கிழக்கிலங்கைத் தமிழர்களின் பாரம்பரியக்
கலையாடல் கொம்புமுறி
பா.மோகனதாஸ்
கொம்புமுறி,மழைக்காவியம்,கண்ணகி
குளுத்தி,பள்ளுப்பாடல்கள்,வசந்தன் கூத்து போன்றவை பண்டுதொட்டு
பேணப்பட்டு வரும் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய கிராமியக்
கலைகளாகும்.புராதன கலைகளில் முக்கியமான கலையாடலான கொம்புமுறி
சிலப்பதிகாலத்தில் பக்தி சார்ந்த கலையாடலாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
அறிவு அறைபோகி இறைமுறை பிழைத்த மதுரைப் பாண்டியனை பழிவாங்கி மதுரையை
எரித்து கோபத்துடன் வந்த கண்ணகியை, கோபம் தணியும் படி இடையர் குல
சிறுவர்கள் கோபம் தணிய கொம்புமுறி செய்ததாக கூறப்படுகிறது.இதன்போது சேர
நாட்டு இளைஞர்களின் வடபுறமிருந்தோர் வடசேரி எனவும் தென்புறமிருந்தோர்
தென்சேரி எனவும் இரு சேரிகளாக பிரிந்து இரு மஞ்சள் கொம்புகளை
ஒன்றோடொன்று கொழுவி இழுத்துக் கோவலன் அதை முறித்து கண்ணகிக்கு வெற்றி
என்று கூறி அவள் கோபம் தணிந்து உள்ளம் குளிமாறு செய்த கலையாடலே
கொம்புமுறியாகும்.
சிலப்பதிகார வணிகவுடமைச் சமூகத்தில் இடையர் குலத்தவர்களால்
நிகழ்த்தப்பட்ட இவ் விளையாட்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு
கொண்டுவரப்பட்டு கிழக்கிலங்கையில் தம்பிலுவில், பாணம, தேத்தாத்தீவு,
மண்டூர், களுதாவளை, சிந்தாண்டி, கறுப்பளை, கன்னங்குடா, காரைதீவு,
மகிழடித்தீவு ஆகிய இடங்களில் பண்டுதொட்டு கண்ணகியினை
குளிர்ச்சிப்படுத்துவதற்காகவும் ஊரினை வளமாக்கி நோயற்ற வாழ்வு
வேண்டியும் நெற்பயிர்ச் செய்கை செழிக்கவும் மக்கள் கொண்ட
நம்பிக்கையினால் வருடம் ஒருமுறை ஊரே பங்குகொள்ளும் பெருவிழாவாக
நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
கொம்புமுறி விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முதல்நாள், நீள்சதுர வெளியினை
கயிற்றினால் சுற்றிக்கட்டி நீள்சதுர பாத்திகோலி இடத்திலேயே
போர்த்தேங்காய் அடித்தல் இடம்பெறும்.வடசேரியி,தென்சேரி ஆகியோர்களால்
பறையோசையுடன் ஒலைப்பெட்டியில் வைத்து போர்த்தேங்காய்கள் கொண்டுவரப்பட்டு
இரு சேரியினரும் எதிரெதிர் பக்கமாக அமர்ந்து கொண்டு ஐந்து அல்லது ஏழு
தேங்காய்களை போர்த்தேங்காய்க்கு பயன்படுத்துவர்.ஒரு பக்கத்திலிருப்பவர்
தேங்காயை உருட்ட அதனை மறுபக்கத்தில் இருப்பவர்கள் உடைத்தல்
வேண்டும்.அதிகமான தேங்காய்களை உடைப்பவர்கள் வெற்றிக்குரியவர்களாக
கொள்ளப்படுவர்.இவ் விளையாட்டில் ஆண்கள் மாத்திரமே பங்குபற்றுவர்.
போர்த்தேங்காய் மற்றும் கொம்பு முறி ஆகியவைகள் எனது பார்வையில் மக்கள்
அரங்காக கொள்ளப்படுகின்றது.
