கம்பராமாயணத்தில் பிற இலக்கிய வகைக்கூறுகள்
முனைவர் ஆ.முருகானந்தம்
அறிமுகம்:
முன்னர்
தோன்றிய இலக்கியமே பின்னர் இலக்கியங்களின் தோற்றத்திற்கு ஒரு
மூலக்காரணமாக அமையும் என்றால் அது மிகையாகா. எந்த ஓர் இலக்கிய வகையும்
திடீரென்று தோன்றுவதற்கு இயலாது. எனவே ஓர் இலக்கிய வகை தோன்றுவதற்குமுன்
அவ்விலக்கிய வகையின் மூலக்கூறுகள்,அதற்கு முன் உள்ள இலக்கணம், இலக்கியம்
ஆகியவற்றில் வித்தாகப்; பதிவுசெய்யப்பட்டு அமையும். அந்த வகையில்
கம்பராமாயணம் என்ற ஒரு காப்பியத்தில் (இதிகாசத்தில்) காணப்படும் பிற
இலக்கிய வகைக்கான கூறுகiளை இனங்கண்டு எடுத்துரைப்பதே இக்கட்டுரையின்
நோக்கமாக அமைகின்றது.
இலக்கிய வகை பற்றிய அறிஞர் கருத்துக்கள்:
ஒரு நாட்டின் சமுதாய,பொருளாதார,அரசியல் சமயச் சூழல்களுக்கேற்பக்
காலந்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றி வளர்கின்றன. அத்தகைய
இலக்கியங்கள் அவற்றின் அமைப்பு, பொருள், யாப்பு முதலியவற்றின்
அடிப்படையி;ல் பல்வேறு வகைகளாகப்பாகுபாடு செய்வர். அவற்றை இலக்கிய
வகைகள் என்பர்.
'இலக்கிய வகைகளின் தோற்றத்தில் மூன்று நிலைகளை குறிப்பிடுவர் கி.ராசா'
-1
1.இலக்கிய மூலக்கூறு எனும் தோற்ற நிலை.
2.இலக்கிய மூலக்கூறுகள் சான்றுப் பாடல்களைப் பெற்று வகைமைகளாக இயங்கும்
நிலை.
3.இலக்கிய வகைமைகள் வகைகளாக உருவாகும் நிலை.
'அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பெற்ற வடிவத்தாலும், கருத்தாலும் ஒப்புமைகளை
உடைய நூல்களின் தொகுதிக்கு ஓர் இலக்கிய வகை எனப்பெயரிடலாம் என்று
ஆல்பர்ட் ஜெரால்டு கூறுவதாக் காட்டுவர்' -2
'தமிழண்ணல் இலக்கியத்தைச் சமுதாயத்துடனும் இலக்கிய வகைகளைச்
சமுதாயத்தி;ல் இடம்பெறும் குடும்பங்களுடனும் ஒப்பிட்டுக் காட்டுகின்றார்'
-3
'தமிழ் இலக்கியங்களை வகைமை அடிப்படையில் மு.வரதராசனார் இலக்கிய மரபு
என்ற நூலில்,
1. பொருள் அடிப்படை,
2. வடிவ அடிப்படை,
3. அடிவரையறை அடிப்படை,
4. எண்ணிக்கை அடிப்படை,
5. சொற்கள் அடிப்படை,
6. உத்தி அடிப்படை,
7. பிற வகை என வகைப்படுத்தியுள்ளார்.' -4
தமிழில் இலக்கிய வகைகள்:
தமிழில் இலக்கிய வகை பற்றிய சிந்தனைகள் தொல்காப்பியர் காலந்தொட்N;ட
இருந்து வருகிறது என்பதனை,
'பாட்டு,உரை,நூலே வாய்மொழி;,பிசியே
அங்கதம்,முதுசொல்லோடு அவ்ஏழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர்' -5
என்ற நூற்பா மூலம் தொல்காப்பியம் கூறுகின்ற இலக்கிய வகைகள் ஏழு என
எண்ணலாம். பாட்டியல் நூலார் ஒவ்வொருவரும் தத்தம் கருத்திற்கேற்ப
இலக்கியங்களை வகைப்படுத்தியுள்ளனர். இதனால் 'பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் இலக்கிய வகைகளின்
எண்ணிக்கை விரிந்;தது. நூல்களைப் பட்டியலிடும் இவற்றில்
வகைகளை அறிவியலின் படி அணுகுவதென்பது அரிதாகவுள்ளது.'- 6 என்று
பாட்டியல் நோக்கிலான வகை அருமையை அறிஞர்கள் சுட்டியுள்ளனர்.
