வள்ளுவர் பார்வையில் புறநானூற்று இறைமாட்சி

முனைவர் இர.பிரபாகரன்


னிதன் இவ்வுலகில் எப்படி வாழவேண்டும் என்று வரையறுத்து, வையத்து வாழ்வாங்கு வாழ வழி காட்டும் வாழ்வியல் நூல் திருக்குறள். வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுபாட்டையும் ஆராய்ந்து அவற்றிற்குகந்த அறிவுரைகளைத் திருவள்ளுவர் திருக்குறளில் வழங்குகிறார். இல்லறம், துறவறம் ஆகிய கோட்பாடுகளைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள் எப்படி வாழவேண்டும் என்று அறத்துப்பாலில் கூறப்பட்டிருக்கிறது. அது போல், அரசர்களும் அமைச்சர்களும் எத்தகைய குணநலன்கள் உடையவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் எப்படிப் பணிபுரிய வேண்டும் என்ற கருத்துகளை விளக்கமாகவும் தெளிவாகவும் வள்ளுவர் கூறியிருப்பதை பொருட்பாலில் அரசியல், அமைச்சியல் போன்ற பகுதிகளில் காணலாம். குறிப்பாக, “இறைமாட்சி” என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் ஒரு மன்னனுக்கு இருக்க வேண்டிய குணநலன்களைக் குறிப்பிடுகிறார்.

தமிழகத்தின் பொற்காலம் என்று கருதப்படும் சங்க காலத்தில் (கி.மு. 500 - கி.பி. 200) வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு அக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்களைத் தவிர வேறு சிறப்பான சான்றுகள் இல்லை. சங்க கால இலக்கியத்தில் ஒன்றான புறநானூறு, அக்காலத்தில் ஆட்சி புரிந்த மன்னர்கள் எத்தகைய குணநலன்கள் உடையவர்களாக இருந்தார்கள், அவர்கள் ஆட்சி எப்படி இருந்தது போன்ற அரிய கருத்துகள் அடங்கிய சிறப்பான நூல். புறநானூற்றில் நாம் காணும் மன்னர்களின் குணநலன்களைத் திருக்குறளில் வள்ளுவர் கூறிய கருத்துகளோடு ஒப்பிடுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

இறைமாட்சி என்ற அதிகாரத்தில் மன்னனுக்குரிய பண்புகளை குறட்பாக்கள் 382, 383, 384, 386, 387, 388, 389 மற்றும் 390 ஆகியவற்றில் வள்ளுவர் கூறுகிறார். இக்குணங்களை ஐந்து பிரிவாகப் பிரிக்கலாம். அவை: 1)அஞ்சாமை, துணிவுடைமை, ஊக்கம், தூங்காமை, மறனிழுக்காமை, மானம், 2) அறிவு, கல்வி, 3) ஈகை, கொடை, அளி, 4) காட்சிக்கு எளிமை, கடுஞ்சொல்லன் அல்லாமை, இன்சொல் கூறல், செவிகைப்பச் சொற்பொறுத்தல் , 5) அறவழி நிற்றல், முறைசெய்து காப்பாற்றுதல், செங்கோல் செலுத்துதல், குடியோம்பல்.

