அப்பர் எனும் ஆளுமை
பேராசிரியர் இரா.மோகன்
பன்னிரு
திருமுறைகளைப் படைத்துத் தந்த அருளாளர்களுள் திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வரும் சிறப்பாகக்
குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அவர்களது வாழ்வும் வாக்கும் இருபத்தியோராம்
நூற்றாண்டிற்கும் வழிகாட்டும் தகைமையன; பொருத்தப்பாடு (Relevance)
உடையன.
ஒப்பியல் நோக்கில் ஒரு சுவையான தகவல்:
நால்வர் பெருமக்களும் இம் மண்ணுலகில் நல்ல வண்ணம் – வையத்துள்
வாழ்வாங்கு வாழ்ந்த காலம் – முறையே 16, 81, 18, 32 ஆண்டுகள் ஆகும்.
திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலமான 16-ஐ இரண்டால் பெருக்கினால் வரும் 32,
மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் ஆகும். அது போல, திருநாவுக்கரசர் வாழ்ந்த
காலமான 81-ஐத் திருப்பிப் போட்டால் வரும் 18, சுந்தரர் பெருமான்
வாழ்ந்த காலம் ஆகும். ஆனால் ஒன்று: எண்களுள் எதை இரண்டால் பெருக்குவது,
எதைத் திருப்பிப் போடுவது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டுவது
இன்றியமையாதது ஆகும்.
ஆளுமை வளர்ச்சி நோக்கில் அப்பர் சுவாமிகளின் வாழ்வும் வாக்கும்
‘ஆளுமை வளர்ச்சி’ (Personality Development) என்பது இன்று உலகளாவிய
நிலையில் விவாதிக்கப் பெற்று வரும் ஒரு பொருள். அதன் அடிப்படையில்
அப்பர் பெருமானின் வாழ்வும் வாக்கும் நுண்ணிதின் ஆராயத்தக்கன.
‘கூற்றாயின வாறு விலக்ககிலீர்’ (திருவதிகை வீரட்டாணம்) எனத் தொடங்கும்
அப்பர் சுவாமிகளின் முதல் திருப்பதிகத்திலேயே அவரது ஆளுமைப் பண்பு
வெளிப்பட்டிருக்கக் காணலாம். ‘என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி
முடக்கியிட ஆற்றேன்’ என்ற அடிகள் சூலை நோயின் கொடுமையை உணர்த்த வல்லன.
அதனைப் பொறுத்துக் கொண்டு இறைப்- பணியாற்றியது என்பது அப்பர் பெருமானின்
நெஞ்சுரத்தைப் புலப்படுத்துவது.
நால்வர் பெருமக்களுள் நீண்ட காலம் வாழும் வாய்ப்புப் பெற்றவர் அப்பர்.
அவர் தமது 81 ஆண்டுக் கால நெடிய வாழ்வில் சந்தித்த கசப்பான அனுபவங்கள்
பற்பலவாகும். புறச்சமயம் சென்றது, சைவ சமயத்திற்கு மீண்டது, ‘பல்லவ
மன்னனனால் அவர் எதிர்கொண்ட நெருக்கடிகள், சோதனைகள் மிகப் பல. தடைக்
கற்களாக வந்து தொல்லை தந்த எல்லாவற்றையும் தாங்கியும் தாண்டியும் சாதனை
படைத்தது அப்பர் சுவாமிகளின் வாழ்வு. எனவே, ‘அப்பர் எனும் ஆளுமை’ என்ற
நோக்கில் எதிர்கால ஆய்வுலகம் நுண்ணாய்வு மேற்கொள்வதற்கு நிறைய இடம்
உள்ளது.
இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு அப்பர் வழங்கும் செய்தி
இன்று உலகளாவிய நிலையில் பொதுப்பணி ஆற்றி வரும் அரிமா சங்கம் (Lion’s
Club), சுழற்சங்கம் (Rotary Club), செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross
Society) போன்றவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக விளங்குவது ‘என் கடன் பணி
செய்து கிடப்பதே!’ என்னும் அப்பர் பெருமானின் ஓர் அடியே ஆகும். இதில்
இடம் பெற்றிருக்கும் ‘கிடப்பது’ என்னும் சொல்லாட்சி பொருள்
பொதிந்தது; ஆழமானது.
