'கவிதைச் சித்தர்' இலந்தை சு.இராமசாமி

பேராசிரியர் இரா.மோகன்

“கவிதை எனக்கொரு சித்து – அது
         காலங்காலமாகக் கைவந்த சொத்து;
புவியில் அதற்கிணை இல்லை – அது
         போட்டுப் புரட்டிக் கொடுத்திடும் சொல்லை”
(ப.19)

என்பது தமது ‘இலந்தைக் கவிப்பெட்டகம்’ முதல் தொகுதிக்கு எழுதிய ‘முன்னோட்ட’த்தில் கவிமாமணி இலந்தை சு.இராமசாமி வழங்கியுள்ள ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். மேலும் அவர், “இந்த நூல் என்னுடைய 58 ஆண்டுக் கால இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதி. இங்குள்ள கவிதைகள் என்னோடும் என் உறவோடும் என் நண்பர்களோடும் ஏன் இந்த நாட்டோடும் ஒவ்வொரு வகையில் தொடர்புடையன” (ப.17) எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

“வந்திக்கத் தக்ககுரு சிந்தனை அ.சீ.ரா. / மாணவன், இலந்தையூரான்;
வண்ணங்கள் சந்தங்கள் வெண்பா கலித்துறை / வாரிக் கொடுக்கின்றவன்;
எந்தக் கணத்திலும் கந்தனைப் போற்றிடும் / இலந்தை சு.இராமசாமி”
(ப.434)

எனப் பாரதிக்கு எழுதிய சீட்டுக் கவியில் சு.இராமசாமி தம்மைக் குறித்து சுய அறிமுகம் செய்து கொள்வதும் ஈண்டு மனங்கொளத்தக்கதாகும்.

மரபுக் கவிதைகளின் மதிப்புறு பெட்டகம்

“நான் எழுதிய கவிதைகளைத் திருப்பிப் பார்த்த போது தமிழ் யாப்பில் என்ன என்ன வகை பாக்களும் பாவினங்களும் சிந்து, சந்தம், வண்ணம், சித்திரக் கவிகள் எனக் கொடுக்கப்பட்டுள்ளனவோ அவற்றில் பெரும் பகுதிக்கு எடுத்துக்-காட்டுகளாக என்னுடைய கவிதைகள் பல அமைந்திருக்கக் காண்கிறேன். அது மட்டுமன்று, ஆங்கில இலக்கியத்தில் இருந்து தமிழ் இலக்கணத்திற்கு ஒத்துப் போகிற மாதிரி அமைந்திருக்கும் பா வகைகளைத் தமிழுக்குக் கொணர்ந்திருக்-கிறேன்” (முன்னோட்டம், இலந்தைக் கவிப்பெட்டகம்: முதல் தொகுதி, பக்.17-18) எனப் பெருமிதத்துடன் மொழியும் இலந்தை சு.இராமசாமி, தமது 60 ஆண்டுக் கால எழுத்துப் பயணத்தில் அவ்வப்போது எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘இலந்தைக் கவிப்பெட்டகம்: முதல் தொகுதி, சொல்லத் தான் நினைக்கிறேன்’ என்னும் தலைப்பில் 480 பக்க அளவில் முழுத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இத் தொகுப்பில் அவரது 394 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ‘வாழிய செந்தமிழ்’ என்னும் மொழி வாழ்த்துக் கவிதையுடன் தொடங்கும் இக் கவிப்பெட்டகம், ‘சொல்லின் செல்வன்’ அனுமனைப் பற்றிய கவிதையுடன் நிறைவு பெறுவது சிறப்பு.

எது சிறந்த கவிதை?

கவிமாமணி இலந்தை சு.இராமசாமியின் கருத்தியலில் கை தட்டல் பெறுவது மட்டும் கவிதை அன்று; ஊர்வலமாக உலா வரும் சொல்லடுக்கு கவிதை அன்று; பண்ணில் இசைவாய்ப் பாடி வைக்கும் யாப்பும் கவிதை அன்று; கத்திச் சொல்வதெல்லாம் கவிதை ஆகிவிடாது. ‘பின், எது தான் சிறந்த கவிதை?’ என்கிறீர்களா? கவிமாமணி, கவிவேழம், சந்தத் தமிழ்க் கடல், சந்தத் தமிழ்ச் சிந்தாமணி, பாரதிச் செம்மல், பாரதி பணிச்செல்வர் என்றெல்லாம் தமிழ் கூறு நல்லுலகால் சிறப்பிக்கப் பெறும் இலந்தை சு.இராசாமி நல்ல கவிதைக்கு வகுத்துக் கூறும் வரைவிலக்கணம் இதுதான்:

