பொருளுக்காகத் தலைவியைப் பிரிந்து செல்லாமையே
தலைமைப் பொருள்
பேராசிரியர் இரா.மோகன்
எட்டுத்தொகை
நூல்களுள் ஒன்றான கலித்தொகை, ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ எனச்
சிறப்பிக்கப் பெறுவது இதன் முதற் பகுதியான பாலைக் கலியைப் பாடியவர் சேர
வேந்தருள் ஒருவரான பெருங்கடுங்கோ. இவரது பெயர் ‘சேரமான் பாலை பாடிய
பெருங்கடுங்கோ’ எனவும் வழங்கும் அகத்திணை உரிப்பொருள் ஐந்தினையும் கூடல்,
பிரிதல் என்ற இரண்டினுள் அடக்கிக் கூறுவர் பரிமேலழகர். இவற்றுள் முதல்
வகையான கூடலைப் பாடுவதில் தலைசிறந்து திகழ்ந்தவர் கபிலர் என்றால்,
இரண்டாம் வகையான பிரிதலைப் பாடுவதில் நனிசிறந்து விளங்கியவர்
பெருங்கடுங்கோ எனலாம். மூதறிஞர் சோ.ந.கந்தசாமியின் சொற்களில்
குறிப்பிடுவது என்றால், “இன்பத்தைப் பாடுதலை விட, துன்பத்தைப் பாடத்தான்
துணிவும் திறமும் கூடுதலாக வேண்டப்படும்… சோலையைப் பாடிய பிற புலவரைப்
போலாது பாலையைப் பாடத் துணிந்த இவர்தம் மனத்திட்பம் பாராட்டத்தக்கது.
இதனால் தான் ‘பாலை பாடிய’ என்ற பட்டத்தைப் பழந்தமிழ்ச் சான்றோர்
இவர்க்கு வழங்கினர்” (தமிழிலக்கியச் செல்வம்: தொகுதி 2, ப.47). பேய்
மகள் இளவெயினி என்ற பெண்பாற்புலவர் ‘பாடல் சான்ற விறல்வேந்தன்’ என
இவரைப் பாராட்டிப் பாடிய பாடல் ஒன்று (11) புறநானூற்றில்
இடம்பெற்றுள்ளது.
பெருங்கடுங்கோ பாடிய சங்கப் பாடல்கள் 68 ஆகும். இவற்றுள் ஒன்று மட்டுமே
புறப்பொருள் பற்றியது (புறநானூறு, 282), கலித்தொகையில் 35 (பாலைக் கலி),
அகநானூற்றில் 12, நற்றிணையில் 10, குறுந்தொகையில் 10 என ஏனைய அனைத்தும்
பாலைத் திணைப் பாடல்களே. பதச் சோறாக, பெருங்கடுங்கோவின் புலமைத்
திறத்தினைப் பறைசாற்றி நிற்கும் பாலைக் கலி முதற் பாடலின் நயமும்
நுட்பமும் குறித்து ஈண்டுக் காணலாம்.
ஒரு தலைவன் பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்லக் கருதினான்.
தலைவனைப் பிரிந்து ஒரு கணமும் உயிர் வாழ முடியாத இயல்பினளான தலைவி,
அவனது கருத்தறிந்து வருந்தினாள். தலைவன் பிரிந்து போவதற்கு முன்பே
பெரிதும் வருந்தும் தலைவி, அவள் பிரிந்து சென்று விட்டால் என்ன ஆவாளோ
என அஞ்சிய தோழி, தலைவனுக்குத் தலைவி படும் துயரத்தினை எடுத்துக் கூறி,
அவனது கருத்தினை மாற்றினாள். இவ்வாறு தலைவனைப் பொருள் ஈட்டுவதற்காகப்
பிரிந்து போகாமல் நிறுத்தி விட்டதைத் தலைவிக்குத் தெரிவித்து, அவளது
துயரத்தைத் தோழி மாற்றியதை எடுத்துரைக்கும் அருமையான பாடல் இது:
“தரவு
தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்து இறத்தலின்,
மடங்கல்போல் சினைஇ மாயம்செய் அவுணரைக்
கடந்துஅடு முன்பொடு முக்கண்ணான் மூஎயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்,
சீறுஅருங் கணிச்சியோன் சினவலின், அவ்எயில்
ஏறுபெற்று உதிர்வனபோல் வரைபிளந்து, இயங்குநர்
ஆறுகெட விலங்கிய அழல்அவிர் ஆரிடை
மறப்பருங் காதல் இவள்ஈண்டு ஒழிய,
இறப்பத் துணிந்தனிர்; கேண்மின் மற்று ஐஇய!
