அல்குல் என்றால் என்ன?

திருத்தம் பொன்.சரவணன்.

முன்னுரை:

முதலில் இக் கட்டுரைக்கு ' அல்குலும் அகராதிகளின் அரைவேக்காட்டுத் தனமும் ' என்றே பெயரிட நினைத்தேன். காரணம்
, அல்குல் என்ற இச் சொல்லுக்கு இன்றைய தமிழ் அகராதிகள் கூறும் அரைவேக்காட்டுத் தனமான பொருள் ஆகும். சிறிதளவும் தமிழ்த் தாயின் நினைப்பின்றி நேர்மையின்றி அகராதிகள் பொருள் கூறி இருக்கும் விதம் மிக மிக இழிவானது; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அல்குல் என்ற சொல்லுக்கு இன்றைய அகராதிகள் பொருள் கூற முனைந்து எவ்வாறு தமிழின் மானத்தைக் காற்றில் பறக்க விட்டுள்ளன என்பதைப் பற்றியும் அச் சொல்லின் உண்மையான பொருளையும் இங்கே காணலாம்.


தற்போதைய பொருள்கள்:

அல்குல் என்ற சொல்லுக்கு இன்றைய அகராதிகள் கூறும் பொருட்கள் இவை தான்:

சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி: பெண்குறி.
பேப்ரிஸியஸ் இணைய அகராதி: பெண்குறியின் மேல்பாகம்
, பக்கம், அரை.
கழகத் தமிழ்க் கையகராதி: பெண்குறி
, பக்கம்.
வின்ஸுலோ இணைய அகராதி: பெண்குறியின் மேல்பக்கம்
, மலைப்பக்கம், நிதம்பம்.

அகராதிகளின் அரைவேக்காட்டுத் தனம்:

அகராதிகள் தாமாகத் தோன்றியவை அல்ல. மெத்தப் படித்த மனிதர்களால்
/ மனிதரால் இயற்றப் பட்டவை. தற்கால மாந்தருக்கும் வருங்கால மாந்தருக்கும் சொற்களின் சரியான பொருளைக் கூறுவது அகராதிகளின் தலையாய வேலை. அத்துடன் ஒரு மொழியின் பெருமையினைக் காப்பதிலும் அகராதிகளுக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதால் ஒரு சொல்லுக்குப் பொருள் கூறும்போது சில அடிப்படை மனித சமுதாய விதிகளை அகராதிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இவ் விதிகள் எவையும் இச் சொல்லுக்குப் பொருள் கூறும்பொழுது பின்பற்றப் படவில்லை என நன்றாக்வே தெரிகிறது.

மனித சமுதாய விதிகள் ஒருபுறம் இருந்தாலும் தமிழ்ப் புலவர்களின் உயர்ந்த உள்ளம் கூடவா அகராதி இயற்றியோருக்கு விளங்கவில்லை?. ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களில் புலவர்கள் இச் சொல்லைப் பயன்படுத்திப் பாடல் இயற்றி உள்ளனர். அத்துடன் சில புலவர்கள் இறைவியைப் புகழும் பாடல்களிலும் இச் சொல்லை தாராளமாகக் கையாண்டுள்ளனர். இந் நிலையில் இச் சொல்லுக்கு மேற்காண்கின்ற தவறான இழிவான பொருட்களைக் கூற எப்படித் துணிந்தனர் அகராதி இயற்றியோர்?. எது எவ்வாறாயினும் இச் செயல் அகராதிகளின் மேல் மக்கள் வைத்திருந்த நல்ல நம்பிக்கையினைத் தகர்த்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சரியான பொருள்:

அல்குல் என்ற சொல்லின் சரியான பொருள் 'கண் புருவம்' என்பது தான்.

நிறுவுதல்:

அல்குல் என்னுல் சொல் கண் புருவத்தையே குறிக்கும் என்று நிறுவுவது எளிய செயலே ஆகும். முதலில் கண் புருவத்தின் தன்மைகளைப் பற்றிக் கீழே காணலாம்.

1) கண் புருவமானது கண்களை விடவும் அகலமானது.
2) கண்புருவம் மேல்நோக்கி வளைந்த தன்மை கொண்டது.

கண் புருவத்தின் இந்தத் தன்மைகளைப் பற்றிக் கூறும் பல பாடல்கள் இலக்கியங்களில் உள்ளன. அவை யாவற்றையும் இங்கு விரிப்பது கடினம் என்பதால் சில பாடல்கள் மட்டும் சான்றாகக் கீழே தரப்பட்டுள்ளன.

