாமை பற்றி ஒளவையார்,

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.


ஒளவையாரின் கருத்தை அடியொற்றி, பட்டுக்கோட்டையார்

குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்


மேலும் சொல்கிறார்.

அவரு வந்தார் இவரு வந்தார் ஆடினார் - முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் - மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்.
செவரு வச்சு காத்தாலும், செத்த பின்னே அத்தனைக்கும்
சொந்தக்காரன் யாரு? நீ துணிவிருந்தா கூறு!


நெற்றிப் பொட்டில் அடிப்பது போல், நச் என்ற கருத்துகள், ஆனால் நயமான கருத்துகள், இதுபோல, இவர் போல இன்னொருவரும் எழுதுவாரோ?

கண்ணின் மணிகள் :
1954 ஆம் ஆண்டில் 'கண்ணின் மணிகள்' என்ற நாடகத்தில் கல்யாணசுந்தரம் போலீஸ்காரர் வேடமேற்று நடித்தார். அந்த நாடகத்தில் அவர் தேனாறு பாயுது, செங்கதிரும் சாயுது, ஆனால் மக்கள் வயிறு காயுது என்று ஒரு பாடல் எழுதினார். இந்தப் பாடல் மக்களின் அன்றாட வாழ்வைப் பிரதிபலித்தால் பாடல் பிரபலமானது, இப்பாட்டு பின்னர் சில புதிய கருத்துக்களோடு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற படத்திலும் இடம்பெற்றது.


பாரதிதாசனின் தாசன் :
பகுத்தறிவுப் பாடல்களைப் பாடுவதில், எழுதுவதில் திறமைப் பெற்றிருந்த பட்டுக்கோட்டையார் பாவேந்தர் பாரதிதாசனைத் தன் மானசீக குருவாகக் கொண்டார். பாவேந்தரின் கவிதைகள், கல்யாணசுந்தரத்தின் சமூகப் பார்வையைக் கூர்மைப்படுத்தியது எனலாம். இவர் தன் கவிதை, கடிதம் எதுவாக இருந்தாலும் முதலில் பாரதிதாசன் துணை என்று எழுதும் வழக்கத்தைக் கையாண்டார். சில பாடல்கள் எழுதும்போது வாழ்க பாரதிதாசன் என்றும் எழுதியிருக்கிறார். பட்டுக்கோட்டையார் திருமணத்தை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தான் நடத்திவைத்தார்.

குருட்டு உலகமா? திருட்டு உலகமா?

மகாதேவி படத்தில் ஒரு பாடலை எழுதியிருப்பார்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்யைடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா - இதயம் திருந்த மருந்து சொல்லடா
உலகம் எப்படிப் பட்டதென்று இன்னும் எழுதுகிறார்
அன்பு படர்ந்த கொம்பினிலே - ஒரு அகந்தைக் குரங்கு தாவும்
அதன் அழகைக் குலைக்க மேவும், கொம்பு ஓடிந்து கொடியும் குலைந்து
குரங்கு விழுந்து சாகும் - சிலர் குணமும் அதுபோல் குறுகிப் போவும் கிறுக்கு உலகமடா

என்ன ஒரு நயம். என்ன ஒரு சொற்செட்டு, என்ன ஒரு உவமை.

அது இருந்தா இது இல்ல:
பொதுப்பணியில் ஈடுபட்டு நல்லன செய்ய விரும்புவோருக்கு கையில் காசில்லை. செல்வம் இருப்போர்க்கு பொதுப்பணியில் நினைப்பில்லை. இரண்டும் இருந்தாலும் பொதுக் காரியத்தை செய்து முடிக்க நல்ல கூட்டாளிகள் கிடைப்பதில்லை என்ற குறையை உணர்ந்து அனுபவித்துக் கவிதையாகச் சொல்கிறார்.

பொதுப்பணியில் செலவழிக்க நினைக்கும்போது பொருளில்லை
பொருளும் புகழும் சேர்ந்தபின்னே பொதுப்பணியில் நினைவில்லை
போதுமான பொருளும் வந்து பொதுப் பணியில் நினைவு வந்தால்
போட்ட திட்டம் நிறைவேறக் கூட்டாளிகள் சரியில்லை.


பெண்மை போற்றுதும் :
இன்னும் ஒரு பாடலைக் கூறாவிட்டால் எப்படி?

மனிதன் ஆரம்பாவது பெண்ணுக்குள்ளே - அவன்
ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே


ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே இப்படி பாடல் முழுவதும் பாட்டாலேயே சாட்டையடி கொடுக்கிறார்.

யாருக்கு?பெண்மையைக் கொச்சைப்படுத்தி, கொடுமைப்படுத்தியவனுக்கு.

