சிறு துளியில் பெரிய வானம் இரவியின் ஹைகூ!’

பேராசிரியர் இரா.மோகன்

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத ஹைகூ என்று சங்கே முழங்கு”


எனப் பாவேந்தர் பாரதிதாசனின் வழியில் – ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் வாக்கினைப் பின்பற்றி – இமைப்பொழுதும் சோராமல் வாழ்வாங்கு வாழ்ந்தும், தமிழ்ப் பணியாற்றியும் வருபவர் கெழுதகை நண்பர் கவிஞர் இரா.இரவி. மனித நேயமும் முற்போக்குச் சிந்தனையும் அவரது இரு கண்கள் எனலாம். தமிழுக்கோ, தமிழ்ர்க்கோ, தமிழ்நாட்டுக்கோ கேடு என்றால் தமது நெற்றிக்-கண்ணைத் திறப்பது, கொடுமையை எதிர்த்து நிற்பது அவரது வாடிக்கை ; வாழ்க்கை.

புதுவைத் தமிழ்நெஞ்சன் முகநூலில் தமக்குப் பிடித்தமான நிழற்படங்களைப் பதிவு செய்து, அவற்றிற்குப் பொருத்தமான ஹைகூ கவிதைகள் எழுத வேண்டும் என்று போட்டி வைத்தார். கவிஞர் இரவி அப்போட்டியில் கலந்து கொண்ட்தோடு மட்டுமன்றி, ஒரு நிழற்படத்திற்கே ஐந்து கோணங்களில் சிந்தித்து, ஐந்து ஹைகூ கவிதைகளைப் பதிவு செய்து தமது முத்திரையைப் பதித்தார்.

இங்ஙனம் முகநூலில் நிழற்படங்களுக்காக இரவி அவ்வப்போது எழுதிய ஹைகூ கவிதைகளே ஒருசேரத் தொகுக்கப்-பெற்று இப்போது நம் கரங்களில் ‘ஹைக்கூ 500’ என்னும் முழுத் தொகுப்பாகத் தவழ்கின்றன.

“இந்நூலை வாசிக்கும் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். முதலில் மேலே உள்ள படத்தை உற்று நோக்குங்கள். பிறகு ஹைகூ கவிதைகளை வாசியுங்கள். புதிய முயற்சியாகப் படங்களுக்காக எழுதப்பட்ட ஹைகூ கவிதைகள் இவை என்பதை இங்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” எனக் கவிஞரே நூலுக்கு எழுதிய தமது ‘என்னுரை’யில் கோடிட்டுக் காட்டி இருப்பது கருத்தில் கொள்ளத்தக்க-தாகும்.

எனினும், இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பல, மேலே உள்ள நிழற்படங்களைப் பார்க்க நேராமல், வாசிக்கும் நிலையிலும் படிப்பவர் உள்ளங்களை ஈர்த்து ஆட்கொள்ளும் வல்லமை பெற்றனவாக விளங்குகின்றன. இது இரவியின் ஹைகூ கவிதைகளுக்கு வாய்த்திட்ட சிறப்பியல்பு ஆகும்.

நாட்டின் உண்மையான வளர்ச்சி.

நையாண்டி செய்யும் நோக்கத்தோடு ஒரு வெள்ளைக்காரன் What is your culture? என்று கேட்டபோது, ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல்’ ஒரே சொல்லில் நறுக்கான மறுமொழி இது தான் : ‘Agriculture’ இந்தியா வேளாண்மை நாடு என்று பெயர்பெற்றது.

வான்புகழ் வள்ளுவரும் தமது உலகப்பொதுமறையாம் திருக்குறளில் ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ (1032) என்று உழவரை உயர்த்திப் பிடித்திருப்பார் ; ‘உழந்தும் உழவே தலை’ (1031) என்று உழவுத் தொழிலுக்குப் புகழாரம் சூட்டி இருப்பார். ஆனால், இன்றைய நிலையோ முற்றிலும் மாறிவிட்டது. ‘தேசத்திற்குச் சோறுபோட்ட உழவனைக் கண்டுகொள்ள-வில்லை தேசம்! தனியாய் அமர்ந்து தற்கொலைக்கும் சிந்திக்கும் உழவன்! சொந்தங்களும் உதவாத சோகத்தின் உழவன்! இந்நிலையில்,

“உழவன் வாழ்வில்
ஏற்றம் வந்தாலே
உண்மையான வளர்ச்சி!”