“எண்ணக் குதிரையிலே ஏறிவரும் கற்பனையின்
வண்ணம் குழைத்து வடிவாக்கி மண்ணிதிலே
பெற்ற அனுபவத்துப் பீடுகளை மற்றவர்கள்
உற்றறியும் வண்ணம் உரைப்பதுவே நற்கவிதை
தாக்கத்தில் பொங்கும் தழலாட்டம் நற்கவிதை
வாக்கைக் கனமாக்கும் மாட்சிமையே நற்கவிதை
கண்ணை நனைக்கும் கசிவுகளே நற்கவிதை
மண்ணதனை விண்சிறகில் மாட்டுவதே நற்கவிதை
ஈர இதய எதிரொலியே நற்கவிதை
வாரிச் சுழற்றும் வளையாட்டம் நற்கவிதை
இந்தக் கணத்தை இருத்தி வருங்காலச்
சந்ததி காணத் தருவதே நற்கவிதை”
(பக்.195-196)

‘கற்பனை இல்லையேல் கவிதை இல்லை; கற்பனைக்கு உள்ளே கனல் வர வேண்டும். உண்மை அங்கே ஒளிவிட வேண்டும்; உண்மை அங்கே ஒளிபெற வேண்டும்’ (ப.206) எனப் பிறிதோர் இடத்திலும் நல்ல கவிதையின் இலக்கணம் குறித்து எடுத்துரைக்கிறார் கவிமாமணி.

“சின்னக் குழந்தை ஒருகவிதை / சிரிப்போ சந்தம்; மயக்குகிற
கன்னக் குழிவோ உவமையெதும் / காண முடியா அலங்காரம்”
(ப.75)

எனச் சின்னக் குழந்தையின் கொள்ளை அழகினைச் செவ்விய சொல்லோ-வியமாகத் தீட்டும் போதும்,

“சின்னதோர் வயதில் வீட்டில் / சிரித்திடும் மல்லிகைப் பூ;
கன்னியாய் மாறி விட்டால் / கண்கவர் வண்ண ரோஜா;
அன்னையாய் இதழி ணைக்கும் / அழகுயர் தாமரைப் பூ;
பின்னவள் தளர்ந்த போதும் / பெருமை கொள் மகிழம்பூ தான்!”
(ப.57)

என பூவையரின் பெருமையினைப் பூக்களின் பெயர்களாலேயே போற்றிப் பாடும் போதும்,

“சாதனை செய்வ தற்குத் / தடபுடல் தேவை இல்லை” (ப.95)

என அடிப்படையான வாழ்வியல் உண்மையினைப் பளீரென உரைத்திடும் போதும்,

“மந்திரம் ஆவதும் வாசிக்கும் உள்ளத்தில்
சுந்தரம் ஆவதும் சொல்”
(ப.355)

எனப் புதுவதாகச் ‘சொல் குற’ளினைப் படைத்திடும் போதும்,

“ஓட்டை உடைசலிலும் உற்றுக் கவனித்தால்
மாட்டும் அரிய வனப்பு”
(ப.353)

என வித்தியாசமான ‘சிந்தனைச் சிதற’லைச் சித்திரிக்கும் போதும்,

“உள்ளத்துத் தூய்மையே அன்பு – துயர்
உற்றவர் கண்டே உதவிடும் அன்பு
கள்ளம் இலாததே அன்பு – விழி
காட்டிக் கொடித்திடும் பண்பதே அன்பு”
(ப.365)

என அன்புக்கு ஆராதனை செய்யும் போதும்,

“ நல்ல நண்பன் புத்தகம் / நன்மை சேர்க்கும் புத்தகம்
தொல்லை போக்கி வாழ்விலே / சொந்த மாகும் புத்தகம்”
(ப.130)

எனப் புத்தகத்தின் பெருமையைப் பறைசாற்றும் போதும்,

“காசு காசு காசு
காசு வாங்கி வாக்க ளிப்போன்
மாசு மாசு மாசு”
(ப.280)

எனப் பாரதியின் அடிச்சுவட்டில் காசு வாங்கி வாக்களிப்போரைச் சாடும் போதும்,

“வற்றலா வாழ்க்கை? வென்று / வாழ்வதே வாழ்க்கை யாகும்”
(ப.139)

என மனித வாழ்வின் மாண்பினை அறிவுறுத்தும் போதும்,

“நடந்ததை எண்ணிக் கவலைப் படாதே;
நடப்பதைப் பார்த்து நட”
(ப.320)

எனத் தத்துவ நோக்கில் ‘பிள்ளைக் குறள்’ இசைத்திடும் போதும்,

“வாழும் சமுதாயம் வீழப் புரிபவர்மேல்
வந்தால் சினம் நன்றுதான் – கிளியே
மாற்றம் வரும் அன்றுதான்”
(ப.243)

எனக் ‘கோபமும் வேண்டும் மற்றவருக்கு நன்மை செய்ய’ என்று புதிய நோக்கில் வழிகாட்டும் போதும் இலந்தை சு.இராமசாமியின் படைப்புத் திறத்தில் – மொழி ஆளுமையில் – நல்ல கவிதைக்கான செவ்விய பண்புகள் களிநடம் புரிந்து நிற்கக் காணலாம்.

