திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 10)

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி

பாரதியின் பாடல்களில் அழகின் ஆதிக்கம்
பாரதிதாசன் பாடல்களில் அழகின் சிரிப்பு
கவிமணியின் பாடல்களில் குழைவின் குதூகலம்

கவியரசரின் பாடல்களிலோ எளிமையும் இனிமையும் நிறைந்து காணப்படும்.

அதைத் தான் இத்தொடர் முழுதும் பார்த்து வருகிறோம்.

மகாராணி அவனை ஆளுவாள்:

“தாமுறு காமத்தன்மை தாங்களே உரைப்பது ஏமுறு மகளிர்க்கில்லை”
என்று அரக்கியான சூர்ப்பனகையைப் பேச வைக்கிறார் கம்பர். எனினும் இந்த ஆண் உயர்வு பெண் உயர்வு என்பதெல்லாம் ஓரிடத்தில் காணாமல் போய்விடுகிறது என்று தொல்காப்பியம் கூறுகிறது. எங்கே தெரியுமா?

“மனைவி உயர்வும் கிழவன் பணிவும் நினையுங்காலைப் புலவியுள் உரிய”
(தொல்-)

இதைச் சரியான கோணத்தில் புரிந்து கொண்ட கண்ணதாசன் கர்ணன் படத்தில் இப்பாடலை இலக்கியக் காதல் மீதூர எழுதியிருக்கிறார்.

மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்;
புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழலாம்.
புதுமை கூறும் மனைவி கண்ணில் உலக இன்பம் காணலாம்;
நான்கு பக்கம் திரைகளாடும் பாமலர் மஞ்சம்-அதன்
நடுவினிலே குடை பிடிக்கும் காதலர் நெஞ்சம்
மான் கொடுத்த சாயல் அங்கே மயங்கிடும் கொஞ்சம்-அந்த
மயக்கத்திலே தலைவியிடம் தலைவனே தஞ்சம்;

“பாதத்தில் முகம் இருக்கும்,பார்வை இறங்கி வரும்;
வேகத்தில் லயித்திருக்கும்,வீரம் களைத்திருக்கும்”.


கர்ணன் கொடைவள்ளல் என்பதை நாமறிவோம். ஆனால் அந்த வள்ளலுக்கே வழங்கிய வள்ளல் ஒருவருண்டு; அவர் வேறு யாருமல்ல; கர்ணனுக்கு கூடல் சுகத்தையும் அதன் பயனாய் மழலை இன்பத்தையும் வழங்குவது அவர் மனைவி தானே!அதையும் இப் பாடலில் சொல்கிறார்.

கண்ணனையும் அந்த இடம் கலக்கவில்லையா?–இந்த
கர்ணனுக்கு மட்டும் இதயம் இல்லையா?
வள்ளலுக்கு வள்ளல் இந்தப் பெண்மையில்லையா? – எந்த
மன்னருக்கும் வழங்குவது மனைவியில்லையா?

இனி, மனைவியரை வள்ளல்கள் என்றே அழைக்கலாமோ ?

கலித்தொகை:


தலைவனுடன் உடன் போகிய தன் மகளைத் தேடும் செவிலித்தாய் வழியில் வருவாரை அறவோர், அந்தணர் முதலியோரிடம் அவர்களைப் பற்றி விசாரிக்கின்றாள். அதற்கு, அவர்கள் தரும் அறிவுரையில் மூன்று செய்திகளைக் கூறுகின்றனர். அம்மூன்றும் உவமைகளாக அமைந்துள்ளன.

  • நறுமணம் தரும் சந்தனம் மலையில் தோன்றினாலும் அம்மலைக்கு அச் சந்தனம் மணம் உண்டாக்குவதில்லை. அதை பூசிக்கொள்பவர்களுக்கே அது மணத்தை தருகின்றது.
     

  • கடலில் தோன்றும் முத்து அக்கடலுக்கு அழகு தருவதில்லை,அதனை அணிபவர்க்கே பயன்படுகிறது.
     

  • யாழில் தோன்றும் இசை அவ் யாழிற்கு இன்பம் உண்டாக்குவதில்லை, அதனை உண்டாக்கும் இசைக்கலைஞனுக்கே இன்பம் தருகிறது.


இவ்வாறே உன் மகள் பிறந்த இடத்திற்கு பயன்படாள். கொண்ட கொழுநனுக்கே துனையானவாள் என்ற செய்தியைக் கூறுகின்றார்கள்.

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்,

நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே .....
(கலித்தொகை)

. பட்டணத்தில் பூதம் என்ற படத்தில “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” என்று ஆரம்பிக்கிற பாடலின் இடையே இந்த இலக்கியக் காட்சிக்கு ஏற்றாற்போல் சில வரிகளை இழையோடவிட்டார் கவிஞர்.

மலையில் சந்தனம் மார்பின் சொந்தம்;

மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்!


நக்கண்ணையின் காதல் :


மாபெரும் வீரரான சோழன் கொப்பெருநற்கிள்ளியை,பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார் காதலிக்கிறார். ஒருமுறை, பெருநற்கிள்ளி ஆமூர் மல்லனுடன் மல்லமர் புரிந்தான். இக்காட்சியைக் காண காதலி நக்கண்ணையார் ஓடோடி வருகிறாள். மற்போரில் காதலனின் திண்தோள் வலிமையைக் கண்டு வியந்திருக்கும்போது, அருகில் சிலர் நற்கிள்ளி வெல்லுவான் வெல்லுவான் என்போரும், இல்லையில்லை தோற்பான் தோற்பான் என்று சிலரும் வம்பளந்து கொண்டிருந்தனர்.இந்நிலையில் நக்கண்ணனையின் மனம் தயிரிற் திரியும் மத்து போல் ஆனது. அருகில் சென்று பார்க்கத் தடுக்கும் நாணம் ஒருபுறம்,அவன் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை ஒருபுறம் இவையனைத்தும் அவளைப் பாடாய்ப் படுத்துகிறது.

என் ஐக்கு ஊர் அன்மையானும்.
என் ஐக்கு நாடு அன்மையானும்
ஆடு ஆடு என்பர் ஒரு சாராரே
ஆடு அன்று என்ப ஒரு சாராரே
நல்ல பல்லோர் இரு நன்மொழியே.
அருஞ்சிலம்பு ஒடிப்ப ஒடி எம் இல்,
முழாவரைப் போந்தை பொருந்தி நின்று,
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே!
  - புறம்-85. 1-8

இதில் கவியரசரின் முத்திரை எங்கே இருக்கிறது என்று பார்த்தால் “இதயக்கமலம்” படத்தில்,

விழி பார்க்கச் சொன்னாலும்
மனம் பார்க்கச் சொல்லாது.
மனம் பேசச் சொன்னாலும்
வாய் வார்த்தை வராது.
அச்சம் பாதி ஆசை பாதி
பெண் படும்பாடு....

இப்படி அவளின் காதல் அவத்தையைப் பட்டியல் இட்டிருந்தார் கவிஞர்.
 

                                                                                                                                                தொடரும்............

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்