இளைய தலைமுறைக்கு ‘மரபின் மைந்தன்’ முத்தையாவின்  வெற்றி மொழிகள்

பேராசிரியர் இரா.மோகன்

த்மஸ்ரீ ஔவை நடராசனின் மொழியில் குறிப்பிடுவது என்றால், “தலைமுறை தலைமுறையாக ஓங்கிய சிறப்பின் உயர்ந்த மரபின் கொழுந்தாக அமைந்த மைந்தன்தான் மரபின் மைந்தன்” (முத்தையாவின் மனிதர்கள்: பொன்விழா மலர், 2018, ப.16). காவியத் தாயின் இளைய மகனான கண்ணதாசனின் இயற்பெயரினைத் தமது பெயராகக் கொண்டிருக்கும் முத்தையா, பன்முகப் பரிமாணங்களும் பரிணாமங்களும் படைத்த ஓர் ஆற்றல் சால் ஆளுமையாளர்; வெற்றியாளர். கோவை மாநகரின் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்கள் பயின்றவர்; ‘நமது நம்பிக்கை’ என்னும் தன்முன்னேற்றத்  திங்கள் இதழின் பதிப்பாளர், ஆசிரியர்; சேக்கிழார் பெருமன்றத்தின் தலைவர்; எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் அறங்காவலர்; வெற்றித் தமிழர் பேரவையின் மாநிலப் பொதுச் செயலாளர்; கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் திட்டக்குழு உறுப்பினர்; ‘சிகரம் உங்கள் உயரம்’ மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் இயக்குநர்; தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர்; தே மதுரத் தமிழோசையைப் பரப்புவதற்காக மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, அபுதாபி, மொரீசியஸ், சுவிட்சர்லாந்து. பாரீசு முதலான பல்வேறு அயல்நாடுகளுக்குப் பல முறை பயணம் மேற்கொண்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக, பொன்விழா ஆண்டான ஐம்பது வயதிற்குள் கவிதை, தன்முன்னேற்றம், மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, இலக்கியம், ஆன்மிகம், உரை, பதிப்பு, தொகுப்பு ஆகிய பல்வேறு துறைகளைச் சார்ந்த மணியான 67 நூல்களை வெளியிட்டுச் சாதனை படைத்தவர். “முன்னைத் தமிழின் மூவாப் பெருமையும், பின்னைத் தமிழின் பேரெழிலும் என்னை இலக்கியத் துறைக்குள் இழுந்து வந்தன; இருத்தியும் வைத்தன” (முன்னுரை, மரபின் மைந்தன் கவிதைகள், ப.06) என்னும் ஒப்புதல் வாக்குமூலம் ‘மரபின் மைந்தன்’ முத்தையாவின் படைப்பாளுமையைக் கோடிட்டுக் காட்டுவதாகும்.

பெருமாள், அடியவர்களின் தமிழுக்கு வசமாகிப் பின்சென்ற வரலாற்றைக் குமரகுருபரர்,

“பழமறைகள்  முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங் கொண்டலே!”

எனப் பாடிப் பரவுவார். ‘மரபின் மைந்தன்’ முத்தையாவோ,

“என் கவிதைகளை வாங்குவோர் வரிசையில்
கடைசி ஆளாய்க் கடவுள் நிற்கிறார்”
(ப.179)

எனக் கடவுளைக் கவிதை வாங்குவோர் வரிசையில் கடைசி ஆளாக நிற்க வைத்திருப்பது புதுமையிலும் புதுமை; அருமையிலும் அருமை.

‘மரபின் மைந்தன்’ கவிதைகள்: முழுத்தொகுப்பு

‘வேலின் வெளிச்சத்தில்’ (1989) தொடங்கி ‘இணைவெளி’ (2016) வரையிலான ஒன்பது தொகுதிகளிலும் இடம்பெற்றுள்ள அனைத்துக் கவிதைகளும் ஒருங்கே சேர்க்கப்பெற்று, ‘மரபின் மைந்தன் கவிதைகள்’ என்னும் தலைப்பில் முழுத்தொகுப்பாக ‘நமது நம்பிக்கை’ பதிப்பகத்தின் சார்பில் ஆகஸ்டு, 2018-இல் வெளிவந்துள்ளன.