எனக் கவிஞர் இரவி, வலியுறுத்துவது மனங்கொளத்தக்கது. உழவன் தற்கொலை என்பது ஒட்டுமொத்தமாக இந்தியர் அனைவரும் வெட்கப்பட வேண்டிய தேசிய அவமானம்!

“நாட்டின் முதுகெலும்பு
முறிவது முறையோ?
உழவன் தற்கொலை!”


என உருக்கமான குரலில் வினவும் கவிஞர், இங்கே ‘அட்சயப் பாத்திரம், திருவோடானது’ எனக் குறியீட்டு மொழியில் உரைப்பது மனங்கொளத்தக்கது. ‘நதிகள் இணைத்தால்/இருக்காது/உழவன் தற்கொலை’ என இக்கொடுமைக்குத் தீர்வும் தருவது சிறப்பு.

வயல்வெளியில் குனிந்து, முதுகு வளைந்து, சேற்றில் நின்று நாற்று நட்டுக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். இக்காட்சி கவிஞர் இரவியின் உள்ளத்தில் தோற்றுவித்த உணர்வு ஓர் அழகிய ஹைகூவாக வடிவெடுத்துள்ளது.

“இருக்கலாம் சேலையில் அழுக்கு
இல்லை மனத்தில் அழுக்கு
நாற்று நடும் பெண்கள்!”


‘நாற்று நடும் பெண்கள் / எல்லாம் அழுக்கு அவர்களிடம் / அவர்கள் பாடலைத் தவிர’ (தமிழில் : தி.லீலாவதி, ஜப்பானிய ஹைகூ, ப.25) என்னும் ஜப்பானிய ஹைகூ கவிதை இங்கே ஒப்புநோக்கி மகிழத்தக்கதாகும்.

முரண் சுவை மிளிர இரவி படைத்துள்ள ஹைகூ ஒன்றும் இவ்வகையில் கருத்தில் கொள்ளத்தக்கது.

“நீங்கள் குனிந்து நட்டதால்
விளைந்தன கதிர்கள்
நிமிர்ந்த்து நாடு!”


இனிக்கும் வாழ்க்கை
அந்தக் குடும்பத் தலைவருக்குக் கைகால்கள் இல்லை; பொருத்தி இருப்பதோ செயற்கைக் கால்களை – என்றாலும் அவர் மட்டுமன்றி, அவரது குடும்பமும் நம்பிக்கை இழக்கவில்லையாம்; வாழ்க்கை வெறுக்கவில்லையாம். அவர்கள் தங்கத்தில் குறை இருந்தாலும், மனத்தில் யாதொரு குறையும் இல்லையாம்; அவர்களின் மனம் சொக்கத் தங்கமாம். வாழ்க்கைப் பயணமும் இயற்கை ரசிக்க இனிதே இயங்கிக் கொண்டிருக்கிறதாம்! காரணம் என்ன தெரியுமா? இதோ, கவிஞரின் மறுமொழி ஹைகூ வடிவில்.

“வருந்தவில்லை இழந்தவைகளுக்கு
மகிழ்கின்றோம் இருப்பவைகளுக்கு
இனிக்கின்றது வாழ்க்கை!”


‘வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவன் இன்னாது என்றலும் இலமே’ (வாழ்தலை இனிதென மகிழ்வதும் இல்லேம்; வெறுப்பால் வாழ்வு இனியதன்று என்று இருப்பதும் இல்லேம்’) என்னும் சங்கச் சான்றோர் கணியன் பூங்குன்றனாரின் கருத்து (புறநானூறு, 193) என இங்கே நினைவுகூறத் தக்கதாகும்.

