தனித்தன்மைக் கவிஞர் தாராபாரதி

பேராசிரியர் இரா.மோகன்

“தலைசிறந்த கவிஞர்இவர் என்ப தாலும்,
சாதிக்கும் திறனுடையார் என்ப தாலும்,
நிலைத்தபுகழ் இக்கவிஞர் பெறுவார்! வெள்ளி
நிலாஉலகும் பாராட்டும் எதிர்கா லத்தில்!”


என ‘உவமைக் கவிஞர்’ சுரதாவால் உளமாரப் பாராட்டப் பெற்றவர் தாராபாரதி. துரை.இராதாகிருட்டிணன் என்பது அவரது இயற்பெயர். “எனது இயற்பெயரில் முன்பாதியை (ராதா) முன்பின்னாகத் திருப்பிப் போட்டு, என்னுடைய கவிதை ஆசான் பாரதியின் பெயரை இணைத்துக் கொண்டேன்” (கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள், ப.384) என நேர்காணல் ஒன்றில், தம் புனைபெயர் தோன்றியதற்கான காரணத்தைக் கவிஞரே வெளிப்படுத்தியுள்ளார். “எட்டயபுரத்துக் கவிஞன், தன் எழுதுகோலில் விட்டு வைத்த மையின் மிச்சத்தை, என் எழுதுகோலில் நிரப்பிக் கொண்டு எழுதுகிறேன்… நான், சில இலட்சியங்களோடு நடக்கும் ‘மனிதன்’; தரமான இலக்கியங்களைப் படிக்கும் ‘சுவைஞன்’; சமதர்மக் கவிதைகளைப் படைக்கும் ‘கவிஞன்’ ” (‘வானம் திறக்கும் சூரிய வாசல்’, இது எங்கள் கிழக்கு, ப.17) என்னும் தாராபாரதியின் ஒப்புதல் வாக்குமூலம், அவரது படைப்பாளுமையையும் படைப்புக்களின் நோக்கையும் போக்கையும் தெள்ளிதின் புலப்படுத்துவதாகும், ‘பாரதி எனக்கு நாள்காட்டி’ என்றும், ‘பாரதியை என் கவிதைத் தாயாக நினைக்கிறேன்’ என்றும், ‘எட்டயபுரத்துக் கவிஞனுக்கு ஏகலைவன் நான்’ (கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள், ப.385) என்றும் கூறுவதோடு நில்லாமல், எழுத்துப் பயணத்தில் தமக்கு வளர்ச்சி தந்த அடியுரங்களைப் பட்டியல் இடும் போது ‘கொடுமையை எதிர்த்து நிற்கத் துணிவைக் கொடுத்த பாரதியின் மீசை’யையும் (இது எங்கள் கிழக்கு, ப.18) குறிப்பிடுவது கவிஞரின் இமாலயப் பாரதிப் பற்றினைப் பறைசாற்றுவதாகும்.

‘தனித்தன்மைக் கவிஞர்கள்’

“உவமானம் கவிதைக்கு என்றால் / உயிர்மானம் கவிஞர்க்கு அன்றோ?
கவிதைக்கும் கற்பு வேண்டும்”


என்பது கவிஞரைப் பற்றிய தாராபாரதியின் திண்ணிய கருத்து. அவரது கண்ணோட்டத்தில் கவிஞர்கள், நக்கீரர், கோவூர்கிழார், பெருஞ்சித்திரனார், மாங்குடி மருதனார், அவ்வையார், பிசிராந்தையார், பொய்கையார் முதலான சங்க காலப் புலவர்களைப் போல ‘ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்க’ளாக விளங்க வேண்டும்; வள்ளுவரின் நெஞ்சுரம், இளங்கோவின் வீரம், கம்பரின் மனஉறுதி, பாரதியின் ஆண்மை, பாவேந்தரின் துணிச்சல் ஆகிய ஆளுமைப் பண்புகளைக் கொண்டவர்களாகத் திகழ வேண்டும்; பரிசிலுக்காகப் ‘பாட்டுப் பதடிகள்’ ஆகாமல் – தமிழ்த் ‘தரகர்களாக’ மாறித் தொழில் நடத்தாமல் – கவரிமான் சாதியாக, தன்மானத்துடனும் உயரிய குறிக்கோளுடனும் தலை- நிமிர்ந்து, வாழ்ந்து காட்ட வேண்டும்.

“என்றைக்கும் மாறி டாமல் / எழுந்தநாள் கொள்கை யோடு
இன்றைக்கும் இருக்கின் றார்கள் / ‘இலட்சியக் கவிஞர்’ சில பேர்!
இனமானம் காத்து நிற்கும் / எழுவானச் சுடர்கள்; இந்தத்
‘தனித்தன்மைக் கவிஞர்’களை நான் / தலைமீது தாங்கிக் கொள்வேன்!”


