ஆலந்தூர் கோ.மோகனரங்கத்தின் குறும்பாக்கள்:
தமிழுக்குப் புதுவரவு
பேராசிரியர் இரா.மோகன்
“காலத்தின் அடிச்சுவ டாய்க்
கவிதைகளைத்
தரும் உயர்கவிஞன்…
சீலத்தின் மேலே நிற்பான்
சிந்தனையில்
ஆழம் காண்பான்” (நூலகத்தால் உயர்ந்தேன், ப.620)
என்பது
முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கனுக்குக் கவிக்கோ
அப்துல் ரகுமான் சூட்டியுள்ள புகழாரம். கவிதை, காப்பியம், கவிதை நாடகம்,
சிறுவர் இலக்கியம், வாழ்க்கை வரலாறு, புதினம், சிறுகதை, உரைநடை, கட்டுரை,
கடித இலக்கியம், ஆய்வு எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த தொண்ணூறுக்கு
மேற்பட்ட நூல்களைப் படைத்துத் தந்துள்ள தனிப்பெருமைக்கு உரியவர்
ஆலந்தூர் மோகனரங்கன். என்றாலும், ‘என் பக்கத்தில் மனைவி இருந்த நேரத்தை
விடக் கவிதை இருந்த நேரமே மிகுதி’ (நூலகத்தால் உயர்ந்தேன், ப.832)
என்னும் அளவிற்கு அவருக்கும் கவிதைக்குமான உறவு அழுத்தமானது; ஆழமானது;
இயல்பானது; ஈடுஇணை இல்லாதது. கவிதைத் துறையிலும் மரபுக் கவிதையில்
மட்டுமன்றி, ஐக்கூ கவிதை உலகிற்கும் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் நல்கியுள்ள
பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர் வெளியிட்டுள்ள ஐக்கூ கவிதைத்
தொகுப்புகள் வருமாறு:
1. குறுந்தொகையின் குழந்தைகள் (2009): 1753 குறும்பாக்களில் பெருந்
தொகுப்பு.
2. ஆலந்தூர் மோகனரங்கன் குறும்பா இரண்டாம் தொகுப்பு (2010): 1000
குறும்பாக்கள்.
3. ஒரு பல் ஆடுகிறது! (2015): 397 குறும்பாக்கள்.
4. குருவி குரங்கு குட்டிச்சுவர் (2017): 1330 குறும்பாக்கள்.
இனி, தெரிந்தெடுத்த பத்துக் குறும்பாக்களின் வழி நின்று ஆலந்தூர்
கோ.மோகனரங்கத்தின் படைப்புத் திறம் குறித்துக் காண்போம்.
1. ‘இமயமலையே என்றாலும் வேண்டேன்’
‘மன்னும் இமயமலை எங்கள் மலையே!’ என்று பெருமிதம் பொங்க முழங்கினார்
கவியரசர் பாரதியார். ஆலந்தூராரோ கவியரசரிடம் இருந்து மாறுபடுகின்றார்;
‘இமயமலையை மதிக்க மாட்டேன்’ என்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம்
வித்தியாசமானது:
“இமயமலையை மதிக்க மாட்டேன்
ஏனென்றால் அது
தமிழ் படிக்கவில்லை!” (குருவி குரங்கு குட்டிச்சுவர், ப.142)
‘தமிழ் விடு தூது’ ஆசிரியரின் அடிச்சுவட்டில் ‘இருந்தமிழே உன்னால்
இருந்தேன் – இமயமலையே என்றாலும் வேண்டேன்’ என அறுதியிட்டு உரைக்கின்றார்
ஆலந்தூரார்.
2. சுண்ணாம்பு – குறும்பா ஈற்றடி
கவிக்கோ அப்துல் ரகுமானின் கண்ணோட்டத்தில் ஐக்கூ என்பது ‘சின்னதாக
இருக்கும் பெரிய அற்புதம்’ (இன்றிரவு பகலில்…, ப.6). அதன் ஒவ்வோர்
அடியும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை வாய்ந்தவை. அதிலும் அதன் ஈற்றடி
அழகும் ஆற்றலும் மிக்கது; ‘அது ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு
அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக்கவிதையையும் வெளிச்சப்படுத்தும்’ (அப்துல்
ரகுமான், சோதிமிகு நவகவிதை, ப.86).
“வெற்றிலை – முதல் வரி
பாக்கு – இரண்டாம் வரி
சுண்ணாம்பு – குறும்பா ஈற்றடி”
(ஆலந்தூர் மோகனரங்கன் குறும்பா: இரண்டாம் தொகுப்பு, ப.137)
என ஐக்கூவின் முப்பரிமாணங்களையும் ஐக்கூ வடிவிலேயே அழகுற
எடுத்துரைக்கின்றார் ஆலந்தூர் கோ.மோகனரங்கன்.