கவிமாமணியின் முத்திரைக் கவிதை


‘சிந்தனை முகத்தில் தேக்கி’ என்ற படி, சிந்தனையை எழுத்தில் தேக்கி, சொல்லோவியமாய் வடித்துக் காட்டுவது என்பது உண்மையில் ஓர் அரிதினும் அரிய கலை; சதுரப்பாடு; வித்தகம். இதனைப் ‘படிப்படியாய்…’ என்னும் தலைப்பில் படைத்த கவிதையில் அழகுறப் பதிவு செய்துள்ளார் கவிமாமணி, ஆற்றல் சான்ற அவரது சொற்களில் அக் கவிதை வருமாறு:

“எழுதுகோல் எடுக்கும் முன்னே / இருந்திடும் எண்ணம் ஒன்று.
எழுதுகோல் எடுக்கும் போதில் / எழுந்திடும் எண்ணம் ஒன்று.
எழுதிடத் தொடங்கும் போதில் / இசைந்திடும் எண்ணம் ஒன்று.
எழுதிநாம் முடித்து விட்டால் / இருப்பதோ வேறே ஒன்று.”


இத்துடன் எண்ணத்தின் – எழுத்தின் – வண்ணம் நின்று விடுகின்றதா, முற்றுப் பெற்று விடுகின்றதா என்றால், அதுதான் இல்லை. எழுத்திலே வந்ததைப் படித்த பேர்கள் மனத்திலே பதிவது ஒன்றாம்; அந்த ஓர் கருத்தை அன்னார் அடுத்தவர்க்கு உரைக்கும் போதில், சிந்தியே போனதன் பின் செய்தியாய் நிற்பது வேறு ஒன்றாம்; இந்நிலையில், தாயுமானவரின் ‘எந்நாட் கண்ணி’யின் சாயலில்,

“சிந்தையை முற்றும் காட்டும் / திறம்பெறல் எந்த நாளோ?”
(ப.285)

என்னும் கவிமாமணியின் பொருள் பொதிந்த வினாவுடன் கவிதை நிறைவு பெறுவது முத்தாய்ப்பு,
‘பேச நினைப்பது ஒன்று, பேச்சில் வருவது இன்னொன்று, பேசியதாகப் பத்திரிகைகளில் வெளிவருவது வேறொன்று. இதுவே நல்ல பேச்சின் ஒப்புநோக்க’ என்னும் அறிஞர் கூற்று இங்கே ஒப்புநோக்கத் தக்கதாகும்.

‘தமிழ்’ என்ற சொல் பயின்று வரும் விருத்தக் கவிதை

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக் கவியரங்கிற்குத் தலைமை தாங்கக் கவிமாமணி இலந்தை சு.இராமசாமி கிளம்பிக் கொண்டிருந்த சமயம். அப்போது அவரது மகள் கவிதா, “அப்பா! ‘தமிழ்’ என்ற சொல் ஒரே விருத்தத்தில் பல தடவை வருமாறு ஒரு கவிதை எழுதி இன்று கவியரங்கில் நீ படிக்க வேண்டும்” என்கிறார். அத் தருணத்தில் தங்குதடையின்றி கவிமாமணியின் எழுதுகோலில் இருந்து ஊற்றெடுத்து வந்த உள்ளங்கவர் விருத்தக் கவித இதோ:

“செந்தமிழ், பொன்தமிழ், தேன்தமிழ், வான்தமிழ்
        சித்தாந்தம் ஆகும் தமிழ்
        தீந்தமிழ் மொழிகளின் சிகரத்தில் ஏறிடும்
        சீரான தொன்மைத் தமிழ்
பைந்தமிழ், பூந்தமிழ், மண்ணில் திகழ்தமிழ்
        பரதத் தமிழ், கோன் தமிழ்
        பரவச மூட்டிடும் முத்தமிழ், உலகினில்
        பழமைக்கும் பழமைத் தமிழ்
சந்தமே பொங்கிடும் தண்டமிழ், வண்டமிழ்
        சரித்திரம் ஆகும் தமிழ்
        தனித்தமிழ், பொருள்தமிழ், அகத்தமிழ், புறத்தமிழ்
        சாந்தம் தவழும் தமிழ்
எந்தையின் தந்தைக்கே தந்தையும் எந்தையும்
        ஏற்றிப் பொழிந்த தமிழ்
        இளந்தமிழ், இன்தமிழ், இசைத்தமிழ், இயல்தமிழ்
        என்றென்றும் வாழ்க! வாழ்க!”
(ப.22)

வாழையடி வாழையாக அன்னைத் தமிழுக்கு தகைசால் அடைமொழிகள் பலவற்றை வழங்கியுள்ள சங்கச் சான்றோர், கம்பர், குமரகுருபர், பாரதிதாசன் ஆகியோர் வரிசையில் இலந்தை சு.இராமசாமியும் இடம்பெறுவது குறிப்பிடத்-தக்கது.

