ஆறுமுக நாவலரின் பன்முக ஆளுமையும் சாதி, சமய,
சமூகப் பார்வையும் - ஒரு மீளாய்வு
வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
சைவத்தின்
காவலராகவும், மறுமலர்ச்சியாளராகவும் கொண்டாடப்படும் ஈழத்தின்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்களை சமூக சிந்தனையற்ற
பிற்போக்குவாதியாகவும், சாதீய வாதியாகவும் சிலர் குற்றம் கூறி எழுதியும்,
பேசியும், ஆய்வுகளில் ஆவணப்படுத்தியும் வருவதை நாம் காண்கின்றோம்.
நாவலர் பற்றிய இந்த எதிர்மறைக் கூற்றுகளுக்கு அவர் எழுதியும்,
பதிப்பித்தும் வெளியிட்ட 97 வெளியீடுகளிலே ஒன்றான சைவவினாவிடையில் அவர்
எழுதிய சாதி பற்றிய கூற்றுகளை ஆதாரமாக எடுத்துக்காட்டுகின்றார்கள்.
நாவலரின் அபிமானியாக உள்ள பல சைவ சமய ஆர்வலர்கள், அறிஞர்கள் கூட
நாவலரின் சாதி சார்ந்த சமூக நிலைப்பாட்டை அவரின் ஒரு குறையாகவே
கருதியும், பேசியும், வருகின்றார்கள்; அல்லது அந்த விடயத்தை முற்றாகத்
தவிர்த்தும், ஒதுக்கியும் வருகின்றார்கள். இதனால் ஆறுமுக நாவலர்
அவர்களின் ( 1822 - 1879) சமகாலத்தவர்களான சிங்கள பௌத்தர்களின் அநகாரிக
தர்மபால (1864 -1933), ஆரிய சமாஜத்தின் தயானந்த சரஸ்வதி ( 1824 -
1883), பிரம்ம சமாஜத்தின் ராஜா ராம்மோகன் ராய் (1774 - 1833)
போன்றவர்களுக்கு அவரவர் சார்ந்த சமூகம் கொடுக்கின்ற முழுமையான
அங்கீகாரத்தையும், கௌரவத்தையும், மரியாதையையும் ஆறுமுக நாவலருக்குக்
கொடுக்க தமிழ்ச்சமூகமும், சைவ உலகமும் தவறி வருகின்றது.
நாவலரின் சமகால உலகில் நிலவிய சமூக அரசியல்
நிலை
நாவலரின் சமகாலப் பின்னணியில் உலக அரங்கில் நிலவிய சமூக அரசியல்
நிலைப்பாடுகளையும், நிகழ்வுகளையும் ஒப்பிட்டு ஒத்து நோக்கிப்
பார்க்காமல் நாவலரைப் பற்றிய முமுமையான புரிந்துணர்வை நாம் ஒருபோதும்
எட்ட முடியாது. உலகெங்கும் இன்று மனித சமத்துவத்துக்கும், தனிமனித
சுதந்திரத்துக்கும் முன்னோடியாகத் திகழும் அமெரிக்க சுதந்திரப்
பிரகடனத்தை 1766 இல் யாத்த அமெரிக்காவின் தேச பிதா, முதல் ஜனாதிபதி
ஜோர்ஜ் வாஷிங்டன் (1732 -1799) அமெரிக்காவின் கறுப்பின மக்களையும்,
பெண்களையும் சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் உரிமையுடைய
மனிதர்களாகவே அப்பிரகடனத்தில் கருதவில்லை. அவர் இறக்கும் பொழுது அவரது
பண்ணையிலும் வீட்டிலும் அவருக்கு 317 அடிமைகள் இருந்தார்கள்.
அமெரிக்காவில் அடிமை ஒழிப்புச் சட்டம் 1865 ஜனவரி 31 இல்
நிறைவேற்றப்படும்வரை கறுப்பின மக்களை விலங்குகள் போல அடிமைகளாகவே
வைத்திருந்தார்கள். கனடாவில் 1834 இல் தான் அடிமை ஒழிப்புச்சட்டம்
கொண்டுவரப்பட்டது. 1833 இல் பிரிட்டன் அடிமை ஒழிப்புச் சட்டத்தை
நிறைவேற்றியது.
1865 இல் அமெரிக்காவில் அடிமைத்தளை ஒழிக்கப்பட்ட பின்னரும் நூறு
ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் பாடசாலைகளிலும், உணவகங்களிலும், தங்கும்
விடுதிகளிலும், வீடமைப்புகளிலும், முடி திருத்தும் நிலையங்களிலும்
அனுமதிக்கப்படவில்லை. கறுப்பின மக்களும் இவற்றில்
அனுமதிக்கப்படுவதற்கும், சமமாக நடத்தப்படுவதற்கும் மார்டின் லூதர்
கிங்க் (1929 - 1968) போராடி தன்னுயிரைத் தியாகம் செய்யவேண்டியிருந்தது.
அவுஸ்திரேலியாவின்
ஆதிக்குடிகள் 1967 வரை அவர்களின் குடித்தொகைக் கணக்கெடுப்பிலேயே
மனிதர்களாக கணக்கெடுக்கப்படவில்லை. நாட்டின் சட்டத்தில் அவர்கள்
விலங்குகள் தாவரங்களுக்கான சட்ட அமைப்பிலேயே ( Flora and Fauna Act of
Australia) 1967 வரை கணிக்கப்பட்டார்கள்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மிஷனரிமார் வந்து சமய, சமூக, கல்விப்
பணிகள் ஆற்றிக்கொண்டிருந்த சமகாலத்தில் அவர்களின் தாய் நாடுகளில்
நிலவிய நிலை இதுவே. இவ்வாறு நாவலரின் சமகால உலகில் நிலவிய சமூக நிலை
பற்றிய அறிவும், விளக்கமும் கொண்டு பார்க்கும்போதுதான் நாவலர் தனது பல
நூல்களிலும் சாதி பற்றியும், சமூகம் பற்றியும், மனித நேயம் பற்றியும்
கூறிய கருத்துகளின் நிலைப்பாட்டையும், சமூக உணர்வையும் நாம் முழுமையாகப்
புரிந்துகொள்ள முடியும்.
முற்போக்குவாதியான மறைந்த பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் இவற்றை
அறிந்திருந்ததாலேதான் நாவலர் நூற்றாண்டு விழா மலர்க்குழுவின்
பதிப்பாளராக இருந்து பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோருடன் சேர்ந்து
உழைத்து அதை வெளிக்கொணர்ந்ததோடு ஆறுமுகநாவலரை ஏகாதிபத்திய
எதிர்ப்புவாதியாகவும், தமிழ்த்தேசியத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும், நவீன
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கமாகவும் அடையாளம் கண்டார்.
நாவலர் பற்றிய புனைவுகளும், எதிர்மறைக்
கருத்துகளும்
இவ்வளவு இருந்தும் நாவலரின் சாதி மற்றும் சமூகம் பற்றிய கருத்துக்கள்
யாவும் ஓரிடமாக ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்படாதது வரலாற்றுப் பின்ணனியில்
நாவலர் பற்றிய மதிப்பீட்டிலும், வாழ்க்கை வரலாற்றிலும், ஆய்வுகளிலும்
ஒரு பெரும் குறையாகவே இன்றுவரை இருந்து வருகின்றது. இந்த வெற்றிடம்
நாவலர் பற்றிய சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும், பழிப்புரைகளுக்கும்,
நிராகரிப்புகளுக்கும் மட்டுமல்லாது ஆதாரங்கள் ஏதுமற்ற பல
கட்டுக்கதைகளுக்கும் கூட காரணமாய் அமைகின்றது.
