வெற்றிப் பேச்சாளராக…
பேராசிரியர் இரா.மோகன்
எழுத்தைப்
போலவே பேச்சும் ஓர் அரிய கலை. வாழ்வில் தடம் பதித்த வெற்றியாளர்களைப்
பொறுத்த வரையில் எழுத்து ஒரு வேள்வி என்றால், பேச்சு ஒரு தவம் எனலாம்.
எழுத்திலும் பேச்சிலும் வல்லமை பெற்றவர்களே இன்று உலக அரங்கில்
புகழேணியின் உச்சிக்குச் சென்றுள்ளனர். ‘எழுத்தில் வெற்றி
பெற்றவர்களுக்குப் பேச வராது; அதே போல, பேச்சில் முத்திரை
பதித்தவரலுகளுக்கு எழுத வராது’ என்ற கருத்து இன்று அடியோடு மாறி விட்டது;
மலையேறிவிட்டது. குறிப்பாக, தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேச்சுத்
துறையில் - பட்டிமன்ற உலகில் - தனித்தன்மையுடன் சிறந்து விளங்கியது
போலவே, எழுத்துத் துறையிலும் தடம் பதித்தது யாவரும் அறிந்ததே. அவரது
எழுத்துக்களும் பேச்சுக்களும் ஒருங்கே தொகுக்கப்பெற்று ‘குன்றக்குடி
அடிகளார் நூல் வரிசை’ என்னும் தலைப்பில் பதினாறு தொகுதிகளாக
வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்,
நல்ல எழுத்து படிப்பவர் உள்ளத்தில் நிலையான தாக்கத்தினை ஏற்படுத்துவதும்,
நல்ல பேச்சு படிப்பவரை உடனே சென்று சேர்ந்து தன்வயப்படுத்துவதும்
விளங்கும். ‘எழுதுவது எப்படி?’ என்ற தலைப்பில் பல்வேறு தொகுதிகளும்,
‘பேச்சாளராக’ வழிகாட்டும் பல்வேறு நூல்களும் இன்று வெளிவந்துள்ளன. இக்
கட்டுரை ‘அறிமுகப் பேச்சாளர்’, ‘வளர்ந்து வரும் பேச்சாளர்’ என்ற
படிநிலைகளைக் கடந்து, வளர்ந்து ‘வெற்றிப் பேச்சாளராக’ உயர்வதற்கான
வழிகாட்டுதல்களை இளைய தலைமுறையினருக்கு முன்னெடுத்து மொழிகின்றது.
விமானப் பயணம் போன்றது வெற்றிப் பேச்சு
“விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்”
எனத் திருவள்ளுவர், ‘சொல்வன்மை’ அதிகாரத்தில் கூறுவது இங்கே
மனங்கொள்ளத்தக்கது. ‘எதையும் முறைப்படுத்தி, இனிதே சொல்லுவோமாயின்,
உலகம் நம் சொற்படி விரைந்து கேட்டு நடக்கும்’ என்பது இக்குறட்பாவின்
தெளிவுரை.
ஒரு வெற்றிப் பேச்சாளர் தம் பேச்சினை எடுப்பாகத் தொடங்கி, சுவையாக
வளர்த்து, முத்தாய்ப்பாக முடிப்பார். இவ்வகையில் சான்றோர்களின்
பொருத்தமான மேற்கோள்களும். சிரிக்கவும் சிந்திக்கவும் சிலிர்க்கவும்
வைக்கும் குறுங்கதைகளும், அரிய வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்புகளும்,
நறுக்கான நடப்பியல் செய்திகளும், நல்ல நகைச்சுவைகளும் அவருக்குப்
பெரிதும் கை கொடுக்கும். வேறு சொற்களில் கூறுவது என்றால், ஒரு வெற்றிப்
பேச்சு என்பது விமானம், ஓடுதளத்தில் சிறிது தொலைவு வரை சீராக ஓடி, பிறகு
உச்சத்தில் ஏறி, வானத்தில் பறந்து, முடிவில் குறித்த நேரத்தில்
பத்திரமாகத் தரை இறங்குவது போல எனலாம்.
கல்வெட்டுப் போல் உள்ளத்தில் பதிய வல்ல மேற்கோள்கள்
ஒரு வெற்றிப் பேச்சாளர் தம் கருத்துக்கு அரணும் அழகும், வலிமையும்
வனப்பும் சேர்க்கும் வகையில் பொருந்திய மேற்கோள்களை - ஒரு முறை கேட்ட
உடனே, கேட்பவர் நெஞ்சில் கல்வெட்டுப் போல் பதிந்துவிடத் தக்க
சான்றோர்களின் மணிமொழிகளை - கையாளும் வல்லமை படைத்தவராக விளங்க வேண்டும்.
