பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர்
(தொடர் - 3)
முனைவர் செ.இராஜேஸ்வரி
எம் ஜி ஆரை வாழ வைத்த தெய்வங்களாகிய தாய்மார்
எம்.ஜி.ஆர் மீது தாய்மார் கொண்ட அன்பு மனித இனத்தில் மட்டுமல்ல மற்ற
உயிர்களிடத்திலும் காணப்பட்டது. அவர் வந்தால் மழை பெய்வதும் அவர் காலடி
மன்னை எடுத்து நிலத்தில் போட்டால் நிலம் பொன் விளையும் பூமியாக மாறும்
என்பதும் இயற்கை தந்த வரம். இது எல்லோருக்கும் வசப்படுவது அல்ல. அடிமை
பெண் படத்துக்கு தாயின் பெருமையை பற்றி எம் ஜி ஆர் பாடலாசிரியர்களிடம்
பாடல் எழுதச் சொல்கிறார். யார் எழுதிய பல்லவியும் இவர் கருதியது
ஆய்யவில்லை. உடனெ ஒரு எழுத்தட்டையை வாங்கி பேனாவை எடுத்து இரண்டு வரிகள்
எழுதி இதையே பல்லவியாக வைத்துக்கொண்டு எழுதுங்கள் என்கிறார்.
அந்த
வரிகள் தான்
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
பாடல் காட்சி ராஜஸ்தானில் உள்ள அபு மலையில் எடுக்கப்பட்டது. அப்போது
அங்கு ஒரு குருவி தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதைக் காண்கிறார்.
ஒளிப்பதிவாளரை அழைத்து அதை படம் பிடிக்க சொல்கிறார். பொதுவாக ஆளரவம்
கேட்டால் பறவைகள் பறந்துவிடும் அல்லது அருகில் போய் நின்று கொண்டு கீச்
கீச் என்று கத்தும், ஆனால் எம் ஜி ஆர் தன்னை பார்ப்பது தெரிந்தும்
அந்தக் குருவி பறக்கவில்லை. இது தெய்வாம்சம் பொருந்தியவருக்கு மட்டுமே
சாத்தியம். அது தான் எம் ஜி ஆர். அவர் மந்தில் இருந்த ஈவு இரக்கம்
அனைத்து உயிர்களிடமும் காட்டும் அன்பு அவலத்தில் இருப்பவரை தேடி போய்
உதவும் அருங்குணம் ஆகியன் அவருக்கு ஒரு தெய்வாஅம்சத்தை கொடுத்திருந்தது.
தாய்மாரின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றிய எம் ஜி ஆர்
பெண்கள் தங்கள் மகனாகக் கருதி எம்ஜிஆரை போற்றிப் பாராட்டும் பண்பு
தமிழகத்தில் தாய்மார்களிடம் பரவலாக காணப்படுகிறது இதற்கு முக்கிய காரணம்
ஒரு தாய் தன் மகன் எத்தகைய நற்பண்புகளுடன் இருக்க வேண்டும் என்று
கருதுகிறார்களோ அத்தகைய நற்பண்புகளுடன் எம்ஜிஆர் தன் படங்களில் தாயை
நேசிக்கும் நல்ல மகனாக மேன்மையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து
நடித்து இருக்கிறார்.
சிவபெருமான் காரைக்கால் அம்மையாரை அம்மையே என்று அழைத்ததனால் அவர்
சிவனுக்கே தாய் என்ற உயர்ந்த நிலையை அடைந்தார். சைவத் திருக்கோயில்களில்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மட்டுமே
உட்கார்ந்திருக்கும் நிலையில் சிலை அமைக்கும் பேறுபெற்றவர் ஆனார். மற்ற
நாயன்மார்கள் எல்லோரும் நின்ற கோலத்தில் கைகூப்பி வணங்கியபடி சிலை
அமைக்கப்பட்டு இருப்பர். காரைக்கால் அம்மையார் மட்டும் உட்கார்ந்த
கோலத்தில் சிலையாக வடிக்கப்பட்டிருப்பார். இதுபோல பிரியமானவர்களை அவரவர்
வயதுக்கு ஏற்றபடி தந்தையாகவும் மகனாகவும் சகோதரனாகவும் நண்பனாகவும்
கருதுகின்ற பண்பாட்டில் பல பெண்கள் எம்ஜிஆரை தன் மகனாகக் கருதி அன்பு
பாராட்டினார் இவ்வாறு கருதிய அவர்கள் ஒரு சிலரின் வரலாற்றை
இக்கட்டுரையில் காண்போம்
மகனின் கடமையை செய்தவர் எம் ஜி ஆர்
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பூரில் பிறந்தவர் குமரன். இவர்
கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.