                                                                              (இது எங்கள் கிழக்கு, ப.117)

என்னும் கவிஞரின் பெருமித மொழி இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்-தக்கது.

‘தமிழா, நீதான் உலகின் எழுவாய்!’


தாராபாரதியின் கருத்தில் ‘உலக மொழி அத்தனைக்கும் ஊற்றுமொழி தமிழ் தான்! வேற்றுமொழி அனைத்துக்கும் விதைமொழியே தமிழ்தான்!’ (தாராபாரதி கவிதைகள், ப.18). உலக மொழிகளில் காய்த்த அதாவது முற்றிய மொழிகள் சிலவே; அவற்றுள் கனிந்து விளைந்த மொழி தமிழே. இதனை,

“தாய்மொழி தமிழே! எந்தன் / தனிமொழி முதலே வாழ்க!
காய்மொழி சிலவற் றுள்ளும் / கனிமொழி நீதான் என்பேன்!”


                                                                                        (புதிய விடியல்கள், ப.21)

என்னும் தமது மொழி வாழ்த்துப் பாடல் அடிகளில் நயமுறப் புலப்படுத்தி-யுள்ளார் கவிஞர். இங்ஙனம் தமிழின் பெருமையைப் பல்லாற்றானும் பறைசாற்றித் தமிழனை – தமிழ் இனத்தினை – தலைநிமிரச் செய்வதையே தம் எழுத்தின் – வாழ்வின் – தலையாய நோக்கமாகக் கொண்டிருந்தவர் தாராபாரதி. ‘சுட்டுவிரல் நீ சுருங்குவதா?’ என்னும் அவரது கவிதையின் உயிர்ப்பான தொடக்க வரிகள் இதோ:

“நிமிர்வாய் தமிழா, எழுவாய் – அட / நீதான் உலகின் எழுவாய்!
உமியாய்ப் பறக்கும் பகைவாய்; - நீ / உயிர்ப்பாய் – புரட்சிப் புயலாய்!”

                                                                                               (தாராபாரதி கவிதைகள், ப.16)

‘எழுவாய்’ என்ற சொல்லை இங்கே இரண்டு முறை இருவேறு பொருள்களைத் தரும் வகையில் கையாண்டிருப்பது கவிஞரின் வித்தகம். ஒரு வாக்கியத்தில் எழுவாய் (Subject) பெறும் இடத்தினை உலக அரங்கில் தமிழன் பெற வேண்டும் என்பது கவிஞரின் எதிர்பார்ப்பு; ஆழ்மன ஏக்கம். ஆட்சியில் – கல்வியில் – கோயிலில் – தமிழன் வாயில் – குழந்தையின் நாக்கில் – நீதிமன்றத் தீர்ப்பில் – அலுவலகக் கோப்பில் – அன்னைத் தமிழே தலைமை இடத்தினைப் பெற வேண்டும் என்னும் தம் கருத்தினைத் தாராபாரதி பல இடங்களில் வலியுறுத்திப் பாடியுள்ளார்.

அயல்மொழிகளைக் கற்கத் தடையில்லை; ஆயின், அதற்கும் உண்டு ஓர் எல்லை. வயலின் நடுவே ‘ஊடுபயிர்’ வளர்ப்பது போலப் பயிலும் தமிழின் நிழலினிலே பிறமொழிகள் பயில்வது தான் அளவாகும் என்பது தாராபாரதியின் மொழிக் கொள்கை.

“சொந்த மொழியைப் பாதிக்கும் / ‘சோற்று மொழி’களின் ஆதிக்கம்
எந்தத் துறையிலும் பரவாமல் / என்றும் விழிப்பாய்ச் செயல்படுவோம்!
‘எந்தன் தாய்க்கு, இதுவரை நான் / என் செய் தேன்’எனச் சிந்திப்போம்!
வந்தனைக்கு உரிய நம்மொழியில் / வளங்கள் சேர்க்க வழிவகுப்போம்!


                                                                           (புதிய விடியல்கள், ப.25)

என்பதுவே ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்குத் தாராபாரதி விடுக்கும் வேண்டு-கோள்; வழிகாட்டல்.

