வெறியென உணாந்த......
அனலை ஆறு இராசேந்திரம்
குன்றுகள் சூழ்ந்த
குறிஞ்சி நிலப்பகுதியைச் சேர்ந்தவன் தலைவன். அவன் காடும் மேடும், கல்லும்
முள்ளும், ஆறும் சேறும், பாம்பும் தேளும், பயங்கர விலங்குகளும் சொந்தம்
கொண்டாடும் பாதையூடு வந்து தலைவியை இரவுக்குறிக்கண் சந்திக்கும் வழக்கம்
கொண்டிருந்தான், உயிரினும் மேலாய்த் தலைவனைக் கருதியிருந்த மயிலியளாகிய
தலைவி சந்திப்பு வேளைதோறும் பேருவகை கொள்வதும், பின் வழியிடத்தே சென்று
வரும் வேளைதோறும் அவனுக்கு நிகழக்கூடிய கேடுகளை நினைத்து வருந்துவதுமாய்க்
காலங்கழித்தாள்.
நாளும் பொழுதும் தலைவன்
உடல் உயிருக்கு ஏற்படக்கூடிய ஊறுகளை எண்ணி அஞ்ச அஞ்ச, தலைவி மேனி கொஞ்சம்
கொஞ்சமாய் வேறுபாடடையத் தொடங்கிற்று. இளவாழைக் கன்றுபோற் செழிப்புடன்
திகழ்ந்த அவள், என்பும் தோலும் மட்டும் கொண்டிழைத்த உருவத்தளாய்த்
தோன்றலானாள். பருவத்தின் வாசலிலே நின்ற பைங்கொடி குருதிச்சோகை நோய்
கொண்டவள்போல் விளங்கினாள்.
மகளின் கோலம் கண்டு துணுக்குற்றாள் அன்னை. பருவ மங்கையர்க்கு
காமத்தாலுண்டாகும் பசலை நோய் அது என்பது அறியாளாய அவள், மகளைப் பேய்
பிடித்து நலிவறுத்துவதாக எண்ணினாள். குறிகேட்டு நிகழ்ந்தது அறியும்
பொருட்டு முருக பூசனை செய்பவனே வேலனிடம் மகளை அழைத்துச் சென்றாள். அவன்
கழுங்கு எனப்படும் காயை சுழற்றிப் போட்டு, எண்ணிப் பார்த்தவனாய் 'பேய்
பீடித்தனால் விளைந்தது இந்நோய்' என்றான்.
பேயோட்டும் சடங்கான வெறியாட்டு எடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத்
தொடங்கினாள் அன்னை.
இந்நிலையின், இரவுக்குறிக்கண் வந்து நின்ற தலைவனை, தோழியுடன் சென்று
சந்தித்தாள் தலைவி. சிறிது, அப்பால் நின்ற தலைவன் காதுகளில் நன்கு
விழுமாறு பின்வருமாறு (தோழிக்குச்) சொல்வாளானாள்.
'தோழி! தாங்கிக் கொள்ள முடியாத பிரிவுத் துன்பத்தை நாம் அடைந்தாலும்,
வெறியாட்டு எடுத்தலே எனது நோயைத் தீர்க்கும் வழியென்று தெளிந்த பூசாரி,
அந்நோயைப் போக்க முடியாது திண்டாடும் அறியாமையை அன்னை காண வேண்டும்.
அதன் பொருட்டு, மலைச்சாரின்கண் விளையும் பெண்யானையின் தும்பிக்கைபோற்
தூங்கும் திணைக்கதிர்களை உண்ணும் கிளிகளை ஓட்டும் குறிப்பெண்ணின்
கையிலுள்ள (குளிர் என்னும்) குருவிகடிகருவி சிலம்பைப் போல் ஒலிசெய்யும்
சோலைகள் விளக்கும் மலைநாடனாகிய தலைவன் இன்மேல் இரவுப் போதில் இங்கே
வாராதிருப்பானாக!'
தலைவன் வாராதிருக்குங்கால் பிரிவுத் துன்பம் முற்றி, பசலை நோய் மிகும்.
ஆதலின் தாய் 'நோய் பேயினால் ஏற்பட்டது அன்று. அது காமத்தாலுண்டானது'
என்பதறிந்து தலைவனை மணந்து வாழ வகைசெய்வாள் என்னும் கருத்தோடு 'தலைவன்
வாரற்க' என்றாள் தலைவி.
தன்னலத் தலைவி இவளின் வாய்மொழிகளை அழகிய கவிச் சித்திரமாகத் தீட்டித்
தந்தார் புலவர் ஈழத்துப் பூதந்தேவனார் அவர்கள்.
வெறியென உணர்ந்த வேலன் நோய்மருந்து
அறியா னாகுதல் அன்னை காணிய
அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரற்
பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல்
உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே
சிலம்பிற் சிலம்பம் சோலை
இலங்குமலை நாடன் இரவி னானே.
குறுந்தொகை - 360
அன்னையிடம் நோய்க்கான காரணத்தை மறைத்தும், அவள் வெறியாட்டெடுத்தலை
விலக்காது விட்டும், தலைவன் தன்னைச் சந்திப்பதைத் தடுத்தும் தங்கள்
இருவர்க்குமிடையே விரைந்து மணவினை நிகழ வழிசமைக்கும் தலைவியின் கூர்ந்த
மதியும் செயற்றிறனும் போற்றற்குரியனவாகும்.
குறி பார்த்தலும் சாமியாடுதலும் பேயோட்டுதலும் இரண்டாயிரம் ஆண்டுகளினும்
மேலாக ஈழத்திலும் தமிழகத்திலும் வழங்கத்திலுள்ளன என்னும் வரலாற்று உண்மை
இப்பாடலால் உறுதிப்படுத்தப்படுகிறது.
analaiaraj@hotmail.com
|