3. ‘ஐக்கூவுக்கு முரண் அழகு!’
‘கண்ணுக்கு மை அழகு’ என்பது போல, ‘கவிதைக்கு முரண் அழகு’ எனலாம்.
சொல்லிலும் பொருளிலும் முரண் அமைத்துப் பாடுவது என்பது இன்றைய ஐக்கூ
கவிஞர்களுக்கு என்றே வாய்த்த ஒரு தனித்திறம் ஆகும். ஆலந்தூர்
கோ.மோகனரங்கனும் இவ் வகையில் சிறந்து விளங்குகின்றார். ஓர்
எடுத்துக்காட்டு:
“குழந்தை அழுகிறது
பாலுக்கு
பெற்றோர் பால்காவடி!” (குருவி குரங்கு குட்டிச்சுவர், ப.22)
பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தை பாலுக்கு அழுகிறது; பெற்றோரோ
முருகனுக்குப் ‘பால் காவடி’ எடுக்கிறார்கள்! திறமான முரணின் ஆட்சி!
4. ‘இன்று உன் எதிரில்!’
‘நேற்று வரப் போவதில்லை, நாளை நம் கையில் இல்லை, இன்று நமது என்று
கொண்டால், இல்லை மனதோடு தொல்லை’ (ஆயிரம் பாடல்கள், ப.382) எனத் தம் திரை
இசைப் பாடல் ஒன்றில் எடுத்துரைப்பார் கவிப்பேரரசு வைரமுத்து. இக்
கருத்தினை இன்னமும் சுண்டக் காய்ச்சி இரத்தினச் சுருக்கமான ஐக்கூ
வடிவில் தந்துள்ளார் ஆலந்தூர் கோ.மோகனரங்கன்:
“நேற்று என்பது நெஞ்சில்
நாளை என்பது கனவில்
இன்று உன் எதிரில்!” (குறுந்தொகையின் குழந்தைகள், ப.68)
‘நம் கண்முன்னே இருப்பது – நமக்கு வசப்படுவது – இன்று தான்; எனவே, அதனை
நல்ல வண்ணம் பயன்படுத்திக் கொள்வதே வாழும் முறைமை’ என
அறிவுறுத்துகின்றார் ஆலந்தூரார்.
5. ‘திறமை தான் நமது செல்வம்’
வாழ்க்கையில் முன்னேறப் பெரிதும் தேவைப்படுவது திறமையா? அதிர்ஷ்டமா?
எளிதில் எவரும் விடை சொல்ல முடியாத ‘மில்லியன் டாலர் வினா’ இது! “ஒரு
மனிதனுக்குத் திறமை மட்டும் போதுமானதாக இல்லை; தோதான சந்தர்ப்பங்களும்
வாய்க்க வேண்டும். சந்தர்ப்பம் வாய்க்காத திறமையோ, திறமை
இல்லாதவனுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பமோ பயன்படுவதில்லை” (எனது
சுயசரிதம், பக்.5-6) என்பது கவியரசர் கண்ணதாசனின் அனுபவ மொழி. சரி,
இதற்கு ஆலந்தூராரின் விடை என்ன என்று கேட்கிறீர்களா?
“வாய்ப்பு என்னும்
தாய்ப்பாலில் வளர்ந்தேன்;
திறமையில் முன்னேறி நின்றேன்!” (குறுந்தொகையின் குழந்தைகள்,
ப.115)
என்பது ஆலந்தூராரின் அசைக்க முடியாத நம்பிக்கை; உயிர்க் கொள்கை.
‘வாழ்வதற்கு வாய்ப்பு; நிலைத்து நிற்பதற்குத் திறமை’: இதுவே அவரது தாரக
மந்திரம்.
6. ‘எட்ட முடிகின்ற இமயம்!’
‘வாழ்க்கை என்பது ஒரு பூந்தோட்டமா அல்லது போராட்டமா?’ என்று கேட்டால்,
ஆலந்தூர் கோ.மோகனரங்கன் இரண்டுமே இல்லை என்கிறார். பின், எது தான்
வாழ்க்கை என்ற கேள்விக்கு அவர் முத்தான மூன்றே சொற்களால் தரும் பதில்
இதுதான்:
“வாழ்க்கை என்பது
பூங்காவும் அல்ல; போர்க்களமும் அல்ல;
எட்ட முடிகின்ற இமயம்!” (குறுந்தொகையின் குழந்தைகள், ப.71)
தொலைநோக்குடன், திட்டமிட்டு உழைத்தோம் என்றால், வாழ்க்கை ‘எட்ட
முடிகின்ற இமயம் தான்!’ என்பது ஆலந்தூராரின் முடிந்த முடிபு.