இளைய தலைமுறைக்குக் கவிஞரின் செய்தி


‘புதியதோர் உலகு செய்யும் பூமியின் அச்சு நீங்கள்’ (தாராபாரதி கவிதைகள், ப.36) என்பது இளைய தலைமுறையினருக்குக் கவிஞர் சூட்டும் புகழாரம். மேலும் அவரது கண்ணோட்டத்தில், ‘இளைஞர்கள் – நிகழ்கால உலகுக்கு நெம்புகோல் ஆனவர்கள்’ (தாராபாரதி கவிதைகள், ப.38). இதுவரை ‘உணர்ச்சித் தமிழனாய்’ வாழ்ந்தது போதும், இனி ‘அறிவியல் தமிழனாய்’ அவதாரம் எடுக்க வேண்டும் என்பதே இன்றைய சூழலில் இளைய தலைமுறை-யினருக்குக் கவிஞர் விடுக்கும் செய்தி (Message) ஆகும்.

கவிஞர் தாராபாரதி இன்றைய இளந்தமிழனுக்குக் கூறும் அறிவுரை – அனுபவ மொழி – இன்றியமையாதது. ‘நேச மனங்களை நெசவு செய்!’ என்னும் கவிதை இவ்வகையில் கருத்தில் கொள்ளத்தக்கது. சிக்கல்களைச் சின்ன விக்கல் போல் விரட்டியடித்து, பிரிவினைகளைத் தும்மல் போல் துரத்தியடித்து, பூசல்களை நீக்கிப் போர்க்குரலுக்கு ஓய்வு தந்து, சூழ்ந்துள்ள திசைகளை எல்லாம் தமக்குச் சுற்றமாகத் தழுவிக் கொண்டு, நேச மனங்களை எல்லாம் நெசவு செய்யப் புறப்படுமாறு இளந்தமிழனுக்கு அறிவுறுத்துகிறார் கவிஞர்:

“கிழக்கோடு கைகுலுக்கு; / மேற்கோடு புன்னகைசெய்;
வடக்கோடு சேர்ந்துநட; / தெற்கோடு கூடி உண்!”


                                                                   (தாராபாரதி கவிதைகள், ப.24)

என்னும் கவிஞரின் வாக்கு இன்றைய இளைய தலைமுறை தன் நெஞ்சில் கல்வெட்டுப் போல் பொறித்து வைத்துக் கொள்ள வேண்டிய நல்லதொரு வாழ்க்கை நெறி ஆகும்.

‘கலியுலகம் அல்ல – இது கணியுகம்!’ என்றும், ‘இணைய வலைப்படுத்து, ஆற்றல் வசப்படுத்து!’, என்றும், ‘விளைந்த நெல்லில் விதைநெல்லாய் இரு’ என்றும் இளையோர்க்கு நினைவூட்டும் கவிஞர்,

“புதுவேகத் தோடுநீ / புறப்படு! உன் உள்ளங்கை
விதிரேகை என்பதை / விஞ்ஞான ரேகையாக்கு!”

                                               (தாராபாரதி கவிதைகள், ப.45)

என இன்றைய காலத்திற்கு ஏற்ற வாழும் முறைமையினை உணர்த்துவது சிறப்பு.

விரல்நுனி வெளிச்சங்கள்


சங்கச் சான்றோருள் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் ஒற்றை வரியால் உலகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக ஈர்த்து ஆட்கொண்டவர் கணியன் பூங்குன்றனார். அது போல, இருபதாம் நூற்றாண்டுக் கவிஞருள்,

‘வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
விரல்கள் பத்தும் மூலதனம்’ (இது எங்கள் கிழக்கு, ப.33)

என்னும் இரண்டே அடிகளால் இலக்கிய ஆர்வலர்களில் – குறிப்பாக, இளைய தலைமுறையினரின் – இதயங்களை எல்லாம் கொள்ளை கொண்ட ஆற்றல்சால் கவிஞர் தாராபாரதி. பழமொழி இலக்கியத்தில் விளங்கித் தோன்றும் பண்புகளாகத் தொல்காப்பியர் சுட்டும் (1429) நுட்பமுடைமை, சுருக்கம், பளிச்சென்ற அறிவொளியின் வீச்சு, மிகுஎளிமை என்னும் நான்கும் தாரா-பாரதியின் கவிதைகளிலும் களிநடம் புரிந்து நிற்கக் காண்கிறோம்.

“துருப்பிடித்த வார்த்தைகளை / தூரத் தள்ளி
சுறுசுறுப்புச் சொற்களுக்குச் / சூடேற்றியவன்!”

                                                   (தாராபாரதி கவிதைகள், ப.98)

என அறிஞர் அண்ணாவின் ஆளுமைத் திறத்தினை அடையாளம் காட்டும் போதும்,

“ஊன் – உடம்பெல்லாம் / மானுட நேயம்
ஊற்றெடுத்தால் அங்கு / மதவெறி வீழும்!”