ஒவ்வொரு பிரிவில் உள்ள குணங்களும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையவை. முதல் பிரிவில், ”தூங்காமை” என்ற சொல் ”காலம் தாழ்த்தாது விரைந்து செயல் படுதல்” என்றும், ”துணிவுடைமை” என்ற சொல் ”மனத் திட்பம்” என்றும் பொருள்படும். இந்தப் பிரிவில் உள்ள குணங்களெல்லாம் வீரத்தோடு போர்புரிந்து வெற்றி கண்ட மன்னர்களிடம் இருக்கக் கூடிய தொடர்புடைய குணங்களாகும். அடுத்த பிரிவில், இயற்கையாக உள்ள அறிவைப் பெருக்குவதற்குக் கல்வி பயன்படுவதால், அறிவும் கல்வியும் தொடர்புடையவை எனக் கருதலாம். மூன்றாவது பிரிவில் உள்ள ”அளி” என்ற சொல்லுக்கு “ அன்பு, அருள், இரக்கம்” என்று பொருள். மற்றும், இந்த அதிகாரத்தில் ஈகையும் கொடையும், “வேண்டுவர்க்கு வேண்டுவன கொடுத்தல்” என்ற ஒரே பொருளில் கூறப்பட்டிருப்பதாகப் பரிமேலழகர் விளக்கம் அளிக்கிறார். ஆகவே, அளி என்னும் குணம், ஈகைக்கும் கொடைக்கும் அடிப்படையாக இருப்பதால் இப்பிரிவில் உள்ள குணங்கள் மூன்றும் தொடர்புடையவையாகும். நான்காவது பிரிவில் காணப்படும் “செவிகைப்பச் சொற்பொறுத்தல்” என்னும் பண்பு, தான் விரும்பாதவற்றை ஒருவர் தன் காது கசக்குமாறு கூறினாலும் பொறுத்துக் கொள்வது என்று பொருள்படும். இப்பிரிவில் உள்ள நான்கு குணங்களும், ஒரு மன்னன் மற்றவர்களோடு பழகும்போது எப்படி நடந்து கொள்ளவெண்டும் என்பதை நேர்முகமாகவும் எதிர்மறையாகவும் கூறுவதால், இவை நான்கும் தொடர்புடைய குணங்களாகும். ஐந்தாவது பிரிவில் காணப்படும் ”முறைசெய்து காப்பாற்றுதல்” என்பதற்கு, நடுவு நிலைமையோடு நீதி வழங்கி மக்களைக் காப்பாற்றுதல் என்று பொருள். செங்கோல் செலுத்துவது என்பது நல்லாட்சி நடத்துவது என்ற கருத்துள்ள சொல். முறை செய்து காப்பாற்றுவதும் செங்கோல் செலுத்துவதும் அறத்தின் அடிப்படையில் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்படும் செயல்கள். இப்பிரிவில் தொகுக்கபட்டவைகளை குணநலன்கள் என்பதைவிட மன்னனின் செயல்முறைகள் என்பது பொருந்தும். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய நல்லாட்சி முறை என்பது தெளிவு.

இங்கு குறிப்பிட்ட குணநலன்களும் செயல்முறைகளும் புறநானூற்று மன்னர்களிடம் இருந்தன என்பதற்குப் புறநானூற்றில் பல சான்றுகள் உள்ளன. அச்சான்றுகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