“காலத்திடம் கவிஞன் ஒரு கருவியாகிறான்…  சில
மேன்மையான தருணங்களில் கவிதையாகிறான்!”
 (ப.523)

என ஆழ்ந்திருக்கும் தம் கவிதையுளத்தினை வெளிப்படுத்தும் ‘மரபின் மைந்தன்”,

“இந்தக் கணம்தான்… இந்நொடிதான்
எல்லாவற்றிலும் பெரும் உண்மை!”
(ப.76)

எனத் தத்துவ நோக்கில் ‘எது உண்மை?’ என்ற வினாவுக்கு விடையளிப்பது குறிப்பிடத்தக்கது.

இளைய தலைமுறைக்கு ‘மரபின் மைந்த’னின் வெற்றி மொழிகள்

‘மரபின் மைந்தன்’ முத்தையா படைத்துள்ள நூல் வரிசையில் முதன்மையான இடத்தினைப் பெறுபவை அவரது தன்முன்னேற்ற நூல்கள் ஆகும். இவற்றுள் ‘வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்’, ‘வெற்றிச் சிறகுகள் விரியட்டும்’, ‘நீங்கள் வெல்வது நிச்சயம்’, ‘பின்னடைவுகளைப் பிளந்து முன்னேறுங்கள்’, ‘மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்’, ‘அறிய வேண்டிய ஆளுமைகள்’ ஆகிய நூல்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இனி, ஆளுமை வளர்ச்சி நோக்கில் இளைய தலைமுறையினருக்கு ‘மரபின் மைந்தன்’ முத்தையா தம் கவிதைகளில் முன்மொழிந்துள்ள வெற்றி மொழிகள் பத்தினைக் குறித்து இக் கட்டுரையில் சுருங்கக் காண்போம்.

1. ‘உன்னில் நெருப்பு இருக்கிறது!’

எந்த முயற்சியிலும் தொடக்கத்தில் தோல்விகள் வரலாம்; அவற்றைக் கண்டு ஒதுங்கிப் போவதிலோ, அவற்றையே நினைத்து நெஞ்சம் கலங்குவதிலோ, மயங்குவதிலோ பொருள் இல்லை; ‘தொட்டால் சிணுங்கி’ தாவரம் போலத் தலை குனிந்து நிற்பதிலும் பயன் இல்லை. மாறாக, ‘மாறுவேடத்தில் வருகிற வெற்றிகள்’ என அவற்றை ஏற்றுக் கொண்டு நிமிர்ந்து நிற்பதில் தான் - நின்றாலும் நடந்தாலும் முன்னேற்றத்தை நினைத்த படியே உயிர்ப்புடன் இயங்குவதில் தான் - முனைப்போடு உழைப்பதில் தான் - வெற்றியின் இரகசியம் அடங்கியுள்ளது.

“உன்னில் நெருப்பு இருக்கிறது!
உன்னை நீயே நம்பிடத் தொடங்கு,
உதய வாசல் திறக்கிறது!” 
(ப.200)

என்பதே ‘கண்ணீர் சுமந்து நிற்கும் கவலை மனிதனுக்கு’ ‘மரபின் மைந்தன்’ முத்தையா கூறும் அறிவுரை; வலியுறுத்தும் வழிகாட்டல்.

பிறிதொரு கவிதையிலும்,

“வெற்றி என்பது கண்ணாமூச்சி
தோல்விகள் நடுவே ஒளிந்திருக்கும்!”
(ப.199)

எனக் கவிஞர் குறிப்பிடுவது இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

2. ‘உழைக்கும் யாருக்கும் உயர்வு உள்ளது!’

