ஆர்.பாலகிருஷ்ணனின் குறள் தழுவிய காதல் கவிதைகள்
பேராசிரியர் இரா.மோகன்
“அடிப்படையில்
நானொரு தமிழ் மாணவன். அதற்கடுத்து இந்தியவியலில் ஈடுபாடு உள்ளவன்.
குறிப்பாக சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளங்களைப் புதிய
கோணங்களில் புலன் விசாரிப்பவன்” (ப.12) என்பது ‘பன்மாயக் கள்வன்’
நூலுக்கு எழுதிய ‘என்னுரை’யில் ஆர்.பாலகிருஷ்ணன் தந்துள்ள ஒப்புதல்
வாக்குமூலம் ஆகும். அவரது கருத்தியலில் திருக்குறளை ஒரு ‘பொதுமறை’
என்பதை விட, ‘பொதுமுறை’ என்பதே பொருத்தமாக இருக்கும். “திருக்குறள்
பொதுவாக இருக்கிறது. அதனால் அதை ‘முறை’ என்பதே முறை” (ப.12) என
அறுதியிட்டு உரைப்பார் அவர். 1991-ஆம் ஆண்டில் வெளியான ‘அன்புள்ள அம்மா’
என்ற தொகுப்பின் வாயிலாகத் தமிழ்க் கவிதை உலகில் அடியெடுத்து வைத்த
பாலகிருஷ்ணன், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் கவிதை மற்றும்
ஆய்வுலகில் முனைப்புடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது
‘சிந்துவெளிப் பண்பாடடின் திராவிட அடித்தளம்’ (2016) சிந்துவெளி விட்ட
இடத்தையும் சங்க இலக்கியம் தொட்ட இடத்தையும் தொடர்பு படுத்தி விளக்கும்
ஓர் அரிய நூல். 1984-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வினை
முதன்முதலாக, முழுவதுமாகத் தமிழில் எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி
பெற்ற முதல் தமிழ் இலக்கிய மாணவர் என்பது இவரது அழுத்தமான, தனிப்பெரும்
அடையாளம் ஆகும். ‘சிறகுக்குள் வானம்’ (2012) ஆளுமை வளர்ச்சி நோக்கில்
எழுதப்பெற்ற தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு. இவர் தற்போது ஒடிசா
மாநில அரசின் வளர்ச்சி ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலராகப்
பணியாற்றி வருகிறார். இனி, அண்மை வெளியீடான ‘பன்மாயக் கள்வன்’ (2017)
வழி நின்று இவரது படைப்புத் திறம் குறித்துக் காணலாம்.
திருக்குறள் காமத்துப்பால் தழுவி படைக்கப் பெற்றுள்ள இரு நூல்கள்
“திருவள்ளுவரின் இன்பத்துப் பால் இலக்கிய வளத்தைப் சமகால நடைமுறை
வாழ்க்கை மற்றும் சம கால மொழியின் ஊடாகக் கொண்டாடுவது குறளின்
மீள்வாசிப்பிற்கும் திருவள்ளுவரை வையத்துள் வாழச் சொன்ன சக மனிதராக
மடைமாற்றம் செய்து அவர் குறித்த கோணல் மாணலான கற்பிதங்களைக்
கட்டுடைக்கவும் ஏதுவான களமாக உதவுகிறது” (ப.13) என மொழியும்
பாலகிருஷ்ணன், திருக்குறளை முதல் நூலாகக் கொண்டு படைத்திருக்கும் வழி
நூல்கள் இரண்டு. அவையாவன:
1. நாட்டுக் குறள் (2016): திருக்குறள் இன்பத்துப் பால் தழுவிய
ஏழு நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பு,
2. ‘பன்மாயக் கள்வன்’ (2017): குறள் தழுவிய 57 காதல் கவிதைகளின்
தொகுப்பு.
‘பன்மாயக் கள்வன்’ என்ற நூலின் தலைப்பே வித்தியாசமானது; அது
திருவள்ளுவர் தந்ததுதான்; காமத்துப் பாலில் இடம்பெற்றிருக்கும்
1258-ஆம் குறட்பாவில் இருந்து எடுக்கப்பெற்றதுதான். ஆர்.பாலகிருஷ்ணனின்
கண்ணோட்டத்தில் ‘இன்பத்துப் பாலில் ததும்பும் உணர்வுகளின் ஆழம்
உண்மையில் ஓர் எதார்த்த உளவியல்’ ஆகும். அவரைப் பொறுத்த வரையில்,
‘பன்மாயக் கள்வன்’ என்பது வேறு யாரும் இல்லை, வள்ளுவன் தான். “அறம்
பேசும் ஆசானாய், பொருள் பேசும் அறிஞனாய், இன்பம் பேசும் காதலனாய் இந்த
வள்ளுவனுக்குள் எத்தனை பன்முகங்கள்! ஆமாம். ‘பன்மாயக் கள்வன்’ என்பதில்
மரியாதைப் பன்மை இல்லைதான். ஒருமைதான். அதனால் என்ன? அதுதான் அருமை.
