காந்தியாரிடம் கற்றுக் கொள்வோம்
முனைவர் அ.கோவிந்தராஜூ
மகாத்மா
காந்தி இலண்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றார்.
அவர் உலகத் தலைவர்களில் ஒருவராக இருந்ததால், மாநாடு முடிந்ததும் அவரைப்
பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு பல்வேறு வினாக்களைக் கேட்டனர்.
நிறைவாக ஒரு நிருபர், “நீங்கள் நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தி
என்ன?” என்று கேட்டார். காந்தியடிகள் சற்றும் தாமதிக்காமல், “My life
is my message“ என்று சொன்னார். இப்படி “என் வாழ்வே என் செய்தி” என்று
சொல்வதற்கு முற்றிலும் தகுதியுடையவர் அவர். இன்றைய தலைவர்கள் யாரேனும்
இப்படிச் சொன்னால் சிறந்த நகைச்சுவை என்று எள்ளி நகைக்கலாம்.
கல்லாத எளிய மனிதர்கள் கூட பின்பற்றத்தக்க நல்ல வழக்கங்கள் பல
காந்தியடிகளிடம் இருந்தன.
பொதுப் பணத்தைக் கையாள்வதில் அவர் கண்டிப்பானவர்; கை சுத்தமானவர் என்பது
உலகறிந்த செய்தி. ஆனால் ஏனோ நம் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் அவரை
முழுமையாகப் பின்பற்றவில்லை. இங்கே நான் சொல்ல வந்தது இதனுடன்
தொடர்புடைய வேறு செய்தி. இன்னொரு வகையிலும் அவர் கை சுத்தமானவர்.
காந்தியார் விடுதலைப் போராட்டங்களுக்குப் பொதுமக்கள் நன்கொடையாகத் தரும்
காசு பணத்தை இரு கரம் நீட்டிப் பெற்றுக்கொண்டு நன்றி கூறுவார். பிறகு
அவற்றை எண்ணிக் கணக்கை முடிப்பார். அதன் பிறகு தம் இரு கைகளையும்
சோப்புப் போட்டு நன்கு கழுவுவார். பலரும் தொட்டுக் கையாண்ட பணத்தைத்
தொடுவோர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கமாகும் இது.
கிருமித் தொற்றுக்குக் காரணமான பல பொருள்களில் பணம் காசு
முக்கியமானதாகும். இன்றும் எச்சிலைத் தொட்டுப் பணம் எண்ணும் வழக்கமுடைய
மக்கள் பலராக உள்ளனர். இனிமேல் காந்தியடிகளைப் பின்பற்றிப் பணம்
காசினைக் கையாண்டபின் கைகழுவும் வழக்கத்தைக் கடைப்பிடிப்போம்.
சுற்றுப்புறத் தூய்மையை நன்கு பராமரிக்கக்கூடிய வழக்கம் உடையவர்
காந்தியடிகள். ஒருசமயம் காந்தியடிகள் உதகைக்கு வந்திருந்தார். இரவு
எல்லோருடனும் சேர்ந்து உணவருந்தினார். அதிகாலையில் எழுந்துப் பார்த்த
தொண்டர்களுக்கு அதிர்ச்சி.
காந்தியடிகளை எங்குத் தேடியும் காணவில்லை. ஒரு தொண்டர் புழக்கடைப்
பக்கம் ஓடிப்போய்த் தேடினார். காந்தியார் அங்கே குவிந்து கிடந்த எச்சில்
இலைகளைப் பொறுக்கி எடுத்து ஒரு குழியில் போட்டு மண்ணப்போட்டு நிரப்பிக்
கொண்டிருந்தார். முதல்நாள் இரவில் ஒரு தொண்டர் எடுத்துப் புழக்கடைப்
பக்கம் வீசியிருந்த இலைகள்தாம் அவை. இன்றைக்கும் திருமண
விருந்துகளின்போது எச்சில் இலைகள் தெருவில் உள்ள நகராட்சிக்
குப்பைத்தொட்டியைச் சுற்றிக் கொட்டப்படுவதைப் பார்க்கிறோம். இதனால்
சுற்றுச் சூழல் பெரிதும் மாசுபட்டு நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்
என்பதை உணரவேண்டும்; உணர்த்த வேண்டும்.
காந்தியடிகளின் ஆசிரமத்தில் ஆசிரம வாசிகள் தமக்குள் முறை வைத்துக்கொண்டு
கழிவறைகளைத் தூய்மை செய்தார்கள். இன்றைக்கு நம் வீட்டில் உள்ள நமது
கழிவறையை மற்றவர் வந்து தூய்மை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இனி குடும்ப உறுப்பினர்கள் முறை வைத்துக்கொண்டு தத்தம் வீடுகளிலுள்ள
கழிவறைகளைச் சுத்தம் செய்வதை நித்தமும் மேற்கொள்வார்களாக.
காந்தியார் சிறுவனாக இருந்தபோது பள்ளியில் நடந்த நிகழ்வு உங்களுக்குத்
தெரியும். ஒரு தேர்வின்போது தன் ஆசிரியரே தூண்டியபோதும் பக்கத்துப்
பையனைப் பார்த்து எழுதவில்லை. ”நான் காப்பியடிக்கும் வித்தையை ஒரு
போதும் கற்றுக் கொண்டதில்லை” என்று பின்னாளில் தாம் எழுதிய சத்திய சோதனை
நூலில் குறிப்பிடுகிறார். நம் பிள்ளைகள் இந்த ஒன்றையாவது பின்பற்ற
வேண்டும் என நாம் வலியுறுத்தக் கூடாதா?
ஒரு முறை காந்தியடிகளின் சீடர்கள், மீராபாயின் வேண்டுகோளுக்கிணங்க,
இளைஞர் சிலர் இரவு நேரத்தில் பசுந்தழையைக் கொத்துக் கொத்தாகப் பறித்து
வந்தனர். அதைக் கண்ட காந்தியடிகள், "மரங்களும் நம்மைப்போல் உயிருடையவை;
நம்மைப்போலவே வளர்கின்றன, முகர்கின்றன, உண்கின்றன, பருகுகின்றன,
உறங்குகின்றன அவை இரவில் ஓய்வு பெற்று உறங்கும் போது தழைகளைப் பறித்தல்
தவறு" என்று கூறினார்.. இப்படி எல்லா உயிர்களையும் நேசித்து வாழ்ந்தால்
இப் பூவுலகமே நமக்கு சொர்க்கம்தான்.
காந்தி பிறந்த நாட்டில் பிறந்தவர்கள் என்பதில் நமக்குப் பெருமையில்லை.
அவர் பின்பற்றிய பல பயனுள்ள வழக்கங்களில் சிலவற்றையாவது நாம் கற்றுக்
கொள்வதிலும், அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலும்தான் பெருமை
இருக்கிறது.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|