                                                      
(தாராபாரதி கவிதைகள் ப.104)

என மதப்பூசலுக்கான மாற்று வழியினை உரைத்திடும் போதும்,

“நம்பிக்கை வந்தால் போதும்
நம் கைகள் வானை மோதும்!”
(தாராபாரதி கவிதைகள், ப.35)

எனப் பயில்வோர் நெஞ்ச வயலில் நம்பிக்கை விதையை ஊன்றும் போதும்,

“எழுந்தால் கொடி மரம்! விழுந்தால் அடியுரம்!
இதுதான் தமிழன் எனக் காட்டு!”
(இன்னொரு சிகரம், ப.23)

எனத் தமிழனின் தனிப் பண்பினைக் காட்டும் போதும்,

“ ஆய்தக் குறுக்கம் அருந்தமிழ் இலக்கணம்:
‘ஆயுதக் குறுக்கம்’ அமைதிக்கு இலக்கணம்!”


(இது எங்கள் கிழக்கு!, ப.161)

என வன்முறைக்கும் போர் வெறிக்கும் எதிராக முழங்கிடும் போதும்,

“சொந்தமாகத் தொழில் தொடங்கு / கைகளை நம்பி – இனி
சுற்றும் அந்தப் பூமியுந் தன் / கால்களில் தம்பி”


(இது எங்கள் கிழக்கு, ப.144)

எனப் பரிதவித்து நிற்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு வழிகாட்டும் போதும்,

“பூமிப் பந்து என்ன விலை? – உன்
புகழைத் தந்து வாங்கும் விலை”
(இது எங்கள் கிழக்கு, ப.128)

என ஒதுங்கி வாழ்ந்து, புலம்பித் திரியும் நண்பனின் நெஞ்சில் நம்பிக்கையை விதைக்கும் போதும்,

“இலவசங் களையே நம்புகிற / எச்சில் பிறவிகள் ஆக்காதீர்!
இலக்கை நோக்கி முன்னேறும் / இலட்சியப் பிறவி ஆக்குங்கள்!”

                                                    (இது எங்கள் கிழக்கு, ப.94)

என ஆட்சியில் இருக்கும் அரசியலாரிடம் மக்கள் வெடிப்புறப் பேசுவதாகப் பாடும் போதும்,

“ விழிவிழி உன்விழி நெருப்புவழி – உன்
விழிமுன் சூரியன் சின்னப் பொறி!”
(இது எங்கள் கிழக்கு, ப.32)

என இளையோர் நெஞ்சில் விழிப்புணர்வை விதைக்கும் எழுச்சிப் பாடலை இசைக்கும் போதும் தாராபாரதியின் வாக்கில் கவித்துவ வல்லமையும் கருத்துத் தெளிவும் கைகுலுக்கி நிற்பதைக் காண முடிகின்றது.

‘வர வேண்டாம், மகாத்மா…’


‘நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்…’ என உணர்ச்சி வயப்பட்டுப் பாடினார் கவியரசர் பாரதியார். பொதுவாக, மகாத்மா காந்தி மீண்டும் இவ்வுலகில் பிறக்க வேண்டும் எனப் பாடுவதே கவிஞர்களின் வாடிக்கை. தாராபாரதியோ இப் போக்கில் இருந்து – செல்நெறியில் (Trend) இருந்து முற்றிலும் மாறுபட்டு, ‘வேண்டாம், மகாத்மா…’ என்னும் தலைப்பில், ‘தேசத் தந்தையே!’ என விளித்து, ‘போதையிலே கிடக்கின்ற பொதுமக்கள்’ – ‘காந்தியப் பாதையினைத் தொலைத்து விட்ட பாரதத்துக் குடிமக்கள்’ அவரிடம் பேசுவது போல ஒரு வித்தியாசமான கவிதையைப் படைத்துள்ளார். ‘அங்கங்கள் மனிதர் என்று அடையாளம் காட்டினாலும், அங்கிகள் உடுத்தியிருக்கும் ஆறறிவுக் கால்நடைகள்!’ எனத் தம்மை அறிமுகம் செய்து கொள்ளும் ‘குடிமக்கள்’ பின்னும் தம்மைக் குறித்துக் கூறுவன வருமாறு:

1. ‘காவியங்கள் நேர்வழியைக் காட்டினாலும், எங்களது ஆவியெங்கும் கோணல்வழியே ஆதிக்கம் செய்கிறது!’

2. ‘நாளைச் செலவழிக்க நினைப்பதல்லால், மூளையைச் செலவழிக்க நாங்கள் முயலுவதே கிடையாது!’

3. ‘சுயமாகச் சிந்திக்கச் சோம்பேறித்தனம் கொண்டு, அயலாரின் சிந்தனையை நாங்கள் அப்படியே ஏற்கின்றோம்!’

4. ‘சூதுக்கு அடிமைகளாய், சூழ்ச்சிக்குக் கூலிகளாய், சாதிக்கு வேலிகளாய், சரிவுக்குள் வாழுகிறோம் நாங்கள்!’

