பெண் இனம் போற்றும் பெருந்தலைவர்
எம்.ஜி.ஆர் (தொடர் - 14)
முனைவர் செ.இராஜேஸ்வரி
எம்ஜிஆர் ஆத்ம நேசர்
படிப்பறிவில்லாத பெண்கள் எம்ஜிஆரை உண்மையான ஏழைகளின் தோழனாகவும் அனாதை
இரட்சகராகவும் கருதி அவரிடம் தங்கள் மனதைப் பறி கொடுத்து விடுகிறார்கள்.
அவர் உருவாக்கிய சினிமா பிம்பத்தை உண்மை என நம்பி இவர்கள் நிஜவாழ்வில்
ஏமாந்து போகிறார்கள், என்று எம்ஜிஆர் வாழ்ந்த காலத்திலேயே சில
அறிவுஜீவிகள் அவரை விமர்சித்து கட்டுரைகளும் கதைகளும் எழுதி
வெளியிட்டனர். எம் ஜி ஆரை பெண்கள் ரகசியமாக காதளித்தனரா? அவ்வாறு
காதலித்திருந்தால் அது தவறா/ அதை விமர்சிக்கலாமா? இது போன்று கணவன்
அல்லாத அன்னிய ஆடவரை காதலிக்கும் பழக்கம் தமிழ் நாட்டில் இருந்ததா?
அதுவும் விமர்சிக்கப்பட்டதா என்று பல கேள்விகள் இங்கு எழுகின்றன.
இவற்றுக்கான பதில்களை விளக்கமாக அறிய முனைவோம்.
பெண்களுக்கு தனி காட்சி .
எம்
ஆர் ராதாவால் எம் ஜி ஆர் சுடப்பட்டு பின் சிகிச்சை பெற்று சுகமடைந்து
வந்த பிறகு நடித்து வெளிவந்த படம் காவல்காரன். இந்தப் படத்தில் எம்ஜிஆர்
முன்பிருந்ததை விட ஒல்லியாக இளமையாக அழகாக தோற்றமளித்தார். ஆனால் குரல்
மட்டும் மாறி இருந்தது. எம்ஜிஆர் இறந்து விடுவார் என்ற புரளியிலேயே
திமுக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக அரசின் ஆட்சியை
பிடித்தது. காவல்காரன் படமும் வெளிவந்து வெற்றிநடை போட்டது. வெற்றி
விழாவில் தமிழக முதல்வர் கலந்துகொண்டு விருதுகள் வழங்கினார். அப்போது
எம் ஜி ஆருக்கு வழங்கப்பட்ட நான்கடி உயர வெள்ளி பதிப்புருவம் அவர்
நினைவில்லத்தில் இன்றும் இருக்கிறது.
காவல்காரன் படத்த்துக்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது எனவே பெண்களுக்காக
திரையரங்குகளில் தனி காட்சி திரையிடப்பட்டது. சென்னை சேலம் போன்ற
ஊர்களில் இதுபோன்ற காட்சிகள் பெண்களுக்காக பிரத்தியேகமாக
திரையிடப்பட்டன. பெண்கள் காலையில் பத்து மணிக்கு வந்து டிக்கெட்
கிடைக்காமல் மதிய காட்சிக்கும் டிக்கெட் கிடைக்காமல் முதல் காட்சியும்
பார்க்க முடியாமல் இரவு காட்சி பார்த்துவிட்டு இருட்டில் தனியாக போவதில்
இருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களுக்கு பகலில் 2 மணி காட்சி
தனியாக போடப்பட்டது. இது பெண்கள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு உதவியாக
இருந்தது. இவ்வாறான ஏற்பாடுகள் வேறு எந்த நடிகருக்கும் வேறு எந்த
காலத்திலும் நடந்தது கிடையாது.
எம்ஜிஆர் தன் ரசிகர்களின் மீது கொண்டிருந்த அன்பும் அவர்களின்
பாதுகாப்பின் மீது கொண்டிருந்த அக்கறையும் அவர்கள் பத்திரமாக நேரத்தோடு
வீடு திரும்ப வேண்டும் என்ற பாதுகாப்புணர்ச்சியும் அவர்களுக்கு என்று
தனி காட்சி திரையிடப்பட்டதரகு முக்கிய காரணம் ஆகும். இந்த அக்கறையை
உணர்ந்து கொண்டதால்தான் பெண்கள் எம்ஜிஆர் மீது மிகுந்த பற்றும் பாசமும்
வைத்ததிருந்தனர். ஆனால் இதை தவறாக புரிந்து கொண்ட சில ஆண்கள் பெண்களின்
அன்பை கொச்சைப்படுத்தி அவர்கள் எம்ஜிஆர் மீது வைத்துள்ளது ஒருதலைக்காமம்
எனக் கருதி அதை எம்ஜிஆர் தன சினிமா படங்கள் மூலமாக மேலும் வளர்த்து
விடுவதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தி சில மேடைகளில் பேசியும்
நூல்களில் எழுதியும் வந்தனர். அவர்களுக்கும் இந்த நூல் பதில்
சொல்லவேண்டிய பொறுப்புணர்வை கொண்டிருக்கின்றது.