காப்பியம்:
தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்றாகிய காப்பியம். 'காப்பூஇயம் எனப்
பிரித்துக் காப்பு உடையது காப்பியம் ஆயிற்று' -7 என இரா.வ.கமலக்கண்ணனும்,
'மொழிக்குக் காவலாக, பாதுகாப்பாக அமைவது காப்பியம்' – 8 என
அ.பாண்டுரங்கனும் கூறுகின்றனர்.
''காப்பியம்' என்ற சொல் ஒரு திரிசொல் என்றும், இது காப்பியம் என்பதன்
அடியாகப் பிறந்தது என்றும் கருதுகின்ற எஸ். வையாபுரிபிள்ளை 'காவியம்'
என்பது 'கவி' என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. கவிஞர்களிடமிருந்து
தோன்றியது இதுவே காப்பியம் என்று தமிழில் திரிந்து வரலாயிற்று எனக்
குறிப்பிடுகின்றார';.- 9.
கவியாற் செய்யப்படுவது காவியம் என்று கி.வா. ஜெகநாதன் காப்பியம் பற்றிய
தமது கருத்தினை உரைக்கின்றார். தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல்,
உவமையியல், செய்யுளியல் ஆகியவற்றில் கூறும் செய்திகள் காப்பிய
இலக்கணத்தைச் சுட்டுவனவாகவே அமைகின்றன. தொல்காப்பியர் சுட்டும் வனப்பின்
அடிப்படையில் எழுதப்பட்டவையே காப்பியம் என உரைக்கும் பொ.வே
சோமசுந்தரனார் இதனை ' வனப்பியல் நூல்கள' என்று குறிப்பிடுகின்றார்.- 10
இந்த காப்பிய இலக்கிய வகையில் அடங்கும் கம்பராமாயணத்தில் இடம்
பெற்றிருக்கின்ற சிற்சில இலக்கிய வகைக் கூறுகளை கீழ்கண்டவாறு
பகுத்துணரலாம்.
உலா இலக்கிய வகைக்கூறு:
உலா இலக்கியத்தின் அமைப்பு, பாட்டிற்குரிய தலைவனின் வரலாறு, பிறப்பு,
பெருமை, சிறப்புக் கூறுதல் தலைவன் உலா வருதல், தலைவி காதல் கொள்ளுதல்
என்ற வகையில் அமைந்து காணப்படுகிறது. உலா என்ற இலக்கிய வகைக்கு அடிப்படை
தொல்காப்பியத்தில் 'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப' – 11. என்ற
நூற்பாவினால் உணரமுடியும்.
தமிழ்க் காப்பியங்களில் பொதுவாகத் தலைவன் உலா வருதல் இயல்பான ஒன்று.
இராமனது குலப்பெருமையைக் கூறும் குலமுறைகிளத்துப் படலம் இடம் பெறுகிறது.
கார்காலப் படலம், எழுச்சிப்;படலம், சந்திரசயிலப்படலம்,
வரைக்காட்சிப்படலம், பூக்கொய்படலம், நீர்விளையாட்டுப்படலம்,
எதிர்கொள்படலம், எனப்பல படலங்கள் அமைத்துப் பின்னர் உலாவியற் படலத்தில்
இராமன் மிதிலைப்பட்டணத்து வீதியில் உலா வருகின்ற காட்சியை வர்ணிப்பார்.
இராமனைக் கண்ட பல பெண்கள் அவன் அழகில் ஈடுபட்;டதாக பதினேழு பாடல்களிலும்,
வியந்து தன் நிலை மாறிய பெண்களின் நிலையை இருபத்திரெண்டு பாடல்களிலும்
வர்ணிக்கின்றார்.
'ஆடவர்கள் ரூப சௌந்தர்யத்தைக் கண்ணால் முகந்து மதிப்பீட்டு ரசிக்கக்
கூடியவர்கள். இக்காரணங்களில் உலாக் காணுதற்குப் பெண்களே மாளிகைகளிலும்,
வீதிகளிலும் நெருங்கி நிற்பதாகச் சொல்வது மரபு' – 12 என எஸ்.