“உன்னிடம் இல்லாத ஒரு பொருளின்மேல் ஆசை கொள்ளாதே! உன்னிடம் இருக்கும் சிறந்த பொருள்களை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவாய்” (தமிழாக்கம் : ராஜாஜி, ஆத்ம சிந்தனை, ப.60) என்னும் மார்க்கஸ் அரேலியசின் மணிமொழியும் இவ்வகையில் மனங்கொளத்தக்கதாகும்.

ஒரு கையை இழந்தபோதும் நம்பிக்கை இழக்காமல் எவரிடமும் யாசகம் கேட்காமல் உழைத்து வாழும் மாற்றுத் திறனாளிகளைக் கவிஞர் இரவி தம் கவிதைகளில் ஆங்காங்கே உயர்த்திப் பிடித்துள்ளார்.

“கடவுளுக்காக இல்லாவிடினும்
இவருக்கா வாங்குங்கள்
மண் விளக்கு!”

என்பதே அவர் மனிதர்களிடம் முன்வைக்கும் கனிவான பணிவான வேண்டுகோள்!

சின்னஞ்சிறிய குடிசை வீடு தான்; ஆனாலும் மாடமாளிகையில் கூட இல்லாத இன்பம் குடிசை வீட்டில் குடியிருக்கின்றது என்கிறார் கவிஞர் இரா. இரவி. அவரது பார்வையில் குடிசை வீட்டில் இருந்தும் மனத மனம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம் ஒன்று உண்டு. அது இதுதான் :

“யாராக இருந்தாலும்
தலைகுனிந்தே நுழைய வேண்டும்
பயிற்றுவிப்பு பணிவு!”


சின்னஞ்சிறு குடிசையே, ஆனாலும் மனிதருக்கு அவர் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், வீடு, வாசல், தோட்டம், துரவு, வங்கிக்கையிருப்பு எனப் படைப்புப் படைத்தவராக இருந்தாலும் – பணிவு என்னும் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத்தரும் பெருமை உடையது என்பது கவிஞர் இரவியின் கருத்து.

பறவைகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடல்கள் :

கற்றுக்கொள்ளும் மனம் இருந்தால் போதும், பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்வில் இருந்தும் மனிதகுலம் எத்தனையோ பாடல்களைக் கொள்ளலாம்; ஆனால், ஆறறிவு படைத்த மனிதகுலமோ இதுபற்றி ஒருபோதும் சிந்திக்காது – கண்டுகொள்ளாது – தன் மனம்போன போக்கில் வாழ்ந்து வருவது தான் அவலத்திலும் பேரவலம்!

“யானைகள் கூட
வரிசையாக
மனிதர்கள்?”


என்னும் கவிஞர் இரவியின் கூரி கேள்விக் கணை பொருள் பொதிந்த ஒன்று. பறவையாக – விலங்காக – இருந்தாலும், அவற்றின் வாழ்வில் ஓர் ஒழுங்கு இருக்கும் ; கட்டுப்பாடும் கண்ணியமும் இருக்கும். ஆறறிவு படைத்த மனிதனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல், ‘சித்தம் போக்கு தன்போக்கு’ என்ற போக்கிலேயே அணுவளவும் மாறவே மாறாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான்!

‘ஏவுகணைகள் ஏவியது போதும்!’

நன்றி மறக்காமல் ஒருமுறை தனக்கு ரொட்டி தந்த ஏழையோடு சேர்ந்து உறங்கும் நாயைக் காணும்போது கவிஞர் இரவியின் உள்ளத்தில் தோன்றும் புரட்சிச் சிந்தனை இது :

நாட்டில் இங்ஙனம் பாதையையே படுக்கையாகக் கொண்டு வாழ்ந்து வரும் நடைபாதைவாசிகளை எண்ணும்போது –

“நடைபாதையில்
நாயோடு உறங்கும் ஏழை
ஏவுகணை ஏவியது போதும்!”


கவிஞரின் கண்ணோட்டத்தில், வறுமையை ஒழிப்பதாகக் காலங்- காலமாக முழங்கி வரும் அரசியல்வாதிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்து இது! எனவே,

“ஏவுகணைகள் ஏவியது போதும்
முதலில் ஒழியுங்கள்
வறுமையை!”