தொல்காப்பியம் காட்டும் உலா
ஒரு நாயகனை பெண்கள் அவனுடைய சிறப்பு குணங்களுக்காக காதலிப்பது நம்முடைய
பாரம்பரியத்தில் காணப்படுகின்ற ஒரு இலக்கிய பண்பாட்டு கூறாகும்.
தொல்காப்பியம்
‘ஊரோடு தோற்றம் உரித்தென மொழிப’
என்று ஒரு நாயகன் ஊர்வலம் வருவதை பாராட்டி இலக்கியம் அமைக்கலாம் என்று
இலக்கணம் . இவ்வாறு ஊர்வலமாக வரும் நாயகனை அவ்வூர் பெண்கள் எட்டு வயது
முதல் 42 வரை உள்ளவர்கள் அவரவர் வயதுக்கும் அனுபவத்துக்கும்
பருவத்துக்கும் தக்கவாறு ரசித்து இன்புறுவது இலக்கியத்தில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட எனப்படும் சிற்றிலக்கிய வகை ஆகும்.
உலா இலக்கியம்
உலா இலக்கிய வகையில் இறைவன் அல்லது மன்னன் நாயகனாக ஊர்வலம் வர அவனை
பெண்கள் கண்டு ரசிப்பதும் அவன் மீது உள்ள காதலால் அவனை பார்க்க ஓடி
வரும்போது அவர்களின் கை வளையல்கள் கழன்று விழுவதும் இடுப்பில்
அணிந்திருக்கும் மேகலைகள் நெகிழ்வதும் வர்ணிக்கப்பட்டுள்ளது.
இறைவன் உலா வரும்போது அவனைக் கண்டு ரசிக்கும் பெண்களைப்பற்றிய இலக்கிய
வகையாக ‘ஞான உலா’ சோழ மன்னர்கள் உலாவரும் போது அவர்களை கண்டு ரசித்த
பெண்களை விளக்கும் இலக்கியமாக ‘மூவருலா’ போன்ற நூல்கள் தமிழ்
இலக்கியத்தில் காணப்படுகின்றன. வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டு
பெண்கள் ரசிப்பது இலக்கியங்களில் காணப்படுகின்ற ஒரு விஷயமாக இருப்பதனால்
சினிமாவும் ஒரு கலைப்படைப்பாக இருப்பதனால் சினிமாவில் கதாநாயகனாக
நடிக்கும் எம்ஜிஆரை அவருடைய சினிமா தொடர்பான ஆடல் பாடல் வீரதீர
காட்சிகளுக்காக ஆண்களைப் போல பெண்களும் ஒரு கலை நோக்கத்துடன் ரசிப்பதில்
தவறு ஒன்றும் இல்லை. கலையை ரசிப்பது நம் பாரம்பரியத்தில் இருந்து
வந்துள்ளது.
மடலேறுதல்
ஒரு ஆண் தான் விரும்பிய பெண்ணை மணப்பதற்கு அவளுடைய சம்மதம்
கிடைக்காதபோது ஊராரிடம் அந்த வழக்கை கொண்டு செல்வதற்காக பனங்கருக்கினால்
செய்த குதிரையின் மீது ஏறி அந்த குதிரையின் முகத்தில் தான் விரும்பும்
பெண்ணின் படத்தை ஓவியமாக வரைந்து தொங்கவிட்டு ஊருக்குள் சுற்றி வருவான்.
அப்போது அந்த பனங்கருக்கு அவனுடைய கால்களை உடம்பை அழுத்தி இரத்தமாகக்
கொட்டும். இதைக் கண்ட ஊர் பெரியவர்கள் அவன் அவள் மீது வைத்திருக்கும்
காதலை அவளுக்கு எடுத்துரைத்து அவனை திருமணம் செய்து கொள்ளும்படி
அறிவுறுத்துவார்கள். இந்த மடலேறுதல் வழக்கம் ஆண்களுக்கு மட்டுமே
உரியதாகும். பெண்களுக்கு கிடையாது.
பெண்கள் தான் விரும்பிய ஒருவனை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்
என்று ஊராரை பார்த்து கேட்கும் பழக்கம் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இல்லை.
ஆனால் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் மடலேறுதல்
பெண்ணுக்கும் உண்டு என்பதை நிரூபித்துள்ளார்.
