பண்டைத் தமிழர் கண்ட இல்லற நாகரிகம்
பேராசிரியர் இரா.மோகன்
புதியவராய்
இல்லம் வருவார் யாராக இருப்பினும், அவரை இன்முகத்தோடு வரவேற்று
விருந்தோம்புதல் தமிழர்களின் இல்லற மரபு ஆகும். மாலைப் பொழுதில்
வீட்டின் கதவைச் சார்த்துவதற்கு முன்னர், ‘விருந்தினராய் வெளியில்
நிற்பார் எவரேனும் உண்டோ?’ எனக் கேட்டுச் சார்த்தல் பண்டைப் பழக்கம்
ஆகும். இதனை நன்னாகையாரின் குறுந்தொகைப் பாடல் ஒன்று,
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளிரோ எனவும்…” (118)
எனக் குறிப்பிடும். மாலையில் வராமல், நேரம் கழித்து இரவுப் பொழுதில்
வந்தாலும், வந்த விருந்தினருக்கு உவந்து உணவு படைக்கும் இயல்பு கொண்டவள்
தலைவி.
“அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே” (142)
என இடைக்காடனார் தம் நற்றிணைப் பாடலில் தலைவியின் கடமைப் பற்றினைப்
போற்றிக் கூறுவார். இங்ஙனம் பழந்தமிழர் இல்வாழ்க்கையில் விருந்தோம்பல்
சிறந்த கடமையாக விளங்கியது. விருந்தோம்பும் பொறுப்பு, இல்லறத்
தலைவியாகிய மனைவியையே பெரிதும் சார்ந்திருந்தது.இதனைச் சிறப்பாக
வெளிப்படுத்தும் முறையில் நற்றிணையில் இடம்பெற்றுள்ள மாங்குடிகிழாரின்
பாடலை ஈண்டுக் காணலாம்.
பரத்தை வீட்டிற்குச் சென்று தங்கியிருந்து திரும்பிய தனது தலைவனை
எதிர்கொள்ளாமல் வாயில் மறுத்து ஊடல் கொண்டாள் ஒரு தலைவி. தலைவனோ அவளது
ஊடலைத் தணிக்கும் வழிவகை அறியாமல் – வீட்டினுள் நுழைய முடியாமல் –
திகைத்து நின்றான். இந்நிலையில் எதிர்பாராமல் விருந்தினர் ஒருவர்
வீட்டிற்கு வந்தார். அவர் வரக் கண்டதும், தலைவன் அவரை உடன் அழைத்துக்
கொண்டு வீட்டினுள் நுழைந்தான். புதியவர் யார், எப்போது வரினும் அவரை
இன்முகம் கொண்டு வரவேற்பதையும், குடும்பத்தில் உள்ள குழப்பத்தை –
கணவரோடு கொண்ட பிணக்கை – வந்த விருந்தினருக்குப் புலப்படுத்தாமல் நடந்து
கொள்ள வேண்டும் என்பதையும் கடமையாக உணர்ந்தவள் தலைவி. ஆதலின்,
விருந்தினர் வருவதைக் கண்டதும் தனது ஊடலை மறந்து, கணவரோடு கொண்ட
வெறுப்பையும் மறைத்துக் கொண்டு, முகமலர்ந்து இன்சொல் கூறி வரவேற்றாள்;
அவருக்குச் சமைத்து உணவு படைக்கும் கடமையில் முனைப்புடன் ஈடுபடலானாள்.
தன்னுடன் கொண்ட ஊடலை அறவே மறந்து, புன்முறுவல் பூத்த முகத்தோடு தலைவி
இவ்வாறு அன்புருவாக மாறியதைக் கண்ட தலைவன், இத்தகைய விருந்து மேன்மேலும்
வந்து, ஊடல் தணித்து மகிழ்விக்க வேண்டும் என்று விரும்பினான்.
“சிறிய மோதிரம் அணிந்த மெல்லிய விரல்கள் சிவக்கும் படியாக வாழையிலையின்
பருத்த அடிக்காம்பினை அறுத்துத் திறம்படி அமைத்து, புகையுண்ட கண்களோடு,
அழகிய பிறை போன்ற நெற்றியில் தோன்றிய சிறிய நுண்ணிய வியர்வைத் துளிகளைத்
தனது முன்தானையின் நுனியால் துடைத்துக் கொண்டிருக்கிறாள் தலைவி.
நம்முடன் ஊடல் கொண்டிருந்தாலும் அதனை மறந்து இவ்வாறு சமையலறையில்
கடமையில் முனைந்திருக்கிறாள் அவள். இத்தகைய ஒரு நல்ல நிலையை ஏற்படுத்தி
உதவிய விருந்து எமக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்க வேண்டும் என
விரும்புகிறேன். இவ்வாறு வந்தால், ஊடலால் சினம் கொண்ட அவளது கண்களில்
சிவப்பு இல்லாமல் மறைந்து, சிறிய கூரிய பற்கள் தோன்றப் புன்முறுவல்
செய்யும் முகத்தினை நான் காணப் பெறுவேன்” என மகிழ்ந்து கூறுகிறான்
தலைவன். அவனது கூற்றினைத் தன்னகத்தே கொண்ட நற்றிணைப் பாடல் வருமாறு:
“சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப
வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகையுண்டு அமர்த்த கண்ணள் தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகில் தலையின் துடையினள் நப்புலந்து
அட்டி லோளே அம்மா அரிவை:
எமக்கே வருகதில் விருந்தே; சிவப்பு ஆன்று
சிறியமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண் கம்மே” (120)
கணவருடன் ஊடல் எவ்வளவு இருந்த போதிலும் தனது இல்லறக் கடமைகளில் சிறிதும்
வழுவாமல் நடந்து கொள்ளும் பண்டைத் தமிழ்ப் பெண்டிரின் மாண்பினை –
பழந்தமிழர் கண்ட இல்லற நாகரிகத்தினை – மாங்குடிகிழார் இப் பாடலில்
படம்பிடித்துக் காட்டி இருக்கும் திறம் நனி நன்று. “எச் சூழலிலும்
விருந்து எதிர்கோடல் பண்பு இங்குச் சொற்சித்திரமாய்க் காட்டப்பட்டுள்ளது
குறிப்பிடத்தகும் சிறப்பாகும்” (நற்றிணை: மக்கள் பதிப்பு, ப.158) எனப்
பேராசிரியர் கதிர்.மகாதேவன் இப் பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில்
கூறியிருப்பது மனங்கொளத் தக்கதாகும்.
‘தமிழாகரர்’
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|