வள்ளுவனிடம் நமக்கு இல்லாத உரிமையா?” (ப.13) என இயல்பான மொழியில்
நம்முடன் கலந்து உறவாடுகின்றார் பாலகிருஷ்ணன்.
எழுத்தாளர் பிரபஞ்சனின் மதிப்பீடு
‘பன்மாயக் கள்வன்’ தொகுப்பிற்கு வழங்கிய அணிந்துரையில் எழுத்தாளர்
பிரபஞ்சன், “வள்ளுவரின் மூன்று பாக்களில் முக்கியமானதும், முதலானதுமான
காதல் பாலை அல்லது காமத்துப் பாலை அல்லது இன்பத்துப் பாலை, அதன்
நுணுக்கத்தோடும் அழகோடும் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார்
ஆர்.பாலகிருஷ்ணன்… வள்ளுவருக்கு இந்த நூல் பெருமை தருகிறது;
வள்ளுவத்தைச் சிறப்புச் செய்கிறது. வள்ளுவத்திற்கு 1800 ஆண்டுகளுக்குப்
பின் வந்த தமிழர், தன் முன்னவர்க்குச் செய்த அரிய அன்புப் படையலாகவும்
இருக்கிறது…” (ப.8) எனக் குறிப்பிட்டிருப்பது சரியான மதிப்பீடு ஆகும்.
இம் மதிப்பீட்டின் அடிப்படையில் ஆர்.பாலகிருஷ்ணனின் குறள் தழுவிய காதல்
கவிதை ஒன்றினைக் காணலாம்.
“பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றேநம்
பெண்மை உடைக்கும் படை”
என்பது காமத்துப் பால் ‘நிறையழிதல்’ அதிகாரத்தில் எட்டாவதாக இடம்
பெற்றிருக்கும் குறட்பா (1258). ‘நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும்
படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வனான காதலருடைய பணிவுடைய மொழி
அன்றோ?’ என்பது அறிஞர் மு.வ. இக் குறட்பாவுக்கு வரைந்துள்ள தெளிவுரை.
இனி, இக் குறட்பா, பாலகிருஷ்ணனின் கை வண்ணத்தில் எங்ஙனம் புதுக்கோலம்
பெற்றிருக்கிறது எனக் காணலாம்.
“எங்கிருந்து முளைத்தான் / இந்தப் பன்மாயக் கள்வன்?
இந்தப் பணிமொழியை / எந்தப் ‘பள்ளியில்’ / படித்தான்?”
எனச் சுவையாகத் தொடங்குகின்றது ‘பன்மாயக் கள்வன்…’ என்ற காதல் கவிதை.
கூசாமல் கூச வைக்கும் அம்மோசக்காரன், பாசாங்கு செய்து காதலியைப் படிய
வைத்தானாம்! வரும் சினத்தைக் கண்ணில் வரவு வைக்கும் முன்னாலே, உதட்டில்
சிரிப்பை ஒட்ட வைத்தானாம்! “கோவைப் பழமே / கோவப்படாதே… பச்சைக் கிளிகள்
/ பசித்திருக்கின்றன…” என்றால் காதலியின் உள்ளத்தில் கோபம் எப்படிக்
கொப்பளிக்கும்? “ராஜ திராவகத்தில் / தங்கம் கரையும்… / தங்கமே உன்
மவுனம் / எதில் கரையும்?” என்று காதலியின் பாதத்தில் வரைந்தானாம்! ‘பாதரசம்!’
பனி போல் கரைந்தாளாம் காதலி. ‘இவனோ / ராஜ திராவகம்… / இந்தப் பெண் மனம்
/ எம்மாத்திரம்!’ எனப் படிப்படியாக வளர்த்து வந்த கவிதையை இப்படி
அருமையாக முடிக்கிறார் பாலகிருஷ்ணன்:
“ஊருக்கு நான் அரசன்…
உனக்கு அடிமை…’
என்கின்றான்.
வெல்லப் பாகுமொழி…
என்னை
வென்றெடுத்த பாகுபலி” (பக்.29; 31)
அரசன் x அடிமை; ‘வெல்லப் பாகுமொழி’ x ‘வென்றெடுத்த பாகுபலி’ : அருமையும்
எளிமையும் அழகும் களிநடம் புரிந்து நிற்கும் ஓர் அற்புதமான காதல் ஓவியம்
இது!