திருமடல் காட்டும் இறைமை காதல்
திருமங்கையாழ்வார் பெருமாளின் மீது காதல் கொண்டு தன்னை பெண்ணாக பாவித்து
திருமாலோடு சேர வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட இரண்டு பக்திநூல்கள்
பெரிய திருமடல் சிறிய திருமடல் என்று அழைக்கப்படுகின்றன. இது தவிர வேறு
சில மடல் நூல்களும் உண்டு. மடல் நூல் வளமடல் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
இங்கு பக்தர் இறைவனோடு சேரும் நிலையை ஜீவாத்மா பரமாத்மாவோடு சேர்வதாக
பக்திமார்க்கத்தில் இருப்பவர்கள் விதந்து ஓதுகின்றனர்.
கண்ணன் என் காதலன்
பாகவதத்தில்
கண்ணன் அனைத்து கோபிகையருடனும் இருப்பதாக ராஸ லீலை குறிப்பிடுகின்றது.
கிருஷ்ணணனின் வேணு கானத்தில் மயங்கிய ராதை மற்றொரு மேய்ப்பனின் மனைவி.
கண்ணனை பாரதியார் அம்மா அப்பா சேவகன் ஆண்டான் அடிமை காதலன் காதலி என
பலவகையிலும் உருவகப்படுத்தி கண்ணன் பாட்டு என்ற நூலை எழுதியுள்ளார்.
இதில் அவர் தன்னை ஆணாக கொண்டு கண்ணனைப் பெண்ணாக கொண்டு கண்ணம்மா என்
காதலி என்று பாடல்கள் எழுதி இருக்கிறார். அவை நம்மிடையே மிகவும்
பிரபலமானவையாகும். பின்னர் தன்னை பெண்ணாக உருவகப்படுத்தி கண்ணனை ஆணாகக்
கொண்டு கண்ணன் என் காதலன் என்ற பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.
எம்ஜிஆரும் கண்ணன் என் காதலன் என்ற பெயரில் ஒரு படத்தில்
நடித்திருக்கிறார்.
பாண்டி சாமி வழிபாடு
இறைவனை அவனுடைய இயல்புகளுக்காக பெண்கள் காதலிக்கும் பழக்கம் நம்மிடையே
இருந்து வந்திருக்கிறது. இன்றைக்கும் மதுரை பகுதியில் பல கிராமங்களில்
பெண்கள் தங்களை பாண்டி சாமி பிடித்திருப்பதாக கூறுவதுண்டு. இவர்களிடம்
சாமி இருப்பதால் இவர்களை மற்றவர்கள் மிகுந்த மதிப்போடும் மரியாதையோடும்
நடத்துவார்கள். இப்பெண்கள் தன் கணவனோடு சேர்ந்து குடும்பம் நடத்துவது
கிடையாது. தீட்டு வீடு சாவு வீட்டில் சாப்பிடுவது கிடையாது
வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீட்டை கழுவி மெழுகி தானும் குளித்து
முழுகி பாண்டி சாமி வரவுக்காக சாம்பிராணி புகைய விட்டு
காத்திருப்பார்கள். இரவில் பாண்டி சாமி வந்து தங்கி திரும்ப காலையில்
சென்று விடுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது காலையில் இவர்களிடம் கேட்கும்போது
பாண்டி சாமி தன்னோடு இருந்து உறவாடியது, ஊஞ்சலாடியது என்று மறுநாள்
காலையில் சொல்வார்கள். அருகில் யாரும் இல்லாத போது ஆள் இருப்பதாகக்
கருதிக் கொண்டு பேசுவதை சிரிப்பதை ஸ்கிசோஃப்ரினியா என்ற மனநோய் என
உளவியல் நிபுணர்கள் கூறுவதுண்டு. ஆனால் இந்த பாண்டி சாமி பிடித்தவர்கள்
சிலர் குறி சொல்வதும் உண்டு; பிறருக்கு விபூதி கொடுத்து பிறருடைய குறையை
ஆற்றுகின்றனர். இதுபோன்ற சில விஷயங்களை பார்க்கும் பொழுது இவர்கள் ஒரு
sorceress போல விளங்குகின்றனர்.
பாண்டி முனி பிடித்தவர்களில் ‘பட்ட முனி பிடித்தவர்கள்’ என்று ஒரு சிறு
பிரிவினர் உண்டு. அந்தப் பட்ட முனி பிடித்தவர்கள் எந்த நாளிலும் கணவனை
அருகில் அனுமதிப்பது கிடையாது. கணவன் என்று ஒருவர் அந்த வீட்டிற்குள்
நுழையவே முடியாது. இப்பெண்களும் பாண்டி சாமியுடன் கற்பனையில் ஒரு
வாழ்க்கை நடத்துகின்றனர். நானா நோய் நிபுனரிடம் இவர்கள் குறித்து
கேட்டால் ‘இவர்கள் வழிபடப் பட வேண்டியவர்கள் அல்லர் சிகிச்சை மேற்கொள்ள
வேண்டியவர்கள்’ என்பார்.