இவர் பிரிட்டிஷ் போலீசார் தடியடி நடத்திய போதும் அஞ்சாமல்
மூவர்ணக்கொடியை ஓங்கி உயர்த்திப் பிடித்தபடி தலையில் இருந்து ரத்தம்
வழிய பாரத மாதா கி ஜே என்று சுதந்திரக் குரல் எழுப்பினார். பதினெட்டு
வயதில் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட குமரன்
பிரிட்டிஷ் போலீஸாரின் தடியடிக்கு பலியாகி இறந்து போனார். அவர்கள்
மண்டையில் அடித்து ரத்தம் ஒழுக கிடந்தபோதும் குமரன் கையிலிருந்த கொடியை
விடவில்லை. பாரத மாதாவுக்கு வாழ்த்தொலி எழுப்பவும் தயங்கவில்லை.
இறந்து போன குமரனுக்கு வீட்டில் ஒரு பதினாறு வயது மனைவி இருந்தார். அவர்
பெயர் ராமா ராமாயி. இந்த ராமாயி அம்மாள் எம்ஜிஆரை என் மகன் என்று
பாராட்டியிருக்கிறார். ஏனென்றால் எம்ஜிஆர் ராமாயி அம்மாளை நேரில்
பார்த்து அவருடைய வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து அவர்
காலத்துக்கும் அவருக்கு தேவையான வாழ்க்கை வசதிகளை செய்து கொடுத்தார்.
ஒரு தாயைப்போல கவனித்துக்கொண்டார். அதனால் ராமாயி அம்மாள் எம்ஜிஆர்
இறந்த போது ‘’என் மகன் இறந்து விட்டதை போல நான் உணர்கிறேன். ஒரு மகன்
தன் தாயை பார்த்துக்கொள்வது அவனது கடமை. ஆனால் எம் ஜி ஆர் எனக்கு அவர்
காலத்துக்கு பிரகு என் காலம் வரை அந்த கடமையை நிறைவேற்றி
சென்றிருக்கிறார். என் மகனுக்காக நான் கண்ணீர் வடிக்கிறேன். என்று
சொல்லிச் சொல்லி அழுதார். ஒருவருக்கு உதவி செய்வது என்பது இரக்கத்தின்
பாற்பட்டதாகும் ஆனால் அந்த உதவி பெற்றவர்கள் தமது காலம் முழுக்க உதவி
செய்தவரை வாழ்த்துவதும் பாராட்டுவதும் நன்றி கடன் எனலாம். இவை
இரண்டிற்கும் மேலாக பாச உணர்வால் கட்டுண்டு இருப்பது இயல்பாக
எல்லோரிடத்திலும் காணக்கூடியதல்ல. ஆனால் இதுபோன்ற எம்ஜிஆருக்கு தோன்றிய
புதுப்புது தாய்மார்கள் எண்ணற்றோர்.
என் மகன் ராமச்சந்திரன் இருக்காரு
திரையுலகில் ஆரம்ப காலத்தில் எம்ஜிஆருக்கு பல வகையிலும் உதவியாகவும்
வழிகாட்டியாக இருந்தவர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள். சிக்கனமாக
வாழ்வது பற்றியும் பிறருக்கு உதவுவது பற்றியும் எம்ஜிஆர் இவரிடம்
ஏராளமாகக் கற்றுக் கொண்டார். என் எஸ் கிருஷ்ணன் இறந்து போன பிறகு அவரது
குடும்பம் மிகுந்த வறுமையில் இருந்தது. அப்போது எம்ஜிஆர் கடனில் இருந்த
அவருடைய வீட்டை மீட்டுக் கொடுத்தார். நாகர்கோவிலில் என் எஸ் கிருஷ்ணன்
தன் மனைவி பெயர் வாங்கிய மதுரம் நிவாஸ ஜப்தியில் இருந்து மீட்டு அவரது
முதல் மனைவியின் மகன் கோலப்பனுக்கு கொடுத்தார்.
சென்னையில் இருந்த வீட்டை கடனி இருந்து மீட்டு டி ஏ.மதுரம் அம்மையாரிடம்
ஒப்படைத்தார். மதுரம் அம்மையார் சிக்கலான தருணங்களில் இதோ என் மகன்
ராமச்சந்திரன் வந்து விடுவார்; என் மகன் எனக்கு வேண்டிய உதவிகளைச்
செய்கிறார்; என் மகன் என்னையும் என் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்வார்;
என்று வார்த்தைக்கு வார்த்தை எம்ஜிஆரை என் மகன் என்று தான் அழைப்பார்.