வையாபுரிபிள்ளை அவர்கள் கூறுவர். இவ்வாறு கைக்கிளை என்னும் ஒருதலை
காமத்தின் அகமரபுப்படி இராமன் மீது காதல் கொண்ட மிதிலை நகரப் பெண்கள்
ஒவ்வொருத்தியின் நிலையினையும், காதல் நோயினையும் மையல் கொண்டு
மயங்கியதையும் உலாவியற்படலத்தில் அமைத்து பாடியுள்ளார்.
'தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அதஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக்கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்' – 13
உலாவியலுக்குத் தோற்றுவாயாகக் கம்பன் ஏழு பருவப்பெண்டிர் நிலையைக்
குறிப்பிடும்போது,
'பேதைமார் முதல்கடைப்பேரிளம் பெண்கள் தாம்
ஏதியார் மாரவேள் ஏவவந்து எய்தினார்
ஆதிவா னவர்பிரான் அணுகலால் அணிகொள்கார்
ஓதியார் வீதிவாய் உற்றவா றுஉரை செய்வோம்'
– 14.
என்று பேதை முதல் பேரிளம் பெண் வரை சுட்டிக்காட்டியிருப்பது உலா
இலக்கிய வகைக்கான அடிப்படைக் கூறு கம்பராமாயணத்தில் சான்றாக
அமைந்திருந்தது என்பதை தெளிந்து உணரமுடியும்.
தூது இலக்கிய வகைக் கூறு:
ஒருவர் கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிக்க இடையில் பிறிதொருவரையோ
அல்லது பிறிது ஒன்றிளையோ அனுப்புவது தூதாகும். இந்தப் பொருண்மையைக்
கொண்டு பாடப்பெறும் இலக்கிய வகையே தூது இலக்கியம் ஆகும். இதனை
தொல்காப்பியம் 'ஓதல் பகையே தூதிவை பிரிவே' என்று குறிக்கும்;, பாட்டியல்
நூல்களும் இயம்புகின்ற காலத்து எகின மயில் கிள்ளை என்றும் சுட்டும்.
புறத்திணை – அகத்திணை என்னும் இரண்டிலும் தூதுப் பொருண்மை இடம் பெறும்.
கம்பன் காப்பியப் பண்பினை அடியொற்றி அனுமன் செல்லுகின்ற தூதைப்
அகத்தூதாகவும், அங்கதன் செல்கின்ற தூதைப் புறத்தூதாகவும் அமைக்கின்றார்.
கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் உருக்காட்டுப்படலத்தில் அனுமன்
சீதையிடம் சென்று தான் இராமனிடம் கூறுவேன் என்று உரைத்தலை
சுட்டுவதிலிருந்து அறிய முடியும்.
'கண்டனன் அனுமனும்: கருத்தும் எண்ணினான்
கொண்டனன் துணுக்கம் மெய்தீண்டக் கூசுவான்
அண்டர் நாயகன் அருள் தூதன் யான் எனாத்
தொண்டை வாய் மயிலினைத் தொழுது தோன்றினான்' – 15.
இவ்விடத்தில் தலைமகனுக்காக தலைவியினபால் ஒருவன் தூது செல்லும் மரபினை
ஒட்டிய இலக்கிய நிலையை அறியமுடியும்.
'பூதநாயகன் நீர் சூழ்ந்த
புவிக்கு நாயகன் இப் பூமேல்
சீதை நாயகன் வேறுள்ள
தெய்வ நாயகன் நீ செய்யும்
வேதநாயகன் மேல் நின்ற
விதிக்கு நாயகன் தான்விட்;ட
தூதன் யான் பணித்த மாற்றம்
சொல்லிய வந்தேன் என்றான்' – 16.
என்பதிலிருந்து தூதாக வந்தமைக்கான பொருண்மையை இராவணனிடம்
சொல்வதிலிருந்து அறியலாம்.