இயேசு கிறிஸ்துவின் வின் மணவாட்டி நான்
கிறிஸ்தவ மதத்தில் இயேசுவை மணவாளனாக கொண்டு தன்னை மணவாட்டியாக கொண்டு
பாடல்கள் பாடுவதும் ஜெபிப்பதும் திருமறையில் இது சார்ந்த சில வசனங்கள்
இருப்பதும் நடைமுறையில் உள்ளது. உன்னதப்பாட்டு என்ற பகுதி மிஸ்டிக் லவ்
என்று சொல்லப்படும். இது இறைமை காதலை பற்றியது. இதில் ஆண்டவர் தான்
தேர்ந்தெடுத்து அன்பு செலுத்திய இஸ்ரவேலரை நேசித்த விதம் ஒரு காதலன் தன்
காதலியை நேசித்தது போல் இருக்கின்றது என்பதாகவும் ஆண்டவரை ஆணாகக் கொண்டு
திருச்சபையை பெண்ணாக கொண்டு பாடப்பட்ட பாடல் என்றும் இருவேறு
கருத்துக்கள் நிலவுகின்றன.
உன்னதப்பாட்டதில் தன் நேசரைத் தேடும் ஒரு பெண்ணிடம்
உன் நேசர் மற்றவர்களை விட சிறந்தவரா? என்று கேட்கும் போது அவள்
என் நேசர் சிவப்பானவர்;
அவரது தலை சுத்தமான தங்கத்தை போன்றிருக்கும்;
அவரது கன்னங்கள் மணம் மிகுந்த வாசனை பூக்கள் நிறைந்த தோட்டம் போல்
இருக்கும்;
அவரது உதடுகள் லீலி மலர்களைப் போல் இருக்கும்
அவரது கைகள் ஸ்படிக பச்சை நகைகளால் அலங்கரிக்கப் பட்டது போல இருக்கும்
என்கிறாள். அந்த நேசர் இந்த பெண்ணைப்பற்றி வருணிக்கும்போது
என் அன்பே என் மணமகளே
உன் அன்பு மிக அழகானது
உன் அன்பு திராட்சை ரசத்தை விட சிறந்தது
என் அன்பே நீ எருசலேமை போன்று இனிமையானவள்
கம்பீரமான நகரங்களை போன்றவள்
எனக்காக ஒரே ஒரு பெண்ணே இருக்கிறாள்;
எனது புறாவே
நீயே எனது பரிபூரணமானவள்
என்று கூறுகிறார். இதில் வரும் திராட்சை ரசம் இறையன்பை குறிக்கும்
குறியீடாகும். சூஃபி தத்துவத்தில் இறையன்பு திராட்சை ரசமாகவே
குறிக்கப்படுகிறது. உமர் கய்யாமின் பாடல்கள் epicurean philosophy
பற்றியது அல்ல. அவை இறைவனும் மனிதனும் ஆணும் பெண்ணுமாக காதல் கொள்வது
போல புனையப்பட்டவை ஆகும்.
ஆண்டவர் காட்டும் பொது அன்பும் தனி அன்பு
கிறிஸ்தவ சமயத்தில் ஆண்டவர் எல்லோரிடத்திலும் காட்டும் பொதுவான அன்பு
அகபே [agabe] என்ற சொல்லால் பழைய ஏற்பாட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரவேலரை மட்டும் தேர்ந்தெடுத்து அவரிடத்தில் காட்டும் அன்பு kerene
என்ற கிரேக்கச் சொல்லால் புதிய ஏற்பாட்டில் விளக்கப்பட்டுள்ளது. அவன்
அருளால் அவன் தாள் வணங்கி என்று சைவ சமயக்குரவர் சொல்வது போல அவன் அருள்
இருந்தால் மட்டுமே அவனை வணங்கவும் அவனை திருப்பாதங்களை சென்றடைய
முடியும் என்பதால் அவன் அருளால் அவனை வணங்குதல் என்பது kerene என்ற
அன்பு வகையைச் சார்ந்ததாகும். இந்த வகையைச் சார்ந்தது தான் இறைமை காதலை
விவரிக்கும் காதல் பாட்டான உன்னதப்பாடல்கள்.
உரோம கத்தோலிக்க சமயத்தில் ...
இறைவனை மணவாளனாகவும் தன்னை மணவாட்டியாக கருதுகின்ற போக்கும் கத்தோலிக்க
மதத்தில் உண்டு. கத்தோலிக்க மதத்தில் கன்னியாஸ்திரியாக மடத்தில் சேரும்
பெண்கள் தங்களை மணவாட்டியாகக் கருதி கோயிலுக்கு மணவாளனுக்கு
திருமணத்தின் போது எடுத்துச் செல்கின்ற தூப கலசங்களைக் காணிக்கையாகக்
கொண்டு செல்வர். இவர்கள் இறைவனையே மணவாளனாக ஏற்றுக் கொண்டதால் வேறு
மானிடரை திருமணம் முடிக்க மாட்டார்கள்.
