இலக்கியத் தும்பிகளின் இணையற்ற பார்வைகள்

பேராசிரியர் இராம.குருநாதன்


ங்கில இலக்கியத் திறனாய்வுலகில், சேக்ஸ்பியர் படைப்புகளுக்குத்தான் மிகுதியான திறனாய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. அதுவும் ஏ.சி. பிராட்லியின் சேக்ஸ்பியர் குறித்த திறனாய்வு நூல் வெளிவந்த பிறகு சேக்ஸ்பியர் நாடகங்கள் குறித்த பார்வைகள் பெருவரவிற்றாயின. அதேபோல, தமிழில் மிகுதியான திறனாய்வு நூல்கள் வெளிவந்தனவற்றுள் சிலப்பதிகாரமும் ஒன்று. அதனைப் பல்வேறு கோணங்களில் பலரும் திறனாய்ந்துள்ளனர்.

ஓய்வறியா உழைப்புத் தேனீ முனைவர் இரா. மோகன். அவரும், அவருடைய துணைவி நிர்மலா வும் சேர்ந்து படைத்துள்ள அண்மை வெளியீடு, 'பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்' என்னும் திறனாய்வு நூலாகும். சிலப்பதிகாரம் தொடர்பான நூல்களை நுணுகி ஆராய்ந்து, தாம் பெற்ற காவிய நுகர்வினைக் கவினுறு நூலாக வடித்துத்தந்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நிகழ்வினையும் இவ்விணையர், தம் பார்வையில் அழகுறப் பதிவு செய்துள்ளனர். பன்னிரு கட்டுரைகளும் பன்னிரு திருமுறைபோலவும், பன்னிரு ஆழ்வார்களின் அமுதம் போலவும் படித்தறிவார்க்குச் சுவை தருவன.

சிலப்பதிகாரம் பற்றிய நூல்களை நாம் தேடிஅலைய வேண்டியதில்லை. இந்த ஒரு நூலிலேயே தாம் படித்த / பார்வைக்கு உட்பட்ட தகவல்களையெல்லாம் ஒருங்கிணைத்து விளக்கமாகவும், விரிவாகவும் இருவரும் தக்க முறையில் ஆராய்ந்துள்ளனர்.

இளங்கோவடிகள், தமிழகத்தில் நிகழ்ந்த சில பழங்கதைகளின் அடிப்படையில்தான் இக்காவியத்தை எழுதியுள்ளார் என்பதை நிலைநிறுத்துகிறது, முதல்கட்டுரை. இக்காப்பியம் குடிமக்கள் காப்பியமாகத் திகழ்வதைச் சான்றுகளுடன் உணர்த்துகிறது. 'அறக்குடியில் பிறந்த இல்லாள் ஒருத்தி இமயக்கல் எடுப்பதற்கு உரியவள்' என்ற செய்தி நிறுவப்பட்டுள்ளது. கொடியவன் இல்லாக் காப்பியமாகிய இந்நூலில், 'பொற்கொல்லன் பாத்திரப்படைப்பு ஆராயப்பட்டுள்ளது. 'இளங்கோவடிகள் அல்லாது வேறொருவர் கையில் அகப்பட்டிருந்தால், காப்பியப் புனைதிறனே மாறி இருக்கும்' என்ற கருத்து எண்ணிப்பார்க்கத்தக்கது.

சிலப்பதிகாரத்தின் தொடக்க காதை பல்வேறு கோணங்களில் சித்திரிக்கப்படுகிறது. அவலக் காப்பியத்தை மங்கல நிகழ்ச்சியோடு தொடங்கி இருப்பது'; திங்கள், ஞாயிறு, மழை ஆகிய மூன்றையும் கண்ணகியோடு சார்புபடுத்துதல்; காப்பியத்தின் வருவதுரைத்தல் ஆகியவற்றை உள்ளிட்டதை விவரிக்கிறது முதற்காதை. கோவலன், கண்ணகி ஆகியோரின் பாத்திரப்படைப்பைப் பல நிலைகளில் விளக்கமுற எடுத்துக்காட்டியிருப்பது சிறப்புடையது. செவ்வேள் என்று கோவலனை இளங்கோ குறித்திருப்பதைச்சுட்டிக்காட்டி, ''முருகனைப்போல, கோவலனும் இரு பெண்களுடன் வாழப்போகிறான்' என்ற நுட்பத்தை உணர்த்தவே இளங்கோ அந்தச் சொற்களால் கோவலனைச் சுட்டியிருக்கிறார் என்ற கா. மீனாட்சிசுந்தரம் கருத்தைப் பதிவு செய்திருப்பது கூரிய சிந்தனை. 'மண்தேய்த்த புகழினான்' என்று இளங்கோ கோவலனை அறிமுகப்படுத்திய விதம் பொருள் பொதிந்த ஒன்று என்று கூறியிருப்பது நன்று.