‘மரபின் மைந்தன்’ முத்தையாவின் கண்ணோட்டத்தில் ‘வாழ்க்கை என்பதே வசந்தப் போர்க்களம்’; அதில், ‘முயன்று பார்ப்பதே மனிதன் போர்க்குணம்’. எனவே,

“உழைக்கும் யாருக்கும் உயர்வு உள்ளது
உணர்ந்து வாழ்வதே உனக்கு நல்லது!
ஜெயிக்கப் பிறந்தநீ எதற்குத் துவள்வது?
நெருப்பின் நடுவிலும் சிரிக்கப் பழகிடு!”

என இளையோருக்கு அறிவுறுத்துகின்றார் முத்தையா. ‘இடுக்கண் வருங்கால் நகுக!’ (குறள்: 621) என்றார் வள்ளுவர் பெருமான். முத்தையாவோ இன்னும் ஒரு படி மேலாக, ‘நெருப்பின் நடுவிலும் சிரிக்கப் பழகிடு!’ என இளைய தலைமுறைக்கு வாழும் முறைமையை உணர்த்துகின்றார். ஓர் எளிய வாய்- பாட்டின் வடிவில் அவர் வலியுறுத்துவது இதுதான்:

“யுக்தி பழகிடு - சக்தி பிறந்திடும்!
சக்தி செலவிடு - வெற்றி பிறந்திடும்!
வெற்றி கணக்கிடு - வாழ்க்கை புரிபடும்!
வாழ்க்கை புரிந்ததும் வானம் வசப்படும்!”
(ப.221)

‘பூமி உன் வசம்’ என்னும் தலைப்பில் எழுதிய பிறிதொரு கவிதையிலும்,

“முனைப்பும் உழைப்பும் முதலீடு - நீ
முட்டி உடைத்து முன்னேறு”
(ப.218)

எனக் கவிஞர் குறிப்பிட்டிருப்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

3. காலம் உயர்த்திப் பிடிக்கும் நாளுக்குக் காத்திரு!

‘பூக்கும் வரையில் அரும்பின் நறுமணம், பூமிக்குத் தெரியாது!’ அது போல், ஒருவரைக் காலம் உயர்த்திப் பிடிக்க எத்தனைக் காலம் பிடிக்கும் என்று எவருக்கும் தெரியாது; எவரும் கணித்துச் சொல்லவும் இயலாது. அதற்குள் அவர் எத்தனையோ இகழ்ச்சிகளை, எத்தனையோ ஏளனங்களை எதிர்கொள்ள நேரலாம். எல்லாவற்றையும் அவர் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்; தக்க தருணம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

“கருவறைக்குள்ளே குழந்தை வளர்வது
கடவுளின் ரகசியம் தான்!
தருணம் வரும்வரை பொறுமை காப்பது
கனவுக்கும் அவசியம்தான்!”         
(ப.220)

எனத் தெளிவுபடுத்துகின்றார் ‘மரபின் மைந்தன்’ முத்தையா. ‘உன்னைக் காலம் உயர்த்திப் பிடிக்க, ஒரு நாள் விடிந்து விடும்!’ என இளையோர் நெஞ்சங்களில் நம்பிக்கையை விதைக்கும் கவிஞர், அன்று ‘நீயா என்று ஊரே வியந்திடும்’ என்றும் கூறி, அந்த நாளுக்குக் காத்திருக்குமாறு நெறிப்படுத்துகின்றார். “உன்னில் திறமை உருவெடுக்கும் வரை, உள்ளே பொறுமை வளர்ப்பாய்!” (ப.359) எனவும் அறிவுறுத்துகின்றார்.

“நான் குருகுலத்தில் படிக்கும் போது, என்னுடைய ஆசிரியர்களில் ஒருவராக இருந்த கே.வி.அய்யர் அடிக்கடி ஒரு பொன்மொழி சொல்வார்.

‘ஒவ்வொருவரும் அவரவருடைய சந்தர்ப்பத்திற்காகக் காத்திருங்கள்’ என்பதே அது.

நான் காத்திருக்க முடிவு செய்தேன்” (சுயசரிதம், ப.33)

என்னும் கவிஞர் கண்ணதாசனின் தன்வரலாற்றுக் குறிப்பு இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

4.  ‘வாழத் தெரிந்து வாழ்வை நடத்திடு!’