முஸ்லிம் மதத்தில் இறைக் காதல்
இந்து கிறிஸ்தவ மதங்களைப் போல முஸ்லிம் மதத்திலும் பெண்கள் தங்கள்
கணவன்மார் அல்லாத ஒரு மாற்று சக்தியிடம் காதல் கொள்ளும் பாரம்பரியம்
இருந்து வந்துள்ளது. அவர்கள் பள்ளிவாசலில் அடங்கியுள்ள அவுலியாக்கள்
மீது காதல் கொள்ளும் சம்பவங்கள் நாவல்களில் காணக்கிடைக்கின்றன. மதுரை
அருகே திருப்பரங்குன்றத்தில் உச்சியில் காணப்படும் சிக்கந்தர்
பள்ளிவாசலில் சிக்கந்தர் என்ற தளபதி அடங்கியுள்ளார். அந்தத் தளபதி அங்கு
வந்து தங்கும் ஒரு இளம் பெண்ணிடம் காதல் கொண்டு இருப்பதாக சம்பவங்கள்
உண்டு.
மதுரை இஸ்மாயில் புரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ். அர்ஷியா தன்னுடைய
இஸ்லாமிய சமுதாயத்தைப் பற்றி விரிவாக இரண்டு மூன்று நாவல்கள்
எழுதியுள்ளார். அதில் அப்பாஸ்பாய் தோப்பு என்ற நாவலில் ஒரு பெண் எவ்வாறு
சிக்கந்தர் பள்ளிவாசலில் இரவில் அடிக்கடி தங்குவதும் அப்போது சிக்கந்தர்
அவுலியாக்கள் அவளோடு வந்து உறவாடுவதும் விளக்கப்பட்டுள்ளது. அவளுக்கு
வரன் பார்த்த காலத்தில் இருந்து அவள் கணவன் இறக்கும் வரை இச்சம்வம்
நடந்துள்ளது. நாவலில் விளக்கப்படும் அந்த பகுதி வருமாறு
‘’வரன் வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அடுத்தடுத்து அவள் போய் மலைமேல்
தங்கும்போது அவளால் புதுப்புது விஷயங்களை உணர முடிந்தது. அவள் அருகில்
சிக்கந்தர் அவுலியா இருப்பதாக அவளுக்குள் நினைவு தளும்பும்;
அவர்களுக்குள் அவள் தஞ்சம் புகுந்து இருப்பது போலவும் பாதுகாப்பு
வளையத்தில் அவளை ஆகர்ஷித்து வைத்து அவர் அபயம் அழிப்பது போலவும் உணர்வு
எழும்பும்.
பல இரவுகளில் அவள் மடியில் அவர் தலை வைத்துப் படுத்திருப்பார். அதை அவள்
யாரிடமும் சொன்னதில்லை. சொன்னால் நம்ப மாட்டார்கள் என்பதை விட தன்னை
பொறாமையுடனும் அல்லது தள்ளிவைத்த பார்ப்பார்கள் என்பதை அவர்
உணர்ந்திருந்தாள். சொல்லாமல் இருப்பதே அவளுக்கும் சௌகரியமாக இருந்தது
அதனாலேயே அவளை ஏற்றிருந்தாள்.’’ [அப்பாஸ்பாய் தோப்பு, ப.70]
]இவ்வாறான விஷயங்கள் அனைத்து மதங்களிலும் கம்பீரமாக ஆணின் மீது பெண்கள்
காதல் கொள்ளும் பழக்கம் இருந்திருப்பதால் ஆண் படைப்பாளிகள் எம் ஜி ஆரை
ரசிக்கும் பெண்களை அவர் மீது காதல் கொள்ளும் பெண்களாகவே கண்டு
விமர்சனங்களை எழுதி குவித்துவிட்டனர்.
எம் ஜி ஆர் மீது பெண்களுக்கு காதலா?
கம்யுனிச எழுத்தாளர்கள் எம்ஜிஆர் மீதும் பெண்கள் காதல் கொள்வதாக கருதி
பல படைப்புகளை படைத்துள்ளனர். ஆனால் உண்மையில் எந்தப் பெண்ணும் எம்ஜிஆர்
என் ஆத்ம நேசர் என்று நினைப்பது கிடையாது. எம்ஜிஆரை போல ஒரு மகனோ
சகோதரனோ ஒரு பொறுப்பான கணவனோ இருந்திருந்தால் நன்றாக இருக்குமே வாழ்க்கை
என்று நினைப்பார்களே தவிர எம்ஜிஆரையே தன்னுடைய கணவனாக காதலனாக மாற்றிக்
கொள்வது கிடையாது. எங்கேயோ ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம்.