இளந்தமிழனுக்குப் பள்ளியெழுச்சி பாடல்


இந்நாளில் தமிழகத்தில் நல்ல தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. தமிழும் ஆங்கிலமும் கலந்து ‘தமிங்கிலம்’ பேசுகிறார்கள். தமிழ்நாட்டிலேயே தமிழ் அழிந்து கொண்டு வரும் அவலம் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. இதை யார் சீர்திருத்துவது? இக் கொடுமைக்கு யார் சாவுமணி அடிப்பது? துடிப்பு மிக்க தமிழ் இளைஞர்கள் தாம் இதைச் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் இதைப் பற்றிச் சற்றும் கவலை கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். கவிமாமணி இலந்தை சு.இராமசாமியைப் பொறுத்த வரையில், உறங்கி கொண்டிருக்கும் இளந்தமிழனை விழித்தெழச் செய்வதே முதல் வேலை. எனவே, அவர் இளந்தமிழனுக்குப் பள்ளியெழுச்சி பாடுகின்றார்:

“தனித்தமிழ் வளர்த்தது சரிந்தது தோழா!
       தமிங்கிலம் எங்கணும் தழைக்குது பாராய்!
நுனித்தமிழ் பேசிடும் பெண்களின் கூட்டம்
       நொடிப்புடன் புதுமுறைத் தமிழ் சிதைக்கின்றார்;
தனித்தமிழ் கதைகளில் கசடுகள் சேர்ந்து
       காதுகள் குடைந்திடும் இழிநிலை காணாய்!
இனித்தமிழ் முற்றிலும் கெட்டிடும் முன்னே
       இனந்தமிழா பள்ளி எழுந்த ருளாயே!”
(ப.21)

ஒவ்வொருவருள்ளும் ஒளிந்து கொண்டிருக்கும் திறமை

“செய்யும் தொழிலே தெய்வம் – அதில் / திறமைதான் நமது செல்வம்;
கையும் காலும் தான் உதவி – கொண்ட / கடமை தான் நமக்குப் பதவி”

                                          (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், ப.72)

என மொழிவார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவரது அமுத மொழியினை வழிமொழிவது போல், இலந்தை சு.இராமசாமி ‘திறமை’ என்னும் தலைப்பிலேயே ஓர் அருமையான கவிதையை இயற்றியுள்ளார்.

“உன்னி டத்தில் ஓர்திறமை / ஒளிந்து கொண் டிருக்கிறது
என்ன வென்றே தேடிப் பார் / எவரை யேனும் கேட்டுப்பார்
இன்ன தென்று தேர்ந்தவுடன் / எழுத்து வழங்கு செயலாற்று
நன்மை பெறட்டும் இவ்வுலகம் / நண்பா இஃதுஉன் கடனாகும்”
(ப.229)

என்பது இளைய பாரதத்திற்குக் கவிமாமணி விடுக்கும் செய்தி ஆகும். ‘மூலையில் முடங்கிக் கிடப்பவனை மூதேவிக்கும் பிடிக்காது’. எனவே, சோம்பலைப் போக்கி, தாழ்வு தீர்ந்த தன்னம்பிக்கையோடு முயன்றால் வெற்றி வாகை சூடுவது உறுதி என அறுதியிட்டு உரைக்கிறார் கவிமாமணி:

“வெற்றித்தேவன் ஊக்கத் தேரில் / வீதி வலம் வருவான் – நீ
முற்றம் விட்டு வாசல் வந்தால் / முற்றும் நலம் தருவான்”
(ப.231)

“தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதுஇலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”
(236)

என்பது ‘புகழ்’ அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஓர் அரிய குறட்பா. இதன் உண்மைப் பொருள், ‘ஒருவன் எங்குத் தோன்றினாலும் புகழோடு தோன்ற வேண்டும்; அங்ஙனம் இல்லாவிட்டால் தோன்றாமல் இருப்பதே நன்று’ என்பது அன்று. ‘ஒருவன் எந்தத் துறையில் அடியெடுத்து வைத்தால் தடம் பதிக்க முடியுமோ அந்தத் துறையிலேயே தோன்ற வேண்டும்; இல்லாவிட்டால், அந்தத் துறையின் பக்கமே ஒருபோதும் காலடி எடுத்து வைக்கக் கூடாது’ என்பதே ஆழ்ந்திருக்கும் வள்ளுவரின் உள்ளக் கருத்து ஆகும். இதனை நினைவூட்டும் விதத்தில் கவிமாமணியும் தம் கவிதை ஒன்றில்,

“என்றும் வினைத் திட்பம் வேண்டும் – அதை
ஏற்றிடில் மாற்றிடா தேமீண்டும் மீண்டும்
ஒன்றைப் பிடிப்பது நன்று - அந்த
ஒன்றில் நிலைத்துநீ வாழுக வென்று!”
(ப.282)

என இளையோர்க்கு வழிகாட்டுவது நோக்கத்தக்கது.

