திரையில் ஒளிரும் இலக்கியம்.

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி.


திரையிசைப் பாடல்களில் இலக்கியம் இருக்கிறதா? என்ற சர்ச்சை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.போகிற போக்கில் கேட்டுவிட்டு,அப்படியே விட்டுவிட்டுப் போகும் திரைப்பாடல்களில் இலக்கியமா?என்று திகைப்போரும் உண்டு.

பாபநாசம் சிவன்,உடுமலை நாராயண கவி,தஞ்சை இராமையாதாஸ் போன்ற பாடலாசிரியர்களெல்லாம் தாம் வாழ்ந்த காலத்தில் எப்படி,என்னமாதிரி மொழிநடையைக் கையாளுவது என்பதையெல்லாம் நன்கு அறிந்திருந்ததனால் தான் வடமொழியையும் கலந்து பாடல் எழுதினார்கள்.சான்றாக, சிவகவி என்னும் படத்தில் “வதனமே சந்திர பிம்பமோ”என்ற பாடலில் பயின்று வரும் வதனம்,சந்திரன்,பிம்பமோ இவையெல்லாம் வடமொழிச் சொற்கள் தான். தஞ்சை ராமமையாதாஸ் ராஜா தேசிங்கு படத்துல சரச ராணி கல்யாணி சங்கீத வாணி ன்னு ஒரு பாடலை எழுதினார்.பாடல் முழுதும் வடமொழி தான். அப்போது அந்த திரைக் கவிஞர்கள் இப்படி எழுதினால் தான் வருமானம் கிடைக்கும் என்ற நிலையில் அவர்களுக்கு தமிழின் மீது பற்றிருந்தாலும் கூட அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிலவிய சூழலுக்கு ஏற்றாற்போல் பாடல் புனைந்தார்கள் என்பது வெள்ளிடை மலை.

இது இப்படியிருக்க, நம் சமகாலக் கவிஞர்கள் மெல்ல மெல்ல தமிழிலக்கியத்தை அடியொற்றி வரும் பாடல்களைப் புகுத்தினர்.பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் இலக்கியக் களம் அமைக்க ஏதுவாகிற்று. அதில், கவியரசரின் பாடல்களே இலக்கியத்தை, அது சொல்லும் இன்ப ரசனையை நம் போன்ற பாமரனும் திரைப்பாடல்கள் வழியாக அனுபவிக்கத் தந்தார் என்றால் அது மிகையல்ல; இலக்கியங்கள் அத்தனையையும் படித்து, அதனை உளமார மாந்திக் களித்து தான் சுவைத்தவற்றை நாமும் அனுபவிக்கத் தந்தவர்.

சோழ மன்னர்களது ஆட்சிச் சிறப்பையும், இசைப் புலமையையும், இறை மாட்சியையும் பொருநராற்றுப்படை என்ற சங்க இலக்கிய நூல் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறது.

குறிஞ்சி பரதவர் பாட,நெய்தல் நறும் பூங்கண்ணி குறவர் சூட,
கானவர் மருதம் பாட. அகவர் நீல் நில முல்லைப் பல்தினை நுவல,
கானக் கோழி கதிர் குத்த, மனைக் கோழி தினைக் கவர, வரை மந்தி
கழி மூழ்க, கழி நாரை வரை இறுப்ப, தண் வைப்பின் நால்நாடு குழீஇய
மண் மருங்கினான் மறு இன்றி, ஒரு குடையான் ஒன்று கூற
பெரிது ஆண்ட பெருங்கேண்மை, அறனொடு புணர்ந்த திறன் அறி
செங்கோல், அன்னோன் வாழி,வென் வேற் குருசில்!
(பொரு: 218-231)

ஐந்திணை மக்கள் தத்தம் இயல்பு மாறி மயங்கித் திளைத்த செய்தியை மேற்காணும் இலக்கியம் விளக்குகிறது.

இதனை கண்ணதாசன், திருமால் பெருமை என்ற படத்தில் பாடலாகத் தந்தார்.

கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு-எங்கள்
உறையூரின் காவலனே நீ வாழிய நீடு,
கொடியேறி புலி விளையாட குன்றேறி புகழ் விளையாட
மடியேறி மழலையராடும் மன்னவன் வாழ்க-பொன்னை
வரையாமல் வாரி வழங்கும் தென்னவன் வாழ்க.

சேர,சோழ, பாண்டிய நாட்டின் வளத்தையும்,மன்னவர்களின் பண்பையும் பாடலில் அமைத்துள்ளார்.சோழ நாட்டில் ஆற்றுவளம் நிரம்பி, மீன்களெல்லாம் கரையேறி விளையாடும் அழகையும் பாடுகிறார். சேர நாடு மலை நாடு அல்லவா? அதனால் அவன் புகழ் குன்றேறி நின்று நிலைக்கிறதாம். வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் பாண்டி நாட்டிலோ, மன்னவன் தென்னவன் பொன்னை, இன்னார் இனியார் என்றும்,வலியர் எளியர் என்றும் பாராமல் வாரி வழங்குகிறானாம்.