ஆரய்ச்சியாளர்களும், பேராசிரியர்களும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. சில
ஆண்டுகளுக்கு முன்னர் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழியல்
மாநாட்டில் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் நாவலர் பற்றி ஆய்வு செய்து
பட்டம் பெற்ற விரிவுரையாளர் ஒருவருடன் தனிப்பட்ட முறையில்
கலந்துரையாடியபோது நாவலரின் கிராமியக் கலைகள், கூத்துகள், நாடகங்கள்
பற்றிய நிலைப்பாடு பற்றி உரையாடல் சென்றது. அப்போது அந்த விரிவுரையாளர்
நாவலர் அவர்கள் நாடகம், கூத்து ஆகியவற்றில் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்த
அவரது தந்தையார் கந்தப்பிள்ளைக்கு அவற்றை நிறுத்தும்படி கடும் நெருக்கடி
கொடுத்துவந்தார் என்றும், ஈற்றில் நாவலர் தந்தையாரிடம் ”நீர் இனிமேலும்
நாடகங்கள் எழுதுவதைத் தொடர்ந்தால் நான் உமக்கு கொள்ளி வைக்கவும்
மாட்டேன்” என்று மிரட்டியதாகவும், இதனால் மனமுடைந்துபோன கந்தப்பிள்ளை
தன்னிடம் இருந்த நாடகங்களின் கையெழுத்துப் பிரதிகளை எல்லாம்
வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பிப்புலவர் என்பவரிடம் கொண்டு வந்து
கண்ணீர் மல்க கையளித்துவிட்டுச் சென்றதாகவும் கூறினார். ஆனால் இதனை நான்
பின்னர் நான் ஆராய்ந்து பார்த்தபோது நாவலரின் தந்தை இறந்தபோது
நாவலருக்கு வயது ஒன்பது என்றும், நாவலரின் தந்தை எழுதத் தொடங்கி
முடிக்காமல் விட்டுச் சென்ற நாடகத்தினை நாவலர் அந்த ஒன்பது வயதிலேயே
எழுதிப் பூரணப்படுத்தினார் என்றும், நாவலர் பின்னாளில் பதிப்பித்து
வெளியிட்ட நூல்களில் கண்டியரசன் நாடகம் என்னும் நூலும் ஒன்று எனவும்
அறியக் கிடைத்தது.
இதே போல் நாவலர் இன்றைய யாழ் மத்திய கல்லூரியான அன்றைய வெஸ்லியன் மிஷன்
கல்லூரியில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு
அனுமதி கொடுத்ததை எதிர்த்தே தமது ஆசிரியப் பணியில் இருந்து விலகினார்
என்று இன்னொரு பேராசிரியர் எழுதியுள்ளார். ஆனால் இதற்கு நாவலரின்
சமகாலத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ மத்திய கல்லூரி ஆவணங்களிலோ, நாவலர்
செயல்களை விமர்சித்து ஆவணப்படுத்திய அன்றைய பத்திரிகையான உதயதாரகை
என்னும் Morning Star பத்திரிகைக் குறிப்புகளிலோ, இங்கிலாந்திலுள்ள
வெஸ்லியன் மிஷன் அறிக்கைகளிலோ, அல்லது அவருக்கும் வெஸ்லியன் மிஷன்
கல்லூரியில் ஆசிரியராக இருந்த பீற்றர் பேர்சிவல் பாதிரியாருக்கும்
நெடுங்காலமாக இருந்த கடிதத் தொடர்புகளிலோ எந்தவிதமான ஆதாரங்களும்
காணக்கிடைக்கவில்லை.
இதே
பேராசிரியர் விவிலிய நூலை ஆறுமுக நாவலர் மொழி பெயர்க்கவில்லை; அவர் அதை
மொழி பெயர்த்த பீற்றர் பேர்சிவல் பாதிரியாரின் குழுவுக்கு தமிழ் பிழை
திருத்தத்துக்கு நியமிக்கப்பட்ட ஒரு பணியாளரே நாவலர் என்றும்
கூறியுள்ளார். ஆனால் 1853 ம் ஆண்டு இங்கிலாந்தின் வெஸ்லியன் மிஷன்
அறிக்கை நாவலரை அவரின் மொழிபெயர்ப்புப் பணிக்காகப் பாராட்டியுள்ளதும்,
பின்னாளில் தென்னியத் திருச்சபையின் யாழ் மண்டல ஆயர் சபாபதி குலேந்திரன்
நாவலரின் மொழிபெயர்ப்பு பற்றி ‘ என்ன இருந்தாலும் கிறிஸ்தவர் அல்லாத
ஒருவரிடம் இந்த மொழி பெயர்ப்புப் பணியைக் கொடுத்திருக்கக் கூடாது’ என்று
குறிப்பிட்டுள்ளதும் நாவலரின் கிறிஸ்தவ விவிலிய நூல் மொழிபெயர்ப்புப்
பணியை சந்தேகத்துக்கு இடமின்றிப் பறைசாற்றி நிற்கின்றன.
நாவலரின் பன்முக ஆளுமையும் பணிகளும்
ஆயினும் சாதாரண பொதுமக்களுக்கு இவ்விதமான நாவலர் எதிர்ப்புப்
பிரசாரங்களின் உண்மைத்துவத்தை வெளிப்படுத்தும் தகவல்கள் சரியான முறையில்
ஆதாரங்களுடன் பகிரப்படாததால் நாவலரின் சைவப் பணியையும், தமிழ்ப்
பணியையும் மதிக்கும் பெருமக்கள் கூட அவரை சாதீயம் சார்ந்த ஒரு சமூகப்
பிற்போக்காளராகக் கருதி ஒதுக்கி வருகின்ற அபாயத்தையும் காண்கின்றோம்.
நாவலரைச் சாதீய உணர்வுகொண்ட பிற்போக்குச் சிந்தனையாளர் என்று கருதும்
எம்மவரில் பலருக்கு நாவலரின் பன்முக ஆளுமைப் பண்புகள் பற்றித்
தெரிந்திருக்க நியாயமில்லை.
-
பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர்
சிவத்தம்பி ஆகியோரும், இலங்கையின் முற்போக்கு தமிழ் எழுத்தாளர்
சங்கமும் நாவலரை ஏகாதிபத்திய எதிர்ப்பு, நவீன ஈழத்துத் தமிழ்
இலக்கியம், தமிழ்த் தேசியம் அகியவற்றின் ஆரம்ப கர்த்தாவாக அடையாளம்
கண்டதும், அவரை இலங்கையின் தேசிய வீரர்களுள் ஒருவராக நாவலரை ஏற்றம்
பெற வைத்ததும் இன்றைய முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும், அரசியல்
வாதிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் தெரியாத விடயங்கள் ஆகிவிட்டன.
-
சி.வை.தாமோதரம்பிள்ளையும், உ. வே.
சாமிநாதையரும் ஏடுகளில் இருந்த தமிழ் நூல்களைத் தேடிப்
பதிப்பிக்கும் பணிக்கு முன்னோடியாக ஆறுமுகநாவலர் இருந்தார் என்பதும்,
முதன்முதல் புத்தக வடிவம் பெற்ற சங்க இலக்கியம் நாவலர் 1851 இல்
பதிப்பித்த திருமுருகாற்றுப்படை என்பதும், இவர்கள்
இருந்திருக்காவிட்டால் சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பல இலக்கியங்கள்
செல்லரித்து இன்று அழிந்தொழிந்திருக்கும் என்பதும், தமிழுக்கு
செம்மொழித் தகைமை என்பது நினைத்துப்பார்க்கவே முடிந்திருக்காது
என்பதும் இன்றைய தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டுகொள்ளாத உண்மைகள்.
செய்யுள் நடையில் இருந்த தமிழ் எழுத்து மரபை எழுதும் வசன நடையாகச்
செம்மைப்படுத்தி, காற்புள்ளி, அரைப்புள்ளி, நிறுத்தக் குறிகளின்
பயன்பாட்டுடன் வரையறுத்து பாமரரும் புரியக்கூடிய நவீன தமிழ் எழுத்து
நடையை அறிமுகப்படுத்திய வசனநடை கைவந்த வல்லாளர் நாவலர் என்பது
இன்றைய கல்வியியலாளர், மொழியியல் வல்லுனர்கள் பலருக்கு
மறக்கடிக்கப்பட்ட விடயம் ஆகிவிட்டது.
-
இன்றைய தமிழ் மேடைப்பேச்சுமுறைக்கு
வண்ணர்பண்ணைச் சிவன் கோவிலிலே 1847, மார்கழி 31, வெள்ளிக்கிழமை இரவு
ஒன்பது மணிக்குத் தொடக்கிவைத்த பிரசங்கம் மூலம் வித்திட்ட நாவலரை
இன்றைய தமிழ்ப்பேச்சாளர்கள் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
-
கிறிஸ்துவ மத மாற்றத்துக்கு எதிரான
பிரசாரங்களைத் தொடக்கிவைத்து ஈழத்தமிழர் முழுவரையும்
கிறிஸ்துவர்களாக்கும் மிஷனரிமாரின் கனவை ஆரோக்கியமான கண்ணியமான
முறையில் எதிர்த்து நின்று போராடிய நாவலரை இன்றைய சமூக, அரசியல்
போராளிகளுக்குத் தெரியாது.
-
1877 இல் கொடிய பஞ்சம் யாழ்ப்பாணத்தை
வாட்டியபொழுது கஞ்சித்தொட்டி தருமம் தொடக்கிவைத்து பட்டினிச்சாவில்
இருந்து மக்களைப் பாதுகாத்த நாவலரை இன்றைய சமூகத்தொண்டர்களுக்கும்,
தொண்டு நிறுவனங்களுக்கும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை நாம்
வழங்கவில்லை என்பதே உண்மை. நாவலரின் கஞ்சித்தொட்டித் தருமத்தை
அன்றைய பத்திரிகையான உதயதாரகை என்னும் Morning Star தமது ஆசிரியர்
தலையங்கத்திலே குறிப்பிட்டுப் பாராட்டியதும் பலருக்குத் தெரியாது.