பிள்ளைத்தமிழ் கூறுகள்:
கோசலநாட்டின் நெய்தல் நிலப்பெண்கள் நிலையைப் பற்றிக் கூறும்போது,
'கற்றிலாத கருங்கண் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்துதம் முன்றிலில்;
சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே' – 17,
என்று பாக்குகளை எடுத்துக் கொழித்துத் தூய்மைப்படுத்துகின்ற நெய்தல்
நிலப்பெண்கள் அவற்றை முற்றத்திற்கு வாரிஎடுத்துச் செல்லும்போது சிதறிய
முத்துக்களையே சிற்றிலாக அமைத்து விளையாடுவர் என்ற நிலையில் சிற்றில்
பருவம் குறிப்பு இடம்பெறுவதை அறியலாம்.
திருஅவதாரப்படலத்தில் இராமன், இலக்குவன், பரதன், சத்துருக்கனன். என
நால்வரின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிப் பற்றி கூறும் நிலையில் மழலை
மொழிப்பேசியும், தளர்நடையிட்டும் இப்பூவுலகில் வளர்ந்தார்கள் என்ற
நிலையில்,
'அமிர்து உரு குதலையொடு அணிநடை பயிலாத்
.... ...... ..... ..... ....... ...
குமரர்கள் நிலமகள் குறைவர வளர்நாள்' – 18.
இந்திரஜித் இறந்தநிலையில் மண்டோதரி புலம்பும்போது,
'தாளரிச் சதங்கை ஆர்ப்பத்
தவழ்கின்ற பருவம் தண்ணில்' -19. தளர்நடைப்பருவம் தெளிவுபடும்.
'அம்புலி அம்மாவா என்று
அழைத்தலும் அவிர் வெண்திங்கள்' – 20. எனும் நிலையில் அம்புலிப்பருவமும்
அமைந்திருப்பதை அறியலாம்.
மூலவதைப்படலத்தில் அரக்கர் தலை மேல் கீழ் வீழ்தல் விசய மங்கை கைகளில்
அம்மானை ஆடுதல் போல் இருந்தது என்கிறார். இதனை,
'தெம்மு னைச்செரு மங்கைதன் செங்;கையில்
அம்மனைக்குலம் ஆடுவபோன்றவே' - 21. என்ற வரிகள் உணர்த்தும்.
பரணி இலக்கியவகைக் கூறு:
கும்பகர்கணன் - இலக்குவனுக்கும்; நடைபெற்ற போர் பற்றி கூறும் நிலையில்
ஆயிரம் யானைகளைக் கொன்று குவிக்கும் வன்மையை இலக்குவன் மூலம் எடுத்து
இயம்புகின்றார்.
'ஓர் ஆயிரம் ஆயில்; வெங்கணை ஒரு கால் விடுதொடையில்
கார் ஆயரம் விடுனதாரையின் நிமிர்கின்றன கதவுற்று
ஈராயிரம் மதமால்கரி விழுகின்றன இனிமேல்
ஆராய்வதென் அவன் வில் தொழில் அமரசேரும் அறியார்' -22. என்பதிலிருந்து
அறியலாம்.
கையறுநிலை இலக்கியவகைக் கூறு:
பிரம்மாத்திரப்படலத்தில் இந்திரசித்துவின் பிரம்மாத்திரத்தால் கட்டுண்டு
இலக்குவன் மயங்கிய நிலையில் இராமன் மூர்ச்ஐசயற்ற போது சீதை புலம்புவதை.
'மங்கை அழுதாள் வானாட்டு
மயில்கள் அழுதார் மழலிடையோன்;
பங்கின் உறையும் குயிலழுதாள்
பதுமத் திருந்த மாது அழுதாள்
கங்கை அழுதாள் நாம மடந்தை
அழுதாள் கமலத்தடம் கண்ணன்
தங்கை அழுதாள் இரங்காத
அரக்கிமாரும் தளர்ந்து அழுதார்' – 23. என்பதிலிருந்து அறியமுடியும்.
உழத்திப்பாட்டு கூறு:
பாலகாண்டத்தில் சரயுநதி தன்மை, உழவர்களின் செயல் ஆகியவற்றைப்பற்றி
குறிப்பிடும் நிலையில் உழவர்களை கம்பர் மள்ளர்கள் என்று
குறிப்பிடுகின்றார்.
'கதவினை முட்டி மள்ளர்
கையெடுத்து ஆர்ப்ப எய்தி' – 24.
