ஆக்கங்களும், விமர்சனங்களும்,
அறியாமையும்
மன்னார் அமுதன்
எந்தவொரு
அமைப்பையோ, தனிமனிதனையோ புகழ்வதோ அல்லது புண்படுத்துவதோ இக்கட்டுரையின்
நோக்கமல்ல. ஒருவருக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவரைச்
சுற்றியுள்ள யாரோ ஒருவர் உன்னதமான மனதுடன் கேட்டுக்கொள்ளும் பிரார்த்தனையே
அவரை வாழ்க்கையின் இறுதி வரை வழிகாட்டிச் செல்கிறது என்பதில் தீவிர
நம்பிக்கையுடையவன் நான். ஒவ்வொரு சக மனிதனையும் புகழ்வதற்கும், கெளரவப்
படுத்துவதற்கும் உரிய உயரிய மனங்களையும் பண்புகளையும், இரசனை மிக்க நம்
மக்களிடையே தான் இறைவன் படைத்துள்ளான். ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு மனிதனும்
சமூகத்தில் உயரிய நிலையில் தான் எல்லோருக்கும் பொதுவான வல்லமை மிக்க
இறைவனால் வைக்கப்பட்டிருக்கிறோம். இருப்பினும் சமூகப் பிரபலங்கள் எழுதும்
கண்ணைக்குத்தும் ஆக்கங்களையும், மட்டமான கருத்துக்களையும் கேட்டும்
கேளாதது போல் விட்டுச்செல்லும் சகிப்புத்தன்மையுடைய பண்பட்ட மனிதனாக நான்
இன்னும் வளரவில்லை எனும் காரணமே இக்கட்டுரையை எழுத என்னைத் தூண்டியது.
நிலத்தைப் பண்படுத்த மனிதன் கலப்பையைப் பயன்படுத்துகிறான். பண்பட்ட
நிலங்களே நல்விளைச்சலைத் தருகின்றன. அதேபோல் மனித மனத்தைப் பண்படுத்த
எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். எழுத்தும் ஒரு வகை ஆயுதம் தான். அதனால்
ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். எந்தவொரு ஆயுதத்தையும் ஆக்க
சக்திற்கு பயன்படுத்துவதே மானிட பண்பாகும்.
அந்த வகையில் ஒரு ஆக்கத்தைப் படைத்து முடிப்பது என்பது ஒவ்வொரு
படைப்பாளிக்கும் ஒரு பிரசவமாகவே உள்ளது. ஆக்கப் படைப்பாளி தன் மனதில்
அதிர்வை ஏற்படுத்திய சிந்தனையை எழுதி முடிக்கும் வரை, எதிலும் மனமொன்றா
நிலையில், வார்த்தைகளுக்குள் சிக்காத மன உளைவுக்கு உட்படுகிறான்.
இவ்வாக்கங்களுக்குக் கிடைக்கும் விமர்சனத்தை மட்டுமே சன்மானமாக
எதிர்பார்த்துப் படைப்பவனே காலவோட்டத்தில் கலைஞனாகப் பரிணமிக்கிறான்.
சமகால நிகழ்வுகளும், அனுபவங்களும், சமூக அவலங்களும், மேல்மட்ட மனிதக்
கழுகுகளின் ஆதிக்க மனப்பான்மையும், தளிரும் போதே முளையைக் கிள்ளும்
சகாக்களின் செயல்களும் ஒரு படைப்பாளியின் எண்ணத்தில் உந்துதல்களை
ஏற்படுத்தி, மனதில் கருக்கொண்டு, எழுத்தில் (ஏதோ ஒரு வடிவில்)
உருக்கொள்வதே படைப்பிலக்கியமாகும்.