5. ‘சிறுமைகளைப் பழகிவிட்ட சிற்றினம்தான் நாங்கள்! எங்களிடம் மறுபடியும் நீ வந்து, மடைமாற்ற எண்ணுகிறாய்!’ எனத் தேசத் தந்தையிடம் வெளிப்படையாகக் கூறிவரும் பாரதத்துக் குடிமக்கள் முடிந்த முடிபாக தேசத் தந்தையிடம் வேண்டிக்கொள்வது இதுதான்:

“திருத்த உன்னால் முடியாது; / திருந்த எம்மால் இயலாது!
வருத்தம் ஏன் நமக்குள்? நீ / வரவேண்டாம் மகாத்மா!”

                                                       (இது எங்கள் கிழக்கு, பக்.150-151)

இங்ஙனம் பாரத நாட்டுக் குடிமக்கள் மகாத்மாவிடம் கூறுவதாகப் பாடினாலும், காந்தியடிகளின் தனிப்பெரும் பண்புகளை வாய்ப்பு நேரும் போதெல்லாம் தாராபாரதி போற்றிப் பாடத் தவறவில்லை. பதச்சோறாக, ‘எங்கள் மகாத்மா!’ என்னும் கவிதையின் எடுப்பான தொடக்க வரிகள் இவை:

“போர்பந் தரில்நீ பிறந்த போதிலும்
போர்ப்பந் தத்தை அறவே வெறுத்தவன்!
கத்திய வாருக்கு அருகில் பிறந்தும்
கத்தியை அல்ல; கைகளை நம்பினாய்!”

                                                                      (கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள், ப.365)

‘தேசப் பிதாவே! / ஈரங்கி உடுத்தியிருந்த / எங்கள் பிதா உம்கைத்தடி முன் / பீரங்கியும் கூடப் / பேச்சிழந்து போயிற்று!’ (கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள், ப.367) எனப் பிறிதொரு கவிதையிலும் அண்ணலின் கைத்தடிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் கவிஞர்.

பெண்ணினத்தின் மேன்மை

‘பெண்மை வாழ்க!’ என்றும், ‘பெண்மை வெல்க!’ என்றும் பெண்மையை ஆராதிப்பதிலும், ‘நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்ட செம்மை மாத’ரைப் போற்றுவதிலும் ‘முண்டாசு கட்டிய முறுக்குமீசைப் புலவர்’ பாரதியோடு ஒன்றிணைந்து இயங்குகின்றார் தாராபாரதி. ‘சூரியனைக் கூடச் சொக்கட்டான் ஆடலாம்!’ என்னும் அவரது கவிதையின் உயிர்ப்பான தொடக்க வரிகள் இவை:

“பெண்ணே, நீ / பேதைப் பெண்ணல்ல, ‘மேதைப் பெண்!’
பெண்ணே, நீ / பதுமைப் பெண்ணல்ல, ‘புதுமைப் பெண்!’…
மெல்லினமாம் பெண்கள் / மேலினம் தான்; ஆண்கள் எனும்
வல்லினத்தை இடையினத்தில் / தூக்கி வளர்ப்பதனால்!”


‘மேலினம் என்று மிதப்போடு இருக்கிற ஆணினத்தையே தனது இடுப்பில் தூக்கி வளர்ப்பதனால், தாய்மைப் பண்புடைய பெண்ணினம் மேலானது’ என்று பெண்ணினத்தின் மேன்மையை உளமாரப் போற்றியுள்ளார் கவிஞர்.

‘சாதம் படைக்கவும் செய்திடுவோம், தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம்!’ என்னும் பாரதியின் அடிச்சுவட்டில்,

“அரிச்சு-வடிக்கும் பெண்கள் / ‘அரிச்சுவடி’க்கும் கண்கள்!
அரிசிஉலை இறக்கும் கை / அணுஉலையைத் திறக்கும் கை!”


எனப் பெண்மைக்குப் புகழாரம் சூட்டுகின்றார் தாராபாரதி. ‘ஆணும் பெண்ணும் நிகர்’ என்பதைப் பறைசாற்றும் வகையில்,

“எண்ணறிவில் எழுத்தறிவில் / முன்வரிசை பெண்வரிசை;
நுண்ணறிவில் நூலறிவில் / ஆண்களுக்கு நிகர்வரிசை!”


எனக் கவிஞர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

“சூரியனைக் கூட இவள் / சொக்கட்டான் ஆடுவதைச்
சுழலும் பூமி கண்டு / சொக்கத்தான் போகிறது!”


                                                            (இது எங்கள் கிழக்கு, பக்.26-28)

என்னும் பெண்ணின் உயர்வுக்கும் மேன்மைக்கும் கட்டியம் கூறி நிறைவு பெறுகிறது கவிதை.