கவிமாமணியைப் பொறுத்த வரையில், “சிதறிடாத நெஞ்சும் – உரம், சிதைந்திடாத நோக்கும், பதறிடாத போக்கும் – மெய் பழித்திடாத வாக்கும், உதறிடாத வீறும் – என்றும் உலைந்திடாத சீரும், புதிதாய் இன்று தேவை – நாடு, பூக்கச் செய்வோம் சேவை” (ப.162) என்பதுவே இன்றைய சூழலில் இளையோர் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டிய சூளுரை ஆகும்.

காலம் ஒரு வள்ளல், வாள்!


கவியரசர் கண்ணதாசனின் அடிச்சுவட்டில் கவிமாமணி இலந்தை சு.இராமசாமியும் ஒல்லும் வகையில் எல்லாம் காலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். அவரது கருத்தியலில் காலம் ஒரு வள்ளல்.

“காலம் ஒரு வள்ளல் – தம்பி / வேண்டாம் அதை எள்ளல்
ஞாலம் உன் வசமாம் காலம் / நல்கும் அது நிசமாம்”
(ப.286)

என இளைய தலைமுறையினருக்குத் தெள்ளத் தெளிவாக உரைக்கின்றார் கவிமாமணி. ‘நேரத்தை ஆள்வதற்குத் தெரிந்து விட்டால், நிம்மதியாய் வாழ்ந்திடலாம்’ என்பது அவரது அழுத்தம் திருத்தமான கருத்து.

“காலத்தை வாவென்று சொல்லி – அதன்
கையிலே உன்புகழ் நீதந்துவிட்டால்
ஞாலமும் உன்றனைப் போற்றும் - விண்ணின்
நல்லுல கும்யாண்டும் நின்புகழ் சாற்றும்”
(287)

என்னும் கவிமாமணியின் வாக்கு இவ்வகையில் மனங்கொளத்தக்கது.

பரந்து, விரிந்துபட்ட காலத்தின் மிக நுண்ணிய கூறு கணம். ‘என்னுள் புதிய உயிர் – தனை, என்றும் புகுத்தி விடு’ என இறைவனிடம் வேண்டும் கவிமாமணி, “சின்னக் கணத்தினிலும் – ஒரு / செய்தி செதுக்கிவிடு” (ப.286) எனத் தம் விழைவினை வெளியிடுகின்றார். பிறிதொரு கவிதையில் ‘கணம் ஒவ்வொன்றாய் அது வெட்டிச் செல்கிறது. காலம் ஓர் வாள்’ (ப.287) எனத் தத்துவ நோக்கில் காலத்தின் பரிமாணத்தை எடுத்துரைக்கின்றார் கவிமாமணி,

“நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்”
(334)

என்றும் குறட்பா இங்கே ஒப்புநோக்கி மகிழத் தக்கது.

எதையும் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப் போடுவதில் கவிமாமணிக்குச் சற்றும் உடன்பாடு இல்லை; அவரது அகராதியில் ‘ஒன்றே செய்க – நன்றே செய்க – இன்றே செய்க – இன்னே செய்க!’ என்னும் ஔவை மூதாட்டியின் அமுத மொழியே எந்நாளும் – எப்போதும் – பின்பற்றுகின்ற தாரக மந்திரமாக விளங்குகின்றது. ‘நாளை நாளை நாளை’ என்ற தலைப்பிலேயே கவிமாமணி ஒரு கவிதை எழுதியுள்ளார். அதில்,

“நாளை நாளை நாளை என்று / நாளைப் போக்காதே – ஒரு
நன்மை செய்யக் காலம் நேரம் / யோகம் பார்க்காதே!”
என இளைய தலைமுறைக்கு அறிவுறுத்தும் கவிமாமணி,
“ ஓடும் காலத்து ஒவ்வோர் கணமும் / உன்னைக் கேட்கிறது – நீ
ஒன்றும் தாராது இருந்தால வீணே / ஓடித் தீர்க்கிறது”
(பக்.265-266)

என எச்சரிக்கை செய்யவும் தவறவில்லை.