அதுபோலஎம் ஜி ஆரும் ஒரு மகனாக இருந்து என் எஸ் கிருஷ்ணன் இன் மகன்களை
படிக்கவைத்து ஆளாக்கி உயர்ந்த நிலையில் இன்றைக்கு அவர்கள் இருக்கும்படி
கவனித்துக் கொண்டார். எம்ஜிஆர் மைசூரில் பொறியியல் படிக்க வைத்தார்
மற்றொரு மகன் சிறப்பாக கல்வி பெற செய்தார் இருவருக்கும் இந்த ஒரு
மகனுக்கு தமிழக அரசில் உயர் அதிகாரியாக பணி கிடைக்கவும் உதவினார். அவர்
சொந்த வீடு கட்டியதும் அதற்கு ஜானகி எம் ஜி ஆர் இல்லம் என்றுதான் பெயர்
சூட்டினர். மகள்கள் இருவருக்கும் 100 பவுன் நகை அளித்து ஆபட்ஸ்பரி
கல்யாண மண்டபத்தில் ராஜாஜி, கருணாநிதி என அனைத்து கட்சி தலைவர்களையும்
வரவழைத்து வெகு சிறப்பாக திருமணத்தை நடத்தினார்.
திருமணத்திற்கு முதல் நாள் அவர் மண்டபத்தில் நடக்கும் ஏற்பாடுகளை
கவனிக்கும் சென்றிருந்தபோது மண்டபத்தில் அங்கு வெளியூரில் இருந்து
திருமணத்துக்கு வந்திருந்த பெண்கள் சாதாரண சேலை கட்டி இருப்பதைக் கண்டு
‘இவர்கள் யார் எங்கிருந்து வந்து இருக்கிறார்கள்’ என்று விசாரித்து
தெரிந்து கொண்டார். அவர்கள் அனைவரும் என் எஸ் கிருஷ்ணனின் உறவினர்கள்.
நாகர்கோவிலில் இருந்து வந்த பெண்கள், என்பதை அறிந்து கொண்ட எம் ஜி ஆர்
மணியை பார்த்தார் மணி பத்தாகிவிட்டது. இருந்தாலும் அந்நேரமே சென்னையில்
உள்ள பெரிய ஜவுளிக் கடையின் பூட்டியிருந்த கதவுகளை திறக்கச் சொல்லி
நிறைய பட்டுச்சேலைகளை பட்டு வேட்டியும் வாங்கிக் கொண்டு வந்து
அங்கிருந்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் கொடுத்து மறுநாள் கல்யாணத்திற்கு
அவர்களை பட்டுடுத்தி வரச்செய்தார். என் எஸ் கிருஷ்ணன் உதவினார்
என்பதற்காக அவர் பிள்ளைகளுக்கு உதவலாம்; ஆனால் அவர்
உறவினர்களுக்கெல்லாம் பட்டு வாங்கி தர வேண்டும் என்பது எம் ஜி ஆருடைய
அன்புள்ளத்தை காட்டுகின்றது.
என் எஸ் கிருஷ்ணன் இன்னொரு மகனுக்கு நடிப்பிசைப் புலவர் கே ஆர்
ராமசாமியின் மகளைத் திருமணம் செய்வித்தார். அவர்கள் அமெரிக்காவில்
இருக்கின்றனர். அந்த தம்பதியின் மகள் திவ்யா அமெரிக்காவில்
படித்துவிட்டு இப்போது தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக இருந்து
வருகிறார்.
என் எஸ் கிருஷ்ணன் குடும்பத்திற்கு உதவும் போது ஒருமுறை அவர் என் எஸ்
கிருஷ்ணனின் மகனைப் பார்த்து ‘உன் அப்பா எவ்வளவு வரி கட்டுவார் தெரியுமா’
என்று கேட்டார் அவர் தெரியாது என்றார் ‘இரண்டு கோடி ரூபாய்க்கு வரி
கட்டுவார்; அப்படி என்றால் அவர் எவ்வளவு சம்பாதித்து இருப்பார் என்பதை
கணக்கிட்டு பார்; என்று கேட்டுவிட்டு இவ்வளவு சம்பாதித்த உன் அப்பா
எல்லா பணத்தையும் மற்றவர்களுக்கு தானமாக தர்மமாக வழங்கினார். நீ
நல்லபடியாக படித்து பிறருக்கு உதவியாக இரு’ என்று சொல்லி அவரைப் படிக்க
வைத்தார். ஒரு மகனுக்கு உதவி செய்யும் போது அவருடைய பெற்றோர்கள் சிறந்த
பண்புகளை எடுத்துரைத்து இன்னாருடைய வழியில் வந்த நீ இன்னின்ன
சிறப்புகளோடு வரவேண்டும் என்று வாழ்த்தி அவர்களை வளர்ப்பது தற்பெருமை
பாராட்டாத எம்ஜிஆரின் குணத்தை புலப்படுத்துகிறது. இன்றும்
இக்குடும்பத்தினர் எம் ஜி ஆர் பற்றி பேசினால் நன்றியுணர்ச்சியுடன் கண்
கலங்கி பேசுவதை காணலாம்.
