உலகின் உன்னதமான உறவு நட்பு
திருமதி செல்லையா யோகரத்தினம்
M.A
நட்பு
என்பது நல்லதோர் உறவு. புனிதமானது. உன்னதமானது. பொதுவாக மனித உறவுகளை
நான்கு வகைப்படுத்தலாம். முதல் உறவு 'பெற்றோர் உறவு'. இரண்டாவது உறவு ;உடன்
பிறந்தவர்கள்'. மூனறாவது உறவு 'கட்டிய புருசன் அல்லது மனைவி, நான்காவது
உறவு 'தாம் பெற்ற பிள்ளைகள்' இவை அனைத்தும் இயற்கையால் அமைபவை. இளமைப்
பருவத்தில் வருவது 'காதல்'; எனும் உறவு. இது திருமணம் வரை நீடிக்கலாம்
அல்லது இடையிலே முறிந்தும் போகலாம். ஆனால் குழந்தைப்பருவம் தொட்டு
இறுதிக்காலம் வரை நீடித்து நிலைக்கும் உறவு நட்பு ஒன்றுதான். பறவைக்குக்
கூடு, சிலந்திக்கு வலை, மாட்டுக்குத் தொழுவம், மனிதனுக்கு நட்பு, இதயம்
கலந்த ஆழமான நட்பு. இயற்கைக் காற்று. தடை ஏதுமின்றி சுவாசிக்கலாம்.
இலக்கியங்கள் வகைப்படுத்தியிருக்கும் உறவுகளில் நட்பு சிறப்பிடம்
பெறுகிறது. தாய் - பிள்ளை, கணவன் - மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாகப்
போற்றப்படுகின்ற உயர் உறவு நட்பு.
உறவுகளை ஒதுக்கும் சமண முனிவர்கள்கூட நட்பை ஒதுக்கிவிடவில்லை.
நட்பிற்காக நாலடியாரில் மூன்று அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நூல்களின் உட்பொருளை உணர்ந்து கற்று அறிந்தவருடன் கொண்ட நட்பு எப்போதும்
குருத்திலிருந்து கரும்பைத் தின்பது போலாகும். எக்காலத்தும்
நன்மையில்லாதவரிடம் கொண்ட நட்பு கரும்பை அடியிலிருந்து நுனியை நோக்கித்
தின்பது போலகும் தன்மையுடையது. கரும்பை நுனியிலிருந்து தின்றால் வர வர
இனிமை அதிகமாவது போலக் கற்றோர் நட்பு நாளுக்கு நாள் இனிமை
பெருகிக்கொண்டே போகும் அதற்கு எதிராகத் தின்றால் வர வர இனிமை குறைவது
போலக் கல்லாதார் நட்புச் சுவை குறைந்து வெறுக்கப்படும் என்பது நாலடியார்
கூற்று.
அற இலக்கியங்கள் கூறும் நட்பிற்கு முன்னோடியாக அமைந்தவை சங்க
இலக்கியங்களே. மன்னனுக்கும் மக்களுக்கும் நெருக்கமான உறவை வளர்த்து
மக்களின் பிரதிநிதிகளாக விளங்கியவர்கள் தமிழ்ப் புலவர்கள். அரசர்களுக்கு
அறிவுரை வழங்கும் சான்றோராகவும், நல்லறிவு புகட்டும் தூதாகவும்
விளங்கினர். நெருக்கமாகப் பழகினர். இந்த வகையில் மன்னர்களுக்கும்
புலவர்களுக்கும் இறுக்கமான இனிய நட்புறவு நிலவியது. இந்த நட்பின்
தன்மையை சங்கப் பாடல்களில் பார்க்கலாம். அதியமான்; - அவ்வையார் நட்பு,
கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையர், பாரி; - கபிலர் இவர்களுடைய நட்பு
என்றும் பெருமையாகப் போற்றப்படுபவை. தொடரத் தொடர அடிக்கரும்பாக இனிப்பது
நல்ல நட்பு.
அதியமானுடன் மிக ஆழமான நட்புக் கொண்டிருந்த அவ்வை நட்புரிமையோடு
நடக்கவிருந்த ஒரு பெரும் போரைத் தவிர்த்தார். மண்ணையும் மக்களையும்
பெரும் அழிவிலிருந்து காத்தார். உயிர் காக்கவல்ல நெல்லிக்கனியைத் தான்
உண்ணாது அவ்வைக்குத் தந்த நட்புரிமை அதியமானுக்குரியது. போரொன்றில்
அதியன் இறந்தபோது அவ்வை பாடிய 'சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே....'