‘முயற்சி திருவினை ஆக்கும்’ (குறள்:  616) என்பதில் ‘மரபின் மைந்தன்’ முத்தையாவுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. அவரது அகராதியில், ‘வாழ்க்கை என்பது வார்க்கப்படுவது; வேண்டிய விதமாய் வார்த்திடலாம்!’ சூழ்நிலை எப்படி இருந்தாலும் கவலை இல்லை – வாட்டும் ஏழ்மையும் வளமான செல்வமும் யாருக்கும் தலைவிதி இல்லை – ‘எதையும் முயன்றால் மாற்றிடலாம்!’ என்பது முத்தையாவின் முடிந்த முடிவு. “காட்டிய திசையில் போவதெல்லாம் – வெறும், கால்நடை வாழ்க்கை! உனக்கு எதற்கு?” (ப.211) என்பது அவரது பொருள் பொதிந்த வினா.

“வாழத் தெரிந்து வாழ்வை நடத்திடு!
வானம் ஒருநாள் வசப்படலாம்!”

என இளையோர்க்கு நம்பிக்கை ஊட்டும் கவிஞர்,

“பற்றிய துறைகளில் முத்திரை பதித்தால்
பூமிக்கு உன் கதை புது கீதை!”

என்றும்,

“நெஞ்சில் உரமுடன் நிமிர்ந்து நடந்தால்
நீ சொல்லும் சொல்லே வேதமடா!”
(ப.215)

என்றும் மொழிவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது கற்ற கல்வியையும், பெற்ற வாய்ப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, முனைப்புடனும் எழுச்சியுடனும் இடைவிடாமல் முயற்சி செய்தால் ஒருவன் விதியின் திசைகளையே மாற்றிக் காட்டலாம் என அறுதியிட்டு உரைக்கின்றார் முத்தையா.

5. ‘பாதையை வகுத்திடப் போராடு!’

சாதிக்க நினைக்கும் இளைய தலைமுறை ஒருகணமும் ஓய்ந்திருத்தல் ஆகாது; இமைப்பொழுதும் சோர்ந்திருத்தலும் கூடாது.

“சுடும் வரை
நெருப்பு
சுற்றும் வரை
பூமி்
போராடும் வரை
மனிதன்
நீ மனிதன்”
(இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, ப.95)

என இளைய தலைமுறைக்கு எடுத்துரைப்பார் கவிஞர் வைரமுத்து. அவரது வாக்கினை அடியொற்றி,

“ஓய்வெனும் பெயரில் உன் துடிப்பை நீ
ஓயச் செய்திடக் கூடாது!
பாயும் நதியெனப் புறப்படு நீ – உன்
பாதையை வகுத்திடப் போராடு!”

என ‘மரபின் மைந்தன்’ முத்தையாவும் இளையோர் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிமுறையினை  உணர்த்துகின்றார். ‘வந்தோம், போனோம்’ என்பது வேடிக்கை வாழ்வு; உலகில் பலரது வாடிக்கை வாழ்வும் கூட. உலகிற்கு வந்ததன் நோக்கம் உணர்ந்து, செயல்பட்டு வரலாறு படைத்தோம் என்றால், அதுவே விழுமிய வாழ்வு; எடுத்துக்காட்டான வாழ்வு.

“வந்தோம் போனோம் என்பவர்கள் ஒரு
வரியாய்க் கூட வாழ்ந்ததில்லை!
வந்ததன் நோக்கம் உணர்ந்து கொண்டால் - நீ
வரலாறாவதில் ஐயமில்லை!”
(ப.364)

என அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கின்றார் கவிஞர்.

6. ‘வான்வரை நீளுக உன் இலக்கு!’

‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ (குறள்: 596) என்றபடி, நாம் வாழ்வது மண்ணில் தான் என்றாலும், நமது இலக்குகள் வானளாவப் பரந்து விரிந்தனவாக இருத்தல் வேண்டும். சின்னக் கவலைகளை மறந்து, தாழ்ந்த எண்ணங்களைத் துரத்தி அடித்து, ‘திசைகள் எட்டும் இனி நமக்கு!’ என்ற எண்ணம் கொண்டு, சிறகுகள் வீசிப் பறக்குமாறு வழிகாட்டுகின்றார் ‘மரபின் மைந்தன்’ முத்தையா. மேலும் அவர், “உன்னை நீயே கடந்து விடு, உயரம் தொட்ட பின் கரைந்து விடு” எனக் கூறுவதில் நுண்ணிய குறிப்பு உள்ளது. ‘வானவெளியில் பறவைக்கு, வேலைகள் எதுவும் கிடையாது! ஆன பொழுதும் பறக்கிறதே, அது போல் நமக்கேன் முடியாது?’ என வினவும் கவிஞர்,

“வாழ்க்கை பூமியில் நிகழ்ந்தாலும் -
வான்வரை நீளுக உன் இலக்கு!”
(ப.210)

என இளையோருக்கு வழிகாட்டுகின்றார் கவிஞர்.

7. ‘தன்னை வெல்லும் தகுதி பெறு!’

ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய தலையாய ஆளுமைப் பண்பு தன்னை வென்று ஆளும் திறமை பெறுவது ஆகும். ‘தன்னைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில், எல்லாப் பயன்களும் தாமே எய்தும்’ (பாரதியார் கவிதைகள், ப.4) என்பது பாரதியார் வாக்கு. இக் கருத்தியலின் ஒளியில்,

“பொன்னை பொருளை அள்ளிக் குவிப்பவன்
பூமியின் தலைவன் ஆவதில்லை!
தன்னை வெல்லும் தகுதி இருந்தால்
தலைவன் அவன் போல் யாருமில்லை!”
 (ப.223)

எனத் தலைவனுக்கு - தலைமைப் பண்புக்கு – ‘மரபின் மைந்தன்’ முத்தையா தக்கதொரு வரைவிலக்கணம் வகுத்துள்ளார். அவரது பார்வையில் பூமிப் பரப்பில் புதிதாகப் புறப்பட்டு வந்த புனிதத் தலைமை சுவாமி விவேகானந்தர் ஆவார். ‘காயமே இது பொய்யடா – வெறும் காற்றடைத்த பையடா!’ என்பது போன்ற ‘வெட்டிப் பேச்சு வேதாந்த’த்திற்கு முற்றுப்புள்ளி வைத்து – இரும்பு போல் உடம்பை உரம் பெறவைத்துக் கொள்ள வலியுறுத்தியது – ‘கால் பந்தாட்டம் கடவுளைக் காட்டும், கிளர்ந்தெழு தோழா!’ என அறிவுறுத்தியது – வீரத்துறவி விவேகானந்தரின் சித்தாந்தம். ‘தீர்க்கமும் தெளிவும் வாழ்க்கையில் இருந்தால் அதற்குப் பெயர்தான் மெய்ஞ்ஞானம்’ என உரைத்ததோடு நில்லாமல். விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும் ‘சாதனை என்பது அனைவருக்கும் சாத்தியமே’ என்பதை இளையோருக்கான செய்தியாக எடுத்துக் காட்டுவனவாகும்.

8. ‘அத்தனை நாளும் நல்ல நாளே!’

“ வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
            மிக நல்ல வீணை தடவி
  மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
            உளமே புகுந்த அதனால்
  ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
            சனி பாம்பு இரண்டும் உடனே
  ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
            அடியார் அவர்க்கு மிகவே”

என்பது ‘குழந்தை ஞானி’ திருஞானசம்பந்தரின் ‘கோளறு பதிக’ப் பாடல்: நாளும் பொழுதும் பற்றிய மூட நம்பிக்கையை ஓட ஓட விரட்டி, உள்ளத்தில் உற்சாகத்தை, ஊக்கத்தை ஆழமாக ஊன்றும் அற்புதமான பாடல். இதனை நினைவூட்டும் வகையில் ‘மரபின் மைந்தன்’ முத்தையா ‘நல்ல நாள்’ என்ற தலைப்பில் ஓர் அருமையான பாடலைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது பார்வையில் ‘நல்ல நாள்’ என்பது இதுதான்:

“ஊற்றெனப் பொங்கும் உற்சாகம் – அது
உந்தித் தள்ளினால் நல்ல நாள்…
இன்னும் இன்னும் எனும் ஆர்வம் - உங்கள்
இதயத்தில் மலர்ந்தால் நல்ல நாள்…
தாழ்வும் உயர்வும் இயல்பென்றே – மனம்
தெளிந்தால் அதுவும் நல்ல நாள்…
ஆழ அகலம் உணர்ந்திருந்தால் வரும்
அத்தனை நாட்களும் நல்ல நாள்!”
(ப.356)

உள்ளத்தில் ஊற்றெனப் பொங்கும் உற்சாகம், இதயத்தில் இன்னும் இன்னும் என மலரும் ஆர்வம், உயர்வும் தாழ்வும் இயல்பு என்றே கொள்ளும் தெளிந்த சிந்தனை, ஆழ, அகலங்களை உணர்ந்த மெய்யறிவு: இவை நான்கும் பொருந்திய வாழ்வில் வரும் அத்தனை நாளும் நல்ல நாளே என்பது கவிஞரின் திண்ணிய கருத்து; திறமான கொள்கை.

9. ‘காட்டு நெருப்பாய் எழுந்துவிடு!’

‘மனதில் உறுதி வேண்டும்’ (பாரதியார் கவிதைகள், ப.59) என்ற படி, இளையோர் முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஓர் ஆளுமைப் பண்பு உள்ளத்தில் உறுதி ஆகும்

“உன்னில் உறுதி உள்ளவரை
ஒன்றும் உன்னை அசைக்காது;
இன்னும், இன்னும் முயலாமல்
எளிதில் வெற்றிகள் கிடைக்காது!”

என்பது ‘மரபின் மைந்தன்’ முத்தையா முன்மொழியும் வெற்றியை வசப்படுத்துவதற்கான தாரக மந்திரம் ஆகும். மேலும் ‘உள்ளம் துணிந்து இறங்கி விட்டால், இந்த உலகமே நம்முடன் நடக்கிறது’ (ப.348) என மொழிவார் அவர். கவிஞரின் கருத்தியலில் வெற்றி வேட்டைக்கு முதன்மையாகத் தேவைப்படுவது ‘போதும்’ என்ற மனப்பான்மை அன்று; ‘இன்னும், இன்னும்’ என்னும் முனைப்பே. ‘இன்னும் என்கிற தேடல் – உன்னை, இயக்கி விசைதர வேண்டும்’ (ப.354) என இளையோர்க்கு எடுத்துரைப்பார் கவிஞர். இன்னமும் கூர்மைப்படுத்தி இரு அழகிய உவமைகளின் வாயிலாக இக் கருத்திற்கு மெருகு சேர்த்துள்ளார் கவிஞர்:

“ வீட்டுச் சுடராய் இருக்கும் வரை
வீசும் தென்றலும் அணைத்துவிடும்;
காட்டு நெருப்பாய் எழுந்துவிடு
காற்றே உன்னை வளர்த்து விடும்!”

என்னும் கவிஞரின் மந்திர மொழிகள் வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்க விழையும் இளையோர் மனங்கொளத் தக்கனவாகும். 

“நாளும் வியர்வை சிந்திவிடு
நீயே உன்னை முந்திவிடு”
(ப.230)

எனக் கவிஞர் மொழிவதும் கூர்ந்து நோக்கத்தக்கது.

10. ‘உன்னை நீ நிலைநிறுத்து!’