-
பஞ்ச நிவாரணப் பணிகளையும்,
உயிர்கொல்லும் வாந்திபேதி நோய்க் கட்டுப்பாட்டு முறைகளையும்
முறையாக மேற்பார்வை செய்யவும், அமுல் படுத்தவும் தவறியதற்காகவும்,
வாந்திபேதி பீடித்திருந்த கரையூர் மக்களுக்கு முறையான பேதி நோயாளர்
தங்கும் குடிசைகள் அமைத்து நோயாளர்களை அங்கு தங்கவைத்து தகுந்த உணவு,
மருந்துகள் கொடுக்கும் ஒழுங்குகள் செய்யாமல் அவர்களின் வீடுகளை
எரித்தும், அழித்தும் அம்மக்களுக்கு இம்சை செய்வித்தார்
என்பதற்காகவும் அன்றைய யாழ்ப்பாண அரச அதிகாரியாக இருந்த துவைனம்
துரை அவர்களுக்கு எதிராக நாவலர் போராடியதும் இதன் மூலமாக இன்றைய
யாழ்ப்பாண வைத்தியசாலை அமைவதற்கும், பின்னாட்களில் வந்த பிரதேச
வைத்திய சேவைகளுக்கும் மூல காரணமாக நாவலர் விளங்கினார் என்பதும்
ஈழத்தின் இன்றைய வைத்திய உலகிற்கு எடுத்துச் சொல்லப்படாத ஒன்று.
-
1878 ஜனவரி மாதம் இலங்கையின்
தேசாதிபதி சேர் உலோங்டன் அவர்களை யாழ்ப்பாணத்தில் மற்றைய மக்களுடன்
தாம் தலைவராகச் சென்று சந்தித்து எழுத்து வடிவில் இது பற்றிய புகார்
கொடுத்ததும் பலர் அறியாதது. இந்த புகாருக்கு தேசாதிபதி உரிய
நடவடிக்கை எடுக்காததால் இதை இங்கிலாந்தில் உள்ள காலனித்துவ
நாடுகளின் செயலாளருக்கு ( Secretory of the State) நாவலர்
அறிவித்தார்.நாவலர் எதிர்த்த இதே துவைனம் துரை நாவலர் பால் அவரின்
அஞ்சாத யோக்கியப் பண்பு குறித்துப் பெரு மரியாதை வைத்திருந்தார்
என்பதும் நாவலர் அவர்கள் காலமான பொழுது யாழ்ப்பாண அரச
அலுவலகத்துக்கு அரைநாள் விடுமுறை அளித்ததும் பலருக்குத் தெரியாது.
-
இதே போல முன்னர் யாழப்பாணம் அரச
அதிபராக இருந்த டைக் துரை நாவலர் அச்சியந்திரம் தாபிப்பதற்கு அனுமதி
கோரி விண்ணப்பித்த அதே தினத்திலேயே அவரைத் தனது அச்சு வேலையை
கொழும்பில் இருந்து உத்தரவு வரும்வரை காத்திராமல் தொடங்குமாறு ஆள்
அனுப்பி அறிவிக்கும் அளவுக்கு நாவலரின் ஆளுமை இருந்தது என்பதும்
பலர் அறியாதது. இதே டைக் துரை தனது சொந்த பாவிப்புக்குக்க்காக
வைத்திருந்த விசேட வகையான அரிசி மூடை தீர்ந்துபோய்த் தவித்தபொழுது
தனது பாவிப்புக்கு இருந்த அதே வகை அரிசி மூடை ஒன்றை அனுப்பி வைத்த
நாவலரின் செய்நன்றி மறவாத குணம் பலருக்குத் தெரியாது. இதற்கு டைக்
துரை அரிசிக்காக தமக்கு அனுப்பிய வெகுமானத்தையும் திருப்பி
அனுப்பிவைத்து பிரிட்டிஷ் அரச அதிகாரியையும் தனக்குக் கடமைப்பட
வைத்த நாவலரின் பலருக்கும் தெரியாது.
-
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட
சட்டத்தரணி பிறிற்ரோ அப்போது வழக்கொன்றில் நாவலரின்
எதிராளிகளுக்காக வாதாடிக்கொண்டிருந்தார். அவர் தனது தர்மம் மறந்து
இந்த வழக்கில் தான் நாவலருக்குச் சார்பாக வழக்கைப்
புரட்டிவிடுவதாகப் பேரம் பேசியபொழுது அதற்கு விலைபோகாது அந்த
தர்மவிரோதமான காரியத்தை அம்பலப்படுத்தினார் நாவலர். இப்படிப்பட்ட
தர்மவிரோதமான நபர் மக்கள் பிரதிநிதியாக வரக் கூடாது என்று அவருக்கு
எதிராக தனக்கு முன் அறிமுகம் இல்லாத இளைஞராகிய பொன்னம்பலம்
இராமநாதன் அவர்களை பகிரங்கமாக ஆதரித்து அவரை சட்டசபை
உறுப்பினராக்கிய அரசியல் ஞானி நாவலரைப் பலருக்கும் தெரியாது.
இதனைக்கூட இருட்டடிப்பு செய்து நாவலர் பிறிற்ரோவை எதிர்த்தது அவர்
கிறிஸ்துவர் என்பதனால் என்று சிலர் இன்று உண்மைக்கு மாறாக
எழுதுகிறார்கள்.
-
கிறிஸ்துவ மிஷனரிமாரின் மதமாற்றப்
பணிகளை எதிர்த்த நாவலர் அவர்களோடு தனிப்பட்ட விரோதம் பாராட்டியவர்
அல்ல. கிறிஸ்துவ மிஷனரியாகிய பீற்றர் பேர்சிவல் உடனும், யாழ்ப்பாண
அரச அதிபர் துவைனம் துரையுடனும் இருந்த நட்பும், தனது கடைசிக்காலம்
வரை அவர்களுடன் நாவலர் பேணிவந்த கடிதத் தொடர்பும் பலர் அறியாதது.
தனது எதிர்ப்பாளரான பாதிரியார் ஜோன் வால்டன் அவர்களுடன் நாவலர் பேணி
வந்த கண்ணியமான கடிததொடர்புகளும், நாவலர் தான் தாபித்த சைவப்
பாடசாலைக்கு அதன் முதலாவது அதிபராக ஒரு கிறிஸ்தவ ஆங்கிலேயரை
அதிபராக நியமித்ததும் பலர் அறியாத உண்மைகள்.
-
கடல் கடந்து, அன்னியதேசம் சென்று
கல்விச் சேவை செய்த முதல் தமிழர் நாவலர் என்பதும்; கடல் கடந்து
பாடசாலை தாபித்த முதல் தமிழர் ஆறுமுக நாவலர் என்பதும் பலர் அறியாதது.
யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்திலும் தாபித்த பாடசாலைகள் தொடர்ந்து
அவர் இல்லாத காலத்திலும் இயங்க வேண்டும் என்பதற்காக வருமானம்
தரக்கூடிய நிலங்களும், கட்டடங்களும் வாங்கி அறக்கட்டளையாக
அவற்றுக்கு தர்மசாசனம் செய்து வைத்ததும், இன்றும் அந்த சொத்து
வருமானங்கள் தொடர்ந்து வருவதும் கூட பலருக்குத் தெரியாதது.
-
”வாழ்க்கையில் ஒரு பிரயோசனமான,
வருமானமுள்ள தொழிலைப் பெறுவதற்காக மாணவர்களைத் தயார் செய்வது என்பது
அவர்களை அவர்கள் தேசத்தினதும், மக்களினதும் அறநெறிப் பண்பாட்டுத்
தேவைகளில் இருந்து அன்னியப்படுத்துவதாய் இருத்தல் கூடாது. மிஷனரிப்
பாடசாலைகள் தமது மதமாற்ற முயற்சிகளைத் தளர்த்தியிருந்தால் அக்
கற்பித்தல் முறையினால் மாணவர்கள் அதிக அறநெறி விழுமியங்களைப்
பற்றியிருப்பார்கள்.” என்று அன்றைய இலங்கையின் தேசாதிபதி வில்லியம்
அண்டர்சன் அவர்களுக்கு 1852இல் அனுப்பிய பரிந்துரையில் முழங்கிய
கல்வியியலாளர் நாவலரைப் பலருக்கும் தெரியாது.