பெரும்பாலான சமூக குழும மக்கள் கலையாடல்கள் திறந்த வெளியிலேயே
ஆற்றப்பட்டு வருவதுடன் அவ்வெளியே ஆற்றுகையின் அழகியலை
உயிரோட்டமாக்குகின்றது.பொதுமக்கள் பங்குகொள்ளும் கலையாடல் அரங்குகளே
சமூகமயப்பட்ட மக்கள் அரங்காக கொள்ளப்படுகிறது.
போர்த்தேங்காய் உடைத்தல்,கொம்புமுறி ஆகியவை உயர்த்தப்பட்ட உள்ளக
அரங்கில் நிகழ்த்தப்படாது சமதரை வெளியில் நிகழ்த்தப்பட்டு வருவதுடன்
நாட்டிய நாடகம், இசைக்கச்சேரி, வில்லுப்பாட்டு, மேடைநாடகம் ஆகியவை
உள்ளக அரங்கில் இடம்பெறுவதால் இவற்றில் பங்குகொள்ளும் தன்மையினை
காணமுடியாதுள்ளது.ஏனைய கலையாடல்களை மக்கள் சென்று பார்க்க இவை மக்களை
நோக்கி வரும் கிராமிய கலையாடல் விளையாட்டுக்களாக மிளிர்கின்றன.
மட்டு மாவட்ட ,63 அடி உயரம் கொண்ட தேற்றாத்தீவு பிள்ளையார் ஆலய வளாக
முன்றலில் ஆரம்ப காலங்களிலில் கொம்புமுறி இடம்பெற்றதனால் அப்பிள்ளையார்
கொம்புச்சந்திபிள்ளையார் எனும் நாமத்துடன் இற்றை வரைக்கும்
அழைக்கப்படுகிறார். இவற்றை விட வேறு வியாக்கியானம் தேவையிராது.
களுதாவளை,களுவாஞ்சிக்குடி,மாங்காடு,செட்டிப்பாளையம், தேற்றாத்தீவு
உட்பட அருகிலுள்ள கிராம மக்கள் கொம்புமுறி நிகழ்த்துகையினை பார்க்க
திரண்டு வருவதும் பிரிந்த உறவுகள் சந்திப்பதும் புதிய உறவுகள் மலருவதும்
பிணக்குகளை மறந்து ஒருவருக்கொருவர் அளவளாவுவது ஆகியவைகளே இவற்றை மக்கள்
அரங்காக்குகின்றது.
கொம்புமுறி நிகழ்த்துகை, ஆரம்பகால கொம்புமுறி தொடர்பான நிறைவான
வரலாற்றுத்தடயங்களை, மூதாதையர்கள் மற்றும் கிராம மக்களின்
கதையாடல்களுக்கூடாக இன்றையவர்களும் அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பமாக
அமைகிறது.
முறையான மக்கள் அரங்கில் ஊரே திரண்டு வரவேண்டும். ஆற்றுகைகள்
எப்பொழுதும் பொது வெளியில் இடம்பெறவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின்
எண்ணப்பாடாக இருந்து வருகின்றது. அவ்வாறு இடம்பெறும் ஆற்றுகைகளே
பார்ப்போரின் சிந்தனை வெளிகளை விசாலப்படுத்துகின்றது.
கொம்புமுறி கலையாடலின்போது ஒரு சிலர் தங்களை மறந்து தங்களது அணியினர்
வெற்றிபெற வேண்டுமென கண்கூடாக பார்ப்பதும் அதனது தேவை முக்கியத்துவம்
தொடர்பான
கருத்தாடல்கள்,கதையாடல்கள் ஆகியவை இதன்போது இளந்தலைமுறையினருக்கு
கையளிக்கப்படுகிறது.
கொம்புமுறி விளையாட்டுக்கான ஆயத்தங்களை ஒரு வாரத்திற்கு முன்னரே
மேற்க்கொள்ள வேண்டும்.அவற்றுக்கான விபரங்கள் பின்வருமாறு,
விற்பன,கரையாக்கன்,விடத்தல்,விளினை,கோணியுப்பூறி ஆகிய வலுவான உறுதியான
மரங்களிலிருந்து பெறப்படும் மரத்தின் வேர்களே கொம்பாக
பயன்படுத்தப்படுகிறது. கொம்புகளின் தலைப்பகுதி வேராகவும்
கழுத்து,மார்புப் பகுதிகள் பெரும்பாலும் மரமாகவும் காணப்படும்.