ஊரார் பேசும் அலரால் விளையும் நன்மை
காதல் வாழ்வில் அலருக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. ஊரார் பேசும் அலர்
மொழி, காதலர் உள்ளங்களை வருத்தினாலும், அதனால் விளையும் நன்மையும் உண்டு.
அலரே காதலர் கொண்டிருக்கும் உறவை உலகிற்கு அறிவிக்கும்; உற்றார்
உறவினர்க்கும் காதலரின் களவு வாழ்க்கையை அறியச் செய்யுமால்; களவு
கற்பாக மாறுவதற்கும் வழி வகுக்கும். இது கருதியே ‘அலர் அறிவுறுத்தல்’
எனத் தம் அதிகாரத்திற்குப் பெயர் சூட்டியிருப்பார் வள்ளுவர் பெருமான்.
“அலர்எழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால்” (1141)
என ‘அலர் அறிவுறுத்தல்’ அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள முதல் குறட்பா இவ்
வகையில் கருதத்தக்கது. ‘எம் காதலைப் பற்றி அலர் எழுவதால் அரிய உயிர்
போகாமல் நிற்கின்றது; எம் நல்வினைப் பயனால் அதைப் பலரும் அறியாமல்
இருக்கின்றனர்’ என்பது இக் குறட்பாவின் தெளிவுரை. இக் குறட்பாவினைத்
தழுவி ஆர்.பாலகிருஷ்ணன் படைத்திருக்கும் ஒரு சுவையான காதல் கவிதை ‘சேலை
கட்டிய கூகுள்’ என்பது. அதில் வரும் குருவம்மா கவிஞரின் பதிவில் ஒரு
‘சேலை கட்டிய கூகுள்…’ காதும் காதுமாய் வதந்திகளை சேகரித்து
குளக்கரையில் கொட்டும் வரை எவ்வளவு உழைப்பு! சில நேரங்களில் கண்
ஜாடைகளாலும் முக பாவங்களால் மட்டுமே காதல் கதையைக் கடத்தி விட வேண்டி
இருக்கிறது! அதுவும் ‘பிரேக்கிங் நியூஸ்’ என்றால் கூடுதல் உழைப்பு தான்!
இவ்வளவு இன்னல்கள் இருந்தாலும் குருவம்மாவிற்கு அலர் பேசுவதில் ஓர் இனம்
புரியாத, அலாதியான ஈடுபாடாம்! ‘தினத்தந்தி’ என்று தனக்கு ஒரு பெயர்
இருப்பது அவளுக்கே தெரியுமாம்! மாலையில் குளக்கரைக்குப் போகும் போது
அவள் ‘மாலை முரசு’ என்று அழைக்கப்படுவாளாம்! ‘புறம்’ பேசப்படுவது
என்னவோ அநேகமாக ‘அகப்பொருள்’ தானாம்! இன்றைக்குப் பிள்ளை
குட்டிகளோடு அலைகிற பல முன்னாள் காதலர்கள் ‘நன்றி’ சொல்ல வேண்டியது
குருவம்மாவிற்கும் அவளது கூட்டாளிகளுக்கும் தானாம்!
“கிட்டதட்ட / ‘மதப் பிரச்சாரம்’ போல
காசு செலவில்லாத / தேர்தல் பணி(!) போல
ஒரு தீவிர கதியில் / அது-இது என்று
முடிச்சுப் போட்டு / கும்மி அடித்திருக்காவிட்டால்
அவர்கள் கழுத்தில் / முடிச்சு விழுந்திருக்குமா…?”
என்று குருவம்மாவிற்குச் சார்பாகக் கவிஞர் கேட்பதில் ஒரு நியாயம்
இருக்கத் தான் செய்கிறது.
“கெட்டதிலும் / ஒரு / நல்லது இருக்கிறது
என்பார்களே / அது தானோ இது…”
எனக் கவிஞர் கேட்பதும் ஒரு வகையில் சரிதான்!
“செலவில்லாமல் / ‘கல்யாண மாலை’ நடத்தும்
குருவம்மா ஒரு / கொடியவள் அல்ல…
அவளது மாமியாரே ஒரு / முன்னாள்
‘அலர் வீராங்கனை’ தான்…”
தனது வதந்தியால் நிகழும் நல்ல, கெட்ட பக்க விளைவுகள் எதைப் பற்றியும்
அறியாமல் குருவம்மா அலப்பறையாக அலர் தூற்றி வருவதைச் சுட்டிக்காட்டி,
“தினம் ஒரு / புது அலர்!
வளர்!” (பக்.65-70)
என முத்தாய்ப்பாக முடிவடைகிறது கவிதை.