-
சமயப் பணி, தமிழ்ப்பணி, கல்விப்பணி,
அரசியல் ஆகியவற்றுக்கும் அப்பால் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக
கமக்காரர் சங்கம் தாபித்ததும், மட்டக்களப்பு போன்ற இடங்களில் தமிழர்
சென்று குடியேறி விவசாயம் செய்யவேண்டும் என்று பிரசாரம் செய்ததும்
பலர் அறியாதது.
-
நாவலர் ஒருநாள் சாப்பிடும் பொழுது
வந்த மனநோயாளி ஒருவனையும் உடனிருத்தி உணவு உண்டு
கொண்டிருக்கும்பொழுது அந்த நோயாளி தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த
இலையில் இருந்த சோற்றை அள்ளி இவர் இலையில் எறிந்துவிட்டான்.
அப்போதும் அவன் மீது கோபம் கொள்ளாது அவன் புத்திசுவாதீனம்
இல்லாததால் இப்படிச் செய்கின்றான் என்று மனநோயளியையும் மதித்த
நாவலரின் பண்பு பலர் அறியாதது.
-
ஒரு தைப்பொங்கல் நாள் இவர் தான்
தாபித்த யாழ்ப்பாணம் வண்ணர்பண்ணை சைவப்பிரகாசவித்தியா சாலையில்
இருக்கும்போது சற்று தூரத்தில் இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்
சார்ந்தவரின் வீடொன்று தீப்பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது. அப்போது
எப்படிப் போனார் என்று எவரும் யோசிக்க முன்னரேயே அங்கே பாய்ந்தோடிச்
சென்று வேட்டியை மடித்துக்கட்டிய சண்டிக்கட்டுடன் மற்றவர்களோடு
தாமும் ஒருவராய் நின்று ஓலைக்கூரையைப் பிடுங்கி எறிந்து தீயை
அணைத்த நாவலரின் மனிதநேயம் பலரும் அறியாதது.
-
மாணவர் ஒருவருக்கு அன்றைய ஆட்கொல்லி
நோயாகிய அம்மை என்னும் கொடிய தொற்றுநோய் தாக்கியபொழுது பலர்
தடுக்கவும் கேளாது தான் தனியே அவர் வீட்டுக்குப்போய் அவரைக்
கவனித்து வந்த நாவலரின் தன்னலமில்லா சேவை மனப்பாங்கு இன்றைய
மருத்துவ தாதியர் பலர் அறியாதது.
-
எதிராளிகளையும் பண்புடன் மதித்துப்
பேசுகின்ற நாவலரின் பேச்சும், எழுத்தும் வண. ஜோன் வால்டன்
பாதிரியாருக்கு அவர் எழுதிய கடிதங்களில் இருந்தும், தமிழ்நாட்டில்
மஞ்சக்குப்பம் நீதிமன்றில் வழக்கில் எதிராளியாக வந்த இராமலிங்க
சுவாமிகளின் கருத்துகளையும் கொள்கைகளையும் எதிர்த்தாலும் அவரின்
தவக்கோலத்துக்காக எழுந்து நின்று மரியாதை செய்தபண்பில் இருந்தும்
நாம் கண்டுகொள்கின்றோம்.
-
இந்த வழக்கிலே தில்லைவாழ் அந்தணர்கள்
1869 ஆனி உத்தர தினத்திலே ஒழுங்குசெய்த கூட்டத்தில் பலர் அறிய
நாவலரை அவமரியாதையாகப் பேசியதை நேரடியாகக் கண்ட நிரூபிக்கும்
சாட்சிகளும், அவற்றை வெளிப்படுத்திய பத்திரிகைப் பிரசுரங்களும் தன்
வசம் இருந்தும், இராமலிங்கசுவாமிகள் தான் அவ்வாறு நாவலரை அவதூறு
பேசவில்லை என்று மன்றில் 1869 மார்கழி திருவாதிரை அன்று சொன்னதை
ஏற்று அவருக்கு எதிர்வாதாடாமல் மன்னித்துவிட்ட நாவலரின் கருணை பலர்
அறியாதது. இவ் வழக்கின் பிரதிகள் வழக்கில் நாவலருக்காக வாதிட்ட
வக்கீல் சௌந்தரநாயகம் தொடக்கம் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை வரை
பலராலும் பலவிடங்களில் ஆவணப்படுத்தப் பட்டாலும்,
இராமலிங்கசுவாமிகளுக்கு அபகீர்த்தி ஏற்படுதுகின்றது என்பதால் பின்
வந்த காலங்களில் மஞ்சக்குப்பம் நிதிமன்றப் பதிவேடுகளில் இருந்து
மறைமுகமாகச் சிலரால் அகற்றப்பட்டுவிட்டன என்பதும் பலருக்குத்
தெரியாது.
-
இதே நீதிமன்றில் சிதம்பரம் சிவபுரம்
ஆறுமுகப்பிள்ளை என்பவர் சிவகாமி அம்பாள் ஆலயத்துக்குரிய
வெள்ளந்தாங்கி கிராமத்தில் இருந்த 40 வேலி நிலத்தை அநியாயமாக ஆண்டு
அனுபவித்துவருவது கண்டு மனம் பொறாது அவருக்குப் பலமுறை புத்தி
சொல்லியும் கேளாததினால் அவரை நன்கு வைது பேசியதற்காக அவர் தொடுத்த
வழக்கில் எதிர்வாதாடாமல் சத்தியவந்தராக தான் ஆறுமுகப்பிள்ளையைப்
பேசியது உண்மையே நீதிமன்றில் ஒத்துகொண்டு அதற்காக ஏழு ரூபா
தண்டப்பணமும் கட்டிய நாவலரின் எக்காலத்தும் உண்மையே பேசும் சத்தியம்
காக்கும் பண்பு பலர் அறியாதது. அவருடைய பிரியமான மாணாக்கரும்,
மருமகனுமான வித்துவான் பொன்னம்பல பிள்ளை சம்பந்தப்பட்ட வழக்கில்
சாட்சியாக அழைக்கப்பட்ட பொழுது நீதிமன்றில் உண்மையையே சொல்லி
அன்புக்குரிய மருமகனாருக்கே சிறைத்தண்டனை கிடைக்கக் காலாக இருந்த
சத்தியவந்தர் நாவலர்.
-
”முதிர்ந்த தென்னமரத்தினால்
நெடுநாளைக்குப் பயன் அடையவேண்டுமானால், நுனி மரத்தில் ஓலைகளுக்குக்
கீழே களிமண்ணை நான்குபுறத்திலுஞ் சேர்த்து வீழாமற் கட்டிவைத்து,
அதிற் சலம் விட்டுக்கொண்டுவர, சில மாசங்களில் அம்மண்ணிலே வேர்
இறங்கும். பின்பு அதை அறுத்து மண்ணுடன் இறக்கிக் குழியில் நட்டு
உண்டாக்கினால் அது இளமரம்போல் வளர்ந்து பயனைத் தரும். ” என்று
விவசாயத்துறையிலும் நாவலர் அறிவுறுத்திய புதிய யுக்திகள் பலர்
அறியாததே. இவை சில மாற்று வழிகளுடன் 2018இன் கஜா புயலினால்
பாதிக்கப்பட்டு வீழ்ந்த தென்னை மரங்களை மீட்டெடுக்க
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
-
”நாமெல்லாம் இவ்வுலகத்தை விட்டுப்
போம்போது எது நம்முடனே கூடிவரும் நமது புண்ணியமன்றி? “I hvae lost
everything except what I have given away" என்று Mark Antony என்ற
ஒரு விவேகி தனது மரணகாலத்தில் சொல்லிய அர்மருந்தன்ன வாக்கியத்தை
நினைவுகூருங்கள்.” என்று அன்பர் ஒருவருக்கு கடிதத்தில் எழுதிய
நாவலரின் ஆங்கிலப் புலமையும், நல்ல விடயங்கள் எங்கிருந்தாலும் அதை
பகிரங்கமாக எடுத்துச் சொல்லிப் பாராட்டும் பண்பும் பலர் அறியாதது.
இவ்வாறு பன்முகப்பட்ட ஆளுமையின் வடிவமான
ஆறுமுக நாவலரின் சாதி பற்றிய நிலைப்பாடிகளையும், சமூக வெளிப்பாடுகளையும்
மட்டும் இங்கு அவருடைய வார்த்தைகளில் இருந்து ஓரிடமாகத் தொகுத்துத்
திரட்டித் தந்துள்ளோம். இதன் நோக்கம் நாவலரையும் அவர் மீது
வைக்கப்படுகின்ற சாதி, சமூகம் பற்றிய அவரது கருத்துகளுக்கான
விமர்சனங்களையும் காய்தல் உவத்தல் இல்லாது இன்றைய தலைமுறையினரும்,
எதிர்கால சந்ததியினரும் ஒரே இடமாகப் பார்த்து ஆராய்ந்து
புரிந்துகொள்வதற்கும், ஆய்வுகள் செய்வதற்கும், அறிந்து கொள்வதற்கும்
தளம் அமைப்பதேயாம்.