வருமான பாக்கியை செலுத்த முன் வந்த தாய்
திமுகவில் எம்ஜிஆர் இந்திய அதீத வளர்ச்சியை கண்டு பொறாமைப்பட்ட தலைவர்
1970லேயே எம்ஜிஆருக்கு எதிராக உள்ளடி வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.
முதலில் சினிமாவுக்கு போகும் இளைஞர்களை திசை திருப்ப கருணாநிதி முதலில்
சாராயக் கடையைத் தொடங்கினார். அதன் பிறகு எம்ஜிஆரை போலவே தன் மகன் மு.க.
முத்துவை நடிக்க வைத்து சில படங்களை எடுத்து வெளியிட்டார். எம்ஜிஆர்
ரசிகர் மன்றங்களை அழித்து மு.க.முத்து ரசிகர் மன்றங்களாக மாற்ற வேண்டும்
என்று ரகசிய கட்டளை விதித்தார். புதிதாக எம்ஜிஆர் ரசிகர் மன்றம்
ஆரம்பிப்பதற்கு ஏராளமான தடைகளை ஏற்படுத்தினார். ரசிகர் மன்றங்களை
ஆரம்பிக்க விடாமல் மு க முத்து மன்றங்களை ஆரம்பிப்பதற்கு பொருளுதவி
செய்து ரசிகர்களை மு க முத்து ரசிகர்களாக மாற்ற நினைத்தார். ஆனால்
அவருடைய இந்தச் சதித் திட்டங்கள் எதுவும் பலிக்கவில்லை. இந்த நிலையில்
அவர் வருமான வரி பாக்கி வைத்து இருக்கிறார் என்று ஒரு வதந்தியை கிளப்பி
விட்டார். வருமான வரி பாக்கிக்காக அவர் கைது செய்யப்படலாம் என்றும்
அவருடைய திரை வாழ்வு பாதிக்கப்படும் என்றும் புரளி கிளப்பி விடப்பட்டது.
எம் ஜி ஆர் வருமான வரி செலுத்த பணம் இல்லாமல் சிரமப்படுகிரார் என்பதைக்
கேள்விப்பட்ட ஒரு முஸ்லிம் தாய் ‘ஐயோ தன் மகனுக்கு வாழ்வில் இப்படி ஒரு
சிக்கல் ஏற்பட்டு விட்டதே; தான் சம்பாதித்ததை எல்லாம் ஊருக்கு தானம்
செய்துவிட்டு தான் வரி கட்ட இயலாமல் சிறைக்குப் போகும் நிலைக்கு வந்து
விட்டாரே, என வருந்தி உடனே வெளிநாட்டில் இருக்கும் தன் மகனுக்கு ஒரு
கடிதம் எழுதினார். ‘’மகனே உன் அண்ணன் எம்ஜிஆர் வரி கட்ட இயலாமல்
சிரமப்படுகிறார். நீ உடனே இங்கு வா. நீயும் இங்கே இருக்கும் உன்
தம்பியும் சேர்ந்து கையெழுத்து போட்டால் தான் நாம் சொத்துக்களை விற்க
முடியும். நாம் சொத்துக்களை விற்று முதலில் உன் அண்ணன் எம்ஜிஆரின்
வருமான வரி பாக்கியை செலுத்துவோம்’’. இந்தக் கடிதத்தைப் பார்த்ததும்
வெளிநாட்டில் இருந்த மகன் மகன் இங்கே தமிழ்நாட்டிற்கு வந்தார். அவர்
வந்ததும் தன் அன்னையின் முடிவைத் தெரிவித்து எம்ஜிஆருக்கு ஒரு கடிதம்
எழுதினார். உடனேஎம் ஜி ஆர் அந்த அன்புத்தாயின் பாசத்தில் நெகிழ்ந்து
போய் ‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை; இது எதிரிகள் செய்யும்சதி. என்
பேரை கெடுக்க வீண் புரளியை கிளப்புகிறார்கள், நீங்கள் சிரமப்பட வேண்டாம்
நீங்கள் உங்கள் ஊருக்கு செல்லுங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள்
அம்மாவிடம் சொல்லுங்கள் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நான் வந்து
அம்மாவை பார்க்கிறேன் என்று சொல்லுங்கள்’’ என்று பதிலளித்தார். அந்த
மகனும் உண்மை நிலையை தன் தாயிடம் தெரிவித்தார்.
