திருக்குறள் காட்டும் பொருளாதாரச் சிந்தனைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா


முன்னுரை:

திருக்குறள், பொருள், பொருளியல், அறம், மனித வாழ்வு ஆய்வு அறிமுகம் மனித வாழ்வோட்டத்தில் 'பொருள்'இன்றியமையாததும் தவிர்க்கமுடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கை யைப் பொருளுள்ளதாக மாற்றுவது பொருளே ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனத்தில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும். திருக்குறள் உலகில் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழ்வியல் நெறிகளை வகுத்துரைத்துள்ளது. குறிப்பாக மனிதன் பொருளீட்டி எவ்வாறு வாழ வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. திருக்குறளில் பொருளின் தன்மையும் பொருளீட்டும் முறைகளும் அவற்றைத் திட்டமிட்டுச் செலவு செய்யும் முறைகளும் எடுத்துரைக்கபட்டுள்ளது. திருக்குறளில் பொருளியல் கருத்துகள் பெரும்பாலும் பொருட்பாலில் இடம் பெறுகின்றன. இக் கருத்துகள் இருபத்தோர் அதிகாரங்களில் பரவிக் கிடக்கின்றன. (தவமணி தேவி,அ,'பொருளியல்', திருக்குறளில் அறிவுத் துறைகள், ப.120) பொருளீட்டல் தொடர்பான முன்னையோர்கள் சிந்தனைகள் தற்கால சமூகத்திற்கு இன்றியமையாதவை. இன்றைய சமுதாயம் பொருளினாலும் பொருளீட்டல் முறைகளினாலும் மனிதநேயம் இழந்த நிலையில் தங்களுக்குள் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்ட மக்கள் கூட்டத்தை கொண்டிருக்கின்றது. பொருள் மனிதனுக்கு தேவையான ஒன்றே. இருப்பினும் அதனை ஈட்டுவதற்கும் பிரயோகிப்பதற்கும் நியமங்கள் உள்ளன. அத்தகைய நியமங்களை இன்றை சமூதாயத்திற்கு எடுத்துக் கூறும் இலக்கியமாக திருக்குறள் உள்ளது. திருக்குறள் காட்டிய வழியல் பொருளை ஈட்டி, அதனைப் பாதுகாத்து, வரவறிந்து செலவு செய்து, நாட்டையும் வீட்டையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும். குறளின் பொருளியல்ச் சிந்தனை எக்காலத்திற்கும் பொருந்தும் பொருளியல்ச் சட்டமாக அமைந்திருக்கின்றது.

