‘கனவுகளின் நாயகன்’ பாரதி
பேராசிரியர் இரா.மோகன்
பாரதியார் பிறந்த நாள் 11.12.2018
‘சுவை
புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது, சோதி மிக்க நவ கவிதை,
எந்நாளும் அழியாத மகாகவிதை’ எனப் பிறநாட்டு நல்லறிஞர்கள் வணங்கிப்
போற்றிய கவிதை பாரதியாரின் கவிதை. தமிழகம் தந்த அந்த மகாகவி எத்தனையோ
இனிய கனவுகளைத் தம் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்தார்; அவற்றை
நிறைவேற்றி வைக்கும் வரம் தருமாறு கடவுளரிடம் அவர் அவ்வப்போது
வேண்டினார். அங்ஙனம் கவியரசர் கண்ட கனவுகள் சிலவற்றைக் குறித்து
இக்கட்டுரையில் காணலாம்.
1. ‘நூறாண்டு
வாழ வேண்டும்’
நூறு வயது வரை
இன்பமாக வாழ வேண்டும் என்ற கனவு பாரதியாரின் மனத்தில் ஆழமாகக்
குடிகொண்டிருந்தது. அவர் தம் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் வாய்ப்புக்
கிடைக்கும் போதெல்லாம் இக் கனவினை வெளி-யிட்டுள்ளார். “நோவு வேண்டேன்,
நூறாண்டு வேண்டினேன்” என அவர் ‘விநாயகர் நான்மணி மாலை’யில் பாடினார்;
“நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும்” என
வைய முழுதும் படைத்தளிக்கின்ற மகாசக்தியிடம் வேண்டினார்; “சக்தியே
நம்மைச் சமைத்ததுகாண், நூறாண்டு பக்தியுடன் வாழும்படிக்கு” என்று
‘மகாசக்தி வெண்பா’வில் எழுதினார்; ‘பொய்யோ? மெய்யோ?’ என்ற வேதாந்தப்
பாடலுக்கு எழுதிய முன்னுரையில், “நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட
வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்கும். இவற்றைத் தரும்படி
தத்தம் குல தெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இங்ஙனம் நீண்ட நாள் – குறைந்தது நூறு வயது வரை – புகழுடனும்
மகிழ்வுடனும் வாழ வேண்டும் என்ற கனவைப் பாரதியார் தம் கவிதைகளில் பல
இடங்களில் வெளியிட்டுள்ளார்.
நூறு ஆண்டுகளில்
எவ்வளவோ காரியங்களைச் செய்து முடிக்கலாம் என்று கவியரசர் உறுதியாக
நம்பியிருந்தார் நல்ல திட்டங்களும் தீட்டி வைத்திருந்தார். “நூறு
வயதுண்டு என்பதேனும் நல்ல நிச்சயமாக இருந்தால் குற்றமில்லை. நூறு
வருடங்களில் எவ்வளவோ காரியம் முடித்துவிடலாம்” என எண்ணியிருந்தார்.
ஆனால், ‘நாம் ஒன்று நினைக்க, தெய்வம் இன்னொன்று நினைக்கும்’ என்னும்
வாக்கு, அவரது வாழ்வில் உண்மை ஆயிற்று; முப்பத்தொன்பது வயது
முடிவதற்குள் மகாகவியின் வாழ்க்கையே முடிந்து போயிற்று!
2. ‘கனக்கும்
செல்வம் வேண்டும்’
அடுத்து, செல்வ
வளத்தோடு வாழ வேண்டும் என்ற கனவு பாரதியாருக்கு நிரம்ப இருந்தது. இக்
கனவினைக் குறித்தும் அவர் தம் படைப்புக்களில் பல இடங்களில்
குறிப்பிட்டுள்ளார். “கனக்கும் செல்வம், நூறு வயது இவையும் தர நீ கடவாயே!”
என்பது கணபதியிடம் அவர் கேட்கும் வரம். ‘விநாயகர் நான்மணி மாலை’யில்
வரும் ஒரு பாடலில், “நீண்ட புகழ், வாணாள், நிறைசெல்வம், பேரழகு இவற்றை
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து” (ப.13) என்று விநாயகப் பெருமானிடம்
வேண்டினார். ‘யோக சித்தி’ என்னும் தோத்திரப் பாடலில் “நின்னைச் சில
வரங்கள் கேட்பேன் – அவை நேரே இன்று எனக்குத் தருவாய்” என்று சக்தியிடம்
வரம் கேட்ட போதும் பாரதியார் மறவாமல் ‘தொழில் பண்ணப் பெருநிதியம்
வேண்டும்’ என்று கேட்டார். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, “இத்தரை
மீதினில் இன்பங்கள் யாவும், எமக்குத் தெரிந்திடல் வேண்டும்” என்றே
மகாசக்தியிடம் தம் பெருங்கனவை வெளியிட்டார் அவர். தனிவாழ்வில்
மட்டுமன்றி, தமிழ்நாடு, இந்தியா என நாடு பற்றிச் சிந்தித்தபோதும்
கவியரசரிடம் செல்வச் சிந்தனையே தூக்கலாகக் காணப்பட்டது. அவரது
கற்பனையில் தமிழ்நாடு செல்வம் கொழிக்கும் பூமியாகத் திகழ்ந்தது;
‘செல்வம் எத்தனை உண்டு புவி மீதே – அவை யாவும் படைத்த நா’டாக விளங்கியது;
பாரத நாடு ‘தேட்டத்திலே அடங்காத நிதியின் சிறப்பினிலே உயர்நா’டாக
இலங்கியது.