என் கடன் பணி செய்து ‘நடப்பது’ என்றோ, ‘நிற்பது’ என்றோ, ‘ஒழுகுவது’
என்றோ, ‘இருப்பது’ என்றோ, ‘வாழ்வது’ என்றோ சொல்லினைப் போடாமல்,
‘கிடப்பது’ என்ற சொல்லினை அப்பர் பெருமான் கையாண்டிருப்பது அருமையில்
அருமை. எந்த விதமான கைம்மாறும் கருதாமல், கடமையை மட்டுமே ஆற்றி வரும்
தொண்டு வாழ்வின் மேன்மையினை, உயர்வினை இதனினும் இரத்தினச் சுருக்கமாக
எவராலும் சுட்டிவிட இயலாது.
இடுக்கண் வருங்கால் நகுவது, துன்பத்திற்குத் துன்பம் தருவது, இன்னாமையை
இயல்பு என்பதோடு இன்பம் எனவும் கொள்வது ஆகியவை ஆளுமை வளர்ச்சியில் மிக
முக்கியமான பண்புகள். ‘மாசில் வீணையும் மாலை மதியமும்’ (தனித்
திருக்குறுந்தொகை), ‘நாமார்க்கும் குடியல்லோம்’ (மறுமாற்றத்
திருத்தாண்டகம்) முதலான அப்பர் சுவாமிகளின் பாடல்கள் இவ்வகையில்
மனங்கொளத்தக்கவை. குறிப்பாகவும் கூர்மையாகவும் கூறுவது என்றால்,
“நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், நடலை அல்லோம், நரகத்தில்
இடர்ப்படோம், ஏமாப்போம், பிணியறியோம், இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை!”
என்னும் அப்பர் பெருமானின் கூற்று, ஆளுமைப் பண்பின் மணிமகுடம் ஆகும்.
‘மனிதப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!’, ‘வாய்த்தது நந்தமக்கு
ஈதோர் பிறவி; மதித்திடுமின்!’ முதலான பாடல்கள் அப்பர் பெருமானின்
உடன்பாட்டுச் சிந்தனையைப் (Positive Thinking) பறைசாற்றுவன. ‘அச்சம்
தவிர்’ எனப் பாரதியார் தமது புதிய ஆத்திசூடியைத் தொடங்குவதற்கு
வழிகாட்டியது அப்பர் பெருமானே ஆவார்.
அப்பர் சுவாமிகளின் ஆளுமைப் பண்புகளுள் தலையாயது அவரது அஞ்சாமைப் பண்பு.
‘அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை’ என்ற திருவதிகை
வீரட்டாணப் பதிகம் இவ் வகையில் குறிப்பிடத் தக்கது.
சாதி, சமய வேறுபாடுகளுக்கும், கண்மூடிப் பழக்க வழக்கங்களுக்கும் எதிராக
வலிமையாகக் குரல் கொடுத்தவர் அப்பர். ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்’,
‘கங்கை யாடில்என், காவிரி யாடில் என்?’ (பாவ நாசத் திருக்குறுந்தொகை)
என்பன அவர் தொடுக்கும் கூரிய கேள்விக் கணைகள்.
‘ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே?’ (தனித் திருத்தாண்டகம்) என்னும்
பாடல் வெளிப்படுத்தும் அப்பர் சுவாமிகளின் இறைக் கொள்கை அவரது ஆளுமைப்
பண்பின் அடிப்படையில் அமைந்த ஒன்று. இதனை அடியொற்றிக் கவிஞர்
கண்ணதாசனும் தமது திரைப் பாடல் ஒன்றைப் புனைந்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
‘நாம் இருக்கும் நாடு நமது என்பதை அறிந்தோம்… பாரினில் எவர்க்கும்
அஞ்சோம்; பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்’ என இருபதாம்
நூற்றாண்டுப் பெருங்கவிஞர் பாரதியார் பாடுவதற்கும் அடியெடுத்துத் தந்தது
‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்னும் அப்பர் சுவாமிகளின் வாக்கே. ‘ஏழில்
இருபது’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் இது குறித்து விரிவாக
எழுதியுள்ளார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
அப்பர் பெருமானின் நீண்ட, நெடிய வாழ்வில் இருந்து இன்றைய இளைய
தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்வியல் பாடங்கள் பற்பலவாகும்.
அவற்றை வெறும் வார்த்தைகளாகப் பயிலாமல், பின்பற்ற வேண்டிய உயரிய
விழுமியங்களாகக் கொண்டு, வாழ முற்படும் இளையோர் தம் வாழ்வில் வாகை
சூடுவதோடு, தடம் பதிப்பவராகவும் முத்திரை பதிப்பவராகவும் அவர்கள்
உயர்வர் என்பது உண்மையிலும் உண்மை உறுதியிலும் உறுதி.
'தமிழாகரர்'
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|