கருணையே வடிவான பெண்ணுள்ளத்தைச் சித்திரிக்கும் புறநானூற்றுப் பாடல்

பேராசிரியர் இரா.மோகன்

புறநானூற்றில் 320-ஆம் பாடல் வீரை வெளியனார் என்னும் சங்கச் சான்றோர் இயற்றியது; வாகைத் திணையில், வல்லாண் முல்லைத் துறையில் அமைந்தது. ‘ஒரு தலைவனின் வீடு, ஊர், இயல்பு ஆகியவற்றைச் சொல்லி அவன் ஆளும் தன்மை பெருகக் கூறுதல்’ என்பது வல்லாண் முல்லைத் துறையின் இலக்கணம் ஆகும். “வெளியன் என்பது இவரது இயற்பெயர்; வீரை என்பது இவரது ஊர். இது பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ள நாட்டைச் சேர்ந்தது. புதுச்சேரிக்கு அருகில் வீராம்பட்டினம் என இப்போது வழங்குகிறது” (புறநானூற்று: மூலமும் உரையும், பகுதி II, ப.234) என மொழிகுவர் உரைவேந்தர் ஔவை துரைச்சாமிப் பிள்ளை.

அகநானூற்றின் 188-ஆம் பாடலைப் பாடிய வீரை வெளியன் தித்தனார், வீரை வெளியனாரின் மகன் என்பர் அறிஞர். மழையை விளித்துத் தோழி கூறுவதாகத் தித்தனார் பாடியுள்ள அகநானூற்றுப் பாடல், அவரது புலமை நலத்திற்குக் கட்டியம் கூறும் வகையில் அமைந்தது. ‘தந்தையறிவு மகனறிவு’ என்னும் ஆன்றோர் வாக்கிற்கு இலக்கியமாக வீரை வெளியனாரும் அவரது மகன் தித்தனாரும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

தானைத் தலைவன் ஒருவன் தன் வேந்தன் பொருட்டுப் போருக்குச் சென்று அதில் வெற்றி வாகை சூடிச் சிறக்கின்றான். அவனைக் காணும் நோக்குடன் பாணன் ஒருவன் செல்கின்றான். அவனைச் சந்திக்கும் வெளியனார், அத் தலைவனது ஊர் நலத்தினை எடுத்துரைத்து, அங்குச் சென்று தங்கிச் செல்லுமாறு இப் பாடலால் அறிவுறுத்துகின்றார்; தன்னை நாடி வரும் இரவலர்களுக்கு வரையாது வழங்கும் அத் தலைவனின் வள்ளல் தன்மையையும் சிறப்பித்துக் கூறுகின்றார். மேலும் அவர் இப் பாடலில் வேட்டுவர் மனையில் நிகழும் நிகழ்ச்சி ஒன்றையும் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார்.

யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றம். அங்கே முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் அடர்த்தியாகப் படர்ந்து இருந்தன. ஆதலால் அங்குத் தனியாக ஒரு பந்தல் தேவைப்படாத அளவுக்கு நிழல் மிகுதியாகக் காணப்பட்டது. பலா மரத்தில் பலாப் பழங்கள் கனிந்து தொங்கிக் கொண்டிருந்தன. வீட்டு முற்றத்தில் வேட்டுவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். பிற மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட இளம்பெண்மான் (பார்வை மான்) ஒன்றை, வேறு தொழில் எதுவும் இல்லாத பிறிதோர் ஆண்மான் தழுவிப் புணர்ந்து மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தது. தன் கணவனைக் காண வந்த வேட்டுவனின் மனைவி, மான்கள் புணர்ச்சி இன்பத்தை அனுபவிப்பதையும், கணவன் மெய்மறந்து உறங்கு-வதையும் கண்டாள். தான் ஏதாவது ஒலி எழுப்பினால், கணவன் உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வான் என்றும், மான்களின் புணர்ச்சி இன்பம் தடைப்பட்டு ஆண்மான் பெண்மானை விட்டு விலகி ஓடிப்போகும் என்று எண்ணி அஞ்சி, வீட்டில் நடமாடாமல் ஒரு பக்கமாக, ஒலி எதுவும் எழுப்பாமல் ஒதுங்கி நிற்கின்றாள்.