'கண்ணகி நீதியை நிலைநாட்டுவதற்கான ஓர் அனைத்துலகக் குறியீடு' என்று எரிக் மில்லர் ஆங்கில நாளேடான தி இந்துவில் எழுதிய கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் பகுதி சிறப்பானது. சிலம்பு என்ற சொல்லாட்சி, அக்காப்பியத்தில் வருமிடங்களைத் தொகுத்து அதன் பல் வேறு இயல்புகளைச் சுட்டியிருப்பதும் மு.வ வின் கருத்தினை இறுதியில் பொருத்தமுற எடுத்துக் காட்டியிருக்கும் விதமும் பாராட்டுக்குரியன. சிலம்பில் புதிய நோக்கு என்ற கட்டுரை, பெண்மை நோக்கு, வணிக நோக்கு, தொழில் நுட்ப நோக்கு, மன்னனின் தீர்வு நோக்கு ஆகிய நோக்குகளைச் சிலம்பில் புதியநோக்கு என்ற தலைப்பில் விவரித்திருப்பது நூலை அணிசெய்யும் விதத்தில் அமைந்துள்ளது. இளங்கோவின் அரசியல் சிந்தனைகள் என்ற கட்டுரையின், அடிநாதமாக இளங்கோவடிகளுக்கு ஒன்றுபட்ட தமிழகம் என்ற கருத்தாக்கம் அவரது உள்ளத்தில் இடம்பெற்றிருந்தது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. மூவேந்தருக்கும் உரிய காப்பியமாக இருப்பதை எண்ணி, இதனைத் தமிழகத்தின் பொதுமைக் காப்பியமாக இளங்கோ படைத்திருப்பது தனிச்சிறப்பு என்கிறது இந்நூல்.

கலைஞர் நோக்கில் சிலப்பதிகாரம் என்ற கண்ணோட்டத்தில் விரித்துரைக்கப்பட்டிருக்கும் செய்திகள், கலைஞருக்கு அந்தக் காப்பியத்தில் இருந்த ஆழ்ந்த ஈடுபாட்டைக் காட்டும் வண்ணம் திறனாயப்பட்டுள்ளது. நெஞ்சை வெல்லும் சிலப்பதிகாரம் என்ற தலைப்பில் அமைந்த இக்கட்டுரைப் பகுதி இந்நூலிற்கு ஓர் அடையாளத்தைத் தருகிறது. சிலம்பில் கலைஞர் செய்திருக்கும் மாற்றங்களை எடுத்துச்சொல்லியிருக்கும் முறை அருமையானது. கலைஞர் தம் பகுத்தறிவுக் கொள்கைக்கு ஏற்ப, மதுரை எரி படும் நிகழ்ச்சியைக் கையாண்டிருப்பதை நயம்பட இப்பகுதி உணர்த்துகிறது.

ம.பொ.சி யின் சிலப்பதிகாரப் பார்வை தனித்தன்மை மிக்கது. இதைப்பற்றிய கட்டுரையில், ம,பொ.சிஇளங்கோவடிகளை முதலில் தோன்றிய தேசியக் கவி என்று சுட்டிக்காட்டுவதையும், தேசியக் காப்பியமாகத் திகழ்வதையும், மங்கல நாண் என்று இக்காப்பியத்தில் சுட்டப்பட்டிருப்பது தாலியையே என்ற கருத்தையும் விரித்துரைப்பது இக்கட்டுரையின் சிறப்பு.

மு.வ நோக்கில் சிலப்பதிகாரம் பற்றிய தெளிந்த சிந்தனையை முன்வைக்கும் கட்டுரை, சிலம்பு குறித்த மு.வ வின் ஆய்வு நெறியை விவரிக்கிறது. வடு நீங்கும் சிறப்பு, தன் மனையகம் மறந்து, தன் தீது இலன் ஆகியவற்றை விரித்துரைக்கும் இடம் அறிந்து இன்புறக்கூடியதாக உள்ளது. கண்ணகி, மாதவிபண்பு நலன்களை மு.வ ஆராய்ந்துரைப்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ள இக்கட்டுரை, மாதவி, கோவலனுடைய காதலியாக ஒரு நெறிப்பட்டு வாழ்ந்ததை எண்ணும்போது, மாதவியைக்குறை கூறவே தோன்றும்; குறை கூறுவதற்கு மாறாக, அவளைப் போற்றிப் புகழவே தோன்றும் என்ற அவரது கருத்தை எடுத்துக்காட்டி இக்கட்டுரையை நிறைவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

