பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 7)

முனைவர் செ.இராஜேஸ்வரி


பெண்களின் தேவையறிந்து உதவிய தெய்வத்தின்பிள்ளை எம் ஜி ஆர்

திரையுலகிலும் வெளி உலகிலும் இடர்ப்பாடுகள் வந்த போது பெண்களை காவல் காக்கும் காவல்காரனாக எம் ஜி ஆர் விளங்கினார். திரைப்படங்களில் பெண்கள் ஆதரவின்றி தவிக்கும் பொது அபயக் குரல் கொடுக்கும் போது அது எப்படியோ எம் ஜி ஆரின் காதுகளுக்கு எட்டி அங்கு எம் ஜி ஆர் ஆபத்பாந்தவன் போல அனாத ரட்சகன் போல வந்து நிற்பார். நிஜ வாழ்விலும் அவர் தன்னை நோக்கி அழைத்தவர்களுக்கு மட்டுமல்ல தன்னிடம் வந்து உதவி என்று கேட்காதவர்களுக்கும் அவர்களின் தேவை அறிந்து தானாக முன்வந்து உதவி இருக்கிறார்.

‘’தன்னை நாடியவருக்கு தானே உதவ முடியும் நாடாருக்கு எப்படி உதவ முடியும்’’ என்று கேட்ட முதலமைச்சர்கள் வாழ்ந்த தமிழகத்தில் தேவை இருப்போரை தேடி போய், ஓடி போய் உதவிய தனி பண்பு உடையவர் எம் ஜி ஆர். தெரிந்தவர்

உதவி செய்வது ஓர் தன்னிச்சை செயல்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று திருமூலர் சொன்னது போல எம் ஜி ஆர் வாடிய மனிதர்களை காணும் போதெல்லாம் இவர்கள் என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கீறார்களே இவர்களுக்கு நான் என்ன செய்ய போகிறேன் என்று வாடி கண் கலங்குவாராம். வாடி இருப்போர் யாராக இருந்தாலும் எம் ஜி ஆரின் மனதில் ஈரம் கசிந்தது. உடனே உதவினார். உதவ வேன்டும் என்று அவர் நினைக்கும் முன்னரே அவர் மனம் தன்னிச்சையாக உதவிற்று.

பிறருக்கு உதவுதல் எம் ஜி ஆரின் உடம்பில் அமைந்துவிட்ட reflexive action. அதாவது தன்னிச்சை செயல். கண் அருகே பூச்சி பறந்தால் உடனே கை அதை தட்டி விடும் . காலில் பூச்சி கடித்தால் தூக்கத்தில் கூட கை அதை தட்டி விடும். இதை தான் தன்னிச்சை செயல் என்பார் உடலியல் அறிஞர்.

திருவள்ளுவர் நட்பு பற்றிய அதிகாரத்தில் இந்த தன்னிச்சை செயலை ஒரு உவமையாக காட்டுவார்.

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

என்பார். நழுவும் ஆடையை சரி செய்யும் கைகள் போல நண்பனுக்கு ஒருவன் உதவ வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதை போலவே எம் ஜி ஆரின் உதவும் குணமும் இருக்கும். அவர் நல்லவர் கெட்டவர் நமக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று ஆலோசிக்காமல் சட்டென்று உதவிவிடுவார். எனவே உதவி செய்வது அவரிடம் தன்னிச்சையாக அமைந்த செயல்பாடு.