விதிவிலக்குகள் எல்லாம் விதிகள் ஆகிவிடாது. இவற்றை உணராமல் எம் எஸ் எஸ்
பாண்டியன் என்பவர் தனது இமேஜ் ட்ராப் என்ற நூலில் எம்ஜிஆர் படங்களை
பார்க்கும் பெண்கள் verbal orgasm பெறுவதாக சுட்டி இருப்பது தவறான
நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த கருத்தாகும்.
சினிமாவுக்கு போன சித்தாளு
ஜெயகாந்தனின் சினிமாவுக்கு போன சித்தாளு கதையில் சித்தாள் வேலை
பார்க்கும் ஒரு பெண் ரிக்க்ஷா ஓட்டும் தன் கணவனை எம்ஜிஆர் ஆகவே கருதி
நேசிப்பாள். அவள் மனதில் எம்ஜிஆர் என்ற பிம்பம் மிக ஆழமாக பதிந்து
விட்டால் அவள் எம்ஜிஆரை தான் நேசிக்கிறாள் என்று நினைத்து அவள் கணவன்
அவளை வெறுத்து பேசுவான். எம்ஜிஆர் கொலை முயற்சிக்கு ஆளானது தெரிந்ததும்
அந்தப் பெண்ணுக்கு பைத்தியம் பிடித்துவிடும். ஆனால் அவள் கணவன் அவளை
ஏற்றுக் கொள்வான். இவ்வாறாக அந்த கதை முடிந்தது.
இந்தக் கதை பற்றி எம் ஜி ஆரிடம் சொன்னபோது எம்ஜிஆர் ‘’எங்கேயோ ஓரிரண்டு
இடங்களில் இவ்வாறு நடக்கலாம்; அதை ஏன் நாம் பெரிதுபடுத்த வேண்டும்.
விட்டுவிடுங்கள் ‘’ என்று சொல்லிவிட்டார். இதனால் ஜெயகாந்தன் மீது அவர்
எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டவில்லை. ஆனால் ஒரு சில வருடங்களுக்குப்
பிறகு ஜெயகாந்தன் எழுத்துலகை விட்டு விலகிவிட்டார்.
சூ சமுத்திரத்தின் தொடர் கதை
எம்ஜிஆர் இறந்த பிறகு சு சமுத்திரம் ஒரு தொடர் கதையை வார இதழில்
எழுதினார். அதில் எம்ஜிஆரை நேசிக்கும் ஒரு பெண் அவர் இறந்ததும் அவருடைய
உடலை பார்க்க சென்னைக்கு வந்து சென்னை கடற்கரையில் அவருடைய சமாதி
அருகில் அழுதுகொண்டே இருப்பாள். அப்பொழுது குப்பத்து ஆண்களால் அவளுடைய
பெண்மைக்கு பங்கம் ஏற்படும் . அவ்வமயம் அவள் எம்ஜிஆர் வந்து தன்னைக்
காப்பாற்றுவார் என்று கதறி அழுவதும் ஆனால் எம்ஜிஆர் வந்து அவளை
காப்பாற்ற காப்பாற்றாததால் அவள் பைத்தியம் பிடித்து அங்கு அலைவதாகவும்
அந்தக் கதையை எழுதி இருப்பார்.
எம் ஜி ஆர் ரசிகை என்றால் வேண்டாம்
பல ஆண்கள் எம்ஜிஆரை ரசிக்கும் பெண்களை தவறானவர்கள் என்று கருதுவது ஒரு
நடைமுறை போக்காக இருந்தது. ஒரு நல்ல ஆண்மகன் அல்லது ஒரு லட்சியவாதி
அல்லது ஒரு முன் மாதிரியாக விளங்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதால்
பெண்கள் அவரை காதலிக்கின்றனர் என்று நினைப்பது தவறான நம்பிக்கை ஆகும்.
இது ஒருவகையான ஆணாதிக்க போக்கு.
கற்பு பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் புராணங்களில் விளக்கும்போது பிறர்
நெஞ்சு புகா கற்பு என்று ஒரு சொற்றொடர் வரும். ஒரு பெண் தன் கணவனைத்
தவிர வேறு ஒருவனை நினைப்பது தவறு என்பது போல பிற ஆடவனும் தன்னை
நினைப்பதும் தன்னுடைய கற்புக்கு களங்கம் என்ற கருத்தாக்கம் ஒரு
காலத்தில் இருந்தது. எனவே எந்த பெண்ணும் தன் கணவனைத் தவிர வேறு எவரையும்
தன் தன் மனதளவில் கூட விரும்பக் கூடாது என்ற ஆழமான எண்ணம் ஆண்களிடையே
ஏற்பட்டது.