நாவலர் கண்ட சாதிநெறி
-
சாதியினுஞ் சமயமே அதிகம்.
சமயத்தினுஞ் சாதி அதிகமெனக் கொள்வது சுருதி (வேதம்), யுத்தி (அறிவு),
அநுபவ மூன்றுக்கும் முழுமையும் விரோதம். உலகத்துச் சாதிபேதம் (சமூக
ஏற்றத் தாழ்வுகள்) போலச் சற்சமயமாகிய சைவசமயத்தினுஞ் முதற்சாதி,
இரண்டாஞ் சாதி, மூன்றாஞ் சாதி, நாலாஞ் சாதி, நீச சாதியென சமய நடை
பற்றி ஐந்து சாதி கொள்ளப்படும்.
-
சிவாகமத்தில் விதிக்கப்பட்ட (சரியை,
கிரியை, யோகம், ஞானம் என்னும்) நான்கு பாத முறைப்படி வழுவற நடந்து
சிவானந்தப் பேறு பெற்ற சீவன்முத்தர் சிவமேயாவர்.
-
இனிச் சிவஞானிகள் முதற் சாதி;
சிவயோகிகள் இரண்டாஞ் சாதி;
சிவக் கிரியாவான்கள் மூன்றாஞ் சாதி;
சிவச் சரியாவான்கள் நாலாஞ் சாதி;
இந் நெறிகளில் வராதவர்களும், இவர்களையும், இவர்கள் சாத்திர
முதலியவற்றையும் நிந்திப்பவர்களும், இந் நெறிகளிலே முறை பிறழ்ந்து
நடக்கின்றவர்களும், இந்த நடைகளை விட்ட பதிதர்களும் சதா சூதகிகளாகிய
( எப்போதும் துடக்குள்ள) பஞ்சம சாதி (ஐந்தாம் சாதி).
-
சிவச்சரியை, கிரியை முதலியவைகளிலே
பொருள் தேடி உடல் வளர்ப்பவர்களும், அப்பொருளை பாசத்தாருக்கு (
உறவினர், நண்பர்களுக்கு) கொடுத்து இன்புறுபவர்களும், கோயில்
அதிகாரிகளாய் தேவத் திரவியத்தைப் புசிப்பவர்களும், விருத்திப் (வருமானம்)
பொருட்டு ஆச்சாரியாபிஷேக முதலியன செய்துடையோர்களும், விருத்திப்
பொருட்டு சிவ வேடம் தரித்தவர்களும், விருத்திப் பொருட்டு துறவறம்
பூண்டவர்களும், சிவஞான நூல்களைச் சொல்லிப் பொருள் வாங்கி வயிறு
வளர்ப்பவர்களும், பிறரும் பதிதர்களுள் (இழிவானவர்களுள்)
அடங்குவர்கள்.
இங்கே சொல்லிய முறையன்றி, சிவபெருமான்
ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டுத் தமக்குத் திருமேனியாகக்
கொண்டருளிய குரு, லிங்க, சங்கமம் (அடியார்) என்னும் மூன்றிடத்தும்
ஆசையும், பணியும், வழிபாடும், கொடையும், அடிமைத் திறமும்
உரிமையுடையவர்கள் எந்தக் கருமம் (தொழில்) செய்தாலும் முதற் சாதியெனக்
கொள்ளப்படுவார்கள்.
- பெரிய
புராண வசன முகவுரையில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
மாகேசுர பூசையால் விளையும் பலம் ஏற்பவருடைய
உயர்வு தாழ்வுகளினால் வேறுபடுமா?
ஆம். வைதிகப்பிராமணர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலமும், சமய
தீட்சிதர் ஒருவருக்கு அன்னதானம் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர்
பதினாயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலமும், விசேஷ தீட்சிம்ர்
ஒருவருக்கு அன்னதானஞ் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் லட்சம்
பேருக்கு அன்னதானம் செய்த பலமும், நிருவாண தீட்சிதர் ஒருவருக்கு
அன்னதானம் செய்த பலமும் ஒக்கும். வைதிகப் பிராமணர் கோடிபேருக்கு
அன்னதானம் செய்த பலமும், சைவாசாரியர் ஒருவருக்கு அன்னதானம் செய்த பலமும்
ஒக்கும்.
- ஆறுமுக நாவலரின் இரண்டாம்
சைவவினாவிடை -367
சாதி பிறப்பினால் அல்ல; அவரவர் நடைமுறையாலேயே
-
எல்லோரும் தங்கள் தங்கள்
வருணாச்சிரமங்களுக்கு உரிய ஒழுக்கங்களை வழுவாமல் அநுட்டித்தல்
வேண்டும்.
ஒழுக்கமில்லாதவர் வேதாகமங்களை ஓதினராயினும் அவைகளினாலே பயன் அடையார்.
-
சுத்தமாகிய ஜலத்தைத் தலையோட்டில்
வைப்பினும், நல்ல பாலை நாய்த்தோல் துருத்தியில் வைப்பினும், அவை
கெட்டுப் போதல் போலவே, ஒழுக்கமில்லாதவர் கற்ற சாத்திரங்கள்
கெட்டுப்போகும்.
-
தீட்சை உடையவராயினும்,
ஒழுக்கமில்லாதவராயின், தீட்சை இல்லாதவரோடு ஒப்பர்.
-
சூத்திரனாயினும் ஒழுக்கமுடையவனாயில்
பிராமணன் எனப்படுவன். பிராமணன் ஆயினும் ஒழுக்கம் இல்லாதவனாயில்
சூத்திரன் எனப் படுவன்.
-
பிராமணருள்ளும் பிரம க்ஷத்திரிய
வைசிய சூத்திரர் உண்டு. க்ஷத்திரியருள்ளும் பிரம க்ஷத்திரிய வைசிய
சூத்திரர் உண்டு. வைசியருள்ளும் பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர்
உண்டு. சூத்திரருள்ளும் பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர் உண்டு.
-
அவரவர் நடைகளினாலே அவரவரைப்
பகுத்தறிந்து கொள்ளலாம்.
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம்- பக்கம் 80
மாகேசுர பூசைப்
பந்திக்கு யோக்கியர் அல்லாதவர் யாவர்?
சிவ நிந்தகர், குரு நிந்தகர், சங்கம நிந்தகர், சிவசாத்திர நிந்தகர்,
சிவத்திரவிய அபகாரிகள், அதீட்சிதர், நித்தியகருமம் விடுத்தவர்
முதலாயினர்.
(சிவ நிந்தகர் - சிவனை அவதூறு பேசுவோர்; குரு நிந்தகர் - குருவை அவதூறு
பேசுவோர்; சங்கம நிந்தகர் - சிவனடியார்களை அவதூறு பேசுவோர்; சிவ
சாத்திர நிந்தகர் - சைவ சமய நூல்களை அவதூறு பேசுவோர்; சிவத்திரவிய
அபகாரிகள் - சிவதொண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆலய, மட மற்றும்
தாபனங்களின் சொத்துகளையும், வருமானங்களையும் அபகரிப்பவர்கள்; அதீட்சிதர்
- தீட்சை இல்லாதவர்கள்; நித்திய கருமம் விடுத்தவர் - தீட்சை எடுத்தும்
நித்திய அனுட்டானம் என்னும் சைவ சந்தியாவந்தனம் செய்யாதவர்கள். )
-
ஆறுமுக நாவலரின் இரண்டாம் சைவவினாவிடை, மாகேசுர பூசையியல் - 371
நாவலரின் சாதி, சமூக சமத்துவம்
-
சாதியினால் உயர்ந்தவர், ஒத்தவர்,
தாழ்ந்தவர் என்னும் முத்திறத்தார் உள்ளும் பசி தாகங்களினால்
வருத்தமுற்று வந்தவர் யாவரே ஆயினும் அவருக்கு அன்ன பானீயம்
கொடுத்தல் வேண்டும் என்பதே உண்மை நூல் துணிவு; இதுவே யுத்தி (அறிவு)
அநுபவங்களுக்கும் ஒத்தது; இங்ஙனமாகவும் பிராமணர் கட்டுவித்த
சத்திரங்களிலே பிராமணருக்கு மாத்திரம் அன்னம் கிடைக்கின்றது;
மற்றைச் சாதியார்கள் கட்டுவித்த சத்திரங்களிலும் அந்தப்
பிராமணருக்கு மாத்திரமே அன்னம் கிடைக்கின்றது. பிராமண பிரபுக்கள்
தங்கள் சாதியாருக்கு மாத்திரம் உதவி செய்ய, மற்றைச் சாதிப்
பிரபுக்களும் அந்தப் பிராமணருக்கு மாத்திரமே உதவி செய்து, தங்கள்
தங்கள் சாதியார்களையும், மற்றைச் சாதியார்களையும் கை
விடுவார்களாயின், பசியினால் வருந்தும் மற்றைச் சாதியார்களுக்கு
புகலிடமாவர் யாவரோ! அறியேம்! அறியேம்! இஃதென்னை கொடுமை! கொடுமை!
