ஆமைப் பார்ப்பு அன்ன காமம்...!

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி.


ளவில் காட்டும் அவசரத்தை கற்பு மணத்தில் காட்ட தலைவன் தாமதிப்பதற்கு, நீ தான் காரணம் என்று தோழி தலைவியைக் கடிந்து கொள்கிறாள். 'உன் மெத்தனப் போக்கால் தான் அவன் உன்னை மணம் புரிந்துகொள்ளாமல் ஏதோதோ சாக்குப் போக்குகள் சொல்லி வருகிறான். நீ கண்டிப்பாகப் பேசினால், உன் உள்ள உறுதியை அவனுக்கு உறைக்கும்படி வெளியிட்டால் அவன் இப்படி தட்டிக் கழிப்பானா? போடி, பைத்தியக்காரி! இப்போதும் நீ வருந்துவதற்கு உன் குற்றம் தான் காரணம் என்று தலைவியின் மீதுள்ள பரிவால் சாடுகிறாள் தோழி.

அப்போது தலைவி அவளுக்கு மறுமொழி உரைப்பதைத்தான் 'கிள்ளிமங்கலக் கிழார்' என்னும் புலவர் இப்பாடலை அமைத்துள்ளார்;

யாவதும் அறிகிலர் கழறு வோரே;
தாயில் முட்டைபோல உள்கிடந்து
சாயின் அல்லது பிரிவு எவன் உடைத்தே
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம்இ காதலர் கையற விடினே.
குறுந்தொகை-152.

தோழியே, நீ அவர் மீது வீணாக குற்றம் சாட்டாதே. நீ உண்மை உணராமல் இடித்துரைக்கின்றாய்; 'ஆமையின் குட்டிகள், தம் தாயின் முகத்தைப் பார்த்து தான் வளரும்; தாய் முகம் பார்க்காவிட்டால் அவை வளர்சியடைவதில்லை; காமமும் அது போன்றது தான்; தன் தன் காதலனைப் பலமுறையும் பார்க்கும் போதுதான் பலன் பெறும். காமத்தின் பயனை அதையுடையவரரே அனுபவிக்க முடியும்;

காதலனைப் பாராது வாழும் மகளிர், காமத்தின் இன்பத்தைப் பெற மாட்டார்கள்; காதலனைப் பிரிந்த மகளிர் தாய்ப் பறவையால் கைவிடப்பட்ட முட்டை போன்றவர்கள்; தாய்ப் பறவையால் அடைகாக்கப்படாத முட்டையின் உள்ளிருக்கும் உயிர் வெளிவர முடியாது.அதன் வளர்ச்சி அரைகுறையாகத்தான் இருக்கும்; உள்ளேயே சிறைப்பட்டுக் கிடக்கும்.அந்த உயிர் வேறு என்ன செய்ய முடியும்? அதுபோலஇ என்னை இடித்துரைப்பவர்கள், கடிந்துகொள்பவர்கள் இந்த உண்மையை அறியவில்லை; வீணாக என்மீது பாய்ந்து விழுகின்றனர்.

காதலனோடு சேர்ந்திருப்போர் காமத்திற்குத் தாயின் முகம் நோக்கியிருக்கும் ஆமைப் பார்ப்பு உவமை; காதலனைப் பிரிந்திருக்கும் மகளிர் காமத்திற்குத் தாயில்லாத முட்டை உவமை. அழகான இயற்கை உவமைகளைக் கிள்ளிமங்கலக் கிழார் கையாண்டுள்ளார்.
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்