திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 4)
கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி
கற்பனை உணர்வு:
கற்பனை
கவிதையின் மூச்சாகக் கருதப்படுவது. இல்லாததைச் சொல்வதும், உள்ளதை
உயர்த்திச் சொல்வதும், ஒன்றை மற்றொன்றில் ஏற்றிச் சொல்வதும் கற்பனை
ஆகும். கவியாற்றலோடு கற்பனையாற்றலும் பெற்ற கவியரசர்,தன் கவிதைகளில்
பாடல்களில் பல்வேறு நிலைகளில் தன் கற்பனைத்திறனை அழகாக
வெளிப்படுத்தியுள்ளார்.
நீல நிறக் கடலையும், கரிய மேகத்தையும்,வாசமுள்ள மலரையும் கண்ட கவிஞர்
நீலக்கடலுக்கு விழியையும், மேகத்திற்குக் கூந்தலையும், வாச மலருக்குக்
கூந்தல் மணத்தையும் தொடர்பு படுத்தி தன் கற்பனைத் தேரை ஓட்டுகின்றார்.
நீல நிறம் ..வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்,
காரணம் ஏன் கண்ணே –உன் கண்ணோ..! என்பார்.
உன் கண்களின் வண்ணத்தைத் தான் கடல் காட்டுகிறதோ?அன்றி வானத்தின்
நீலவண்ணம்தான் கடலில் பிரதிபலிக்கிறதோ என்ற ஒரு ஐயம் கவிஞருக்கு
ஏற்பட்டிருக்குமோ?
இன்னொரு வரியில்
“அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ ?
என்பார். தலைவியின் அலைபாயும் கருங்கூந்தல் மேகக்கூட்டங்களாக கவிஞரின்
சிந்தனையில் உருவகமாகிறது.
என் அண்ணன் படத்தில் இடம் பெற்ற பாடலிது.
காதல் உணர்வு:
பல்லாயிரம் வண்ண உணர்ச்சிகளை உருவாக்கிக் காட்டும் வானவில் காதல் உணர்வு.
அது பாட வைக்கும்; அன்புப் பரிசளிக்கும்; நெஞ்சம் நாட வைக்கும்; துன்பம்
ஓட வைக்கும்; சுக மேடை கட்டும்; அதில் ஆட வைக்கும்; நம்மை மீள வைக்கும்;
என்றும் வாழ வைக்கும்.
காதல் பாடல்கள் எழுதுவதில் கவிஞர் சளைத்தவரா என்ன? எத்தனையோ சாகாவரம்
பெற்ற காதல் பாடல்களை காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதியவரல்லவா அவர்?
அவர் சொல்லுவார்:
காதல் பாடல் எழுதுவதென்றால் நானே தான் காதலன் ஆவேன். அப்போது என்னுள்ளம்
கனிந்துருகும். காதல் வெள்ளம் பெருகும். அதை எழுது, இதை எழுது என்று ஏதோ
ஒரு தேவதை என்னைப் பிடித்துத் தள்ளும்.
ஆலிலை மேலொரு மேகலை ஆட
ஆசைக் கனிகள் மாலையில் வாட
பாதிவிழிகள் காதலில் மூட
பாலில் விழுந்த பழம்போல் ஆட
நீ தரவேண்டும், நான் பெற வேண்டும்
நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்.
கவிஞரிடம் தன்னை மறைத்துக் கொள்ளும் போலித்தனம் இல்லை;
பொங்கு தடந்தோளில் புல்லரித்து வீழ்ந்து விட்டால்
தங்கு தடையின்றி தமிழ்க் கவிதை ஊறுமடி என்பார்.
அவர் தந்த ஆயிரமாயிரம் காதல் பாடல்களில், காதல் கலையைத் தமிழோடு இணைத்து
வழங்குகிற பாடலிது.
படம்-சங்கே முழங்கு. பாடல் :தமிழில் அது ஒரு இனிய கலை........
சாகசத் தென்றல்:
அவரது இலக்கிய வித்தகத்திற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு:
தமிழ் பிறந்த பொதிகை மலை உச்சியிலே தென்றல் பிறந்து தவழ்ந்து
பாண்டியனின் அவையில் நுழைந்து, பின்னர் அந்தப்புரத்திலும் நுழைகிறது.
அங்கே பாண்டியனும் அரசியும் தனிமையின்பத்தில் திளைத்திருக்கிறார்கள்.
தன்னோடு கொண்டுவந்த காதலை அந்த இணையரிடம் கொடுத்துவிட்டு கவிதையை
கவியரசர் கண்ணதாச னிடம் கொடுத்துவிடுகிறது.
கவிஞர் சும்மா இருப்பாரா? பாடல் வடிக்கிறார்.
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
அந்த குறும்புக்காரத் தென்றல் என்னவெல்லாம் செய்கிறது பார்த்தீர்களா?
பதினாறு முழமானாலும் பத்தே முழமானாலும் ஆடைக்குள் புகுந்து தவழ்ந்து
சிலிர்க்க வைக்கிறது.தலைவியை சிந்திக்க வைக்கிறது. கார்குழலை நீராட்டி
கண்ணிரண்டைத் தாலாட்டி, ஆகா...! தேனிதழில் முத்தமிட்டு சிரிகிறது.;
சாரல் காற்றாக வந்து தேகமெங்கும் நீரெடுத்துத் தெளிக்கிறது;
கட்டிலிலே சேர்ந்திருக்கும்
காதலர்கள் மேனியிலே
வட்டமிட்டுப் பாதை தேடி
மயங்கிடும் தென்றல் –போக
வழியில்லாமல் வந்த வழி
சுழன்றிடும் தென்றல்.
அப்புறம் பள்ளியறைக்கும் செல்கிறது. அங்கே போனால், கட்டிலிலே
சேர்ந்திருக்கும் காதலர்கள் கொஞ்சம் கூட இடம் தராமல் அவ்வளவு
நெருக்கத்தில் இருக்கிறார்களாம். அந்தோ.. பரிதாபம்! பொங்கிய கோபத்தோடு
வந்தவழி திரும்பி, எஞ்சியுள்ள கன்னியர்கள் மேனியிலெல்லாம் கலந்து
விடுகிறது.
கன்னியர்கள் மேனியிலே
கலந்துவரும் வேளையிலே
தன்னுடலைக் காட்டாத
தந்திரத் தென்றல் .
ஆனால்,தென்னவர்க்கும் அஞ்சாத
சாகசத் தென்றல்!
மன்னன் தென்னனிடம் குடை, படை, ஆள், அம்பு, சேனை எல்லாம்
இருக்கலாம்.ஆனால் அவற்றைக் கண்டு அந்தத் தென்றல் கொஞ்சம் கூட
அஞ்சவில்லையாம்; என்ன ஒரு சாகசம் அந்தத் தென்றலுக்கு என்று நம்மை
வியக்க வைக்கிறார் கவியரசர். பாடல் முழுமையும் இலக்கியம் துலங்குகிறது?
அதுவும் நன்றாகவே விளங்குகிறது.
தொடரும்............
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|