-
பசி தாகங்கள் எல்லாச் சாதியாருக்கும்
உள்ளனவேயாகவும், பிராமணருக்கு அன்னதானம் செய்வதே தருமம் என்றும்,
மற்றைச் சாதியாருக்கு அன்னதானம் செய்வது தருமம் அன்று என்றும்
நம்மவர்கள் பெரும்பான்மையும் எண்ணுகின்றார்கள். இவ் விபரீத
சிந்தனையினாலன்றோ நம்மவர்கள் பெரும்பான்மையும் சத்திரத்திலே
பிராமணருக்கு மாத்திரமே அன்னதானம் செய்கின்றார்கள்.
-
வறியவருக்குக் கொடுப்பதே தருமம்;
செல்வருக்கு கொடுப்பது தருமம் அன்று; ”வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை”
என்றார் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார். வறியவருள்ளும்,
நல்லொழுக்கம் உடையவருக்கும் தொழில் செய்து சீவனம் செய்ய
சத்தியில்லாதவருக்கும் கொடுப்பதே தருமம்; தீயொழுக்கம் உடையவருக்கும்
தொழில் செய்து சீவனம் செய்ய சத்தி உடையவருக்கும் கொடுப்பது தருமம்
அன்று. பிராமணர் எல்லாரும் வறியவரும் அல்லர், மற்றைச்
சாதியாரெல்லாரும் செல்வரும் அல்லர்; பிராமணரெல்லாரும் நல்லொழுக்கம்
உடையவரும் அல்லர்; மற்றைச் சாதியார் எல்லாரும் தீயொழுக்கம்
உடையவரும் அல்லர்; பிராமணரெல்லாரும் தொழில் செய்து சீவனம் செய்யச்
சத்தி இல்ல்லாதவரும் அல்லர்; மற்றைச்சாதியார் எல்லாரும் தொழில்
செய்து சீவனம் செய்ய சத்தி உடையவரும் அல்லர். வறுமை செல்வங்களும்,
நல்லொழுக்கம் தீயொழுக்கங்களும் தொழில் செய்யும் சத்தியினது இன்மை
உண்மைகளும் எல்லாச் சாதியாரிடத்தும் உண்டு. இப்படியிருக்க
பிராமணருக்கு மாத்திரம் கொடுப்பது தருமம் என்றும், மற்றைச்
சாதியாருக்குக் கொடுப்பது தருமம் அன்று என்றும் கொள்வது பேதைமையே.
புலையரே எனினும் ஈசன் பொலங்கழல் அடியில் புந்தி
நிலையரேல் அவர்க்குப் பூசை நிகழ்த்துதல் நெறியே என்றும்
தலையரே எனினும் ஈசன் தாமரைத் தாளில் நேசம்
இலரெனின் இயற்றும் பூசை பலன் தருவாரே யாரே?
- என்பது சிவதருமோத்திர ஆகமம்.
-
அங்ககீனர், ஆறு விரல் உள்ளவர்கள்,
வியாதியாளர், படியாதவர்கள், கிழவர், குரூபிகள், தரித்திரர், ஈன
சாதியாளர் என்பவர்களை அவர்களுடைய தோஷத்தைச் சொல்லிப் பரிகாசம்
செய்யலாகாது.
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம்,
பக்கம் 98
-
பகைவரும், சிநேகரும், அயலாருமாகிய
மூன்று திறத்தாரிடத்தும் பட்சபாதமின்றிச் சமமாயிருத்தல் வேண்டும்.
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம், பக்கம் 96
எடுத்துக்கொண்ட சிவசாத்திரம் படித்து முடித்தபின்
யாது செய்தல் வேண்டும்?
சிவலிங்கப் பெருமானுக்கும், சிவசாத்திரத் திருமுறைக்கும்
வித்தியாகுருவுக்கும் விசேட பூசை செய்து அவர் திருமுன் இயன்ற தட்சிணை
முதலியன வைத்து நமஸ்கரித்து அவரையும் தீட்சா குருவையும்
மாகேசுரர்களையும் குருடர், முடவர் முதலானவர்களையும் பூசித்து அமுது
செய்வித்தல் வேண்டும்.
- ஆறுமுக நாவலரின் இரண்டாம் சைவவினாவிடை 357
பழி பாவங்கட்குச் சிறிதாயினும் அஞ்சாது பந்தியிலே தமக்கும் தம்மைச்
சார்ந்தவருக்கும் உயர்வாகிய பதார்த்தங்களைப் படைப்பித்துக்கொள்ளலும்,
மற்றை ஏழைகளுக்குத் தாழ்வாகிய பதார்த்தங்களைப் படைப்பித்தலும்,
அவிவேகிகளும் சீச்சீ என்று வெறுக்கத்தக்க மிக இழிந்த செய்கைகளாம்; இப்
பந்தி வஞ்சனை மிகக்கொடிது, கொடிது!
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம், பக்கம் 154
பந்தி வஞ்சனை
செய்து புசித்தவரும், படைத்தவரும் படைப்பித்தவரும் யாது பெறுவர்?
கண்டமாலையால் வருந்துவர்; ஊர்ப் பன்றிகளாய்ப் பிறந்து மலத்தைத் தின்பர்;
நரகங்களில் விழுந்து நெடுங்காலம் வருந்துவர். ஆதலினால், வஞ்சனை ஒரு
சிறிதும் இன்றி எல்லாருக்கும் சமமாகவே படைத்தல், படைப்பித்தல் வேண்டும்.
பந்தி வஞ்சனை செய்து படைக்கப்பட்டவைகள் பிசாசுகளுக்கும்
இராட்சதர்களுக்கும் அசுரர்களுக்குமே பிரீதியாகும்; தேவப் பிரீதியாகா.
- ஆறுமுக நாவலரின் இரண்டாம் சைவவினாவிடை,மாகேசுரபூசையியல் - 374
மாகேசுர பூசா காலத்திலே மாகேசுரர் அல்லாதவர்
வரின், யாது செய்தல் வேண்டும்?
குருடர், முடவர், குழந்தைகள், வயோதிகர், வியாதியாளர், வறியவர்
என்பவர்கள் வரின், அவர்களை விலக்காது, இன்சொற்களினாலே மிக மகிழ்வித்து,
அவர்களுக்கும் அன்னம் கொடுத்தல் வேண்டும். வறியவருக்குக் கொடுத்தலே கொடை;
செல்வருக்குக் கொடுத்தல் திரும்ப வாங்குதல் பொருட்டுக் கடன் கொடுத்தல்
போலும்.
- ஆறுமுக நாவலரின் இரண்டாம் சைவவினாவிடை, மாகேசுரபூசையியல் - 375
சிவசாத்திரத்தைக் கைம்மாறு கருதிப்
படிப்பிக்கலாமா?
அச்சம், நண்பு, பொருளாசை என்பவை காரணமாகச் சிவசாத்திரத்தை ஒருவருக்கும்
படிப்பிக்கலாகாது. நல்லொழுக்கமும் குருலிங்கசங்கம பத்தியும் உடைய
நன்மாணாக்கர்களுக்கு அவர்கள் உய்வது கருதிக் கருணையினாலே படிப்பித்தல்
வேண்டும். அவர்கள் விரும்பித் தரும் தட்சிணையை தாம் செய்த உதவிக்கு
கைம்மாறு எனக் கருதி ஆசையால் வாங்காது, அவர்கள் உய்யும் திறம் கருதிக்
கருணையால் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
- ஆறுமுக நாவலரின் இரண்டாம் சைவவினாவிடை, குருசங்கம சேவையியல் - 358
சாதியினால் மனிதரை இழிவு செய்யாதீர்
குருவையும்
சிவபத்தரையும் யாது செய்தல் வேண்டும்?
மனிதர் எனக் கருதாது, சிவபெருமான் எனவே கருதி, மனம் வாக்குக் காயம்
என்னும் மூன்றினாலும் சிரத்தையோடு வழிபடல் வேண்டும். பிரதிட்டை செய்து
பூசிக்கப்படும் சிவலிங்கத்தைச் சிலையென்று நினைந்து அவமதிப்பவரும்,
சிவதீட்சை பெற்று இயன்றமட்டும் விதிப்படி அநுட்டிக்கும் சிவபத்தரை
மனிதர் என்று நினைந்தேனும் அவருடைய பூருவ சாதியை நினைந்தேனும்
அவமதிப்பவரும் தப்பாது நரகத்தில் வீழ்வர்.