இவ் வகையில் கருத்தில் கொள்ளத்தக்க மேலோரின் மேற்கோள்கள் - அனுபவ
மொழிகள் - சில வருமாறு:
1. சிந்திக்கத் தூண்டும் ஓர் இத்தாலியப் பழமொழி:
“ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு, அவன் ஒரு வீடாவது கட்டியிருக்க
வேண்டும், ஒரு மகனையாவது பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒரு நூலாவது
எழுதியிருக்க வேண்டும்.”
2. நெஞ்சை அள்ளும் மு.வரதராசனாரின் மணிமொழி:
“உடல் நோயற்று இருப்பது என்பது முதல் இன்பம், மனம் கவலையற்று இருப்பது
இரண்டாம் இன்பம். உயிர் பிறருக்கு உதவியாக வாழ்வது மூன்றாம் இன்பம்.”
3. அறிவுக்கு விருந்தாகும் கவிஞர் கண்ணதாசனின் செப்பு மொழி ஒன்று:
“கடிகாரம் மணியைக் காட்டுகிறது; காலண்டர் தேதியைக் காட்டுகிறது; தேர்தல்
ஜாதியைக் காட்டுகிறது!”
‘கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்’ என்பது காலங்காலமாகச் சொல்லி வரும் ஒரு
பழமொழி; ‘ஒருவன் தெரிந்தெடுத்துப் படிக்கத் தேர்ந்த பேச்சாளன் ஆவான்’
என்பதுவே இன்றைய புதுமொழி.
சிரிக்கவும் சிந்திக்கவும் சிலிர்க்கவும் வைக்கும் குறுங்கதைகள்
இன்று அரசியல், ஆன்மிகம், இலக்கியம் என எத்துறையைச் சார்ந்தவர்களாக
இருப்பினும் தம் பேச்சின் இடையே அவையோரைச் சிரிக்கவும் சிந்திக்கவும்
வைக்கும் குறுங்கதைகளைக் கையாளாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்குக்
குறுங்கதைகள் மக்கள் மனங்களில் மிகுந்த செல்வாக்கான இடத்தினைப் பெற்றுத்
திகழ்கின்றன. இந் நிலையில் ஒரு வெற்றிப் பேச்சாளர் தமது பேச்சின் இடையே
அடிக்கடி கேட்டுக் கேட்டு புளித்துப் போன கதைகளைத் தவிர்த்து, புத்தம்
புதிய, சிறந்த குறுங்கதைகளைக் கையாண்டு அவையினர் அனைவரது கவனத்தையும்
கவரத் தெரிந்திருக்க வேண்டும்.
‘குழந்தை மனம்’ என்னும் தலைப்பில் முகநூலில் இடம்பெற்றிருந்த ஒரு
அருமையான குறுங்கதை இங்கே நினைவுகூரத் தக்கது:
“நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள்
வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல், ‘ஒன்றுக்கு மேல்
எடுக்காதீர்கள், கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்’ என எழுதி இருந்தது.
சற்றுத் தொலைவில் ஒரு பெட்டி நிறையச் சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
‘எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப்
பார்த்துக் கொண்டிருக்கிறார்!’”
இந்தக் கதை ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரது உள்ளங்களையும் ஈர்த்து
ஆட்கொள்ளும் என்பது நெற்றித் திலகம்.
அரிய வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்புகள்
வாழ்வில் தடம் பதித்த சாதனையாளர்கள் மற்றும் சான்றோர்களின்
வாழ்விலிருந்து உண்மை ஒளி வீசி நிற்கும் சுவையான, பயனுள்ள. அரிய
வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்புகளைத் தம் உரையின் ஊடே தக்க வகையில்
பயன்படுத்திக் கொள்ளும் பாங்கினை ஒரு வெற்றிப் பேச்சாளரிடம் சிறப்பாகக்
காணலாம். பதச்சோறாக, பாரதியாரின் துணைவியார் செல்லம்மா பாரதி
‘பாரதியார் சரித்திரம்’ என்னும் தமது நூலில் பதிவு செய்துள்ள ஓர்
உருக்கமான உண்மை நிகழ்வினை இங்கே சுட்டிக் காட்டலாம்:
“ஹோட்டலில் சாப்பாடு சாப்பிட மாட்டார். கையில் 4 அணா இருந்தால் வாழைப்
பழம் வாங்கி வந்து எல்லோரும் பசியாறுவது வழக்கம். பால்காரி கடனாகப் பால்
விடுவாள். அந்தப் பாலைக் குடித்து விட்டு சும்மா இருப்போம். இப்படியும்
சில நாட்கள் கழிந்ததுண்டு. ‘அரிசி இல்லை’ என்று சொல்லாதே; ‘அகரம் இகரம்’
என்று சொல்லு என்று சொல்லுவார். ‘இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக
வைப்பேன்’ என்ற வார்த்தை அவரது புண்பட்ட ஹிருதயம் கொதித்துப்
புறப்பட்டதாகும்”.