“நாளைக்குச் செய்வமென – இந்த / நாளைக் கடத்துகிற
ஆளினை வெற்றிமகள் – என்றும் / அண்டி இருப்பதில்லை”
(ப.218)

எனப் பிறிதொரு கவிதையிலும் வீணே ‘நாளைக் கடத்துகிற ஆளினை’ச் சாடுகின்றார் கவிமாமணி.

தத்துவமும் பக்தியும்


இலந்தை சு.இராமசுவாமியின் கவிதைகளில் தத்துவமும் பக்தியும் உயிர்ப் பண்புகளாக ஊடாடி நிற்கக் காண்கிறோம். பதச்சோறாக, ‘திறவுகோல்’ என்ற தலைப்பில் அமைந்த அவரது கவிதையை இங்கே சுட்டிக்காட்டலாம்.

“நினைப்பது வேறாய் நடக்கிறது - இறை
நியதி அதில்தான் இருக்கிறது.
நெஞ்சில் எதையோ நினைக்கின்றேன் – நான்
நினைப்பது வேறாய் நடக்கிறது
நினைப்பது வேறாய் நடந்தாலும் – சற்று
நிம்மதி அதிலும் தெரிகிறது - இறை
நியதி எனக்குப் புரிகிறது”
(ப.299)

என்னும் கவிமாமணியின் அனுபவ மொழியில் உண்மை ஒளி சுடர் விட்டு நிற்கின்றது.

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் / தெய்வம் ஏதுமில்லை!
நடப்பதையே நினைந்துவிட்டால் / அமைதி என்றுமில்லை!”


             (கவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்கள்: இரண்டாம் தொகுதி, ப.343)

என்னும் கவியரசர் கண்ணதாசனின் திரைஇசைப் பாடல் இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

‘எங்கும் இன்பம் இன்பமே’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில், ‘எல்லாமே நமக்காகவென இறைவன் படைத்து வைத்திருக்கிறான்’ எனப் பயில்வோர் நெஞ்சங்களில் நம்பிக்கை விதையை ஊன்றும் கவிமாமணி, “பொந்துக் குள்ளே பாம்பு தானா, புதையலும் இருக்கலாம்” (ப304) என மொழிவது அருமை; அற்புதம்.

கம்பன் புகழ் பாடல்


“கம்பன் கவிச்சக் கரவர்த்தி புகழ் / செம்பொற் தமிழால் சிறிதே புகன்றேன்” (ப.443) என்னும் தன்னடக்கக் குறிப்புடன் இலந்தை சு.இராமசாமி கம்பன் குறித்து இத் தொகுப்பில் படைத்துள்ள கவிதைகள் 15. ‘இந்தா எடுத்துக்கொள் என்று இடத்திற்கு ஏற்றாற்போல், வந்து நிற்கும் வார்த்தைகளின் மன்னவன்’ (ப.443) என்றும், ‘வெல்கிற கவிதை செய்த வித்தகன்’ (ப.444) என்றும், ‘சந்த லயம் முந்துகவி தந்ததிலே கொம்பன்’ (ப.462) என்றும் கம்பனுக்குப் புகழாரம் சூட்டும் இலந்தை சு.இராமசாமி,

“என்ன வரத்தைப் பேற்றானோ? / எங்குச் சென்று கற்றானோ?
மின்னல் குதிரை மீதேறி, / விண்ணைத் துழவி, மண்வந்து
தன்னை இழக்க வைத்த பெரும் / சந்தம் பிடித்துத் தமிழ்ப்பாட்டின்
சன்ன திக்கே தந்தானோ? / சந்தம் சந்தம் அவன் சொந்தம்!”
(ப.445)

எனச் ‘சந்தத்துக்குச் சொந்தக்கார’னாகக் கம்பன் விளங்கும் பான்மையை விதந்து மொழிவது குறிப்பிடத்தக்கது.

கம்பன் கைவண்ணத்தில் ஒளிரும் கைகேயி, கும்பகர்ணன், பரதன், குகன், அனுமன், சீதை (தனிமொழி), இராமன் (தனிமொழி) என்னும் காப்பிய மாந்தர்களின் பண்பு நலன்களைப் பற்றி எல்லாம் தனித்தனித் கவிதைகள் படைத்திருக்கும் கவிமாமணி, பால காண்டத்தின் ‘கார்முகப் படல’த்தில் ஐந்தே ஐந்து பாடல்களில் (56-60) சீதையின் தோழியாக வரும் ஒரு சிறுபாத்திரமான நீலமாலையைக் குறித்தும் ஓர் அழகிய கவிதையைப் புனைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“வந்துஅடி வணங்கிலள்; வழங்கும் ஓதையள்;
அந்தமில் உவகையள்; ஆடிப் பாடினள்”

                        (பாலகாண்டம், கார்முகப் படலம், பா.57)