படைப்பாளி எனப்படுபவன் ஒரு குறிப்பிட்ட இனக்குழுமத்திற்குள்ளோ, சமூக
மற்றும் மதக் கட்டுப்பாட்டிற்குளோ சிக்கிக் கொள்ளாதவனாக, மனிதநேயம் மிக்க
ஒரு மானிடனாக மிளிரவேண்டும். தோழர் சேகுவரா 'எங்கெல்லாம் அநீதி நடப்பதைக்
கண்டு உன் மனம் குமுறுகிறதோ, அங்கே நீயும் நானும் தோழர்கள்' என்று கூறியது
போல் படைப்பாளியும் அநீதிகளைக் கண்டு சமூகக் கட்டமைப்புகளைத் தாண்டிக்
கிளர்ந்தெழ வேண்டும்.
உண்மையான படைப்பாளிகள் வார்த்தை வேறு, வாழ்க்கை வேறு என்று
வாழ்வதில்லை.எனினும் கலப்படம் என்பது ஏற்றத் தாழ்வின்றி இங்கும்
வியாபித்துள்ளது கவலையளிக்கத் தக்கதே.
ஒரு சஞ்சிகை ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்காகவே நான் எழுதுகிறேன் என்பதும்,
சன்மானத்திற்காகவோ, நம் படைப்பு வெளிவரவில்லை என்பதற்காக சஞ்சிகையையே
நிறுத்தி விடுவார்களோ(!!!) என்ற காரணங்களுக்காக படைக்கப்படும் ஆக்கங்கள்
குறிப்பிட்ட நாட்கள் முடிந்ததும் தூக்கியெறியப்படும். தனக்காகவும்,
தன்மானத்திற்காகவும், தன்னை வருத்திய உணர்வை எழுதாத நாட்களை சுமையாக
உணர்ந்தும் எழுதப்படும் ஆக்கங்களே காலத்தால் நிலைக்கும்.
சில படைப்புகளை வாசிக்கும் போது அவை வாசகனின் மனதைத் தொட்டு சில
மாற்றங்களை உருவாக்கி வேறோர் படைப்பாக வெளிவர முயலும். அவ்வாறு ஒரு
படைப்பின் தாக்கத்தால் புதிய படைப்பை ஆக்குவது தவறல்ல. ஆனால், தெரிந்தோ,
தெரியாமலோ மற்றொருவரின் படைப்பை தன் படைப்பாக உரிமை கோருதல் மற்றும் நகல்
செய்தல் மிகவும் அருவருக்கத் தக்க விடயமாகும்.
அண்மையில் வெளிவந்த ஒரு கவிதை நூலில் கவிஞர் பிரேமிளின் கவிதையின் ஒரு
பகுதியும், இந்திய தினசரி நாட்காட்டிகளில் வெளியிடப்படும் பிரபலமான
மற்றொரு கருத்தும் கவிதையாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நூலிற்கு
ஆசியுரை, அணிந்துரை, மற்றும் பல உரைகளை எழுதிய பலருள் ஒருவர் கலாநிதி
பட்டம் பெற்றவர், மற்றொருவர் பேராசிரியர். இவர்கள் குறிப்பிட்ட நகல்
கவிதைகளையும் மேற்கோள் காட்டி நூலாசிரியரின் எழுத்திற்கு நிகரில்லை எனவும்,
நூற்றாண்டுக் கவிஞர்களுள் நூலாசிரியரும் ஒருவர் எனப் புகழ்ந்துள்ளனர்.
இத்தகைய காலக்கொடுமைகளுக்கு காரணங்கள் இரண்டு. ஒன்று துறை
சார்ந்தவர்களிடம் நூலிற்கான உரைகளைப் பெறாமை. இரண்டாவது தனது துறைகளில்
மட்டுமே பாண்டித்தியம் பெற்றவர்களிடம் சமூக அந்தஸ்திற்காக உரைகளைப்
பெற்றுக்கொண்டமை. அனைவரும் ஏதோ ஒரு துறையைச் சார்ந்தே வாழ்கிறார்கள்.
அவரவர்க்கு அவரவர் துறை பெரிது தான். ஆனால் அது மட்டும் தான் பெரிது,
சிறந்தது என மார்தட்டிக் கொண்டால் காலத்தால் அவர்கள் 'கிணற்றுத்
தவளைகளுக்கே' ஒப்புமைப்படுத்தப் படுவர்.
