தலைவனின் புதல்வனைத் தழுவி மகிழும் பரத்தை
பேராசிரியர் இரா.மோகன்
அகநானூற்றின்
களிற்றியானை நிரை பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு நெகிழ்வூட்டும் பாடல்.
மருதத் திணையில் அமைந்த அந்தப் பாடலைப் பாடியவர் சாகலாசனார் என்னும்
புலவர். ‘பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன் யாரையும் அறியேன்
என்றாற்குத் தலைமகள் சொல்லியது’ என்பது அதன் துறைக் குறிப்பு.
“பரத்தையர் என்பார் தமக்கென்று ஒரு கணவனை வரித்துக் கொள்ளாது (நியமித்துக்
கொள்ளாது) பொருள் வாங்கிக் கொண்டு பல புருடரோடுங் கூடுபவர். அது பற்றி
அவர்களைப் ‘பொருட் பெண்டிர்’ என்பர். அப் பொருட் பெண்டிர் சேரியை (ஊரை,
தெருவை) அடைந்து அவர்களைக் கூடி இன்பம் அனுபவித்து வந்த தலைமகனை
நோக்கித் தலைமகள், ‘நீ எப் பரத்தையைக் கூடி வந்தாய்?’ என்றாட்கு, ‘யான்
உன்னையன்றி யாரையும் அறியேன்’ என்று கூறிய அத் தலைவற்குத் தலைமகள்
சொல்லியது” (கணேசையர் உரை, அகநானூறு: களிற்றியானை நிரை, ப.65) எனப்
பாடலின் கூற்றுக்கு விளக்கம் தருவர் உரையாசிரியர். ‘பரத்தையர் ஆவார்
யாரெனின், ஆடலும் பாடலும் வல்லராகி, அழகும் இளமையும் காட்டி, இன்பமும்
பொருளும் வெஃகி, ஒருவர் மாட்டும் தங்காதார்’ என்னும் பண்டை
உரையாசிரியரின் கருத்தும் ஈண்டு நினைவுகூரத்தக்கது.
பரத்தையர்
பற்றிய வழிவழியான இக் கருத்தியலுக்கு மாறாக, சாகலாசனார் தம்
அகநானூற்றுப் பாடலில் தூய அன்பே வடிவான ஒரு பரத்தையைத் படைத்துக்
காட்டியுள்ளார்; தலைவனது உண்மையான நிலைப்-பாட்டினை உணர்ந்து கொள்ளும்
மதிநுட்பமும், தன் குழந்தையை மிக்க அன்புடன் தழுவி மகிழும் பரத்தையை
உளமாரப் போற்றும் பெருந்தன்மையும் கொண்டவளாகத் தலைவியைச்
சித்திரித்துள்ளார்.
“பழைய குளத்து
நீரிலே தழைத்து வளர்ந்த தாமரையின் இதழினை ஒத்த உள்ளங்கையினையும், பவளம்
போன்ற அழகிய வாயினையும், கேட்பவர்க்கு மகிழ்ச்சியைத் தரும் இனிய மழலைப்
பேச்சையும் கொண்ட, கண்டார் அனைவரும் விரும்புகின்ற நம் புதல்வன்
தெருவில் சிறுதேர் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.
பொன்னால் ஆன
அணிகலன்களைத் தாங்கிய, கூரிய பற்களை உடைய ஒருத்தி (நின் பரத்தை) அவன்
தெருவில் தனியே நிற்பதைப் பார்த்து, உன்னைப் போன்ற முக ஒப்புமை அவனிடம்
இருப்பதையும் கண்டுகொண்டு, தெருவில் யாரும் இல்லாததால் குழந்தையை
நெருங்கிச் சென்று மிக மகிழ்ந்து, ‘என் உயிரே வருக!’ எனக் கூறி அவனைத்
தன் மார்புற அணைத்துக் கொண்டு நின்றாள்.
அங்ஙனம்
நின்றுகொண்டிருந்த அவளைக் கண்ட நான் விரைந்து சென்று அவளை அணைத்துக்
கொண்டேன்; ‘குற்றமற்ற இளமகளே! ஏன் மயங்கினாய்? இவனுக்கு நீயும் ஒரு
தாயல்லவா?’ என்று அவளிடம் கூறினேன்.
அப்போது அவள்,
ஒருவன் தான் செய்த களவைக் கண்டு கொண்டவர் முன்பு, கையும் களவுமாகப்
பிடிபட்ட நிலையில் உடன்பட்டு நிற்பதைப் போல முகம் கவிழ்ந்து, நிலத்தைத்
தன் கால் விரலால் கீறியவாறு நாணத்துடன் நின்றாள். அவள் அங்ஙனம் நின்ற
நிலையினைக் கண்டு, ‘வானத்தில் உள்ள, காண்பதற்கு அரிய தெய்வ மகளான
அருந்ததியினைப் போன்றவளான அவள், உன்னுடைய மகனுக்குத் தாயாதல் ஒக்கும்’
என எண்ணி, யானும் அவளைப் போற்றினேன். இங்ஙனமாகவும் ‘யாரையும் அறியேன்’
என நீ பொய் கூறாது ஒழிக!” எனத் தலைவனிடம் கூறுகிறாள் தலைவி. தன்னைப்
பொய் கூறி ஏமாற்ற முடியாது என்பதையும் தலைவனுக்குத் தெள்ளத் தெளிவாக
உணர்த்துகிறாள் அவள்.
