பன்முக நோக்கில் பரணி இலக்கியம்

பேராசிரியர் இரா.மோகன்

‘போர்ப் பாட்டு’
சோழர் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய பிரபந்தம் பரணி. பரணிப் பிரபந்தங்களுள் நனி சிறந்தது கலிங்கத்துப் பரணி. இப் பிரபந்த வகைக்குத் தோற்றுவாயாக அமைந்து வழிகாட்டிய முதல் பரணி நூல் இதுவே. பரணி என்பது ஒரு மன்னன் போர் தொடுத்த களத்தையும், அக் களத்தில் நிகழ்ந்த பல்வகையான நிகழ்ச்சிகளையும், அம் மன்னன் பெற்ற பெருவெற்றிகளையும் சிறப்பித்துப் பாடும் பிரபந்தம் ஆகும். இதனைப் ‘போர்ப் பாட்டு’ (War Poetry) எனச் சுட்டுவர் பன்மொழி அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் (தமிழாக்கம்: மு.இளமாறன், தமிழ் இலக்கிய வரலாறு, ப.187). இங்ஙனம் போர் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பாடுவதற்குப் பழங்காலத்தில் ‘களவழி’ என்ற பெயர் வழக்கில் உள்ளது. ‘களவழி’ என்பது போர்க்கள நிகழ்ச்சியைக் குறிக்கும். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப் பத்தில் ‘களவழி’ என்னும் துறையில் அமைந்த பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ‘மிகுதி வகையால் தன் போர்க்களச் சிறப்பு கூறினமையின் துறை களவழியாயிற்று’ என்னும் குறிப்பு இப் பாடலுக்கு எழுதிய உரை விளக்கத்தில் காணப்படுகின்றது.

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று ‘களவழி நாற்பது’. இது சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் இடையே நிகழ்ந்த போரினைக் குறித்துப் பொய்கையார் என்னும் புலவர் இயற்றிய பிரபந்தம் ஆகும்.

“களவழிக் கவிதை பொய்கை உரை செய்ய உதியன்
          கால்வழித் தளையை வெட்டி அரசிட்ட அவனும்”
(195)

என இந்நூலைப் பற்றிக் கலிங்கத்துப் பரணி குறிப்பிடுகின்றது.

‘தகடூர் யாத்திரை’ என்னும் நூல் குறுநில மன்னன் அதியமானின் தலைநகரான தகடூரை எதிர்த்து நடந்த படைப் பயணத்தை விளக்குகின்றது. படைப் பயணத்தில் இவ்வகை வருணனையும் பரணியின் ஒரு பகுதியாக அமைகின்றது.

பரணியின் தோற்றமும் வளர்ச்சியும்


பரணி தனி ஒரு இலக்கிய வகையாக (Literary Genre) மலர்ந்தது கி.பி.11-ஆம் நூற்றாண்டில்; கலிங்கத்துப் பரணி தமிழில் தோன்றிய முதல் பரணி நூல். ஆயின், பரணி என்னும் இலக்கிய வகைக்கான வித்துக்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன.

தொல்காப்பியம் ‘இலக்கண இலக்கியம்’ எனச் சிறப்பிக்கப் பெறுவது; அதன் பொருளாதிகாரம் பழந்தமிழரின் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுப்பது; சிறப்பாக, அதன் புறத்திணையியல் வீர உணர்வைப் போற்றிப் பாடுவது.

“ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோன்றிய வென்றியும்”
(1022)

என்பது, தொல்காப்பியம் சுட்டும் வாகைத் திணைக்கு உரிய துறைகளுள் ஒன்று. இத் துறையாவது களம் பாடுதலையும், கள வேள்வி பற்றிப் பாடுதலையும் குறிக்கும்.

சேரமான் கடலோட்டிய வெல்குழு குட்டுவனின் வீரத்தைச் சிறப்பித்துப் பரணர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் (369) உள்ளது; போர்க் களத்தை ஏர்க்களமாக உருவகித்துப் பாடும் அப் புறநானூற்றுப் பாடலில் இடம் பெற்றிருக்கும் போர்க்களக் காட்சி, பின்னைத் தோன்றிய பரணி இலக்கியங்-களில் பல தாழிசைகளில் விரிவாகவும் விளக்கமாகவும் தீட்டப் பெற்றுள்ளது.

