திரையில் ஒளிரும் திருக்குறள்

மா.உ .ஞான வடிவேல்


கண்ணதாசன் கவி நயம்.
உலகில் தோன்றிய மொழிகளில் தலை மொழி மற்றும் தலையாய மொழி தமிழ் என்று அனைத்து மொழி வல்லுனர்களும் ஆராய்ந்து பதிவு செய்திருக்கிறார்கள். அதனை உறுதிப்படுத்தும் சான்றுகள் தொடந்து கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் அத்தகைய வல்லுனர்களாலும் தமிழ் பிறந்த காலத்தை அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவு தமிழ் மொழி மிக மிகத் தொன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

கவி பாரதி எடுத்துக்காட்டுவது போல்

'தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலை வாணர்களும் -இவள்
என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினள் "


ஆகத் தமிழ் சிறப்புற்று விளங்குகிறது.

அத்தகைய தமிழ் மொழியை வளர்த்தெடுக்கும் வண்ணம்,தொடந்து வளப்படுத்தும் வண்ணம் எண்ணற்ற புலவர்கள் மற்றும் கவி வாணர்கள் தொடந்து தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். தொல்காப்பியரில் தொடங்கி இன்றைக்கு சிற்றிதழ்களில் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் பெருமக்கள் வரையில் தமிழில் எண்ணற்ற படைப்புகளை எழுதி இம்மொழிக்கு வளமும் பலமும் சேர்த்து வருகிறார்கள்.

திருக்குறள்


அத்தகைய கவி வாணர்களில் வள்ளுவர் தலை சிறந்தவர். திரு வள்ளுவர் எழுதிய திருக்குறள் தமிழ் அன்னையின் திருமுகத்தில் இட்ட திலகமாக அவளுக்கு அழகு சேர்க்கிற இலக்கியம். அறநூல், மறை நூல், உலக நூல்,தத்துவக் களஞ்சியம் என்று பல்வேறு வகைகளில் வகைப்படுத்துகிற அளவுக்கு சிறப்புகளை உள்ளடக்கிய சிந்தனைப் பெட்டகம் திருக்குறள்.

திருவள்ளுவரை அறியாத தமிழர்கள் இல்லை. திருக்குறளைப் பயிலாத கவிஞ ர்கள் இல்லை.

வாழையடி வாழையாக திருக்குறளின் சிறந்த கருத்துக்கள் மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்ற முயற்சியில் அறிஞர் பெருமக்கள் தொடந்து ஈடு பட்டு வருகிறார்கள் . இசை, கட்டுரை, கவிதை, நாடகம் எனப் பல்வேறு வடிவங்களில் திருக்குறள் மக்களைத் தினமும் சென்று சேர்கிறது. அவ்வகையில் திரையிசைப் பாடல்களில் திருக்குறள் எங்கெங்கு மற்றும் எவ்விதம் கையாள பட்டு இருக்கிறது என்ற ஒரு சிறு ஆராய்ச்சியின் விளைவே இந்தக் கட்டுரை.

திரைப்பாடல்களில் திருக்குறள்


அதிக அழகோடும், அற்புதமான இசையோடும் திருக்குறள் கருத்துக்கள் திரைப் பாடல்களில் ஒளிர்கின்றன.
அவற்றிலும் குறிப்பாக கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்களின் திரைப்பாடல்களில் திருக்குறள் தெறிக்கின்ற இடம், கையாள பட்டிருக்கின்ற நயம் ஆகியவற்றைப் பார்க்கும்போது கவிஞர் கண்ணதாசன் திரைப்பட பாடல்களின் வீச்சினை உணர்ந்து , தனது பாடல்களின் வழி தமிழர்களின் சிந்தனைக்களஞ்சியமான திருக்குறளி ன் சிறந்த கருத்துக்களை தமிழர்களின் காதுகளுக்கு கடத்துகிற ஒரு ஆசானாக இருந்திருக்கிறார் என்று அறிய முடிகிறது.

'உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே-
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தாலென்ன - நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தாலென்ன பூமுகம் சிவந்தா போகும் '


என்ற பாடலைக் கேட்கும்போது , திருக்குறள் பாடலாகிய

'யானோக்குங் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்'
(குறிப்பு அறிதல்-1094)

என்கிற பாடல் எல்லோர் மனதிலும் வந்து போவது இயற்கை.