ஆண்டுகள் கடந்தன. அன்புத் தாய்க்கு வயதாகிவிட்டதால் நோய்வாய்படுகிறார்.
எம் ஜி ஆரை பார்க்க விரும்புகிரார். எம் ஜி ஆருக்கு செய்தி
அனுப்பப்படுகிறது. எம்ஜிஆர் அந்த தாயின் வீடு தேடி சென்று அவரைச்
சந்திக்கின்றார். படுக்கையில் இருக்கும் அந்தத் தாயின் அருகில் சென்று
‘அம்மா உங்க மகந் எம் ஜி ஆர் வந்து இருக்கேன்; நான் எம்ஜிஆர் வந்து
இருக்கேன் அம்மா என்று சொல்லவும் உடனே அந்த தாயார் கண் திறந்து பார்த்து
‘’மகனே நீ நல்லா இருக்கியாப்பா உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைல
வரியெல்லாம் கட்டிட்டியா எதுவும் பிரச்சனை வந்தால் அம்மாகிட்ட
சொல்லுப்பா. உன் தம்பிமார் இருக்காங்க; உன்ன பாத்துக்கிடுவாங்க’’ என்று
கண் கலங்க சொல்கிறார். ‘’இல்லம்மா எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல;
நீங்க கவலையில்லாம இருங்க என்று சொல்லி அவரைத் தேற்றி விட்டு ஆவ்ருக்கு
நிரைய பண உதவியும் செய்துவிட்டு வருகிரார். இனி இறந்தாலும் அந்தமமா
ஆத்மா சாந்தி அடையும்.
இவர்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்?
எம்ஜிஆர் மீது நிறைந்த அன்பு கொண்டிருகும் தாய்மார்களுக்கு நான் என்ன
செய்யப் போகிறேன் இவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு
பாத்திரமாக நான் கடைசி வரை இருக்க வேண்டும் என் வாழ்நாளில் நான் என்
காலத்துக்குப் பிறகும் நான் தாய்மாரின் அன்புக்கு பாத்திரமானவனாக
இருக்க வேண்டும் என்று கண்கள் கலங்கி கூட வந்தவர்களிடம் தன் எண்ணத்தைப்
பரிமாறிக் கொள்கிறார். இவர்களின் அன்புதான் தன்னை வாழ வைப்பதாக நினைத்த
எம்ஜிஆர் ஒவ்வொரு கூட்டத்திலும் என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய
தாய்மார்களே என்று அழைக்கிறார் இந்த சம்பவத்தை எம்ஜிஆரின்
மெய்க்காப்பாளராக இருந்த ராமகிருஷ்ணன் தன்னுடைய நூலில் விவரமாக எழுதி
இருக்கிறார்
ஒரு மகன் சினிமாவுல இருக்குறான்
மதுரைக்கு அருகே உள்ள வைகை அணைக்கட்டில் மாட்டுக்கார வேலன் படத்துக்கு
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அப்போது பொதுமக்கள் கூட்டம்
ஏராளமாக அங்கு கூடி இருக்கிறது. எம்ஜிஆர் அவர்களுக்கு உடனடியாக தண்ணீர்
வரவழைத்து கொடுத்து கொடுக்கிறார். அவர் கேமரா கோணத்துக்கு ஏற்றபடி
அவர்கள் முன் கையை நீட்டி விலகுங்கள் என்று கையசைத்தால் உடனே அந்தக்
கூட்டம் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல அவர் கையை அசைக்கும்
பக்கத்தில் விலகி வழிகொடுக்கும். இவ்வாறு போலீசாரின் கட்டளைக்கு கூட
கட்டுப்படாத கூட்டம் எம்ஜிஆரின் கை அசைவுக்கு கட்டுப்பட்டு இருந்ததை
பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அப்போது அங்கு ஒரு
வயதான பாட்டி தினமும் வருவதைப் பார்த்து எம்ஜிஆர் அந்த பாட்டியை அழைத்து
அவரிடம் சிறிது நேரம் பேசினார். ‘’உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள்
என்ன செய்கிறார்கள்?’ என்று கேட்டார். அதற்கு ‘எனக்கு இரண்டு மகன்.
ஒருத்தன் பட்டாளத்துல இருக்கான், அடுத்தவரு சினிமாவில் இருக்காரு’’
என்று அந்த தாய் சொன்னார். ‘அப்படியாம்மா சினிமாவுல இருக்காரா? யாரு?
பேர் என்ன? சினிமானா எனக்கு தெரிஞ்சிருக்குமே! அவரு பேர் என்ன
சொல்லுங்க’ என்று கேட்டார். ‘நீ தான்பா அது.’’ என்று அந்த தாய்
சொல்லவும் எம்ஜிஆர் கண்கலங்கி விட்டார்.