‘உனக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் கூட 30 ஆண்டுகளுக்கு முன்பு
பெண்கள் எவரும் ஆண் நடிகர்களின் பெயரை சொல்ல மாட்டார்கள். நடிகைகளின்
பெயர்களை மட்டும் தான் குறிப்பிடுவர். ஆனால் இன்று தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளில் பெண்களிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று
கேட்டால் அவர்கள் சூர்யா-விஜய்-அஜித் என்று தாராளமாக சொல்கிறார்கள்.
அருகில் கணவரை வைத்துக் கொண்டே செல்கிறார்கள். எந்த கணவரும் இதற்காக
கோபித்துக் கொள்வது கிடையாது. இப்போது இருக்கும் சிந்தனை மாற்றம்
எம்ஜிஆர் நடிக்கும் காலத்தில் இல்லாததால் எனக்கு பிடித்த நடிகர் எம் ஜி
ஆர் என்று சொல்வதற்கு பெண்கள் தயங்கினர் தயங்கினர்.
பொய் பிம்பத்த்தை உடைத்தெறிந்த பெண்கள்
ஒரு பெண் எம்ஜிஆர் பிடிக்கும் என்று சொன்னாலே அந்தப் பெண் தவறானவள்
என்று கருதி எம்ஜிஆர் படத்துக்கு போகும் பெண்ணை திருமணம் செய்யக் கூடாது
எம்ஜிஆர் படம் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என்று சில
எழுதப்படாத சட்ட திட்டங்களையெல்லாம் இளைஞர்கள் கொண்டிருந்த காலம்
ஒன்றிருந்தது. எம்ஜிஆர் படத்தில் காதல் காட்சிகளில் எம்ஜிஆர் நெருங்கி
நடிப்பார் என்று என்பதால் அவர் படத்திற்கு பெண்களை அழைத்துச் செல்லக்
கூடாது என்று பேசி வந்த காலமும் இருந்தது. ஆனால் இந்த போலியான எண்ணங்களை
, தவறான நம்பிக்கைகளை எல்லாம் முறியடித்து எம்ஜிஆரை முதலமைச்சர்
ஆக்கியவர்கள் அவருடைய ரசிககைகள் என்பது முற்றிலும் உண்மை. எம் ஜி ஆர்
என்பவர் சினிமா பிம்பம் அல்ல அவர் நிஜத்தில் நல்லவர் என்பதை சமுகத்தின்
கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்கள் அவரது ரசிகைகள். உறுதியான
முடிவெடுத்து அவருடைய கட்சிக்கு அமோக ஆதரவளித்து அவரை வெற்றி
படிக்கட்டில் ஏற்றிவிட்டவர்கள் அவர்களே.
ஆன்மிகப் புரட்சியும் அரசியல் புரட்சியும் செய்த பெண்கள்
ஆண்களின் ஆணாதிக்க சிந்தனைகளை கட்டுப்பாடுகளை உடைத்து நொறுக்கி
அவருக்காக கடவுளிடம் வேண்டி அவரைப் இரண்டு முறை பிழைக்க வைத்தவர்கள்
அவருடைய ரசிக ரசிகைகள். அவர் காலத்தில் நல்லவர் என்று பெயர் பெற்ற
நடிகர்களையும் தலைவர்களையும் விட இன்றுவரை அவரை நல்லவர் என்று மக்களின்
நினைவில் நிறுத்தி அவருக்கு கோயில் கட்டி அவரை தெய்வமாகவும் வாழ்வின்
வழிகாட்டியாக முன்னோடியாகவும் கொண்டு அடுத்த தலைமுறையினரை அதற்கு
தயார்படுத்தி வைத்திருப்பவர்கள் ரசிகையர் மட்டுமே. இது வேறு எந்த
நடிகருக்கும் தலைவருக்கும் உலகில் எங்கேயும் யாருக்கும் கிடைக்காத
பெரும்பேறு ஆகும்
ரசிக வாரிசுகள்.
பெண்கள் . தங்கள் பிள்ளைகளையும் பேரக் குழந்தைகளையும் எம்ஜிஆர்
ரசிகர்களாக வளர்த்தனர். ஒரு பெண் படித்தால் ஒரு குடும்பமே படித்ததாகும்
என்றார் ராஜாஜி. ஒரு பெண் எம் ஜி ஆர் ரசிகையாக இருந்தால் அவருடைய
பிள்ளைகளும் பெறக் குழந்தைகளும் எம் ஜி ஆர் ரசிகர்களாகவே
வளர்க்கப்படுவர். அதனால் தான் எம் ஜி ஆர் காலத்துக்கு பிறகு பிறந்த
ஆண்கள் கூட எம் ஜி ஆர் ரசிகர்களாக இருக்கின்றனர். இன்றும் எம் ஜி ஆர்
விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. எம் ஜி ஆர் நினைவு நாள்
மற்றும் பிறந்த நாளன்று அவரை ஏழை எளிய மக்களும் நினைவு கூர்கின்றனர்.