என அறுதியிட்டு பறைசாற்றுகிறார் கவிஞர் இரவி! பிறிதோர் இடத்திலும்,

“ஏவியது போதும் ஏவுகணைகள்
நிறைவேற்றுங்கள்
அடிப்படைத் தேவைகள்!”

எனக் கவிஞர் அறிவுறுத்துவது நோக்கத்தக்கது.

உதவிடும் உள்ளம் வேண்டும்

“உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம்
மனம் கவலையற்றிருப்பது இரண்டாம் இன்பம்
உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாம் இன்பம்”


என மொழிவார் பேராசிரியர் மு.வரதராசனார். அவரது மணிமொழியினை வழிமொழிவது போல் கவிஞர் இரவியும்,

“சிறந்தது
வழிபாட்டை விட்
உதவுதல்!”


எனக் கூறுவது மனங்கொளத்தக்கது. ‘நற்பணிகள் செய்தால் / அவசியம் இல்லை / ஆலயம் செல்ல ’ என்னும் கவிஞரின் முற்போக்குச் சிந்தனையும் இங்கே நினைவுகூறத்தக்கது.

‘கொடுப்பதில் இன்பம் உண்டு’ – ‘உதவுவதில் உயிர்ப்பு உண்டு’ என்பது கவிஞரின் திண்ணிய கருத்து. இக்கருத்தின் வெளிப்பாடே,

“பிறருக்கு
உதவுவது
மனிதனுக்கு அழகு!”


என்னும் ஹைக்கூ கவிதை,

‘உதவி செய்ய அறிவு தேவையில்லை. இதயம் இருந்தால் போதும்’ என்னும் பொன்மொழியின் ஹைகூ வடிவம் இது.

“உதவும் உள்ளம்
இருந்தால் போதும்
உதவலாம்!”


ஆங்கிலத்திலும் ‘Helping Tendeny’ என்ற சொற்றொடரே வழக்கில் உள்ளது.

‘பெயர் வைத்த்து யாரோ?’

‘தரணியில் முதல் இசை தமிழிசையே!’ எனத் தமிழிசைப் புகழாரம் சூட்டும் கவிஞர் இரவி,

“பெயர் வைத்தது யாரோ?
சரியான ஆட்டத்திற்கு
தப்பாட்டம் என்று?”


என வினவுவது சுவையின் உச்சம்!
பெண் என்பவள் வல்லினம்!

“நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின்
நன்மை கண்டோம் என்று கும்மியடி!”

(பாரதியார் கவிதைகள், ப.499)

என உணர்ச்சிப் பொங்கப் ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ பாடினார் கவியரசர் பாரதியார். அவரது வாழ்வில் கவிஞர் இரவி.

‘ஆணிற்குப் பெண்
சளைத்தவள் அல்ல
என்றே பறையடி!’


எனப் பறையறைகிறார். கவிஞர் இரவியின் கண்ணோட்டத்தில், ‘பெண் என்பவள், மெல்லினம் அல்ல, வல்லினம்!’ கரங்கள் இரண்டு கொண்டு பணிகள் ஆயிரத்தை அசராமல் பார்க்கும் அவள் யாருக்கும் சளைத்தவள் அல்ல, எதற்கும் களைத்தவளும் அல்லள்!

தாயில்லாக் குழந்தை ஒன்று அதுவும் பெண் குழந்தை; அக்கம் பக்கத்தில் உதவிட உற்றார் உறவினர் என யாரும் இல்லை. இளமையில் கொடிய வறுமை; தானே சமைத்துப் பசியாறே வேண்டிய அவல நிலை. உலை கொதித்து, சோறு பொங்கி, உண்ண வேண்டிய ஆதரவற்ற அச்சிறுமியின் துயரக் காட்சியினைக் கண்ட கவிஞரின் உள்ளத்தில் இருந்து ஊற்றெடுத்து வந்த ஹைகூ இது:

“வேண்டாம் ஊதுகுழல்
வீசிவிட்டு
ஏந்து பாடப் புத்தகம்!”

பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்ணுக்கு கவிஞர் இரவி விடுக்கும் வேண்டுகோள் இதுதான்:

“அடுப்பறையில்
முடங்கியது போதும்
அகிலம் காண வா!”


காலில் எதற்கு வேற்றுமை?

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் வாழ்வையும் வாக்கையும் தம் வாழ்வில் பொன்னை போல் போற்றி நடந்து வருபவர் கவிஞர் இரவி. அவரைப் பொறுத்தவரையில் ‘வலது காலை எடுத்து வைத்து வா’ என அழைப்பதில் சற்றும் உடன்பாடு இல்லை’

“வலது கால் இடது கால்
வேண்டாம் வேற்றுமை
இரண்டும் நம் காலே!”


என்பது கவிஞர் இரவியின் முடிந்து முடிவான வழிகாட்டல் ; வலியுறுத்தல்.

அறம் வளர்ப்பு

கவிஞர் இரவியின் கருத்தியலில் மரம் வளர்ப்பு என்பது அறம் வளர்ப்பு ; மரங்கள், மழைக்கான வரவேற்புத் தோரணங்கள் ; மரங்களில் தெரிவது தேவதைகள்! பசுமையான மரங்களைப் பார்க்கின்றபோது கவிஞரின் கண்களும் உள்ளமும் அடையும் மகிழ்ச்சிகளும் மலர்ச்சிக்கும் அளவே இல்லை!

“பார்க்க மகிழ்ச்சி
விழிகளுக்கு குளிர்ச்சி
மரங்களின் மலர்ச்சி”


என்பது கவிஞர் இரவியின் அனுபவ மொழி; ஒப்புதல் வாக்குமூலம்.

வயிற்றில் பசியோடு தெருவோரச் சுவரில் பசுமை ஓவியத்தினை – சோலையை – வரைந்து கொண்டிருக்கும் ஓவியனுக்குச் சார்பாக இரவி எழுப்பி இருக்கும் கவிக்குரல் இது.

“மரம் வளர்க்கச் சொன்னோம்
செவி சாய்க்கவில்லை
மரம் வரையவாவது விடுங்கள்!”

இரவி படைக்கும் புதுமொழி

பட்டங்கள் பற்பல பெற்று, உயரிய பொறுப்புக்களில் வீற்றிருக்கும் பொறியாளர்களும் தோற்றுப்போகும் ஓர் இடம் உண்டு. அவர்களால் கூட இவ்வளவு நேர்த்தியாக, கைவினைக் கலைத்திறனோடு கட்டமுடியாது. அது எது தெரியுமா? குருவியின் வீடு – கூடு மழைக்கு ஒழுகாது – வெயிலும் படாது – அங்கே! எனவே, நாட்டில் மக்கள் நாவில் வழங்கி வரும் பழமொழியையே புத்மொழியாக மாற்றி இங்ஙனம் கூறுகின்றார் கவிஞர் இரவி.

“வீடு கட்டிப் பார்!
பழமொழியை மாற்றுங்கள்;
குருவிக்கூடு கட்டிப்பார்!”


இங்ஙனம் இரவியின் ஹைகூ கவிதைப் புனைதிறன் குறித்துப் பக்கம் பக்கமாக எழுதலாம். மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருக்கலாம். எனினும், ‘சுருங்கச் சொல்லல்’ என நன்னூலார் குறிப்பிடும் நூலழகின் நெறி நின்று, கவியரசர் கண்ணதாசனின் மொழிகளில் கூறுவது என்றால் இப்படிச் சொல்லலாம்.

“சொல்லில் வந்தது பாதி -
நெஞ்சில் ததும்பி நிற்பது மீதி”
ஆம்; ‘சிறு துளியில் / பெரிய வானம் / (இரவியின்) ஹைகூ!’


ஹைக்கூ 500 !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் !
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை – 625 021.

வெளியீடு வானதி பதிப்பகம் !



‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்