காதல் எனும் மாய வேதியலின் செவ்வி
காமத்துப் பாலின் ‘காதற் சிறப்புரைத்தல்’
அதிகாரத்தில் காதல் சுவை நனி சொட்டச் சொட்ட வள்ளுவர் படைத்துள்ள ஓர்
அற்புதமான குறட்பா இது:
“நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து”. (1128)
‘எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார்; ஆகையால் சூடான பொருளை உண்டால்
அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்’ என்பது இக்
குறட்பாவின் தெளிவுரை.
‘மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும், சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர்’
(1000) என்னும் தொல்காப்பிய விதிக்கு ஏற்ப, வள்ளுவர் தம்
காதலர்-களுக்குப் பெயர் எதுவும் சூட்டவில்லை; பொதுப் பெயர்களாலேயே
அவர்களைச் சுட்டுகின்றார். பாலகிருஷ்ணனோ இவ் விதியினின்றும் மாறுபட்டு,
காதலிக்கு ஓர் அழகிய தமிழ்ப் பெயரைச் சூட்டுகின்றார்; ‘அவள் / தமிழ்ச்
செல்வி / சொந்த ஊர் / வத்தலக்குண்டு அருகே / தந்தை தமிழரசன் /
தமிழாசிரியர்’ எனக் காதலியை அறிமுகம் செய்கின்றார். காதலனின்
‘பூர்விகம் கேரளாவில் / கோட்டக்கல் பக்கம் / இப்போது பெற்றோர் /
தில்லியில்’. ஒரு மென்பொருள் நிறுவனத்தில் இருவருக்கும் வேலை. பணி
சார்ந்த பயணமாக இருவரும் பனி நகருக்கு வருகை தந்திருக்கிறார்கள்.
‘இவர்களுக்குள் / ஒரு / மாய வேதியல் / மையம் கொண்டு / மாதம் ஆறுதான்
ஆகிறது’ என காதல் உணர்வு இவர்களுக்குள் அரும்பியதை நயமாகக் கோடிட்டுக்
காட்டுகிறார் கவிஞர்.
பிப்ரவரி 14, 2017. காதலர் தினம். அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில்
அமைந்துள்ள ஒரு சிறுநகரம் ‘வாட்டர் டவுன்’. ‘ஊக்கை’க் கண்டுபிடித்து
உலகிற்குத் தந்தது இந்த ஊர்தான்! இதன் உணவு விடுதி ஒன்றில் எதிர்-எதிர்
இருக்கையில் அவளும் அவனும். ‘மெனு’ கார்டைப் பார்த்துவிட்டு ‘எனக்கு
கோல்ட் காபி’ என்கிறாள் அவள். ‘எனக்கு ஐஸ் காபி’ என்கிறான் அவன். ‘ஏன்
கோல்ட் காபி?” எனக் கேட்கிறான் அவன். அவள் கண்ணால் மட்டும் சிரிக்கிறாள்.
‘ஐயாவுக்கு ஏன் ஐஸ் காபி?’ என்று அவள் கேட்க, அவன் மெதுவாகச் சொல்கிறான்:
‘எல்லாம் ஒரு காரணமாகத் தான்!’ ‘நீ திருக்குறள் படித்திருக்கிறாயா?’
என்று திடீரெனக் கேட்கிறாள் தமிழ்ச் செல்வி. ‘இல்லையே’ என்கிறான் அவன்.
‘வள்ளுவர் நிச்சயம் காதலித்து இருப்பார்’ என்று அவள் உள் மனம் சொல்கிறது.
‘குளிர்ந்த காபியைக் குடித்துக் கொண்டே அலைபேசியில் அமேசான்
வலைத்தளத்தில் ஒரு திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விலை
செலுத்துகிறாள் தமிழ்ச் செல்வி’ எனக் கவிதையை நிறைவு செய்கிறார்
பாலகிருஷ்ணன்.
“வெளியே பெய்யும் / உறைபனி மழை…
உள்ளே இருவரை / ‘ஊக்கு’வித்தது”. (பக்.185-190)
‘நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டல், அஞ்சுதும் வேபாக்கு அறிந்து’
என்னும் குறட்பாவினைத் தழுவி, ‘கொட்டும் பனியில் குளிர் காபி’ என்னும்
இப் புதிய காதல் கவிதையைச் சுவைபடப் புனைந்துள்ளார் பாலகிருஷ்ணன்.
தேவபுரத்தில் இருக்கும் தேயாத நிலா
காமத்துப் பாலின் ‘நலம் புனைந்துரைத்தல்’ அதிகாரத்தில் வரும் ஒரு நயமான
குறட்பா வருமாறு:
“மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.” (1116)
‘விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறிய
முடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன’ என்பது இக்
குறட்பாவின் தெளிவுரை. இக் குறட்பாவினைத் தழுவி ஆர்.பாலகிருஷ்ணன்
படைத்துள்ள ஓர் அழகிய காதல் கவிதை ‘நார்வேயில் இருந்து ஒரு தமிழ்க்
காதலன்’.