அஞ்சாமை, துணிவுடைமை, ஊக்கம், தூங்காமை, மறனிழுக்காமை, மானம்: சேரன் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்ற மன்னன் நிலத்தைப் போன்ற பொறுமையும், ஆகாயத்தைப் போல் பரந்த அறிவும் ஆராயும் திறனும், காற்றைப் போன்ற வலிமையும், தீயைப் போல் அழிக்கும் திறமையும், குளிர்ந்த நீரைப் போல் அளியும் உடையவன் என்று முரஞ்சியூர் முடிநாகனார் என்ற புலவர் கூறுகிறார் (புறம் – 2). சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் படை வலிமையையும் போர் புரியும் ஆற்றலையும் வியந்து பாராட்டி, அவனை எதிர்த்தவர்களின் நாட்டு மக்கள் “தாயில் தூவாக் குழவி போல் ஓவாது கூவும்” என்று பரணர் கூறுகிறார் (புறம் - 4). சோழன் கரிகால் பெருவளத்தானின் வலிமையினாலும், போர் புரியும் ஆற்றலாலும் அவன் பகைவரை அழிப்பதை இரவும் பகலும் கருத்தாகக் கொண்டவன் என்றும், அவன் பகைவர்களின் நாட்டை தீயினால் அழித்து அந்நாட்டு மக்கள் கதறி அழும் வகையில் அங்குள்ள பொருட்களை கொள்ளை கொண்டான் என்றும் கருங்குழல் ஆதனார் பாடுகிறார் (புறம் - 7). பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரத்தையும் வெற்றியையும் “வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய தண்டா ஈகைத் தகைமாண் குடுமி” என்று காரிகிழார் பாராட்டுகிறார் (புறம் - 6). பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தன்னை எதிர்த்துப் போரிட்ட எழுவரை வென்று வாகை சூடியதை இடைக்குன்றூர் கிழார் , “நாடுகெழு திருவிற் பசும்பூண் செழியன் பீடும் செம்மலும் அறியார் கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே” என்று புகழ்கிறார் (புறம் - 76). மற்ற புலவர்களும் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வீரத்தையும், போர் செய்யும் ஆற்றலையும் அவன் பெற்ற வெற்றிகளையும் புகழ்ந்தும் வியந்தும் பாடியுள்ளனர் (புறம் 18, 19, 23, 24, 25, 26,77, 78, 79, 371, 372). இந்த மன்னர்களைப் போல், எதற்கும் அஞ்சாது, துணிவோடும் ஊக்கத்தோடும் காலம் தாழ்த்தாது செயல்பட்டுப் போர்க்களத்தில் பெரும் சாதனைகளைப் புரிந்த மன்னர்களைப் பற்றிய செய்திகளைப் புறநானூற்றில் பல பாடல்களில் காணலாம்.

வெண்ணி என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனின் அம்பு சேரமான் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால், அவன் வெட்கி, வடக்கிருந்து உயிர் துறந்தான் என்ற செய்தி புறநானூற்றுப் பாடல் 66-இல் காணப்படுகிறது. மற்றும், சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணானிடம் தோல்வியுற்றுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது, பசியின் கொடுமையால் சிறைக்காவலரிடம் உணவு கேட்டான். அவர்கள் அவனுக்கு உணவு கொண்டு வருவதற்கு காலம் தாழ்த்தியதைக் கண்டு வெட்கப்பட்டு, தன்மானத்தால் உந்தப்பட்டு வடக்கிருந்து உயிர் துறந்தான் (புறம் - 74). இந்தப் பாடல்கள் சங்க காலத் தமிழ் மன்னர்கள் மானம் மிகுந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்குச் சான்றாக உள்ளன.

அறிவு, கல்வி: “ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்று பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூறியதிலிருந்து (புறம் - 183) மன்னர்கள் கல்வியின் பயனை நன்கு அறிந்திருந்தனர் என்பது தெரிய வருகிறது. மற்றும், புறநானூற்றுப் பாடல்களை இயற்றிய 156 புலவர்களில் 13 பேர் அரசர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பாடல்களை இயற்றிய மன்னர்களின் பட்டியலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் சில சிற்றரசர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆகவே, மன்னர்கள் கல்வியின் சிறப்பை அறிந்திருந்தது மட்டுமல்லாமல் கல்வி கற்றவர்களாகவும் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அமைச்சர்களோடும் புலவர்களோடும் கலந்து ஆலோசித்து நல்லாட்சி செய்து மக்களைக் பாதுகாத்தார்கள் என்ற வரலாற்றுச் செய்திகளிலிருந்து, மன்னர்கள் அறிவுடையவர்களாகவும் இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.

