பொருண்மொழிக் காஞ்சி
முனைவர் இர.பிரபாகரன்
தமிழ்
இலக்கியத்தில் திணை என்ற சொல் ‘பொருள்’ என்பதைக் குறிக்கும் சொல்லாகப்
பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம்,
புறம் என்று பிரிப்பது தமிழ் இலக்கிய மரபு. களவொழுக்கத்திலும், இல்லற
வாழ்க்கையிலும் தலைவனும் தலைவியும் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும்
பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள
முடியாதவையாகையால், அவை அகப்பொருள் எனப்படும். அகப்பொருளைப்பற்றிப்
பாடும் பாடல்கள் ஏழு அகத்திணைகளில் அடங்கும். காதலைத் தவிர வாழ்க்கையின்
மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர், வீரம், வெற்றி, புகழ்,
கொடை, நிலையாமை முதலிய பொருட்களை மையமாகக்கொண்ட பாடல்கள் புறத்திணைகளில்
அடங்கும். புறநானூற்றில் உள்ள பாடல்கள் பதினொரு புறத்திணைகளைச்
சார்ந்தவையாக உள்ளன. எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத்
தொகுத்துக் கூறும் திணை பொதுவியல் எனப்படும். திணை என்னும்
பெரும்பிரிவின் உட்பிரிவுகள் துறைகள் எனப்படும். பொதுவியல் என்னும்
திணையின் உட்பிரிவுகளுள் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையும் ஒன்று.
இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் செய்திகளைக் கூறும் பாடல்கள்
பொருண்மொழிக் காஞ்சித் துறையில் அடங்கும். புறநானூற்றில் பதினேழு
பாடல்கள் பொருண்மொழிக் காஞ்சித்துறையை சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
இபாடல்களில், மக்களுக்கேற்ற அறிவுரைகளும், மன்னர்களுக்குக்கேற்ற
அறிவுரைகளும் காணப்படுகின்றன.
மக்களுக்கான அறிவுரைகள்
-
”நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான் எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!” என்று நரிவெரூஉத்தலையார்
பாடல் 195 – இல் கூறுவது அனைவரும் பின்பற்ற வேண்டிய கருத்து.
-
“யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்று
புறநானூற்றுப் பாடல் 192 – இல் கணியன் பூங்குன்றனார் கூறுவது அவரது
பரந்த மனப்பான்மைக்கும் தெளிவான சிந்தனைக்கும் எடுத்துக்காட்டாக
விளங்கி, நம்மை சிந்திக்க வைக்கிறது.
-
”எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை
” என்று ஒளவையார் (பாடல் 187) பாடுவது ஒருநாட்டின் பெருமை,
அந்நாட்டு மக்களைப் பொறுத்தது என்ற உண்மயை நமக்கு உணர்த்துகிறது.
-
”துன்பங்களால் வாடுங் காலத்து
இல்வாழ்க்கையிலிருந்து தப்பியோட விழைந்தாலும், மனைவி, மக்கள் போன்ற
சுற்றத்தாராடு கூடிய இல்வாழ்க்கை அதற்குத் தடையாக இருப்பதாக
ஓரேருழவர் கூறுவது, இல்வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது என்ற
கசப்பான உண்மையை உரைக்கிறது. (பாடல் 193)
• ”தெளிந்த அறிவற்றவர்கள்தான் நற்செயல்களைச் செய்யலாமா வேண்டாமா
என்ற ஐயம் நீங்காதவர்களாக இருப்பார்கள். நல்வினை செய்தவர்களுக்கு
விண்ணுலக இன்பம் கிடைக்கலாம். அல்லது, மீண்டும் பிறவாமல் இருக்கும்
நிலையைப் (வீடு பேறு) பெறலாம். பிறவாமை என்ற நிலை இல்லை என்றாலும்,
இவ்வுலகிலே உயர்ந்த புகழை நிலைநாட்டி, குறையற்ற உடலோடு இறப்பது
மிகப் பெருமை வாய்ந்தது. ஆகவே, தயக்கமின்றி நல்வினைகளைச் செய்ய
வேண்டும்.” என்று கோப்பெருஞ்சோழன் பாடல் 214-இல் கூறியிருப்பது
நல்வினைகளைச் செய்ய வேண்டியதின் அவசியத்தைக் வலியுறுத்துகிறது.
• இந்த உலகம் ஏன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சிந்தித்த
பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, மனித நேயத்தொடு
‘தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்’ உள்ளதால்தான்
இவ்வுலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உயர்ந்த
கருத்தைப் பாடல் 182-இல் கூறுகிறான். திருக்குறளில் விருந்தோம்பல்,
அன்புடைமை, வெகுளாமை, அறிவுடைமை, மடியின்மை, தீவினையச்சம்,
ஊக்கமுடைமை, புகழ், ஈகை, ஒப்புரவு, பண்புடைமை ஆகிய அதிகாரங்களின்
மையக்கருத்துகளை இச்சிறிய பாடலில் காணலாம்.
• ”எலி போல் சுரண்டிப் பிழைப்போர் நட்பு வேண்டாம். புலி போல்
உழைத்துப் பிழைப்போர் நட்பு வேண்டும்.” என்று சோழன் நல்லுருத்திரன்
கூறியிருப்பதைப் பாடல் 190-இல் காணலாம்.