மதுரைக் காஞ்சியும் (அடி: 24-36) சிலப்பதிகாரமும் (26: 241-44) போர்க் களத்தில் பேய்கள் துணங்கைக் கூத்தாடுதலையும் கூழடுதலையும் குறித்துப் பாடியுள்ளன. பேய்களின் இக் கூழடுதல், பரணியில் பல தாழிசைகளாக வளர்ச்சி பெற்றுள்ளது. இக் கூழடுதற்குக் காரணமான போரினைப் பற்றிக் காளி தேவிக்குக் கூறுவது கூளி (பேய்) ஆகும். இதனை,

“துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு”

எனப் பெரும்பாணாற்றுப்படை (அடி 459) எனக் கூறுகின்றது. கலித்தொகை-யிலும் (89:8) இத்தகைய குறிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இவைகளே பரணி இலக்கியத்தில் பேய் முறைப்பாடு, காளிக்குக் கூளி கூறியது என்னும் பகுதிகளாக விரிவடைந்துள்ளன.

பழந்தமிழகத்தில் ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர், பரணி பாடுநர் என மூவகைப் பொருநர்கள் வாழ்ந்தனர். இவர்களுள் பரணி பாடுநர் என்பவர், வெற்றி பெற்ற வேந்தர்களின் சிறப்பினைப் போற்றிப் பாடுபவர் ஆவர். எனவே, தமிழகத்தில் பரணி பாடுவதற்கு என்றே ஒரு வகைக் கலைஞர்கள் இருந்தனர் என்பது தெரிய வருகின்றது.

“பரணி இலக்கியம் தனியொரு சிற்றிலக்கிய வகையாகப் பிற்காலத்தில்-தான் உருப்பெற்றது எனினும், பரணி இலக்கியத்தின் பொருட் கூறுபாடுகளும் பரணியின் இலக்கியச் சாயலும் தொல்காப்பியர் காலத்திலேயே காணப்-படுகின்றன. தொல்காப்பியப் புறத்திணை இயலில் வாகைத் திணையின் துறைகளாகக் கூறப்படும் களம் பாடுதல், கள வேள்வி, தேர்முன் ஆடு குரவை, தேர்பின் ஆடு குரவை, மாணார்ச் சுட்டிய வாண்மங்கலம் ஆகிய துறைகளே (புறத்திணை இயல்,நூ.17) பிற்காலத்தில் பரணி இலக்கியம் உருப்பெற அடிப்படை இலக்கண வித்தாக அமைந்தன எனலாம்” (சிற்றிலக்கியச் செல்வம், பக்.121-122) எனக் குறிப்பிடுவர் பேராசிரியர் ந.வீ.செயராமன்.

பரணியின் பாடுபொருள்


பரணி வீர உணர்வைப் பாடுபொருளாகக் கொண்ட புறப்பொருள் இலக்கியம். எனினும், அதன் ‘கடைதிறப்பு’ப் பகுதியில் அகச் சுவை ததும்பி நிற்கக் காணலாம். பரணியின் பாடுபொருள் குறித்துப் பன்னிரு பாட்டியல்,

“மயக்கறு கொச்சகத்து ஈரடி இயன்று
நயப்புறு தாழிசை உறுப்பிற் பொதிந்து
வஞ்சி மலைந்த உழிஞை முற்றித்
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
வெம்புசின மாற்றான் தானைவெங் களத்தில்
குருதிப் பேராறு பெருகும் செங்களத்து
ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே”
(142)

என விளக்கி உரைக்கின்றது. மாற்றானது மண்ணைக் கவர்ந்து கொள்வதற்காக வஞ்சி மாலை சூடிப் போர் தொடுத்துச் சென்ற மன்னன், பின்னர் உழிஞை மாலை சூடிப் பகைவனுடைய மதிலை முற்றுகை இட்டு, தும்பை மாலை அணிந்து அப் பகை மன்னனுடன் போர் புரிவான். அப்போது அவனை எதிர்த்த மன்னது வீரர்கள் மடியக் குருதிப் பேராறு போர்க்களத்தில் பெருக்கெடுத்து ஓடும். குருதி படர்ந்த அச் செங்களத்தில், மாற்றான் மீது படை எடுத்துச் சென்று வாகை மாலை சூடிய அவ் வேந்தனின் வீரத்தைப் போற்றிப் பாடுவதே பரணியின் பண்பாகும். எனவே, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை ஆகிய புறத்திணைகளின் பொருள்கள் இனிதே பொருந்தப் புனைவதே பரணியாகும் என்பது விளங்கும்.