வள்ளுவரும் பொருளாதாரமும்

திருவள்ளுவர் பொருளின் தன்மை, பொருளீட்டும் முறை, பொருளை செலவு செய்யும் முறை,அனைத்து தரப்பினருக்கும் பொருளின் அவசியம், பொருளின் பயன் என்பன தொடர்பாக கூறியுள்ளார். திருவள்ளுவரின் பொருளியல் தொடர்பான சிந்தனைகள் மேற்கத்தைய பொருளியற் சிந்தனையாளர்களுடன் ஒன்றிச் செல்கின்றதையும் அவதானிக்க முடிகின்றது. வள்ளுவரின் பொருளியல் சிந்தனைகள் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற பண்டைய கிரேக்க சிந்தனையாளர்களின் கருத்துகளோடும், ஆதம் ஸ்மித் போன்ற நவீன காலப் பொருளாதார அறிஞர்களின் ஒப்பிட்டு நோக்கக் கூடியது. பா. நடராஜன் கூற்றுப்படி, வள்ளுவரின் பொருளியல் கொள்கைகளோடு ஓரளவு ஒட்டி நிற்பவர் ஆதம் ஸ்மித்தே ஆகும். அடிப்படைக் கருத்துகளில் ,ருவருக்கும் பற்பல ஒற்றுமை காணப்படுகின்றது. முன்னாளில் இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் பொருளியல் அடிப்படையில் வகுப்பு வேற்றுமை ஓங்கியிருந்தது, பூசல்களும் நிறைந்திருந்தன. ஆதம் ஸ்மித்து பொருளியல் அடிமைத் தளையினின்றும் மக்களை விடுவிக்கப் பாடுபட்டார் பெருவாரியான, மக்களின் உழைப்பையும் தொழிலார்வத்தையும் தூண்டித் தழைக்கச் செய்தார் அதன் மூலம் தொழிற் புரட்சிக்கு அடிகோலினார். வள்ளுவரும் மக்களிடையே வேற்றுமை எழுதலை நீக்க முனைந்தார் பொருளியல் விடுதலையைப் போதனைசெய்தார். தொழிலுலகில் சாதியும், வகுப்பும் ஒருவனைக் கட்டுப்படுத்தா என்றார். விரும்பிய தொழிலை மேற்கொள்ள வழிவகுத்தார். பிறப்பால் மக்கள் அனைவரும் ஒரு நிகரே என்ற கொள்கையை வள்ளுவரைப் போன்றே ஆதம் ஸ்மித்தும் வற்புறுத்தினார். கல்வியாலும் சூழ்நிலையாலுமே வேற்றுமை மக்களிடையே விளையுமென இருவரும் கூறினர். அரசியலும் பொருளியலும் இசைந்து செல்லவேண்டும் அது மக்களுக்கும் அரசுக்கும் நல்லுறவை நிலைநாட்டும் அறம் பேணி, நலம் வளர்க்கும் - என்பன ,ருவரின் கருத்தும். ,ருவருமே, அறம் வழுவாப் பொருளியலை விரும்பினர்...ஆதம் ஸ்மித்து 'அறச் சிந்தனைக் கோட்பாடுகள்' என்ற நூலில் அறத்தை அடித்தளமாக அமைத்தார். அதன் மீதே, 'தேசங்களின் செல்வம்' என்ற பொருளியல் மாளிகையை எழுப்பினார். வள்ளுவரும் முதலில் அறத்துப்பாலை விளக்கினார். அடுத்தே பொருட்பாலை விரிக்கலானார். (நடராஜன்,பா., 1988, வள்ளுவர் தந்த பொருளியல், பக்.87-88) மேற்கத்தைய சிந்தனையாளர்களின் கோட்பாடுகள் திருவள்ளுவரின் பொருளியற் சிந்தனைகளுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன.

பொருளின் இயல்பு

பொருள் மனிதனுக்கு மதிப்பைத் தருகின்றது. சமுதாயத்தில் பொருள் படைத்த மனிதர்களையே மதிக்கின்றனர். பொருள் இல்லாதவர்களை யாரும் மதிப்பது இல்லை. பொருள் சேர்ந்தாரை உயர்வ டையச் செய்கின்றது. ஒன்றுமே இல்லாத மனிதர்களையும் ஒரு பொருட்டாக மதிக்கின்ற அளவிற்கு உயர்த்தும் தன்மை கொண்டதாக விளங்குகின்றது. பொருளின் இத்தகைய தன்மையினை,

'பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்'
(குறள்:751)

என்று திருக்குறள் குறிப்பிடுகின்றது. பொருள் இருப்பவனையே இவ்வுலகம் மதிக்கும். பொருள்வளம் இல்லாதவனை, அவன் நல்ல பண்புள்ளவனாக இருந்தாலும் அவனை அனைவரும் இழிவாக நடத்துவர். அதனால் பொருளின் அருமை அறிந்து அனைவரும் நல்வழியில் பொருளீட்ட வேண்டும் என்பதை,

'இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு'
(குறள்:752)

எனவே, மனிதனை சமுதாயத்தில் அந்தஸ்த்தும், கௌரவமும் உள்ள ஒருவனாக மாற்றும் ஒன்றே பொருள் என பொருளின் இயல்பினை வரையறுக்கின்றார் வள்ளுவர்.