அல்குல் அகலமானது:

அகல் அல்குல் - கலி.-108
அகன்ற அல்குல் - கலி.-14
ஐது அகல் அல்குல் - அக.-275
,390
ஐது அமைந்து அகன்ற அல்குல் - ஐங்கு.-135
,176
ஐது அகல் அல்குலாள் - கலி.-52
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட - அக.-307
அகல் அமை அல்குல் - அக.385
அகன்ற அல்குல் - நற்.-101
,245,252
ஐது அகல் அல்குல் - நற்.-200
,390
பேர் அகல் அல்குல் - புற.-166
ஐது அகல் அல்குல் - புற.-271
,389
பாரித்த அல்குல் - தி.ஐ..-34
அகல் அல்குலார் - சிறுபஞ்.-18

மேல்நோக்கிய வளைவினை உடையது அல்குல்:

கோடு உயர் அகல் அல்குல் - கலி.- 1
கோடு ஏந்து அகல் அல்குல் - கலி.-109
கோடு எழில் அகல் அல்குல் - கலி.-67
கோடு ஏந்து அல்குல் - அக.-201
கோடு ஏந்து அல்குல் - நற்.-198
,213,282,368
கோடு ஏந்து அல்குல் - புற.-240
கோடு ஏந்து அகல் அல்குல் - நாலடி.-354
ஏந்து கோட்டு அல்குல் - நெடு.-145
ஏந்து கோட்டு அல்குல் - பதிற்.-18
ஏந்து கோட்டு அல்குல் - புற.-89
அம் கோட்டு அகல் அல்குல் - நாலடி.-372

மேற்காணும் பாடல்களில் வரும் கோடு என்பது வளைவினைக் குறிக்கும். ஏந்து என்பது உயர்ந்த என்ற பொருளைத் தரும். பெண்களுக்கு அழகு சேர்க்கும் முதல் உறுப்பே கண் என்பதால் இக் காலத்தும் சரி அக் காலத்தும் சரி பெண்கள் தம் கண்களுக்கு மென்மேலும் அழகு சேர்க்கத் தயங்கியதில்லை. கண்களுக்கு அழகு சேர்க்கும் பல முறைகளுள் ஒன்று தான் கண் புருவங்களுக்கு அழகு கூட்டுதல் ஆகும். இதனைக் கீழ்க்காணும் முறைகளால் செய்ததாக சங்க இலக்கியங்களும் கீழ்க்கணக்கு நூல்களும் கூறுகின்றன.

1) கண் புருவத்தின் மேற்பகுதியில் அழகிய பல புள்ளிகளால் ஆன ஒரு வரியோ பல வரிகளையோ வரைதல். இப் புள்ளிகள் பெரும்பாலும் வட்டமாக இருப்பதுடன் வெள்ளை, கருப்பு, மஞ்சள் முதலான பல வண்ணங்களில் இருக்கும். இவை ஒரு நல்ல பாம்பின் படப்பொறியில் உள்ள கண் போன்ற அமைப்பிற்கு மேல் உள்ள புள்ளிகளை ஒத்திருக்கும். இப் புள்ளிகளைத் திதலை என்றும் தித்தி என்றும் இலக்கியம் கூறுகிறது. இக் கூற்றினை மெய்ப்பிக்க அருகில் உள்ள படம் போதும் என்றாலும் சங்க இலக்கியங்கள் மற்றும் கீழ்க்கணக்கு நூல்களில் இருந்து சில பாடல்களும் சான்றாகக் கீழே காட்டப்பட்டுள்ளன.