• வேந்தனாக இருந்தாலும் வேடனாக இருந்தாலும் உணவு, உடை போன்ற
அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் ஒன்றுதான். தேவைகளுக்கு மீறிய
செல்வம் இருந்தால் அதைப் பயன்படுத்த முடியாது. ஆகவே. ” செல்வத்துப்
பயனே ஈதல்” என்று மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஈகையைப்
பாடல் 189 -இல் வலியுறுத்துகிறார்.
• குழந்தை இல்லாத வாழ்க்கை நிறைவு பெறாத வாழ்க்கை என்று பாண்டியன்
அறிவுடை நம்பி மக்கட்பேற்றால் வரும் இன்பத்தைப் பாடல் 188 – இல்
சிறப்பித்துப் பாடியிருப்பது திருக்குறளில் மக்கட்பேறு என்ற
அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துகளோடு ஒத்திருப்பது படித்து
மகிழத்தக்கது.
• ”யாண்டு பலவாக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்?” என்று
கேட்டவர்களுக்கு, ”சிறப்பான என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு
நிரம்பப் பெற்றவர்கள். என்னிடம் பணிபுரிபவர்களும், என் நாட்டை ஆளும்
வேந்தனும் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள். நான் வாழும் ஊரில்,
மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்த
சான்றோர்கள் பலர் உள்ளனர்.” என்று பிசிராந்தையார் தன் இளமை குன்றாத
தோற்றத்திற்குப் பாடல் 181 – இல் விளக்கம் அளிக்கிறார்
• ”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது
கற்றல் நன்றே” என்றுகூறும் பாண்டியன் ஆரியப்படை கடந்த
நெடுஞ்செழியனின் பாடல் (பாடல் – 183) கல்வியின் இன்றியமையாமையை
மக்களுக்கு எடுத்துரைக்கிறது.
மன்னனுக்குரிய
அறிவுரைகள்
-
”நெல்லும் உயிர்அன்றே; நீரும் உயிர்
அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று கூறும் மோசிகீரனாரின்
பாடல் (பாடல் -186) ”ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமைவு
இல்லாத நாடு (குறள் - 740).” என்று வள்ளுவர் கூறுவதை
வலியுறுத்துகிறது.
-
”ஆட்சி புரிபவர்கள் ஆற்றல்
உடையவர்களாக இருந்தால் நாடு நலம் பெறும்; அவர்கள் ஆற்றல்
அற்றவர்களாக இருந்தால் பலவகையான துன்பங்கள் வந்து சேரும்’ என்று
கூறும் தொண்டைமான் இளந்திரையனின் பாடல் (பாடல் – 185)
மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் எற்ற கருத்து.
• அருளையும் அன்பையும் நீக்கி வாழ்பவரோடு சேராது, நாட்டு மக்களைக்
குழந்தைகளைக் காக்கும் தாயைப் போலப் பாதுகாக்கவேண்டும் என்று
நரிவெரூஉத்தலையார் சேரமான் கருவூரேறிய ஓள்வாட் கோப்பெருஞ்சேரல்
இரும்பொறைக்குக் கூறும் அறிவுரை நாடாள்பவர் பின்பற்ற வேண்டிய
ஒன்றாகும். (பாடல் – 5).
-
ஒரு சமயம், மலையமான் திருமுடிக்காரி
எல்லாப் புலவர்களுக்கும் சிறப்புச் செய்வதைப் போலவே தனக்கும்
சிறப்புச் செய்வதைக் கண்ட கபிலர், புலவரின் தகுதி அறிந்து சிறப்புச்
செய்தல் வேண்டும் என்று காரிக்குக் கூறும் அறிவுரை ”பொதுநோக்கான்
வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்(குறள் - 528).”
என்ற குறளோடு ஒத்திருப்பதைக் காண்க.
-
”போர் புரிவதைத் தவிர்த்து,
வீரர்களும் பரிசிலரும் உன்னை வாழ்த்த, மகளிர் தரும் மதுவை அருந்தி,
மகிழ்ச்சியோடு சிறந்து வாழ்வாயாக! அதுவே சிறந்த வாழ்க்கை. உலகத்தில்
தோன்றிப் புகழ் பெருக வாழாமல் இருப்பவர்கள் இறந்தவர்களாகவே
கருதப்படுவார்கள்.” என்று மாங்குடி கிழார் தலையாலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியனுக்குக் கூறும் அறிவுரையைப் போரை விரும்பும்
ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். (பாடல் – 24)
-
“தகுதியற்றவன் ஆட்சிக்கு வந்து
மக்களிடம் அதிகமாக வரி கேட்டு அவர்களைத் துன்புறுத்தி ஆட்சி செய்வது
அரசனுக்கு மட்டுமல்லாமல் குடிமக்களுக்கும் பெருஞ்சுமையாக இருக்கும்.
ஆனால், தகுதி உடையவன் ஆட்சிக்கு வந்தால், அவ்வாட்சி அவனுக்கும் அவன்
குடிமக்களுக்கும் சுமை இல்லாததாக இருக்கும்.” என்று சோழன்
நலங்கிள்ளி கூறுவது (பாடல் – 75)”, “வேலொடு நின்றான் இடுவென்றது
போலும் கோலொடு நின்றான் இரவு(குறள் - 552).” என்ற குறளோடு
ஒத்திருப்பது ஒப்பு நோக்கத் தக்கது.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|