தலைவியின்
கூற்றினைத் தன்னகத்தே கொண்ட அழகிய அந்த அகநானூற்றுப் பாடல் வருமாறு:
“நாயுடை
முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அயல்இதழ் புரையும்
மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய்,
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்,
யாவரும் விழையம் பொலந்தொடிப் புதல்வனைத்
தேர்வழங்கு தெருவில் தமியோன் கண்ட
கூர்எயிற்று அரிவை குறுகினள், யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப்
பொலங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை
‘வருக மாளஎன் உயிர்!’எனப் பெரிதுஉவந்து
கொண்டனள் நின்றோள் கண்டுநிலைச் செல்லேன்,
‘மாசுஇல் குறுமகள்! எவன்பே துற்றனை?
நீயும் தாயை இவற்கு!’ என யான்தன்
கரைய வந்து விரைவனென் கவைஇக்
களவுஉடம் படுநரின் கவிழ்ந்துநிலம் கிளையா
நாணி நின்றோள் நிலைகண்டு யானும்
பேணிஎனன் அல்லனோ மகிழ்ந! வானத்து
அணங்குஅருங் கடவுள் அன்னோள்நின்
மகன்தாய் ஆதல் புரைவதுஆங்கு எனவே!”
‘நான் எந்தப்
பரத்தையையும் நாடிச் செல்லவில்லை. ஓர் இன்றியமையாத பணியின் காரணமாக
வெளியே சென்றிருந்தேன். நீ எண்ணுவது தவறு. யான் எந்தப் பரத்தையையும்
அறியேன்’ என்று பொய் சொல்லித் தன் பரத்தைமை இழுக்கத்தினைத் தலைவியிடம்
மறைக்க முயலும் தலைவன்; ‘நீ பொய் கூறி என்னை ஒன்றும் ஏமாற்ற முடியாது.
எனக்கு எல்லாம் தெரியும். என்னிடம் எதையும் மறைக்காதே. கண்ணாரக் கண்டு
தெளிந்த பிறகே நான் உன்னிடம் பேசுகிறேன்’ என இடித்துரைத்துத் தலைவனுக்கு
உண்மையை உணர்த்துவ-தோடு நின்று விடாமல், தெருவில் தனியே விளையாடிக்
கொண்டிருந்த தன் புதல்வனை நெருங்கி, ‘என் உயிரே வருக!’ என்று மிக்க
மகிழ்ச்சியோடு கூறி மார்புற அணைத்துக் கொண்ட பரத்தையிடம், ‘மயங்க வேண்டா!
இவனுக்கு நீயும் ஒரு தாய் தான்!’ எனப் போற்றிக் கூறும் தலைவி; ஒரு
குழந்தைக்குத் தாயாகும் பேறு வாழ்வில் தனக்கு இல்லை என்னும் அடிமன
ஏக்கம் ஒரு புறம் வருந்தச் செய்ய, முக ஒப்புமையை வைத்து இது தலைவனின்
குழந்தையே என்பதைக் கண்டறிந்து, தலைவியின் குழந்தையைத் தன் குழந்தையாகவே
கருதி அன்பு பாராட்டி மனம் மகிழும் – மிகவும் நெகிழும் – பரத்தை என்னும்
இம் மூன்று அகத்திணை மாந்தர்களையும் சாகலாசனார் இந்த அகநானூற்றுப்
பாடலில் படம்பிடித்துக் காட்டி இருக்கும் பான்மை நம் நெஞ்சை
அள்ளுவதாகும். ‘செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்’ (அகநானூறு,
66) என்ற படி, உற்றார் உறவினரேயன்றி பகைவரும் விரும்பும் குழந்தையின்
கொள்ளை அழகையும், தலைவனைத் தன்வயப்படுத்தும் பரத்தையின் இளமை எழிலையும்
சாகலாசனார் இப் பாடலில் பதிவு செய்திருக்கும் பாங்கும் ‘நனி சிறந்ததே’.
மேலும், களவு செய்பவர் கையும் களவுமாகப் பிடிபட்டு தலைகவிழ்ந்து
நிற்கும் உலகியல் நிகழ்வைப் பொருத்தமான ஓர் உவமை வடிவில் சாகலாசனார் இப்
பாடலில் கையாண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
'தமிழாகரர்'
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|