அங்கே, பாணன் ஒருவன் தன் சுற்றத்துடன் வருகிறான். முற்றத்தில் மான் தோலை விரித்து அதன் மேல் பரப்பிக் காய வைத்திருந்த தினை அரிசியைக் காட்டுக் கோழி, காடை, கௌதாரி ஆகிய பறவைகள் ஆரவராத்துடன் கவர்ந்து தின்று கொண்டிருந்தன. வேட்டுவனின் மனைவி அவற்றைப் பிடித்து, சந்தனக் கட்டையால் மூட்டிய தீயில் சுட்டு, துண்டு துண்டு ஆக்கி, அறுத்த இறைச்சியை ஆரல் மீனின் மணம் கமழச் சமைத்தாள். பின்னர், பாணனை நோக்கி, ‘இவ்வூரைப் பாதுகாக்கும் எம் தலைவன், பகைவேந்தர் தந்த திறைப் பொருளையும் தன் வேந்தன் தந்த சிறப்பான பெருஞ்செல்வத்தையும் தனக்கென வைத்துக் கொள்ளாமல் என்றும் தன்பால் வரும் பரிசிலர்க்குத் குறையாமல் வழங்கும் வள்ளல் தன்மையையும் புகழையும் உடைய பெருந்தகையாளன். பாணனே! இங்கே உனது பெரிய சுற்றத்துடன் ஒருங்கு கூடி இருந்து, நான் சமைத்த உணவை இனிதே உண்டு, தங்கிச் செல்வாயாக!’ என்று கூறுகிறாள்.

கருணையே வடிவான அவ் வேட்டுவப் பெண்ணின் கூற்றாக அமைந்த அழகிய புறநானூற்றுப் பாடல் வருமாறு.

“முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இல்வழங் காமையின் கல்லென ஒலித்து
மான்அதள் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென
ஆர நெருப்பின் ஆரல் நாறத்
தடிவார்ந்து இட்ட முழுவள் ஓரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்
தங்கினை சென்மோ, பாண! தங்காது
வேந்துதர விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.”

ஒரு வேட்டுவனின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றையும், அவ் வேட்டுவனின் மனைவியின் விருந்தோம்பும் திறத்தையும், வேந்தனின், அவ்வூர்த் தலைவனின் வள்ளல் தன்மையையும் சான்றோர் வீரை வெளியனார் இப் பாடலில் பயில்வோர் நெஞ்சை அள்ளும் வகையில் நயமாகச் சித்திரித்துள்ளார்.

இப் பாடலுக்கு வரைந்த சிறப்புக் குறிப்பில், “காலத் தாழ்வு செய்யாமல் கொடுத்தல் கொடைக்குத் தனிச்சிறப்பு என்பதைக் காட்டும் இப்பாட்டு, ‘அருகாது ஈயும்’ என்கிறது” (புறநானூறு: மக்கள் பதிப்பு, ப.461) என்பர் மூதறிஞர் இரா.இளங்குமரன். “கலையும் பிணையும் புணர்நிலைக்கண் விளையாட்டயரக் காண்பனேல் வேட்டுவனாகிய கணவன், கலையை யருளாது வீழ்த்துவன் என்றுணர்ந்து அவன் உறக்கத்தினீங்கி யெழுவனோ எனவும், தன் வரவு காணின் புதிது வந்த கலைமான் அஞ்சியோடிய வழிப் பிணைமானது புணர்நிலை யின்பம் சிதையுமெனவும் அஞ்சி ஒருபுடையில் ஒடுங்கினள்” (புறநானூறு மூலமும் உரையும்: பகுதி II, பக்.236-237) என்பது உரைவேந்தர் இப் பாடலில் காணும் நுண்ணிய நயம் ஆகும். பிற மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சி செய்யப்பட்ட இளைய பெண்மானைப் ‘பார்வை மடப்பிணை’ என்னும் ஆற்றல்சால் சொல்லாட்சியால் வெளியனார் சுட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.


‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்