என்னும் சுருக்கமான கம்ப சித்திரத்தின் சீரிய விரிவாக்கமே கவிமாமணி இலந்தை சு. இராமசாமியின் பின்வரும் கவிதை எனலாம்:

“முறித்தனன் வில்லை என்றே / மொழிந்திட வந்த சேடி
குறித்ததைச் சொல்லி டாமல் / குதிக்கிறாள் ஆடு கின்றாள்.
வந்தவள் நீல மாலை / வந்தனை செய்ய வில்லை;
சிந்தையில் பதட்டத் தோடே / சேதியும் சொல்ல வில்லை;
‘சுந்தரி சொல்’லென் றேதான் / துடிப்புடன் சீதை கேட்க
முந்தியே முன்பின் னாக / மொழிகிறாள் நீல மாலை”
(ப.476)

கம்பன் தன் காப்பியத்தில் அணிபெற நிகழ்த்திக் காட்டிய அற்புதத்தை – இணையிலா நாடகத்தை – பாத்திரப் படைப்பில் பலபடச் செய்து காட்டிய விந்தையை – தம் கைவண்ணத்தில் இங்கே அழகுறச் சொல்லோவியமாகத் தீட்டியுள்ளார் கவிமாமணி இலந்தை சு. இராமசாமி.

பாரதி ஆற்றுப்படை


பாரதி குறித்து இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 32 கவிதைகளையும் இரத்தினச் சுருக்கமாக மதிப்பிடுவது என்றால், இவற்றைப் ‘பாரதி ஆற்றுப்படை’, எனலாம்; பாரதியின் பன்முகப் பரிமாணங்களையும், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைக்குப் பாரதி நல்கிய பங்களிப்புகளையும் பறைசாற்றும் ஆற்றல்சால் பதிவுகள் இவை. பதச்சோறாக,

“பாரதி, இற்றைநாள் பாட்டின் அதிசயம்நீ,
கூரதிகம் கொண்டசொல் கோமான் நீ…
மண்கூட்டும் மல்லிகை வாசம் அறியாமல்
சாக்கடை ஓரம் சரிந்து கிடந்தவரைப்
பாக்கடைந்த சொல்லாலே பாசத் துயிலெழுப்பிப்
பூக்கடை வாசல் புனிதத்தில் சேர்த்தவன் நீ!”
(பக்.426-427)

என அழகிய கவிதை வடிவில் பாரதியின் ஆளுமைப் பண்பையும் பங்களிப்-பினையும் கவிமாமணி அடையாளம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

‘புதிய யுகத்தின் பிறப்பு’ (ப.372), ‘எந்த நாளும் நிற்கும் பாடல் இயற்றித் தந்தவன்’ (ப.383), ‘வண்ணத் தமிழ்ச் சித்தன்’ (ப.390), ‘பாரதி என்ற சக்திச் சித்தன்’ (ப.393), ‘முறுக்கு மீசைப் பாரதி’ (ப.383), ‘மீசைக்காரன்’ (ப.373), ‘பைந்தமிழ்ப் பாதை துலக்கியவன்’ (ப.395), ‘முண்டாசுக் கவி’ (ப.406), ‘செந்தமிழ்ப் பா நெருப்புச் செஞ்சுடர்’ (ப.425), ‘வார்த்தைக்கு வார்த்தை உயிர் ஏற்றியவன்’ (ப.431), ‘இணையிலாக் கவிநாயகன்’ (ப.434) என்பன பாரதிக்குக் கவிமாமணி சூட்டியுள்ள செறிவான, பொருள் பொதிந்த புகழாரங்கள் ஆகும்.

‘பாரதி இன்றிருந்தால்…’ ஆழ்ந்திருக்கும் கவிமாமணியின் உள்ளத்தைக் காட்டிடும் ஓர் அற்புதமான கவிதை.

“இன்றைக்குப் பாரதி இங்கிருந்தால்… வயது
ஏறா இளமையைக் கொண்டிருந்தால்…”


எனத் தொடங்குகிறது அக் கவிதை.

1.-மன்னன் கனவுகள் பற்பலவும், மாதர் வாழ்க்கை முறைகளில் சிற்சிலவும், உன்னதமாய் நனவானதைக் கண்டு உ(ள்)ளம் உற்சாகமாகி மகிழ்ந்திருப்பான். 2.-இன்றைக்கு இளைஞர் கணினி நுட்பத்திலே ஏற்றங்கள் பெற்றுத் திகழ்வதையும், மின்னும் உலக அரங்கினில் இந்திய வெற்றிகள் கொஞ்சம் நிகழ்வதையும், நாடுகள் பற்பல சென்று நம் செல்வங்கள், நல்ல பெயர் பெறும் காட்சியையும், தேடும் அறிவியல் மாட்சியையும் கண்டு, சிந்தை மிகவும் மகிழ்ந்திருப்பான். 3.-ஆயுதம் செய்வதும் காகிதம் செய்வதும், ஆலைகளும் கல்விச் சாலைகளும் ஆயிரமாயிரம் தோன்றி நிகழ்வதும் ஆனந்தம் நல்க மகிழ்ந்திருப்பான்.

