திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 9)
கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி
கவியரசர்
எந்த நேரத்திலும் மிகைப்பட்ட உணர்ச்சியோடு வாழ்ந்தவர்.ஏற்றுப்
போற்றுவோரையும் மாற்றி இகழ்வோரையும் ஏற்கும் மனப்பக்குவம் கொண்டவர்.
அவருக்குப் பிறகு அவரை விமர்சனம் செய்வோருக்கும் அவரது எழுத்துக்கள்
கிடைக்கச் செய்ய அவா கொண்டிருந்தார். சுற்றியிருந்த மனிதர்கள் சுயநலக்
கூட்டம் என்று புரிந்ததும்,”மனிதரைப் பாடமாட்டேன்” என்றும், மனிதரில்
மாணிக்கங்களும் உண்டு என்பதை உணர்ந்து “மனிதனைப் பாடுவேன்” என்றது அவரே!
மானிடரைப் பாடி அவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கையான பதிகம்
மலையளவு தூக்கி உடன்
வலிக்கும்வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வமிருகம்!
நிரந்தரமானவன்:
இவ்வாறு அவர் உணர்ச்சிகளின் குவியலாகவே வாழ்ந்தவர் என்பதை அவரது இந்தத்
தன்னிலைப் பாடல் சொல்லும். இரத்தத்திலகம் என்னும் படத்தில் கவிஞர்
திரையில் தோன்றி தானே பாடுவதாக இக்காட்சி அமைந்திருக்கும்.கவிஞனுக்கே
உரிய ஆளுமையோடும் ஆர்ப்பரிப்போடும் இப்பாடலை எழுதியிருப்பார்.
ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு
ஒரு கோலமயில் என் துணை இருப்பு
இசைப் பாடலிலே என் உயிர்த் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு.
ஆம்! காணும் இடத்திலெல்லாம் அழகையும் அன்பையும் காதலையும் அது தரும்
புத்துணர்ச்சியையும் கண்டு, உணர்ந்து, ரசித்து மகிழந்ததனாலல்லவோ,அவரால்
நம் உள்ளத்தில் ஊடுருவிப் பாயும் காலத்தால் அழியாப் பாடல்களைத்
தரமுடிந்தது.
மானிட இனத்தை ஆட்டிவைப்பேன்-அவர்
மாண்டுவிட்டால் அதைப் பாடிவைப்பேன் .
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை என்று ஒரு கவிஞன் பிரகடனம் செய்கிறான்
என்றால் அவனிடம் எத்தகைய கவி ஆளுமை இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர
முடிகிறது. அவர் ஒருவரால் தான் மட்டுமே இவ்வாறு அறுதியிட்டுக் கூற
முடிந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
நளவெண்பா:
வெண்பாப் புலியென புலவர் போற்றும் புகழேந்தியார்தம் நளவெண்பா எனும்
நன்மலர்ச் சோலையில் நன்கு இளைப்பாறியவர் நம் கவிஞர்.இத்தகைய பழம்
பாடல்களுக்கு புதிய கவிதைகளை, புதிய கண்ணோட்டத்தில் திரைப்பாடல்களைத்
தந்தவர் அவர்.
எழுந்திருக்கும் ஏமாந்து பூமாந் தவிசின்
விழுந்திருக்கும் தன்னுடம்பை மீளச் - செழுந்தரளத்
தூணோடு சேர்க்கும் துணையேதும் இல்லாதே
நாணோடு நின்றழியும் நந்து . –நளவெண்பா-137
இந்த இலக்கிய வரிகளுக்கு,கவியரசர் தந்த கவிதை வரிகளைப் பார்க்கலாமா?
நளனின் அழகை அன்னம் நவில
தமயந்தி எனும் தங்கநிகர்ப் பாவை
கண்ணாற் கண்டு களித்தனள்.