ஈகை, கொடை, அளி: “பெரிய கடலின் ஆழத்தையும், அகன்ற உலகத்தின் பரப்பையும், காற்று உலாவும் திசையையும், வெறுமையாக உள்ள ஆகாயத்தையும் அளந்து அறிய முடிந்தாலும் முடியும்; ஆனால் உன் அறிவு, அருள், கண்ணோட்டம் ஆகியவற்றை அளத்தல் அரிது” என்று குறுங்கோழியூர் கிழார், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் குணநலன்களைப் பாராட்டுகிறார் (புறம் - 20). சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைக் காணச் சென்றால் அதிக நேரம் காத்திருக்காமல் பொன்னாலான தாமரை மலர்களைப் பெறுவாய் என்று கூறி ஆலத்தூர் கிழார் ஒரு பாணனை ஆற்றுப்படுத்துகிறார் (புறம் - 69). பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், தான் தலையாலங்கானத்துப் போரில் வெற்றி பெறாவிட்டால் தனக்கு “புரப்போர் புன்கண் கூற இரப்போர்க்கு ஈயா இன்மை” வந்தடையட்டும் என்று சூளுரை கூறுகிறான் (புறம் - 72). “அலத்தற் காலையாயினும் புரத்தல் வல்லன் (புறம் - 103)” என்று அதியமான் நெடுமான் அஞ்சியின் அளவற்ற ஈகையை அவ்வையார் பாடுகிறார். முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரியின் கொடைத்திறம் மழையை ஒத்தது என்று கபிலர் பாரியின் கொடையைப் புகழ்கிறார் (புறம் - 107). “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய் அலன்” (புறம் - 134) என்று உறையூர் ஏணிச்சேறி முடமோசியார், ஆய் அண்டிரனின் வள்ளல் தன்மையை வியந்து பாடுகிறார். எண்ணற்ற தேர்களை மலையமான் திருமுடிக்காரி இரப்போர்க்கு அளித்த செய்தியை கபிலர் கூறுவதைப் புறநானூற்றுப் பாடல் 123-இல் காணலாம். மற்றும், மூவேந்தர்களின் அல்லது சிற்றரசர்களின் ஈகைத் தன்மையை புறநானூற்றுப் பாடல்கள் “வரையா ஈகை”, ஒம்பா ஈகை”, ஆனா ஈகை” என்ற சொற்றொடர்களால் பல பாடல்களில் குறிப்பிடுவதிலிருந்து, சங்க காலத்து மன்னர்கள் ஈகையில் சிறந்தவர்களாக விளங்கினார்கள் என்பது நன்கு புலனாகிறது.

காட்சிக்கு எளிமை, கடுஞ்சொல்லன் அல்லாமை, இன்சொல் கூறல், செவிகைப்பச் சொற்பொறுத்தல்: “எம் அரசன் இருக்கும் ஆரவாரமான மூதூரில் அவ்வூருக்கு உரியவர் போல் காலம் பாராது நெருங்கி அவன் வீற்றிருக்கும் அரசவையில் தலை நிமிர்ந்து செல்வது எம் போன்ற இரவலர்க்கு எளிது “ என்று கூறும் சுவையான பாடலில் (புறம் - 54) கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், சேரமான் குட்டுவன் கோதை காட்சிக்கு எளியவனாக இருந்ததைக் குறிப்பிடுகிறார். ”ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாலின் நீர்த்துரை படும் பெருங் களிறு போல இனியை பெரும எமக்கே” என்று அவ்வையார் (புறம் - 94) கூறுவதிலிருந்து அதியமான் காட்சிக்கு எளியவனாகவும் இனியவனாகவும் இருந்ததாகத் தெரிகிறது. சோழன் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இருந்த பகைமை, போராக மாறிய பொழுது, நெடுங்கிள்ளி போருக்குப் பயந்து தன் அரண்மனைக்குள் ஓளிந்து கொண்டிருந்தான். அவ்வமயம், கோவூர் கிழார் என்னும் புலவர் ” அறவை யாயின்,’நினது’ எனத் திறத்தல், மறவை யாயின், போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லையாகத் திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே” என்று கூறும் பாடல் (புறம் - 44) செவிகைப்பச் சொற்பொறுத்தலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