பொருளீட்டும் முறை


நேர்மையான வழிகளன்றி தீயவழிகளில் ஒரு போதும் செல்வத்தைச் சேர்த்தல் கூடாது. அதனைக் கட்டாயம் நீக்கிவிட வேண்டும் என்பது பொருளீட்டலில் திருக்குறள் கூறும் முதன்மையான கருத்து. அறம் பொருள் இன்பம் என்னும் விழுமியங்களின் வரிசை முறையில் திருவள்ளுவர் பொருளுக்குத் தந்திருக்கும் இடம் கவனிக்கத்தக்கது. பொருள் இருந்தால் மட்டுமே ஒருவர் அறம் செய்ய முடியும் இன்பம் நுகரவும் கூடும். எனவே, பொருளுக்குப் திருவள்ளுவர் நடு இடத்தினையும் அறத்திற்கும் இன்பத்திற்கும் இடைப்பட்ட மைய இடத்தினையும் அளித்துள்ளனர். கருணையுடனும், அன்புடனும் நேர்வழியில் பொருளைச் சேர்த்தல் வேண்டும். அவ்வாறு வரக்கூடிய செல்வம் மேலும் மேலும் வளரும். கருணைக்கும், அன்புக்கும் எதிராக இரக்கமின்றிப் பிறரை வருத்திச் சேர்க்கும் செல்வம் நிலைக்காது அழிந்துவிடும். அதோடுமட்டுமல்லாமல் அது வளர்வதைப் போன்று வளர்ந்து இல்லாமலாகிவிடும். பெருங்கேட்டினைக் கொணர்ந்துவிடும் தன்மை கொண்டது. அதனால் அறவழியில் வராத பொருளை விரும்பாது, அப்பொருளால் தீமையே வரும் என்று எண்ணி அதனை வேண்டாம் என்று ஒதுக்கிவிட வேண்டும். இத்தகைய பொருளீட்டும் முறையினை,

'அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்'
(குறள்:755)

என்ற குறள் வழி வள்ளுவர் எடுத்தியம்புகிறார். அன்பின் வழியாலும், அருளின் வழியாலும் ஒரு மனிதன் சேர்த்து வைக்காத பொருளானது அம்மனிதனுக்கும் அவன் வழித்தோன்றலுக்கும் தீராத துன்பத்தைத் தரும். நேர்வழியில் பொருளீட்ட வேண்டும். அதுவே அறத்தையும் இன்பத்தையும் தரும். பிறரை வருத்தாமல் வரும் பொருளால்தான் இன்பம் கிடைக்கும். அதுவும் நிலைத்த இன்பமாக இருக்கும். நல்வழியில் சேர்த்த பொருளால் மட்டும்தான் நல்ல அறச் சிந்தனைகள் உருவாகும். அதனால் அறந்தழைக்கும். அதனால் நேரிய வழியில் பொருளீட்ட வேண்டும் என்ற அறநெறியை,

'அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்'
(குறள்:754)

என்ற குறள் நமக்கு எடுத்துரைக்கின்றது. நேர்வழியில் வந்த பொருளானது அன்பினையும், அறத்தினையும் வளர்க்கின்றது. தீய வழியில் சேர்க்கப்பட்ட பொருள் அன்பினையும், அறத்தினையும் இழக்கச் செய்கின்றது. பொருளியல் அறிஞர் டாக்டர் பா.நடராஜன் குறிப்பிடுவது போல்,'பெருமை தரும் செல்வத்தை எவ்வாற்றானும் ஈட்டுக என்று அவர் (வள்ளுவர்) கூறவில்லை. பொருளைச் சேர்ப்பதற்குப் பொருந்தும் நெறிகளை வகுத்தார். பொருள், நல்வாழ்வுக்குக் கருவியேயன்றி அதுவே வாழ்க்கைப் பயனாகாது.

வள்ளுவர் கூற்றின் படி அறநெறி வழுவாது பொருளீட்டுதல் வேண்டும்... வள்ளுவர் பொருள் ஈட்டலை வலியுறுத்தினாரேயன்றிப் பொருள் குவித்தலை விரும்பினாரில்லை. நல்வாழ்வுக்குத் துணையாகும் பொருளை வாழ்க்கையின் முடிந்த குறிக்கோளாகக் கொள்ளுதல் தவறு என்கிறார்'(வள்ளுவர் தந்த பொருளியல், பக்.38-39). வள்ளுவருக்கும் இன்றைய பொருளியல் துறையின் தந்தை எனப் போற்றப்படும் ஆதம் சிமித்துக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை காணப்படுகிறது. 'பிறப்பால் மக்கள் யாவரும் ஒரு நிகNர் கல்வியாலும் சூழ்நிலையாலுமே மக்கள் இடையே வேற்றுமை விளையும். அரசியலும் பொருளியலும் இசைந்து செல்ல வேண்டும். அது மக்களுக்கும் அரசுக்கும் இடையே நல்லுறவை நிலைநாட்டும். அறம் வழுவாப் பொருளியலே வேண்டத்தக்கது' என்பன இருவருக்கும் இடையே உள்ள ஒத்த சிந்தனைகள் ஆகும்.

