இறைவன் இருப்பது எங்கே?

பேராசிரியர் இரா.மோகன்

‘கடவுள்’ என்கிற சொல்லைப் போல் சர்ச்சிக்கப்படும் சொல் பிறிதில்லை. அதைப் போன்று சாந்தியும் நிம்மதியும் தருகிற சொல்லும் இல்லை” (இலக்கியப் படகு, ப.45) என்பது எழுத்தாளர் திருலோக சீதாராமின் மணிமொழி.

கடவுள் எங்கே இருக்கிறார்? “ஆலயங்களிலும், கோயில்களிலும், மசூதிகளிலும் மட்டுமே ஆண்டவன் இருக்கிறான் எனில், ஆகாயத்திலும் பூமியிலும் அலைகடலிலும் இருப்பது யார்?” என்பது கபீர் பெருமானின் பொருள் பொதிந்த கேள்வி.

கடவுள் எப்போது வருவார்? “கடவுள் நம்மிடம் அடிக்கடி வருகிறார், ஆனால் பெரும்பாலும் அந்த நேரங்களில் நாம் வீட்டில் இருப்பதில்லை” என்கிறது ஃபிரான்ஸ் நாட்டுப் பழமொழி ஒன்று.

கடவுள் எப்படிப்பட்ட இயல்பு கொண்டவர் தெரியுமா? “மரத்தடியில் ஆளில்லாத போது தான், ஆண்டவன் தேங்காயை விழச் செய்கிறான்” என்கிறது ஓர் அரேபியப் பழமொழி.

“உண்மையில் கடவுள் இருக்கத்தான் செய்கிறாரா?” என்ற சிக்கலான வினாவுக்குச் சிந்தனையாளர் வால்டேர் தரும் செவ்விய விடை இது: “கடவுள் இருக்காவிட்டால், அவரை நாம் உண்டாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்”.

“கடவுள் தம்மை நோக்கி வருபவனிடம் தாமே செல்கிறார்” எனத் தெளிவுபடுத்துகின்றது ஒரு ரஷ்ய நாட்டுப் பழமொழி.

சிந்தனைக்கு விருந்தாகும் சூஃபி கதை ஒன்று:

சூஃபி ஞானி ஒருவர் புனித மெக்கா நகர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

உச்சி வெயில் தகித்தது. அவரால் நடக்க முடியவில்லை. ஒரு மரத்தின் நிழலில் படுத்தார்; நீண்ட தூரம் நடந்த களைப்பினால் அப்படியே கண் அயர்ந்து விட்டார்.

சிறிது நேரத்தில் ஓர் இளைஞன் வந்து அவரைத் தட்டி எழுப்பினான்.

கண் விழித்துப் பார்த்தார் சூஃபி ஞானி.

“பெரியவரே! பார்த்தால் ஒரு சூஃபி ஞானி போல் தெரிகிறீர்கள். ஆனால் அறிவே இல்லாமல் அல்லாஹ் இருக்கும் திசை நோக்கிக் கால்களை நீட்டிப் படுத்திருக்கிறீரே? புனித மெக்காவை நோக்கித் தலை வணங்கும் திசையல்லவா நீர் கால்களை நீட்டியிருப்பது? இது அல்லாஹ்வை அவமதிக்கும் செயலாகும் என்று உமக்குத் தெரியாதா?” என்று கோபமாகக் கேட்டான் அந்த இளைஞன்.

சூஃபி ஞானி அவனை அமைதியாகப் பார்த்தார்.

“தம்பி! நான் ஒரு சாதாரண மனிதன்தான். இறைவன் எந்தத் திசையில் இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது. அவன் எந்தத் திசையில் இல்லை என்று நீ நினைக்கிறாயோ, அந்தத் திசை நோக்கி என் கால்களைத் திருப்பி விடு!” என்றார்.

இளைஞன் அப்போது தான் யோசித்தான்.

‘இறைவன் இல்லாத திசை எது? எல்லாத் திசைகளிலும் தான் இருக்கிறான். அப்படியானால் இந்தப் பெரியவரின் கால்களை எந்தத் திசை நோக்கித் திருப்புவது?”

நெற்றியில் அடித்தது போன்று நிமிர்ந்தான் இளைஞன்.

‘இறைவன் மனிதனுக்குத் தலையைப் படைத்தது போல் தான் கால்களையும் படைத்துள்ளான். இந்த இரண்டு உறுப்புக்களில் எது உயர்ந்தது? எது தாழ்ந்தது? இறைவன் கோபமடைவது எதில்?’

இளைஞன் நிமிர்ந்தான்.

அப்போது சூஃபி ஞானி, “அன்பனே! நான் ஒரு சூஃபி தான். நாங்கள் பாவம் எது, புண்ணியம் எது என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. ஆனால் உள்மனம் ஏற்காதவற்றைச் செய்யக்கூடாது என்போம். இது தான் சூஃபி தத்துவம்!” என்றார்.

“என்னை மன்னித்து விடுங்கள் சூஃபி அவர்களே!” என்றான் இளைஞன்.

முத்தாய்ப்பாக, கவிஞாயிறு தாராபாரதியின் வைர வரிகள்:

“கிழக்கோடு கைகுலுக்கு!
மேற்கோடு புன்னைகபுரி!
வடக்கோடு சேர்ந்து நட!
தெற்கோடு கூடிஉண்!”
(தாராபாரதி கவிதைகள், ப.82).

இங்ஙனம் ‘நேச மனங்களுடன் நெசவு செய்து’ கூடி வாழ்ந்தால் – இறைவன் உன் பக்கத்தில் – உன்னுடன் – உன்னில் – எப்போதும் இருப்பான்!.

 



‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்