தாழிசை
தொலைவுஆகி, இறந்தோர்க்குஒன்று ஈயாமை இளிவுஎன,
மலைஇறந்து செயல்சூழ்ந்த பொருள் பொருள்ஆகுமோ?
நிலைஇய கற்பினாள், நீநீப்பின் வாழாதாள்
முலைஆகம் பிரியாமை பொருள்ஆயின் அல்லதை;
இல்என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவுஎனக்
கல்இறந்து செயல்சூழ்ந்த பொருள் பொருள்ஆகுமோ?
தொல்இயல் வழாஅமைத் துணைஎனப் புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருள்ஆயின் அல்லதை;
இடன்இன்றி இரந்தோர்க்குஒன்று ஈயாமை இளிவுஎனக்
கடன் இறந்து செயல்சூழ்ந்த பொருள் பொருள்ஆகுமோ?
வடமீன்போல் தொழுதுஏத்த வயங்கிய கற்பினாள்
தடமென்தோள் பிரியாமை பொருள்ஆயின் அல்லதை ;
என இவள்,
சுரிதகம்
புன்கண் கொண்டு இனையவும், பொருள்வயின் அகறல்
அன்புஅன்று என்றுயான் கூற, அன்புற்றுக்
காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத் தங்கி யாங்குத் தாழ்புநின்
தொல்கவின் தொலைதல் அஞ்சி, என்
சொல்வரைத் தங்கினர் காத லோரே.”
“பெரியோய்! இவள் உன்னை மறக்க முடியாத பெருங்காதலோடு இங்கே வருந்தி
இருக்க, நீ பிரிந்து அரிய காட்டு வழியில் தனியே செல்லத் துணிந்து
விட்டாய். அவ்வழியில், கடுமையான வெயிலால் மலை பிளந்து, குறுக்கே
அடைத்துக் கொண்டிருக்கும். நான்முகன் முதலான தேவர்கள் வேண்டிக்
கொண்டமையால், சிவபெருமான் சிங்கம் போலச் சினந்து, அசுரர்களின் மாயக்
கோட்டைகளான முப்புரததை எரித்தான். அப்பொழுது அவன் முகம் சினத்தால்
சிவந்தது போல, கதிரவன் சிவந்து நின்று காய, அக் கோட்டை மதில்கள் இடிந்து
விழுந்ததைப் போல, மலை பிளந்ததது. கொடிய அவ் வழியில் செல்லத் துணிந்த
நீ, நான் சொல்வதைச் சற்றுக் கேட்பாயாக!
தலைவி உன் சொல் வழி நடக்கும் கற்பினாள். நீ பிரிந்தால் உயிர் வாழ
மாட்டாள். எனவே, அவளைப் பிரியாமை தான் நீ செய்வதற்கு உரியது. அது அன்றி,
‘வறுமையால் வந்து இரக்கும் வறியோர்க்கு ஈயாமல் இருத்தல் இழிவு ஆகும்’
என்று கருதி, மலை பல கடந்து சென்று பொருள் ஈட்டுவதற்காகப் பிரிதல்,
செய்வதற்கு உரிய செயல் அன்று.
பழைய மனையற மரபு மாறாமல், உனக்குத் துணையாக வாழ வந்தவளைப் பிரியாமையே
முறை; அது அன்றி, ‘இல்லை என்று வந்து இரந்து நின்றவர்க்கு ஈயாமல்
இருப்பது இழிவு ஆகும்’ என்று எண்ணி, கற்கள் மலிந்த காட்டு வழியைக்
கடந்து பிரிந்து செல்வது முறை அன்று.