இந்த மகிழ்ச்சிகள் எல்லாம் ஓர் கணம் தானாம்! பின் எரிமலை ஒன்று வெடித்திருக்குமாம்! இந்திய நாட்டின் அரசியல் வீழ்ச்சியை எண்ணியே அவன் மீசை துடித்திருக்குமாம்!

1. -சிந்து நதியில் படகினில் சென்று திரிய இயன்றிடாது என்பதையும், 2.-சொந்த ஜனங்களே இந்திய நாட்டதன் சொத்தைச் சுரண்டியே தின்பதையும், 3.–வீடுதோறும் பள்ளி நாட்டியே கல்வியை விற்றுப் பிழைக்கிற தன்மையையும், 4.–சாதி ஒழிப்பதாய்ச் சொல்லியே தேர்தலில் சாதியை நாட்டிடும் புன்மையையும், 5.-செந்தமிழ்த் தூய்மையைத் தள்ளிவிட்டே எங்கும் தீய தமிங்கிலம் ஆள்வதையும், 6.-எந்த நிலைக்கும் இறங்கும் திரையிசை ஏறித் தமிழ்மொழி வீழ்வதையும், 7.-பெண் குழந்தைகளை மண்ணில் பிறந்த பின் பீழையாய்க் கொன்றிடும் தீங்கினையும், 8.-எண்ணரும் நாட்டுச் சுதந்திர மேன்மையை எண்ணிடா மக்களின் பாங்கினையும் கண்டு கொதித்துப் புயலென மாறியே அங்கு சுமக்குமாம் அவன் கவிதை! மிண்டு புடைத்திடும் தீமையைச் சாடியே வேள்வி நடத்துமாம் அவன் கவிதை! நாட்டின் இந்த அவல நிலைகளைக் கண்டு நம் பாரதி, ‘ஈதா சுதந்திரம்?’ என்று வெம்பி, செந்தழல் ஏந்திய வார்த்தைகளால் கொடும் தீமைகளைச் சாடிக் கவி பொழிவானாம்!

உயர வைக்கும் உன்னத இலக்கியம்


‘இலக்கியம் என்னதான் செய்யும்? இந்தக் கணினி யுகத்தில் இலக்கியத்தை ஏன் பயில வேண்டும்?’ என்ற வினாக்களுக்கான விடையே – தெள்ளிய விளக்கமே – கவிமாமணியின் ‘இலக்கியம்’ என்னும் கவிதை. அவரது கண்ணோட்டத்தில் உன்னத இலக்கியம் பின்வரும் அரும்பணிகளை ஆற்றும், நற்பயன்களை விளைக்கும்:

1.-கத்திடும் வயிற்றுக்காகக் கடுமையாய் உழைக்கும் வாழ்வில், பிய்த்திடும் மன உளைச்சல் பிசைந்திட, மெல்ல மெல்லச் செத்திடும் இதயம் தன்னைத் தெம்புடன் தடவி, நல்ல ஒத்தடம் கொடுக்க இலக்கியங்கள் உதவிடும். 2.-இலக்கியம் மனித நெஞ்சைக் கலக்கிடும் தீய சக்திக் கணத்தினைப் பொசுக்கிப் போட்டு வாழ்வில் உயர வைக்கும். 3.-இலக்கியம் சலன ஏற்ற இறக்கத்தைச் சமப்படுத்தி நிலைக்களம் அமைக்கும்; நல்ல நிம்மதி ஏற்படுத்தும். 4.-வரவிலும் செலவுக்குள்ளும் வலம் வரும் மனித வாழ்வில் அரும்பெரும் அறிவின வீச்சை இலக்கியங்கள் அளித்திடும். 5.-கவ்விடும் மனத்தில் ஏறிக் கசிந்திட வைக்கும், உள்ளத் தொய்வினை நீக்கி இன்பம் சூழ்ந்திடச் செய்து உயர்த்தும். 6.-சுருங்கக் கூறின், ஒருமணி யோகம் பண்ணி உறுகிற அனுபவத்தை உன்னத இலக்கியங்கள் ஒரு மணித் துளிக்குள் நல்கிடும்.

இவ் வரைவிலக்கணத்திற்கு ஏற்ப, உன்னத இலக்கியத்தின் அகரமாய், செவ்விய கூறுகளைத் தன்னகத்தே கொண்டு கவிவேழம் இலந்தை சு.இராமசாமியின் கவிதைகள் சிறந்து விளங்குகின்றன எனலாம்.


‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்