எம் ஜி ஆரின் மந்திரச் சொல்
தாயின் அன்பு மொழிகளை கேட்டு நெகிழ்ந்த எம் ஜி ஆர் உடனே அருகில் இருந்த
ஜெயலலிதாவிடம் சொல்லி உன் அறைக்கு யாரையாவது அனுப்பி அங்கிருந்து ஒரு
நல்ல புதிய சேலையை கொண்டு வரச் சொல் என்று சொல்லி ஒரு நல்ல
பட்டுச்சேலையை அந்த அம்மாவுக்கு கொடுத்து கையில் பணமும் கொடுத்து
‘அம்மா உங்க மகன் கொடுக்கிறேன் வாங்கிக்கங்க’ என்று சொன்னார். இது
எம்ஜிஆர் பயன்படுத்தும் மந்திரச்சொல். தாய்மாரை பார்க்கும்போது அவர்கள்
எங்கே மறுத்து விடுவார்களோ என்று இவருக்கு தோன்றினால் உடனே அவர் ‘உங்க
மகன் கொடுக்குறேன்மா வாங்கிக்கங்க’ என்று சொல்லுவார். அவர்களும்
மறுக்காமல் பெற்றுக்கொள்வார்கள்.
‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே’
எம்ஜிஆரின் ரசிகர்கள் தனிப்பண்பு உடையவர்கள். அவர்கள் எம்ஜிஆரிடம்
இருந்து எதையும் பெற வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார்கள். எம்ஜிஆர்
எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்; ஆனால் அவரது
ரசிகர்கள் அவரைப் போலவே அவருக்குகத் தாம் ஏதாவ்து கொடுக்க வேண்டும்
என்றுதான் நினைப்பார்கள். எம் ஜி ஆர் உனக்கு என்ன வேண்டும் என்று
கேட்கும் போதும் ‘ஒன்னும் வேண்டாம் அண்ணே உங்களை பார்த்ததே போதும் என்று
சொல்லியவர் ஏராளம். எம் ஜி ஆர் வற்புறுத்தி அவர்களுக்கு கடை வைக்கவும்
ஏதாவது தொழில் செய்யவும் உதவியிருக்கிறார். எம்ஜிஆரிடம் இருந்து எதையும்
பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவரது ரசிகர்களுக்கு இல்லை. இது ஒரு
அதிசயிக்கத்தக்க தனிபண்பு
மாட்டுக்கார வேலன் படம் வெற்றி விழா கொண்டாடிய போது எம்ஜிஆர் அந்த
வெற்றி விழாவில் பங்கு கொள்ள கோவைக்கு வந்து இருந்தார். அப்போது அந்த
திரையரங்க உரிமையாளர் ‘ஒரு பாட்டியை அழைத்துக் கொண்டு வந்து எம் ஜி
ஆரிடம் காட்டி இந்த பாட்டி தினமும் வந்து உங்கள் படத்தை பார்த்தார்
என்று அறிமுகம் செய்து வைத்தார். எம்ஜிஆர் அந்த பாட்டியை அருகில்
அழைத்து ‘அம்மா நீங்க என்ன வேலை செய்றீங்க? எதுக்கு ஒரே படத்தை தினமும்
பார்க்குறீங்க? என்று கேட்டார். ‘ நான் கீரை விற்கிறேன் ஐயா’என்றார்.
எம் ஜி ஆர் ‘கீரை விற்கிறீங்களா? அதுல ஒரு நாளைக்கு எவ்வளவு கிடைக்கும்?’
என்று கேட்க ‘மூன்று ரூபாய் கிடைக்கும்; இரண்டு ரூபாய் நான்
வச்சுக்கிட்டு ஒரு ரூபாய்க்கு உங்க படம் பார்ப்பேன்’ என்று சொன்னார்.
‘ஒரே படத்தை எதுக்கு தினம் பார்க்குறீங்க?’ என்று கேட்டார் அய்யா ‘என்
மகனை நான் வந்து தினம் பாக்குறதுக்கு என்னய்யா கணக்கு?’ என்ற அந்த
பாட்டி சொன்னார். என் மகனே நான் தினமும் வந்து பார்ப்பதற்கு என்னையா
கணக்கு என்று பாட்டி சொன்னதைக் கேட்கவும் எம்ஜிஆர் கண்கலங்கிவிட்டார்.