அதாவது சரயுநதியானது மதகுகளின் குறுக்கே வைத்துள்ள கதவுகளை
முட்டிச்சென்றது. என்றும்,அதன் கரைகளை வேலைசெய்யும் உழவர்கள் தம்
கைகளால் அதனைத் தடுத்து காத்தனர் என்றும் வருணிக்கின்றார் என்றால்
அன்றைய காலந்தொட்டே இத்தகைய இலக்கிய வகைக்கூறுகள்
இலக்கியங்களில்,குறிப்பாக இக்கம்பராமாயணத்தில்; பயின்றுவந்துள்ளதை
கம்பராமாயணம் கொண்டு தௌ;ளிதின் உணரமுடியும்.
இதேபோன்று கம்பராமாயணத்தில்;, பொருண்மை அடிப்படையில் பிள்ளைத்தமிழ்,
ஆற்றுப்படை, பரணி மற்றும் பாதாதிகேசமும், யாப்பு அடிப்படையில் அந்தாதி,
விருத்தம் போன்றனவும், நாட்டுப்புற இலக்கியஅடிப்படையில் ஒப்பாரி, குரவை,
பள்ளு போன்ற இலக்கியவகைக்கூறுகளை அறியலாம்.
நிறைவுரை:
எந்த ஒரு இலக்கிய வகையும், தொல்காப்பியத்தில் ஒரு மூலக்கூறாக,
வி;த்தாகப் பதிவு செய்யப்பட்டு பிறகு சங்ககாலத்திலும், அதற்கு
அடுத்தகாலகட்;டங்களிலும் சான்றுப்பாடல்களாக வளர்நிலை அடைந்து,
சிற்றிலக்கிய காலத்தில் தனி ஒரு பேரிலக்கிய வகையாக உருமாறுவதே இலக்கிய
வகை எனத்துணியலாம்.
சான்றெண் விளக்கம்:
1. கி.இராசா, தொல்காப்பியமும் இலக்கிய வகை வளர்ச்சியும், பக்கம். 1-3.
2. தமிழண்ணல். சங்கஇலக்கிய ஒப்பீடு, இலக்கியக் கொள்கைகள், பக்கம். 116
-117.
3. கி.இராசா, தொல்காப்பியமும் இலக்கிய வகை வளர்ச்சியும், பக்கம். 4.
4. மு. வரதராசனார், இலக்கியமரபு (திறனாய்வு), பக்கம். 9.
5. தொல்காப்பியம் - பொருள், செய்யுளியல், நூற்பா – 1335.
6. தமிழண்ணல், சங்கஇலக்கியஒப்பீடு (இலக்கியவகைகள்), பக்கம். 41.
7. அ.பாண்டுரங்கன், காப்பியஇயல், பக்கம். 15.
8. கே.வசந்தகுமாரி சுந்தரம், வையாபுரிபிள்ளை ஆய்வுநெறி, பக்கம். 47 -
48.
9. கி.வா.ஜெகநாதன், தமிழ்க் காப்பியங்கள், பக்;கம். 12.
10. அ.பாண்டுரங்கன், காப்பியநோக்கில் கம்பராமாயணம், பக்கம். 103.
11. தொல்காப்பியம் - பொருள் - இளம் நூற்பா – 83.
12. எஸ்.வையாபுரிபிள்ளை, தமிழர் பண்பாடு, பக்கம். 129.
13. கம்பராமாயணம், பால, உலாவியற்படலம், பாடல் --1081.
14. '' '' எதிர் கொள்படலம், பாடல் - 1067.
15. '' சுந்தர, உருக்காட்டுப்படலம்;, பாடல் - 23.
16. '' யுத்த, அங்கதன் தூதுப்படலம்;, பாடல் - 21.
17. '' பால, நாட்டுப்படலம் , பாடல். 89.
18. '' '' திரு அவதார , பாடல். 302.
19. '' யுத்த, இராவணன் சோகப்படலம், பாடல். 9234.
20. மேலது - பாடல். 9235.
21. மேலது - மூலவதைப்படலம், பாடல். 9420.
22. மேலது – அதிகாயன் வதைப்படலம், பாடல். 146.
23. மேலது - இராவணன் வதைப்படலம், பாடல் 228.
24. மேலது – பாலகாண்டம், ஆற்றுப்படலம், பாடல். 27.
முனைவர்
ஆ.முருகானந்தம்,
உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை,
தேசியக்கல்லூரி(தன்னாட்சி),
திருச்சிராப்பள்ளி – 1.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|