அறவழி நிற்றல், முறைசெய்து காப்பாற்றுதல், செங்கோல் செலுத்துதல், குடியோம்பல்: நால்வகைப் படைச் சிறப்புடையதாயினும் பெருமை மிக்க அறநெறியை அடிப்படையாகக் கொள்வதே அரசனுக்கு வெற்றியாகும் என்று மதுரை மருதன் இளநாகனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்கு அறிவுரை கூறியதிலிருந்து, அறவழி நிற்றல் அரசர்க்குரிய பண்பு என்று கருதப்பட்டதை அறிகிறோம் (புறம் - 55). அதே புலவர், நடுவு நிலைமை தவறாமல் நீதி வழங்கி முறைசெய்து மக்களைக் காப்பாற்றுவதின் முக்கியத்துவத்தை, “ நமர் எனக் கோல்கோடாது பிறர் எனக் குணம் கொல்லாது ஞாயிற்றன்ன வெந்திறல் ஆண்மை” அரசனுக்குரிய பண்புகளில் ஒன்று என்றும் கூறுகிறார். மற்றொரு பாடலில், இடைக்காடனார் என்னும் புலவர், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், “புலிபுறங் காக்கும் குருளை போல, மெலிவில் செங்கோல்” செலுத்தி மக்களைக் காத்ததாகக் கூறுகிறார் (புறம் - 42). செங்கோல் செலுத்தும் அரசன் என்று மக்களால் கருதப்படுவது இன்றியமையாதது என்ற கருத்தைப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இயற்றிய பாடலிலும் காணலாம் (புறம் - 72).

மேலே குறிப்பிட்ட சான்றுகளிலிருந்து புறநானூற்றுக் காலத்து மன்னர்கள் வள்ளுவர் இறைமாட்சியில் கூறும் குணங்களையும் செயல்முறைகளயும் கடைப்பிடித்தவர்களாகவோ அல்லது அவை அனைத்தும் மன்னருக்கு உரிய ஒழுக்கம் என்று எண்ணி அவற்றைப் பின்பற்றி வாழ முயற்சி செய்தார்கள் என்றோ தெரிகிறது. இத்தனை நற்குணங்களும் அக்காலத்து மன்னர்களிடம் இருந்தாலும் அவர்களிடம் சில குறைகளும் இருந்தன. அக் குறைகளால் நேரிட்ட விளைவுகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஒற்றுமையின்மை: புறநானூறு காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் தங்கள் நாட்டை ச் சிறப்பாக ஆண்டாலும், அவர்களிடத்தில் இருந்த பொறாமையினாலும், பகை உணர்வினாலும் தமிழகத்தில் எப்பொழுதும் போர்முரசு ஒலித்துக்கொண்டிருந்தது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (புறம் - 6, 15), சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி (புறம் - 4), கரிகால் வளவன் (புறம் - 7), சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (புறம் - 16), பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (புறம் - 23) போன்ற மன்னர்கள், தன் நாடு அல்லாத தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழ்ந்த மக்களைத் துன்புறுத்தியதையும், அவர்கள் நாட்டைத் தீக்கிரையாக்கியதோடு மட்டுமல்லாமல் பெரும் அழிவுகளை விளைவித்ததையும் புறநானூற்றில் பல பாடல்களில் காண்கிறோம். அக்காலத்து மன்னர்களிடையே, தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமை மனப்பன்மை இல்லை. தமிழால் தமிழர்கள் ஒன்றுபடவில்லை.

