திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 5)
கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி
மனித
வாழ்க்கை வணங்குதல்,இணங்குதல்,வழங்குதல் என்ற மூவகைப் பண்புகளில்
அடங்கியுள்ளது. இதில் வழங்குதல் பண்பு கவியரசரின் பாடல் வழியாகப்
பரிமளிக்கிறது. கர்ணனின் வள்ளன்மையைப் பாராட்டி இலக்கிய உவமைகளோடு ஒரு
பாடலைத் தந்துள்ளார்.
“மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்,
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்,
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்,
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்.”
மழை:
ஆம்! மழை வானம் வழங்கும் அளப்பரிய கொடை; இதற்கென்றே வள்ளுவப் பேராசான்
தனியொரு அதிகாரத்தையே வழங்கியுள்ளார்.
விசும்பின் துளி வீழின் அல்லால்
பசும்புல் தலை காண் பரிது குறள்
மாமழையை சிலப்பதிகாரம் போற்றும் :
மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்,
மேல் நின்று தான் சுரத்தலான். (சிலப்.மங்கல வாழ்த்து.-1.வரிகள்
7-9)
வயல்:
மழை பொழிய,நீர் நிறைய,வயல் செழிக்கும்;
உழவன் வாழ்வு சிறக்கும்.இதனையே,ஔவையாரும்,
வரப்புயர நீர் உயரும்;
நீர் உயர நெல் உயரும்;
நெல் உயரக் குடி உயரும்;
குடி உயரக் கோன் உயரும்.
பசு:
பசு இந்துக்களின் தெய்வ வழிபாட்டில் முதன்மையானது என்பதை நாமறிவோம்.பசு
வழங்கும் பாலின் வெண்மையைப் போல்,மக்களின் உள்ளமும் வெள்ளை; ஐம்பெரும்
ஆற்றல்களைப் போல் பசு கொடுக்கும் ஐவகைப் பொருள்களும் (பால்,தயிர்,நெய்,கோமயம்,சாணம்.)
ஆண்டவனும் ஏற்றுக் கொண்டவை; அடியார்களும் பின்பற்றியவை. எனவே, கவிஞர்
பாடிய மூவகைப் பண்புகளும் இலக்கியப் பின்னணியிலேயே அமைந்துள்ளன.
மன்னவர் பொருள்களைக் கைகொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார்;
மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்
மற்றவர் எடுத்துக் கொள்வார்;
வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல்
வைத்தவன் கர்ண வீரன் ;
வறுமைக்கு வறுமையை வைத்தவன் மாமன்னன்
வாழ்கவே வாழ்க! வாழ்க!
வழங்குதல் என்பது குலம் தரும் பண்புப் பயிற்சி. அதனை, ஔவையார்,
சித்திரமும் கைப் பழக்கம்,செந்தமிழும் நாப் பழக்கம்;
வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்.நித்தம்
நடையும் நடைப் பழக்கம்;
கொடையும் தையும் பிறவிக் குணம்.
என்பார். ஆம்! வழங்கும் தன்மைக்குப் பொருளும் வேண்டும்,மனமும் வேண்டும்
அல்லவா?
செல்வத்துப் பயன் ஈதல் என்று புறநானூறு பேசும்.
உண்பது நாழி,உடுப்பது இரண்டே
பிறவும் எல்லாம் ஓரோக்கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேன் என்னே தப்புந பலவே! புறம்-189; 5-8
பாடல் வரிகள்:
நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்,
நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நற்பொருளைத் தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்,
தினம் கொடுத்துச் சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரமே!
கொடுத்துச் சிவந்தது கர்ணனின் கரங்கள் என்பதைச் சொல்ல வந்த கவியரசர்
பெண்களின் கண்களும்,புலவர்களின் கால்களும், ஞாநியரது நெஞ்சமும்கூட
சிவந்த காரணத்தை ஓர் இலக்கிய ஒப்புவமையோடு பாடியிருப்பதை நம்மால்
அவதானிக்க முடிகிறது.
இலக்கிய வரிகள்:
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி
கல்வியில் தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்கள்
தொல்பல நூல் ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம்
அனுதினமும் ஈந்து சிவந்தது மால் சீதக்காதி இருகரமே.