மூதாட்டி மற்றும் இளம்பெண்

முதலமைச்சர் எ ஜி ஆர் மைசூரில் இருந்து பகலில் சென்னைக்கு காரில் திரும்பி கொண்டிருக்கிறார். அவருடன் அவரது மனைவி ஜானகி அம்மையாரும் மைத்துனர் மகள் லதாவும் இருக்கின்றனர். ஒரு இடத்தில் கார் வரும் போது ‘வண்டிய நிறுத்து’ என்று சொல்லி ‘ஜானு உன் செருப்பை கழட்டு’ என்றார். ‘லதா நீயும் கழட்டும்மா’ என்றார். இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. கழட்டிவிட்டனர். ஒரு மூதாட்டியும் இளம்பெண்ணும் தலையில் விறகு சுமையுடன் வெயிலில் கால் சூடு தாங்காமல் ஓட்டமும் நடையுமாக வருகின்றனர். மர நிழலில் நின்று சற்று இளைப்பாறுகின்றனர். பிறகு நடக்கிறனர். அவர்கள் காருக்கு அருகில் வரும்பொது அவர்களை அழைத்து செருப்பை கொடுக்க சொல்கிறார். அவர்கள் கண்களில் கண்ணீர் பெருக நன்றி சொல்கின்றனர். காலில் செருப்பை மாட்டிக்கொண்டு கொஞ்சம் ஆசுவாசமாக நடக்கின்றனர். அதை பார்த்துவிட்டு எம் ஜி ஆரின் கார் கிளம்புகிறது.

டபுள்ஸ்


அவர் முதலமைச்சரானதும் மிதிவண்டியிலிருவர் செல்லலாம் என்ற உத்தரவை பிறப்பித்தார். இதனால் கணவனும் மனைவியுமாக இருவரும் சேர்ந்து பயணித்து மகிழ்ந்தனர். .மடியில் ஒரு குழந்தையும் முன் கம்பியில் பொருத்தப்பட்டுள்ள சிறு இருக்கையில் மூத்த குழந்தையுமாக குடும்பத்துடன் கோவில் திருமணம் திரையரங்கு என்று சென்று வந்தனர். இது சிறிய விஷயமாக இப்பொது தோன்றலாம் ஆனால் அந்தக் காலகட்டத்தில் பெண்கள் பெரும்பாலும் மாமியார் நாத்தனாருடன் தா விசேஷங்களுக்கும் திரையரங்குக்கும் செல்வதுண்டு கணவனோடு செல்வதற்கு வாய்ப்பில்லை. இந்த சைக்கிள் சவாரிக்கு அனுமதி கிடைத்ததும் ஜோடி ஜோடியாக செல்லத் தொடங்கினர். வீட்டில் பேச முடியாத ரகசியங்களை கணவனின் காதில் சொல்லிக்கொண்டே செல்லலாம். இந்த சைக்கிள் சவாரி அவர்களுக்கு ஒரு தனிமையும் நெருக்கமும் கிடைக்கக் காரணமாயிற்று.

பணியிட மாற்றம்


எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் பெண்களுக்கு ஆதரவாக இருப்பது போலவே நிஜ வாழ்விலும் இருந்தார். கனவன் மனைவி என இருவரும் வேலை செய்தாலும் இருவரும் வெவ்வேறு இடங்களைல் பணி செய்தால் அவர்களுக்கு இடையே நிம்மதி இராது. திருமணமான பெண்களுக்கு அவர் தன் கணவரே பாதுகாப்பு அரண் என்பதை நன்கு உணர்ந்த எம் ஜி ஆர் தமிழக முதல்வரானதும் பெண்கள் வேலை பார்க்கும் ஊர்களுக்கு அவர்களின் கணவன்மாருக்கு பணியிட மாற்றம் கிடைக்க அரசாணை பிறப்பித்தார். குடும்பம் பிரிந்து இருப்பதால் பல பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க கூடும்; அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வர் என்பதை அறிந்து எம் ஜி ஆர் ஒரு மூத்த சகோதரனைப் போல அவர்களின் எண்ணங்களுக்கும் ஏக்கங்களுக்கும் மதிப்பளித்து கணவன்மார் பணியிடம் மாற்றம் பெற வழி வகைகள் செய்தார். குடும்ப ஒற்றுமையை பேணி காப்பதில் வேறு எந்த முதலமைச்சரும் எம் ஜி ஆரைப் போல அக்கறை எடுத்ததில்லை.