முதிர்கன்னியர் அவலம்


திருமணச் சீர் கொடுக்க இயலாமல், மணமாகாமலேயே மூப்படைந்த நகர்ப்புறத்துப் பெண், நாட்டுப்புறத்துப் பெண் என முதிர்கன்னியர் இருவரின் மனக் குமுறல்களைக் கருங்கல் மனத்தையும் கரைக்கும் உருக்கமான மொழியில் பதிவு செய்துள்ள கவிதை ‘இளமையை நானே தின்னாச்சு’.

“நிலவு முகத்தின் அழகெல்லாம் – ஒரு
நிலைக்கண் ணாடியில் தேய்கிறது!
மலரும் நினைவுகள் எனக்கில்லை – என்
மாலைக் கனவுகள் கணக்கில்லை!...
வாழ்க்கைத் துணைவன் வரக்காணேன் – நான்
வாசல் தூணின் துணையானேன்!”


என நகர்ப்புறத்துப் பெண்ணின் கூற்றாகவும்,

“தலையில் பாதி நரைச்சாச்சு – என்
தலையணை கூடப் பஞ்சாச்சு!
இலையில் சோறும் மண்ணாச்சு –
இளமையை நானே தின்னாச்சு!...”
மூலைக் கிழங்கள் ரெண்டோடு – நான்
மூணால் கிழமா சேர்ந்தாச்சு!”
(இது எங்கள் கிழக்கு, பக்.47-48)

என நாட்டுப்புறத்துப் பெண்ணின் வாய்மொழியாகவும், கவிஞர் படைத்துள்ள அடிகள் நம் நெஞ்சை அள்ளுவன. ‘ஓசைச் சிறப்பு – நடைமுறைக் கண்ணோட்டம் – எதார்த்தமான – இயல்பான – சொல்லாட்சி எல்லாம் கொண்டு – இக் கவிதை, இத் தொகுப்புக்கே கவித்துவப் பெருமையை மிக அதிக அளவில் சேர்த்திருப்-பதாக’க் கருதுகின்றார் கவிஞர் ஈரோடு தமிழன்பன் (‘பூஞ்சிறகசைக்கும் வார்த்தைகளே – புறப்பட்டு வாருங்கள்’, இது எங்கள் கிழக்கு, ப.11).

விலைமகளின் வாழ்க்கை அவலம்


‘என்மதம் மன்மதம்’ என்னும் கவிதை, விலைமகளின் வாழ்க்கை அவலத்தை உள்ளது உள்ளபடியான சொற்களில் வடித்துக் காட்டுவது. ‘யாப்பறி யாத கவிதை என்னை, யார்யார் யாரோ வாசித்தார்!’ எனத் தன் உள்ளத்து உணர்வைக் கவிதை மொழியில் வெளியிடும் விலைமகள், ‘எவர் வரினும் சம்மதித்துச் சரசமாடும் இன்பமதம் எனது மதம்’ என்னும் பொருள் பட,

“எல்லாச் சாதியும் தீண்டுகிற / எச்சில் சாதி என் சாதி;
எல்லா மதமும் கலக்கின்ற / ‘என்மதம் மன்மதம்’ இன்பமதம்!”

                                                    (இது எங்கள் கிழக்கு, ப.64)

எனக் கூறுவது நம் உள்ளத்தை உருக்குகின்றது.

அரசியல் அங்கதம் பளிச்சிட்டு நிற்கும் கவிதைகள்

அங்கதச் சுவை மிளிரத் தாராபாரதி படைத்துள்ள ஒரு நல்ல கவிதை ‘அரசியல் வியாதிகள்’. அரசியல்வாதி சிலர் அரசியலில் வியாதிகள் ஆனதால் வந்த வினைகளைத் தோலுரித்துக் காட்டுகின்றது அக்கவிதை: ‘சொந்தத்தில் ஒரு கட்சி / தொடங்குவார்; பின்னதனைச் சோற்றுக்கு விற்று விடுவார்; / சுகமான பதவிகளும் / வெகுமானம் பரிசுகளும் / சுயமானம் இழந்து பெறுவார்!’ (புதிய விடியல்கள், ப.90). ‘எந்தெந்தக் கட்சியில் / எத்தனை நாட்கள் இவர் / இருந்தார் என்ற கணக்கு / எவராலும் அறிதற்கு / ஒரு நாளும் முடியாது’ என மொழியும் கவிஞர், ‘ஏனந்த வம்பு நமக்கு?’ (புதிய விடியல்கள், ப.90) என இயல்பாக வினவுவது அருமை.