வள்ளல் சீதக்காதியின் வள்ளன்மையை கர்ணனின் கொடையோடு ஒப்பிட்டு,
பொருளேதும் மாறாமல் சற்றே வார்த்தைகளை இடம் மாற்றிப் போட்டு நம்மை
இலக்கியத் தடாகத்துக்குள்ளே இளைப்பாற வைக்கிறார்.
பாடல் வரிகள்:
என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்
என்று அவர்கள் எண்ணுமுன்னே,
பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான்
போதாது போதாது என்றால் இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன்
தன்னைக் கொடுப்பான் தன்னுயிரும் தான்
கொடுப்பான் தயாநிதியே!
ஆற்றுப்படை நூல்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை நூலில்,காணப்படும்
கீழ்க்காணும் வரிகள் கவிஞரின் பாடலுக்கு இலக்கிய ஒப்புமை கூட்டுகிறது.
பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை
நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு,
தாங்கரும் மரபின் தன்னும் தந்தை
வான்பொரு நெடுவரை வளனும் பாடி,
முன்னாள் சென்றனமாக,
(சிறுபாணா-125-129)
பெய்யும் மழையைப் போன்று, பாணர்க்கு அள்ளி வழங்கும் நல்லியக் கோடனைக்
காண விரும்பி, அவனையும் அவனுடைய தந்தை வளனின் செல்வத்தையும் போற்றிப்
பாடி சில நாட்களுக்கு முன் சென்றோம்.இரவலர்க்கு தன்னையும் ஈந்து ஈகையின்
மாண்பைப் போற்றுபவன் என்பதை உள்ளினோம்.
பருவமும் உருவமும்:
மனித வாழ்க்கையில் மலர்ந்திடும் பருவங்களை மழலை கொஞ்சும் மணிவாய்ப்
பருவம், நாலும் தெரியும் நடுத்தரப் பருவம், நடப்பதைக் கணிக்கும் பருவம்,
நடுங்கும் பருவம் என நான்காகக் காண்கிறார் கண்ணதாசன். இதில் வாலிபப்
பருவமே வாழ்க்கையில் வளமை காணும் பருவம். இப் பருவத்தில் ஆணும் பெண்ணும்
இல்லற வாழ்வில் இனிதே புகுதல் இன்பம் நல்கும்.
புவியிடைப் பிறப்பதும் கவினுறு பள்ளியில் காலடி வைப்பதும்,கல்லூரிப்
படியேறுவதும் எனப் புதியன புதியன பலவகையாயினும் “மங்கல மாண்புறு மனையறம்"
புதியன யாவினும் புகழ் பெரும் இன்பமாகக் கவியரசர் கருதுகிறார்.
தனித்தனி இயக்கம் கொண்டிருந்த ஆணும் பெண்ணும் தம்பதியராய் முயங்கும்
பொழுது சார்பியக்கம் கொண்டோராய் மாறுகின்றனர் என்பதை உடல் உறுப்புகளின்
செயல்வழி தெளிவுற விளக்குகிறார்.
கண்கள் இரண்டு; காண்பன ஒன்று.
செவிகள் இரண்டு; தேர்வன ஒன்று.
நாசி இரண்டு; நாடுவது ஒன்று.
கைகள் இரண்டு ;கடமைகள் ஒன்று.
கால்கள் இரண்டு;நடப்பவை ஒன்று.
அங்கம் இரண்டென ஆக்கிய போதும்
செய்கை ஒன்றெனத் திகழ்வது உடம்பு!
தொலைநோக்கும் துல்லியமும் அவரது இக் கவி வரிகளில் கொட்டி கிடக்கிறது!
சரி,இவ் விலக்கியத்துக்கு ஏற்ற பாடலை எந்தப்படத்தில் எழுதினார் என்று
தானே கேட்கிறீர்கள்?
பணமா பாசமா ங்கிற படத்துல, மெல்ல மெல்ல ..எனத் தொடங்கும் இப்பாடலில்
இலக்கியக் கவித்திறனைக் காணலாம்.எதைச் சொல்றது எதை விட்றது?
கடைசி வரிகளில் ,
ஒன்றிலிருந்தே ஒன்று வரும்,
அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கி விடும்,
ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை,
நாம் ஒன்று , இரண்டு என்பது என்றுமில்லை.
உடலியக்கத்தையும் கலவி முயக்கத்தையும் வேறெந்தக் கவிஞனும் தன் பாடலில்
இப்படிக் கொண்டு வந்திருப்பார்களா என்பது ஐயத்திற்குரியதே!.
தொடரும்............

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|