அரசுபொருளைப் பெறக் கூடிய வழிமுறைகள்

அரசுகள் வருவாய் பெறக்கூடிய வழிமுறைகள் மூன்று எனப் பழங்காலத்து நூல்கள் தெரிவிக்கின்றன. அவையாவன,

 மக்களிடமிருந்து பெறும் வரி
 வாணிகப் பொருட்களுக்கான சுங்கவரி
 சிற்றரசர்களிடமிருந்து பெறும் திறை

இவ்வடிப்படையில் அரசுகள் வருவாய் பெற்றுவந்தன. மக்களை நீதி முறை செய்து காப்பதற்காகவும் பகைவரிடமிருந்து நாட்டைக் காப்பதற்காகவும் மக்கள் தங்கள் வருவாயில் இருந்து ஒரு பங்கையும், உழவர்கள் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கையும் அரசுக்கு வரியாகச் செலுத்தி வந்தார்கள் மன்னருக்கு மக்கள் வரி செலுத்துகின்ற முறை இருந்தது என்பதை 'உறுபொருளும்' என்ற சொல் மூலம் அறிய முடிகிறது.

'உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்'
(குறள் 756)

என்ற இக்குறள் மூலம் அரசு ஏற்றுமதி இறக்குமதி வரிகளோடு உள்நாட்டுச் சுங்க வரிகள் மூலமும் வருவாய் சேகரித்து வந்தது.

அரசுகள் பெற்றுவந்த மூன்றாவது வருவாய் முறை திறையாகும். பகை நாட்டார் இடத்தும், சிற்றரசர்களிடமிருந்தும் அரசு வருவாய்களைச் சேகரித்து வந்தது. தனி மனிதனைப் போன்று அரசிற்கும் பொருள் வாழ்வு உண்டு. அரசும் பொருளை ஈட்ட வேண்டும் பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அரசு நடத்தும் பொருள் வாழ்வு மக்கள் எல்லோருக்கும் உரியது. அதனைப் பொருளியலில் 'பொதுநிதி' (Public Finance) என்பர். பொது நிதியில் அரசின் வருவாய்க்கான வழிகள், செலவினங்கள், அவற்றை ஈடுகட்டுவதற்கான நெறிமுறைகள் ஆகியன அடங்கும்.

'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு'
(குறள் 385)

என வள்ளுவர் குறிப்பிடுவது பொதுநிதியின்பாற்படும் எனலாம். 'பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும்,ஈட்டிய பொருள்களை ஓரிடத்துச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை அறம் பொருள் இன்ப வழிகளில் வகுத்துச் செலவு செய்தலும் வல்லதே நல்லரசாகும்' என்பது வள்ளுவர் கருத்து. ஓர் அரசானது பொருள் வரும் வழிகளை மேன்மேலும் உருவாக்குதலும், வந்தவற்றைத் தொகுத்தலும், தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டுக் கொடுத்துத் தன் கடமையைச் செய்யவல்லது என்று கூறுகிறார். அரசு இம்முறையில் செயற்பட்டால்தான் நாடு தன்னிறைவு அடையும், தன்னிறைவு பெற்றால்தான் உலக நாடுகளுடன் போட்டிபோட முடியும். போட்டிபோட வேண்டும் எனில் நாடு செல்வ நிலையில் செழித்து இருக்க வேண்டும்.

அரசு எப்போதும் செல்வ நிலையில் வலிமை பெற்றுத் திகழ வேண்டும். செல்வ நிலையில் வலிமை பெற்றால்தான் உலக நாடுகள் மத்தியில் நிலைத்திருக்க முடியும். இன்று படை பலத்திலும் செல்வ நிலையிலும் வலிமை பெற்ற நாடுகள் தாம் வல்லரசுகளாய் மதிக்கப்படுகின்றன. வல்லரசு ஆவதற்கு நாட்டின் பொருளாதாரம் முன்னேற வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு முதல்படியே செல்வம்தான். அதனால்தான் வள்ளுவமும் செல்வத்தை வலியுறுத்துகிறது,

'பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று'
(குறள் 753)

என்ற குறளின் கருத்து நோக்கத்தக்கது.