இத்தகைய அரிய வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்புகளைக் கையாண்டு பேசும் போது
ஒரு பேச்சு தனித்தன்மை துலங்குவதாக அமைந்து கேட்பவர் உள்ளத்தைத்
தன்வயப்படுத்தும்.
சிறு தகவலும் உதவும்
‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’; அதுபோல, ஒரு வெற்றிப்
பேச்சாளருக்குச் சிறு தகவலும் – நடப்புச் செய்தியும் – தம் கருத்தினைத்
திறம்பட அவையினருக்கு உணர்த்த உதவும். பதச்சோறு ஒன்று:
வாழ்வில் ஒருவர் மேற்கொள்ளத் தக்க குறிக்கோள்கள்:
9 - நாள்தோறும் ஒன்பது குவளைகள் தண்ணீர் அருந்துதல்
8 - எட்டு மணி நேரம் ஆழ்ந்து தூங்கல்
7 - குடும்பத்தினரோடு உலகின் ஏழு அதிசயங்களையும் கண்டு களிக்க
விரும்புதல்
6 - ஆறு இலக்க வருமானம் ஈட்ட எண்ணல்
5 - வாரத்தில் ஐந்து நாட்கள் கடுமையாக உழைத்தல்
4 - நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என நினைத்தல்
3 - மூன்று படுக்கை அறைகள் உள்ள வீடு வாங்க எண்ணல்
2 - ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள
விரும்புதல்
1 - ஒரே மனைவியுடன் வாழ்தல்
0 - பரபரப்பின்றி அமைதியாக வாழ்தல்
இதுபோல, முக நூலில் இருந்து பயனுள்ள தகவல்களைத் தேடிப் பெற்று, பேச்சின்
இடையே உரிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளும் திறம் ஒரு வெற்றிப்
பேச்சாளருக்கு இன்றியமையாது வேண்டப்படுவதாகும்.
புத்தம் புதிய நகைச்சுவைகள்
பலரும் பலமுறை சொன்ன நகைச்சுவைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக்
கொண்டு இருக்காமல், ஒரு வெற்றிப் பேச்சாளர் தம் அனுபவத்தில் இருந்தும்,
பரந்து பட்ட படிப்பறிவில் இருந்தும் அவையோர் இதுவரை கேட்டிராத புத்தம்
புதிய நகைச்சுவைகளைக் கையாண்டு பேசினார் என்றால், அதற்குக் கிடைக்கும்
வரவேற்பே தனி. சான்றாக, ஒட்டுமொத்த அவையினரிடம் இருந்து உத்தரவாதமாகப்
பலத்த சிரிப்பினை வரவழைக்கும் நகைச்சுவை ஒன்று:
“சார் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! ‘பேஸ் புக்ல’
இருக்கீங்களா?’
‘இல்லையே?’
‘அப்ப டிவிட்டர், வாட்ஸ் அப்ல’?
‘இல்லையே?’
‘எங்கே தான் இருக்கீங்க சார்?’
‘உங்க பக்கத்து வீட்டுல தான் பத்து வருஷமா இருக்கேன்.’
இங்ஙனம் கல்வெட்டுப் போல் கேட்பவர் நெஞ்சங்களில் பதியவல்ல
பொன்மொழிகளையும், சிரிப்போடு சிந்தனையையும் வரவழைக்கும்
குறுங்-கதைகளையும், அரிய பயனுள்ள வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்புகளையும்,
புத்தம் புதிய நகைச்சுவைகளையும். தகவல்களையும் கையாண்டு ஒரு வெற்றிப்
பேச்சாளராக இலக்கிய உலகில் வலம் வருவோம். சரிதானே?
‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|