நாழிகை ஓட நாட்கள் நடக்க
காதல் கனவாய்க் கன்னியை வாட்ட
முத்துமாலை மூண்ட தீயினில்
வெந்து வீழ,மேனி துடிக்க
கள்வர் மனம் போல் காரிருள் சூழும்
வேளையில்,மார்பகம் விம்மித் தாழ
தென்றல் சீற,தேன்மதி கொதிக்க
இலக்கியக் காதல் வழக்கம்போல்
எல்லாம் நடக்க எழில்மிகு கோதை
தனிமைத் துயரில் தவித்தனள்.
ஓர் நாள் மீண்டும் எழுந்தாள்:வீர மார்பன்
தோற்றம் மீண்டும் தூணிடைத் தோன்ற
தூணைக் கட்டித் தோளினைச் சேர்த்து
மார்புறத் தழுவி மாறி மாறி
முத்தம் பொழிந்தனள்; மூன்று நாழிகை
சென்றதும் கோதையின் சிந்தை தெளிந்தது;
தூணா, நளனா? தோகை தூணைப்
பார்த்து வாடினாள்; பழக்கப்படியே
நாணம் மோத நைந்தனள் நின்று!
அப்பப்பா! நாலே வரியில் புகழேந்தியார் பாடியதை நாற்பது வரிகளில் கவிஞர்
வருணித்தார். சரி கவிதை பாடிவிட்டார். திரைப்பாடல்?
இதோ! கந்தன் கருணை –ங்கிற படத்துல,
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு-ன்னு
ஆரம்பிச்சி
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண்மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் –தோழி
தூக்கத்தின் கனவென்று தான் உரைத்தாள்! - ன்னு முடியும்.
கவிஞன்தன் படைப்புகளில் தன்னை எங்கேனும் ஓரிடத்தில் வெளிப்படுத்தியே
தீருவான்.அவன் நினையாவிட்டாலும் அவன் பண்புகள் அவனை அறியாமலேயே பாட்டில்
இழையோடும் என்பது கவிஞர்களின் முடிபு.கவியரசரும் அதற்கு விதிவிலக்கல்ல.
என் ஞானம் என்பது என் வாழ்க்கை
அனுபவங்களிலிருந்து திரட்டப்பட்ட தொகுப்பு என்பார்.
என் ஆத்மா தினந்தோறும் அழுவதைத்தான் நீங்கள்
எல்லோரும் கவிதை என்கிறீர்கள் பாடல் என்கிறீர்கள்என்றதும் அவரே!
அவரது கவிதையாயினும் திரைப்பாடலானாலும் அதில் உவமை நலம்,இயற்கை
வருணனை,சிலேடை,சிருங்காரம் ஆகிய அலங்காரங்களை மிகுதியாகக்
காணலாம்.இவற்றிற்கிடையே அவரின் எண்ணத் துணிவையும் அவர்தம் படைப்புகளிலே
காணலாம்.
மதுவே வா!மயிலே வா!
வாழுங்காலம் வரைக்கும்
புதியதுவாய்த் தோன்றும் பொருளே வா!
எப்போதும் என்னுடனே நீங்கள் இருவர் இருப்பீராகில்
பொன்னுலகம் காண்பேன்;
பொங்கும் கவிமழையில்
மண்ணுலகைத் தோய்த்து
மயக்கம் பிறக்க வைப்பேன்.
சம்சாரமும் மதுச்சாரமும் உள்ளவரை தழுவாது மரணபயமே .இந்த வரிகளில்
காணப்படுவது அனுபவமா?துணிச்சலா?களியாட்டமா ?தத்துவமா?
இதற்கு ஒப்புவமையான பாடல் வேண்டுமே?கொடுத்தார் நம் கவி.
வசந்த மாளிகை படத்துல, மது இருந்தால் நீங்கள் வானத்து
தேவர்களாகலாம்.வந்து இறங்கும் தேவதையும் ஆகலாம் என்கிறார்.
ஓ...மானிட ஜாதியே ங்கிற பாடல்ல மது அருந்தி மயங்கிய நிலையிலும் அறிவுரை
சொல்லும் பாடலாக இது அமைந்தது.
தொடரும்............
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|