பரணியின் இலக்கணம்

பரணிப் பிரபந்தம் என்பது போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற பெருவீரனைச் சிறப்பித்துப் பாடப் பெறுவது. இம் மரபினை,

“ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது பரணி”
(838)

என இலக்கண விளக்கம் சுட்டிக்காட்டும். இங்கே ‘ஆயிரம்’ என்பதை ‘மிகப் பல’ என்பதைக் காட்ட வந்த பேரெண்ணாகவே கருத வேண்டும். இங்ஙனம் ‘ஆயிரம்’ என்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை வகுத்துக் கொண்டதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தது கலிங்கத்துப் பரணியே. இந் நூலில்,

“மாஆ யிரமும் படக் கலிங்கர்
            மடிந்த களப்போர் உரைப்போர்க்கு
நாஆ யிரமும் கேட்போர்க்கு
            நாள்ஆ யிரமும் வேண்டுமால்”
(312)

எனவும்,

“புரசை மதமலை ஆயி ரங்கொடு
           பொருவம் எனவரும் ஏழ்க லிங்கர்தம்
அரசன் உரைசெய்த ஆண்மை யுங்கெட
            அமரில் எதிர்விழி யாதுஒ துங்கியே”
(448)

எனவும் வரும் தாழிசைகளில் ஆயிரம் யானைகளை வெற்றி கொள்வது பற்றிய சிறப்புக் குறிப்பு இடம்பெற்றிருக்கக் காணலாம்.

பன்னிரு பாட்டியல், பரணிப் பிரபந்தத்திற்குக் கூறும் இலக்கணம் எண்ணிக்கையில் சற்று மாறுபடுகின்றது.

“ஏழ் தலைப் பெய்த நூறுடை இபமே
அடுகளத்து அட்டாற் பாடுதல் கடனே”
(145)

எனப் போர்க் களத்தில் எழுநூறு யானைகளைக் கொன்ற வீரனுக்குப் பாடப் பெறுவது பரணி எனக் குறிப்பிடுகின்றது அப் பாட்டியல் நூல். ஆயின், வெண்பாப் பாட்டியல் முதலான பிரபந்த இலக்கணம் கூறும் பிற பாட்டியல் நூல்கள் எண் பற்றிய தொகை எதனையும் குறிப்பிடாமல், போர்க் களத்தில் யானையைக் கொன்ற வீரனுக்குப் பரணி பாடப் பெறுவது மரபு என்று மட்டும் தெரிவிக்கின்றன.

பரணி நூல்களின் பெயர்கள்


போரில் வெற்றி பெற்றவரைப் போற்றிப் பாடுவதே உலகின் பொது இயல்பு; ஆயின், இதற்கு மாறாக, பரணி இலக்கியத்தின் பெயர் அமைந்துள்ளது; போரில் தோல்வியைத் தழுவிய மன்னனைச் சார்ந்தே பரணி இலக்கியத்திற்குப் பெயர் வைக்கப் பெற்றுள்ளது.

கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, இரணியன் வதைப் பரணி, சூரன் வதைப் பரணி என்னும் பரணி இலக்கியங்கள் முறையே முதற்குலோத்துங்க சோழன், சிவபெருமான், ஞானம் பெற்றோர், திருமால், முருகன் ஆகியோரின் பெருமைகளைப் பேசுவன. ஆயின், இந் நூல்களின் பெயர்களோ, இவர்களால் தோற்கடிக்கப்பட்டவர்களைச் சுட்டும் வகையில் இடம்பெற்றுள்ளன. புலவர் சோம.இளவரசு குறிப்பிடுவது போல், “இப் பெயரமைப்பால், தோல்வியுற்றோரைப் பெருமைப்படுத்தும் உயர்பண்பு தமிழருக்கு என்றும் உண்டு” (பக்.26-27) என்பதை அறியலாம்.

“ஏனைப் பிரபந்தங்கள் போலப் பாட்டுடைத் தலைவன் பெயருடன் வழங்காமல் தோல்வியுற்றோருடைய பெயருடன் சார்ந்தே இப் பிரபந்தம் வழங்கும்” (தக்கயாகப் பரணி மூலமும் உரையும், p.iii) என்னும் ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சாவின் கருத்தும் இவ்வகையில் மனங்கொளத் தக்கதாகும்.