விதவையர் மறுமணம்

கணவன் பணியில் இருக்கும்போது இறந்து போனால் அவரது துறைய்ல் வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும். அவரது சகோதரருக்கோ அவரது மனைவிக்கோ அவர்களின் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலை கிடைக்கும். அப்போது சில இளம்பெண்கள் கணவரின் வாரிசு வேலையை பெற்றுக்கொண்டு பிறகு மறுமணம் செய்து கொண்டனர். இதை முதல்வரின் கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றனர். விதவைகள் பொருளாதார ஆதரவில்லாத காரணத்தால் கணவரின் மறணத்துக்கு பின் வாரிசு வேலை பெறுகின்றனர். ஆனால் மறு மணம் செய்துகொள்ளும் போது இவர்களுக்கு சம்பாதித்து போட இன்னொருவர் வந்துவிட்டபடியால் முதல் கணவரின் வாரிசு வேலையை ராஜினாமா செய்து விட வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கும்படி எம் ஜி ஆரிடம் வேண்டி கொண்டனர்.

எம் ஜி ஆர் விதவையை மறுமணம் செய்துகொள்ள எவரும் விரும்புவதில்லை. மனைவியை இழந்தவன் கூட முன்வருவதில்லை. இச்சூழ்நிலையில் ஒருவன் ஒரு விதவையை திருமணம் செய்ய முன்வருகிறான் என்றால் அவளது வேலையும் வருமானமும் தான் முக்கிய காரணம் . அந்த வேலையை இழக்க வேன்டும் என்றால் இந்த விதவைப் பெண்களுக்கு மறு மணம் நடக்க வாய்ப்பில்லை. எனவே அந்த வேலையில் அவர்கள் தொடரட்டும் என்று சொல்லிவிட்டார். இந்த பதிலுரையை பத்திரிகையில் படித்த இளம் விதவைகள் எம் ஜி ஆரை தம் குலதெய்வமாக மனதுக்குள் நினைத்து வணங்கி வருகின்றனர்.

போராட்டத்தில் பெண்கள்


ஒரு முறை தமிழகம் எங்கும் இருந்து நெசவாளர்கள் சென்னைக்கு வந்து ஒரு போராட்டம் னடத்தினர். அப்போது சைதை துரைசாமி அவர்களும் அற்ற தொண்டர்களும் போராட்டக்காரர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என கருதி எம் ஜி ஆரை அணுகி ‘அண்ணே நெசவாளர்கள் பத்தாயிரம் பேர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு இங்கு சாப்பாடு கிடைக்கவில்லை; கிடைக்கும் சாப்பாடும் விலை அதிகமாக இருக்கிறது; இவர்களால் வாங்கி சாப்பிட முடியவில்லை; பலர் பசியால் வாடுகின்றனர் என்றனர். சரி போ ஏற்பாடு செய்கிரேன் என்றார் எம் ஜி ஆர்.

மதியம் போராட்டக் களத்துக்கு எல்டாம்ஸ் ஓட்டலில் இருந்து 20,000 உணவு பொட்டலங்கள் வந்து இறங்கின. சைதையார் உடனே எம் ஜி ஆரை தொடர்பு கொண்டு ‘’அண்னே இருபதாயிரம் பொட்டலம் வந்திருக்குண்ணே. நான் பத்தாயிரம் தான் சொன்னேன்’ என்றார். எம் ஜி ஆர் ‘’போராட்டக்காரர்களோடு அவர்கள் மனைவிகளும் வந்திருக்கிறார்களே; அவர்கள் பட்டினியாக போடவா? அதனால் நான் தான் இருபதினாயிரம் தயார் செய்யச் சொன்னேன் என்ரார். இந்தப் பதிலை கேட்ட சைதையார் கண் கலங்கிவிட்டார்.