“இந்த / ‘நட்சத்திரங்கள்’
எப்போதுமே இப்படித்தான்! / குழப்பவாதிகள்.
கண்சிமிட்டாமல் பார்த்தும் / கண்டுபிடிக்க
முடியவில்லையாம் / ‘எது நிலா’ என்று!”
என விண்மீன்களின் கலக்கத்தினையும் குழப்பத்தினையும் பதிவு செய்யும்
பாலகிருஷ்ணன், வானத்தில் வருவது ‘படிக்காத நிலா’ என்றும்,
‘தேவபுரத்தில் இருப்பது தேயாத நிலா’ என்றும் வேறுபடுத்திக்
காட்டுகின்றார்; ‘நிலா என்பது நிலம் அல்ல / நிலா என்பது அழகு / நிலா
என்பது அறிவு’ என்றும் சுட்டிக்காட்டி, வானத்தில் இருக்கும் ‘அந்த
நிலாவுக்கு அரிச்சுவடி தெரியுமா? ஆடத் தெரியுமா? பாடத் தெரியுமா? வீணை
வாசிக்குமா? விளையாடுமா? அந்த நிலா காதலிக்குமா? கவிதை எழுதுமா?’
என்றெல்லாம் அடுக்கடுக்கான வினாக்களைத் தொடுத்து,
“சேலை கட்டாத நிலாவை
தமிழ் பேசாத நிலாவை
‘நிலா’ என்று
ஐ.நா. சபையே / அங்கீகரித்தாலும்
நான் / எதிர்வழக்காடுவேன்!”
எனக் காதலன் கூற்றாக மொழிவது, கவிஞரின் உள்ளத்தில் கொலுவிருக்கும்
ஆழ்ந்த தமிழ் உணர்வினைக் காட்டுவதாகும்.
“நீ / அருகில் இருக்கும் போது
நான் / ஓர் அரசனைப் போல
இருக்கிறேன்.
நீ அருகில் / இல்லாத போது
நான் / என்னவாய் இருக்கிறேன்?
எனக்கே தெளிவில்லை.
நள்ளிரவில் சூரியன் / இந்த நார்வேயில்
நான் / மட்டும் சூனியம்
நீ இல்லாமல்.
நிலா…
நான் உன்னை / நேசிக்கிறேன்
நீ என்னை / யோசிக்கிறாயா?” (பக்.72-73; 75)
என நார்வேயில் இருக்கும் தமிழ்க் காதலன் தனக்கே சொந்தமான
‘பெண்ணிலா’விடம் தனது உள்ளத்தினைத் திறந்து காட்டுவதும், உணர்வினை
வெளிப்படுத்துவதும் முருகியல் நோக்கில் நனிசிறந்தனவாகும்.
‘மின்னலுக்கு எதற்கு ஒட்டியாணம்?’
காமத்துப் பாலின் முதல் அதிகாரம் ‘தகையணங்குறுத்தல்’ (109). அதன்
ஒன்பதாம் குறட்பா இது:
“பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில் தந்து?” (1089)
‘பெண் மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு
தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?’ என்பது இக் குறட்பாவின்
தெளிவுரை.
இக் குறட்பாவினைத் தழுவி ‘மின்னலுக்கு எதற்கு ஒட்டியாணம்?’ என்னும்
தலைப்பில் அழகிய கவிதை ஒன்றினைப் படைத்துள்ளார் பாலகிருஷ்ணன்.
அச்சத்தையும் நாணத்தையும் அணிகளாய் அணிந்து அழகின் உச்சத்தில் நிற்பவள்
அவள். இலவசமாய்த் தந்தாலும் இவளுக்கு நகை எதற்கு? அழகுக்கு எதற்கு
அலங்காரம்? “இவள் மூக்கை விடவா மூக்குத்தி அழகு? இந்தக் காதணி இவள்
காதின் அழகை நிறைக்கிறதா இல்லை மறைக்கிறதா? சுடரும் நெற்றிக்கு நெற்றிச்
சுட்டி!: இது யார் மூளையில் உதித்தது? அழுதனவா இந்த அழகுக் கால்கள்
‘எனக்குக் கொலுசு வேண்டும் என்று…?” என்றெல்லாம் தொடர்ந்து அவளது
ஒவ்வோர் உறுப்பினது அழகையும் வித்தியாசமான முறையில் – மொழியில் –
ஆராதித்து வரும் கவிஞர்,
“மின்னலுக்கு / ஒட்டியாணம் போடுவது
வெட்டி வேலை / இல்லையா?”
என நறுக்குத் தறித்தாற் போல நச்சென வினவுவது அருமையிலும் அருமை.