கொம்பின் மேல் பகுதியை தலை என்றும் முடக்குப் பகுதியை கழுத்தென்றும்
அதற்குக் கீழ்க்கொம்புகள் பொருந்துகின்ற பகுதியை கடைக்கால் என்றும்
குறிப்பிடப்படுகிறது. கொம்புகள் தேர்ந்தேடுக்கப்படும்போது தலைப்பகுதி
ஒரு அடியும் கடைக்கால் கொம்புகள் ஒன்றரை அடி நீளம் கொண்டதாகவும் வெட்டி
எடுக்கப்பட வேண்டும்.
கொம்புக்கு இரு பக்கமும் வரிந்து கட்டப்படும் பில்லித்தடி அண்ணளவாக 4.5
அடி நீளத்தில் காணப்படுவதனுடன் கரையாக்கன்,விளினை,முதிரை போன்ற
மரங்களிலிருந்தே பில்லித்தடி செய்யப்படும்.பில்லித்தடிகள் கொம்புகளுடன்
சேர்த்து புரியப்பட முன்னர் பனிச்சங்காய் பசை பூசி காயவிடப்பட்டு
பின்னர் புரிகளினால் புரியப்படும். இதன்போது மந்திர உற்சாடனம்
செய்யப்படும் பில்லி கட்டிய கொம்புகளே கொம்புமுறித்தலுக்கு உகந்ததாகும்.
செவ்வாய்க்குற்றியுடன் இணைக்கப்படும் அரிப்புக்கயிற்றின் ஒரு பகுதி
வடக்கயிற்றுடன் இணைக்கப்படும். அத்தி,நெகிழை,நறுபுளி,நார்பட்டு ஆகிய
மரங்களின் கொடிகளிலிருந்த நார்களைக்கொண்டு புரிவிட்டு திரிக்கப்பட்டே
கயிறே அரிப்புக்கயிறாகும். கொம்பு முறிக்கான இரு அரிப்புக்கயிறுகளும்
சம அளவிலான கயிறே பயன்படுத்தப்பட வேண்டும்.
தேரில் வடம் பிடிப்பது போல வடசேரியாரும் தென்சேரியரும் சம அளவிலான
வடக்கயிறினையே பயன்படுத்துவர்.இக்கயிற்றின் ஒருபக்கம் கொம்பிலேயே
கட்டப்பட்டிருக்க மற்றைய பக்கத்தினை கொம்பு முறிப்பவர்கள் பிடித்து
இழுப்பர்.பண்டைக் காலத்தில் காட்டிலிருந்து பெறப்பட்ட கொடிகளையே
வடக்கயிறாக பயன்படுத்தினர். தற்காலத்தில் நைலோன் கயிறு
பயன்படுத்தப்படுகின்றது.
அண்ணளவாக 4 அடி நீளம் கொண்ட பில்லியுடன் இணைத்துக் கட்டப்படும்
முதிரை,கருங்காலி,போன்ற மரங்களிலிருந்து செய்யப்படும் அச்சுலக்கையினை
இரு சேரியினரும் பயன்படுத்துவர். ஆப்பு போன்று அடி சிறுத்து நுனி
பெருத்துக் காணப்படும்.கொம்புமுறியின்போது ஆமணக்கு எண்ணெய் பூசி வைப்பது
வழமையாகும்.
வைரமான திருக்கொன்றை மரத்திலிருந்து பயன்படுத்தப்படும்
செவ்வாய்க்குற்றி,அரிப்புக் கயிற்றினைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும்.
சுமார் 15 அடி அளவுள்ள திருக்கொன்றை குற்றியினை நிலத்தில் அசையாதவாறு
நடுவது வழமையாகும்.கொம்பு,பில்லி ஆகியவற்றினை ஒன்றோடொன்று இணைத்து இறுக
கட்ட அத்தினார்,வெல்லநார் என்பன பயன்படுத்தப்படுகின்றது.