. தன் பையிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து அந்த பாட்டியின் கையில்
கொடுத்தார். இதை வச்சுக்கங்கம்மா என்றார் அதற்கு அந்த பாட்டி ‘வேணாம்யா
உன்ன பார்த்ததே எனக்கு போதும்’’ என்று பதிலளித்தார். ‘ உங்க படத்தை
ஏதேனும் பார்த்தாலே எனக்கு சந்தோசம்பா’ என்று மறுத்துவிட்டார். தன்
உழைப்பில் மூன்றில் ஒரு பங்கை தனக்காக செலவழிக்கும் தன்னை வாழ
வைத்துக்கொண்டிருக்கும் அந்தத் தாயின் நல்ல உள்ளம் அவரது பிரார்த்தனை
அவரது நல்லெண்ணம் தான் தன்னை வாழ வைத்துக் கொண்டிருப்பதாக எம் ஜி ஆர்
தெரிவித்தார். அக்கருத்தை அன்புத் தாய்மாரை சந்திக்கும் ஒவ்வொரு
கூட்டத்திலும் ‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே’ என்று
சொல்லி சொல்லி உறுதி செய்து கொண்டார்
நம்பியார்கிட்ட ஜாக்கிரதையா இருந்துக்கப்பா
எம்ஜிஆர் மீது தாய்மார் கொண்ட அன்புக்கு இன்னும் ஒரு வேடிக்கையான
உதாரணத்தை இங்கு பதிவு செய்ய வேண்டும் இச்சம்பவம் பற்றி இன்றைக்கு
பலருக்கும் தெரிந்திருந்தாலும் கூட இனி வரும் தலைமுறைக்கு இச்சம்பவம்
தெரிந்திருப்பது அர்த்தமுள்லதாக இருக்கும். எம்ஜிஆர் படங்களில்
நம்பியாரை வில்லனாக ஒப்பந்தம் செய்வதுண்டு. நம்பியாருக்கும்
எம்ஜிஆருக்கும் நல்ல சண்டைப்பயிற்சி இருந்ததால் இருவரும்
சண்டைக்காட்சிகளில் கால முறை [timing] தவறாமல் நடித்தனர். எம் ஜி ஆர்
ரசிகையான ஒரு வயதான தாய் உண்மையிலேயே நம்பியார் எம்ஜிஆரின் பகைவன் என்று
நம்பி விட்டார். நாடகங்களிலும் கதைகளிலும் புராணங்களிலும் ராமனுக்கு
ராவணன் நிஜ எதிரி தானே. அதுபோலத்தான் திரைப்படத்திலும் எம்ஜிஆருக்கு
நம்பியார் நிஜ எதிரி என்று நம்பிய அந்தத் தாய் ஒருமுறை ஒரு
பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர் பேசி முடித்ததும் அவர் அருகே வேகமாக சென்று
அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ‘ஐயா இந்த நம்பியார் கிட்ட
மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு’ என்று அவருக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த சம்பவத்தில் இந்த பாட்டியின் அறியாமையை கேட்டு ரசிப்பதைவிட அவர்
எம்ஜிஆர் மீது கொண்டிருந்த அக்கறையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
எம் ஜி ஆர் ஒரு சினிமா நடிகர், அவர் பணம் வாங்கிக் கொண்டு நடிக்கின்றார்;
வேஷம் போட்டுக்கொண்டு நடிக்கின்றார், என்று நினைத்திருந்தால் அந்த தாய்
அவருக்கு அறிவுரை சொல்லி இருக்க மாட்டார். எம்ஜிஆர் என்ற மனிதர் அல்லது
நடிகர் ‘நீண்ட நாள் வாழவேண்டும்; அவருக்கு யாராலும் எந்த இடையூறும்
வந்து விடக்கூடாது’ என்று கருதியதால் தான் அந்த தாய் நம்பியாரிடம்
எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினார். அது நம்பியாராக இல்லாமல் வேறு
யாராகவும் இருக்கலாம். ஆனால் எம்ஜிஆர் நீண்டநாள் நல்ல தேக சுக
ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்பது பாட்டியின் ஆசை, பிரார்த்தனை.
இதுதான் இச்சம்பவத்தின் முக்கிய கருத்தாகும். எம் ஜி ஆர் நீண்ட நாள்
நன்றாக வாழ வேண்டும் என்று தமிழினத் தாய்மார் கொண்டிருந்த நல்லெண்ணம்
அவருக்கு பாதுகாப்பு கவசமாக இருந்து அவரை பல இடையூறுகளில் இருந்து
காப்பாற்றியது. எம் ஜி ஆர் சத்யா அம்மையாரின் புதல்வனாக இருந்தாலும்
உலகில் உள்ள எண்ணற்ற தாய்மாரின் பிரார்த்தனை அவருக்காக எப்போதும் உலகில்
எங்காவது ஒரு மூலையில் ஒரு குக்கிராமத்தில் ‘மகராசன் நல்லா இருக்கனும்’
என்ற வாழ்த்தக பரிணமித்தது. அந்த வாழ்த்து அவரை ஆயுடகாலம் முழுவதும்
உயர்ந்த இடத்தில் வைத்திருந்தது.