என்றபாடல் பெரும் துயரம் செறிந்தது. அதியன் அவ்வை நட்பு, நட்பின் ஆழத்தை
வெளிப்படுத்துவது.
இலக்கியங்கள் இன்றுவரை போற்றிக் கொண்டாடும் நட்பு கோப் பெருஞ்சோழன்
என்ற மன்னனுக்கும் பிசிராந்தையர் என்ற புலவருக்கும் இடையிலான நட்பு.
பாண்டிய நாட்டிலே பிசிர் என்ற ஓர் ஊர் இருந்தது. இந்த ஊரிலே வாழ்ந்த ஒரு
பெரும் புலவர் ஆந்தையர். ஊரின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துப்
பிசிராந்தையர் ஆனார். அக்காலத்தில் சிறந்த செய்யுள்களை இயற்றிப் புகழ்
பெற்றிருந்தார் பிசிராந்தையர். 'யாண்டு பலவாக நரையில வாகுதல்.....' (புறம்
191 ) என்னும் இவருடைய பாடல் பெரும் புகழ் பெற்றது. இவரது நாடு பாண்டி
நாடு ஆயினும் சோழ மன்னனாகிய கோப்பெருஞ் சோழனின் நல்லியல்புகளைக்
கேள்வியுற்று அவன் மேல் பேரன்பு கொண்டார். தமிழ்மேல் பெருங் காதல்
கொண்ட சோழன் செய்யுள் இயற்றுவதிலும் வல்லவன். புலவர்களைப் போற்றுவதிலும்
உயர்ந்தவன். இத்தகைய ஒரு மன்னன் மீது தமிழ்ச் சான்றோர் பேரன்பு கொள்வது
இயல்பே. பிசிர் என்ற ஊரிலிருந்து நெடுந்தொலைவில் இருந்தது சோழனின்
உறையூர். சோழனைக் கண்டு வர பிசிராந்தையரால் முடியவில்லை. பிசிராந்தையர்
பற்றிச் செவியுற்ற சோழனும் அவர்;மேல் பெரும் அன்பு கொண்டான். பாண்டிநாடு
செல்வோர் வாயிலாகத் தன் அன்பைப் புவருக்குத் தெரிவித்து வந்தான்.
இந்நிலையில் கோப்பெருங் சோழனது கொடையும் புலவரைப் போற்றும் மாண்பும்
அவனது புதல்வர்களுக்கு எரிச்சலை மூட்டியது. தந்தையுடன் போரிட்டு அரசைக்
கைப்பற்ற தயாராயினர். இந்நிலையில் புலவர் எயிற்றியனார் புதல்வர்களை
எதிர்க்கத் தயாரான சோழனைத் தடுத்தார். 'மன்னா நீ இறந்தபின் இந்த நாடு
அவர்களுக்குத் தானே' என்று கூறி, வர இருந்த சூழ்ச்சிப் போரை
நிறுத்தினார். அதன்பின் புதல்வர்களை மன்னித்து அரசை வழங்கிவிட்டு
வடக்கிருந்து உயிர் நீக்கத் தயாரானான் சோழன். இந்தச் செய்திகள் எதுவும்
பிசிராந்தையாருக்குத் தெரியாது. வடக்கிருக்கச் சென்ற சோழன் உடன் சென்ற
பொத்தியாரை நோக்கி, 'பொத்தியாரே என் நண்பர் பிசிராந்தையார் என்னைக் காண
வருவார் அவரிடம் என் அன்பைத் தெரிவித்து விடுங்கள்' என்றார். 'மன்னா அது
எப்படிச் சாத்தியம்? இங்கு நடந்த எதுவும் அவருக்குத் தெரியாதே?' 'அவர்
நிச்சயம் என்னைக் காண வருவார்.'என்றான் சோழன் உறுதியாக. நட்பின்
மிகுதியால் மன்னர் கருத்திழந்து பேசுகிறார் என அங்கிருந்த சான்றோர்
தமக்குள் பேசிக்கொண்டனர். இது மன்னன் செவியில் விழுந்தது. 'பிசிரோ
னென்பவவென் னுயிரோம் பநனே.....' (புறம் 215) எனும் பாடலைப் பாடி
அவர்களுக்கு விளக்கம் கொடுத்தார். நான் செல்வச் செழிப்போடு இருந்த வேளை
என்னைக்காண வருபவனல்லன். நான் துன்பமுற்றிருக்கும் வேளையிலேயே வரக்
கூடியவன். நிச்சயமாக வருவான். புலவர்களே பிசிராந்தையார் என் உயிர்
நண்பர். நான் வடக்கிருக்கும் செய்தி அறிந்ததும் அவர் இங்கே ஓடி வருவார்.