கொம்பு,பில்லித்தடி, செவ்வாய்க்குற்றி, அச்சுலக்கை, அரிப்பு, வடம்
முதலிய பொருட்களை இரு சேரியினரும் காட்டிற்கு சென்று சேகரித்து
செவ்வாய்க்குற்றியினை வழமையாக கொம்புமுறி நடைபெறுகின்ற நிலத்தில்
அசையாதவாறு உறுதித்தன்மையானதாக நடுவர். செவ்வாய்க்குற்றி நடப்பட்ட
பின்னர் கொம்பு தேர்ந்தேடுக்கப்படும்.
இரு சேரியினைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து தமக்கு விருப்பமான
கொம்புகளை தேர்ந்தேடுப்பதை கொம்பு தூது பிடித்தல் என்பர்.கொம்பினை
கொழுவி இழுக்கும் போது ஒரே அளவானதாக இருக்க வேண்டும்.இதன் போது
நீதி,நேர்மை,சமயோசிதம்,பக்கச்சார்பின்மையாக கொம்பு தேர்ந்தேடுக்கப்படும்.
சிறியளவிலான கொம்புடன் சிறிய கொம்பை பொருத்தி முறிப்பது
அவசியமாகும்.ஒவ்வொரு முறையும் கொம்புமுறி விளையாட்டின்போது வெற்றிபெற்ற
கொம்புகளை பேணிப் பாதுகாத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. எனவே பழைய
கொம்புடன் பழைய கொம்புகளையே முறித்து விளையாடுவது வழமை கொம்புகளை
அளவெடுத்தலில் கொம்புக் கழுத்திலிருந்து நான்கு விரலிடைக்கு கீழ் அளவு
பிடிக்க வேண்டும்.பொதுவாக கூறுகின்ற போது பொறுக்ககூடிய மார்புப் பகுதி
உகந்ததாகும்.
கொம்புமுறியில் முன்னோர் வகுத்து வைத்த வரையறைக்கு அமைய வடசேரி
கோவலராகவும் தென்சேரி கண்ணகியாகவும் நின்று விளையாடுவார்கள். முதன்
முதல் உடைக்கப்படும் கொம்பும் தென்சேரி பக்கம் வெற்றியளிப்பதே மரபாகும்.
தென்னம் ஓலை கட்டப்பட்ட தீமூட்டப்பட்ட பந்தத்தினை போட்டு அதனைச் சுற்றி
வளைந்து பாடல்களைப் பாடி ஆடுவர்.இதன் பின்னர் தென்சேரிக்குரிய கொம்புகள்
கண்ணகியம்மன் ஆலயத்திலிருந்தும் வடசேரிக் கொம்புகள் விநாயகர்
ஆலயத்திலிருந்தும் கொம்புச்சந்திக்கு எடுத்துவரப்படும் அல்லது ஆலயம்
அருகில் இல்லாத இடங்களில் வெளியின் ஒரு பகுதியில் இருந்து எடுத்து
வரப்படும்.
கொம்புகளை இரு சேரிகளைச் சேர்ந்த பட்டாண்டிமார் பயபக்தியுடன் சுமந்து
வந்ததினைத் தொடர்ந்து கொம்புமுறி ஆரம்பமாகும்.அந்த வகையில் முதல்
முதலாக முறிக்கப்படும் கொம்பு கொழுகொம்பு ஆகும்.இதனை விளையாட்டுக்
கொம்பு எனவும் கூறுவர்.கொம்பு அம்மனுக்கே வெற்றியாய் அமையும்
அவ்வேளையில் அனைவரும் சேர்ந்து ஆடிப்பாடி அம்மனை மகிழ்விப்பார்கள்.அதன்
பின்பு நாட்களை நிட்சயித்து கொம்புகளை முறிப்பார்கள்.
கொம்பு பிடித்து முறிக்கும் இடமான செவ்வாய்க்குற்றியின் பக்கத்தே சென்று
விளையாட்டைத் தொடங்குவார்கள்.அங்கு முக்கியமாக
வடம்(கயிறு),அச்சுலக்கை,பில்லி என்பன காணப்படும்.