கொடைமடம்: புலவர்களுக்கும், பாணர்களுக்கும் மற்ற இரவலர்க்கும் அளவற்ற பொருட்களை மன்னர்கள் வாரி வழங்கினர். நாட்டினுடைய செல்வத்தைத் தன் சொந்த செல்வமாக அவர்கள் எண்ணியதாகத் தோன்றுகிறது. இரவலர்க்குப் பொருள் வழங்குவது நற்செயலானலும் அச்செயல்கள் அவர்களின் நெடுங்கால நல்வாழ்வுக்கு வழி வகுத்ததாகத் தெரியவில்லை. இரவலர்கள் இரவலர்களாகவே மன்னர்களையும் வள்ளல்களையும் நம்பி வாழ்ந்து வந்ததாகத் தோன்றுகிறது. இத்தகைய “தேற்றா ஈகை”யால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கோ அல்லது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கோ வழியில்லை. ”ஆற்றின் அளவறிந்து ஈக; அது பொருள் போற்றி வழங்கும் நெறி (குறள் - 477) என்னும் குறளுக்கேற்ப அக்காலத்து மன்னர்கள் செயல்பட்டதாகத் தோன்றவில்லை.

பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் இல்லை: “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு (குறள் - 385)” என்ற குறளில் அரசன் வருவாயைப் பெருக்கி, வளம் சேர்த்து, அதனைக் காத்து நல்வழிகளுக்கு பகுத்தளிக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். சங்காலத்து மன்னர்கள் வரி விதித்து நாட்டின் செல்வத்தைப் பெருக்கியதாகக் காண்கிறோம். போரில் வெற்றி பெற்றுப் பகைவர்களின் பொருளைத் தமதாக்கிக் கொண்டதாகக் காண்கிறோம். கரிகால் வளவன், பாண்டியன் முடத்திருமாறன் போன்ற ஒரு சில மன்னர்களைத் தவிர, மற்ற மன்னர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உண்டுபண்ணக் கூடிய திட்டங்களையோ அல்லது பொது மக்களின் நல்வாழ்விற்குத் தேவையான திட்டங்களயோ தீட்டிப் பொருளாதர வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கித் தொழில், வணிகம் ஆகியவற்றை வளர்த்து நாட்டின் செல்வத்தைப் பெருக்கியதாகத் தெரியவில்லை.

ஆட்சித் திறன்: சங்க காலத்து மன்னர்கள் நல்லாட்சி நடத்தி மக்களைப் பாதுகாத்தாலும், போரில் அவர்கள் வென்ற நாடுகளில் தமது ஆட்சியை நிறுவி அந்த நாடுகளைத் தமது நாட்டோடு இணைத்துத் தமது நாட்டை அவர்கள் வலுப்படுத்தியதற்கான சான்றுகள் இலக்கியத்திலோ அல்லது வரலாற்றிலோ காணப்படவில்லை.

முடிவாக, வள்ளுவர் கூறும் குணநலன்கள் பலவும் சங்க காலத்து மன்னர்களிடம் காணப்பட்டாலும், ஒற்றுமையின்மை, கொடைமடம், பொருளாதார வளர்ச்சியில் அக்கறையின்மை, வென்ற நாடுகளை சரியான முறையில் ஆட்சி செய்யாத குறை, ஆகியவற்றால் பொருளாதார மற்றும் அரசியல் வலிமை குன்றி, தமிழகத்தின் பொற்காலம் மறைந்து, களப்பிரர்களின் ஆட்சிக்காலம் என்று கருதப்படும் இருண்ட காலம் தொடங்கியதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

துணை நூல்கள்:

1. சதாசிவப் பண்டாரத்தார் தமிழக வரலாற்று வரிசை -1
அமிழ்தம் பதிப்பகம், 15, தெற்கு போக் சாலை
தியாகராய நகர், சென்னை - 600 017.

2. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை புறநானூறு பகுதி 1, 2
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
522, டி.டி.கே. சாலை
ஆள்வார்பேட்டை, சென்னை - 600 018.

3. ஞா. தெவநேயப் பாவாணர் திருக்குறள் தமிழ் மரபுரை
இந்து பப்ளிகேஷன்ஸ்
40, உஸ்மான் தெரு, தி. நகர்,சென்னை 600 017.

4. முனைவர் தி. முருகரத்தனம் குறள் கூறும் இறைமாட்சி
மதுரைப் பல்கலைக் கழகம், மதுரை 625 021.

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்