ரசிப்பில் இருந்து பக்தி என்ற ஏற்றம்
எம்ஜிஆர் ரசிகைகள் ரசிப்பது ஏதோ கற்புக்கு கேடு விளைவிக்கும் செயல்
என்ற நிலை மாறி எம்ஜிஆர் ஒரு தலைவர் ஒரு தெய்வம் என்ற நிலைக்கு அவரை
உயர்த்தியவர்கள் அவருடைய ரசிகர்கள் மற்றும் அதில் சம பங்கு கொண்ட
அவருடைய ரசிகைகள் என்று உறுதியாகச் சொல்லலாம். எம்ஜிஆர் இரசிப்பது
கற்புக்கு கேடான செயல் அல்ல ஒரு நல்ல மனிதருக்கு அளிக்கும் நியாயமான
ஆதரவு என்பதை இன்றைக்கு புரியவைத்தவர்கள் எம்ஜிஆர் ரசிகைகள். அவர்
நடித்த காலத்தில் எம்ஜிஆர் ரசிகர்களை பற்றி எம்ஜிஆர் புரிந்து
கொண்டிருந்த அளவுக்கு எதிர்க்கட்சியினரும் எதிரணியினரும் புரிந்து
கொள்ளவில்லை.
எம்ஜிஆர் தன்னை ரசிக்கும் பெண்கள் மற்றும் தாய்க்குலம் தன்னை கைவிட
மாட்டார்கள் என்றும் தன்னை நினைவில் வைத்திருப்பார் என்று நம்பினார்.
பெண்களின் அன்பு என்றைக்கும் வாழவைக்கும் என்பதை என்று எம் ஜி ஆர்
உறுதியாக நம்பியதால் தான் எண்ணை வாழவைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே
என்று கூட்டங்களில் அவர்களை குறிப்பிட்டார். அவர் நம்பிக்கை உண்மை
ஆயிற்று. இன்றளவும் ஒரு தாய் தன் பிள்ளைகள் மற்றும் தனது பேரப்
பிள்ளைகள் மனதில் எம்ஜிஆர் நல்லவர் என்ற விதையை விதைத்தார். அந்த விதையே
தலைமுறை தலைமுறையாக எம்ஜிஆரை மக்கள் தலைவராக இதய தெய்வமாக வாழவைத்துக்
கொண்டிருக்கிறது.
எம் ஜி ஆர் நல்லவர் என்ற பெயர் பெற்றதோடு கெட்டவன் என்ற பெயர் பெறாமல்
வாழ்ந்தார். அவர் இறந்த பின்பு கருணாநிதி முதல்வரானதும் எம் ஜி ஆர் தன
பெயரிலோ தனது உறவினர்கள் பெயரிலோ எங்கேனும் சொத்து வாங்கியிருக்கிறாரா
என்று தன கட்சியினரை அனுப்பி தகவல் சேகரிக்க சொன்னார். அவர்கள்
வெறுங்கையுடன் திரும்பி வந்தனர். எம் ஜி ஆர் முதல்வரான பிறகு ஒரு
இடத்தில் கூட தன பெயரிலோ தனது உறவினர்கள் பெயரிலோ சொத்து
வாங்கியிருக்கவில்லை. தனது சொத்துக்களை மக்களுக்கும் கட்சிக்கும் எழுதி
வைத்து விட்டு இறந்தார்.
பெண்கள் எம் ஜி ஆரை நல்லவர் என்று நினைத்தே ரசித்தனர் மதித்தனர்.
அவருடைய உடல் நலத்துக்காகக்வும் வெற்றிக்காகவும் கடவுளை வேண்டினர்.
ஆணாதிக்க உணர்வுடைய ஆண்கள் எம் ஜி ஆர் மீது பெண்கள் வைத்திருந்த
அன்பையும் மதிப்பையும் தவறான கண்ணோட்டத்தில் விமர்சித்தனர் அவர்களுடைய
விமர்சமும் கண்ணோட்டமும் தவறு எபதை காலம் அவர்களுக்கு தெளிய
வைத்துவிட்டது. பெண்களின் கணிப்பு சரி என்பதை காலம் நிரூபித்துவிட்டது.
எம் ஜி ஆர் பெண்கள் மீது வைத்திருந்த அன்பும் மதிப்பும் நம்பிக்கையும்
வீண் போகவில்லை. அதை போல பெண்களும் எம்ஜிஆர் மீது வைத்திருந்த
நம்பிக்கையை அவர் எக்காலத்திலும் கெடுத்துக் கொள்ளவில்லை. அவர்களின்
ஆழமான நம்பிக்கைக்கு உரிய மக்கள் தலைவராகவே அவர் கடைசி வரை வாழ்ந்தார்;
இன்றைக்கும் அவர்களின் இதய தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
முனைவர் செ.இராஜேஸ்வரி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|