வருணத்தாலாவது ஆச்சிரமத்தாலாவது வருணம் ஆச்சிரமம்
என்னும் இரண்டினாலும் ஆவது தம்மில் தாழ்ந்தவர் தீட்சை முதலியவற்றினாலே
தம்மில் உயர்ந்தவராயின், அவரை யாது செய்தல் வேண்டும்?
அவமதித்தலும் செய்யாது, புறத்து வணங்குதலும் செய்யாது, மனத்தால் வணங்கல்
வேண்டும். அப்படிச் செய்யாது அவமதித்தவர் தப்பாது நரகத்தில் வீழ்வர்.
சிவஞானிகளேயாயின், அவரை, வருணம், ஆச்சிரமம்
முதலியவை சற்றும் குறியாது, எல்லாரும் வணங்கல் வேண்டும். எல்லை
கடந்து முறுகி வளரும் மெய்யன்பினால் விழுங்கப்பட்ட மனத்தையுடையவர்,
திருவேடம் மாத்திரம் உடையவரைக் காணினும், வருணம் ஆச்சிரமம் முதலியன
குறித்துக் கூசித் தடைப்படாது, உடனே அத்திருவேடத்தால் வசீகரிக்கப்பட்டு,
அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்குவர்; அவ்வுண்மை திருத்தொண்டர்
பெரியபுராணத்தினாலே தெளியப்படும்.
- ஆறுமுக நாவலரின் இரண்டாம் சைவவினாவிடை 336, 344
நாவலர் பரிந்துரைத்த கல்வி
வித்தியாசாலைகளைத் தாபித்து
கல்வியறிவொழுக்கங்களிற் சிறந்த உபாத்தியாயர்களை நியோகித்து
பிள்ளைகளுக்கு கருவி நூல்களையும், லௌகிக நூல்களையும், சமய நூல்களையும்
படிப்பித்தல் வேண்டும். கல்வியிலே மிக்க விருப்பமும் இடையறா முயற்சியும்
உள்ள பிள்ளைகளுள்ளே வறிய பிள்ளைகளுக்கு அன்னமும் வஸ்திரமும் புத்தகமும்
கொடுத்தல் வேண்டும். வருடந்தோறும் பரீட்சை செய்து, சமர்த்தர்களாகிய
பிள்ளைகளுக்குப் பரிசு கொடுத்தல் வேண்டும்.
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம், பக்கம் 55-56.
வாழ்க்கையில் ஒரு பிரயோசனமான,
வருமானமுள்ள தொழிலைப் பெறுவதற்காக மாணவர்களைத் தயார் செய்வது என்பது
அவர்களை அவர்கள் தேசத்தினதும், மக்களினதும் அறநெறிப் பண்பாட்டுத்
தேவைகளில் இருந்து அன்னியப்படுத்துவதாய் இருத்தல் கூடாது.
- 1852 இல் அன்றைய இலங்கைத் தேசாதிபதி வில்லியம் அண்டர்சன் அவர்களுக்கு
நாவலரின் பரிந்துரைக் கடிதம்
மருத்துவம், சமூகம், சூழல்
வைத்தியசாலை இல்லாத ஊரிலே வைத்தியசாலை
தாபித்து வைத்திய சாத்திரத்திலே அதி சமர்த்தர்களும்,
இரக்கமுடையவர்களுமாகிய வைத்தியர்களை நியோகித்து வியாதிகளுக்கு மருந்து
செய்வித்தல் வேண்டும்.
வழிப்போக்கர்களுக்கு நிழலிடும்படி வழிகளிலே மரங்களை வைப்பித்தல்
வேண்டும். வழிகளிலும் குளக்கரைகளிலும் ஆவுரோஞ்சுகல் நாட்டல் வேண்டும்.
வழிகளிலே வேனிற் காலத்தில் தண்ணீர்ப்பந்தர்கள் வேண்டும். ( ஆவுரோஞ்சுகல்
- பசுக்கள் தம் உடலைத் தேய்த்துக்கொள்வதற்காக நட்டுவைக்கப்படும்
சொரசொரப்பான நெடிய நிலைக்குத்துக் கல்)
அநாதைப்பிள்ளைகளை வளர்த்து கல்வி கற்பித்துவிடல் வேண்டும். திக்கற்ற
விதவைகளை அன்ன வஸ்திரங் கொடுத்துக் காப்பாற்றல் வேண்டும்.
விவாகமின்றியிருக்கும் கன்னிகைகளை பொருள் செலவிட்டு அவ்வவர் வர்ணத்திலே
விவாகம் செய்து கொடுத்தல் வேண்டும்.
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம், பக்கம் 56 - 57.
நாவலர் கொண்டாடிய தனிமனிதப் பண்புகளும் சமூக விழுமியங்களும்
பிறரிடத்தே குற்றம் உண்டாயின், அவரைத்
தனித்த இடத்தில் கண்டு, அதனையும் அதனால் வரும் கேட்டையும் அவருக்கு
அறிவித்து, அவரை நல்வழிப்படுத்தல் வேண்டும். ஒன்று ஒருவருக்கு மிக
அப்பிரியமாய் இருப்பினும் அது அவருடைய நன்மைக்குக் காரணமாய்
இருக்குமாயின், அதை ஆவசியமாகச் சொல்லல் வேண்டும்.
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம், பக்கம் 97
தான் ஒருவருக்குச் செய்த நன்றியைச் சொல்லலாகாது. தனக்கொருவர் இட்ட
போசனத்தை இகழ்ந்து பேசலாகாது. தான் செய்த தர்மத்தையும், விரதத்தையும்
புகழ்ந்து பேசலாகாது.
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம், பக்கம் 98
பிறருடைய பொருளைக் காஞ்சிரங்காய்போல நினைத்தல் வேண்டும். தனக்குப் பிறர்
இலாபங் கருதாமற் செய்த நன்றியை மறக்கலாகாது. வஞ்சனையை ஒழித்தல் வேண்டும்.
பிறருடைய கல்வி, செல்வ முதலியவற்றைக் கண்டு பொறாமைப்படலாகாது.
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம், பக்கம் 96
கல்வியும், அறிவும், நல்லொழுக்கமும்,
செல்வமும், அழகும் தமக்குப் பார்க்கிலும் பிறருக்கு மிகப் பெருகல்
வேண்டுமென்று நினைத்தல் வேண்டும்.
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம், பக்கம் 96
காணாதவிடத்துப் பிறரை இகழ்ந்து பேசலாகாது. விளையாட்டுக்காயினும் பொய்
பேசலாகாது. வீண் வார்த்தை பேசலாகாது. கோண் மூட்டலாகாது.
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம், பக்கம் 96
அங்ககீனர், ஆறு விரல் உள்ளவர்கள்,
வியாதியாளர், படியாதவர்கள், கிழவர், குரூபிகள், தரித்திரர், ஈன
சாதியாளர் என்பவர்களை அவர்களுடைய தோஷத்தைச் சொல்லிப் பரிகாசம்
செய்யலாகாது.
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம், பக்கம் 98
பெரியோர்களும், வயோதிகர்களும், சுமை சுமப்போர்களும், வியாதியாளர்களும்,
பிள்ளைகளும், பசுக்களும், பெண்களும் எதிர்ப்பட்டால் அவர்களுக்கு வழி
கொடுத்து விலகிப் போதல் வேண்டும்.
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம், பக்கம் 108.
நாவலர் காட்டிய வன்முறை தவிர்க்கும் அன்பு வழி
ஒருவரை அடிக்கும்பொருட்டுத் தடி முதலிய
ஆயுதங்களை உயரத் தூக்குதலும், அவைகளால் அடித்தலும் ஆகாவாம். கோபத்தினால்
ஒருவர் தலைமயிரைப் பிடித்திழுத்தலும், தலையில் அடித்தலும் ஆகாவாம். தன்
வேலைக்காரர் தன் நிழலாயும், தன் மனைவியும் பிள்ளையும் தன் சரீரமாயும்
இருத்தலால் அவர் செய்த பிழையை வருத்தம் இன்றிப் பொறுத்துக் கொள்ளல்
வேண்டும்.
- ஆறுமுகநாவலரின் நான்காம் பாலபாடம், பக்கம் 98 -99.
தன்னை வைதவனிடத்தும் கடுஞ்சொற்களைப்
பேசாது இன்சொற்களையே பேசல் வேண்டும்.