படைப்பாளியின் நோக்கம் படைப்பது மட்டுமல்ல; பகிர்வதும் தான். ஒருவனின்
படைப்பு எப்பொழுது அடிமட்ட மக்கள் வரை சென்று அவர்களுக்குள் ஓர்
கருத்தாடலை உருவாக்குகிறதோ அன்றே அப்படைப்பின் நோக்கம் பூர்த்தியடைகிறது.
எனவே சிறந்த ஆக்கங்களை மக்களைச் சென்றடையச் செய்ய வேண்டிய கடப்பாடு
படைப்பாளிக்கு மட்டும் மட்டுப் படுத்தப்படவில்லை. அத்தகைய கடமை அனைத்து
ஊடகங்களுக்கும் உண்டு. மறுமலர்ச்சியை உருவாக்குவதில் ஆர்வமுள்ள
ஒவ்வொருவருக்கும் இது கடமையாகும்.
ஊடகங்கள் என்கையில் இன்று இலக்கிய மாசிகைகளும், வாராந்திர ஜனரஞ்சக
சஞ்சிகைகளும், இரு திங்கள் ஏடுகளும், தேசியப் பத்திரிக்கைகளும், ஒலி ஒளி
மற்றும் இலத்திரணியல் ஊடகங்களும் எங்கும் வியாபித்து புதுமுனைப்போடும்,
பொலிவோடும் கலை இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றுவது குறிப்பிடத்தக்கதாகும்.
தேசியப் பத்திரிக்கைகளைப் போலவே செயல்பட எத்தணிக்கும் இலக்கிய மற்றும்
ஜனரஞ்சக பத்திரிக்கைகள் படைப்பாளியின் ஆக்கங்களைக் கத்தரித்து வெளியிடுவது,
கத்தரித்து வெளியிட்ட ஆக்கங்களுக்கும் படைப்பாளியே பொறுப்பு என்பது, ஒரு
படைப்பாளியை மிகைப்படுத்துவது, மற்றொருவரை இருட்டடிப்புச் செய்வது போன்ற
குணங்களும் சேர்ந்தே வளர்ந்து வருவது தான் வருந்தத் தக்கதாகும்.
ஊடகங்களுக்கென பொதுவான சர்வதேச விதிமுறைகளும், கருத்துச் சுதந்திரமும்
பெருமளவில் பேசப்பட்டாலும், செயல்பாட்டில் காண்பது நடைமுறைச் சாத்தியமற்ற
விடயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மேலும் ஒரு சிறு பத்திரிகை
ஆரம்பிக்கப்படும் போது சிறுபத்திரிகைகளுக்கான பொதுவான விதி முறைகளோடு
ஆரம்பிக்கப்பட்டாலும், அப்பத்திரிகைக்கான தனியான நோக்கங்களும்,
விதிமுறைகளும் ஆசிரியர் குழுவினால் வரையறுக்கப்படுகின்றன.
இலத்திரணியல் ஊடகங்களில் ஒன்றான வலைப்பூக்களுக்கும் இது பொருந்தும்.
வலைப்பூக்களுக்கான சர்வதேச விதிமுறைகளும், பெயரிலிச் சுதந்திரமும்
ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், தனக்கான வலைப்பூவை உருவாக்கும் நிர்வாகி
தன் வலைப்பூவிற்கான சில விதிமுறைகளை வகுத்துச் செயல்பட வேண்டும்.
தனிமனிதக் கருத்துக்கள் ஆதாரமற்ற தகவல்களோடு ஒரு ஆக்கமாக
முன்வைக்கப்ப்டும் போது பல பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதோடு,
படைப்பாளியும் பல எதிர்ப்புகளையும், உயிர் அச்சுறுத்தலைகளையும்
சம்பாதித்துக்கொள்ள நேரிடும். எனவே அவ்வாறான ஆக்கங்கள் தகுந்த ஆதாரங்களைக்
கொண்டதாக அமைய வேண்டும்.
