பேறுகளில் சிறந்தது நிறைவுள்ள மனமே!

பேராசிரியர் இரா.மோகன்

ருவனுக்கு வாழ்க்கையில் நிம்மதி எப்போது கிடைக்கும்? மன நிறைவு எப்போது வாய்க்கும்? பாடுபட்டுத் தேடிச் சேர்க்கும் பணத்தால் அவற்றைப் பெறுவது கைகூடுமா? ஆழ்ந்து உறங்குவதால் கிட்டுமா? நல்ல இசையைக் கேட்பதால் பெற இயலுமா?

‘ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை’ என்கிறது பழைய திரை இசைப் பாடல் ஒன்று. பிறிதொரு திரை இசைப் பாடலும் ‘ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் No Peace of Mind’ என உரத்துச் சொல்லுகின்றது.

இசைஞானி இளையராஜா சேலத்தில் நடைபெற்ற தமது 75-ஆவது பிறந்த நாள் விழாவில் ஆற்றிய உரையில், “ஏழு ரூபாய் சம்பாதித்த போது கிடைத்த மகிழ்ச்சி, ஏழு கோடி வருமானத்தில் இல்லை” என நெகிழ்வுடன் குறிப்பிட்டதும் இங்கே மனங்கொளத் தக்கதாகும்.

‘மனநிறைவு அரண்மனைகளைக் காட்டிலும் குடிசைகளிலேயே மிகுதியாகத் தங்குகின்றது’ என்கிறது ஓர் இங்கிலாந்துப் பழமொழி. ‘பேறுகளில் சிறந்தது நிறைவுள்ள மனம்’ என்பது பிறிதொரு லத்தீன் பழமொழி உணர்த்தும் இன்றியமையாத வாழ்வில் பாடம் ஆகும். ‘மன நிறைவுடன் வாழ்ந்தால், நீயே அரசன்’ என மொழிகின்றது பாரசீகப் பழமொழி ஒன்று.

எல்லாவற்றிற்கும் மணிமுடியாக அட்சர லட்சம் மதிக்கத்தக்க சிறப்பினது, ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்னும் குமரகுருபரின் வாக்கு. இதனை உணர்த்தும் அருமையான பிரஞ்சு நாட்டுப்புறக் கதை ஒன்று:

செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன், நகரின் ஓர் ஓரப் பகுதியில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எந்தக் கவலையும் கிடையாது. செருப்புத் தைக்கும் போது, மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டே வேலை செய்வான். அதிகாலை முதல் மாலை வரை இப்படி வேலை செய்வது அவனுடைய வழக்கம்.

அவன் வீட்டுப் பக்கத்தில் ஒரு மாளிகை. அதில் ஒரு பெரும் பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரவில் சரியாகத் தூக்கம் வராது. அதிகாலையில் தான் சிறிது கண்ணயர்வான். அந்தச் சமயம் பார்த்துச் செருப்புத் தைப்பவன் பாடத் தொடங்கி விடுவான். பணக்காரணின் தூக்கம் கலைந்து விடும். இது அவனுக்கு மன உளைச்சலாக இருந்தது.

இப்படிப் பல நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. ஒரு நாள் பணக்காரன் செருப்புத் தைக்கும் தொழிலாளியைத் தன் மாளிகைக்கு வரவழைத்தான். “நீ எப்போதும் மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டே வேலை செய்கிறாயே, உனக்கு எந்தக் கவலையும் கிடையாதா?” என்று கேட்டான்.

“ஐயா, எனக்கு இரண்டு பிள்ளைகள். குடும்பத்தை மனைவி நன்றாகக் கவனித்துக் கொள்வாள். என்னுடை மனதிற்குக் தக்க வகையில் அவளும் என் பிள்ளைகளும் நடந்து கொள்வார்கள். என் தொழிலுக்கும் ஒத்துழைப்பார்கள். கிடைத்த வருமானத்தைக் கொண்டு நிறைவாக வாழ்கிறோம். பேராசை எங்களுக்குக் கிடையாது. அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்றான்.

இதைக் கேட்ட பணக்காரன் பொறாமைப்பட்டான். “உனக்கு ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்?” என்று கேட்டான்.

“நான் ஆண்டுக் கணக்கெல்லாம் பார்ப்பது கிடையாது. அன்றாட வருமானம் தான் எனக்குத் தெரியும். அதுவும் சில நாள் கிடைக்கும். சில நாள் கிடைக்காமலும் போகும். அதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுவதில்லை” என்றான்.

“நீ எனது மாளிகைக்குப் பக்கத்தில் குடிசையில் வாழ்கிறாய். உன்னை நான் பணக்காரனாக்க விரும்புகிறேன். இதோ நூறு தங்க நாணயங்கள். இதைப் பத்திரமாக வைத்துக் கொண்டு அவசியம் ஏற்படும் போது செலவு செய்து கொள்” என்று சொல்லிப் பணக்காரன் தங்க நாணயங்களைக் கொடுத்தான்.

செருப்புத் தைப்பவன் கரை காணாத மகிழ்ச்சி அடைந்தான். தங்க நாணயங்களைப் பெற்றுக் கொண்டவன் தனது குடிசைக்கு வந்தான். இது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தெரிந்தால் சந்தேகப்படுவார்கள் என்று பத்திரமான ஓரிடத்தில் அவற்றைப் புதைத்து வைத்தான். அன்று முதல் அவன் பாடுவதை நிறுத்தி விட்டான். அவனுக்கு எப்போதும் தங்க நாணயங்களைப் பற்றியே நினைவு. அவற்றைக் காவல் செய்வதைத் தவிர வேறு வேலை எதுவும் செய்ய முடியவில்லை. எவனும் வந்து திருடி விடக் கூடாது என்று இரவிலும் அவன் கண் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். ஒரு சிறு சலசலப்புக் கேட்டாலும் ஓடிப்போய் நாணயங்கள் பத்திரமாக இருக்கின்றனவா என்று பார்த்து விட்டு வருவான்.

இப்படி மன நிம்மதி இழந்து கவலையிலும் பயத்திலுமே காலம் தள்ள அவனால் முடியவில்லை. ஒரு நாள் அவன் தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டு பணக்காரனுடைய மாளிகைக்கு ஓடினான்.

“ஐயா! நீங்கள் கொடுத்த இந்த நூறு தங்க நாணயங்களையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய பாட்டையும் தூக்கத்தையும் எனக்குத் திரும்பக் கொடுங்கள்” என்றான்.

‘எவன் ஒருவன் தன் உழைப்பால் வந்த பொருளைக் கொண்டு நிறைவடைகிறானோ அவனே நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வான்’ என்பதே இக் கதை உணர்த்தும் செய்தி; வாழ்க்கைப் பாடம்.

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்