பொருள் வளம் நிறைந்த நாடே முழுமையான நாடு

வள்ளுவரின் நோக்கில் 'தன்னிறைவு படைத்த வள நாடே உரிமை நாடு; பிற நாட்டை எதிர்நோக்கும் நாடு, நாடு அன்று!' இதனை,

'நாடுஎன்ப நாடா வளத்தன் நாடுஅல்ல
நாட வளந்தரு நாடு'
(குறள்:739)

என்கிறார் வள்ளுவர். இன்றைய பொருளியலும் 'தன்னிறைவு பெற்ற நாடே வலிமை பொருந்தியது' எனக் கருதுகின்றது.

பொருளைச் செலவு செய்யும் முறை


பொருளைச் செலவு செய்வதிலும் மிக அவதானமாக இருத்தல் வேண்டும். வரம்புமீறிபொருளைச் செலவு செய்தால் அதனால் செல்வம் அழிந்து வறுமையுற நேரிடும். தன்னுடைய வருவாயை அறிந்து அரசனோ, குடிமக்களோ செலவு செய்தல் வேண்டும். வரவுக்கு மீறி செலவு செய்தால் நாடும் வீடும் அழிவைச் சந்திக்க நேரிடும். அதனால் வரவறிந்து செலவு செய்து வாழ்க்கையை நடத்துதல் வேண்டும். இதனை,

'ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
(478)

என்ற திருக்குறள் எடுத்துரைக்கின்றது.பொருள் பெறப்படும் வழி சிறியதாக இருக்கும் போதுசெலவு செய்யும் வழி அகலமாக இருத்தல் கூடாது. அதாவது செலவினை அதிகம் செய்தல் கூடாது. அவ்வாறு இருந்தால் வாழ்வில் எந்தவிதமான துன்பமும் வராது. வருவாய்க்குள் செலவு இருத்தல் வேண்டும் அது அனைத்து வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் என்று இத்திருக்குறள் நமக்குப் பொருளைச் செலவு செய்யும் முறையினை தெளிவுறுத்துகின்றது. இது எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் எம்மக்களுக்கும் பொருந்தும் நெறியாகும்.

நாடு முன்னேற வேண்டுமானால் நாட்டை ஆள்வோர் திட்டமிட்டுப் பொருளீட்டிச் செலவு செய்தல் வேண்டும். பொருள் வருவாய் வழி அறிந்து அப்பொருளை ஈட்டுவதற்கு உரிய திட்டத்தை வகுத்தலும், பின்னர் திட்டத்தின்படி பொருளை ஈட்டுவதும்,ஈட்டிய பொருளைப் பெருக்கி வளர்த்தலும் அதனைக் காத்தலும் ஆகிய பல்வேறு திறமைகளை உடையவனாக அரசன் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் அரசனால் நாடும், மக்களும் அளப்பறிய பயன் பெறுவர். இத்தகைய அரிய பொருளியல்ச் சிந்தனையை,

'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு'
(குறள்: 385)

என்று வள்ளுவர் மொழிகின்றார். இச்சிந்தனை திட்டமிடல் (Planning & Management) செயலை அடிப்ப டையாகக் கொண்டமைகின்றது.

மக்கள் நலப் பொருளாதாரத்தின் அடிப்படை


பொருளை அற வழியில் நேரிய முறையில் ஈட்டுமாறு அறிவுறுத்திய வள்ளுவர், பொருள் தேவைக்கு மேல் இருந்தால் அதனைப் 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்'(322) வேண்டும் என்கிறார். அதே வேளையில், வரன்முறை அறிந்து ஈகையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வழிகாட்டுகின்றார் அதுவே 'பொருள்தனைப் போற்றி வழங்கும் நெறி'(477) என்றும் சுட்டிக்காட்டுகின்றார். 'வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன், அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

'அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி'
(குறள்:226)

இன்று அதிகமாகப் பேசப்படும் மக்கள் நலப் பொருளாதாரத்தின் (Welfare Economics)
அடிப்படையினைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார்.
வரவுக்கு ஏற்ற செலவு மனைவியை 'வாழ்க்கைத் துணை' என்னும் பொருள் பொதிந்த தொடரால் சுட்டும் அவர், சிறந்த வாழ்க்கைத் துணையின் இயல்பினையும் எடுத்துரைத்துள்ளார்.

'ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகாறு அகலாக் கடை.'
(குறள்: 478)

இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள 'ஆகாறு'– பொருள் வரும் வழி (வருவாய்),'போகாறு'– பொருள் போகும் வழி (செலவு) என்னும் சொல்லாட்சிகள் குறிப்பிடத்-தக்கவை. 'வரவுக்கு ஏற்ற செலவு' என்னும் பொருளியல் சிந்தனையை இங்கே வெளிப்படுத்தியுள்ளார் வள்ளுவர்.

பொருளின் பயன்

நாம் தேடிய செல்வத்தைப் பிறருக்கு ஈத்துவக்கவேண்டும். ஈத்துவக்கும் இன்பமே வாழ்வின் பெரும் பேரின்பமாகும் என்கிறார் வள்ளுவர். அறவழியில் தேடிச் சேர்த்த பொருள், அனைவருக்கும் பரவலாக்கப்பட வேண்டும். பொருள் ஓரிடத்தில் குவிவதால் மட்டும் பலன் ஏற்படுவதில்லை. தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் எனப் பொருளை அனைவரிடத்திலும் சென்று சேரும் வகையில் பரவலாக்க வேண்டும். முறையாக நாம் சேர்த்துவைத்த பொருள் யாவும் நம்மைச் சார்ந்தவர்க்கும் நம்மைச் சார்ந்த சமுதாயத்தினருக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதை,

'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு'
(குறள் 212)

என்று திருக்குறள் தெளிவுறுத்துகிறது.

தொகுப்புரை:

  • பொருளீட்டல் தொடர்பான முன்னையோர்கள் சிந்தனைகள் தற்கால சமூகத்திற்கு இன்றியமையாதவை.
     

  • இன்றைய சமுதாயம் பொருளினாலும் பொருளீட்டல் முறைகளினாலும் மனிதநேயம் இழந்த நிலையில் தங்களுக்குள் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்ட மக்கள் கூட்டத்தை கொண்டிருக்கின்றது.
     

  • பொருள் மனிதனுக்கு தேவையான ஒன்றே. இருப்பினும் அதனை ஈட்டுவதற்கும் பிரயோகிப்பதற்கும் நியமங்கள் உள்ளன. அத்தகைய நியமங்களை இன்றை சமூதாயத்திற்கு எடுத்துக் கூறும் இலக்கியமாக திருக்குறள் உள்ளது.
     

  • திருக்குறள் காட்டிய வழியல் பொருளை ஈட்டி, அதனைப் பாதுகாத்து, வரவறிந்து செலவு செய்து, நாட்டையும் வீட்டையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும்.
     

  • குறளின் பொருளியல்ச் சிந்தனை எக்காலத்திற்கும் பொருந்தும் பொருளியல்ச் சட்டமாக அமைந்திருக்கின்றது.


பயன்பட்ட நூல்கள்:


1.முருகரத்னம்,தி., (1975),வள்ளுவர் வகுத்த பொருளியல் (கருத்தரங்க கட்டுரைகள்), மதுரைப் பல்கலைக்கழகம்.
2. சுப்பிரமணியன்,ச.வே., (2002),தமிழ் இலக்கிய வரலாறு, மணிவாசகர் பதிப்பகம்.
3. பரிமேலழகர், திருக்குறள் பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம்.
4. செல்வராஜ், இரா., (2009), திருக்குறளில் பொருளியல், உலக தமிழாராய்ச்சி மாநாடு,
5. சென்னை
6. நடராஜன்,பா.,(1988),வள்ளுவர் தந்த பொருளியல், சென்னை
7. சேதுராமன், சி., (2005), திருக்குறளில் பொருளியற் சிந்தனைகள், சென்னை

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035

 

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்