தங்கப்பதுமை என்ற படத்தில் வரும் இப் பாடலின் தொகையறாவில்,

ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்
அவள் இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தைக் கொன்றவன் நான்
வாழத் தகுந்தவளை வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பரத்தையினால் பண்பதனைக் கொன்றவன் நான்


கதையின் நாயகன், பரத்தையின் கூட்டுறவால் சீரழிந்து சிதைந்து போனபின் பழைய கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்க்கிறான். விடை என்னவோ பூஜியம்தான்,


கள்ளும் கவறும் இருமனப் பெண்டீரும்
திரு நீக்கப்பட்டார் தொடர்பு என்பார் வள்ளுவர்.
காட்சியில் நடிகர் திலகம், பத்மினி இவர்களின் நடிப்பிற்கு, பட்டுக்கோட்டையார்pன் பாடல் உயிரோட்டமாக இருந்தது என்றால் அது மிகையில்லை.

தன்மானத் தமிழன் :
மாடர்ன் தியேட்டர்சுக்கு அவர் பாடல் எழுதிக்கொண்டிருந்த காலம், ஒரு நாள் படத் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அவர்களோடு பாடல்கள் குறித்து கலந்தாலோசிக்கச் சென்றார் கல்யாணசுந்தரம் அப்போது டி.ஆர்.சுந்தரம் தான் மட்டும் ஒரு நாற்காலில் அமர்ந்துக்கொண்டு இவரை நிற்க வைத்தே பேசிக்கொண்டிருந்தார். துணுக்குற்ற கவிஞர், ஒரு சீட்டை எடுத்து எழுதி அவரிடம் கொடுத்தார். அதில், மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவேண்டும் என்று எழுதியிருந்தாராம். இதைப் பார்த்ததும் உடனே நாற்காலிகள் வரவழைக்கப்பட்டனவாம். பணத்துக்குக் கஷ்டப்பட்டாலும் துணிவும், தன்மானமும் மிக்கவர்.

காதலின்பம் :
சரி! ஒரே தத்துவப்பாடலாகவும், சமுதாயச் சாடலாகவும் இருக்கிறதே! காதல் அவருக்குக் கை வராதா? என்று நீங்கள் யோசிப்பது எனக்குப் புரிகிறது. அந்த காதல் இன்பத்தை இரத்தினபுரி இளவரசி என்ற படத்துக்குப் பாட்டாக எழுதுகிறார் இப்படி.

படிக்க படிக்க நெஞ்சிலினிக்கும் பருவமென்ற காவியம்
பார்க்க பார்க்க வளருமே காதல் இன்ப ஓவியம்
அடுக்கடுக்காய் எண்ணம் வரும். கண்கள் மட்டும் பேசும்,
தொல்லைதரும் மனிதகுலம் சொல்லிச் சொல்லித் தூற்றும்
தூய்மையான உள்ளங்களை சூழ்ந்து நின்று வாட்டும்.


பார்த்தீர்களா? அன்று காதலை எதிர்த்த மனித குலத்தைச் சாடுகிறர். காதல் என்றுமே, காதலாகத்தான் இருக்கிறது, காதல் தோற்பதேயில்லை. ஆனால், காதலர்கள்தான் தோற்றுவிடுகிறார்கள்.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்ட
ு - குறள்

முதல் பாட்டு :
1954 இல் படித்த பெண் என்ற படத்துக்குத் தான் முதன் முதலாக இரண்டு பாடல்கள் எழுதினார். அந்தப் படம் வெளிவர தாமதமாயிற்று. இதனால் இவர் பாடல் எழுதி முதலில் வெளிவந்த படம் மகேஸ்வரி என்பதாகும். இந்தப் படம் 13.11.1955 இல் வெளியானது. பின்னர் 1956இல் வெளியான பாசவலை, ரங்கூன் ராதா, மர்மவீரன் போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதினார். 1957, 1958ஆம் ஆண்டுகளில் எம்..ஜி.ஆர் ., சிவர்.ஜி கணேசன் நடித்த படங்களுக்கு பாடல்கள் எழுதினார். பாடல்களும் பிரபலமாயின. அதில் நடித்த நடிகர்களும் பிரபலமடைந்தார்கள். குறிப்பாக எம்.ஜி.ஆர் படங்களின் தத்துவப் பாடல்கள் அனைத்தும் இவராலேயே எழுதப்பட்டன. கல்யாணசுந்தரத்தின் புகழும் ஓங்கியது.

முடிவுரை :
மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம்
29 ஆண்டுகளே வாழ்ந்தவர். வரலாறு படைத்தவர். இவரது பாடல்கள், கவிதைகள், காலவெள்ளத்தைக் கடந்து நின்று மனித குலம் வாழும் நாள் வரை வாழும் கவிஞன் புகழ் வாழ்க!
 



worldnath_131149@yahoo.co.in