பரணி என்னும் பெயர்க் காரணம்

“பரணியென்னும் பெயர்க் காரணம் பலவாறாகக் கூறப்படினும் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்ற பரணியென்னும் நாண்மீனால் வந்த பெயரென்பதே பொருத்தமுடையதாகத் தோற்றுகின்றது” என்பர் உ.வே.சாமிநாதையர் (தக்கயாகப் பரணி, மூலமும் உரையும், p.iii). “காடு கிழவோள் பூதம் அடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதம்எனப், பாகு பட்டது பரணிநாட் பெயரே” எனத் திவாகரம் இக் கருத்தினை அரண் செய்யும். இதற்கு ஏற்பப் பரணி இலக்கியங்களில் காளியின் சிறப்பும் பகைவருடைய உயிர் நீக்கமும் கூறப்படுதல் காணலாம்.

பரணி நாளில் கூழ் சமைத்துக் கூளிகள் காளிக்குப் படைப்பது மரபு என்பர். இது, “காடுகெழு செல்விக்குப் பரணி நாளில் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்கு” என்னும் பேராசிரியரின் உரைக் குறிப்பால் (தொல். பொருள். செய். நூ.149) விளங்கும். மேலும், “களப் பரணிக் கூழ்”, “பண்டு மிகுமோர் பரணிக் கூழ் பாரதத்தில் அறியாமோ?”, “மணலூரில் கீழ்நாள் அட்ட பரணிக் கூழ்” என வரும் கலிங்கத்துப் பரணியின் அடிகளாலும் இக் கருத்து வலியுறுதலைக் காணலாம்.

“பரணி பிறந்தான் தரணியாள்வான்” என்னும் பழமொழியும், “பரணியான் பாரவன்” (நன்னூல், நூற்பா 150, மயிலைநாதர் உரை) என்னும் மேற்கோளும், “பரணிநாட் பிறந்தான்” (சீவக சிந்தாமணி, 1813) என்பதற்கு, “பரணி யானை பிறந்த நாளாதலின் அதுபோலப் பகையை இவன் மதியான்” என்று நச்சினார்க்கினியர் எழுதிய சிறப்புரையும் பரணி நாள் வெற்றித் திருவோடு தொடர்புடைய வீர நாள் என்பதனைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இவற்றையெல்லாம் ஊன்றி நோக்கும்போது, வீரமும் வீரப் பொருள்களும் செறிந்த பரணி என்னும் நட்சத்திரம் பற்றியே நூலுக்குப் பரணி என்னும் பெயர் வழங்கலாயிற்று எனக் கொள்ளுதல் பொருத்தமாகத் தோன்றுகிறது.

பரணியின் உறுப்புக்கள்

பரணி என்னும் இலக்கிய மாளிகை பத்து உறுப்புக்களால் ஆனது. அவ்வுறுப்புக்களின் பெயர்கள் வருமாறு:

1. கடவுள் வாழ்த்து
2. கடை திறப்பு
3. காடு பாடியது
4. கோயில் பாடியது
5. தேவியைப் பாடியது
6. பேய்களைப் பாடியது
7. பேய் முறைப்பாடு
8. காளிக்குக் கூளி கூறியது
9. களம் பாடியது
10. கூழடுதல்

இப் பத்து உறுப்புக்கள் எல்லாப் பரணி இலக்கியங்களுக்கும் பொது-வானவை. கலிங்கத்துப் பரணியில் இப்பத்து உறுப்புகளுடன், இந்திர சாலம், இராசபாரம்பரியம், அவதாரம் என்னும் மூன்று உறுப்புக்கள் கூடுதலாக இடம்பெற்று, மொத்தம் பதின்மூன்று உறுப்புக்கள் காணப்படுகின்றன. கலிங்கத்துப் பரணியில் வரும் இராசபாரம்பரியம், அவதாரம் என்ற இரு உறுப்புக்களும் சோழ மன்னனது வரலாற்றுப் பெருமையைத் தெரிவிக்க ஆசிரியர் அமைத்துக் கொண்டனவாகும். இராசபாரம்பரியம் என்பதற்குத் திருமுடி அடைவு என்னும் பிறிதொரு பெயர் மோகவதைப் பரணியில் காணப்படுகின்றது.