- ஆறுமுக நாவலரின் பாலபாடம், 4ம் புத்தகம், பக்கம் 96
பதிவிரதை தன் வீட்டுக்கு வரும் துறவிகள்
முதலிய பெரியோர்களையும், அதிதிகளையும் உபசரித்து, அவர்களுக்கு அன்னங்
கொடுத்தல் வேண்டும். குருடர், முடவர், வியாதியாளர், விருத்தர் (வயோதிபர்)
முதலானவர்கள் வந்தால், முகமலர்ச்சியோடு இயன்றமட்டும் பிட்சை கொடுத்து
இனிய வார்த்தைகளைச் சொல்லி அனுப்ப வேண்டும். யாவரோடு ஆயினும் இடி
இடித்ததுபோல உரத்த சத்தத்தோடு பேசலாகாது. இனிய குரலோடு மிருதுவாகப்
பேசல் வேண்டும்.
- ஆறுமுகநாவலரின் நான்காம் பாலபாடம், பக்கம் 112 -113.
நாவலர் கனவு கண்ட ஆலயங்கள், சமய நிறுவனங்கள்
சனங்களுக்குப் பத்தி வளர்ந்தோங்கும் பொருட்டு, தேவாலயமெங்கும்
வேதவொலியும், தமிழ்வேத வொலியுமே தழைத்தோங்கும்படி செய்தல் வேண்டும்.
சைவர்களுக்குத் தமிழ் வேதம் தேவார திருவாசகங்கள்; வைஷ்ணவருக்குத் தமிழ்
வேதம் நாலாயிரப் பிரபந்தம். சைவமரபிற் பிறந்தவரேயானும் தேவார
திருவாசகங்களை ஓதாதவர் சைவராக மாட்டார். வைஷ்ணவ மரபிற்
பிறந்தவரேயாயினும் நாலாயிரப் பிரபந்தத்தை ஓதாதவர் வைஷ்ணவராக மாட்டார்.
மடாதிபதிகள், தம்மிடத்தே கற்கும்
மாணாக்கர்களுள்ளே, துறவிகளுக்கும், வறியவர்களுக்கும் அன்னம் வஸ்திரம்
முதலியவை கொடுத்து சிறிதும் பட்சபாதமின்றி அவர்களெல்லாரையும் சமமாகவே
பெருங்கருணையோடு நடத்தல் வேண்டும். தமக்கு அவர்கள் யாதாயினும் குற்றம்
செய்தால், அதனைப் பொறுத்துக்கொண்டு அவர்களுக்குப் பெற்ற தாயினும்
பதின்மடங்கு மிக இனியராய் ஒழுகல் வேண்டும். அவர்களுக்கு வியாதி வந்தால்
தமக்கு வந்தாற் போலவே மனந் தவித்து மருந்து செய்வித்து காலந்தோறும்
பத்தியம் தவறாமற் கொடுப்பித்தல் வேண்டும்.
பழி பாவங்கற்குச் சிறிதாயினும் அஞ்சாது
பந்தியிலே தமக்கும் தம்மைச் சார்ந்தவருக்கும் உயர்வாகிய பதார்த்தங்களைப்
படைப்பித்துக்கொள்ளலும், மற்றை ஏழைகளுக்குத் தாழ்வாகிய பதார்த்தங்களைப்
படைப்பித்தலும், அவிவேகிகளும் சீச்சீ என்று வெறுக்கத்தக்க மிக இழிந்த
செய்கைகளாம்; இப் பந்தி வஞ்சனை மிகக்கொடிது, கொடிது!
- ஆறுமுகநாவலரின் நான்காம் பாலபாடம், பக்கம் 149, 153
ஆறுமுகநாவலர் சிவனை அவதூறு செய்யும் சிவ நிந்தகர், குருமாரை அவதூறு
செய்யும் குரு நிந்தகர், மெய்யடியார்களை அவதூறு செய்யும் சங்கம நிந்தகர்,
சைவ சமய நூல்களை அவதூறு செய்யும் சிவ சாத்திர நிந்தகர், சிவதொண்டுக்காக
ஒதுக்கப்பட்டுள்ள ஆலய, மட மற்றும் தாபனங்களின் சொத்துகளையும்,
வருமானங்களையும் ஊழல் செய்து அபகரித்து அனுபவிக்கும் சிவத்திரவிய
அபகாரிகள், சிவதீட்சை எடுக்காமல் சிவ தொண்டர்கள் வேடத்தில் வலம்
வருகின்ற அதீட்சிதர்கள், சிவதீட்சை எடுத்திருந்தும் நித்திய பூசை
அனுட்டானங்களை வழுவவிட்டோர்கள் ஆகியோரையே தாம் எழுதிப் பதிப்பித்துப்
படிப்பித்த முதலாம், இரண்டாம் சைவ வினாவிடை நூல்களிலும், முதலாம்,
இரண்டாம், மூன்றாம், நான்காம் பாலபாடம் நூல்களிலும், பெரியபுராண வசனம்
போன்ற உரை நூல்களிலும் புலையர் என்றும், இழிசனர், தாழ்ந்த சாதியார்
என்றும் பல இடங்களில் தெளிவாகக் கூறியுள்ளார். எக்குலத்தில்
பிறந்திருந்தாலும் அவரவர் நடைமுறைகளைக் கொண்டே சாதியை வகுக்க
வேண்டுமேயன்றி பிறப்பினால் அல்ல என்று நாவலர் ஆணித்தரமாகக் கூறியது
மட்டும்ல்லாது சைவத்தின் உள்ளிடமான குரு, லிங்க, சங்கமம் (அடியார்)
என்னும் மூன்றிடத்தும் ஆசையும், பணியும், வழிபாடும், கொடையும், அடிமைத்
திறமும் உடையவர்கள் எந்தக் கருமம் (தொழில்) செய்தாலும் முதற் சாதியெனக்
கொள்ளப்படுவார்கள் என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். மனிதரை மனிதர் இழிவு
படுத்துவதையும், பட்சபாதம் பாராட்டுவதையும் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
நாவலர் கூறிய தனிமனித, சமய, சமூக விழுமியங்களைக் கொண்டே அவர் சுட்டிய
புலையர், தாழ்ந்த சாதியார், ஈனர் என்போரை நாம் இனம் காண வேண்டுமேயன்றி,
சமூகத்திலே புரையோடிப்போயுள்ள, பிறப்பினால் மனிதரை மனிதர்
இழிவுபடுத்தும் ஈனச் சாதிவெறி நடைமுறைகளைக் கொண்டு அல்ல என்பது இவற்றில்
இருந்து தெளிவாகின்றது. இந்த கண்ணோட்டத்திலே நாவலர் கூறிய சாதி, சமூகம்,
தனிமனிதப்பண்புகள் பற்றிய கருத்துகளை அணுகும்போதுதான் அவற்றில் உள்ள
யதார்த்தமான முற்போக்கான புரட்சிகரமான உள்ளடக்கங்களை எதிர்கால சமுதாயம்
இனங்காண முடியும்.
உசாத்துணை:
-
நான்காம் பாலபாடம்,
ஆறுமுக நாவலர், முதல் பதிப்பு 1865; 32ம் பதிப்பு 1998
இரண்டாம் சைவவினாவிடை, ஆறுமுக நாவலர், முதல் பதிப்பு 1873, 29ம்
பதிப்பு 2007.
பெரியபுராண வசனம், ஆறுமுக நாவலர், முதல் பதிப்பு 1852, 24ம் பதிப்பு
2008
நாவலர் நூற்றாண்டுவிழா மலர் - 1979
கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு - ஆயர் சபாபதி குலேந்திரன்
ஆறுமுக நாவலர் சரித்திரம், த. கைலாசபிள்ளை, முதல் பதிப்பு 1916,
6ம் பதிப்பு 1999
Wesleyan Methodist Church - Annual Report in England -1847
Wesleyan Methodist Church - Annual Report in England -1855
Christian Today- India; Friday, 8 May 2009, Editorial By Samuel
Ratnajeevan H. Hoole
Ambalavanar, Devadarshan Niranjan ( 2006) "Arumuga Navalar and
the construction of a Caiva public in colonial Jaffna". Harvard
University
Samuel Ratnajeevan Herbert Hoole (March 30, 2013) "Arumuka
Navalar: Fake Images and Histories". Colombo Telegraph
Samuel Ratnajeevan Herbert Hoole (April 05, 2013) "The Jaffna
Version of the Tamil Bible: By Peter Percival or Arumuka Navalar".
Colombo Telegraph
Samuel Ratnajeevan Herbert Hoole ( April 06, 2013) "Heritage
Histories: What They Are and How They Operate Through Jaffna".
Colombo Telegraph
A Rejoinder To Hoole: Tamil Hinduism and Arumuga Navalar by
Romesh Jayaratnam - Colombo Telegraph (May 03, 2013)
வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|