“கடைசியாகக் கிடைத்த / தகவலின் படி…
காவல் துறை / இப்படி அறிவித்துள்ளது:
ஊர் இருக்கும் இருப்பில் / இந்தப் பேரழகியை
சேதாரம் இல்லாமல் / பாதுகாக்கவே / ஒரு
சேனைப் படை வேண்டும்.
இவளை / நகைக்கடை ஆக்கினால்
இன்னொரு / பூனைப் படையும்
தேவைப்படும்.
காவல் துறைக்கு / ஆயிரம் வேலை…
‘இடைத் தேர்தல்’ வேறு நடக்கிறது!
‘இந்தப் / பேரழகியைப் பெற்ற
பெருமாட்டியே… / இது உங்கள்
குடும்பப் பிரச்னை அல்ல… / சட்டம்-ஒழுங்குப் பிரச்னை’”
(பக்.232-235)
இவ்வரிகளில் துலங்கிடும் சங்க இலக்கியச் சாயல் நுண்ணிதின் நோக்கத்தக்கது.
சுடர்விட்டு நிற்கும் பின்னைப் புதுமைப் பெற்றி
முன்னைப் பழைய இலக்கியமான திருக்குறளைப் பின்னைப் புதுமைப் பெற்றி
மிளிர அணுகுவதிலும் ஆராதனை செய்வதிலும் தனித்திறன் பெற்றவராக
விளங்குகின்றார் பாலகிருஷ்ணன். ‘அவர் (காதலர்) சென்ற நாள் ஒற்றித்
தேய்ந்த விரல்’ (1261) என்னும் வள்ளுவர் வாக்கு, பாலகிருஷ்ணனின் கை
வண்ணத்தில் ‘வாட்ஸ் அப்பில் தேய்ந்த விரல்’ (ப.33) என்ற
புதுக்கோலத்தினைப் பெற்றுள்ளது. ‘காமுற்றார் ஏறும் மடல்’ (1133)
பாலகிருஷ்ணனின் பதிவில் ‘பெடல் ஊர்தல்’ (ப.55) ஆக உருமாற்றம்
பெறுகின்றது; ‘மாடு பிடிப்பவனை / மயில் பிடிக்குமா? / பிடித்ததே…’
(ப.56) என்கிறார் கவிஞர். இளையோர் இருவர்க்கு இடையே காதல் உணர்வு
தோன்றுவது இன்று ‘Chemistry’ எனச் சுட்டப்பெறுகின்றது; இதனைக்
‘காதல் வேதியல்’ (78) என்னும் அழகுத் தொடரால் குறிக்கின்றார்
பாலகிருஷ்ணன். அவரது அகராதியில் காதல் எனப்படுவது ‘சொர்க்கத்தின்
பின்கோடு’ (ப.76); ‘காதல் இல்லாத / இடத்தை என்ன சொல்லி / அழைத்தால்
என்ன? / புத்தேள் நாடாவது / புடலங்காயாவது…!’ (ப.811) என்கிறார் அவர்.
‘புல்லா திராஅப் புலத்தை அவர்உறும், அல்லல் நோய் காண்கம் சிறிது’ (‘ஊடும்
போது அவர் அடைகின்ற துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத்
தழுவாமல் இருந்து பிணங்குவாயாக!’: 1301) என வள்ளுவர் காமத்துப் பாலில்
படைத்துள்ள புலவிக் காட்சி, பால-கிருஷ்ணனின் படப்பிடிப்பில் புத்தாக்க
வடிவில் பின்வருமாறு அமைந்துள்ளது:
“பிறகென்ன!
ஊடிக் களைத்த / அவளைக்
கூடித் திளைத்தான் / அவன்.
இருவரும் தோற்று / இருவரும் வென்ற
இந்த / ‘20/20’
வழக்கம் போலவே / ‘டிரா’வில் முடிந்தது.
சுபம்.
பி.கு. ‘என்னமா நடிக்கிறாங்க!’” (ப.267)
‘முக நூல்’, ‘லைக்ஸ்’, ‘ரீட்வீட்’, ‘வைரல்’, ‘மிஸ்டு கால்’, ‘கைப்பேசி’,
‘6 மடிப்பு’, ‘ஈ மெயில் அட்ரஸ்’, ‘அமேசான்’ வலைத்தளம், ‘கட் அவுட்’,
‘வாட்ஸ் அப்’, ‘சிம் கார்ட்’, ‘மடிக்கணினி’, ‘சாம்சங் மெமோ’, ‘வாய்ஸ்
கால்’, ‘ஸ்கைப்’ என்றாற் போன்ற இன்றைய இணைய தளம் மற்றும் ஊடகவியல்
தொடர்பான கலைச் சொற்கள் பாலகிருஷ்ணனின் கவிதைகளில் பயின்று வரக்
காண்கிறோம்.