அல்குல் அழகிய வரியினை உடையது:

தேர் அகல் அல்குல் அவ் வரி வாட - ஐங்கு.-316
அவ் வரி அல்குல் - ஐங்கு.-481
அல்குல் வரி யாம் காணும் நாள் - கலி.-80
வரி ஆர் அகல் அல்குல் - கலி.-92
வரி ஆர்ந்த அல்குலாய் - கலி.-60
மாண் வரி அல்குல் - குறு.-101
வரி அணி அல்குல் - அக.-33
அவ் வரி அல்குல் - அக.-117
அவ் வரி அல்குல் - அக.-342
மாண் வரி அல்குல் - பதிற்.-65
அல்குல் அவ் வரியே - புற.-344

தேமல் போன்ற புள்ளிகளை உடையது அல்குல்:

திதலை அல்குல் நின் மகள் - ஐங்கு.-29
திதலை அல்குல் துயல்வரு கூந்தல் - ஐங்கு. -72
திதலை அல்குல் - குறு.-27
திதலை அல்குல் - அக.-54
திதலை அல்குல் அவ் வரி வாடவும் - அக.-183
திதலை அல்குல் - அக.-189
,227
திதலை அல்குல் - நற்.-6
,77,84,161,307,370

பாம்பின் படப்பொறி போன்ற புள்ளிகளை உடையது அல்குல்:

தட அரவு அல்குல் - கலி.-125
தித்தி பரந்த பைத் தகவு அல்குல் - குறு.-294
பொறி வரி அல்குல் - அக.-397
பை வரி அல்குல் - குறிஞ்சி.-102
பைத்தகன்ற அல்குல் - திரி.-25
பை அர அல்குலாய் - தி.நூ.-96

மேற்காணும் பாடல்களில் வரும் பை என்பது நல்ல பாம்பினைக் குறிக்கும்.

2) செல்வச் செழிப்பில் வாழும் இளம் பெண்கள் இந்தப் புள்ளிகளுடன் நிற்காமல் பொன்னால் ஆன காசுகள் மற்றும் மணிகள் கோர்த்த சிறு மாலையினை கண் புருவத்தின் மேல் பகுதியில் அணிவர். இன்னும் சிலர் முத்துக்கள் கோர்த்த மாலையினையும் சிலர் சிறு மலர்களால் தொடுத்த மாலையினையும் அணிந்து அழகு சேர்ப்பர். இக் கூற்றுக்களை மெய்ப்பிக்க புகைப்படமும் கீழே சில பாடல்களும் சான்றாகத் தரப்பட்டுள்ளன.

பொன்னாலான காசுகள்
, மணிகள் கோர்த்த மாலையை உடையது அல்குல்:

பல் காழ் அல்குல் அவ் வரி வாட - ஐங்கு.-306
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் - ஐங்கு.-310
இழை அணி அல்குல் - கலி.-50
மணி மிடை அல்குல் - குறு.-274
பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அக.-75
பசும் காழ் அல்குல் - அக.-167
பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அக.-269
பொலம் காழ் அல்குல் - அக.-387
காழ் பெயல் அல்குல் - நற்.-66
பல் காழ் அல்குல் - நற்.-133
பசும் காழ் அல்குல் - நற்.-222
காழ் ஊன்று அல்குல் - பெரும்.-244
பைங் காழ் அல்குல் - பெரும்.-329
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் - திருமு.-16
திருந்து காழ் அல்குல் - திருமு.-204
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் - புற.-353
பாசிழைப் பகட்டு அல்குல் - பட்டி.-147

மேற்காணும் பாடல்களில் வரும் காழ் என்ற சொல்லானது இங்கு உருண்டையான மணி போன்ற அமைப்பினைக் குறிக்கும்.

முத்துக்களால் ஆன மாலையினை உடையது அல்குல்:

கதிர் மணி முத்தம் படம் அணி அல்குல் - தி.ஐ.-45

பூக்களால் ஆன மாலையை உடையது அல்குல்:

கூம்பு அவிழ் முழுநெறி புரள் வரும் அல்குல் - புற.-116
தொடலை அல்குல் - புற.-339
அம் பூந் தொடலை அணித் தழை அல்குல் - புற.-341
புனை பூந் தழை அல்குல் - ஐ.ஐ.-14

மேற்காணும் சான்றுகளில் இருந்து அல்குல் என்பது கண் புருவத்தையே குறிக்கும் என்பதைத் தெளியலாம்.

முடிவுரை:

அகராதிகள் கூறும் பொருளை அப்படியே முழுமையாக நம்பக் கூடாது என்பதற்கு இச் சொல் ஒரு நல்ல சான்று ஆகும். இது போன்று பல சொற்கள் தவறான பொருளில் கூறப்பட்டு இருக்கலாம். அவற்றைக் கண்டறிந்து சரியான பொருளை மீட்டெடுத்துப் பயன்படுத்துவது தமிழராகிய நம் அனைவரின் கடமை ஆகும்.

 

 

 

vaendhan@gmail.com