அருந்ததி போல் மகளிரால் வணங்கி வழிபடத் தக்க கற்பினை உடைய தலைவியின்
மெல்லிய தோள்களைப் பிரியாமையே கருத்தாக நீ இருக்க வேண்டும். அது அன்றி,
‘வாழ்வதற்கு வேறு வழியில்லை என்று இரக்கத் துணிந்த வறியார்க்குச்
சிறிதேனும் ஈயாமை இழிவு ஆகும்’ என்று எண்ணி, நீ இவளைப் பிரியக்
கருதலாகாது.
‘இவள் துன்புற்று வருந்தும் படி நீ பொருள் தேடிப் பிரிவது அன்புடையார்
செய்யும் செயல் ஆகாது’ என்று நான் அவரிடம் கூறினேன். அதைக் கேட்ட அவர்,
பிரிவுத் துன்பம் நேர்ந்தால் உன் அழகு அழியும் என்று அஞ்சி,
அங்குசத்திற்கு அடங்காத மத யானை, யாழ் இசைக்கு வயப்படுவது போல, அன்புடன்
என் சொல்லுக்கு கட்டுப்பட்டுத் தம் கருத்தைக் கைவிட்டுத் தங்கினார்”
என்பது இப்பாடலின் தெளிவுரை ஆகும்.
வாழ்வில் அறம் செய்வதற்கு இன்றியமையாது தேவைப்படுவது பொருள்; எனினும்,
அப்பொருள் கூட, அன்பு அகலாத ஆருயிர்த் துணைவியின் உடனிருப்போடு
ஒப்பிட்டு நோக்கும் போது, ஓர் இளைஞனின் வாழ்க்கையில் தலைமைப் பொருள்
ஆகாது என்பதைத் தோழியின் கூற்று வாயிலாகப் பெருங்கடுங்கோ இப் பாடலில்
புலப்படுத்தி இருக்கும் திறம் நனிநன்று. ‘பாகனது கோலின் குத்துக்கு
வயப்படாத களிறு, யாழின் இசைக்கு வயப்பட்டு அடங்கி விடுவது போல, தலைவன்
தலைவிபால் அன்பு கொண்டு, தோழியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தான்
பொருள் ஈட்டப் புறப்படுவதை ஒத்தி வைத்தான்’ என இப் பாடலில் கையாளப்
பெற்றிருக்கும் உவமையும் பயில்வார் நெஞ்சை அள்ளுவதாகும்.
முத்தாய்ப்பாக, “கலித்தொகைப் பாடல்களின் தாழிசைகள் பொது நிலையில் ஒரு
பொருள் மேல் மூன்று அடுக்கிப் பாடப்படினும், சிறப்பு நிலையில்,
ஒன்றுக்கு ஒன்று வளர்ச்சி காட்டுவனவாக உள்ளன.
இம் முதற் பாடலில், தாழிசைகளின் பொதுப் பொருள், ‘தலைவியைப் பிரிந்து
ஈட்டும் பொருள், பொருள் அன்று, பிரியாமையே பொருள்’ என்பது.
சிறப்புப் பொருள் வருமாறு: ‘பிரிதல் ஆகாது’ என்பதற்கு முதல் காரணம்,
“பிரிந்தால் அவள் வாழ மாட்டாள்’ என்பது. அடுத்தது, ‘துணையாக வந்தவளைப்
பிரிதல் அறமன்று’ என்ற குறிப்பு. மற்றொன்று. ‘பிறர் வணங்கத் தக்க
கற்பினளாகிய அவளுடன் வாழ்தல் தலைவனுக்குப் பெருமை தருவது’ என்பது” (கலித்தொகை:
மக்கள் பதிப்பு, ப.19) என இப் பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில்
மூதறிஞர் சுப.அண்ணாமலை தெரிவித்துள்ள நுண்ணிய கருத்துக்கள் மனங்கொளத்
தக்கன.
‘தமிழாகரர்’
முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|