பரணியின் உறுப்புக்கள் கடவுள் வாழ்த்து முதலாகக் கூழடுதல் என்பது ஈறாக, ஒரே சீராக எல்லாப் பரணி நூல்களிலும் காணப்படவில்லை. கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காடு பாடியது என்ற மூன்று உறுப்புக்களும எல்லாப் பரணி நூல்களிலும் முதல் மூன்று உறுப்புக்களாக இடம் பெற்றுள்ளன. கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது என்னும் மூன்று உறுப்புக்களும் பரணி நூல்களில் மாறி மாறி அமைந்திருக்கக் காண்கிறோம்.

பரணியின் யாப்பமைதி


பரணி, கலிப்பாவின் இனமாகிய கலித்தாழிசைகளால் பாடப்பெறும் பான்மையது. இத் தாழிசைகள், கொச்சக ஒருபோகின் வகையின என்பர். இதனைத் ‘தாழிசைக் கொச்சகமாகிய பரணிச் செய்யுளும்’ எனக் குறிப்பிடுவர் பேராசிரியர். பரணித் தாழிசை, இரு சீரடி, முச்சீரடி நீங்கலாக, ஏனைய சீர்களால் இரண்டு அடியால் பாடப் பெறும் பாங்குடையது. இதனை,

“அளவடி முதலா அடியிரண் டாக
உளமகிழ் பரணி உரைக்கப் படுமே”


என இலக்கண விளக்கப் பாட்டியல் மொழியும். வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், பிரபந்த தீபீகை ஆகிய நூல்களும் பரணியின் யாப்பினைக் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளன.

பரணியை, ‘பரணிப் பாட்டாகிய தேவ பாணி’ எனச் சுட்டுவர் பேராசிரியர். தேவபாணியாவது, தெய்வத்தைப் பரவும் பாட்டு ஆகும். ஆயின், பரணி நூல்களில் காளி தேவியைப் பரவுதலோடு, மன்னனைச் சிறப்பித்துக் கூறும் புறத்திணைப் பகுதிகளும் பல உள்ளன. அவ்வாறு இருக்கப் பரணியைத் ‘தேவபாணி’ எனக் குறிப்பிடுவது எங்கனம் பொருந்தும்? பேராசிரியர் இவ் வினாவிற்கு தரும் விடை வருமாறு:

“பரணியுள் புறத்திணை பலவும் விராய் வருதலின் அது தேவபாணியாம் என்றது என்னையெனின், அவைகள் எல்லாம் காடுகெழு செல்விக்குப் பரணி நாளில் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்குப் பற்றி, அதனுள் பாட்டுடைத் தலைவனைப் பெய்து சொல்லப்படுவன ஆதலால், அவை எல்லாவற்றானும் தேவபாணியே ஆம்” (தொல். பொருள். செய்யுளியல், நூ.149, பேராசிரியம்). பேராசிரியரின் இவ் விளக்கத்தால், பரணியில் மன்னனது புகழ் பேசப்பட்டாலும், அதில் தலைமை பெற்று விளங்குவது, காடுகெழு செல்வியும் அவளுக்குக் கூழும் பிறவும் கொடுத்து வழிபடுதலும் ஆகிய தெய்வச் செயலே என்பது விளங்கும்.

தமிழில் கிடைக்கும் பரணி நூல்கள்

கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப் பரணி, இரணியன் வதைப் பரணி, திருச்செந்தூர் பரணி (சூரன்வதைப் பரணி), சீனத்துப் பரணி என்பன இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய பரணி நூல்கள் ஆகும். இவற்றுள் திருச்செந்தூர்ப் பரணி முழுவதும் கிடைக்கவில்லை. பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன் படைத்த ‘சீனத்துப் பரணி’ இருபதாம் நூற்றாண்டில் எழுந்த பரணி ஆகும். இப் பரணி நூல்கள் பற்றிய அடிப்படையான தகவல்களைப் புலவர் சோம.இளவரசு எழுதிய ‘பரணி இலக்கியம்’ என்னும் நூலில் காணலாம்.
இவை தவிர தமிழ்ப் பரணி, கொப்பத்துப் பரணி, கூடல் சங்கமத்துப் பரணி, கலிங்கப் பரணி, கஞ்சவதைப் பரணி, கலைசைச் சிதம்பரேசுவரர் பணி என்பன பெயரளவில் அறியப்பெறும் பரணி நூல்கள் ஆகும். மயிலை சீனி.வேங்கடசாமியின் ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்னும் நூலில் இப் பரணி இலக்கியங்கள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இவையன்றி, கோயில் சாசனம் ஒன்றினால் இரண்டு பரணி நூல்களின் பெயர்கள் மட்டும் தெரியவருகின்றன. தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியரும், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்குநல்லாரும் தத்தம் உரைகளில் பரணித் தாழிசைகளை மேற்கோள் காட்டியுள்ளனர். இத்தாழிசைகள், எந்தப் பரணி நூல்களைச் சார்ந்தவை என்று தெரியவில்லை.