இப்படியாக தட்டுக்கொம்பு மூன்றும் கூடாரக்கொம்பு ஐந்தும் முறித்து
விளையாடும் வேளைகளில் வென்ற பகுதியினர் அதாவது கொம்பு முறிக்கப்படாமல்
காணப்படும் பகுதியினர் அவ்விடத்திலேயே ஆடிப்பாடி மகிழ்வார்கள்.ஆனால்
ஏடகக் கொம்பு முறிக்கத் தொடங்கினால் வெற்றி பெற்றவர்கள் ஊரை சுற்றி
ஆடும் மரபு காணப்படுகின்றது. பாரம்பரியத் தன்மைகளுடன் ஏழு நாளாக
இடம்பெறும் கொம்புமுறி, இன்று இயந்திர சமூகமயமாக்கலினால் ஒரு நாள்
மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.
வடசேரி தென்சேரியினர் தங்களுக்கென ஏடகங்களை அமைக்கத் தொடங்கி இரு
ஏடகங்களையும் இரு பகுதியினர் கொம்புச் சந்திக்கு கொண்டு
வருவார்கள்.வடசேரி ஏடகம் சிறிது உயர்ந்தும் தென்சேரி ஏடகம் பதிந்தும்
இருக்கும்.இவ்வேளையில் ஏடகத்திற்கு சீலை எறிதல் எனும் பாரம்பரிய நிகழ்வு
இடம்பெறும்.அதனைத் தொடர்ந்து இரு சேரியினரும் ஒருவருக்கொருவர் போட்டி
போட்டுக்கொண்டு சோனை வேலைகளை செய்வார்கள்.பின்னர் இரு ஏடகங்களும்
குறிக்கப்பட்ட நாளில் பள்ளுக்குவளைந்த பின் ஊர்வலம் கொண்டு
செல்லப்படும்.இதன்போது ஊர்மக்கள் அனைவரும் கலந்துகொள்வர்.
ஊர்வலம் வரும்போது மக்கள் வீதிகளின் இரு மருங்கிலும் தோரணங்கள் கட்டி
நிறைகுடம் வைத்து அம்மனையும் சுவாமியையும் வரவேற்பர்.அதனைத் தொடர்ந்து
இரு ஏடகங்களும் கொம்புச்சந்திக்கு ஊரை சுற்றி முடிந்து வந்ததும் இரு
ஏடகங்களும் கோயிலுக்குச் செல்லும்.
ஒவ்வொரு கொம்பும் முறிக்கும் காலத்தில் வரக்கட்டுப்பாடல்கள் வேகமாக
இருக்கும்.இப்படி எடுத்த கொம்பு அன்று முறிக்க முடியாத பட்சத்தில் இதனை
மீண்டும் கோயிலுக்குள் கொண்டு செல்ல மாட்டார்கள்.இரு பகுதியினரும்
பந்தலிட்டு அதனுள்ளே வைத்திருப்பார்கள்.இந்நிகழ்வை தங்குகொம்பு வைத்தல்
எனக் கூறுவர்.கொம்பு வென்றவர்களுடைய ஏடகம் வெற்றிக்கொம்போடு ஊர்வலமாகச்
செல்லும்.இவ்வேளையில் அதிகமான வாரக்கட்டுப் பாடல்களை தோல்வி அடைந்த
பக்கமாக பாடுவது வழமை.
வடசேரியான் கொம்பு எங்கே யெங்கே
மணமுள்ள தழையின் மேலே மேலே.
தென்சேரியான் கொம்பு எங்கே யெங்கே.
செம்பரப் பற்றைக்கு கீழே கீழே ......
என இவ்வாறான பாடல்களை ஒரு சேரியினரை அடுத்த சேரியினரை பழித்தும் தன்
சேரியினரை புகழ்ந்தும் பாடுவர்.
இப்படியாக ஏழு ஏடகக் கொம்பும் விளையாடி முடிந்ததும் பின்னர்
தண்ணீர்க்கொம்பு முறித்தல் நிகழும்.அது அம்மனுக்கே வெற்றியாய் அமையும்.
அதன் பின் இரு சாராரும் குதூகலித்து ஆடி அம்மனுக்கு தங்களது நேர்த்தியை
முடித்த சந்தோசத்தில் இரு சாராரும் தங்கள் பக்கம் வென்ற கொம்புகளை
எல்லாம் ஒன்றாக அனைத்துக் கட்டி தலைகளிலே வைத்து ஊர்வலமாக வருவதுடன்
கொம்புமுறி நிறைவடையும்.




உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|