இன்பத்துப்பாலில் மட்டுமல்ல, அறத்துப்பால், பொருட்பால் ஆகிய வற்றிலிருந்தும் பல கருத்துக்கள் திரு. கண்ணதாசன் அவர்களின் திரைப்பாடல்களில் ஒளி வீசுவதை நம்மால் உற்று நோக்குங்கால் உணர முடிகிறது.

கையாண்ட விதம்:

திருக்குறள் ஒரு நீதி நூல். உயர்வு தரக்கூடிதாயினும் அயர்வு தரக்கூடியது.

திரை இசை அப்படியல்ல. கவர்ச்சி மிக்கது,சாதாரண மனிதனுக்கு இனிக்கக் கூடியதாக கட்டமைக்கப் படுவது.

அத்தகைய இசைக் கட்டுக்குள், கட்டுப்பாட்டுக்குள் சிறந்த சிந்தனைகள் சாதாரண தமிழனுக்கும் சென்று சேரும்படியான சிறந்த ஒரு சேவை புரிந்தவர் கண்ணதாசன்.

அவர் அதற்கு கையாண்ட விதங்களும் அலாதியானவை .

சில இடங்களில் திருக்குறள் சொற்களை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்.
சில இடங்களில் திருக்குறள் கருத்துக்களை தனது சொற்களால் பதிவு செய்து இருக்கிறார்.
சில இடங்களில் திருக்குறள் கருத்துக்களுக்கு தன் கருத்துக்களால் வலிமை சேர்த்தும் இருக்கிறார்.

காதல் பாடல்கள், தத்துவப்பாடல்கள், பக்திப் பாடல்கள் , சோகப் பாடல்கள்,தாலாட்டுப் பாடல்கள், பாசப் பாடல்கள் ,நாட்டுப் பாடல்கள் என்று எல்லாவற்றிலும் ஜொலித்து திரையுலகில் கோலோச்சிய செட்டி நாட்டுக் கவிஞர் , தமிழ் தாயின் இளைய மகன் , இனி க்கின்ற தமிழ் அருவி,திரு. கண்ணதாசன் அவர்களின் திறத்தை வணங்கி வியந்து இந்த கட்டுரை நீள்கிறது.

சரஸ்வதி சபதம் என்ற படம்-அதில் வித்யாபதி என்ற பாத்திரம்- ஊமையாய் இருந்து கலை மகளின் அருளால் பேசும் வல்லமை பெற்று அறிஞனாகி கவிஞனாகி நாடு போற்றும் பெரும் புலவனாகி விடுவதாக கதை.
ஊமை முதன் முதலாகப் பேச வேண்டும்- என்ன பேசுவான்- என்னென்ன பேசுவான்-கற்பனை செய்து பாருங்கள்.
கண்ணதாசன் வார்த்தைகளும், அதனைக் காட்சிப்படுத்திய விதமும் அந்தக்காட்சியை ஒரு காப்பியமாக நிலைக்கச் செய்து விட்டது . அந்தப் பாடலில் பெரும்பான்மையாக திருக்குறள் கையாளப்பட்டு இருக்கும்.,

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
இயல் இசை நடக்க தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் உணர வைத்தாய்
ஊமையை திறந்து பேச வைத்தாய்- அம்மா- பேச வைத்தாய்

எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் ....தேவி...

இந்தப் பாடலில் அகர முதல , ஆதி பகவன் , எண்ணும் எழுத்தும் என்கிற திருக்குறள் சொற்கள் அப்படியே கையாளப்பட்டு இருக்கின்றன. "ஈன்றவர் நெஞ்சை குளிர வைத்தாய்" என்கிற வாக்கியத்தில் -ஈ ன்ற பொழுதில் பெரிதுவக்கும் என்கிற குறளின் மனம் வீசுவதை உணர முடியும்.

வித்யாபதி சரஸ்வதியை நோக்கிப் பாடுவதாக திரையில் தெரிந்தாலும், கற்பனை செய்து பார்த்தால், திரு கண்ணதாசன் திருவள்ளுவரை கலைவாணியாக உருவகப்படுத்தி கவிஞரே வள்ளுவரை நோக்கிப் பாடியதாக தோன்றுகிறது அல்லவா ! மறுபடி படித்துப் பாருங்கள்.

இந்தப்பாடலின் மற்றோரு சிறப்பு 'அ' வில் தொடக்கி 'ஓ' வில் முடிவது.
திரையில் கண்ணதாசன் படைத்த ஆத்திசூடி .
சோதி மிக்க சொற்கட்டு.... என்னே ஒரு அற்புதம்


திரை மீண்டும் திறக்கும்.........

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்