இவ்வாறான எத்தகைய படைப்பாக இருந்தாலும், அப்படைப்பு
சிறந்ததா,சமகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உகந்ததா, நிலைத்து நிற்கும்
ஆற்றலுடையதா, உண்மைத் தன்மையுடையதா என்பதைத் தீர்மானிப்பதில் விமர்சகனின்
பங்கு அளப்பரியதாகும். ஏனெனில் குளிரூட்டப்பட்ட உணவு விடுதிகளில் உணவின்
பெயரறியாமலேயே, விரும்பிச் சில ஆயிரங்களைச் செலவு செய்யும் நம் மக்கள்,
சில நூறு ரூபாய்களையாவது மதிப்பான புத்தகங்களை வாங்கிப் படிப்பதற்குச்
செலவிட ஆர்வம் காட்டுவதில்லை.
எனவே நூல்விமர்சனம், திறனாய்வு மற்றும் பிற துறைசார்ந்த
விமர்சனங்கள் போன்றவற்றில் விமர்சகர்களின் பங்கு இன்றியமையாததாகிறது. அவை
பெருமளவில் வரவேற்கப்பட வேண்டும். விமர்சனங்களைப் படித்த பின்பே பலர்
திரைப்படத்திற்கோ அல்லது புத்தக நிலையத்திற்கோ செல்கிறார்கள் என்பது
கண்கூடு. இவ்விமர்சனங்களே ஆக்கங்களின் தரத்தை உள்ளபடி மக்களிடையே கொண்டு
சேர்க்கிறது.
1921ல் மகாகவி பாரதியின் மறைவிற்குப்
பின்னர் சில கவிஞர்களின் ஆக்கங்கள் சிறப்பாக இருந்திருந்தாலும் அவை
பெரிதாக பேசப்படவில்லையெனவும், மக்களைச் சென்றடையவில்லையெனவும் அதற்குக்
காரணம் தகுந்த முறையில் அப்படைப்பாளிகளின் கவிதைகள் விமர்சிக்கப் படாமையே
என கவிதைகளுடன் ஒரு சம்வாதம் எனும் நூலில் ஞானக்கூத்தன் தெரிவிக்கிறார்.
இத்தகைய மதிப்புமிக்க விமர்சனத்தை செய்யும் விமர்சகளுக்கென்று சில
தகைமைகளும் உண்டு. அவற்றுள் விமர்சகன் தனிமனித விருப்பு, வெறுப்பிற்கு
அப்பாற் சென்று விமர்சிப்பவனாகவும், பக்கச்சார்பற்றவனாகவும், துறைசார்ந்த
நல்லறிவு உடையவனாகவும் விளங்க வேண்டும். மேலும் பிற துறைகள் சார்ந்த
தெளிவும், அறிந்து கொள்ளும் ஆர்வமும், அனைத்துத் துறைகளையும் சமமாக
மதிக்கும் ஆற்றல் மிக்கவனாகவும், ஆக்கத்தை ஒப்புமைப்படுத்தி ஆராயும்
பண்புடையவனாகவும் இருக்க வேண்டும் என்பவை முக்கியமானவையாகும். எத்தனைக்
கலாநிதிப் பட்டங்கள் பெற்றிருந்தாலும் தன் துறை சார்ந்த அறிவை மட்டுமே
பெருக்கிக்கொண்டு மற்றோர் துறையை அறிய விரும்பாதவர்களையும், தவறான
தகவல்களோடு விமர்சிப்பவரையும், தன் துறை மட்டுமே மிகச் சிறப்பானதென
மார்தட்டிக்கொள்வரையும் காலம் 'அறியாமைப் பொறிக்குள் அகப்பட்ட எலிகளென்றே'
கூறும்.
ஒவ்வொரு அடிமட்ட வாசகனும் ஒரு விமர்சகனே. சாதாரண வாசகன் படித்ததும்
எல்லாம் விளங்கிவிட வேண்டுமென்று நினைக்கிறான். ஆனால் சிறந்த வாசகன் ஒரு
படைப்பினுள் இறங்கித் தேடுகிறான். அவன் தேடல் அவனை விமர்சகனாக்குகிறது.