சிலப்பதிகாரம் குறித்த பேரா. தி.சு .நடராசனின் நூல், பல்வேறு சிறப்புடையது. புதிய திறனாய்வு அணுகுமுறையில் பல கருத்துகளை முன் வைத்து எழுதப்பட்டுள்ள இந்நூலினை, நுணுக்கமாக 'சிலப்பதிகாரம் மறுவாசிப்பு' என்ற தலைப்பில் அமைந்த கட்டுரை. மார்க்சிய அறிவியலும், பின்னைஅமைப்பியல் நெறி முறையும்,பின்னை நவீனத்துவக் கருத்தமைவும் சிலப்பதிகாரத்திற்குத் தேவை என்ற நோகத்தில் எழுதப்பட்டிருக்கும் அப்பேராசிரியரின் கூரியபார்வைகளை நன்குணர்ந்து தெளிவுற எடுத்துக்காட்டியிருப்பது நூலை அணிசெய்கிறது. பேரா.தி.சு.ந, வின் கூரிய நோக்கினைப் புலப்படுத்தும் இக்கட்டுரை ஒரு நூலினை எவ்வாறு அணுகவேண்டும் என்பதைக் காட்டும்விதத்தில் உள்ளது. கடந்துபோன சங்க காலச் சமுதாய நிலையைக் கேள்விக்கு உட்படுத்தி, நிகழ்காலத்தை வம்புக்கிழுத்து, ஒரு தொலை நோக்கோடு வருகின்ற காலத்தின் கனவுகளை மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய கடப்பாடு கொண்டவராக இளங்கோவடிகள் காணப்படுகிறார் என்ற கருத்தோட்டத்தின் அடிப்படையில் அந்நூல் அமைந்திருப்பதை அலசி ஆராய்கிறது இக்கட்டுரை. சிலம்பு என்பது சமூக, அரசியல், பண்பாட்டுத் தளத்தில் அதிகாரம் அல்லது மேலாண்மையின் வெளிப்பாடாக உணர்த்துகிறது என்ற தி.சு.நவின் கருத்து சிந்தனைக்குரியதாகும். ஊழ்வினை உயிருடன் கூடிய ஒரு கதைமாந்தரைப் போலவே உள்ளார்ந்த சக்தியாக இயங்குகிறது என்ற கண்ணோட்டம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மாடலன் மறையோன் பண்பினைப் புதியதாக அணுகியிருக்கும் தி.சு.நவின் பார்வையை இந்நூலாசிரியர்கள் த ந்திருக்கும் விதம் பாராட்டும்படி உள்ளது. விளிம்பு நிலைக்கு எதிரான ஒரு கலகம் என்ற நோக்கில் மணிமேகலையைச் சுட்டிக்காட்டும் பகுதி குறிப்பிடத்தக்கது.கற்பு என்பது ஆணின் மொழி என்ற கருத்தியலை தி.சு.ந முன்வைத்திருப்பது சிந்திக்கத்தக்கதாக உள்ளது. கண்ணகி மார்பகத்தை வட்டித்து எரிந்ததை திசு..ந, ''எதிர்ப்பின் அல்லது புரட்சியின் உருவகம்'' என்று சுட்டிக்காட்டியிருப்பதை இக்கட்டுரையில் எடுத்துக்காட்டும் நூலாசிரியர், இளங்கோவடிகளின் இக்காப்பியம் சேரனை மையமிட்டதாக உள்ளது எனவும், அதனால் இது சேரர் காப்பியம் என்பதற்கான காரணத்தை அந்நூல் விளக்கியிருப்பதையும் இக்கட்டுரை எடுத்துக்காட்ட்டத்தவறவில்லை. பொதுமைக் காப்பியம் என்ற கருத்திற்கு மாறாக இச்சிந்தனை படர்ந்திருப்பது மேலும் ஆராயத்தூண்டுகிறது.

புதிய தமிழ்க்கவிதைகளில் சிலப்பதிகாரத்தின் தாக்கம் என்பது இறுதிக் கட்டுரை. புதுப்புதுக் கோணங்களில் எழுதப்பட்ட துணுக்குக் கவிதைகளை எடுத்துக் காட்டிச் சிலம்பின் தாக்கத்தால் விளைந்திருக்கும் புதுபுதுப்பார்வைகளை எடுத்துரைக்கிறது. தற்காலத்திய சிந்தனையில் சிலம்பின் கதை எவ்வெவ்வாறு உருவெடுத்திருக்கிறது என்பதைச் சுருங்க உரைக்கும் இறுதிக்கட்டுரை சுவையான தகவல்களைத் தருகிறது.

சிலப்பதிகாரம் குறித்து வெளிவந்த நூல்களைப் படித்தறிந்தும், நுணுகி ஆராய்ந்தும் வெளிவந்த இந்நூலில், சுப்பிரமணிய ஆச்சாரியார், அ.சிதம்பரநாதனார், பொ.திரிகூடசுந்தரம், போன்றோர் எழுதிய சிலப்பதிகாரத்திறனாய்வு பற்றிய நூல்களையும் சேர்த்திருந்தால் இன்னும் கூடுதலான சிறப்பை இந்நூல் பெற்றிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.
 


 

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்
நூல் ஆசிரியர்கள் :     பேரா. இரா.மோகன்,  நிர்மலா மோகன்

வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு, தி.நகர்.
சென்னை. 17.
விலை ரூ 120.00
 



பேராசிரியர் இராம.குருநாதன்

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்