‘இவன் ஒரு கட்சி; நிழல் ஒரு கட்சி’ என்னும் தலைப்பில் எழுதிய பிறிதொரு கவிதையிலும்,
“ சும்மா இருப்பவன் எல்லாம் நாட்டில் / சொந்தக் கட்சி தொடங்குகிறான்;

சிம்மா சனத்தில் ஏறுவதற்குச் / சிரசா சனங்கள் பழகுகிறான்!”

என அரசியலில் நிகழும் அலங்கோலத்தைச் சாடுகின்றார் தாராபாரதி.

“நிற்கும் இவனொரு கட்சிக்குள்; இவன்
நிழலோ வேறொரு கட்சிக்குள்!”
(இது எங்கள் கிழக்கு, ப.79)

என்னும் கவிஞரின் கூற்று அங்கதச் சுவையின் உச்சம்!

‘கட்சி யாத்திரை’ என்னும் மற்றொரு கவிதையிலும்,

“காலையில் ஒரு கட்சி / சுடும்பகலில் மறுகட்சி;
மாலையில் தனிக்கட்சி / மறுபடியும் தாய்க்கட்சி!
இரவில் இவர் கட்சி / இவருக்கே மறந்து விடும்”


                                                  (இது எங்கள் கிழக்கு, ப.137)


என அரசியல்வாதிகளின் கட்சித் தாவல்களைச் சுவையான அங்கதக் குறிப்புடன் சாடுகின்றார் கவிஞர்.

யார் ஞானி?


அணுப்பொறியைக் கட்டியாள முடிந்த மனித ஆற்றலால் தனது ஐம்பொறியைக் கட்டி வைக்க முடியவில்லை. கணிப்பொறியில் அண்டத்தை அடக்கத் தெரிந்த மனித குலத்தால் கணப்பொழுதும் தனது மனத்தினை அடக்கிடக் கருவி ஒன்றைக் கண்டறிய இயலவில்லை. வான் தொலைவை அணுக்கத்தில் சுருக்கி என்ன? மனிதனது ஆசைகளின் நீளங்கள் சற்றும் சுருங்கவில்லை! மனிதன் நூன்மறைகள் நூறுமுறை பயின்றும் என்ன? நோன்புகளும் தவங்களும் தான் இயற்றி என்ன? ‘என் அறிவு வான்வரையில் வளர்ந்தது’ என்று வரம்புகளை நீட்டி என்ன? இங்ஙனம் பதில் உரைக்கவே முடியாத கேள்விக் கணைகளை அடுக்கடுக்காகத் தொடுத்து வரும் தாராபாரதி, “‘தான்’ என்னும் தன்முனைப்பைத் (Ego) தகர்ப்பவன்தான், தனை வென்று நிற்கின்ற ஞானி ஆவான்!” என மொழிவது குறிப்பிடத்தக்கது. இதனினும் இரத்தினச் சுருக்கமான மொழியில் அவர்,

“நான்மறையைக் கற்றவனா ஞானி? / தன்னுள்
‘நான்’-மறையக் கற்றவனே ஞானி யாவான்!”

                                                 (இது எங்கள் கிழக்கு, பக்.155-156)

என ஞானிக்கான வரைவிலக்கணத்தினை வகுத்து உரைப்பது முத்தாய்ப்பு.

நிறைவாக, ‘அத்தகு ஞானி எங்கே இருக்கிறார்?’ எனக் கவிஞன் கேட்கும் வினாவுக்குக் கடவுள் தரும் விடை இது:

“அகிலம் முழுதும் பரவி இருக்கிறார். / துருவப் பகுதியிலும் இருக்கலாம்;
ஏன்? உன் புருவ மத்தியிலும் இருக்கலாம்!”
(இது எங்கள் கிழக்கு, ப.106)

‘தாலாட்டில் ஒரு பள்ளியெழுச்சி’


‘பாட்டுக்கொரு புலவர்’ பாரதியார் ஆத்திசூடி, திருப்பள்ளியெழுச்சி, நான்மணிமாலை, பஞ்சகம், பள்ளு, கும்மி, சிந்து, கண்ணி என்றாற் போல் பல்வேறு சிற்றிலக்கிய வகைகளை – நாட்டுப்புற வடிவங்களை – கையாண்டு பாடல்கள் பற்பல பாடியுள்ளார்; எனினும், தாலாட்டு என்ற வடிவத்தில் மட்டும் ஒரு பாடலும் புனையவில்லை. பாரதி கவிதா மண்டலத்தைச் சார்ந்த பாவேந்தர் பாரதிதாசனோ ஆண் குழந்தை தாலாட்டு, பெண் குழந்தை தாலாட்டு என இரு தாலாட்டுப் பாடல்களை இயற்றியுள்ளார். பாரதி, பாரதிதாசன் இருவரையும் தம் இரு கண்கள் எனப் போற்றும் தாராபாரதி, புதுவதாகத் ‘தாலாட்டில் ஒரு பள்ளியெழுச்சி’ என்னும் தலைப்பில் ஒரு பாடல் யாத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“ஆராரோ பாட்டெடுத்து / அன்னைநான் பாடவில்லை;
தீராத துக்கமென்ன / தேனே கண்விழிப்பாய்!
இளந்தளிரே, பூவே! / இப்போது உறங்காதே!
வளர்ந்தபின் தூங்குவதற்கு / வசதிகள் கிடைக்குமடா!”