அவருக்கு என் அருகே ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள். இது என் வேண்டுகோள்
என்றார்.
சோழனின் இறுதி நேரம் வந்துற்ற போது பிசிராந்தையர் ஓடி வந்தார்.
பிசிராந்தையர் வரவு கண்டு எல்லோரும் வியந்தனர். 'என்னுடன் வடக்கிருந்து
உயிர் துறக்கப் பிசிராந்தையார் வருவார். அவருக்காக என் அருகே ஓர் இடம்
ஒதுக்கி வையுங்கள்' என்றார் அரசர்;. நாங்கள் கோப்பெருங்சோழனிடம் எவ்வளவோ
மறுத்து உரைத்தோம். ஆனால் அவரோ நீங்கள் இங்கே வருவீர்கள் என்று
உறுதியுடன் சொன்னார். அவர் சொன்னது போலவே நீங்களும் வந்திருக்கிறீர்கள்.
இருவரில் யாருடைய செயலை வியப்பது என்றுதான் குழப்பம்.' என்றார்
பொத்தியார். 'பொத்தியாரே! ஒருவர் உள்ளத்தை இன்னொருவர் அறிவதே உண்மையான
நட்பு. இதில் வியப்பதற்கு என்ன உள்ளது?' ஆறாத் துயர் கொண்ட
பிசிராந்தையர், மரணத் தறுவாயிலும் மன்னன் கொண்டிருந்த நட்பின் ஆழம்
அவரைத் துயரத்தின் எல்லைக்குக் இட்டுச் சென்றது. மன்னன் வடக்கிருந்து
உயிர்நீத்த இடத்திற்கு அருகே தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தானும்
வடக்கிருந்து உயிர்நீத்தார் பிசிராந்தையர். கண்கொண்டு காணாத இருவரின்
நெங்சார்ந்த நட்பின் ஆழத்தை பொத்தியார் துயரம் சொரியப் பாடினார். காலம்
உள்ளவரை போற்றப்பட வல்ல இலக்கிய நட்பு இதுவெனச் சான்றோர் போற்றுவர்.
பாரியின் அரசவை. பாரியின் கொடை வேண்டி உழவர் மூவர் அவைக்கு வருகின்றனர்.
அவர்கள் குறை கேட்டு கொடை வழங்க ஆணையிடுகின்றான் பாரி. வந்தோர் மூவரும்
மூவேந்தர்கள்;. பறம்புமலை ஏறிப் பாரியை வெல்லமுடியாத மூவேந்தர்,
போலியாக, வேடதாரிகளாய் அவைக்குள் நுளைந்திருந்தனர். அவர்கள் மூவரும்
மறைத்து வைத்திருந்த கை வாளால் பாரியைக் குத்திவிடுகின்றனர். மூவரையும்
சூழ்ந்த வீரர்களை விலக்கி 'கொடை வேண்டி வந்தவர்களைக் கொல்லுதல் ஆகாது.
அவர்களைப் பத்திரமாக அனுப்பி வையுங்கள்.' என மரணத் தறுவாயிலிருந்த பாரி
ஆணையிடுகிறான். அவனுடன் இருந்த அருமை நண்பர் கபிலர் தானும் உடன்
தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள முற்படுகின்றார். இதனைக் கண்ட பாரி
கையசைத்து 'ஒழிக' எனக்கூறி கபிலரைத் தடுத்து. தற்கொலை செய்வதைத்
தவிர்க்கிறார். அவரது கடமைகளை உணர்த்தி அவையிலேயே உயிரை விடுகிறான் பாரி.
பாரியோடு தானும் மடிந்து போகவில்லையே என்று மனமுடைந்து போகின்றார்
கபிலர். பல இலக்கியக் குறிப்புகள் கபிலர் பிராமண குலத்தவர் எனக்
குறிப்பிடுகிறது. எனினும் வருண பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தூய்மையான
தமிழ்ச் சான்றோனாகவே கபிலர் வாழ்ந்திருக்கிறார். பாரியுடன் உயிர்
துறக்க முயன்று முடியாது போகவே தன் பணிகளை நிறைவ செய்யும் வரை
காத்திருந்து பின் பாரிக்காகவே உயிர் துறக்கும் அவரது நட்புணர்வு
உயர்வானதாகவே போற்றப்பட்டு வருகின்றது.