சிறந்த விமர்சகன் முதிர்ச்சியையும், கனதியையும் படைப்பிலே தான் தேடுகிறான்.
பாடைப்பாளியின் வயது முதிர்ச்சியையோ, சமூக பிரபலத்தையோ கணக்கிலெடுப்பவன்
விமர்சகன் அல்ல; வியாபாரி. தன் துறைசார்ந்த விடயங்களை விமர்சிக்கையில்
அதிக ஆழமாக விமர்சிக்க முடிவதுடன், அது சிறந்த விமர்சனமாகவும் அமையும்.
அண்மையில் ஒரு ஜனரஞ்சக சஞ்சிகையில் ஊடகம் தொடர்பான ஆக்கமொன்றைப் படிக்க
நேர்ந்தது. அதன் மறுவினைகளை வலைப்பதிவில் படித்தேன். கடந்த காலங்களில்
அச்சஞ்சிகைக்கும், ஆக்கபூர்வமான கருத்துக்களை வலையில் பதிந்து வரும் தனி
நபர்களுக்குமிடையே சில கசப்புணர்வுகள் இடம் பெற்றன. கால ஓட்டத்தில் அதை
சரி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
நான் இணையத்தில் வாசித்த சஞ்சிகை ஆக்கத்திற்கான மறுவினைகள் சந்தர்பவாதக்
கருத்துக்களையும் உட்கொண்டிருந்ததே எனது மனதை சஞ்சலப்படுத்தியது. ஓர்
அமைப்பு தனி நபர்களைத் தாக்கும் போது, தம் ஆக்கங்கள் அங்கு வெளிவர
வேண்டுமென்பதற்காக அமைதி காத்தவர்கள், ஆதரவாக ஒரு பின்னூட்டமிடாதவர்கள்
தம் துறை சார்ந்த ஓரு நேர்மறை ஆக்கம் அச்சஞ்சிகையில் வெளிவரும் போது,
தமக்கு ஆதரவாகப் பதிவர்களை இணைப்பதும், நடந்து முடிந்த சம்பவங்களை
தொடர்ப்பு படுத்துவதும் மதிப்பிற்குரிய செயல்களா? அல்லது சந்தர்ப்பவாதமா?
கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் 'நாடு' எனும் சொல்லும் 'உலகம்' எனும்
சொல்லும் மக்களைக் குறித்தே கூறப்படுகிறது. அது போல் 'பெயர்' எனும் சொல்
தனிமனித அடையாளத்தைக் குறிக்கும். இங்கு தனிமனித அடையாளங்கள் துறைக்குத்
துறை வேறுபடலாம். காவல் துறைக்கோ, பரிட்சை நிலையத்திலோ தனிமனித அடையாளத்தை
நிரூபிக்க தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவது போல், வலையில்
பின்னூட்டமிடுகையில் மின்னஞ்சல் முகவரியையும், வலைமுகவரியையும்
பயன்படுத்த வேண்டும்.
வெட்டுவதற்கு முன் மஞ்சள் தண்ணியூற்றி ஆட்டைப் புனிதப்படுத்துவது போல்,
அனைவருமறிந்த அதே கார சார ஆசிரியருரைக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்துக்
கொண்டு, அவரின் ஊழியர்களை சாட முயல்வதும், பிரதான ஆசிரியருக்காகவே நாம்
எழுதுகிறோம் என முட்டுக்கொடுப்பதும் நல்ல எழுத்தாளனுக்கு அழகல்ல. கால
சூழலுக்கு ஏற்ப கருத்துக்களை மாற்றிக் கதைப்பதும், துரோகம் தான்.
சமூகப் பிரபலங்களாகவோ அல்லது ஒரு பொறுப்பான பதவியிலோ (!) இருப்பவர்கள்
எவருமே கருத்துக்களையோ, விமர்சனங்களையோ முன்வைப்பதற்கான ஒரு மொழிநடை (வார்த்தைப்
பிரயோகங்கள்) உள்ளது. சிலரது வார்த்தைப் பிரயோகங்களைப் படித்து விட்டு,
அவர்களை நேரில் காண்கையில் அத்திப்பழம் தான் எனக்கும் ஞாபகம் வருகிறது.