ஆற்றல்சால் உவமைகளின் ஆட்சி
உவமையின் பயன்கள் இரண்டு என்பார் தொல்காப்பிய உரை-யாசிரியரான இளம்பூரணர்.
அவையாவன:
1. புலன் அல்லாதன புலனாதல்
2. அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயத்தல்.
“‘ஆப் போலும் ஆமா’ என உணர்த்திய வழி, அதனைக் காட்டகத்துக் கண்டான் முன்
கேட்ட ஒப்புமை பற்றி இஃது ‘ஆமா’ என்று அறியும். ‘தாமரை போல் வாள்
முகத்துத் தையலீர்’ என்ற வழி அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம்
பயக்கும்” (தொல்காப்பியம்: பொருளதிகாரம், இளம்பூரணம், ப.395) என
இரண்டிற்கும் தக்க சான்றுகள் காட்டி விளக்கமும் தருவார் இளம்பூரணர்.
‘புலன் அல்லாதன புலனாதல்’ என்னும் முறையிலும், ‘அலங்காரமாகிக்
கேட்டார்க்கு இன்பம் பயத்தல்’ என்னும் வகையிலும் பாலகிருஷ்ணன் தம் காதல்
கவிதைகளில் ஆங்காங்கே பொருத்தமான உவமைகளை அழகுறக் கை-யாண்டுள்ளார்.
இந்தியவியலில் தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர் பாலகிருஷ்ணன் என்பதை அடையாளம்
காட்டி நிற்கும் அவரது உவமை ஒன்று:
“இன்னும் / தோண்டப்படாத / நாகரிகம் போன்று
எனக்குள் நான் / புதைந்திருக்கிறேன்” (ப.24)
பாலகிருஷ்ணனின் உவமைத் திறத்திற்குக் கட்டியம் கூறி நிற்கும் இரு
சிறந்த உவமைகள் வருமாறு:
“காமம் / ஒரு தேயிலைத் தோட்டத்து
கங்காணியைப் போல / என்னைக் காவு கொள்கிறது.
பேரணி முடிந்த / நள்ளிரவின்
சீரணி அரங்கம் போல / நான்
சிதைந்து கிடக்கிறேன்” (44)
காமம் படுத்தும் பாட்டினை இவ்வுவமைகள் நன்கு வெளிப்படுத்தி நிற்கின்றன!
“நீளமான / நெடிய இரவு…
பாஞ்சாலியின் / சேலை போல் நீள்கிறது” (ப.62)
- தொன்ம அழகு மிளிரக் கவிஞர் கையாண்டுள்ள வித்தியாசமான உவமை இது!
“அழகர் / ஆற்றில் இறங்குவது போல
வருடம் ஒரு முறை / அவன்
வந்து போனான்” (ப.125)
என்னும் அழகிய, மதுரை மண்ணின் மணம் கமழும் உவமையுடன் தொடங்குகின்றது
‘சொப்பன சுந்தரன்’ என்னும் காதல் கவிதை,
“மழையில் நனைந்த / ஈரச் சாக்கு போல
கனக்கிறது / இவள் மனசு” (ப.237)
பிரிவாற்றாமையால் ஒரு பெண்ணின் மனம் படும் பாட்டினைப்
புலப்படுத்து-வதற்கு இதை விடப் பொருத்தமான உவமை ஒன்று இருக்க முடியாது.
“காணாமல் போன / கன்றுக்குட்டி போல / மாலையில் அல்லாடும் மனசு” (ப.99)
எனப் பிறிதோர் இடத்திலும் மனத் தவிப்புக்குப் பொருத்தமான உவமையினைக்
கையாண்டிருப்பார் பாலகிருஷ்ணன்.
“தீப்பெட்டிகளை / அடுக்கி வைத்தது போன்ற
அடுக்குமாடி வீடுகளில்
தீக்குச்சிகளைப் போல / படுத்திருந்தார்கள்
மனிதர்கள்” (ப.289)
என்னும் கவிஞரின் இரு உவமைகள், அடுக்கு மாடி வீடுகளையும், அவற்றில்
நெருக்கமாக, வரிசையாகப் படுத்திருக்கும் மனிதர்களையும் நம் மனக்கண்
முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றன.