எம் ஜி ஆர் ஒரு பிரச்சனையை அனைத்து பரிமணங்களிலும் ஆலோசித்து முடிவெடுப்பார். ஒருவரை விட்டு ஒருவர் உணவருந்துவது ஈருடல் ஓருயிராய் இணைந்திருக்கும் நல்ல கணவன் மனைவிக்குள் நடக்காது என்பதை எம் ஜி ஆர் அறிவார். எனவே இருவருக்குமாக சேர்த்து உணவளித்தார். அன்று மதிய உணவு வயிறார சாப்பிட்ட நெசவாளர்களின் மனைவிமார் எம் ஜி ஆரை மனமார வாழ்த்தி இருப்பார்கள். கணவன்மார் மனைவியும் பசியாறினாளே என மகிழ்ந்திருப்பர்.

கணவனும் மனைவியும் இணைந்து வாழ வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தங்களின் பிர்ச்சனைகளைப் பிறரறியாத வகையில் தங்களுக்குள் தீர்த்துக்கொண்டு அன்பாக வாழவேண்டும் என்பதில் அதிக அக்கறை உள்ளவர் எம் ஜி ஆர் அவர் திருமண விழக்களுக்கு போகும் போது மணமக்களுக்கு இதையே அறிவுரையாக கூறுவார். அவர்கள் இணைந்து வாழ தன்னாலான உதவிகளை செய்வார். ஒரு பெண்ணுக்கு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டும் என்பதில் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர். மனிதாபிமானம் மிக்க நடவடிக்கைகளை எடுப்பவர் என்பதை விளக்கும் சிறந்த உதாரணங்களாக மேற்காட்டிய சம்பவங்கள் திகழ்கின்றன.

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்


எம் ஜி ஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் தஞ்சை சோழ மண்ணைச் சேர்ந்த கருணாநிதியிடம் இருந்து தமிழகத்தை மீட்ட எம் ஜி ஆரை மதுரை பாண்டியன் எனக் குறித்த படம் ஆகும். இப்படத்தில் அவர் ஒரு முதியவரை போலவும் லதா அவரது இளம் சீடர் போலவும் மாறு வேடம் பூண்டு வரும் காட்சியில் ஒரு மூதாட்டியிடம் இவர்கள் கூழ் வாங்கி குடிப்பதாக ஒரு காட்சி வரும் அக்காட்சியில் உணவின் மகத்துவத்தை ‘ வயிறார சப்பிட்ட பின்பு மனதார வாழ்த்துகிறார்களே அந்த வாழ்த்து உண்மையானது அதை நம்பலாம்’ என்பார். இது படத்துக்காக மட்டும் எழுதப்பட்ட வசனம் அல்ல. நிஜ வாழ்க்கையில் இது அவருடைய நம்பிக்கை. இத நம்பிக்கையின் காரணமாக அன்று நெசவாளர்களின் மனைவிமாருக்கும் உணவளித்தார். அவர்கள் தம் நன்றிக்கடனாக எம் ஜி ஆருக்கு வாக்களித்தனர்.

எம் ஜி ஆர் ஒருவருடைய துன்பத்தை அவரது கோணத்தில் இருந்தும் ஆராய்ந்து உதவிகளை செய்ய முன் வருவார். வறட்டு தர்ம நியாயங்களை பேசி மற்றவர்களை வருத்தப்பட வைக்க மாட்டார். எம் ஜி ஆர் ஆணாதிக்கம் பிடித்த சமுதாயத்தின் ஓர் ஆண் பிரதிநிதியாக இருந்து ஆராயாமல் ஒரு தகப்பனைப் போல ஒரு மூத்த சகோதரனை போல பெண்களின் பிரச்சனையை அணுகியதால் இவர்களின் கண்ணீர் துடைக்கப்பட்டது. அவர்களும் எம் ஜி ஆரை தம் உயிரினும் மேலாக மதித்து தங்கள் காலம் வரை மட்டுமல்லாது தங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் காலம் வரை அவரை நினைவில் இருத்தி போற்றி புகழ்ந்து அவரது கட்சிக்கு வாக்களித்து வருகின்றனர்.

 



முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்