மூலையில் முடங்கிப் போய் சோர்ந்து கிடக்காமல், குவளைத் தண்ணீர் குடித்துக் கிளம்பி, குறிக்கோள் நோக்கி அடியெடுத்து வைத்தால் - கவலைக் கண்ணீரைத் துடைத்து வீசி எறிந்து, கருதிய எல்லாம் வெல்லும் நோக்குடன் தெளிவாகப் பயணம் தொடர்ந்தால், வாழ்வில் எண்ணிய எண்ணியாங்கு நடக்கும்; வள்ளுவர் சொற்களில் கூறுவது என்றால், ‘தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்’ (குறள்: 1023). இக் கருத்தினையே வேறு சொற்களில்,

“தவம் போல் உந்தன் தொழிலைத் தொடர்ந்தால்
தெய்வம் வரும் எதிர்கொள்ள!”

என்கிறார் ‘மரபின் மைந்தன்’ முத்தையா. ‘இன்னும் சரியாய் இருந்து பார்த்தால், இந்த வாழ்க்கை சுகம்தான்’ என்றும், ‘என்ன வந்தாலும் மாறும் என்றே யாரோ சொன்னது மெய்தான்’ என்றும், ‘யாருக்கும் ஒருநாள் எல்லாம் சிறக்கும், இருளா வானத்தின் எல்லை?’ என்றும் கூறி வரும் கவிஞர் முத்தாய்ப்பாக,

“ஊருக்கும் ஒரு நாள் உன் பலம் தெரியும்
உன்னை நீ நிலைநிறுத்து!”
(ப.372)

எனப் பறைசாற்றுகின்றார்.

இக் கருத்தினைப் ‘புதுக்கணக்கு’ என்னும் தலைப்பில் படைத்த பிறிதொரு கவிதையில்,

“புலம்பல் ராகம் பாடுபவர்க்கு
புலரும் பொழுதுகள் புதிர்க்கணக்கு
கிளம்பும் கதிர்போல் எழுந்தால் உனது
கிழக்கில் தினமும் ஒளிக்கணக்கு”         
    (ப.272)

என நெஞ்சை அள்ளும் அழகிய முறையில் குறிப்பிட்டுள்ளார் கவிஞர்.

முத்தையா போற்றும் முப்பெரும் கவி ஆளுமைகள்

‘மரபின் மைந்தன்’ முத்தையா உளமாரப் போற்றும் கவி ஆளுமைகள் மூன்று. அவையாவன:

1. பாரதி: ‘ஊழி உலுக்கியவன்’

“ஆண்டுகள் எத்தனை ஆயினும் பாரதி
ஆளுமே வியாபகமே - அவன்
ஆண்மையில் ஞாபகமே;

நீண்டிடும் பாதையின் நிர்மல வெய்யிலாய்
நிற்கும் அவன் முகமே - அவன்
என்றும் நிரந்தரமே!”       
    (ப.465)

என்பது ‘மரபின் மைந்தன்’, பாரதிக்குக் சூட்டியுள்ள புகழாரம் ஆகும்.

2. பாரதிதாசன்: ‘பாரதிர வைத்த தமிழ்ப் புயல்’

‘மரபின் மைந்த’னின் பதிவில் பாரதிதாசன்,

“யாருக்கும் அஞ்சாத துணிவால் அந்த
இமயத்தைக் குனிய வைத்த மனிதன்.”
(ப.467)

3. கண்ணதாசன்: ‘என்னுள் தமிழை எழுதியவன்’ என கண்ணதாசனைக் குறிப்பிடும் ‘மரபின் மைந்தன்’,

“மண்ணை விட்டு மறைந்தாலும், கண்ணனிடம் கலந்தாலும்
கண்ணதாசனே! நீதான் கவித்துவத்தின் அடையாளம்!”
(ப.473)

எனவும் போற்றிப் பாடுகின்றார்.

நிறைவாகக் கூறுவது என்றால், பாரதியும் ஆண்மையும், பாரதிதாசனின் துணிவும், கண்ணதாசனின் கவித்துவமும் சரிவிகிதத்தில் சேர்ந்தமைந்த கூட்டுக் களியாக இன்றைய இளைய பாரதம் வாழ்வில் ஒளிர வேண்டும் என்பதே ‘மரபின் மைந்தன்’ முத்தையாவின் எண்ணமும் எதிர்பார்ப்பும் ஆகும்.

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்