தேர்ந்த கவிஞருக்கு வேண்டிய கலைத்திறன்கள்
திறனறிந்து சொல்லினை ஆளும் ஆற்றல், வெல்லும் சொல்லினை அடையாளம் கண்டு
பயன்படுத்தும் திறம், நிரந்தினிது சொல்லும் வல்லமை என்னும் இம் மூன்று
கலைத்திறன்களும் ஒரு சேரக் கைவரப் பெற்றவரே ஒரு தேர்ந்த கவிஞராகப்
படைப்புலகில் தடம் பதிக்க முடியும். இவ் வகையில் சிறப்பாகக்
குறிப்பிடத்தக்க ஓர் இலக்கிய ஆளுமையாளராகப் பாலகிருஷ்ணன் விளங்கு-
கின்றார். நெஞ்சை அள்ளும் ஒரு சில உயிர்ப்பான சான்றுகளைக் கொண்டு நாம்
இக் கருத்தினை நிறுவலாம்.
அழகிய தமிழ் மகள் ஒருத்தி பற்றிய பாலகிருஷ்ணனின் சொற்சித்திரம் இது:
“‘தமிழ் நூலால்’ / நெய்தவளா
இந்தத் / தாவணித் தமிழ்?
குறுந்தொகையின் / குறிஞ்சிப் பாடல் போல
அழகாய் இருக்கிறாள்.” (ப.130)
கவிஞரின் நோக்கில், ‘சங்கத் தமிழ்’ போல சிந்தையைக் கொள்ளை கொள்ளும்
செவ்வி படைத்தது ‘தாவணித் தமிழ்!’
ஒரு நாள் காதலன் காதலியிடம் இப்படிச் சொன்னானாம்.
“நீ பேசினால் / எந்த மொழியும் / செம்மொழிதான்!” (ப.153)
தூங்காத இரவு பற்றிய கவிஞரின் உணர்ச்சி மிகு படப்பிடிப்பு இதோ:
“வானத்தில் நிலா இல்லை.
என் வீட்டு நிலாவும் / வெளியூரில்.
யாதும் யாவரும் / தூங்கும் இரவு.
நான்தான் / இரவு காக்கும் கிளி.
இரவே நீ / எதைக் காக்கும் கிளி?” (பக்.165; 167)
‘ஊடலுவகை’யின் போது காதலர் இடையே நிகழ்வதாகக் கவிஞர் படைத்துள்ள ஒரு
சுவையான சொல்லாடல் வருமாறு:
“‘உன்னைக் / கொல்லப் போகிறேன்’
பல்லைக் கடித்தாள்.
‘உன்னைக் / கொள்ளப் போகிறேன்’
‘இடை’ மறித்தான்.” (ப.116)
‘வெட்டு ஒன்று. துண்டு இரண்டு’ என்பது போல காதலி தன் உள்ளங்கவர்
காதலனிடம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்:
“இப்பொழுதே / ஓர் / ‘இன்சொல்’ சொல்.
இல்லையேல் கொல்.” (ப.137)
இத் தொகுப்பின் இறுதிக் கவிதையாக இடம் பெற்றுள்ள ‘உறக்க தினம்’ கவிஞரின்
முத்திரைக் கவிதை. உறக்க தினத்தன்று (2016 மார்ச் 18) உலகத்தின் பத்து
இடங்களில் காதல் ஏக்கத்தில் தூங்காமல் விழித்திருப்பவர்களைப் பற்றிய
பத்துக் கவிதைகளின் நுண்ணிய பதிவு அது. அதில் வரும் ஓர் உயிர்ப்பான இடம்.
“இப்போதெல்லாம் இவள்
தூங்குவதை விட / ஏங்குவதே அதிகம்.” (ப.287)
பாலகிருஷ்ணனின் எழுதுகோல் ஈன்று புறந்தந்துள்ள இன்னும் சில புதிய
சொல்லாக்கங்கள் வருமாறு:
“நான்… / புறம்போக்கு அல்ல
‘அகம் போக்கு!” (ப.204)
“முத்துப்பேச்சி
அவள் ஒரு / தெம்மாங்குத் தமிழ்” (ப.295)
“முல்லைத் திணையின் / இயற்பெயர்
‘தொல்லை’த் திணையா?” (ப.239)
‘புருவக் கோளாறு’ (ப.219); ‘கண்மூடாத்தனம்’ (ப.153), ‘காற்று வழியடை
கண்ணம்மா’ (ப.121), ‘இருதலைக் கொள்ளி கரும்பு’ (ப.120) எனக் கவிஞர்
கையாண்டுள்ள தொடராட்சிகளும் கவிதைத் தலைப்புக்களும் இவ் வகையில்
குறிப்பிடத்தக்கன.
முத்தாய்ப்பாக, எழுத்தாளர் பிரபஞ்சனின் சொற்களில் கூறுவது என்றால்,
“வள்ளுவர் திருக்குறள் படைத்தார். ஆர்.பாலகிருஷ்ணன், திருக்குறளுக்கு
ஒரு கவிக்குரல் படைத்திருக்கிறார். கவிக்குறள் என்றும் சொல்லலாம்”
(ப.10).
‘தமிழாகரர்’
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|