தர்மம் தலைகாக்கும்
தமிழினத் தாய்மார் இந்த உலகில் நல்லவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர்
எம் ஜி ஆராக மட்டுமே இருக்கமுடியும் பிறருக்கு ஒருவர் உதவி செய்கிறார்
என்றால் அவர் எம்ஜிஆர் ஆக மட்டுமே இருக்க முடியும் என்று தம் வாழ்நாள்
முழுக்க கருதியதுண்டு. ஒரு முறை பாலாஜி ஒரு ஏழை பாட்டிக்கு 100 ரூபாய்
கையில் கொடுத்தார். சிவந்த நிறத்துடன் சுருள் சுருளான தலை முடியுடன்
இருக்கும் பாலாஜியை எம்ஜிஆர் என்று நினைத்துக்கொண்ட அந்தப் பாட்டி ‘ ஐயா
எம்ஜிஆர் நீ நூறாண்டு வாழனும்’ என்று வாழ்த்தினார். உடனே பாலாஜி
அருகிலிருந்தவரிடம் ‘பாருங்கள் இந்த மக்கள் யார் கொடுத்தாலும் அது
எம்ஜிஆர் கொடுத்ததாகத்தான் நினைக்கிறார்கள். எம்ஜிஆர் அந்த அளவுக்கு
இவர்கள் மனதில் குடி கொண்டிருக்கிறார். இவர்களின் நம்பிக்கை
பெற்றிருக்கிறார்’. என்று தெரிவித்தார். ஏழைகளுக்கு தர்மம் செய்தால் அது
எம் ஜி ஆராக மட்டுமே இருக்க முடியும் என்று மக்கள் மனதில் பதிந்திருந்த
ஆழமான எண்ணம் அவருக்கு வாழ்த்தாகவும் வாக்குகளாகவும் வந்தன. இச்சம்பவம்
நடக்கும்போது எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்திருக்கவில்லை. ஆனால் அவர்
தனிக்கட்சி ஆரம்பித்ததும் இந்த தாய்மார்கள் தாமாகவே தமது வாக்குகளை
எம்ஜிஆருக்கு அளித்து அவரை வெற்றி பெறச் செய்தனர். அவர் காலம் முழுக்க
அவரை முதலமைச்சராகவே வைத்து அழகு பார்த்தனர்.
முதலமைச்சரானதும் எம் ஜி ஆர் வயதான பெண்கள் தன் மீது காட்டும் அன்புக்கு
கைம்மாறாக ஒரு திட்டம் கொண்டு வந்தார். எம்ஜிஆர் சத்துணவு திட்டம்
அறிமுகம் செய்தபோது அவர் வயதான ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதே சத்துணவு
கூடத்தில் மதிய உணவை இலவசமாக அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இதனால் ஏராளமான மூத்த குடிமக்கள் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது நல்ல
சத்துணவு சாப்பிடும் வாய்ப்பைப் பெற்றனர். வயதானவர்களுக்கு முதியோர்
பென்ஷன் என்ற பெயரில் ஒரு திட்டத்தையும் அறிமுகம் செய்தார். இன்றைக்கு
இந்த வயதான பெண்கள் அந்த முதியோர் பென்சனை எம் ஜி ஆர் பணம் என்றே
அழைக்கின்றனர். ‘’ஒரு மகனின் கடமை தன் தாயை பராமரிப்பது; அதை என் மகன்
எம் ஜி ஆர் எனக்கு செய்திருக்கிறார் என்று கொடி காத்த குமரனின் மனைவி
ராமாயி அம்மாள் கூறியது போல இன்று ஏராளமான தாய்மார் தெரிவிக்கின்றனர்.
எம் ஜி ஆர் செய்த தர்மாம் அவரை தலையை மட்டுமல்ல அவர் புகழையும்
காத்துக்கொண்டிருக்கிரது. பெற்ற மகன் இருந்தாலும் முதியோர் பென்ஷன்
மற்றும் மதிய உணவளித்த எம் ஜி ஆரை என் மகன் என்று தம் காலம் முழுக்க
அவருக்காக தமிழினத் தாய்மார் இறைவனை வேண்டுகின்றனர்.. இதனால் எம் ஜி ஆர்
தன் இறப்பிற்கு பிறகும் இந்த அன்பு தாய்மார்களால் புகழுடம்பு பெற்று
வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|