3. ‘வையத் தலைமை ஏற்க வேண்டும்’
பாரதியாரின்
ஆழ்மனத்தில் கவிதைக் கலையின் மேல் அளவற்ற ஆசை – மோகம் – இருந்தது;
அவர்தம் கவிதைகளைக் குறித்துப் பற்பல கனவுத் தொழிற்-சாலைகளைக் கட்டி
வைத்திருந்தார். அவர் ‘தீயே நிகர்த்து ஒளிவீசும் தமிழ்க் கவிதைகள்’
படைக்க வேண்டும் என விரும்பினார்; “என் நாவில் பழுத்த சுவைத்
தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே!” என்று விநாயகப்
பெருமானிடம் வேண்டினார்; “எள்ளத்தனை பொழுதும் பயனின்றி இராது என்றன்
நாவினிலே வெள்ளமெனப் பொழிவாய்” என்று தெள்ளு கலைத்தமிழ் வாணியிடம்
விண்ணப்பம் செய்தார். இங்ஙனம் தம் கவிதைத் தரம் குறித்தும், கவி பாடும்
திறம் குறித்தும், கவிதை நூல்களை வெளியிடும் முறை குறித்தும் பற்பல
கனவுகளைக் கொண்டிருந்தார் பாரதியார்.
கவிதைகளைப் பொறுத்தவரையில் கவியரசருக்கு மூன்று கனவுகள் இருந்தன.
முதலாவதாக, “என்றன் பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலித்திட
வேண்டும்” என்று விரும்பினார் அவர்; இரண்டாவதாக, பாடும் திறம் படைத்த
தமக்கு வையத் தலைமை ஏற்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று கனவு
கண்டார்; “அடி, உன்னைக் கோடி முறை தொழுதேன் – இனி வையத் தலைமை எனக்கு
அருள்வாய்” என்று சக்தியிடம் வரம் கேட்கவும் செய்தார். மூன்றாவதாக, தம்
படைப்புக்களை 40 நூல்களாகப் பிரித்து, ஒவ்வொரு நூலிலும் 10,000 படிகள்
அச்சிட வேண்டும் என்றும், ‘இந் நான்கு லட்சம் நூல்களும் தமிழ்நாட்டில்
மண்ணெண்ணெய், தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக சாதாரணமாகவும்,
விரைவாகவும் விலையாகிப் போகும்’ என்றும் அவர் உறுதியாக நம்பினார்.
என்றாலும் ‘அவரது பாட்டுத் திறத்தை இவ் வையம் முழுமையாக உணர்ந்திருந்ததா?
அவருக்கு வையத் தலைமை ஏற்கும் வாய்ப்பினை நல்கியதா? அவரது நூல்கள்
தமிழ்நாட்டில் விரைவாக விற்பனை ஆயினவா?’ என்ற கேள்விகளைக் கேட்டால்,
‘இல்லை’ என ஒற்றைச் சொல்லில் பதில் கூறவேண்டிய அவல நிலைதான் நிலவியது.
‘அக்ஷர லக்ஷம் பெறுமான
பாக்களை’ எழுதிய கவியரசர் தம் வாழ்நாளின் பெரும் பகுதியை உற்சாகம்
குன்றிய நிலையில்தான் கழிக்க நேர்ந்தது; “சி.சுப்பிரமணிய பாரதியாரைத்
தமிழ்நாட்டார் அறிவார்கள். ஆனால், அவர் பெருமையை உள்ளபடி அறிந்தவர்கள்
மிக மிகச் சிலரேயாவர்” எனப் பரலி சு.நெல்லையப்பர், பாரதியாரின் ‘கண்ணன்
பாட்டு’ முதற்பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்ட கருத்தே
நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தது.
4. ‘உலர்ந்த
தமிழன் உருவாக வேண்டும்’
“சாதி இரண்டொழிய வேறில்லை” என்று
திட்டவட்டமாகப் பாடினார் ஔவையார்; “சாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம்”
என உணர்ச்சி மிக்க குரலில் முழங்கினார் சிவவாக்கியர். இவர்கள்
இருவரையும் அடியொற்றிக் கவியரசரும், “சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்றும், “சாதிக் கொடுமைகள் வேண்டாம்
– அன்பு தன்னில் செழித்திடும் வையம்” என்றும் பாடினார். அவர் கனவு கண்ட
தமிழகத்தில் இன்று இருப்பது போல் நூற்றுக்கு மேற்பட்ட சாதிகள் இல்லை;
ஒரே ஒரு சாதிதான் இருந்தது. அதற்கு அவர் வைத்திருந்த பெயர் ‘தமிழ்ச்
சாதி’ – ‘மனித சாதி’ – என்பதாகும்.