புதிய பூமி ங்கிற படத்துல வளை, வளை என்றொரு பாடல் எழுதினார்.

சின்னவளை முகம் சிவந்தவளை –நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை –நான்
ஏற்றுக் கொள்வேன் வளை இட்டு.

வளை என்றால் வளையல், வளைத்தல், பொந்து என்பது பொருள். இப்பாடலில் காதலியை எப்படி வளைத்தேன், அதுவும் வளையல் போட்டு வளைத்தேன் என்கிறார் கவிஞர். இவருக்கு எப்படி இப்படி எழுதணும்னு தோணிச்சு?

கம்பரின் தனிப்பாடலொன்றை உள்வாங்கிய கவிஞர் இதை எழுதியிருப்பார் என்பது என் ஊகம்.
கம்பரின் தனிப்பாடல்.

இருந்தவளை போனவளை என்னை அவளை
போருந்தவளைபறித்துப் போனாள்-பெருந்தவளை
பூத்தத் தேன் சொரியும் பொன்னி வள நாட்டில்
மாத் தத்தன் வீதியினில் வந்து.

தூதுவளை நெஞ்சைத் தொட்டவளை –மெல்லத்
தொட்டால் தொட்டால் துவளும்.
பால்மழலை மொழி படித்தவளை –சுகம்
பட்டால் பட்டால் படியும்.

இப்படி பாடல் முழுமையும் வளை,வளையென்று நம்மை பாடலில் வளைத்துப் போட்டுவிட்டார்.

அடுத்து, திருவள்ளுவ நாயனார் இயற்றிய தனிப்பாடல் ஒன்றைப் பார்ப்போம்;

எந்த ஊர் என்றீர்; இருந்த ஊர் நீர் கேளீர்,
அந்த வூர்ச் செய்தி அறியீரோ!-அந்த ஊர்
` முப்பாலும் பாழாய் முடிவி லொரு சூனியமாய்
அப்பாலும் பாழென்று அறி!


இதனைப் பார்த்த கவிஞர் காட்டுரோஜா ங்கிற படத்துல ஒரு பாடலை அதுவும் ஒரு தத்துவப் பாடலை எழுதினர்.

எந்த ஊர் என்றவளே, இருந்த ஊரைச் சொல்லவா?

அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா?

இப்படி ஊர் ஊர்ன்னு பாடல் முழுவது எழுதியிருந்தார்.

என் காதலியே என்னைப் பார்த்து,எந்த ஊர் என்று கேட்டுவிட்டாய்; அந்த ஊரும் கூட நீ அறிந்த ஊர் தான்; அது தான் காதல் ஊர்;

உடலூரில் வாழ்ந்திருந்தேன்,
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்.
மண்ணூரில் விழுந்து விட்டேன்,
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்.

பேரறிஞர் அண்ணாதுரை ஒரு பாடலைச் சொல்லுவார்:

சூலூரிலிருந்து புறப்பட்டு
பாலூரில் அன்னையின் அன்புப்
பாலூட்டப் பெற்று வேலையூர்செல்கிறோம்.
அங்கிருந்து பக்குவம் பெற்று
சேலையூர் சென்று இன்புறுகிறோம்; பிறகு
வசதியூர் தேடுவதிலே ஈடுபட்டு கடைசியாக
சுடலையூர் சென்று அமைதி பெறுகிறோம்.


ஆடி அடங்கும் வாழ்க்கையில் தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள்.அத்தனையையும் கவிஞர் பட்டியலிட்டுள்ளார்.இன்னும் சொல்கிறார்,

கையூரில் வளர்ந்திருந்தேன்,
காலூரில் நடந்து வந்தேன்,
காளையூர் வந்துவிட்டேன்,
வேலூரைப் பார்த்துவிட்டேன்.


காதலித்துப் பிரியும் வேதனையை ஆண் பேசியதாக அவ்வளவாக இலக்கியங்கள் சொல்லவில்லை; எனினும், தலைவன் மடலேறி தன் பிரிவாற்றாமையை ஊருக்கு உணர்த்துவான்; கவியரசர் தன் அனுபவத்தின் பால் பல பாடல்களில் இந்த வேதனையைப் பகிர்ந்துள்ளார்;

காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்,
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்,
பள்ளத்தூர் தன்னில் என்னைப் பரிதவிக்க விட்டுவிட்டு,
மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்றுகொண்டாள்,
கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா,
மேலூருபோவதற்கும் வேலை வரவில்லையடா.


இதற்குப் பொழிப்புரையும் தேவையோ?


                                                                                                                                  தொடரும்..
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்