கலிங்கத்துப் பரணி: கற்பார்க்குச் சிறந்த இலக்கிய விருந்து


பரணி என்றதுமே இலக்கிய ஆர்வலர்களின் நெஞ்சங்களில் மோனையைப் போல் முன்னே வந்து நிற்பது கலிங்கத்துப் பரணி ஆகும். அதனைப் பாடியவர் சயங்கொண்டார். இவர் ‘பரணிக்கோர் சயங்கொண்டான்’ என்றும், ‘கவிச்சக்கரவர்த்தி’ என்றும் புலவர் பெருமக்களால் பாராட்டப் பெற்றவர். ‘தென்தமிழ்த் தெய்வப் பரணி’ என்பது ஒட்டக்கூத்தர், கலிங்கத்துப் பரணிக்குச் சூட்டியுள்ள புகழாரம்.
“நான் களைப்படைந்த போது இந்நூலில் ‘எடும் எடும் எடுமென எடுத்ததோர்’ என்பது முதலிய சில தாழிசைகளை முடுக்காகச் சில நிமிடம் படிப்பேன். அதனால் என் களைப்புத் தீர்ந்து விடும்” என்பார் மூதறிஞர் மோசூர் கந்தசாமி முதலியார். இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை என்பதைப் பறைசாற்றும் கலிங்கத்துப் பரணிப் பாடல் இதோ:

“எடுமெடு மெடுமென வெடுத்ததோர்
        இகலொலி கடலொலி இகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
         விடும்விடு மெனுமொலி மிகைக்கவே”
(404)

“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டு என்றால் அது கலிங்கத்துப் பரணிதான்” எனத் தமிழகத்தின் முன்னை முதல்வர் அறிஞர் அண்ணா ஒரு முறை தமது உரையில் குறிப்பிட்டார். அந்த அளவிற்கு இலக்கியச் சுவை ததும்பி நிற்கும் நூலாகக் கலிங்கத்துப் பரணி விளங்குகின்றது.

“வாயின் சிவப்பை விழிவாங்க
         மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
         துங்கக் கபாடம் திறமினோ”
(61)

என்பது கலிங்கத்துப் பரணியின் ‘கடை திறப்பு’ப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் ஒரு நயமான தாழிசை. இதன் சொல்லையும் பொருளையும் பொன்னே போல் போற்றித் தம் திரையிசைப் பாடல் ஒன்றில் கையாண்டுள்ளார் கவியரசர் கண்ணதாசன்.

கலிங்கத்துப் பரணி தீட்டும் பேய்களின் உருவ வருணனையில் நகைச்சுவை களிநடம் புரிந்து நிற்பதைக் காணலாம். பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை ‘கலிங்கத்துப் பரணியில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையே படைத்துள்ளார்.

முத்தாய்ப்பாக, பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை குறிப்பிடுவது போல், “விருந்து வகையில் சேர்ந்த இலக்கியங்களுள் கற்பார்க்குச் சிறந்த இலக்கிய விருந்து என்று இப் பரணியைக் கூறலாம்” (சிற்றிலக்கிய வகைகள், ப.224).

உசாத்துணை நூல்கள்:

1. இளவரசு, சோம. பரணி இலக்கியம். சிதம்பரம்: மணிவாசகர் நூலகம், 1978.

2. சண்முகம் பிள்ளை, மு. சிற்றிலக்கிய வகைகள், சிதம்பரம்: மணிவாசகர் நூலகம், 1982.

3. சாமிநாதையர், உ.வே. தக்கயாகப் பரணி மூலமும் உரையும். சென்னை: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், நான்காம் பதிப்பு, 1992.

4. செயராமன், ந.வீ. சிற்றிலக்கியச் செல்வம். சிதம்பரம்: மணிவாசகர் நூலகம், இரண்டாம் பதிப்பு, 1979.

5. மீனாட்சிசுந்தரன், தெ.பொ. தமிழ் இலக்கிய வரலாறு. தமிழாக்கம்: மு.இளமாறன், மதுரை: தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நினைவு அறக்கட்டளை, 2000.



‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்