சாதி ஒழிப்பைப் பொறுத்த வரையில் தம் கனவு
நனவாகவில்லை, நடைமுறைக்கு வரவில்லை என்ற உண்மையை – கசப்பான உண்மையை –
நன்கு அறிந்திருந்தார் பாரதியார். எனவே அவர், “விதியே, விதியே, தமிழச்
சாதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா?” என்று விதியிடமே மனம் நொந்து
கேட்டார்; “மழை பெய்கிறது, ஊர் முழுதும் ஈரமாகி விட்டது. தமிழ் மக்கள்,
எருமைகளைப் போல, எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே
படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு. உலர்ந்த தமிழன்
மருந்துக்குக்கூட அகப்பட மாட்டான்” என்று தம் வசன கவிதை ஒன்றில்
வேதனையோடு எழுதினார்.
கவியரசர் கனவு கண்டதெல்லாம் தமிழ் கூறு
நல்லுலகில் ‘தமிழச் சாதி’ என்ற ஒன்றே இருக்க வேண்டும் என்பதுதான்; ஆனால்,
நாமோ, சாதி, சாதிக்குள் சாதி எனப் பார்த்து, சங்கம் வைத்து, சாதிப்
பயிரைப் பாராட்டி, சீராட்டிப் பக்குவமாக வளர்த்து வருகிறோம். மல்லிகைப்
பூவுக்கும் சாதியை வைத்து மகத்தான சாதனையைப் புரிந்திருக்கிறோம்.
கவியரசர், தமிழன் ‘உலர்ந்த தமிழ’னாக இருக்க வேண்டும் என விரும்பினார்;
ஆனால், இன்றோ, தமிழன் ‘உணர்ச்சித் தமிழ’னாகவும் இல்லாமல் – ‘உண்மைத்
தமிழ’னாகவும் இல்லாமல் – ஒன்றுக்கும் உதவாத ‘வெற்றுத் தமிழ’னாகப்
பெயரளவில் வாழ்ந்து வருகிறான்.
5.
‘தமிழ்நாட்டிலே தமிழ் தலைமை பெற்றுத் தழைத்திட வேண்டும்’
தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத்
தழைத்திட வேண்டும் என்பது கவியரசரின் பெருவிருப்பமாக இருந்தது. இவ்
விருப்பத்தினைக் குறித்து அவர் தம் கட்டுரைகளில் மிகுதியாக
எழுதியுள்ளார். அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க இரு இடங்கள்
வருமாறு:
1. “தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக.
பாரத தேச முழுதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் பாரத
தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும்
வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக. எனினும், தமிழ்நாட்டில் தமிழ்மொழி
தலைமை பெற்றுத் தழைத்திடுக”.
2. “தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற
வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா
வ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்”.
இவ்விரு பகுதிகளையும் படித்து
முடித்ததும் நம் நெஞ்சில் இரண்டு அடிப்படையான வினாக்கள் எழுகின்றன.
கவியரசர் கனவு கண்டபடி, இன்று தமிழ்நாட்டில் தமிழ் சிறந்து
விளங்குகின்றதா? கல்வித் துறையைப் பொறுத்த வரையில் அகர முதல் னகரப்
புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் மொழியில் நடைபெறுகின்றனவா?
நம் நாட்டை விட்டு ஆங்கிலேயர் சென்று விட்டனர்; ஆனால், நம்மை விட்டு
‘ஆங்கில மோகம்’ இன்னும் அகன்ற பாடில்லை. ‘இன்றைய நவீன
திருஞானசம்பந்தர்கள்’ மூன்று வயது முதற்கொண்டே ‘ஆங்கிலப் பால்’ உண்ணத்
தொடங்கி விடுகிறார்கள்! இவ் அவல நிலையைக் கருத்தில் கொண்டே,
“ வேறு வேறு
பாஷைகள் – கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ!”
என்று சாபமிடுவது போல் பாடினார்
பாரதியார்.
இங்ஙனம் கவியரசர் கண்ட கனவுகள் பல இன்றும் நனவாகாமலே – நடைமுறைக்கு
வராமலே – உள்ளன. கவிஞர் வைரமுத்து கூறுவது போல்,
“அவன் (பாரதி)
கண்ட கனவு
சுருங்கிச் சுருங்கிக்
கையடக்கப் பதிப்பாய்க்
காட்சி தருகிறது”
கவியரசரின் கனவுகள் யாவும் நனவானால் – நடைமுறைக்கு வந்தால் – மண்
பயனுறும்; வானகம் இங்கே தென்படும்; உலக அரங்கில் தமிழினம் தலை
நிமிர்ந்து நிற்கும்.
‘தமிழாகரர்’
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|