எனத் தொடங்கும் அப்பாடல்,

“வாவா … விளையாடு; / வாசலிலே போயாடு!
பூவே… விழிப்போடு / பொழுதுக்கும் நடைபோடு!”


                                                       (இது எங்கள் கிழக்கு, பக்.139; 141)

என விழிப்போடு பொழுதுக்கும் நடைபோடு என வலியுறுத்தி நிறைவு பெறுவது சிறப்பு.

கடித வடிவில் ஒரு கவிதை

அடுத்த வாரம் பள்ளியில் பெற்றோர் தினம். தாய் தந்தையரை அழைத்து வர ஆசிரியர் அறிவிக்கிறார். ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, சு.சத்தியம் என்ற ஏழை மாணவன் தனது ஆசிரியருக்கு இவ்வாறு கடிதம் எழுகிறான்:

“அன்புமிக்க வந்தனம் / ஆசிரியர் அவர்களே!
என்னுடைய தந்தைதாய் / இருக்கும்இடம் தொலைவிலே!
தந்தை பெயர் சுதந்தரம் / தாயின் பெயர் பாரதம்;
இந்த முகம் இரண்டையும் / இதுவரைநான் கண்டிலேன்!
நாதியின்றி என்னையே / நடுத்தெருவில் விட்டவர்
ஏது சொல்லி அழைப்பினும் / எனக்கு இரங்கி வருவரோ?
என்பொருட்டுத் தாங்களே / எனதுதந்தை தாயரை
அன்புடனே வரும்படி /அழைப்பு அனுப்பி விடுங்களேன்!


இப்படிக்குப் பணிவுடன்
ஏழை சு.சத்தியம்”
(இது எங்கள் கிழக்கு, ப.133)

‘தந்தை பெயர் சுதந்தரம்; தாயின் பெயர் பாரதம்; மகன் பெயர் சத்தியம்’ என்னும் பெயர்களைக் கொண்டே சுதந்திர இந்தியா பற்றிய விமர்சனத்தையும் வறுமைக் கொடுமையின் தாக்கத்தினையும் இங்கே குறிப்பாகப் புலப்படுத்தி விடுகின்றார் கவிஞர்.

தாராபாரதியின் வெற்றிக்குக் காரணம்


தாராபாரதி மரபுக்கும் புதுமைக்கும் ஓர் இணைப்புப் பாலம் போலத் தமது கவிதைப் படைப்புக்களை யாத்துள்ளார். வேறு சொற்களில் கூறுவது என்றால், புதுக்கவிதைப் பாங்கில் அவர் மரபுக் கவிதைகளைப் படைத்துத் தந்துள்ளார். சிலம்பொலி சு.செல்லப்பனார் ‘புதிய விடியல்கள்’ என்னும் தாராபாரதியின் கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையில் குறிப்பிடுவது போல், “இந்நூலில் புதுக்கவிதையின் வேகத்தையும் காண முடிகிறது; மரபுக் கவிதையின் யாப்பமைதியையும் சுவைக்க முடிகிறது. யாப்புக் குறையாத மரபு வடிவில் புதுமை எண்ணங்களைச் சிறப்பாகப் பாய்ச்சி இருக்கிறார்! இதுவே அவருடைய வெற்றிக்குக் காரணமாகிறது” (ப.9). நிறைவாக, ஒரு கவிஞர் என்ற முறையில் தாராபாரதியைப் பற்றிய ‘இலக்கிய வீதி’ இனியவனின் மதிப்பீடும் ஈண்டு மனங்கொளத்தக்கது: “பாரதியோடு – பாரதிதாசனும், சுரதாவும், பட்டுக்-கோட்டையும், கண்ணதாசனும் இணைந்த சங்கமமாய் இவர் துள்ளிப் பாய்கிறார். அதே நேரத்தில், ‘தான் தாராபாரதி’ என்கிற தனித்துவத்தையும் தவறாமல் நிலைநாட்டுகிறார்!” (‘இலக்கிய வீதி’ பெருமை கொள்கிற கவிஞர், புதிய விடியல்கள், ப.7).


‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்