7. ‘வாழும் பயிற்சி எப்போது?’
மனிதனுக்கு வானத்தில் பறக்கத் தெரிகின்றது; கடலில் நீந்த முடிகின்றது.
ஆனால், மண்ணில் நல்ல வண்ணம் – வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்பது மட்டும்
தெரியவில்லை; ‘மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான், வாழும் வகை புரிந்து
கொண்டான், இருந்த போது மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை… மனிதனாக
வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை’ என வரும் பழைய திரை இசைப் பாடல்
ஒன்று உண்டு.
“நிலத்தில் நடைப் பயிற்சி
நீரில் நீச்சல் பயிற்சி
வாழும் பயிற்சி எப்போது?” (குறுந்தொகையின் குழந்தைகள், ப.186)
என மனித குலத்திற்கு ஆலந்தூரார் விடுகக்கும் வினா பொருள் பொதிந்தது.
‘ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப, கோடியும் அல்ல பல’ (33) என்னும்
திருக்குறள் இங்கே ஒப்புநோக்கத் தக்கது.
8. ‘நல்ல பார்வைக்கு எப்போது வருவீர்?’
‘மனிதனுக்குக் கிட்டப் பார்வை இருக்கலாம், எட்டப் பார்வை இருக்கலாம்,
கெட்ட பார்வை ஒருபோதும் இருக்கவே கூடாது’ என்பார்கள். இருபத்தியோராம்
நூற்றாண்டு மனிதனை நோக்கி ஆலந்தூரார் தொடுக்கும் கூர்மையான கேள்விக் கணை
இதுதான்.
“ஒன்று சாதிப் பார்வை
மற்றொன்று கட்சிப் பார்வை
நல்ல பார்வைக்கு எப்போது வருவீர்?”
(குறுந்தொகையின் குழந்தைகள், ப.37)
‘சாதி – வாழ்வில் எதையாவது சாதி; இதுவே எனது கட்சி (கொள்கை முழக்கம்)
என்ற அளவில் வேண்டுமானால் சாதியும் கட்சியும் இருக்கலாம்’ என்பது
ஆலுந்தூராரின் அழுத்தமான கருத்து.
9. ‘குறளால் பிறந்த குறும்பா(?)’
நகையினை அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலும், முறுவலித்தலும் என
மூன்று வகைப்படுத்துவார் தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர்.
படிப்பவரை மூன்றாம் பிறை போல முறுவலிக்கச் செய்யும் வல்லமையும் ஆலந்தூர்
கோ.மோகனரங்கனுக்கு வசப்பட்டுள்ளது. பதச்சோறு ஒன்று:
“கட்சி மாறிக் கட்சி மாறிக்
காலம் தள்ளினார்
‘நிலமிசை நீடு வாழ்வார்!’” (ஒரு பல் ஆடுகிறது!, ப.77)
ஆலந்தூராரின் கருத்தில் ‘குறளால் பிறந்த குறும்பா’ இது. ஒரு வகையில் இது
‘குறும்பு தான்!’ என்று சொல்லத் தோன்றுகிறது நமக்கு!
10. ‘இலக்கியம் எதற்கு?’
‘இன்றைய கணினி யுகத்திற்கு இலக்கியம் எதற்கு?’ இலக்கியம் படிப்பதால்
என்ன கிடைக்கும் எங்களுக்கு?’ என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும்
இளைய தலைமுறையினருக்கு ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஐக்கூ வடிவில் தரும்
பதில் இது:
“கூழுக்கு உப்பும்
குளிருக்குப் போர்வையும்
கொண்டு வரும் இலக்கியம்!” (குருவி குரங்கு குட்டிச்சுவர்,
ப.129)
நமக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் இரண்டு: ஒன்று, உணவில் சுவை கூட்ட
உப்பு; இன்னொன்று, குளிருக்குப் போர்த்திக் கொள்ள போர்வை. இலக்கியம்
இரண்டும் கற்பதால் கிடைத்து விடுகின்றன என்றால் போதாதா? வேறென்ன
வேண்டும்?
நிறைவாகக் கூறுவது என்றால், “குறும்பாக்களும் தனிச்சுவை. தனிப் பேரழகு.
பன்முகச் சிந்தனைச் சிதறல். தமிழுக்குப் புதிய வரவு” (நூலகத்தால்
உயர்ந்தேன், ப.1048) என்னும் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின்
மதிப்பீடு முற்றிலும் உண்மையே; வெறும் புகழ்ச்சி இல்லை.
'தமிழாகரர்'
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|