இங்கே சுட்டப்பட்ட செய்திகள் புலவர்களுக்கும் அரசர்களுக்குமிடையேயான
நட்புறவையே சுட்டுகின்றன. இலக்கியங்களை ஆக்கியவர்கள் புலவர்கள். அவர்கள்
பற்றிய நிகழ்வுகளே பெரிதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மன்னர்களிடையே
ஆழமான நட்புறவு இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடவில்லை. போரை
முன்னிட்டும், அரசியலை முன்னிறுத்தியும் சில அரச உறவுகள் பதிவு
செய்யப்பட்டிருக்கின்றன. சாதி மத வேறுபாடின்றி நண்பர்களால் மட்டுமே பழக
முடியும். புராணக் கதைகளில் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள்
கர்ணனும் துரியோதனனும். இவர்களின் நட்பு ஆழமானது. ஆத்மார்த்தமானது.
தேரோட்டி மகனை அங்கதேச அரசனாக்கியவன் துரியோதனன். இந்த நட்பு பெரிதும்
பாராட்டப்பட வேண்டியது.
தற்காலத்திலேயும் வாஜ்பாய் கருணாநிதி நட்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி
உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. இந்தக்கூட்டணி வாஜ்பாயின் அரசு தனது
ஐந்து ஆண்டு காலத்தையும் பூர்த்தி செய்ய உதவியது. காங்கிரஸ் கட்சி
சாராத ஒருவர் முதல் முதலாக ஆட்சி செய்ய உதவியது. இதனை அரசியல் நட்பென்றே
குறிப்பிடலாம். எதுவோ நல்லது நடந்திருக்கிறது.
சங்க இலக்கியத்தில் நட்புக்கு இலக்கணமாகத் திகழும் ஓர் உறவு தலைவிக்கும்
தோழிக்கும் உரியதாகும். சங்ககால இலக்கியங்களில் அக இலக்கியங்கள்
தனிச்சிறப்புப் பெறுவன. காதல் உணர்வு சான்ற தலைவன் தலைவி ஆகிய இரு
பாத்திரங்களுக்கு இடையேயான உணர்ச்சிப் பெருக்கின் பல் வகை வெளிப்பாடே
அக இலக்கியங்களின் கருப் பொருள். வாழ்விடத்திற்கேற்ப தொடர்பு படுகின்ற
பொருட்களும் காட்சிகளும் வேடுபடுகின்றனவே அன்றி கருப்பொருளாகிய காதலில்
மாற்றமில்லை. காதல் வயப்பட்ட இருவரையும் தலைவன் தலைவி என அழைப்பது அக
இலக்கிய மரபாகும். இவர்கள் பொது மக்களாகவோ அரச குலத்தவர்களாகவோ
இருக்கலாம். இவர்களோடு நட்பாக இருக்கும் தோழன் தோழியரை இலக்கியம்
பாங்கன் பாங்கி எனக் குறிப்பிடுகிறது. இந்தக் காதல் களத்தில் தலைவியோடு
பெரிதும் உடனிருக்கும் பாத்திரம் தோழியாவாள். அதிகாரத்திலும்
வலிமையிலும் மேம்பட்டிருக்கும் ஆணாகிய தலைவனோடான காதலை வழிநடத்தித்
திருமணம் வரை கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறாள் தோழி.
தலைவியின் அகவாழ்வில் தோழி பெற்றிருக்கும் உயர் பங்கு தலைவனின் காதல்
வாழ்வில் தோழனுக்கு இருக்கவில்லை. தலைவனோடு தோழி பேசுவதற்கு உடன்பட்ட
இலக்கிய மரபு தலைவியோட தோழன் பேசுவற்கு உடன்படவில்லை. என்னதான் தோழனாக
இருந்தாலும் ஆண்மகன்தானே! காதலுற்ற பெண்கள் பிற ஆடவரை நோக்குதல்
தலைவனின் நண்பனாக இருப்பினும் இலக்கியங்கள் தவிர்க்கவே
முயன்றிருக்கின்றன. தோழன் தலைவியின் முன் எதிர்ப்பட்டபோதும் தலைவி அவனை
வழிப்போக்கனாகவே கருதுவாள். ஏனெனில் அவளுக்கு தலைவனின் தோழர்களைத்
தெரியாது. என்ன ஒரு அருமையான தத்துவம். எப்பொழுதும் எந்த விதத் தப்பும்
நடந்துவிடக்கூடாது என்ற பாதுகாப்பு. தற்காலத்திலும் இது பேணப்படுவது
அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தப்புகள் நடந்த வரலாறும் உள்ளது. இலக்கிய
வரைக்கறைவுகள் போற்றப்பட வேண்டியவையே. பெண்மையை கழங்கப்படுத்துவது,
சந்தேகப்படுவது என்று பெண்ணியம் பேசுபவர்கள் வாதிட்டாலும் உண்மைகளை
வரவேற்றுத்தான் ஆகவேண்டும். தலைவியின் இருப்பிடம் அறிந்து கூறுவதும்,
அவள் வருகையை உணர்த்துவதுமே தோழனின் தலையாய கடமைகளாக இருந்துள்ளன.
மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையானது. அதனால்
ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக்
காரணமாகவும் அது அமைந்து விடுகிறது. பெற்ரோர்களது அன்பு, உற்றார்
உறவினர்களின் பாசமும் நேசமும் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து
விடுகிறது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை நெறிப்படுத்தி வழிநடத்த
முடியாத நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகும் சந்தர்ப்பங்களில் அவர்கள்
பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை திருத்த முனைவது அன்றாட
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளாகும். இலக்கியங்களில்,
காதலுக்கு அடுத்தபடியாகப் பேசப்படும் உறவு நட்பே. அன்பு, காதல், நட்பு
மூன்றும் வௌ;வேறானவை. இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருந்தாலும்
ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான்
செய்கிறது. இதனைக் கவனமாகக் கையாள வேண்டும். நட்பு என்பது ஒரே அச்சில்
வார்க்கப்பட்ட பொருட்களைப் போல அமைந்து விடுகிறது. ஒரு நண்பனின் மறு
உருவமாக மற்றவன் மாறிவிடுகிறான். சிந்தனைப் பாங்கு, பண்பாடு, நடத்தை.
நடை. உடை, பாவனைபோன்ற சகல விவகாரங்களிலும் ஒருவன் தனது நண்பனைப்
பிரதிபலித்துக் காட்டுகிறான். ' உன்னைபபற்றிச் சொல், உன் நண்பனைப் பற்றி
நான் சொல்கிறேன்' என்பது பழமொழி. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகி
விடுகின்றனர். தேர்ந்தெடுக்கும் நிறம் ஒருவர் குணத்தைக் காட்டும். ஆனால்
தேர்ந்தெடுக்கும் நட்போ அவரையே காட்டும்.
‘Birds of a feather flock together’
என்பது பொருத்தமாக இருக்கும். அந்த
அளவுக்கு நட்பு புனிதமான. வலிமையானது. ஆத்மார்த்தமானது. மழை நீர் போல
இயற்கையிலேயே சுத்தமானது. பெற்றோர் மற்றும் உறவினர்களுக்குப் பின்
வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்களே.
வீட்டுக்கு எல்லையுண்டு. ஊருக்கு எல்லையுண்டு, நாட்டுக்கு எல்லை உண்டு,
ஆனால் நட்புக்கு எல்லை கிடையாது. நட்பு என்பது முகம் பார்த்துப்
பழகுவதல்ல. இதயம் கலந்து பழகுவது. உதட்டிலிருந்து பேசும் பேச்சுக்களால்
நீடிப்பதல்ல. உள்ளத்திலிருந்து வரும் ஆழமான வார்த்தைகளால் நீடிப்பது. 'அன்பிற்கும்
உண்டோ அடைக்குந்தாழ்....' 'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண்
களைவதாம் நட்பு.' இடுப்பில் கட்டியிருந்த ஆடை நழுவும்போது எப்படி இரண்டு
கைகளும் உடனடியாக ஆடையை இறுகப் பற்றுகின்றனவோ, அதுபோல நண்பனுக்குத்
துன்பம் வந்தால் தொலைவில் நின்று வேடிக்கை பார்க்காது ஓடிவந்து உதவுவது
நட்பு. கண்கள் அழுதால் துடைப்பது கைத்துண்டு. இதயம் அழதால் துடைப்பது
நட்பு. இதனையே 'நீ உலகின் அதிபதியாய் இருப்பினும் ஒரு நண்பன்
இல்லாவிடில் ஏழைதான்' என்று ஒர் அறிஞர் கூறினார். நண்பர்களைப் பெருமைப்
படுத்தும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை
உலக நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நல்ல நட்பு வளர்பிறை போன்றது. நாளுக்குநாள் வளரும். தீய நட்பு தேய்பிறை
போன்றது. சிறிது சிறிதாகத் தேய்ந்து பின்னர் மறைந்து போகும். எனவே நல்ல
நட்பை நேசிப்போம்! நல்ல நட்பை வாசிப்போம்!! நல்ல நட்பையே சுவாசிப்போம்!!!.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|