அனுபவம் என்பது தலையில் வழுக்கை விழுந்த பின் கிடைக்கும் சீப்பு போன்றது
என்றொரு கருத்தை நம் முன்னோர்கள் நம் முன்வைத்துள்ளார்கள். அந்த அனுபவம்
எனும் சீப்பை மூத்தவர்களிடம் இருந்தும், அனுபவசாலிகளிடம் இருந்தும்
தேவையானவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதனை இலகு படுத்தவே அனுபவக்
கட்டுரைகளுக்கு எங்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
கடுமையான முயற்சி இன்றி எத்துறையிலும் முன்னுக்கு வரமுடியாது என்பதையும்
நாம் வெற்றியடைந்தவர்களின் வாழ்வியல் கட்டுரைகளிலிருந்து அறிந்து
கொள்ளலாம். கட்டுரைகளில் சில மிகைப்படுத்தல்கள் இருக்கலாம். ஆனால் உண்மையே
இல்லையென்று எதையும் ஒதுக்கிவிட முடியாது. துஸ்பிரயோகங்கள் நடைபெறாத 100
சதவீதம் உன்னதமான துறையென்று எதுவும் இல்லை.
எல்லாத் துறையிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் விகித வேறுபாட்டுடன்
இருக்கவே செய்கிறார்கள்.ஆக்கங்களில் பயன்படுத்தும் 'சிலர்' எனும்
சொல்வழக்கு, நல்ல மனிதர்களைப் புன்படுத்தி விடக் கூடாது
என்பதற்காகவே வழக்கிலுள்ளதைப் பகுத்தறிவுள்ள அனைவரும் அறிவார்கள்
எனவே சமயத்திற்கு தக்கவாறு வண்ணங்களை மாற்றிக் கொள்பவர்களை சமூகம் இனம்
காண வேண்டும். இனம் காணத் தவறுகையில் இனம் காட்ட ஒருவர் முன்வர வேண்டும்.
எழுதும் சுதந்திரம் எவருக்கும் உண்டு. அது ஒரு ஊடகத்தில் பிரசுரிக்கத்
தகுந்ததா இல்லையா என்பது அவ்வூடகத்தின் தரத்தைப் பொறுத்தது. அதற்கான
தனிப்பட்ட மறுப்பைத் தெரிவிக்கவும் வாசகர்களுக்கோ, அவ்வூடக
பங்களிப்பாளனுக்கோ உரிமை உண்டு. ஆனால் தன் சுயலாபத்திற்காக மற்றொரு
அணியுடன் கூட்டுச்சேருதல், வாயில்லாப் பூச்சிகளையும் தன்னோடு இணைத்துக்
கொண்டு அறிக்கை விடுதல் கண்டணத்துக்குரியது.
ஆகவே, ஆக்கங்களை எழுதுகையில் நாம் கையிலெடுத்துக் கொள்ளும் சுதந்திரம்
என்பது கக்கத்தில் உள்ள குடைக்குச் சமனாகும். அந்தக் குடை பின் நடந்து
வருபவரின் கண்ணைக் குத்தாத வரைதான் ஒவ்வொருவரின் சுதந்திரமும்
மட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்கிறார்கள் நம் முன்னோர்கள்.
இதைப் போல் ஆயிரம் ஆக்கங்கள் வந்தாலும் மூன்று பாகத்திலும் கூறப்பட்டவை
என்னவென்று விளங்குபவர்களுக்குத் தான் விளங்கும். விளங்காதவர்களுக்கு
விளங்காது. தூங்குபவனைப் போல் நடிப்பவர்களை தண்ணீர் ஊற்றியும் எழுப்ப
முடியாது என்பதை அனைவரும் அறிவோம் தானே.
amujo1984@gmail.com
|